கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 7, 2024
பார்வையிட்டோர்: 3,969 
 
 

(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

அன்று வெள்ளிக் கிழமையாதலால், வழக்கத்திற்கு அதிகமான கூட்டம். கையில் பூவுடன் சிலரும், அர்ச்சனைத் தட்டுக்களுடன் சிலரும், பெரிய மாலைகள், பன்னீர் பாட்டில்கள் ஆகியவற்றை வைத்துக்கொண்டு சிலருமாக மக்கள் கூட்டம், அந்த சாமியார் இருந்த திக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. அவர்கள் கையில் இருந்த ஆராதனைப் பொருட்கள், அவர்களின் பொருளாதார வசதியைவிட அவர்கள் சுமக்கும் பிரச்னைகளின் கனபரிமாணத்தையே காட்டின. நோய் தீர வேண்டும் என்று வந்திருப்பவர்கள் கரங்களில் அர்ச்சனைத் தட்டுக்கள்; புரமோஷன் வரவேண்டும் என்று பிராத்திப்பவர்கள் கைகளில் பெரிய மாலைகள். பன்னீர் பாட்டில்கள், எலுமிச்சம் பழங்கள்; அரசியல்வாதிகளுக்கே இதுவரை மாலை போட்டுப் பழகிய அவர்கள், இப்போது அந்த சாமியாரிடம் வந்திருப்பதுபோல் தோன்றியது. பிக்னிக்’ சுவைக்காக வந்திருந்தவர்கள் போல் தோன்றிய சிலர் ‘இங்கிலிஷில் பேசிக் கொண்டே, வெறுங்கையோடு நின்றார்கள். அந்த வரிசையில் நின்ற கார்த்தியின் சுருட்டைத் தலையையும், அதன் ‘ஸ்டைலையும் ‘டபுள் நிட் ஃபாரின் ஆடைகளையும் பார்ப்பவர்கள், அவை வியாபித்திருந்த அந்த மேனிக்குள் பக்தியும் வியாபித்திருக்கும் என்று நினைக்க முடியாது. அவன் கையில் பத்து பைசா கற்பூரம் மட்டும் இருந்தது.

சாமியார், சிலருக்கு விபூதியை எடுத்து நெற்றியில் பூசினார்; சிலருக்குக் கையில் கொடுத்தார். சிலரைத் தாங்களாகவே எடுத்துக் கொள்ளும்படி சைகை செய்தார். அவரால் நெற்றியில் விபூதியிடப்படுபவர்கள் அதிர்ஷ்டக் காரர்கள் என்பதும், அவர்களைத்தான் சாமியாருக்கு அதிகமாகப் பிடித்திருக்கிறது என்பதும் மக்களின் எண்ணம். ஆகையால் கார்த்தி உட்பட அனைவரும், அவர் கையில் நெற்றியில் விபூதி வாங்கவே விரும்பினார்கள்.

சாமியார் வீராசனத்தில் உட்கார்ந்திருந்தார். குறைந் த பட்சம் எண்பது வயது இருக்கும். ஆண்டுக்கணக்கில் அந்த இடத்திலேயே உட்கார்ந்து இருந்ததால், கால்கள் செயலி ழந்து போனதுபோல் தோன்றின. அவர் குடிகொண்ட இடம், அந்த குக்கிராமத்தில் ஒரு சிறு திண்ணை. அவர் தலைக்கு மேல் முருகன் படமும், சிவலிங்க படமும் மாட்டப்பட்டிருந்தன. ஒரு பூனைக்குட்டி அவர் மடியில் புரண்டு கொண்டிருந்தது. சாமியாரின் முகத்தைப் பார்த்தால், பிரபஞ்சத்தையே பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படும். தந்தை ஈ.வே.ரா-வைப் போல் தங்க நிறத்தில் மேனி விளங்க, தாடி வெள்ளி ஜரிகைபோல் பளபளத்தது. கும்பிடுபவர், கும்பிடாதவர் அத்தனை பேரையும் பற்றிக் கவலையற்றவராய், வேண்டுதல்-வேண்டாமைக்கு இலக்கணம்போல் திகழ்ந்த அவரைப் பார்த்தாலே பாவங்கள் பொடியாகும். இனம் காண முடியாத ஒருவித பேரமைதி அவரைச் சூழ்ந்து நின்றது. எவராவது அவர் காலைப் பிடித்து முத்தமிடும்போதும் சரி, முன்னால் நின்று தோப்புக்கரணம் போடும்போதும் சரி, அவர் எதையோ ஒன்றை ஊடுறுவி ஆராய்வதுபோல் மேற்கூரையைப் பார்ப்பார். மொத்தத்தில், நிர்குணனான இறைவன், இதைவிட ஒரு சிறந்த மகானைப் படைத்திருக்க முடியாது என்ற ஞானவுணர்வுதான் ஒருவருக்கு ஏற்படும்.

வரிசை நகர்ந்து கொண்டிருந்தது. ஒவ்வொருவரும் தத்தம் குறைகளைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். சாமியார், நல்லது போய் வாங்க’, ‘சரி என்ற இரண்டு வார்த்தைகளைத்தான் உச்சரித்துக் கொண்டிருந்தார். அவர் அருகே ஒரு தூணைப் பிடித்துக் கொண்டிருந்த ஜடாமுடி சிஷ்யர், மக்களைத் துரிதப்படுத்திக் கொண்டிருந்தார். சிலர் கொடுத்த பழ வகைகளை, சாமியார் வாங்கிக் கொண்டார்.

கார்த்தி, சாமியாரை நெருங்கிக் கொண்டிருந்தான். உடலெங்கும் பக்தி பரவ, அலைப் பிரவாகத்தில், கனவுலகில் சஞ்சரிப்பவன்போல் நகர்ந்தான். இளமையிலேயே அவனுக்கு ஒரு தெய்வ வழிபாடு. சினிமாவுக்குப் போவதும், சிகரெட் பிடிப்பதும் இளைஞர்களுக்கு டைவர்ஷனாக இருக்கையில், அவன் பக்தியை, இறை உணர்வை ஒரு பொழுதுபோக்காகக் கொண்டதால், அவனுக்கு, ஒரு போக்கானவன்’ என்ற பெயரும் கிடைத்தது. அவனைப் போல் நல்ல வேலையில் அமர்ந்திருக்கும் இளைஞர்கள், மேல் பதவிக்குப் போவது போலவும், வீட்டில் இரண்டு ‘ஆர்டர்லிகள் இருப்பது போலவும் கற்பனையில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் போது, அவனோ, பழனி கோவிலில்தான் உட்கார்ந்து இருப்பது போலவும், சிதம்பரத்தில், ஆடலரசன் நர்த்தனம் புரிவதை, தான் கண்டு களிப்பது போலவும் பாவித்துக் கொள்வான். ஆகையால், மனிதனும் தெய்வமாகலாம் என்பதற்கு உதாரணமாகத் திகழும் அந்த மகானைப் பார்ப்பதற்காகவே, அவன் சென்னையில் இருந்து வந்தான்.

சித்திக்கும், முக்திக்கும் கருவூலமாக விளங்கும் அந்த மகானின் ஞானப் பாற்கடலில் ஒரு குவளையை மொண்டு கொள்ள மனமில்லாதவர்களாய், அவரால் எப்படி இத்தகைய தெய்வீக நிலைக்கு உயர முடிந்தது என்பதை அறிய எண்ணமில்லாதவர்களாய், பக்தகோடிகள் தத்தம் அற்ப கஷ்டங்களை அந்தப் பற்றற்ற ஞானியிடம் கூறிக் கொண்டிருப்பதைப் பார்த்து, கார்த்திக்கு, அவர்கள் மீது வெறுப்பு ஏற்பட்டது.

கார்த்தி, சாமியாரின் முன்னால் போய் நின்றான். கற்பூரத்தை ஏற்றிவிட்டு, அவரது பாதத்தை தொட்டு வணங்கிவிட்டுக் கண்களை மூடிக் கொண்டான். ஆண்டவனே அவதரித்ததுபோல் காட்சியளிக்கும் ஞானச் செம்மலே. நான் ஆண்டவனை மறக்காமலிருக்கவும், உமது ஞான சாகரத்தில் ஒரு ஒளித்துளி என் மீது படவும் அருளும் என்று மானசீகமாக வேண்டிக்கொண்டு கண்களைத் திறந்தான். சாமியார் கிழக்குத் திக்கை நோக்கி வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். பிள்ளை பெண்டாட்டி உத்தியோக விவகாரங்களையே கேட்டுக் கேட்டுப் பழக்கப்பட்ட சாமியார், தன்னைப் புரிந்து கொண்ட அடையாளச் சின்னமாக புன்னகைப்பார் என்று நினைத்திருந்த கார்த்திக்கு, அவர், அவனோடு சம்பந்தப் படாதவர்போல் எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தது என்னவோ போலிருந்தது. மனத்தை ஒருவாறு தேற்றிக் கொண்டு, கையில் இருந்த வாழைப் பழத்தை அவரிடம் நீட்டினான். மற்றவர்களிடம் வாங்கிக் கொண்டு அருகே வைத்துக்கொள்ளும் அவர், இப்போது கார்த்தியிடம் வாங்கிய பழத்தை அவனிடமே திருப்பிக் கொடுத்தார். இது போதாதென்று சாமியார், இன்னோர் அடி கொடுத்தார். எல்லோருக்கும் நெற்றியில் திருநீறிட்ட அவர், கார்த்தியை விபூதி எடுத்துக்கொள்ளுமாறு சைகை செய்தார். கார்த்தி செயலற்று நின்றபோது, பின்னால் வந்தவர்கள் நகரச் சொன்னார்கள். கார்த்தி வரிசையில் இருந்து வெளியே வந்தான். பின்னால் வந்தவர்களுக்கு சாமியார் நெற்றியில் திருநீறு இட்டுக் கொண்டிருந்தார். கார்த்திக்கு உடலெல்லாம் ஆடியது. பாவிகளை ரட்சிக்க இயேசுவைப் போல் உட்கார்ந்து உட்கார்ந்து இரண்டு கால்களும் செயலி யக்கம் இல்லாமல் கிடக்க, உலகத்திற்காகத் தன்னையே பலி கொடுக்கும் இந்த மகான், ஏன் அவனை மாற்றாந்தாய் மனப்போக்கில் நடத்துகிறார்?

எப்படியாவது சாமியாரின் கையாலேயே விபூதி வாங்கி விடுவது என்ற வைராக்கியத்துடன் மீண்டும் வரிசையில் வந்து நின்றான். பழைய தெம்போ, தன்னம்பிக்கையோ இல்லை சாமியாரின் போக்கு, அவனுக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது.

வரிசை நகர்ந்து கொண்டிருந்தது. திடீரென்று நான்கு பிரமுகர்கள் காரில் வந்து இறங்கினார்கள். அவர்களை உள்ளூர் மணியக்காரர் வரவேற்றார். ஐந்து பேருமாக, நேராக சாமியாரிடம் வந்தார்கள். நகர்ந்து வந்த மக்கள் வரிசை நிறுத்தப்பட்டது. குறுக்குவழி ஆசாமிகளுக்காக, மக்கள் கூட்டம், நிறுத்தப்பட்டு நின்று கொண்டிருப்பதைக் கண்டதும் கார்த்திக்கு எரிச்சலுக்கு மேல் எரிச்சல் ஏற்பட்டது. இங்கேயுமா இன்புளுயன்ஸ்?

நால்வரில் ஒருவர், சாமியாரைத் தொட்டுக் கும்பிட்டார். உடனே மணியக்காரர், சாமியாரைப் பார்த்து, “சாமீ! இவருக்கு. இன்கம்டாக்ஸ் தகராறாம். நீங்கதான் அருள் செய்யனும்” என்றார். உடனே சாமியார், “தீர்த்து வைக்கிறேன்” என்றார்.

“இவருடைய மனைவி. மெட்ராஸ்ல வேலை பாக்குறாங்க. இவரையும் மெட்ராஸுக்கு மாத்த. சாமி. அருள் பண்ணணும்.”

“நல்லது. மாத்தறேன்.”

“சாமி. இவரு முனிஸிபாலிட்டி சேர்மன். பணத்தைக் கையாடினதா போலீஸ்ல வழக்குப் போட்டிருக்காங்களாம். நீங்கதான்.”

“நல்லது, கவனிக்கிறேன்.”

நால்வரும் எந்த வேகத்தில் வந்தார்களோ, அந்த வேகத்தில் போய்விட்டார்கள். கார்த்திக்கு, பக்தர்கள் மீது ஏற்பட்ட கோபம், இப்போது சாமியார் மீது திரும்பியது. ‘நல்லது, போய் வாங்க என்ற வார்த்தையைத் தவிர வேறு எதையுமே பேசாத அவர், அந்த நால்வரிடமும் மணியக்காரர் சிபாரிசின் பேரில், என்னமாய்ப் பேசுகிறார்! இவர் எந்தவகைச் சாமியார்?

கார்த்தி, பின்னார் நின்றவர்களால் நகர்த்தப்பட்டு சாமியாரின் முன்னால் நிறுத்தப்பட்டான். என்னதான் சாமியாரை நிந்தித்தாலும், அவர் பார்வை பட்டதும், அவனுக்கு ஒருவிதப் பரவசம் ஏற்பட்டது. ஆனால், இந்த முறையும் அவன் கொடுத்த வாழைப்பழத்தை, சாமியார் அவனிடமே திருப்பிக் கொடுத்தார். பலருக்கு நெற்றியில் விபூதியிட்ட அவர் கரங்கள், கார்த்தியை விபூதியை எடுத்துப் பூசிக் கொள்ளுமாறு சைகை செய்தன. கார்த்தி , திருநீறை எடுத்து க் கொள்ள்ளாமலே வெளியேறினான். சாமியாரைத் திகிலுடன் பார்த்தான்.

சாமியார், மெளனமாக மற்றவர்களுக்கு, திருநூறு அளித்துக் கொண்டிருந்தார். கூட்டத்தினர் கார்த்தியை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள். ஏதாவது பயங்கரமான பாவம் செய்திருப்பான்! அதனால்தான் சாமியார் அவனிடம் பழங்களை வாங்கிக் கொள்ளவும் இல்லை; விபூதி கொடுக்கவுமில்லை. வரிசையில் நின்ற ஒவ்வொரு பக்தரும், தன்னையே. பெருமையாகப் பார்த்துக் கொண்டார்கள். அதே நேரத்தில், கார்த்தியை மாதிரி தங்களுக்கும் சாமியார் கையை விரித்து விடுவாரோ என்ற திகிலும் இருந்தது. அதற்கு ஈடு கட்டுவதுபோல், “இந்த மகானுக்கு. இருநூறு வயசிருக்கும். இந்த இடத்திலேயே. முப்பது வருஷமா. இருந்தது இருந்தபடியே இருக்கார். கூடுவிட்டுக் கூடு பாயுற வல்லமை உள்ளவர்” என்று ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டார்கள். “இங்க. வரும்போதாவது மனசு சுத்தமா இருக்கணும். சாமியார் எல்லாத்தையும் கண்டு பிடிச்சிடுவார்” என்றார் ஒருவர்-கார்த்தியை நோட்டம் விட்டுக்கொண்டே.

கார்த்தி, உடலெல்லாம் பற்றி எரிய சோர்வாக, அருகே இருந்த ஒரு தோப்பில் வந்து உட்கார்ந்தான். அவன் நெஞ்சமெல்லாம் நிராசை வியாபித்தது. இதற்காகவா, இத்தனை கஷ்டப்பட்டு வந்தான்? எல்லாவற்றையும் படைத்து, தன்னையே தானாகப் படைத்துக் கொண்ட இறைவனை பைபிளிலும், குரானிலும், பகவத் கீதையிலும் அவன் தேடிக் கொண்டிருக்கிறான். உண்மையையே கடவுளாக ஆராதிக்கிறான். தெய்வச் சந்நிதிகள் தோறும் சென்று, இன்னதென்று புரியாத பிரபஞ்ச தத்துவத்தை, அதை ஈன்றெடுத்த இறைவனின் அருள் எண்ணம் காண, அடைகாக்கும் உணர்வுகளை அடக்கி, உணர்வுகளை உள்ளடக்கிய பேருணர்வுக்குள், பிறப்புக்களை அறுக்கும் பெரும் பரபரப்புக்குள், ஏகன்-அநேகன்-இனியவனான, மாயப் பிறப்பறுக்கும் மாயாவியைக் காண முடியா விட்டாலும், அவனின் அருட்துளி மேவும் பொருட்டு, ஆன்மாவைப் பிரபஞ்சமெங்கும் மானசீகமாகப் பறக்க விடும் அவனுக்கு, அருள்பாலிக்க அந்தச் சாமியார் மறுத்து விட்டார், அதைக்கூடப் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் இன்கம்டாக்ஸ் தகராறுக்கும், உத்தியோக மாற்றத்திற்கும் தீர்வு காண வந்த பேர்வழிகளை மனதார வரவேற்று, வாயாற வாழ்த்தி வழியனுப்புகிறார். இவர் என்ன சாமியார்? இத்தனை சந்தர்ப்பங்களிலும், அவர்மீது கோபம்தான் வருகிறதே அன்றி வெறுப்பு வரவில்லையே, ஏன்?

கார்த்தி சிறிது நேரம் குழம்பிப்போய் உட்கார்ந்தான். தலை கனத்தது. இதயம் அடித்துக் கொண்டது. தோப்பில் இருந்து கொண்டே சாமியாரை வெறித்துப் பார்த்தான். அவனை அறியாமலே, அவனுள் ஒரு வைராக்கியம் பிறந்தது. சாமியாரிடம் மானசீகமாக வாதாடினான்.

‘குறுக்குவழிப் பக்தர்களின் எத்து வழிக்கும் இணைந்து போவது போல் தோன்றும் உங்கள் ஞானவழி எனக்குப் புரியவில்லை. இறைவனை நிஷ் காமமாகத் தொழும் என்னிடம், நீங்கள் காட்டிய அலட்சியமும் எனக்குப் புரிபடவில்லை. நதிமூலம், ரிஷி மூலம் காண முடியாது. ஆனால் ஒன்று. இறைவனை, எந்த மகானும் மொத்தமாகக் குத்தகை எடுக்கவில்லை. உங்கள் மூலம் இறைவனைக் காண்பதற்காக நான் முயற்சித்தது தவறுதான். உங்களைப் போல் நானும் மனிதன்தான். நானே நேரடியாக இறைவனை அணுகலாம்; அணுக வேண்டும்; அணுக முடியும். உங்கள் மூலம் குறுக்குவழியில் இறைவனின் அருள்பாலிப்பை நான் நாடியது தவறு என்பதைப் புரிந்து கொண்டேன். நான், நானாகி – அந்த நானே சூன்யமாகி, சூன்ய சுக்கிலத்தில் சுற்றி வரவேண்டும். நீங்கள் இந்த உலகத்தில் தோன்றுவதற்கு முன்பே தோன்றிய திருவண்ணாமலை, சிதம்பரம், பழனி, வடலூர், நாகூர், வேளாங்கண்ணி முதலிய தெய்வத் திருத்தலங்களைத் தரிசிப்பதற்கு உங்கள் சிபாரிசு எனக்குத் தேவையில்லை.

“நீங்கள் பெரியவர்தான்; ஆனால் பரம்பொருளை விடப் பெரியவராக இருக்க முடியாது. நீங்கள் சித்தர்தான்; ஆனால் பரசித்தின் முன்னால் நீங்களும் நானும் அசித்துக்கள். உங்கள் உருவத்தின் வழியாக அந்த அரூபத்தைக் காண நினைத்தது தவறுதான். என் உருவத்தையே ஒடுக்கி, உணர்வுகளை உள்ளடக்கி, சத்யச் சிறகுகள் மூலம் பரம்பொருளை புரிந்து கொள்வேன். இது சத்தியம். சத்தியவான் தோற்கலாம்; ஆனால் சத்தியம் தோற்காது. நீங்கள் காட்டிய வித்தியாசம், உங்கள் ஞானத்திற்கே மூலனான ஆண்டவனின் அருள்பாலிப்பில் இருக்க முடியாது; நான் வருகிறேன்.’

கார்த்தி எழுந்தான். சிறிது தூரம் நடந்து, சாமியாரையே வெறித்துப் பார்த்தான். அவரிடம் அவனுக்கிருந்த லவ்-கேட் எனப்படும் வெறுப்பன்பை அவன் உணர்ந்து பார்த்தான். சாமியார், பக்தர்கள் கொடுத்த வாழைப்பழங்களை வாங்கிக் கொண்டும், கைநிறையத் திருநீறு எடுத்து, அவர்கள் நெற்றி நிறையப் பூசிக்கொண்டும் இருந்தார். தன்னை அறியாமலே கரங் குவித்து அவரை வண்ங்கிவிட்டு, கார்த்தி திரும்பிப் பார்க்காமலே வேகமாக நடந்தான். எந்த இடைத்தரகரும் இல்லாமல் பிரபஞ்ச ரகசியத்தை அறிய முடியவில்லை என்றாலும், அணுக முடியும் என்ற சுய உபதேசம் அவனுள் உருவானது.

– ஆனந்த விகடன் 1977

– ஆகாயமும் பூமியுமாய் (சிறுகதைத் தொகுப்பு), முதல் பதிப்பு: டிசம்பர் 1999, ஏகலைவன் பதிப்பகம், சென்னை.

சு. சமுத்திரம், திருநெல்வேலி மாவட்டம், திப்பனம்பட்டியில் 1941-ம் ஆண்டு பிறந்தார். இள வயதிலேயே தந்தையை இழந்தார். கடையத்தில் ஆரம்பக்கல்வியை முடித்து பாளையங்கோட்டையில் கல்லூரிப் படிப்பை முடித்தார். சு. சமுத்திரம் செங்கல்பட்டு அருகிலுள்ள காட்டுக்கரணை என்ற கிராமத்தில் ஆரம்பப் பள்ளி ஆசிரியராக அலுவலக வாழ்க்கையைத் தொடங்கினார். தமிழக அரசில் கூட்டுறவுத் துறை ஆய்வாளர், ஊராட்சி வளர்ச்சி அதிகாரி ஆகிய பதவிகளை ஏற்றுப் பணியாற்றினார். ஸ்ரீபெரும்புதூரில் பணியாற்றுகையில் அதிகாரிகளுடன் முரண்பாடு ஏற்படவே பணியைத்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *