படப்பிடிப்பு இடைவேளையில் தன் சக நடிகைகளுடன் அமர்ந்திருந்த நித்யாவிற்கு..எப்போதும் போல் இப்போதும் மனதிற்குள் அதே நினைவு, முக வாட்டம்.
இந்தத் தொழிலில் நான்கைந்து வருடங்களாக துணை நடிகையாக வாழ்க்கை நடத்தும் தனக்குத் திரைப்பட நடிகையாக வெளிக்காட்டிக் கொள்ளமுடியவில்லையே என்ற ஏக்கம், கஷ்டம்.!
தோழிகள், உறவினர்களிடம் கூட….’நான் இந்தப் படத்தில் நடித்திருக்கிறேன், அந்தப் படத்தில் அந்தக் காட்சியில் வந்திருக்கிறேன்!’ என்று அடையாளம் காட்டி சொல்ல முடியாத அவலநிலை.
திரைப்படத்தில் தலைகாட்டும் அத்தனைப் பேர்களுக்குமே தான் கதாநாயகன், கதாநாயகி கனவு. இல்லை தான் திரைத்துறையில் பிரபலமாக வேண்டும் என்கிற நினைவு.
அதற்காக நிறைய முயற்சிகள், கஷ்டங்கள். என்று தொடர…அந்த ஒட்டலில்தான் துணை நடிகர், நடிகைகள் வாழ்க்கை. அப்படி இருக்கும்போது…
ஆடல் , பாடல் காட்சிகளில் துணை நடிகர், நடிகைகளை உபயோகப்படுத்தும் எந்த இயக்குநர், தயாரிப்பாளர்களும்…இவர்கள் அழகு, உடல் உருவத்திற்கு மதிப்பு கொடுப்பதில்லை. கஷ்டம், மன வருத்தங்களை நினைத்துப் பார்ப்பதில்லை.
மாறாக…. ஆடு, மாடுகளாக மதிப்பு.
“இங்கே போ, அங்கே போ!” துரத்தல்.
“அப்படி நில், இப்படி ஆடு,!” விரட்டல்.
படம் முழுக்க வரும் கதாநாயகன், கதாநாயகி உருவம், முகங்களையே இந்தக் காட்சிகளிலும் அடிக்கடிக் காட்டி துணை நடிகர், நடிகைகள் முகம், உருவங்களை அருகிலும், தூரத்திலும் ஒப்புக்கு ஓடவிட்டு படம் பார்ப்பவர்கள் மனதில் இவர்கள் உருவம், அழகுகளை பதியவிடாமல் செய்கிறார்கள்.
இவர்கள் முகம், உருவங்களையும் ஒரு சில நிமிடங்கள் காட்டி சென்றால் கதை கரு, ஓட்டத்திற்கு குறை, தடை. இல்லை. தங்களுக்கும் திரைப்படத்துறையில் கால் பதித்தற்கான அடையாளங்கள். உறவினர்கள், நட்பு வட்டாரத்திலும் மதிப்பு, மரியாதை!’ என்று எப்போதும் போல் இப்போதும் அந்த நினைவு வர…
எழுந்து இயக்குனரிடம் சென்று தன் மனத்திலுள்ளதைச் சொன்னாள்.
ஒரு சில நிமிடங்கள் அவள் முகத்தையே உற்றுப் பார்த்து யோசித்த இயக்குநர் இன்பரசன்…
“உங்க குறையை நிவர்த்தி செய்யலாம்.நித்யா. தப்பில்லே.! இதை இந்த நிமிடத்திலிருந்தே தொடங்கறேன். மற்ற இயக்குநர்களிடமும் இதை சிபாரிசு செய்து இந்தக் குறைகளைச் சுத்தமா கலையறேன். மனதில் உள்ளதை மறைக்காமல் எங்களுக்குத் தோன்றாத உங்கள் குறைகளைத் தைரியமாய் சொன்ன உனக்கு என் வாழ்த்துக்கள்” சொன்னார்.
நித்யா முகத்தில் மலர்ச்சி.