கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 14, 2021
பார்வையிட்டோர்: 3,742 
 
 

எத்தனை ஆண்டுகள் ஆனாலென்ன… அதற்கான சொந்தத்தை மனம் மறக்குமா என்ன…? அந்த மேளத்தை – தொல் தமிழர்களின் அந்த தோல் கருவியை, மிருதுவாயிருந்து இப்போது கொஞ்சமாக முரடேறிப்போயிருந்த அதன் மேற்பாகத்தைத் தடவிக் கொடுக்கும்போது பழைய ஞாபகங்கள் மனதுக்குள் ஓடி வந்து சம்மணம் இட்டுக் கொண்டன.

‘இவ்வளவு நாளா உபயோகிக்காம கெடந்தாலும் கொஞ்ச நாழி அனல்ல சூடு காட்டினா டண்டணக்கு…டண்டணக்குன்னு பக்கத்து தோட்டத்துக்கும் கேக்கற மாதிரி தயாராயிடுமில்ல..!’ அம்மாசி காலங்காலமாய்ப் பதித்துப் பதுகாத்து வைத்திருந்த இசை காதில் ஒலிக்க அதில் ஆழ்ந்து போனார்.

“ஏம்பா உங்களுக்கு வேற வேலயே இல்லயா… இததான் இப்ப யாருமே சீண்டறதில்லையே… நீங்கதான் இன்னும் விடாம… அப்ப அப்ப எடுத்து புள்ளய தடவிக் கொடுக்கற மாதிரி தடவிக் கொடுத்துக்கிட்டிருக்கீங்க… எத்தன தடவ சொன்னலும் புரிய மாட்டேங்கிது… அத வேற எல்லாரும் பாக்கிற மாதிரி கட்டி வேற தொங்க விட்டிருகீங்க..!”

அம்மாசியின் மகன் இன்றல்ல, அவர் அந்த வட்ட வடிவ தோல் மேளத்தை, தன் இளமைக் கால உயிர் நட்பை எடுத்து யாரும் பார்க்காத போது நெஞ்சோடு அணைத்து வருடிக் கொடுக்கும் போது மகன் கொஞ்சம் வெறுப்பு கொஞ்சம் கண்டிப்போடு சொல்லிவிட்டுச் செல்வான்.

ஆனால், அவனுக்குத் தெரியாமலேயே அதற்கு ஒரு வாய்ப்பும் வந்து விட்டது. அம்மாசியினால் அதனைத் தவற விட முடியுமா என்ன? இதற்காக எத்தனை ஆண்டுகள் காத்திருப்பு. இளமையில் சக நண்பர்கள் சப்பான் ஆறுமுகம், சின்னவன், தர்மன் ஆகியவர்களோடு இதனை வைத்துக் கொண்டு தார் பாய்ச்சிய வேட்டி கட்டி தலையில் பட்டையாக சிகப்பு துணியைக் கட்டி போட்டி போட்டுக் கொண்டு தப்பில் என்னென்ன ஒலி எழுப்ப முடியுமோ அத்தனையும் எழுப்பி நேர் நின்று, எதிர் நின்று, வளைந்து நின்று ஆடும்போது திருவிழாக் கூட்டமே மெய் மறந்து விடுமே! அப்படி ஒரு களை கட்டிய அந்த நாட்களை மறக்கத்தான் முடியுமா..!

‘டண்…டண்…டணக்கு டணக்கு டணக்கு… இன்னக்கு வெளிக்கொடி ஏத்துறாங்கோ… சரியா அஞ்சு மணிக்கு சாமி ஆத்தங்கறக்கு போவுது… எல்லாரும் கோயிலுக்கு வாங்கோ…’

தோட்டத்தின் மூலை முடுக்குகளில் அம்மாசியின் குரல் ஒலிக்கும். மைக் இல்லாத அந்த கால கட்டத்தில் தோட்டத்து லயங்களில் எல்லாம் இந்தத் தகவலை ஒலி பரப்புச் செய்ய அம்மாசியையே தேர்ந்தெடுப்பார்கள். இதற்குச் சக நண்பர்களிடம் எந்த எதிர்ப்பும் வராது. குரல் வளம் அப்படி. ஒரு லயத்தின் முச்சந்தியில் முழக்கமிட்டால் மூன்றாவது லயத்தின் சுவர்களில் எதிரொலிக்கும்.

அந்த தப்பை-இசைக் களஞ்சியத்தை வருடிக் கொடுக்கும்போது அம்மாசியின் கண்களில் இலேசாக நீர் தளும்பி விட்டது. யாரும் பார்க்காத நேரத்தில் கணிந்த கண்களைத் துடைத்து விட்டுக் கொண்டார்.

அம்மாசி ஏறிய பேருந்து மாலை 6.00 அளவில் துரோங் 11வது கல் தோட்டத்தில் இறக்கி விட்டுச் சென்றது. வெள்ளைத் துணியில் சுற்றித் தோளில் மாட்டிக் கொள்ளும் வகையில் கயறு கட்டி இருந்தாலும் பெரும்பாலான நேரங்களில் ஒரு குழந்தையை ஏந்திக்கொண்டிருப்பதைப் போலவே வழி முழுதும் காத்து வைத்துக் கொண்டு வந்தார்.

பேருந்தில் அருகில் அமர்ந்திருந்த ஒரு மலாய்க்காரர் அது என்ன என்று கேட்டபோது தப்பு அடிப்பது போன்ற சாடையில் காட்டினர். அவரும் புரிந்தது போல் தலையை ஆட்டிக் கொண்டார்.

தோட்டத்தில் கால் ஊன்றிய அம்மாசிக்கு பழைய ஞாபகங்கள் ஓடோடி வந்து நெஞ்சத்தில் அமர்ந்து கொண்டன. அப்போதும் வயதேறிப்போய் சுருக்கம் விழுந்த கண்கள் பனித்தன.

பழைய நண்பர்களைப் பார்க்கப் போகும் ஆவல் நடையில் தெரிந்தது. எத்தன பேர் வந்திருப்பாங்க… நம்ப கூட்டாளிங்கலாயிருந்தா ஈடு கொடுத்து அடிக்கலாம். புது ஆளுங்கலாயிருந்தா அவங்ளோட அடியக் கண்டு பிடிக்கவே கொஞ்ச நேரம் ஆகுமில்லயா..? அம்மாசி தனக்குள் கணக்குப் போட்டுக் கொண்டார்.

தோட்டம் ரொம்பவே மாறிப்போயிருந்தது. 30 ஆண்டு காலவோட்டம் அடியோடு புரட்டிப் போட்டிருந்தது. பழைய லயங்களைக் காணவில்லை. நகர்ப்புறத்து தாமான் வீடுகளைப் போன்று வசதியானவையாயிருந்தன. நீண்ட வீடுகள் மாற்றப்பட்டு இரண்டு-இரண்டு தொகுதி வீடுகளாயிருந்தன. பல வீடுகள் ஆள் அரவமற்று காலியாகக் கிடந்தன. அந்தக் காலத்தில் சந்தைக் கடையைப் போலிருந்த தோட்டம் அங்கொருவரும் இங்கொருவருமாய் நடமாட்டம் கொண்டிருந்தது.

தோட்டத்துக் கோவில் மட்டும் இடம் மாறாமல் அங்கேயே நிலை கொண்டிருந்ததால் சுலபமாகக் கண்டு போய்ச் சேர முடிந்தது.. கோவிலை அடைந்த அவருக்குக் கொஞ்சம் ஏமாற்றமாகவே இருந்தது.

‘இன்னக்கு உள் கொடி ஏற்றுவதச் சொன்னாங்களே… அதுக்கு வேண்டிய ஒரு முன்னேற்பாடும் நடைபெறுவதாகக் காணோம். இன்னேரம் தப்பு அடிக்க நெருப்பு போட்டு அனல் காட்டிக்கொண்டிருக்கணுமே… அப்படியும் ஒண்ணுமே காணலியே…’ “ஏம்பா இன்னக்குத்தனே உள் கொடியேற்றம்…? ஆத்தங்கறைக்குப் போவலியா… யாரயுமே காணலியே..!” அங்கு நடமாடிக் கொண்டிருந்த ஒரு சிறுவனைப் பார்த்துக் கேட்டார் அம்மாசி.

“இன்னும் பண்டாரம் வந்து சேரல தாத்தா… பக்கத்து தோட்டத்து கொவில்ல இருந்து அவர் வரணும். அதுக்கப்புறந்தான் ஆத்தாங்கறக்கு போவங்க… ஆளுங்கள கூட்டிட்டு வர தலைவரு போயிருக்காரு… இன்னும் ஒரு மணி நேரமாவது ஆவும். ஆமா நீங்க யாரு… ஏதோ வெள்ளத்துணியில சுத்திக் கொண்டந்திருக்கீங்களே… அது என்னா..?”

பையன் ஆர்வமாகக் கேட்க, அம்மாசிக்கும் ஒரு ஆள் இதனை பற்றிக் கேட்கிறானே என்னும் ஒரு மகிழ்ச்சி ஏற்பட்டு விட்டது

“இதுவா தம்பி.. இதுதான்யா தப்பு… நீ முன்ன பின்ன பாக்கலியா… கோயில் திருவிழாவில இததான் அடிக்கணும்… இது நம்மளோட பாரம்பரிய சொத்து… இந்த குச்சிகளால அடிச்சா இந்த தோட்டத்துக்கே கேக்கும்..!”

இடது கையால் பயன் படுத்த வேண்டிய சிம்புக் குச்சியையும் வலது கையால் பயன் படுத்த வேண்டிய அடிக் குச்சியையும் பயன்படுத்தி தப்பில் இலேசான டண்டணக்கு டண்டணக்கு டண்…டண் என நாதம் எழுப்பிக் காட்டினார்.

“அப்படியா தாத்தா… நல்லாத்தன் இருக்கு… ஆனா, இப்ப இங்க யாரும் அடிக்கிறதில்ல… இன்னும் கொஞ்ச நேரத்தில உருமி அடிக்க வந்துடுவாங்க..!” அந்தச் சிறுவன் அப்படிச் சொல்லி அங்கிருந்து போய்விட்டதானது அவருக்குச் சப்பென்று போய்விட்டது.

‘இந்தக்காலத்து புள்ளங்களுக்கு இதோட அரும எங்க தெரியப் போவுது. தலவரு வந்த பின்னாடி எல்லா ஏற்படும் செய்து தந்துடுவாரு. நம்ம பழய கூட்டாளிங்க வராமலா போயிடுவாங்க… அப்படியே நமக்கு அறிமுகம் இல்லாத தப்புகாரவங்க வந்தாதான் என்ன.. நம்ம தெறமயக்காட்டிடணும்… அம்மாசியா… கொக்கா… அப்படித்தான் நம்மள மிஞ்ச எந்தக் கொம்பன் வந்துடப் போறான்..!’

அம்மாசி மனதுக்குள் எண்ணித் தன் திறமையை மெச்சிக் கொண்டும் இந்த தோல் கருவியில் என்னென்ன ஜால வித்தையெல்லம் காட்ட வேண்டுமென்று மனம் கணக்குப் போட்டுக் கொண்டிருக்கும்போது சில வேட்டி கட்டிய இளைஞர்கள் கோவிலுக்குள் நுழைந்தார்கள். அவர்கள் கோவில் முக்கியஸ்தர்களாக இருக்க வேண்டுமென்று இவராகவே அனுமானித்துக் கொண்டு மிக பவ்வியமாக அவர்கள் எதிரில் போய் நின்றார்.

அவர்கள் இவர் யார் என்றே கண்டு கொள்ளாமல் போகவே, அவர்களில் ஒருவரைப் பார்த்து, “தம்பி, கோவில் தலைவர் முருகையா இன்னும் வரலீங்களா?” என்று கேட்டு விட்டு அவர்கள் பதிலுக்காகக் காத்திருந்தார்.

அவர்கள் அம்மாசியை ஒரு சேரப் பார்த்தார்கள். அந்தப் பார்வையில் ஒரு கேள்விக்குறியும் இருந்தது.

“தலைவர் முருகையாவா..? நீங்க யாருங்க பெரியவரே… அவரப் பத்திக் கேக்கறீங்க..!”

“ஆமாங்க தம்பி, ஏம்பேரு அம்மாசி. இந்த தோட்டத்தில 30 வருடத்துக்கு முன்னே இருந்து இப்போ பிள்ளங்க கூட தஞ்ச மாலிம்ல இருக்கேன். ரெண்டு மாசத்துக்கு முன்னாடி அந்த பக்கம் வந்த கோவில் தலைவரு முருகையா என்னத்தேடி வந்து தோட்டத் திருவிழாவில தப்பு அடிக்கணும்ணு வரச்சொல்லி தேதி எல்லாம் எழுதிக் கொடுத்துட்டு வந்தாரு. நானும் நம்ம பாரம்பரியக் கலயக் காப்பத்தணும்ண்னு என்னோட தப்ப பழுது பாத்து கொண்டந்துருக்கேன்… தம்பி முருகையாவுக்கு என்னப் பத்தியும் என்னோட தப்பு அடிக்கிற தெறமையும் நல்லா தெரியும். அவரோட அப்பா ஆறுமுகம் கூட ஏஞ்சோடியா நின்னு தப்பு கொட்டுவாரு..அந்தக் காலத்தில..!”

“அப்படியா பெரியவரே… இந்த ரெண்டு மாசத்துக்கு இடையில என்ன நடந்துச்சின்னு உங்களுக்கு யாருமே சொல்லலியா..?”

இப்படிக் கேட்ட அவர்கள் அம்மாசியைப் பரிதாபமாகப் பார்த்தார்கள். அவர்கள் பார்வையில் எதோவொன்று இடறுவதாகப் பட்டது.

“ஒன்னும் தெரியாதுப்பா… முருகையா தம்பிதான் இந்த வருடம் எல்லாரும் மறந்து போய்க்கிட்டு வற்ர இந்த தப்பு ஆட்டத்த முன்ன காலம் மாதிரி கொண்டு வரணும்… அதுக்கு இந்த காலத்து புள்ளங்களுக்கு ரொம்ப தெரியாது… உங்களப் போல உள்ள வயசாளிங்கதான் அதுக்கு உயிர் கொடுக்கணும். கட்டாயம் வந்துடுங்கணு சொல்லிட்டு வந்தாரு… நானும் வந்து சேந்துட்டேன்… என்னப் போல இன்னும் ரெண்டு பேரையும் போய்க் கூட்டிட்டு வர்றதாச் சொன்னாரே… அவங்கெல்லாம் வந்துடுவாங்க இல்லையா..? மூணு பேரா இருந்தாதான் ரஞ்சிப்பா இருக்கும்..!”

அம்மாசி பேசப் பேச அவர்கள் இவரைக் கூர்ந்து நோக்கினார்கள். அவர்கள் முகத்தில் ஒரு வகையான கழிவிரக்கம் தோன்றி மறைந்தது.

“பெரியவரே… அவர் உங்க கிட்ட சொல்லிட்டு வந்தது ஓரளவு உண்மையாக இருக்கலாம். அவர் சொல்லிட்டு வந்ததைக் கேட்டு நீங்களும் வந்துட்டீங்க… ஆனா…இப்பல்லாம் கோயில் திருவிழாவில தப்பு அடிக்கிறதில்லீங்களே… அதுக்கு பதிலாதான் உருமி மேளம் வந்துடுச்சி… அத இல்ல இந்த பக்க கோயில்கள்ல அடிக்கிறாங்க..! இந்த கோயில் திருவிழாவுக்கு நாங்களும் அந்த குழுவத்தான வரச்சொல்லியிருக்கோம்…!”

இப்படிக்கூறிய அந்த இளைஞர்களை மௌனமாகப் பார்த்த அம்மாசியின் கண்களில் இவ்வளவு நேரம் காணப்பட்ட வெளிச்சம் குன்றிப் போயிருந்தது. இவ்வளவு நேரம் வயசானாலும் நிமிர்ந்து நின்று கொண்டிருந்த அவரது உடல் எதையோ இழந்ததுபோல் தொய்ந்து போய்விட்டது.

“அப்படியா… பரவாலப்பா… தலைவரு முருகையா தம்பிய வரச்சொல்லுங்க அவரு ஏதாவது ஏற்பாடு செஞ்சு கொடுப்பாரு… இந்த வயசான கலத்துல நம்ப கலய மறக்காம இருக்கணும்னு இவ்ளோ தொலவு வந்திருக்கேன்ல..!”

“பெரியவரே… உங்களப் பாத்தா பாவமாத்தான் இருக்கு… ரொம்ப தொலைவிலருந்து வேற வந்திருகீங்க… உங்கள வரச்சொன்ன முருகையா இப்ப தலைவரா இல்லீங்க… நாந்தா புதிய தலைவரா இருக்கேன்… நான் எங்க நிர்வாகம் சொல்றதயும் அதன் முடிவுக்கும் கட்டுப்படணும்..!”

நிர்வாகம், முடிவு இதெல்லாம் புதிய செய்தியாக இருந்தது அம்மாசிக்கு. அவர் இவ்வளவு நாட்களாகப் பொத்திப் பாதுகாத்து வந்த அவரது அந்த தொன்மையான- தமிழர்களுக்கே உரித்தான தோல் கருவியை பார்த்தார். ‘டண் டணக்கு… டணக்கு… டணக்கு…’ அந்த இசை அவரது செவிகளில் ஒலித்துக்கொண்டிருந்தது.

“தம்பி முருகையா வந்துடுவாரில்ல… அவர் வந்தா..!”

அம்மாசி தன்னிடம் மிச்ச சொச்சமிருந்த நம்பிக்கையை விடாமல் அவர்களைப் பார்த்து ஒற்றை வரியில் தன் கோரிக்கையை முன் வைத்தார்.

அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். மீண்டும் அவர்கள் எதையோ சொல்ல மறைக்கிறார்கள் என்பது மட்டும் அவர் மனதுக்குப் பூடகமாகப்பட்டது.

“பெரியவரே… உங்க கிட்ட இத சொல்லக்கூடாதுனு இல்ல… இந்த வயதான காலத்தில எப்படி ஏத்துக்குவீங்கன்னுதான் இவ்வளவு நேரம் மறச்சு மறச்சு பேசிகிட்டிருந்தோம்… முருகையா போன மாசம் ஒரு ‘எக்சிடெண்ல’ இறந்து போய்ட்டாரு..!”

இரண்டாவது ஒரு பெரிய தாங்கிக் கொள்ள முடியாத ஒரு இடி அவர் செவிகளில் இறங்கியது. அம்மாசிக்கு ஒருகணம் அந்த கோயிலும் அதன் சுற்றுப் புறமும் தட்டாமாலை சுற்றின. அருகிலிருந்த தூணைப் பிடித்துத் தன்னை ஒரு நிலை படுத்திக் கொண்டார். அவர் நிலையை உணர்ந்த அவர்களுக்கும் அவர்பால் ஒரு பச்சாதாபம் ஏற்பட்டது.

“பரவாயில்லீங்க பெரியவரே, நீங்க வேலமெனக்கெட்டு வந்துட்டீங்க. இன்னைக்கு உள்கொடி ஏற்றம் நடக்கப் போகுது. அதன்பின்பு வெளிக்கொடி ஏற்றம் நடக்கும். அது முடிஞ்சி மூனு நாள் லயங்களுக்கு சாமி ஊர்வலம் போகும். கத்தி தூக்கின ஆளுக்கு உடம்புக்கு சரி இல்லாமப் போனதால அத உங்களுக்கு கொடுக்குறோம். நீங்களும் அதுக்கு பொருத்தமானவராத்தான் தெரியிறீங்க!”

ஒருகணம் யோசனை செய்தார் அம்மாசி. அவர் காலத்தில் சாதாரணமான ஒருவர் தான் தலையில் ஒரு ராஜமுண்டாசு அணிந்து பெரிய கொடுவாளைத் தோளில் தூக்கிக் கொண்டு சாமி ஊர்வலதுக்கு முன்னால் போவார்.

அந்த தோட்டத்திலும் சரி சுற்று வட்டார தோட்டங்களிலும் சரி டண்டணக்கு டணக்கு டணக்கு என்னும் பறை ஒலியின்-இசையின் வழியாக பலரும் அறிந்த ஒரு கலைஞன் கொடுவாள் ஏந்திச் செல்லும் நிலைக்குத் தள்ளப் பட்டு விட்டானே… இதுதான் காலத்தின் கோலம் என்பதா..!

அவர் தனக்குள்ளே நொந்து கொண்டாலும் வேறு வழியில்லாமல் போகவே அதனை ஏற்றுக் கொண்டார். இருந்தாலும்…

“தலைவர் தம்பி, இது நம்ம கலைப்பா… வேறு இனத்துக்காறவங்க இத பயன் படுத்தவே மாட்டாங்க. நமக்கு உள்ள தனி சொத்து. நீங்க கொடுக்குற வேலய ஏத்துக்கிறேன்… ஒரு நாளைக்கு எனக்கு கொஞ்ச நேரம் ஒதுக்கிக் கொடுங்க… நான் தப்பு அடிச்சிக் காட்டுறேன். நம்ம கலய உங்க காலத்தில விட்றாதீங்கப்பா..!”

அம்மாசியின் இந்த வேண்டுகோள் ஏற்றுக் கொள்ளப்பட்டதா என அவருக்கே தெரியவில்லை. பார்க்கலாம் என அவர்கள் முழுமனதும் இல்லாமல் அரை மனதும் இல்லாமல் கால் மனதோடு தலை ஆட்டி விட்டுச் சென்றதாகப் பட்டாலும் அம்மாசிக்கு ஒரு சின்னதாக மகிழ்வு ஏற்பட்டது.

தலையில் முண்டாசு கட்டி கொடுவாளைத் தூக்கி தோளில் வைத்துக் கொண்டு தோட்டத்திலுள்ள லயங்களுக்கு ஊர்வலமாகச் செல்லும்போது அவருடைய பழைய நினைவுகள் தோன்றி நண்பர்களோடு தமுக்கு முழக்கியதை நினைவலைகளுக்குக் கொண்டு வந்தது.

ஊர்வலத்தின் முன்னே உருமி மேளக் குழு இசைத்துக் கொண்டு சென்றது. ‘டர்…டர்… ட்றீம்..ட்றீம் என ஒலி எழும்பியது. அம்மாசி இதுவரை மகன் வீட்டிலேயே தங்கி விட்டதால் இதெல்லாம் அவருக்குப் புதுமையாகப் பட்டது.

‘இது ஊர்ல மலையாளிகள் கோவில்கள்ல இசைக்கிற ‘ச்செண்ட’ மேளம்ல… அவங்க பெரிய மேளத்த தோள்ல மாட்டிக்கிட்டு இசைப்பாங்க… இங்க இவங்க அதயே சின்னதாக்கி…’ இப்படி எண்ணிப் பார்த்த அவருக்கு ஒன்றும் விளங்கிக் கொள்ளாமல் போனது. ‘அப்படின்னா நம்ம கொவில்கள்ல பறை அடிக்கிறத ஒரு கேவலமாகக் கருதி இதக் கொண்டு வந்துட்டாங்களோ… இன்னும் என்னெத்த மாத்தப்போறங்களோ..!’ தோளில் சுமந்த கோவில் வாள் கனத்தது அவரது மனத்தைப் போலவே.

அம்மாசி ஊர்வலத்தில் நடந்த ஒவ்வொரு அடியிலும் அவர் நண்பர்களோடு பறை முழக்க புலி வேஷம் போட்ட சின்னவன் புலி போல் உருமிக்கொண்டு அவர்களின் தப்பு கொட்டும் இசைக்கேற்ப ஆடிக்கொண்டு வந்ததும் நினைவலைகளில் மிதந்து கொண்டு வந்தன.

திருவிழாவின் இறுதி நாள் நெருங்கிக் கொண்டு வந்தது. அவரது தப்பு முழக்கத்துக்கு ஒரு வாய்ப்பும் கொடுக்கப் படவில்லை. இருந்தாலும் அந்த ‘டண்டணக்கு டண்டணக்கு டண் டண்’ அந்த இசை மட்டும் அவர் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *