இலையுதிர் காலத்தில் ஒருமாலை நேரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 27, 2015
பார்வையிட்டோர்: 7,857 
 

வடக்கு லண்டன்:

அவளுக்கு,தான் இறங்கவேண்டிய ஸ்ரேசனில்,ட்ரெயின் நிற்காமல் ஓடிக்கொண்டிருந்தபோதுதான்,அவள் றெயில்வே அறிவிப்பைச் சரியாகக் கேட்காமல் விட்டதின் தவறை உணர்ந்தாள்.

இலட்சுமி,மனதுக்குள் தன்னைத் திட்டிக் கொண்டாள். ட்ரெயினில் வரும்போது, அவளுடன் ஒன்றாக வேலை செய்யும் ஜேன் சிம்சனும், லெஸ்லி பிரவுனும் ஒன்றாகக்; கல கலவென்று பேசிக்கொண்டு வந்தார்கள். அவர்கள் இருவரும் அண்மையில் குவாத்தமாலா நாட்டுக்கு விடுமுறைக்குப் போய்வந்திருந்த அனுபவங்களைச் சொல்லிக்கொண்டு வந்தார்கள்.அவள் அதைப்பற்றி நினைத்துக் கொண்டுவந்தவள், அவர்கள் தங்கள் ஸ்ரொப்பில் இறங்கிய பின்னும்;,இலட்சுமி தான் இறங்கவேண்டிய இடம் வந்ததும் தனது கைப்பையை எடுத்துக்கொண்டு எழும்பினாள்,ஆனால் நிற்கவேண்டிய இடத்தில் ட்ரெயின் நிற்கவில்லை;.

சட்டென்று அவள் மனத்தில் ஒரு பயம்.லண்டனிலிருந்து வெளிப் பிராந்தியங்களுக்குப் போகும் அந்த ட்ரெயின் மாலை ஆறுமணிக்குப்பின் சின்ன ஸ்ரேசன்களில் நிற்காது.ட்ரெயின் நிற்கவேயில்லை,ஓடிக்கொண்டிருந்தது.மாலை ஆறுமணியைத்தாண்டிய உலகத்தில்,இலையுதிர்கால மேகம், கணவரிடம் அடிவாங்கிய பெண்ணின் கன்னங்களில் அங்குமிங்குமாகத் தெரியும் சிவப்புக் காயங்கள்போலச்சில நிறக்கோலங்களைக் கோடிட்டது.

இலட்சுமி இறங்கவேண்டிய இரண்டு ஸ்ரேசன்களைத்தாண்டி ட்ரெயின் நின்றது.அவளுக்கு முன்பின் தெரியாத இடம் அது. இனி அடுத்த பக்கம்போய் வீட்டுக்குப்போக ட்ரெயின் எடுக்கவேண்டும்.ட்ரெயினால் இறங்கிய மனிதர்கள், நாள்முழுக்க ஓயாது வேலை செய்த களைப்பால்,சோர்ந்த முகங்களுடன் போய்க்கொண்டிருந்தார்கள்.

அவள், எறும்புக் கூட்டம்போல் படிகளில் ஏறி அடுத்தபக்கத்தைக் கடந்திருக்கும் பிரதான தெருவுக்கு பஸ் எடுத்தோ அல்லது.அந்தப் பக்கங்களில் நிறுத்திவைத்திருக்கும் தங்கள் கார்களிலோ அல்லது நடந்தோ தங்கள் வீடுகளுக்குச் செல்லுபவர்களைப் பார்த்துக்கொண்டு நின்றாள். இப்போது என்ன செய்வது?

ட்ரெயின் எடுத்து வீட்டுக்குப்போவதா?அல்லது பஸ் எடுப்பதா? அவள் வீட்டுப்பக்கம்போக,இந்த இடத்திலிருந்து என்ன பஸ் எடுக்கவேண்டுமென்று அவளுக்குத் தெரியாது. யாரையும் கேட்டு விசாரிக்கலாமா?

அவள் குழப்பத்துடன் தயங்கினாள். எல்லா பஸ்களும் வீட்டுக்கு அருகில் போகும் என்ற நிச்சயமுமில்லை. அவளுக்குத் தன்னில் கோபம் வந்தது. அரட்டையடிக்காமல் வந்திருந்தால் அறிவிப்புக்களை அவதானித்திருக்கலாம்.

அவள் எரிச்சலுடன் பெருமூச்சு விட்டாள்.

வீட்டுக்குப்போனதும்,’ஏன் இவ்வளவு லேட்? என்ற கேள்விகள் தொடரும் என்று அவளுக்குத் தெரியும்.அடுத்த பிளாட்பாரத்திற்கு இறங்கி வந்தபோது, அங்கு மூன்று இளைஞர்கள் பெரிய சத்தம்போட்டு ஒருத்தரை ஒருத்தர் சீண்டிக்கொண்டிருந்தார்கள். ஓருத்தன் வெள்ளையன்,ஒருத்தன் கறுப்பன் மூன்றாமவன் கலப்பு நிறத்தவன். அவர்களுக்குக் கிட்டத்தட்ட இருபது அல்லது ஒன்றிரண்டு வயதுகள் கூடவிருக்கலாம். மிக மிக நாகரிகமான இனைஞர்கள் அணியும் உடுப்புக்கள் போட்டிருந்தார்கள். அவர்கள் போட்டிருக்கும் உடுப்புகளுக்கும், அவர்கள் ஒருத்தருடன் ஒருத்தர் பேசிக்கொள்ளும் அநாகரீகமான வார்த்தைகளுக்கும் ஒரு தொடர்புமில்லை என்று அளவிட,இலட்சுமிக்குச் சில நிமிடங்களும் தேவையிருக்கவில்லை. அவர்களுக்கு அவள் வந்திருப்பது தெரிந்தும் அவர்களின் அநாகரிக வார்த்தைகள் ஓயவில்லை.

தனியாக வந்திருக்கும் ஒரு பெண் முன்னால் பாவிக்கும் வார்த்தைகளா அவை?

அவள் தர்மசங்கடத்துடன் ஒரு ஓரத்தில் ஒதுங்கிளாள்.

லண்டனுக்குப் போகும் எந்த ட்ரெயினும் வருவதாக இல்லை.

ஏதோ ஒரு இடத்தில் ஏதோ சிக்னல் பெயிலியரா, அவள் தனக்குத் தானே யோசித்துக் கொண்டாள்.

சட்டென்று. அவளுக்கு, ஒரு மனிதர்களற்ற பாலைவனத்தில் அகப்பட்ட பிரமை. இவ்வளவு நேரமும் ஆயிரக்கணக்கான மனிதர்களுடன் பிரயாணம் செய்தவள் ஒருசில நிமிடங்களில்,தர்மசங்கடத்தைத் தரும் ஒருசில மனிதர்களுடன் அகப்பட்ட பயம் மனத்தை நெருடியது.

ஓரு நிமிடங்களுக்குமுன்,ஆயிரக்கணக்கான மக்களால் நிறைந்திருந்த இந்த பிளாட்பாரம் இப்போது ஒன்றிரண்டு மனிதர்களுடன் யதார்த்தமற்ற நிலையைக் காட்டியது.மௌனமாக ஊர்ந்து மறைந்த அந்த மனித மந்தைக் கூட்டம் ஏதோ கனவில் வந்த காட்சியாகவிருக்கிறது.

அவர்கள் பெரும்பாலோர் இப்போது தங்களின் அன்பான குடும்பத்தைக் காண வீடுகளுக்குப் போய்க்கொண்டிருப்பார்கள்.

இரண்டு ஸ்ரேசன்கள் தாண்டிவந்ததால் இந்த இடத்திலிருந்து அவளுடைய வழக்கமான ஸ்ரேசனுக்குப் போகச் செல்லுபடியாகும் டிக்கட் தன்னிடம் இல்லை என்று அவளுக்கு அப்போதுதான் புரிந்தது.

எரிச்சலுடன் இன்னுமொருதரம் படியேறிப்போய் அடுத்த பக்கத்திலுள்ள ஸ்ரேசன் மாஸ்டரின் இடத்திற்கு; டிக்கட் எடுக்கப் போனால் அது மூடியிருந்தது. மாலை ஆறுமணிக்குப்பின் இந்தக் காரியாலயம் திறந்திருக்காது என்று தெளிவாக எழுதியிருந்தது.இலையுதிர்காலக் குளிர் காற்று,முகத்தில் ஈட்டியாகக் குத்தியது. டிக்கட் எடுக்கும் மெஷின் பக்கம் போனாள்.

அந்த நேரம்,ஓருத்தரை ஒருத்தர் ஓடிப்பிடித்து விளையாடிக்கொண்டிருந்தவர்களில் ஒருத்தன் இவளின் வந்து மோதினான். அந்த அமர்க்களத்தில்,அவள் அவள் போகும் இடத்திற்குப் போகும் டிக்கட்டுக்குப் பதில் லண்டன் சுற்றிப் பார்க்கும் டிக்கட்டுக்காக விரலையமர்த்தியபடியால், அநியாயமான செலவுடன் அந்த டிக்கட் வந்து விழுந்தது.

அந்த நேரத்தில் அவள் இறங்குமிடவழியாகப்போகும் ட்ரெயின் வந்துகொண்டிருந்தது.அவள் அவசரமாகத் தன் டிக்கட்டை எடுத்துக்கொண்டு. ஓடுவதுக்கிடையில் அந்த ட்ரெயின் போய்விட்டது.

‘இந்த நேரத்தில் எந்த ட்ரெயினும் இந்த இடத்தில் நிற்காதா’?

யாரிடம் கேட்பது?

நேரம் மங்கிக் கொண்டுவந்தது. தூரத்தில், அந்த இளைஞர்கள் இன்னும் சில பியர் கேன்களையுடைத்துக்குடித்துக் களேபரம் செய்து கொண்டிருந்தார்கள்..

அவர்கள் இப்போது போதையில் அசிங்கமான வார்த்தைகளால் ஒருத்தரை ஒருத்தர் ‘பாராட்டிக்'(?)கொண்டிருந்தார்கள்.

என்ன இவர்கள், போகுமிடமெல்லாம் பியர்க்கேன்களையும் சுமந்து கொண்டா போவார்கள்?

இருள் பரவிக் கொண்டிருக்கிறது. அவள் தனியாக அகப்பட்டிருக்கிறாள்? இவர்களுக்குப் போதையேறினால் என்ன நடக்கும்?

அவளுக்கு உடம்பு நடுங்கியது.

‘ ஏழு மணிக்கு வரைக்கும் இந்த ஸ்ரேசனில் ஒரு ட்ரெயினும் நிற்காது.’

யார் சொல்கிறார்கள்?

போதையேறும் அந்தக் கும்பலைத் தவிர வேறு யாரையம் அவள் இந்த ஸ்ரேசனிற் காணவேயில்லையே!

குரல் வந்த திசையை அவள் திரும்பிப் பார்த்தாள்.

அடுத்த பக்கத்திலிருந்து,இறங்கி வரும் படிகளால்,ஒரு வெள்ளைக்காரன் இறங்கி வந்து கொண்டிருந்தான்.

‘இதெல்லாம் லண்டனைத் தாண்டியிருக்;கும் குட்டி ஸ்ரேசன்கள்.இனி அடுத்த ட்ரெயின் ஏழரை மணிக்கு அதன் பின் நாளைக்குக் காலை ஆறரை மணிக்குத்தான் நாளைய முதற் ட்ரெயின்’

அவன் இவளுக்குச் சொல்லிக்கொண்டு இவளிருந்த பக்கம் வந்துகொண்டிருந்தான்.

‘என்ன முட்டாள்த்;தனம் செய்து விட்டேன், தெருவுக்குப்போய் டாக்ஸியை எடுத்துக்கொண்டாவது வீடு போய்ச் சேர்ந்திருக்கலாம்’ அவள் தனக்குள்ச் சொல்லி வேதனைப் பட்டாள்.

அவளுக்கு வாய்விட்டழவேண்டும்போலிருந்தது.

புதிதாக வந்தவன் அவளிருந்த பெஞ்சில் வந்து உட்கார்ந்து கொண்டான்.

அவள் கடைக்கண்களால் அவனை எடைபோட்டாள். அவனக்குக் கிட்டத்தட்ட நாற்பது வயதிருக்கலாம். ஓரு கொஞ்ச நேரத்தின்பின் சட்டென்று அவனைத் திரும்பிப் பார்த்தாள்.இலையுதிர்காலத்தின் குளிர்காற்றில் அவனது பொன்னிறத் தலைமயிர்கள் அலையாடின.மிடுக்கான தோற்றம்,நீலநிறக் கண்கள், அவனைப் பார்த்த அவள் கண்களுடன் மோதிக் கொண்டன.அவள் தர்மசங்கடத்துடன் தனது பார்வையை வேறுபக்கம் திருப்பினாள்.

‘நீண்ட நேரமாகக் காத்திருக்கிறாயா?’ அவனாகப் பேச்சைத் தொடங்கினான்.அது பெரும்பாலான ஆங்கிலேயரிடம் இல்லாத பழக்கம். அறிமுகம் செய்து வைக்காவிட்டால் அதிகம் பேசமாட்டார்கள்.

அவள் ஆமாம் என்பதுபோல் தலையாட்டினாள். அவன் அவளிற் பரிதாபமான பாவத்துடன் அவளைப் பார்த்தான். அந்தப் பக்கம் கண்டபாட்டுக்கு ஒடித்திரிந்துகொண்டிருக்கும் அந்த மூன்று வாலிபர்களும் இவர்கள் இருவரும் பேசிக் கொள்வதைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

அவளின் பார்வை தூரத்தில் தெரியும் பொதுத் தெருவிற் பதிந்தது. எப்போதாவது இருந்து ஒருகார் போய்க்கொண்டிருந்தது.மிகவும் அமைதியான ஊர்போல் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டாள்.

‘பணக்காரர்கள் வாழும் இடமிது.இருள முதலே தங்களின் வீடுவாசல்களை இழுத்து மூடிவிடுவார்கள்.வெளியுலகத்திலிருந்து தங்களைப் பிரித்துக்கொண்டு தங்கள் செல்வ உலகத்தில் வாழ்வார்கள்.’ அவன் அவளின் மனவோட்டத்தைக் கணித்த மாதிரி அந்த இடத்தைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தான். அது அவளுக்கு ஆச்சரியமாகவிருந்தாலும், அவன் தொடர்ந்து அவளுடன் பேசிக் கொள்வது தர்மசங்கடமாகவிருந்தது.

‘ஒரு பக்கத்தில், ஆபாசவார்த்தைகளுடனும் பியர்கேன்களுடனும் ஒரு அடிதடிக் கும்பல்,அவளுக்குப் பக்கத்தில் ஒரு பைத்தியமா?’ அவள் தன்னைத் தானே கேட்டுக் கொண்டாள்.;

இருள் சாடையாகப் பரவத் தொடங்கியது.அவனின் பார்வை இவளிற் தங்கி நிற்பதான ஒரு உணர்வு,அவள் அவனைத் திரும்பிப் பார்த்தாள். அவனின் பார்வை அவளைத்தாண்டி, அடிவானத்தில் மறையப் போகும் கதிரவனிற் கலந்திருந்தது.

‘ அந்த வானத்தில் வரைந்திருக்கும் அழகிய ஓவியத்தைப்பார்’ அவன் கனவிற் பேசுவதுபோல் முணுமுணுத்தான்.

‘இலையுதிர்காலத்தை நான் மிகவும் ரசிப்பேன்’ இலட்சுமி கேட்டுக்கொண்டிருக்கிறாளோ இல்லையோ அவன் பேசிக் கொண்டிருந்தான்.

அவன் சொன்னததை; தொடர்ந்து அவள் அடிவானத்தை நோக்கினாள்.

சிவப்புநிறத்தையும், மஞ்சள் நிறத்தையும் சேர்த்துக் குழைந்து எறிந்தமாதிரி அடிவானத்தில் ஒரு தோற்றம்.

‘கடவுள் ஒரு அற்புதற்கலைஞன்.இப்படி ஒரு அழகை, பிரபல ஓவியர்களான,பிக்காசோ,ரெம்பிராண்ட்,மைக்கல் ஆஞ்சலோ,ரேர்னர்,கொன்ஸ்டபிள் போன்றவர்களால் படைக்க முடியும் என்று நீ நினைக்கிறாயா,?’

அவள் அவன் கேட்ட கேள்விக்கு மறுமொழி சொல்லவில்லை.

குளிர் காற்றுடன் அவள் தலைமயிர் கொஞ்சி விளையாடியது.

‘நீ ஒரு இந்தியப் பெண்ணா?’

அவன் கேட்டான். அவள் தைரியமாக அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

‘உனக்கேன் தேவையில்லாத கேள்விகள்’?; என்ற பார்வையது.

‘இந்தியப் பெண்களின் நீண்ட தலைமுடியை நான் ரசிப்பேன். பெரும்பாலான இந்தியப் பெண்கள்,இயற்கை கொடுத்த கொடையான, நீண்ட தலைமயிர்; அழகை அலங்கோலமாக்காமல் வைப்பதை நான் ரசிப்பேன்’

அவன் தன்னுடன் தேவையில்லாத விடயங்களை வேண்டுமென்றே பேசுவதாக அவள் நினைத்தாள்.

‘இந்தியப் பெண்களின் தலைமுடியை மட்டுமா ரசிப்பாய்?’ என்று அவனைக்கேட்டுத் திட்டவேண்டும்போலிருந்தது.

அவளின் உதாசீனம் அவனுக்குத் தர்மசங்கடத்தைத் தந்ததோ என்னவோ அவன் கொஞ்ச நேரம் பேசாமலிருந்தான். பின்னர் அவனது

கால்களையுதறிக் கொண்டான். ஏதோ ஒரு நோவுடன் அவதிப்படுபவன்போல் முனகிக்கொண்டான்.

அவள் திரும்பிப் பார்த்தாள். அவன் முகத்தில் திருப்தி.

‘எனது முழங்கால்களுக்குப் பின்னால் நோகிறது. அது வெரிக்கோஸ் வெயின் என்று நினைக்கிறாயா?’அவளை வருடக்கணக்காகத் தெரிந்தவன் மாதிரி அவளிடம் கேள்வி கேட்டதுமல்லாமல்,தனக்கு என்ன வருத்தமாயிருக்கும் என்று கேட்டது அவளுக்கு வியப்பாகவிருந்தது.

அவள் அவனை நேரடியாக ஏற இறங்கப் பார்த்தாள். அவனது நீலவிழிகள் சிரித்துக் கொண்டிருந்தன.

‘எனது கால்களின் நோவுக்கு என்ன காரணம் என்று உன்னிடம் ஏன் கேட்டேன் என்று யோசிக்கிறாயா?’ அவன் குரலில் குறும்புத் தனம்.

அவள் மறுமொழி சொல்ல முதல்,அவன் அவளிடம் கொஞ்சம் நெருங்கி வந்து,அவளின் வேலைசம்பந்தமான பைகளுக்குள்ளால் வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு பைலைத் தன் கைகளாற் தட்டினான்.

அவளுடைய பைலில்,’ பப்ளிக் ஹெல்த் றிப்போர்ட்’ என்று எழுதப் பட்டிருந்தது. அதன் மூலம் அவள் ஒரு சுகாதார டிப்பார்ட்மென்டில் வேலை செய்கிறாள் என்ற அவன் நிர்ணயித்திருக்கிறான் என்று புரிந்தது.அவனின் புத்திசாலித்தனமான சேட்டையைப் பார்த்து,அவள் சட்டென்று சிரித்துவிட்டாள்.அவனும் கல கலவென்று சிரித்தான். தூரத்தில் கலாட்டா பண்ணிக்கொண்டிருந்த கும்பல் அவர்களை முறைத்துப் பார்த்தது.

‘ஒவ்வொருவருடைய வேலைப் பின்னணியை அவர்களின் பேச்சோ அல்லது செய்கைகளோ காட்டிக்கொடுத்துவிடும்’அவன் குரலில் அழுத்தம்.

‘இரண்டு நாட்களாக எனது பின்னங்கால்களில் நோவாக இருக்கிறது.’ அவன் சொல்லிக் கொண்டே,தனது ஜீன்ஸைக் கொஞ்சம் மேலே உயர்த்தினான். அவனுடைய பின்னங் காலில், வெரிக்கோஸ்வெயின் உபத்திரவத்தால்,வெளியிற் தெரியும்படி புடைத்த நாளங்கள் எதுவும் தெரியவில்லை.

‘உனக்கொன்றும் வெரிக்கோஸ் வெயின் கிடையாது. உனது கால் நோவுக்குக் காரணம், ஒன்று நீ எங்கேயோ அடிபட்டிருப்பாய், அல்லது, நீண்ட நேரம் கால்களை ஒரே நிலையில் இரத்தம் பாயாதமாதி,அழுத்தி வைத்தபடி பிரயாணம் செய்திருப்பாய்’ அவள் அவனது கால்களைக் கவனமாகப் பார்த்தபடி சொன்னாள்.

அவன் முகத்தில் ஒரு மகிழ்ச்சி.

‘நீ ஒரு நல்ல கெட்டிக்காரி, எனது நோவுக்கான காரணத்தைச் சரியாகச் சொன்னாய்…இன்று காலைதான் அமெரிக்காவிலிருந்து லண்டனுக்கு வந்தேன்..இரண்டு மூன்று கிழமையாக ஒரே அலைச்சல்.. எனது …….;..’ அவன் சொல்ல வந்ததைச் சொல்லாமல் சட்டென்று தனது பேச்சை நிறுத்தினான். பின்னர்,

‘ வாழ்க்கை மிகக் குறுகியது… வாழ்க்கையின் அவசர ஓட்டத்தில் எங்கள் உடம்பின் தேவைகளை,உடலுக்குத் தேவையான பராமரிப்பைச்; சிலவேளை மறந்து விடுகிறோம்’ என்றான்.

நேரம் மாலை ஆறுமணி நாற்பத்தைந்து நிமிடம் எனத் தூரத்தில் தெரிந்த மணிக்கூடு காட்டியது. அவள் நேரத்தையுற்றுப் பார்ப்பதைக் கண்ட அவன் அவளை ஏறெடுத்துப் பார்த்தான்.

இந்தியப் பெண்களின் முடியைப் பற்றிப் பேசியவன் இப்போது எதைப்பற்றிப் பேசப் போகிறான்?

பெரும்பாலான ஆங்கிலேயர்கள் தேவையில்லாமல் யாருடனும் பேசமுhட்டார்களே? இவன் ஏன் தொண தொணக்கிறான்?

அவள் யோசித்தக் கொண்டிருக்கும்போது அவனிடமிருந்து இன்னுமொரு கேள்வி பறந்தது.

‘ நேரத்தை அடிக்கடி பார்க்கிறாயே,வீட்டில் கணவர் பார்த்துக் கொண்டிருப்பாரா?’

அவனின் அந்தக் கேள்விக்கு அவள் மறுமொழி சொல்லவில்லை.

‘ காதலன் காத்திருப்பாரா?’ அவன் குரலில் ஒருவிதக் குழைவு. அவள் நேரடியாக முறைத்துப் பார்த்தாள்.அவளின் பார்வையின் நெருப்புக்கு நகர்வதுபோல் அவன் கொஞ்சம் தள்ளியுட்கார்ந்தான்.

‘ஐயாம் சொறி.. குழந்தைகள் காத்திருப்பார்களா?’அவன் குரலில் உண்மையான பரிதாபம். தாய்மையின் தவிப்பையுணர்ந்த பரிவு அவன் பார்வையில் மின்னிட்டது.

‘எங்கே போக வேண்டும்?’ என்று அவன் கேட்ட கேள்விக்கு அவள் தான் போகவேண்டிய இடத்தின் பெயரைச் சொன்னாள்.

‘நல்லகாலம் ட்ரெயினுக்கு நீ காத்திருந்தது பரவாயில்லை.. இந்தப் பக்கத்திலிருந்து நீ போகவேண்டிய இடத்திற்கு பஸ் எடுத்திருந்தாயானால், இரவு ஒன்பதுமணிக்குத்தான் போய்ச் சேருவாய்.இப்போது வரும் ட்ரெயின் எடுத்தால் அதற்கு முதலோ போய்விடலாம்’ அவன் குரல் ஆறுதல் தந்தது.

தூரத்தில், கும்மாளம் போட்டுக் கொண்டிருந்த கும்பல், கட்டிடத்து ஜன்னலில் ஏறி விளையாடிக்கொண்டிருந்தது.

‘முட்டாள்கள், தவறி விழுந்து தலையை உடைத்துக்கொள்ளப் போகிறார்கள்’ அவன் குரலில் சோகம். சட்டென்று பெருமூச்சு விட்டான்.

‘எனது தங்கையின் ஒரே ஒரு மகனுக்கு இவர்களின் வயதுதானிருக்கும்..போன கிழமை இறந்து விட்டான்.’ அவன் குரல் தழுதழுத்தது.

‘ ஐயாம் சொறி’ அவள் உண்மையான பரிவுடன் சொன்னாள். இவ்வளவு நேரமும் இவன் இடைவிடாமல் அலட்டியது தனது மனத்துயரை மறைக்கவா?

‘உனது பரிவுக்கு நன்றி, ஆனாலும் என்ன பரிதாபப்படவேண்டியிருக்கிறது? வாழ்க்கையில் இறப்பு என்பது,ஒவ்வொருத்தரும் பிறந்தவுடனேயே நிச்சயிக்கப் பட்ட ஒரு விடயம்,ஆனால் இளவயதில் இறப்பது மிகத் துக்கமான விடயம் அதிலும் அவனைப் பிரிந்து தவிப்பவர்களுக்கு மிகவும் தாங்க முடியாத விடயம்’

அவன் கண்களில் கலக்கம். அவளிடம் மறைக்கப் பார்த்தான்.

அவள் மவுனமாக அவன் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

‘எனது மருமகன் வாழ்க்கையில் மிக ஆசைகொண்டவன்…போன வாரம் அவன் சுற்றுலா சென்ற இடத்தில் ஒரு விபத்தில் இறந்து விட்டான். அடுத்த வருடம் யுனிவர்சிட்டி போவதாக இருந்தான்’;.அதன் பின்னர் கொஞ்ச நேரம் அவன் மவுனமானான்.

அவள் இருள் பரவும் உலகை வெறித்துப் பார்த்தாள். ஸ்ரேசன் லைட்கள் எரியத் தொடங்கி விட்டன. அந்த வெளிச்சத்தில் அவன் பொன்னிறத்தலை பளபளத்தது.

அவன் அவளைப் பார்த்தான்.அவள் தர்மசங்கடத்துடன் திரும்பிக்கொண்டாள்.

‘நான் உன்னைப் பார்க்கவில்லை,உனக்குப் பின்னால்,அடிவானத்தில் அஸ்தனமாகும் சூரியனின் அழகிய கோலத்தை ரசிக்கிறேன’

அவள் திரும்பிப் பார்த்தாள்.

அரைகுறையான மாலை வெளிச்சத்தில்,பழுத்த மஞ்சள் இலைகளைத்தாங்கிய மரங்களின் பின்னணியில்,பிரசவவேதனையில்,பெண்ணுறுப்பிலிருந்து பிரிந்து வடியும் குருதியின் நடுவில் தலைகாட்டும்; குழந்தையின் முகம்போல்,சூரியனின் பிம்பம் தெரிந்தது.

அவள் அதை ரசித்துத் திரும்பியபோது அவன் பார்வை அவளிற் படிந்திருந்தது.

தூரத்தில் ட்ரெயின் வருவது தெரிந்தது. கலாட்டாக் கும்பல் அவர்கள் பக்கம் வந்தார்கள்.

‘உனது இதழ்கள் மிக அழகானவை’ அவன் சட்டென்று சொன்னான்.அவள் திடுக்கிட்டு விட்டாள்.

அவள் அவசரமாகத் தனது பைகளைத் தூக்கிக் கொண்டாள்.

இந்தியப் பெண்களின் முடியின் அழகை வர்ணித்தவன், மாலையின் அஸ்தமனநேர வர்ணத்தில் மனதைப் பறிகொடுத்தவன்…இப்போது என்னவென்றால்…

ட்ரெயின் நின்றது.அவனைப் பார்க்காமல் விரைந்தாள்.அவனும் தொடர்ந்தான். அங்கு ஓடிப்பிடித்துக்கொண்டிருந்த கும்பலும் ஏறினார்கள்.

‘கிங்ஸ்லேன் ஸ்ரேசனுக்குப் பக்கத்திலா உனது வீடும்?’

இவனுக்கு என்னவென்று தெரியும் நான் கிங்ஸ் லேனுக்குப் பக்கத்திற்தான் இறங்கப்போகிறேன் என்று?

ஓ,கொஞ்ச நேரத்துக்கு முதல் நான்தானே அவனுக்கு எனது ஸ்ரேசன் பற்றிச் சொன்னேன்?

அவள் அப்படி நினைக்கும்போது அவன் சொன்னான்,

‘நீ இறங்கவேண்டிய ஸ்ரேசனைத் தவறவிட்ட குழப்பமும் அதன் பின் நீ ஓடிப் போய் இன்னொருதரம் டிக்கட் எடுத்ததையும் அவதானித்தேன்,அத்துடன் நீதான் நீ இறங்கத் தவறிய ஸ்ரேசன் பற்றிச் சொன்னாய்’;’ அவன் மெல்லமாகச் சொன்னான். அவன் அவளுக்கு மிக மிக அருகில் நின்று பேசிக் கொண்டிருப்பது அவளுக்குத் தர்மசங்கடமாகவிருந்தது.

‘ கேட்டதற்கு நன்றி, இந்த நேரங்களில் பல தடவை வீட்டுக்குத் தனியாகப் போயிருக்கிறேன்.அவள் ‘தயவு செய்து என்னுடன் அலட்டாதே’ என்ற தோரணையிற் சொன்னாள்.

அவன் முகத்தில் ஒரு புன்சிரிப்பு தவழ்ந்தது.

அவன் குரலைத் தணித்துக் கொண்டு சொன்னான்,

‘நான் பேசிக் கொண்டு வந்தது அநாகரிகமாகவிருந்தால் மன்னித்துக்கொள்…ஆனாலும் எனக்கு எதையும் அறிய ஆவல்..இந்தியப் பெண்களிடம் பேசி அதிகம் பழக்கம் கிடையாது. யுனிவர்சிட்டியில் அந்தக் காலகட்டத்தில எனது வகுப்பில் பல பெண்கள் படித்தார்கள் ஆனால் ஒருத்தரும்; இந்தியப் பெண்கள் இல்லை. எங்கள் வங்கியில் ஒரு இந்தியப்பெண் வேலை செய்கிறாள்..அருணா என்பது அவளின் பெயர் என்ற லேபல் அவள் சட்டையில் பொருத்தப் பட்டிருக்கும்.; நான் பணம் எடுக்குச் செக் கொடுத்தால் அழகான புன்னகையுடன் பணத்தைத் தருவாள். தாங்க் யு சொல்வேன் அவ்வளவுதான்.. சாமான் வாங்கும் சுப்பர் மார்க்கெட்டில் பலபேர் வேலை செய்கிறார்கள.அவர்களிற் பலருக்கு நீண்ட தலைமுடியிருக்கிறது.. ஆனால் நீதான்; எனது வாழ்க்கையில் முதற்தரம் ஒரு கொஞ்ச நேரமாவது நான் பேசிய முதலாவது இந்தியப் பெண’;.;

இவனுக்குச் சரியான பைத்தியம்தான்..அவள் தான் இறங்கவேண்டிய இடத்தைத் தவற விட்டதற்கும், இந்த மனிதனைச் சந்திக்க வேண்டிவந்தற்கும் தன்னைத் திட்டிக்கொண்டாள்.

அவள் நேரத்தைப் பார்த்தாள். அவள் இறங்கவேண்டிய இடம் இன்னும் ஐந்து நிமிடங்களில் வந்து விடும்.

” உன்னுடன் வலிய வந்து பேசியதற்கு என்னை மன்னித்துக் கொள்.. நீ ஸ்ரேசனில் தனியாக இருக்கும்போது, அந்த மூன்று தடியன்களும் உன்னைக் கவனித்தபடி இருந்தததை நீ பெரிதாகக் கவனிக்கவில்லை.. நான் ஸ்ரேசனுக்குக் கீழே இறங்கி வரும்போது அதை அவதானித்தேன். அதிலும் நீ டிக்கட் எடுக்க முனைந்தபோது உன்னைத்தள்ளி விடும் மாதிரி ஓடிப் பிடித்து விளையாடியது அவர்களின் சூட்சுமங்களில் ஒன்று. ஆட்களைச் சட்டென்று நிலைகுலையப் பண்ணி அவர்களின் கைப்பையையோ அல்லது பர்ஸையோ தட்டிக்;கொண்டோடுவது அவர்களின் தந்திரங்களில் ஒன்று… போனமாதம் இதே இடத்தில் ஒரு வயோதிபமாதுவைத் தள்ளிவிட்டு அவளின் பொருட்களைக் களவாடினார்கள.அவர்கள் உன்னிடம் வந்து சேட்டைவிடாமலிருக்கத்தான் நான் உனது சினேகிதன் மாதிரிப் பேசினேன், நாங்கள் பேசும்போது அவர்கள் எங்களை நோட்டம் விட்டதை நீ உணர்ந்திருப்பாய் என்று நினைக்கிறேன்;’

அவள் அவன் சொன்ன விடயத்தால் திடுக்கிட்டாள். இவன் வராமலிருந்தால், தனியாக அந்த இடத்தில் உட்கார்ந்திருந்த அவளின் நிலை என்னவாக இருக்கம்?

அவன் அவளருகில் நின்று பேசிக் கொண்டிருந்தான் நன்றியுடன் அவள் அவனைப் பார்த்தாலும், தன்னுடன் தொடர்ந்து பேசிக் கொண்டுவரவும் தன்னைத் தொடர்ந்து தொடர்ந்து வரவும் இப்படிக்கதையளக்கிறானா என்று அவளுக்குப் புரியவில்லை.

‘அவர்களுக்காக மட்டும் நான் உன்னுடன் பேச்சைத் தொடரவில்லை..’அவன் ஒரு சில வினாடிகள் மவுனமாக இருந்துவிட்டுச் சொன்னான். ‘அந்தி மாலையழகின் பின்னணியில்,உன்னுடைய நீண்ட தலைமயிர்கள் காற்றுடன் விளையாடத் தனிமையில் நீ இருந்த தோற்றம் எனக்கு உன்னை அற்புதச் சிலைமாதிரி கற்பனை செய்ய வைத்தது. என்னிடம் தூரிகையிருந்திருந்தால் அப்படியே உன்னை ஒரு அழியாத ஓவியமாக்கியிருப்பேன்’

அவளுக்கு அவனுடைய கலைக் கண்களின் தேடல் புரிந்தமாதிரியுமிருந்தது,ஆனாலும் பெரிதாக அதைப்பற்றிப் பேசிக் கொள்ள அவள் விரும்பவில்லை.

அவன் பார்வை அவள் முகத்தில் தேங்கி நின்றது அவனுடைய பார்வை எங்கே படிந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொண்ட அவள்,நாக்காற் தன் உதடுகளைத் தடவிக்கொண்டு. தர்மசங்கடத்துடன் நெழிந்தாள்

‘ஆழளவ எழடரிவரழரள டipளஇழநெ உயn யனஅசைந வை கழச நஎநச”அவன் அவளுக்குப் பக்கத்தில் நெருங்கி வந்து மெல்லமாக முணுமுணுத்தான்.அவள் அவனின் கிசுகிசுப்பில் வியர்த்து விட்டாள்.

ட்ரெயின் நின்றது.

அவள் சட்டென்று இறங்கிக்கொண்டாள்.

அவனும் இறங்கிக் கொண்டான்.

அவள் நடையைத் துரிதப் படுத்தினாள்.அவனிடமிருந்து தப்பியோடும் அவசரம் அவள் நடையிற் பிரதிபலித்தது.

‘ஏய் இந்தியப் பெண்ணே, உனது இதழ்களை ஒரு கலைஞனாக வர்ணித்தேன்…நான் எனக்கு முன்னாலுள்ள அழகை ரசிப்பவன் ருசிப்பவன் அல்ல.நான் ஒன்றும் பெண்களைச் சுற்றும் பொறுக்கி என்று நினைத்து விடாதே’ அவன் சொல்லிக் கொண்டிருந்தான்.

அவள் தனது வீட்டுக்குப் போகத்தெருவைக் கடக்க நடந்தாள்.

அவன் சொல்வது உண்மையா அவன் ஒரு கலைஞனாக இருக்குமா?’

ஆனாலும் இந்த மாலைப் பொழுதில் ஒரு அன்னியனிடம் கேள்வி பதில் சொல்லிக் கொண்டிருக்க அவள் விரும்பவில்லை.

‘இதோ பார், என்னைப் பற்றித் திட்டிக்கொண்டு ஓடாதே.நான் ஒரு கலைஞன். உன்னை ஒரு கலைப் படைப்பாக ரசித்தேன்…..’ அவன் பேசிக் கொண்டிருந்தான்.அவள் தனது நடையைத் தொடர்ந்தாள்.

‘ பயந்தோடும் இந்தியப் பெண்ணே,நான் பெண்களில் ஆசைப் பட்டலையும் காமுகன் இல்லை..நான் ஒரு ஹோமோசெக்சுவல்…….’அவன் குரல் சாடையாக உயர்ந்து ஒலித்ததால் அவன் சொன்னது தெருவிற்போவோருக்கும் கேட்டு அவர்கள் அவனையும் அவளையும் திரும்பிப் பார்த்தனர்.

அவள் தெருவின் அடுத்த பக்கம் போய்விட்டாள்.

‘ ஐயையோ.. இந்தியப் பெண்ணே.. நாங்கள் இன்னும் ஒருத்தரை ஒருத்தர் அறிமுகம் செய்து கொள்ளவில்லையே…. எனது பெயர்…..’ அவன் கூவினான்.

அவளுக்கும் அவனுக்குமிடையிலுள்ள பெரிய தெருவில் பல தரப் பட்ட வாகனங்கள் போய்க் கொண்டிருந்தன.

அவள் அவன் ஏதோ சொல்கிறான் என்று திரும்பிப் பார்த்தாள்.வாகனங்கள் போட்ட சத்தத்தில் அவன் சொன்னது அவளுக்குக் கேட்கவில்லை.உலகம் இருண்டு விட்டது.அவனும் அந்த நெருக்கடியான நேரத்தில் பார்வையிலிருந்து மறைந்து விட்டான்.

அவள் அவசரத்துடன் வீட்டுக்குப் போய்க்கொண்டிருந்தாள்.

– பாரிஸ் ‘உயிர் நிழல்கள்’ பிரசுரம் 1999

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *