கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 19, 2024
பார்வையிட்டோர்: 1,449 
 
 

(1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

1-5 | 6-10

6

வாஸிலி ஆன்ட்ரீவிச் ரோமம் நிறைந்த மேல் அங்கிகள் இரண்டு அணிந்திருந்தான். அதனால் பனி ஓட்டத்தில் போராடி முடித்த பிறகும், கதகதப்பு பெற்றுதான் இருந்தான். என்றாலும் உண்மையாகவே இரவுப் பொழுதை அவர்கள் இருந்த இடத்திலேயே கழித்தாக வேண்டும் என்று புரிந்து கொண்டதும் அவன் முதுகந்தண்டில் சில்லெனக் குளிர் உணர்வு ஊர்ந்தது போலிருந்தது. தன்னைத் தானே சாந்தப் படுத்திக் கொள்வதற்காக அவன் வண்டியினுள் உட்கார்ந்து சிகரெட்டுகளையும் தீக்குச்சிகளையும் வெளியே எடுத்தான்.

நிகிட்டா முக்கார்ட்டியை அவிழ்த்து விடும் வேலையில் கவனமாக இருந்தான். வயிற்றுப் பட்டை யையும் முதுகு வாரையும் அவிழ்த்தான். கடிவாள வார்களை அகற்றினான். கழுத்துப் பட்டையைத் தளரச் செய்தான். சட்டங்களை எடுத்துவைத்தான். இவற்றை எல்லாம் செய்கிறபோதே குதிரையை உற்சாகப்படுத்துவதற்காக அவன் பேசிக்கொண்டே யிருந்தான்.

‘இப்போ வெளியே வா. வெளியே வா!’ என்று சொல்லி வண்டிச் சட்டங்களுக்கு அப்பால் அதை இட்டுச் சென்றான். ‘இப்ப நான் உன்னை இங்கே கட்டிப் போடுவேன். உன் முன்னால் வைக்கோல் போட்டு வைக்கிறேன். உனது கடிவாளத்தையும் கழற்றி விடுகிறேன். கொஞ்சம் வைக்கோலைக் கடித்த உடனேயே உனக்கு உற்சாகம் ஏற்பட்டுவிடும்’ என்றான்.

ஆயினும் முக்கார்ட்டி அமைதி இழந்து தவித்தது. நிகிட்டாவின் பேச்சுகளினால் அது ஆறுதல் அடைய முடியவில்லை என்பது நன்றாகத் தெரிந்தது. ஒரு கணம் அது ஒரு காலை எடுத்து வைத்து நின்றது. மறுகணம் காலைமாற்றி வேறொன்றின் மீது நிற்கும் வண்டியோடு ஒடுங்கி நெருங்கியது அது. தனது பின்புறத்தைக் காற்றின் பக்கமாகத் திருப்பிக்கொண்டு. தன் தலையை நிகிட்டாவின் கையில் உரசியது. அப்புறம், அவன் தந்த வைக்கோலை மறுதளித்து நிகிட்டாவுக்கு மனவருத்தம் உண்டாக்க விரும்பாததுபோல, வண்டிக்குள்ளிருந்து ஒரு வாய் வைக்கோலைக் கவ்வி இழுத்தது. ஆனால் உடனடியாகவே வைக்கோலைப் பற்றி நினைப்பதற்கு இது தருணமல்ல என்று முடிவு கட்டி விட்ட மாதிரி அதைக் கீழே போட்டது. உடனே காற்று அதைச் சிதறியது; அள்ளி எடுத்து அப்பால் எறிந்தது; பனியினால் மூடி மறைத்தது.

‘இப்போது நாம் இங்கே ஒரு அடையாளம் அமைப்போம்’ என்று நிகிட்டா சொன்னான். அவன் வண்டியின் முன்பக்கத்தைக் காற்றுக்கு நேராகத் திருப்பினான். அதன் சட்டங்களை ஒரு வாரினால் சேர்த்துக் கட்டி, முன்புறத்தில் வண்டிக்கு மேலாக நட்டுவைத்தான், ‘இப்ப சரியாகப் போச்சு. பனி நம்மை மூடிவிட்டாலும் கூட’ நல்ல மனிதர்கள் இந்தச் சட்டங்களைப் பார்த்ததும் தோண்டி நம்மை வெளியே எடுத்துவிடுவார்கள். என்றான் அவன் கையுறைகளைத் தட்டி மாட்டிக் கொண்டே அவன் ‘பெரியவர்கள் நமக்குக் கற்றுக்கொடுத்த பாடம் இது’ என்றும் சொன்னான்.

வாஸிலி ஆன்ட்ரீவிச் தனது கோட்டைத் தளர்த்தி விட்டு, பாதுகாப்பிற்காக அதன் விளிம்பைத் தூக்கிப் பிடித்து, கந்தகத் தீக்குச்சிகளை ஒன்றின் பின் ஒன்றாக இரும்புப் பெட்டியின் மீது உராய்ந்து கொண் டிருந்தான். ஆனால் அவனது கைகள் நடுங்கிக் கொண்டிருந்ததால், ஒவ்வொரு தீக்குச்சியும் பற்றிக் கொள்ளாமலே கருகியது. அல்லது சிகரெட்டின் அருகே அவன் உயர்த்துகிற சமயத்தில் காற்றினால் அணைக்கப் பட்டுவிட்டது. இறுதியில் ஒரு குச்சியில் தீ பிடித்துக் கொண்டது. அதன் சுவாலை ஒருகணம் அவனுடைய கோட்டின் ரோமச் செறிவையும், குவிந்திருந்த விரலில் கிடந்த தங்க மோதிரம் மின்னும் கையையும், முரட்டுக் கம்பளித்துணியின் கீழேயிருந்து வெளியே நீண்டு கிடந்த வைக்கோலில் சிதறிக் கிடந்த பனியையும் வெளிச்சமிட்டுக் காட்டியது. சிக ரெட்டில் நெருப்புப் பற்றியதும் அவன் ஆர்வத்தோடு ஒன்றிரண்டு ‘தம்’ இழுத்து, அனுபவித்து, புகையை மீசையினூடாக வெளியே விட்டான். அவன் மறுபடியும் ‘தம்’ இழுத்திருப்பான். ஆனால் அதற்குள்ளாக தீ படர்ந்த புகையிலையைக் காற்று பிய்த்துக் கிழித்துச் சுழற்றி, முன்பு வைக்கோலை வீசித் தள்ளியது போலவே, விசிறி எறிந்து விட்டது.

எனினும் இந்தச் சிறு ஊதல் கூட அவனை உற் சாகப் படுத்திவிட்டது. ‘ ராத்திரிப் பொழுதை நாம் இங்கு தான் போக்க வேண்டு மென்றால் அப்படியே செய்யவேண்டியதுதான்!’ என்று உறுதியாகச் சொன் னான் அவன். ‘கொஞ்சம் இரு. ஒரு கொடிக்கு நான் ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்லிவிட்டு, அவன் முன்பு கழுத்திலிருந்து அவிழ்த்து வண்டியில் போட்டி ருந்த கைக்குட்டையை எடுத்தான். தனது கை உறை களைக் கழற்றிவிட்டு வண்டியின் முகப்பில் ஏறி நின் றான். உயரமாக இருந்த சட்டத்தின் உச்சியை எட் டிப் பிடிப்பதற்காக உன்னி நிமிர்ந்து, அங்குள்ள வாரில் இறுகலான முடிபோட்டு கைக்குட்டையைக் கட்டிவைத்தான்.

அந்தக் கைக்குட்டை உடனடியாகவே சட்டத் தோடு ஒட்டிச் சுற்றிக்கொண்டும், திடீரென விடு பட்டு வெளிப்புறமாக நெளிந்தும் நீண்டும், அசைந்து பறந்தும் வெறித்தனமாகக் காற்றில் படபடக்கத் தொடங்கியது.

‘எவ்வளவு அருமையான கொடி பார்!’ என்று வாஸிலி தனது கைவண்ணத்தைத்தானே வியந்து போற்றியவாறே, வண்டியினுள் நழுவினான். ‘நாம் ஒன்றாகச் சேர்ந்து இருந்தால் கதகதப்பாகத் தானிருக் கும். ஆனால் உள்ளே இரண்டு பேருக்கு இட மில்லையே’ என்றான் அவன்.

எனக்கு இடம் நான் பார்த்துக்கொள்கிறேன். முதலில் நான் குதிரையை நன்றாகப் போர்த்தியாக வேண்டும். பாவம், அதற்கு ஏகமாக வேர்த்துவிட்டது. சரி, இதை விடுங்கள்’ என்று கூறி நிகிட்டா , வாஸி லிக்குக் கீழே கிடந்த முரட்டுக் கம்பளித் துணியைப் பற்றி இழுத்தான்.

அதை வெளியே எடுத்ததும் இரண்டாக மடித் தான். குதிரை மீது கிடந்த சேணத்தையும் பட்டை களையும் நீக்கிவிட்டு கம்பளியைப் பரப்பி அதை மூடி னான். ‘எப்படியானாலும் இன்னும் கொஞ்சம் உஷ்ண மாக இருக்கட்டுமே!’ என்று முனங்கி, பட்டைகளையும் சேணத்தையும் திரும்பவும் குதிரைமீது கம்பளிக்கும் மேலாகப் போட்டு வைத்தான்.

அந்த வேலையைக் கவனித்து முடித்த பிறகு அவன் வண்டியின் பக்கம் வந்தான். அந்தச் சாக் குத் துணி உங்களுக்குத் தேவைப் படாது. இல்லையா? எனக்குக் கொஞ்சம் வைக்கோலும் கொடுங்கள்’ என்று வாஸிலியிடம் சொன்னான் அவன்.

வாஸிலிக்குக் கீழேயிருந்து இவற்றை எடுத்துக் கொண்டதும் நிகிட்டா வண்டியின் பின்புறமாகச் சென்று பனியில் தனக்காக ஒரு குழி பறித்தான். அதில் வைக்கோலைப் பரப்பிவிட்டு, தனது உடம்பில் கோட்டை நன்றாகச் சுற்றி இறுக்கி, சாக்குத் துணியால் தன்னை மூடிக்கொண்டான். தொப்பியை நன்முக இறக்கி இழுத்து விட்ட பிறகு, அவன் விரித்து வைத்த வைக்கோல் மீது உட்கார்ந்து, காற்றையும் பனியையும் தடுத்துத் தன்னைப் பாதுகாத்துக் கொள் வதற்காக வண்டியின் பின் பக்கத்து மரப்பகுதியிலே சாய்ந்து கொண்டான்.

நிகிட்டா செய்கிற காரியங்களை ஏற்றுக் கொள் ளாத முறையிலே தன் தலையை ஆட்டிக் கொண்டான் வாஸிலி ஆன்ட்ரீவிச். பொதுவாகவே குடியானவர் களின் முட்டாள் தனத்தையும் கல்வி அறிவின்மையும் அங்கீகரிக்காதவனைப்போல் அவன் தலையசைத்தான். ஆயினும் தான் இரவுப் பொழுதை வசதியாகக் கழிப்ப தற்குத் தேவையானவற்றைச் செய்வதில் அவன் முனைந்தான்.

மீதமிருந்த வைக்கோலை வண்டியின் அடிப் பரப்பில் பதமாக விரித்து, தனக்குக் கீழே அதிகமாக வரும்படி கவனித்துக் கொண்டான் அவன். அப்புறம் சட்டையின் கைகளுக்குள்ளே தன் கரங்களைத் திணித்துக் கொண்டு, வண்டியின் மூலையில் தனது தலையை வைத்து முன்பக்கமிருந்து காற்று வராத வாறு தடுத்தபடி சௌகரியமாகப் படுத்து விட்டான்.

அவன் தூங்க விரும்பவில்லை. படுத்தபடியே சிந்திக்கலானான். தனது வாழ்வின் தனிப்பெரும் குறிக்கோளாய், அர்த்தமாய், ஆனந்தமாய், மாண்பாக எல்லாம் திகழ்ந்த அந்த ஒரே ஒரு பொருளைப் பற்றித் தான் அவன் சிந்தித்தான். அதுவரை அவன் எவ்வளவு பணம் சேர்த்திருந்தார்; இன்னம் எவ்வளவு திரட்ட முடியும்; அவன் அறிந்த இதர மனிதர்கள் எவ்வளவு சேர்த்து வைத்திருந்தார்கள்; அவர்கள் எப்படிப் பணம் சேர்த்தார்கள்; இன்னும் எவ்வாறு சேர்த்துக் கொண்டிருந்தார்கள் ; அவனும் அவர்களைப் போல மேன்மேலும் அதிகமாகப் பணம் சேகரிப்பது எப்படி என்றெல்லாம் சிந்தனை செய்தான் அவன். கோர்யாச்கின் தோப்பை விலைக்கு வாங்குவது மிகவும் முக்கியமான விஷயமாகப் பட்டது அவனுக்கு. அந்த ஒரு பேரத்தின் மூலம் மட்டுமே பத்தாயிரம் ரூபிள்கள் லாபம் கிட்டலாம் என்று அவன் நம்பினான். தான் இலையுதிர் காலத்தில் பரிசீலனை செய்த மரங்களின் மதிப்பைப் பற்றியும், ஐந்து ஏக்கர் நிலத்திலிருந்த மரங்கள் எல்லாவற்றையும், அவன் எண்ணி முடித் திருந்ததனால், அவற்றின் மொத்த மதிப்பு பற்றியும், இப்பொழுது தன் மனசினால் கணக்குப் பண்ணத் தொடங்கினான்.

‘ஓக் மரங்கள் சறுக்கு வண்டிகளுக்காக உபயோகப்படும். தரைமட்டத்தில் வளர்ந்துள்ளவை பலவழிகளில் பயனாகும். இவை எல்லாம் போக ஒவ்வொரு பகுதியிலும் முப்பது வண்டி விறகாவது தேறும்’ என்று அவன் தனக்குத் தானே சொல்லிக் கொண்டான். அப்படியென்றால் ஒரு பிரிவில் குறைந்தபட்சம் இருநூற்று இருபத்தைந்து ரூபிள்கள் கிடைக்கும் என்றாகிறது. ஐம்பத்தாறு பிரிவுகள் என்றாகிற போது, ஐம்பத்தாறு நூறுகள் ; அதோடு ஐம்பத்தாறு நூறுகள் ; மேலும் ஐம்பத்தாறு பத்துகள் ; இன்னொரு ஐம்பத்தாறு பத்துகள்; அப்புறம் ஐம்பத் தாறு அஞ்சுகள்….’ இந்த விதமாக சுமார் பன்னிரண் டாயிரம் ரூபிள்கள் வரும் என்று அவன் கணக்கிட்டான். கணக்கிடும் சட்டத்தின் துணை இல்லாமல் அதைத்திட்டமாகக் கண்டு பிடிக்க முடியாது அவனால்.

‘எப்படியானாலும் சரிதான். நான் பத்தாயிரம் கொடுக்கமாட்டேன். ஏகதேசம் எட்டாயிரம் ரூபிள்கள் கொடுக்கலாம். நடைபாதை, காட்டு வழிகள் – இந்த வகைக்காகக் கொஞ்சம் குறைத்தாக வேண்டும். சர்வேயர் கையிலே கொஞ்சம் வெண்ணெய் தடவினால் சரியாகிவிடும். அவனுக்கு ஒரு நூறு அல்லது நூற்றைம்பது ரூபிள்கள் கொடு. மொத்தத்திலே அஞ்சு பகுதி நிலத்தைக் காட்டு வழிகள் என்று கணக் குப்பண்ணி அவன் தள்ளுபடி செய்து விடுவான். ஆகவே அவன் எட்டாயிரத்துக்குத் தந்து விடுவான். மூவாயிரம் ரொக்கமாகக் கைமேலே. இந்த ஒன்றே அவனை சரிக்கட்டி விடுமே! நமக்கு ஏன் பயம்?’ என்று நினைத்து, அவன் தனது பையிலிருந்த பணத்தை முன் கையினால் அழுத்திக் கொண்டான்.

‘அந்தத் திருப்பத்தை நாம் எப்படித் தவற விட்டோம் என்பது கடவுளுக்குத் தான் தெரியும். அந்த இடத்திலே தான் காடு இருக்கவேண்டும். காவல்காரனின் குடிசை இருக்கும். நாய்கள் குரைத் துக்கொண்டிருக்கும். ஆனால் நாசமாய்ப் போகிற நாய்கள் தேவைப் படுகிற சமயத்தில் குரைப்பது கிடையாது.’

அவன் காதுகளை மூடி மறைத்திருந்த கழுத்துக் காலரைக் கீழே தணித்து விட்டு கவனித்துக் கேட்டான். எனினும் முன்பு போலவே இப்பொழுதும் காற்றின் கீச்சொலிதான் காதில் விழுந்தது. வண்டிச் சட்டங்களில் கட்டப்பட்டிருந்த கைக்குட்டையின் படபடப்பும் அசை வொலியும், வண்டியின் மரப்பகுதியில் பட்டுத் தெறித்த பனியின் ஓசையும் தான் ஓயாது கேட்டன. அவன் திரும்பவும் தன் காதுகளை மூடிக் கொண்டான்.

இப்படி ஆகும் என்று தெரிந்திருந்தால் நான் ராத்திரி வேளைக்கு அங்கே தங்கியிருந்து விட்டே வந்திருப்பேன். உம், பரவாயில்லை. அங்கு நாளை போய்ச் சேர்ந்து விடலாம். ஒரே ஒரு நாள் தான் வீணாகி விட்டது. இத்தகைய குளிர் காலத்தில் மற்ற வர்கள் பிரயாணம் செய்யத் துணிய மாட்டார்கள்.’ ஒன்பதாம் தேதி அன்று கசாப்புக் கடைக்காரனிட மிருந்து எருதுகளுக்காகப் பணம் வசூலிக்க வேண்டும் என்பது அப்பொழுது அவன் நினைவில் எழுந்தது. அவனே வருவதாகச் சொல்லியிருந்தான். ஆனால் அவன் என்னை வீட்டில் காண முடியாது. பணத்தை எப்படி வரப்பற்றுவது என்கிற விஷயம் என் மனைவிக்குத் தெரியாது. எந்த விஷயத்தையும் சரிவரச் செய்யத் தெரியாது அவளுக்கு’ என்று எண்ணிக்கொண்டான் அவன். முந்திய தினம் நடை பெற்ற விருந்தில் அதிதியாகக் கலந்துகொண்ட போலீஸ் ஆபீஸரை எப்படி உபசரிக்க வேண்டும் என்று தெரியாமல் அவள் திண்டாடியது அவனுக்கு நினைவு வந்தது. ஆமாம், அவள் பெண்பிள்ளை தானே ! அவள் எதை எங்கே பார்த்திருக்கப் போகிறாள்? என் தகப்பனார் காலத்தில் எங்கள் வீடு தான் எப்படி இருந்தது? சாதாரணமாய் ஒரு பணக் காரக் குடியானவன் வீடாகத் தானே? ஒரு மாவுமில், ஒரு விடுதி – இருந்த சொத்து முழுவதும் இவ்வளவு தான். ஆனால் இந்தப் பதினைந்து வருஷ காலத்தில் நான் செய்து முடித்திருப்பது என்ன? ஒரு கடை, மதுக் கடைகள் இரண்டு, ஒரு மாவு மில், தானியக் கிடங்கு ஒன்று, குத்தகையில் உள்ள பண்ணைகள் இரண்டு, தகரக் கூரை போட்ட களஞ்சியத்துடன் ஒரு வீடு’ என்று அவன் பெருமிதத்துடன் நினைத்தான்.

‘எங்கள் அப்பா காலத்தில் இருந்த நிலைமை மாதிரி இல்லை. சுற்று வட்டாரம் பூராவும் யாரைப் பற்றிப் பேசிக்கொள்கிறார்கள்? வாஸிலி பற்றித் தான். ஏன்? தொழில் முறையில் தீவிரம் காட்டு வதனால் தான். நான் சிரமம் எடுத்துக்கொள்கிறேன். படுத்துத் தூங்கியும் அசட்டுத்தனங்களில் பொழுது போக்கியும் அநாவசியமாகக் காலம் கடத்துகிற மற்ற வர்களைப் போல் இல்லை நான். இரவு நேரங்களில் கூட நான் தூங்குவது கிடையாது. பனிச் சூறையோ, பனிச் சூறை இல்லையோ, நான் புறப்பட்டு விடுகிறேன். அதனாலே தொழில் நிறைவேறி விடுகிறது. பணம் பண்ணுவது வெறும் தமாஷ் என்று நினைக்கிறார்கள் பலர். அப்படி இல்லை. கஷ்டப்படு. மூளைக்கு வேலை கொடு ! இது போல் வெறும் வெளியில் ராத்திரி நேரத்தைக் கழிக்க வேண்டிய நிலைமை ஏற்படும். எத்தனையோ இரவுகளில் தூக்கமே பிடிக்காமல், மண்டைக்குள் சுழல்கிற எண்ணங்களின் காரணமாகத் தலையணையைத் திருப்பித் திருப்பிப் போட வேண்டிய தாகும்!’ என்று அவன் இறுமாப்புடன் எண்ணினான். ‘ அதிர்ஷ்டத்தினால் அநேகர் முன்னுக்கு வந்து விடுவ தாக எல்லோரும் நினைக்கிறார்கள். சரி, மிரோனோவ் குடும்பத்தினர் இப்பொழுது பல லட்சங்களுக்கு அதிபதிகள் ஆகிவிட்டார்கள். அது எதனால்? சிரமப் பட்டு உழைத்தால் கடவுள் கொடுக்கிறார். அவர் எனக்கு நீண்ட ஆயுளை மட்டும் அருள் புரிவாரானால்…!’

ஒன்றும் இல்லாத நிலையிலே வாழ்க்கையைத் தொடங்கி லட்சாதிபதி ஆக உயர்ந்துவிட்ட மிரோனோவ் போல் தானும் தனவந்தன் ஆகிவிடலாம் என்ற நினைப்பே வாஸிலிக்கு மிகுந்த கிளர்ச்சியை ஏற்படுத்தி விட்டது. அதனால் யாருடனாவது பேச்சு கொடுக்கவேண்டும் என்ற துடிப்பு அவனுக்கு உண்டாயிற்று. ஆனால் அங்கு பேசுவதற்கு எவரும் இல்லையே …. அவன் மட்டும் கோர்யாச்கின் போய்ச் சேர முடிந்திருக்குமானால் அங்குள்ள நிலச் சொந்தக் காரரிடம் அவன் எவ்வளவோ பேசியிருப்பான்; ஒன்று அல்லது இரண்டு விஷயங்களைச் செய்து காட்டியிருப்பான்.

வண்டியின் முன்புறம் மோதி அடித்து, அதை வளையச் செய்து, அதன்மீது பனியை அள்ளி வீசி அறைந்து கொண்டிருந்த கடுங்காற்றின் ஓசையைக் கவனித்த அவன் நினைத்தான் : ‘எப்படி வீசுகிறது பார்! நம்மை மூடிவிடுகிற அளவுக்கு பனி விழும் என்று தெரிகிறது. அப்புறம் காலையில் நாம் வெளியே தலைகாட்டவே முடியாத !

அவன் எழுந்து சுற்றுமுற்றும் பார்த்தான். முக்கார்ட்டியின் கறுத்த தலையையும், காற்றில் ஆடிக் கொண்டிருந்த கம்பளித் துணி மூடிய முதுகையும், முடிச்சு போட்டிருந்த கனத்த வாலையும் தான் சூழ்ந்து கிடந்த இருளினூடாக அவன் கண்டுபிடிக்க முடிந்தது. மற்றப்படி எங்கு பார்த்தாலும், முன்னாலும் பின்னாலும், ஒரே நிலையில் இராத வெளிறிய இருட்டு – கொஞ்ச நேரம் சிறிது வெளிச்சம் பெற்றுவருவது போலவும், பிறகு சிறிது நேரம் மேலும் அதிகமாக இருண்டு வருவதாகவும் மாறுபட்ட நிலைமைதான் நிறைந் திருந்தது.

நிகிட்டாவின் பேச்சைக் கேட்டது தப்பு. நாம் முன்னேறிப் போயிருக்க வேண்டும். எங்காவது நல்ல இடத்திற்குப் போய்ச் சேர்ந்திருக்கலாம். கிரிஷ்கினோ வுக்கே திரும்பிப் போயிருந்தாலும் பரவாயில்லை. டாராஸ் வீட்டில் இரவைக் கழித்திருக்கலாம். இப் பொழுது உள்ள நிலைமையில், ராத்திரி பூராவும் நாம் இங்கே உட்கார்ந்திருக்க வேண்டியதுதான். ஆனால் நான் எதைப்பற்றி எண்ணிக்கொண்டிருந்தேன்? ஆமாம். கஷ்டம் எடுத்துக் கொள்கிறவர்களுக்கே கடவுள் அருள்புரிகிறார் ; சோம்பேறிகளுக்கும் தூங்கு மூஞ்சிகளுக்கும் முட்டாள்களுக்கும் அல்ல. இப்போது நான் புகை பிடித்தாக வேண்டும்!’ இவ்வாறு நினைத் தான் அவன்.

ஆகவே அவன் மறுபடியும் நன்றாக உட்கார்ந்து, சிகரெட் டப்பாவை வெளியே எடுத்தான். பிறகு வயிற்றின் மீது படுத்து, கோட்டின் விளிம்பால் மறைத்துக் கொண்டு தீக்குச்சிகளைப் பற்றவைக்க முயற்சித்தான். ஆனால் காற்று எப்படியோ உள்ளே புகுந்து, தீக்குச்சிகளை ஒவ்வொன்றாக அணைத்து வந்தது. கடைசியில் அவன் ஒரு குச்சியில் நெருப்பு பிடிக்கச் செய்து, அதன் உதவியால் சிகரெட்டைப் பற்றவைத்து விட்டான். தான் விரும்பிய காரியத்தைச் சாதிக்க முடிந்ததில் அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சிதான். அவன் புகைத்ததைவிடப் பெரும்பங்கு சிகரெட்டை காற்றே காலி செய்துவிட்ட போதிலும் அவன் இரண்டு மூன்று ‘தம்’கள் ஊதமுடிந்தது. அதனால் அவனது உற்சாகம் அதிகரித்தது. திரும்பவும் அவன் பின்னால் சாய்ந்து தன்னை நன்றாகப் போர்த்திக் கொண்டு, சென்ற கால நிகழ்ச்சிகளை நினைத்துப் பார்ப்பதிலும் சிந்திப்பதிலும் ஈடுபட்டான். திடீரென்று. எதிர்ப்பாராத வகையிலே அவன் தன் நினைவு இழந்து தூக்கத்தில் ஆழ்ந்து விட்டான்.

சடக்கென்று எதுவோ அவனை ஒருதரம் உலுக் கியதாகத் தோன்றவும் அவன் கண் விழித்தான். அப்படிச் செய்தது அவனுக்குக் கீழே கிடந்த வைக் கோலில் கொஞ்சம் கவ்வி இழுத்த முக்கார்ட்டிதானோ ; அல்லது அவனுள்ளிருந்த எதுவோ தந்த அதிர்ச்சி தானோ ; எதுவாக இருந்தாலும் அது அவனுக்கு நல்ல விழிப்பைக் கொடுத்துவிட்டது. அவனுடைய இதயம் வேகமாக, மேலும் மேலும் வேகமாக, அடித் துக்கொண்டது. அதனால் அவனிருந்த வண்டிகூடக் குலுங்குவதுபோன்ற பிரமை ஏற்பட்டது அவனுக்கு. அவன் கண்களைத் திறந்தான். அவனைச் சுற்றிலும் உள்ள எல்லாம் முன்போலவே இருந்தன. ‘ இப் பொழுது வெளிச்சம் அதிகரித்திருப்பதாகத் தோன்று கிறது. விடிவதற்கு இன்னும் ரொம்ப நேரம் பிடிக்காது என்று எதிர்பார்க்கிறேன்’ என ஆனால் அதிக வெளிச்சம் பரவியிருந்தது சந்திரன் உதயமாகிவிட்டதனால் தான் என்ற உணர்வு அவனுக்கு உடனடியாகவே ஏற்பட்டது.

அவன் எழுந்து உட்கார்ந்து, முதலில் குதிரை யைக் கவனித்தான். இன்னும் காற்றின் பக்கமாகவே பின்புறத்தைத் திருப்பி வைத்துக்கொண்டு உடம் பெல்லாம் வெடவெடக்க நின்றது அது. பனி நன்கு கவிந்து மூடிவிட்ட கம்பளித் துணியின் ஒரு பகுதி பின்னால் விசிறித் தள்ளப்பட்டுக் கிடந்தது. அதன் மேலாகப் போட்டிருந்த கனத்த துணி நழுவிக் கீழே விழுந்திருந்தது. பனி படிந்த தலையும், அதன் முன்னால் ஆடி அசையும் மயிர்க்கற்றையும், பிடரி மயிரும் இப்பொழுது பார்வையில் நன்றாகத் தென் பட்டன.

வாஸிலி ஆன்ட்ரீவிச் வண்டியின் பின்பக்கமாக எட்டிப் பார்த்து அங்குள்ளவற்றைக் கவனித்தான். முதலில் எப்படி உட்கார்ந்தானோ அதே நிலையில் தான் இன்னும் இருந்தான் நிகிட்டா. அவனை மூடிக் கிடந்த சாக்கும், அவனுடைய கால்களும் பனியினால் கனமாக மூடப்பட்டுவிட்டன.

‘ அந்தக் குடியானவன் குளிரினால் விறைத்துச் சாகாமல் இருந்தால் போதும்! அவனுடைய உடுப் புகள் படுமோசமாக உள்ளன. அவனுக்காக நான் தான் பொறுப்பு ஏற்றுக்கொள்ள நேரிடும் என்ன உபயோகமற்ற ஜனங்கள் அவர்கள் – கல்வி அறிவு இல்லாதவர்கள்!’ என்று வாஸிலி எண்ணினான். குதிரை மீது கிடந்த கம்பளித் துணியை எடுத்து நிகிட்டா மேலே போட்டு மூடிவிடலாம் என்றுகூடத் தோன்றியது அவனுக்கு. ஆனால் வெளியே இறங்கி நடமாடுவது என்றால் ரொம்பவும் குளிராக இருக்குமே; அதுவும் போக, குதிரை விறைத்துப்போய் செத்தாலும் செத்துவிடுமே. ‘இவனை நான் ஏன் என்னுடன் அழைத்துவந்தேன்? எல்லாம் அவளுடைய முட்டாள் தனத்தினால் தான்!’ என்று அவன், தனக்குப் பிடிக்காத தன் மனைவியைப் பற்றி எண்ணிக் கொண்டான்.

எனவே, அவன் வண்டியின் முன்புறத்தில் உள்ள தனது பழைய இடத்திலேயே உருண்டு படுத்தான். ‘ என்னுடைய மாமர் ஒரு சமயம் ஒரு ராத்திரி பூராவும் இது போல் கழித்தது உண்டு. எல்லாம் சரியாகவே முடிந்தது’ என்று அவன் நினைத்தான். ஆனால் வேறொரு விஷயமும் உடனேயே அவன் நினைவில் எழுந்தது. ‘செபஸ்டியனைத் தோண்டி எடுத்த போது அவன் செத்துப் போயிருந்தான் -ஒரே விறைப்பாக, பனியில் உறைந்த சவம் மாதிரி. நான் மட்டும் கிரிஷ்கினோவில் தங்கி இரவைப் போக்கியிருந் தால் இதெல்லாம் ஏற்பட்டே இருக்காது!’

அவன் சிரத்தையோடு தனது கோட்டை இழுத்துச் சுற்றிக் கொண்டான். ரோமச் சட்டையின் உஷ்ணம் கொஞ்சம் கூட வீணாகிவிடக் கூடாது; தன் உடம்பு முழுவதும், கழுத்து, முழங்கால், பாதங்கள் எங்கும் கதகதப்பு ஏற்படுத்த வேண்டும் என்று அவன் சிரமப்பட்டான். பிறகு கண்களை மூடிக்கொண்டு தூங்குவதற்கு முயற்சி செய்தான். ஆனால் என்ன தான் முயன்ற போதிலும் அவனால் தூக்கக் கிரக்கம் பெற முடியவேயில்லை. அதற்கு மாறாக விழிப்பும் உணர்ச்சிக் குறுகுறுப்புமே அதிகம் பெற்றான் அவன். மறுபடியும் அவன் தனது லாபங்களையும் தனக்குச் சேரவேண்டிய கடன்களையும் கணக்குப் பண்ணத் தொடங்கினான். மீண்டும் தனக்குத் தானே வீண் பெருமை பேசிக்கொள்ள ஆரம்பித்தான். தன்னைப் பற்றியும், தனது அந்தஸ்து பற்றியும் மிகுந்த திருப்தி அடைந்தான் அவன். ஆயினும், ரகசியமாக நெருங்கி வந்து கொண்டிருந்த ஒரு பயத்தினாலும், கிரிஷ் கினோவில் தங்காமல் போனோமே என்ற நினைப்பு தந்த கசப்பான வருத்தத்தினாலும் இவை எல்லாம் அடிக்கடி கலைக்கப்பட்டுவந்தன.

‘ஒரு பெஞ்சு மீது கதகதப்பாகப் படுத்துக் கிடந் தால் அதன் சுகம் எவ்வளவு விசேஷமானதாக இருக்கும்!’ இவ்விதம் எண்ணிய அவன், காற்றி லிருந்து இன்னும் அதிகப் பாதுகாப்புடனும், இப்பொழுதை விட அதிகமான சௌகரியத்தோடும், படுத்துக் கிடக்க முயற்சிகள் செய்ததனால், அநேக தடவைகள் உருண்டு புரண்டான். கால்களை நெருக் கிச் சுருட்டிக்கொண்டு, கண்களை மூடியவாறு, அசையாமல் கிடந்தான். ஆனால் தடித்த தோல் பூட்ஸினுள் கட்டுண்டிருந்த கால்கள் வெகு நேரம் ஒரே நிலையில் இருந்தால் வலி எடுக்க ஆரம்பித்தது. அல்லது காற்று வேறொரு புறத்திலிருந்து உள்ளே நுழைந்து தொல்லை கொடுத்தது.

கொஞ்ச நேரம் அமைதியாகப் படுத்துக் கிடந்த பிறகு, மனக்குழப்பம் ஏற்படுத்தும் அவ் வுண்மையை – இந்த நேரத்தில் தான் கிரிஷ்கினோவில் உஷ்ணம் நிறைந்த குடிசையில் அமைதியாகப் படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கலாமே என்று – மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து அவதியுற்றான் அவன். ஆகவே அவன் திரும்பவும் எழுந்து உட்கார்ந்தான் ; சுற்றிலும் பார்த்தான்; இழுத்துப் போர்த்தினான்; மீண்டும் பழையபடியே படுத்தான்.

ஓர்முறை தூரத்தில் எங்கோ கோழி கூவியதைக் கேட்டதாக அவன் எண்ணிக்கொண்டான். அவனுக்கு சந்தோஷம் உண்டாயிற்று. மேல் சட்டையின் காலரைத் தணித்து விட்டு, சிரமத்தோடும் சிரத்தை யோடும் காது கொடுத்துக் கேட்க முயன்றான், ஆயினும் அவன் எவ்வளவோ முயற்சித்தும் எதுவும் காதில் விழவில்லை. சட்டங்களினூடே சீறிப் பாயும் காற்றின் ஒலியும், கைக்குட்டையின் படபடப்பும், வண்டி மீது சாடுகிற பனியின் ஓசையும் தான் ஓயாது நிலைத்திருந்தன.

நிகிட்டா எப்பொழுதும் இருந்தது போலவே உட் கார்ந் திருந்தான். அவன் அசையவுமில்லை ; இரண்டு முறைகள் அவனை அழைத்த வாஸிலிக்கு பதில் சொல்லவுமில்லை. வாஸிலி ஆன்ட்ரீவிச் வண்டிக்குப் பின்னால் எட்டிப் பார்த்தபோது நிகிட்டா கனமான பனிப்பரப்பினால் மூடப்பட்டு உட்கார்ந்திருப்பதைக் கண்டான். ‘அவன் கொஞ்சம் கூடக் கவலைப்பட வில்லை. நன்றாகத் தூங்குகிறான் போலிருக்கிறது!’ என்று எரிச்சலோடு முனங்கினான் அவன்.

வாஸிலி ஆன்ட்ரீவிச் மேலும் இருபது தடவைகள் எழுந்தான்; படுத்தான். இரவுக்கு முடிவே கிடையாது என்றுதான் அவனுக்குத் தோன்றியது. ஒரு முறை அவன் எழுந்து உட்கார்ந்து சுற்று முற்றும் பார்த்து விட்டு நினைத்தான் : ‘விடிகிற நேரம் வந்திருக்க வேண்டும். எனது கடியாரத்தை எடுத்துப் பார்க்க லாமே. பொத்தானை அவிழ்த்தால் குளிர ஆரம்பித்து விடும். இருந்தாலும், விடியற்காலைப் பொழுது வந்து விட்டது என்று தெரிந்து கொள்ள முடிந்தால், நான் இன்னும் அதிகமான உற்சாகம் அடையக் கூடுமே ! வண்டியைப் பூட்ட ஆரம்பித்து விடலாமே.’

விடிவதற்கு உரிய நேரம் அதற்குள்ளாக வந்திருக்க முடியாது என்கிற உண்மையை அவனது உள்ளத்தின் ஒரு பகுதி வாஸிலிக்கு உணர்த்தியது. ஆயினும் அவனுடைய பயம் அதிகம் அதிகமாக வளர்ந்து வந்தது. உண்மையான நிலைமையை அறிய வேண்டும் எனும் அவாவும் இருந்தது; தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளும் விருப்பமும் இருந்தது அவனுக்கு. அவன் தனது மேல் அங்கியின் பிணைப்பை நிதானத்தோடு தளர்த்தி, உள்ளே கையை நுழைத்து, உள் சட்டைக்குள் திணிப்பதற்கு முந்தி வெகு நேரம் தடவித் திண்டாடினான். மிகுந்த சிரமத் துக்குப் பிறகு அவன் தனது வெள்ளிக் கடியாரத்தை வெளியே இழுத்தான். எனாமல் பூசி, பூ வேலைகள் செய்யப் பட்டிருந்த அக் கடியாரத்தினால் மணியை அறிந்து கொள்ள முயன்றான் அவன். வெளிச்சம் இல்லாமல் அவனால் எதையும் பார்க்க முடியவில்லை.

ஆகவே, சிகரெட்டைப் பற்ற வைப்பதற்கு முயற் சித்த போது செய்தது போலவே, அவன் மறுபடியும் முட்டு மண்டியிட்டு முன்கைகளை ஊன்றிக் கொண்டு, தீக்குச்சிகளை வெளியே எடுத்து ஒரு குச்சியைக் கிழிக்க முனைந்தான். இந்தத் தடவை அவன் சர்வ ஜாக்கிரதையோடு முயற்சி செய்தான். தீக்குச்சிகள் எல்லாவற்றிலும் மிகப் பெரிய தலையும் அதிகப்படியான பாஸ்பரஸ் மருந்தும் பெற்றிருந்த குச்சியாகத் தேடிப் பிடித்து ஒன்றை எடுத்து முதல் தடவையிலேயே கொளுத்தி விட்டான். கடியாரத்தின் முகப்பை வெளிச் சத்தின் அருகே கொண்டு வந்து பார்த்த போது அவனால் அவன் கண்களை நம்பவே முடியவில்லை…. அப்பொழுது மணி பன்னிரண்டு ஆகிப் பத்து நிமிஷங்களே கழிந்திருந்தன. இன்னும் இரவு முழுமையும் அவன் முன்னால் காத்து நின்றது.

‘ஓ, எவ்வளவு நெடிய இரவு!’ என்று எண்ணி னான் அவன். குளிரின் சிலிர்ப்பு தனது முதுகின் மேல் ஊர்வதை உணர்ந்ததும், ரோமச் சட்டைகளை இழுத்து மாட்டி மேலும் நன்றாகப் போர்த்திக் கொண்டு, பொறுமையோடு காத்திருக்க வேண்டியதுதான் என்று வண்டியின் ஒரு மூலையில் முடங்கினான் அவன். காற்றின் மாறுபாடில்லாத கதறலைக் கிழித்து திடீ ரென்று வேறொரு புதிய ஒலி-ஜீவனுள்ள குரல்– எழுந்ததை அவன் தெளிவாக அறிந்தான். அது படிப்படியாக உயர்ந்து ஓங்கி மிகத் தெளிவாக ஒலித்து பிறகு கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து கரைந்தது. அது ஒரு ஓநாய் தான் என்பதில் சந்தேகமே கிடையாது. அது மிகவும் அருகிலேயே நின்றதாகத் தோன்றியது. அது தனது ஓலத்தின் தன்மையை மாற்றிய பொழுது ஏற்பட்ட அதனுடைய வாய் அசைவைக் கூட காற்று எடுத்துக் காட்டியது.

வாஸிலி ஆன்ட்ரீவிச் கோட்டுக் காலரை மடித்துக் கொண்டு கூர்ந்து கவனித்தான். முக்கார்ட்டி கூட, காதுகளை அசைத்துக் கொண்டு நன்றாய்க் கேட்ப தற்குச் சிரமப்பட்டது. ஓநாய் தனது ஊளையை நிறுத்தி விட்டதும், குதிரை காலை மாற்றி மாற்றி வைத்து அசைந்து, எச்சரிக்கையாக ஒரு கனைப்பு எழுப்பியது.

இதற்குப் பிறகு அவனால் தூங்கவும் இயலவில்லை; தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொள்ளவும் முடிய வில்லை. தனது கணக்குகள், தொழில், மதிப்பு, செல்வம் இவைகளைப் பற்றி அவன் அதிகமாகச் சிந்திக்கச் சிந்திக்க, முன்னிலும் மிக அதிகமான பயம் தான் அவனை ஆட்கொண்டது. ராத்திரிப் பொழுதைக் கழிக்க கிரிஷ்கினோவில் தங்காமல் போனோமே என்ற வருத்தம் அவனது எண்ணங்களில் கலந்து குழம் பியது ; சிந்தனையில் மேலோங்கி நின்றது.

‘சைத்தான் காட்டை விழுங்கட்டும் ! அது இல்லாத பொழுது எல்லாம் ஒழுங்காக இருந்ததே . அட கடவுளே! ஆ, இந்த இரவு நேரத்துக்கு மட்டும் நமக்குப் பாதுகாப்பு கிடைக்குமானால்!’ என்று தானாகவே பேசிக் கொண்டான் அவன். ‘குடி காரர்கள் தான் குளிரில் விறைத்துச் சாவார்கள் என்று சொல்வது வழக்கம். நானும்தான் ஏதோ குடித்தேன்’ என்று அவன் எண்ணினான்.

அவன் தனது உணர்ச்சிகளை ஆராய்ந்த போது உடம்பிலே உதறல் ஏற்பட்டிருந்ததை அறிய முடிந்தது. ஆனால் அது குளிரினாலா அல்லது பயத்தினாலா என்பது தான் தெரியவில்லை. நன்றாகப் போர்த்திக்கொண்டு, முன்போலவே படுத்துக்கிடக்க முயன்றான் அவன். ஆனால் மேற்கொண்டு அவ்விதம் செய்ய முடியவில்லை அவனால். ஒரே நிலையில் இருப்பது சாத்தியப்படவில்லை அவனுக்கு. அவன் எழுந் திருக்கவும், தன்னுள்ளே தலையெடுத்துப் பெரிதாக வளரும் பயத்தை ஒடுக்கிவிட ஏதாவது செய்யவும் விரும்பினான். அந்த பயத்தின் எதிரிலே தான் சக்தி யற்றவன் என்ற உணர்வும் அவனுக்கு இருந்தது. அவன் மீண்டும் தனது சிகரெட்டுகளையும் தீக்குச்சி களையும் எடுத்தான். மூன்றே மூன்று குச்சிகள் தான் இருந்தன. அவை கூட கெட்டுப் போனவைதான். எனவே நெருப்பு பற்றிக் கொள்ளாமலே அவற்றின் மருந்து சிதறிப் போயிற்று.

‘சைத்தான் உன்னை விழுங்கட்டும்! நாசமாய்ப் போனவை! பாழாய்ப் போக!’ என்று, யாரை அல்லது எதை சபிக்கிறோம் எனும் பிரக்ஞையே இல்லாமல், அவன் முணமுணத்தான். நசுங்கிய சிகரெட்டை அவன் தூர வீசி எறிந்தான். தீப் பெட்டியையும் அவ்விதமே விட்டெறிவதற் கிருந்தான் அவன். ஆயினும் கை அசைவைத் தடுத்து நிறுத்தி அந்தப் பெட்டியை அவன் தன் பைக்குள் வைத்துக் கொண் டான். ஒரே இடத்தில் மேலும் தங்கியிருக்க முடியாத அளவுக்கு அமைதியின்மை அவனைப் பற்றிக் கொண்டது. அதனால் அவன் வண்டியை விட்டு வெளியே இறங்கினான். காற்றுக்கு எதிராக முதுகைத் திருப்பி நின்று, அரைக் கச்சையைத் தளர்த்தி இடுப் புக்கும் கீழாக இறக்கி இறுக்கிக் கொண்டான்.

படுத்தபடி சாவுக்காகக் காத்துக் கிடப்பதனால் என்ன பிரயோசனம்? அதை விட, குதிரை மேலேறி இங்கிருந்து கிளம்பிப் போவதே நல்லது.’ இந்த எண்ணம் சடாரென்று உதயமாயிற்று அவனுக்கு. அதன் மேலே ஆள் யாராவது இருந்தால், குதிரை தானாகவே போகும்.’

நிகிட்டாவைப் பற்றி அவன் இப்படி நினைத்தான் : அவனைப் பொறுத்த வரை அவன் உயிரோடு இருப்பது, செத்துப் போவது எல்லாமே அவனுக்கு ஒன்றுதான். அவனுடைய வாழ்க்கைக்கு என்ன மதிப்பு இருக்கிறது? அவன் உயிரை விடுவதற்கு வருத்தப்படமாட்டான். ஆனால் நான் உயிர் வாழ்வ தற்கு அவசியம் இருக்கத்தான் செய்கிறது. அதற்காக வணக்கம், ஆண்டவனே!’

அவன் குதிரையை அவிழ்த்து, வார்களைக் கழுத்து மேலே போட்டு விட்டு , ஏறி உட்கார முயன்றான். ஆனால் அவனுடைய கோட்டுகளும் பூட்ஸும் அதிகம் கனத்திருந்ததால் அவனால் ஏற முடியவில்லை. அவன் வண்டியின் மீது ஏறி நின்று அங்கிருந்து குதிரை மேல் ஏறிவிட முயற்சித்தான். ஆனால் அவனுடைய பாரத்தினால் வண்டி ஒரு பக்கமாய் சாய்ந்து விட்டது. அதனால் மறுபடியும் அவன் தோல்வியுற்றான். அப்புறம் அவன் குதிரையை வண்டிக்குச் சமீபத்தில் இழுத்து, ஜாக்கிரதையாகச் சமாளித்து வண்டியின் ஓர் புறமாக நின்று குதிரையின் முதுகு மேல் குறுக் காகப் படுத்து விட்டான். இவ்வாறு கொஞ்ச நேரம் படுத்துக் கிடந்த பிறகு அவன் முன்னால் ஒரு முறை நகர்ந்து கொடுத்தான். மீண்டும் நகர்ந்தான். பிறகு ஒரு காலைத் தூக்கிப் போட்டு, கடைசியில் நன்றாக உட்காருவதில் வெற்றி பெற்றான். அடிப்புறத்தில் தொங்கிய தோல் வார்களில் தனது கால்களை உறுதி யாகப் பதிய வைத்துக்கொண்டான் அவன்.

வண்டியின் அசைவு நிகிட்டாவை எழுப்பியது. அவன் எழுந்து உட்கார்ந்தான். அவன் என்னவோ சொன்னதாக வாஸிலிக்குத் தோன்றியது.

‘உன்னைப் போன்ற முட்டாள்களின் பேச்சைக் கேட்க வேண்டியது தான்! ஒன்றும் இல்லாததற்காக நான் இப்படிச் சாவதா என்ன?’ என்று வாஸிலி கத்தினான். அப்புறம் தனது ரோம அங்கியின் விளிம்புகளைச் சுருட்டி முழங்கால்களுக்குக் கீழே திணித்துக்கொண்டு அவன் குதிரையைத் திருப்பினான். வண்டியிலிருந்து விலகி, காடும் காட்டுக் காவலாளி யின் குடிசையும் இருந்தாக வேண்டிய இடம் என அவன் கருதிய திக்கு நோக்கிக் குதிரையை ஓட்டினான்.

7

நிகிட்டா தன்னை சாக்குத் துணியினால் போர்த்திக் கொண்டு வண்டிக்குப் பின்புறத்தில் உட்கார்ந்த நேரத்திலிருந்து அசையவே இல்லை. இயற்கை யோடு தொடர்பு கொண்டும், பற்றாக்குறை என்பதை எப்பொழுதும் அனுபவித்தும் வாழ்கிற எல்லோரையும் போலவே அவனும் பொறுமையோடு இருந்தான். அப்படி பல மணி நேரம் – ஏன், பல தினங்கள் கூட – அமைதியை இழக்காமலும் எரிச்சல் பெறாமலும் அவன் இருக்க முடியும்.

தனது எஜமான் கூப்பிட்டதை அவன் கேட்கத் தான் செய்தான். ஆயினும் அவன் பதில் பேச வில்லை. ஏனென்றால் அவன் அசையவோ பேசவோ விரும்பவில்லை. அவன் பருகிய தே நீரினாலும், பனி ஓட்டத்தில் கஷ்டப்பட்டு நகர்ந்து வலிமையுடன் போராடியதனாலும் அடைந்த உஷ்ணம் அவனது தேகத்தில் இன்னும் கொஞ்சம் இருந்தது. என்றாலும், அந்தச் சூடு வெகுநேரம் நீடித்திராது என்பதை யும், மீண்டும் அங்குமிங்கும் அலைந்து கதகதப்பு பெறுவதற்குத் தேவையான பலம் தனது உடம்பில் இல்லை என்பதையும் அவன் அறிந்திருந்தான். சட் டென்று நின்றுகொண்டு, சாட்டையால் அடித்தபோதி லும் முன்னே நகர மறுக்கிற குதிரையைப் போல் தான் அவனும் மிகுந்த களைப்பெய்தி விட்டான். சோர்ந்து போன குதிரையை மறுபடியும் உழைக்கும்படி செய்ய வேண்டுமானால் அதற்கு நல்ல தீனி கொடுக்க வேண்டும் எனத் தெரிந்து கொள்கிற சொந்தக்காரன் போலவே அவனும் தனது தேக நிலை பற்றி உணர்ந்திருந்தான்.

ஓட்டை விழுந்திருந்த பூட்ஸிலிருந்த பாதம் இதற்குள் மரத்துப் போய்விட்டது. அவனுடைய காலில் பெருவிரல் இருந்ததாகவே உணரமுடிய வில்லை அவனால். அதுபோக, அவன் உடல் பூராவுமே கொஞ்சம் கொஞ்சமாகக் குளிரடைந்து வந்தது. அந்த இரவிலேயே அவன் செத்து விடலாம் – அனேகமாகச் செத்தே போவான்- என்ற எண்ணமும் அவனுக்கு ஏற்பட்டது. ஆயினும் அந்த நினைப்பு குறிப்பிடத் தகுந்த அளவு கசப்பானதாகவோ பயங்கரமான தாகவோ தோன்ற வில்லை.

அது அவனுக்குக் குறிப்பிடத் தகுந்த அளவு கசப்பானதாகத் தோன்றாதது ஏனென்றால், அவனுடைய வாழ்நாள் பூராவும் தொடர்ச்சியானதொரு பண்டிகையாகவே அமைந்திருந்ததில்லை. ஆனால், அதற்கு மாறாக, முடிவற்ற கடின உழைப்பின் சுழற்சி யாகவே இருந்தது அது. அதனால் அவனுக்கு அலுப்புத் தோன்றத் தொடங்கியிருந்தது.

அவனுக்கு அது குறிப்பிடத் தகுந்த அளவு பயங் கரமானதாகத் தோன்றாதது ஏனெனில், வாஸிலி ஆன்ட்ரீவிச்சைப் போன்ற எஜமானர்களுக்கு உழைத்து அவர்களை நம்பி அவன் வாழ நேரிட்ட போதிலும், தான் எப்பொழுதும் எல்லோருக்கும் தலைவரான ஆண்டவனை நம்பியிருக்க வேண்டியவனே என உணர்ந்திருந்தான். அவனை இந்த உலகத் திற்கு அனுப்பிவைத்தவர் அவரே. அவன் இறக்கும் தறுவாயில் கூட அவருடைய ஆட்சிக்கு உட்பட்டவன் தான்; அவர் அவனை மோசமாக நடத்த மாட்டார் என்றும் அவன் அறிந்திருந்தான்.

‘ஒருவன் தனக்கு நன்றாகப் பழகிப் பண்பட்டுப் போனதை விட்டுவிட வேண்டியிருப்பது வருந்தத் தக்கதுதான். ஆனால் வேறு எதுவும் செய்வதற் கில்லை. புதிய விஷயங்களில் நானும் பழகிவிடுவேன்’ என்று அவன் நினைத்தான்.

‘பாவங்கள்?’ என்ற எண்ணம் எழுந்தது அவனுக்கு. அவனது குடிபோதை பற்றியும், குடியில் காலியான பணத்தைப் பற்றியும் அவன் நினைத்தான். தான் தன்னுடைய மனைவிக்குத் தீமை இழைத்தது பற்றியும், சபித்து வசை கூறும் பழக்கம் பற்றியும் நினைத்தான். மாதா கோயிலையும் விரத தினங்களையும் புறக்கணித்து வந்தது பற்றியும் நினைத்தான். பாவ மன்னிப்புப் பெறும்போது பாதிரியார் கண்டித்த எல்லா விஷயங்களையும் அவன் எண்ணிப் பார்த்தான். ‘நிச்சயமாக இவை பாவங்கள் தான். ஆனால் இவற்றை எல்லாம் நானாகவே என் மீது சுமத்திக்கொண்டேனா? கடவுள் என்னைப் படைத்த விதமே அப்படித்தானே!

அது சரி; பாவங்கள்! நான் எங்கே தப்பி ஓடுவது?’

ஆகவே ஆரம்பத்தில், அவன் தனக்கு அன்று இரவில் என்ன நேரிடலாம் என்று எண்ணிப்பார்த் தான். அதற்குப் பிறகு அவன் அத்தகைய எண்ணங்களுக்கே இடம் வைத்துக்கொள்ளவில்லை. ஆனால் தாமாகவே தலை தூக்கி உள்ளத்தில் படர்ந்த நினைவு களை மட்டுமே எண்ணியிருந்தான். மார்த்தாவின் வருகை பற்றியும், உழைப்பவர்களிடம் நிலை பெற்றுள்ள குடிப்பழக்கம் பற்றியும், தான் குடிப்பதைவிட்டு விட்டது பற்றியும் அவன் எண்ணினான். அதன்பிறகு இந்த இரவுப் பிரயாணம் பற்றியும், டாராஸ் குடும்பத்தைப் பற்றியும், அவ்வீட்டில் எழுந்துள்ள பாகப் பிரிவினை விவகாரம் பற்றியும் எண்ணினான். பின்னர், தனது சொந்த மகனைப் பற்றியும், கம்பளித்துணி போர்த்தப் பட்டு நிற்கிற முக்கார்ட்டி பற்றியும் நினைத் தான். அப்புறம், வண்டியில் அங்கு மிங்கும் ஆடி அசைந்ததன் மூலம் அதைக் கிரீச்சிடச் செய்த எஜமானைப் பற்றியும் நினைத்தான். இப்படிக் கிளம்பி வந்ததற்காக இப்பொழுது நீரே வருத்தப்பட்டுக் கொண்டிருப்பீர் என்று நினைக்கிறேன், அருமை ஐயாவே!’ என்று எண்ணினான் அவன். அவருடை யதைப் போன்ற வாழ்வை விட்டு விட்டுப் போவ தென்றால் கஷ்டமாகத் தான் இருக்கும்! அது நம் போன்றவர்களின் வாழ்வு போன்றது இல்லையே” என்றும் அவன் நினைத்தான்.

பிறகு இந்த நினைவுகள் எல்லாம் அவன் மண்டையினுள் குழம்பிக் கலந்து விடத் தொடங்கின. அவன் தூக்கத்தில் ஆழ்ந்தான்.

ஆனால், வாஸிலி ஆன்ட்ரீவிச் குதிரை மீது ஏறிக் கொண்டு வண்டியை ஆட்டிவிட்டபோது, அது கொஞ் சம் அசைந்து விலகியது. அப்பொழுது வண்டியின் முதுகிலே சாய்ந்திருந்த நிகிட்டாவின் மீது சிறு அடி ஒன்று விழுந்தது. அதனால் அவன் விழித்தெழுந் தான். அவனுக்கு விருப்பம் இருந்ததோ இல்லையோ அவன் உட்கார்ந்திருந்த நிலையை மாற்ற வேண்டியது அவசியமாகிவிட்டது. அவன் தனது கால்களை சிரமத் தோடு நீட்டி, அவற்றின் மீது விழுந்து கிடந்த பனியை உதறிக்கொண்டே எழுந்தான். உடனடி யாகவே, துயர் தரும் குளிர் அவன் தேகம் பூராவும் குத்திப் பாய்ந்தது.

என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொண்ட தும், குதிரை மீது போர்த்தியிருந்த கம்பளித் துணி இனிமேல் தேவைப் படாதாகையால் அதைத் தன் னிடம் தந்துவிடும்படி வாஸிலி ஆன்ட்ரீவிச்சிடம் அவன் கேட்டுக் கொண்டான்.

ஆனால் வாஸிலி நிற்கவில்லை. தூள்மயப்பனியி னூடே மறைந்து போனான் அவன்.

தனியனாய் விடப்பட்டதும், தான் இனிமேல் என்ன செய்யவேண்டும் என்பது பற்றி நிகிட்டா ஒரு கணம் யோசித்தான். ஏதாவது ஒரு வீடு இருக்கும் இடம் தேடித் திரிவதற்கு அவனது உடலிலே போதிய தெம்பு இல்லை என்பதை அவன் உணர்ந்தான். அந் தப் பழைய இடத்திலேயே உட்கார்ந்து இருப்பதும் இனி சாத்திய மில்லை. இதற்குள் அது பூராவும் பனி யினால் நிரம்பி விட்டது. வண்டியின் உள்ளே கூட தான் கதகதப்பு பெற்று விட முடியாது என்றும் அவன் உணர்ந்தான். ஏனெனில், நன்றாகப் போர்த் திக் கொள்வதற்கு அவனிடம் எதுவுமே இல்லை. அவ னுடைய கோட்டும் ஆட்டுத்தோல் அங்கியும் அவன் உடலை வெதுவெதுப்பாக வைத்திருக்கும் சக்தியை இழந்து விட்டன. துணிச்சட்டை தவிர வேறு எதுவும் அவன் அணிந்திராதது போலவே தோன்றியது, அவ்வளவு குளிரை அவன் உணர்ந்தான்.

அவனுக்குப் பயம் ஏற்பட்டு விட்டது. ஆண் டவனே, பரமண்டலத்தில் உள்ள பிதாவே!’ என்று முணங்கினான் அவன். தான் தனியனாக இல்லை, தனது சொற்களைக் கேட்கக்கூடிய ஒருவன் இருக்கி றான்; அவன் தன்னைக் கைவிட்டு விட மாட்டான் என்ற உள்ளுணர்வு காரணமாக நிகிட்டா மன அமைதி பெற்றான். அதனால், ஆழ்ந்த பெருமூச்சு ஒன்று” உயிர்த்தான் அவன். சாக்குத்துணியைத் தனது தலைக்கு மேலே போட்டுக் கொண்டு அவன் வண்டியி னுள் நுழைந்தான். அங்கே முன்பு தனது எஜமான் படுத்துக்கிடந்த இடத்தில் அவன் படுத்தான்.

எனினும் வண்டியின் உட்புறத்திலே கூட அவன் கதகதப்பு பெறமுடியவில்லை. முதலில் அவனது தேகம் முழுவதும் குளிரால் நடுங்கியது. பிறகு நடுக் கம் நின்றுவிட்டது. கொஞ்சம் கொஞ்சமாக அவன் தன் நினைவை இழக்கலானான். அவன் செத்துக் கொண்டிருந்தானா, அல்லது தூக்கத்தில் ஆழ்ந்து கொண்டிருந்தானா என்பது அவனுக்கே தெரிய வில்லை. ஆனால் அந்த இரண்டில் எதையும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருந்தான் அவன்.

8

வாஸிலி ஆன்ட்ரீவிச் என்ன காரணத்தினாலோ நம்பினான், காடும் காட்டுக் காவல்காரனின் குடிசையும் அந்தத் திக்கிலே தான் இருக்கவேண்டும் என்று. அதனால் அத் திக்கு நோக்கியே அவன் குதிரையை விரட்டினான். அடிக்கடி தனது கால்களினாலும், கடிவாள வார்களின் நுனியாலும் அதை முடுக்கிக் கொண்டிருந்தான். பனி அவன் கண்களுக்குத் திரை யிட்டது. அவனை நிறுத்திவிடுவது என்ற லட்சியத் தோடு காற்று வீசியதாகத் தோன்றியது. ஆனால், அவனோ, முன்னோக்கிக் குனிந்து கொண்டு, அடிக்கடி கோட்டைச் சரியாக இழுத்து தனக்கும் குளிர்ச்சியான சேணத்துக்கும் இடையிலே அதைச் சொருகிவிட்டுக் கொண்டு, குதிரையை மேலும் வேகமாகச் செல்லும்படி தூண்டி வந்தான்.

முக்கார்ட்டி கஷ்டப்பட்டுக் கொண்டே அவனுக்கு அடங்கி, அவன் செலுத்திய திக்கு நோக்கித் தளர் நடை நடந்தது.

சுமார் ஐந்து நிமிஷ நேரம் வாஸிலி ஆன்ட்ரீவிச் நேராகப் பிரயாணம் செய்தான். அப்படித்தான் அவன் நினைத்தான். குதிரைத் தலையையும் விரிந்து கிடந்த வெண்மய வெம்பரப்பையும் தவிர வேறொன்றையும் அவன் காணவில்லை. குதிரையின் காதுகளைச் சுற்றியும், தனது கோட்டுக் காலர் அருகிலும் விசிலடித்துச் சுழன்ற காற்றின் ஒலி தவிர வேறு எதையும் அவன் கேட்கவில்லை.

திடீரென்று அவனுக்கு முன்னால் கறுப்பாக ஏதோ ஒன்று பார்வையில் பட்டது. அவன் இதயம் ஆனந்தத்தினால் துடித்தது. கிராமத்து வீடுகளின் சுவர்களைக் கற்பனையில் கண்டு களித்தவாறே அவன் அந்தப் பொருளை நோக்கி முன்னேறினான். ஆனால் அந்தக் கறுப்புக் குவியல் நின்ற இடத்திலேயே நிற்காமல் அசைந்து கொண்டிருந்தது. அது ஒரு ஊர் அல்ல. ஒருவகை மரத்தின் நெடிய கிளைகள் தான் அவை. இரண்டு வயல்களுக்கு ஊடாக உள்ள வரப்பிலே நின்ற மரங்கள் சிலவற்றின் கிளைகள் மாத்திரமே பனிப்பரப்பைத் துளைத்து மேலெழுந்து காட்சி தந்தன. அவற்றை ஒரே திக்கில் சரியும்படி அடித்துக் கீச்சிட்டுச் சுழன்ற காற்றினால் அவை மூர்க்கமாக அலைக்கழிக்கப்பட்டன.

இரக்கமற்ற காற்றினால் பாடாய்ப்படுத்தப்பட்ட மரங்களின் தோற்றம் வாஸிலியை நடுங்கச் செய்தது. ஏனென்று அவனுக்கே புரியவில்லை. அவன் குதிரையை அவசரம் அவசரமாக ஓட்டினான். மரங்களை நோக்கி முன்னேறிச் சென்ற போது அவன் பிரயாணம் செய்த திசையை அடியோடு மாற்றி விட்டான் ; இப்பொழுது அவன் நேர் எதிரான திசையில் முன்நோக்கிச் சென்றுகொண்டிருந்தான். தனக்கிருந்த அவசரத்தில் அவன் இந்த உண்மையைக் கவனிக்கவே இல்லை. எந்தத் திக்கில் குடிசை இருந்ததாக அவன் நம்பினானோ அதே திசை நோக் கித்தான் இன்னமும் பிரயாணம் செய்வதாக வாஸிலி நினைத்துக் கொண்டிருந்தான். ஆனால் குதிரை வலது பக்கம் செல்ல முயன்றது. அவனோ அதை இடது புறமாக ஒதுக்கியே வழிகாட்டினான்.

மீண்டும் அவனுக்கு முன்பக்கத்தில் கறுப்பாக எதுவோ தோன்றியது. மறுபடியும் அவன் உவகை பெற்றான், இப்பொழுது நிச்சயமாக ஒரு கிராமம் வந்து விட்டது என்ற நம்பிக்கையினால். ஆனால், மரங்கள் மண்டிய அதே வயல் வரப்புதான் மறுபடியும் காட்சி அளித்தது. காற்றில் சிக்கி மூர்க்கமாக அல்லாடி, அவன் உள்ளத்திலே காரணமற்ற பீதியை எழுப்பிய அதே மரக்கிளைகள் தான் மீண்டும் தென்பட்டன. பழைய மரக்கிளைகள் என்பது மட்டுமே முக்கியமல்ல. அம் மரத் தொகுப்பிற்குப் பக்கத்தில் குதிரையின் காலடித் தடம் ஒன்று அரைகுறையாகப் பனிமூடிக் கிடந்தது.

வாஸிலி ஆன்ட்ரீவிச் நின்று, குனிந்து, கவனத் தோடு உற்றுநோக்கினான். பனியினால் மூடியும் மூடாமலும் தென்பட்ட குதிரையின் காலடித் தடம் தான் அது. அவனது குதிரையின் அடிச்சுவடுகளைத் தவிர வேறெதுவாகவும் இருக்க முடியாது. ஆகவே அவன் கொஞ்ச தூரம் வட்டமிட்டுச் சுற்றி வந்திருக்கிறான் என்பது தெளிவாயிற்று. . இதே ரீதியில் நான் செத்தொழிந்து போவேன்!’ என்று அவன் நினைத் தான். தனது பீதிக்கு இடம் தர விரும்பாதவனாய், பனிபடர்ந்த அந்தகாரத்தினூடே உறுத்து நோக் கியபடியே அவன் மேலும் அதிகமாகக் குதிரையை முடுக்கினான்.

காரிருளில் அவ்வப்போது மின்வெட்டித் தோன்றி மறையும் ஒளிச் சிதறல்களை மட்டுமே கண்டான் அவன். நாய்களின் குரைப்பையோ, அல்லது ஓநாய் களின் ஊளைக் கூச்சலையோ கேட்டதாக அவன் ஒரு சமயம் எண்ணினான். ஆனால் அந்த ஓசைகள் மிகவும் தீனமாகவும் தெளிவற்றும் ஒலித்ததால், உண்மை யிலேயே அவற்றை அவன் கேட்டானா ; அல்லது கேட்டதாக வெறுமனே நினைத்துக் கொண்டானா என்று அவனுக்கே தெரியாமல் போய்விட்டது. எனவே அவன் நின்று, மிகுந்த சிரத்தையோடு கவனித்தான்.

நடுக்கம் தரக் கூடிய, செவிடு படச் செய்கிற கூச்சல் எதுவோ திடீரென்று அவன் காதுகளின் அருகே எதிரொலித்தது. அவனுக்குக் கீழே எல்லாமே ஆடிக் குலுங்கி நடுங்கியது. அவன் குதிரையின் கழுத்தைப் பற்றினான். ஆனால் அதுவும் உடல் நடுக்கம் கண்டு நின்றது. மீண்டும் அந்தப் பயங்கர ஓசை முன்னிலும் அதிகப் பயங்கரமாகப் பெருகி ஒலித்தது. சில கண நேரம் வாஸிலிக்குத் தன்னையே கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை.

முக்கார்ட்டிதான் அவ்விதம் குரல் எழுப்பியது. தனக்குத் தானே ஊக்கம் ஊட்டுவதற்காகவோ, அல்லது உதவியை அழைத்தோ, அது உரக்க எதிரொலி எழுப்பும் விதத்தில் கனைத்துக்கொண்டது.

‘அட, உதவாக்கரையே! என்னை எப்படி பயப் படுத்தி விட்டாய்! நீ நாசமாய்ப் போக!’ என்று எண்ணினான் வாஸிலி. ஆயினும், தனது பயத்தின் காரணத்தைப் புரிந்து கொண்ட பிறகும் கூட அவனால் அச்சத்தை உதறிவிட முடியவில்லை.

‘நான் மன அமைதி பெற்று, நன்றாகச் சிந்தித்து முடிவு செய்யவேண்டும்’ என்று அவன் தனக்குத் தானே கூறிக்கொண்டான். என்றாலும் அவனால் நிலைத்து நிற்கமுடியவில்லை. மேலும் வேகமாகச் செல் லும்படி குதிரையைத் தூண்டிக் கொண்டுதான் இருந் தான் அவன். காற்றை எதிர்த்துச் செல்வதற்குப் பதிலாகதான் இப்போது காற்றோடு சேர்ந்துபோவதை அவன் கவனிக்கவே இல்லை. அவனுடைய உடல் – முக்கியமாக, மேற்சட்டையால் மூடப்பெறாமல், சேணத் தைத் தொட்டபடி இருந்த கால்களின் உட்பகுதி – வேதனை தரும் அளவுக்குக் குளிர்ந்து போயிற்று. குதிரை மெதுவாக நடந்த போது அந்த வேதனை அதிகரித்தது. அவனது கால்களும் கைகளும் பதற்றம் எய்தின. வேகமாக மூச்சு வாங்கியது. பயங்கரமான அந்தப் பனிப்பாலையின் மத்தியிலே, தான் அழிந்து படுவதை அவன் கண்டான்; தப்பிச் செல்வதற்கு உரிய வழி எதையும் கண்டானில்லை.

திடீரென்று குதிரை எதனுள்ளோ இடறி விழுந்தது. பனி ஓட்டத்தினுள் அமிழ்ந்து, ஆழ்ந்து போகத் தொடங்கியது. பின்னர் அது ஒரு பக்கமாய்ச் சாய்ந்து விழுந்தது. வாஸிலி ஆன்ட்ரீவிச் கீழே குதித்தான். அப்படிச் செய்தபோது அவனது கால் தங்கியிருந்த வார்ப் பட்டையை ஓர் புறமாக இழுத்துவிட்டான்; அவன் இறங்கும் பொழுது பிடித்திருந்த சேணத்தைச் சுற்றித் திருகிவிட்டான்.

அவன் கீழே குதித்து விடவும், குதிரை முரண்டி அடித்து எழுந்து நின்றது. முன் நோக்கிப் பாய்ந்தது. ஒரு குதி குதித்தது. மற்றொருமுறை துள்ளிப் பாய்ந்தது, மீண்டும் கனைத்துக் கொண்டது. கம்பளித் துணி, வார்ப்பட்டை எல்லாம் பின்னால் இழுபட்டுத் தொடர அது ஓடியது. வாஸிலியைத் தன்னந் தனிய னாய் பனி ஓட்டத்திலே தங்க விட்டு விட்டு அது மறைந்து போயிற்று.

குதிரையைத் தொடர்ந்து செல்ல அவன் பாடு பட்டான். ஆனால் பனி மிக ஆழமாகப் படிந்து கிடந் தது. அவனது கோட்டுகள் கனமாக இருந்தன. அதனால் அடி எடுத்து வைக்குந் தோறும் அவன் முழங்கால் அளவு பனியில் அமிழ நேர்ந்தது. இருபது எட்டுகளுக்கு மேற்கொண்டு அடி எடுத்து வைக்க முடியாமல் மூச்சுத் திணற அவன் நின்று விட்டான். ‘தோப்பு, மாடுகள், குத்தகை நிலம், கடை, மதுச்சாலை, தகரக் கூரை போட்ட களஞ்சியமும் வீடும், எனது வாரிசு என்று எண்ணினான் அவன்.

‘இவைகளை எல்லாம் நான் எப்படி விட்டுவிட முடியும்? இதன் அர்த்தம் என்ன? அது நடக்காது!’ இப்படி எண்ணங்கள் அவன் உள்ளத்திலே பளிச் சிட்டன. பிறகு, காற்றில் அலைப்பட்ட மரத் தொகுதி யையும், அதை அவன் இரண்டு தடவை தாண்டிச் செல்ல நேர்ந்ததையும் எண்ணினான். பயம் அவனைக் கவ்விக் கொண்டது. ஆகவே அப்பொழுது அவனுக்கு நேர்ந்து கொண்டிருந்த அனுபவத்தின் நிஜத்தன்மை யில் அவன் நம்பிக்கை கொள்ளவே இல்லை. இது கனவாக இருக்குமோ?’ என்று தான் அவன் நினைத் தான். அதனால் விழித்து எழ அவன் பெருமுயற்சி செய்தான். பயன் எதுவும் ஏற்படவில்லை. உண்மை யான பனி தான் அவன் முகத்தில் அறைந்து கொண் டிருந்தது; அவனை மூடிவிட முயன்றது; உறையை இழந்து விட்ட அவனது வலது கரத்தைக் குளிரால் விறைக்க வைத்தது. நிஜமான பனிப்பாலை தான் அது. அங்கே, அந்த மரக்கூட்டம் போலவே, அவ னும் தவிர்க்கமுடியாத – மிகத் துரிதமான-அர்த்தமற்ற அழிவை எதிர்பார்த்துக் காத்திருக்கும்படி தன்னந் தனியனாய் விடப்பட்டிருந்தான்.

‘சொர்க்கத்து ராணியே! தன்னடக்கத்தின் போதகராகிய பரிசுத்தத் தந்தை நிக்கொலஸ் அவர் களே!’ என்று அவன் முணுமுணுத்தான். முந்திய தினத்தில் நடைபெற்ற ஆராதனையும், தங்கமுலாம் பூசிய சட்டத்தினுள் காட்சி தந்த புனித விக்ரகத்தின் கறுத்த முகமும், அந்த விக்கிரகத்தின் திரு முன்னிலே கொளுத்தி வைக்கப்படுவதற்காக அவன் விற்பனை செய்த மெழுகுவர்த்திகளும் அவனது நினைவில் எழுந்தன. அந்த மெழுகு திரிகள் கொஞ்சம் கூட எரிந்திராத நிலையிலே உடனடியாகவே தன்னிடம் வந்து சேர்ந்தது பற்றியும், அவற்றை அவன் பெட்டி யில் வைத்துப் பூட்டியதையும் நினைத்தான்.

அற்புதங்கள் விளைவிக்க வல்ல அதே நிக்கொல்ஸை நினைத்துத் தான் இப்பொழுது அவன் பிராத்தனை புரிந்தான். நன்றி அறிவிப்பு ஆராதனை நடத்தி, கொஞ்சம் மெழுகு வர்த்திகளை ஏற்றி வைப்பதாக அவன் வேண்டிக்கொண்டான். என்றாலும், அந்த விக்கிரகம், அதன் சட்டம், மெழுகு வர்த்திகள், பாதிரி, நன்றி அறிவிப்பு ஆராதனை . எல்லாம் கோயிலில் முக்கியமானவை. அவசியமானவைதான். ஆனால் இந்த இடத்தில் அவனுக்காக அவை எதையும் சாதித்து விட முடியாது. அம் மெழுகு வர்த்திகள், ஆராதனைகள் முதலியவற்றிற்கும் அவனது தற் போதைய அபாயகரமான ஆபத்து நிலைமைக்கும் எந்த விதமான தொடர்பும் இருக்க முடியாது என் பதை அவன் தெளிவாகவும் சந்தேகத்துக்கு இட மில்லாமலும் உணர்ந்தான்.

‘நான் கவலையுற்று ஏங்கக்கூடாது. தடத்தை பனி மூடி மறைத்து விடுவதற்கு முன்பே நான் குதி ரையின் அடிச்சுவடுகளைப் பின் பற்றிச் செல்ல வேண் டும். குதிரை என்னை வெளியே கொண்டுபோய்ச் சேர்த்துவிடும். ஒருவேளை அதை நான் பிடித்து விடவும் கூடும். நான் அவசரப்படக் கூடாது. அது தான் முக்கியம். இல்லை யெனில் நான் இன்னும் அதிகமாக அமிழ்ந்து அடியோடு நாசமாகிவிடுவேன் என்று அவன் எண்ணினான்.

ஆனால், அமைதியாக நடக்க வேண்டும் என்று தீர்மானம் செய்துகொண்ட போதிலும் அவன் முன் னோக்கிப் பாயவே செய்தான். சில சமயம் ஓடவும் முயன்றான். அதனால் அடிக்கடி விழுந்தான். எழுந் தான். திரும்பத் திரும்ப விழுவதும் எழுவதுமாக அவன் ஓடினான். பனி ஆழமாக விழுந்திராத இடங் களில் குதிரையின் காலடித் தடம் தெளிவாகப் புலனா கவே இல்லை. ‘நான் ஒழிந்தேன்! நான் பாதையைத் தவறவிட்டு விடுவேன்; குதிரையையும் பிடிக்கமாட்டேன்’ என்று நினைத்தான் அவன். எனினும் அவ் வேளையில் அவன் கறுப்பாக எதையோ கண்டான். அது குதிரை தான். முக்கார்ட்டி மாத்திரமல்ல. வண்டியும், கைக்குட்டை ஆடிப் பறக்கும் சட்டத்தோடு, காட்சி தந்தது.

குதிரை முக்கார்ட்டி, சாக்குத் துணியும் வார்ப் பட்டையும் ஓர் புறமாகச் சுற்றிப் பின்னிக்கிடக்க, நின்றது. அது பழைய இடத்தில் நிற்காமல் இப் பொழுது வண்டிச் சட்டங்களுக்கு மிக அருகாமையில் நின்று தலையை ஆட்டிக்கொண்டிருந்தது. தலையிலி ருந்து தொங்கிய கடிவாள வார்களை அது தனது கால் களால் மிதித்துக் கொண்டிருந்ததனால் தலை கீழ் நோக்கியே இழுக்கப்பட்டது.

முன்பு நிகிட்டா தவறி விழுந்த கணவாய்க் குள்ளேதான் வாஸிலியும் விழுந்திருந்தான்; முக்கார்ட்டி அவனைச் சுமந்தபடி வண்டியை நோக்கித் தான் திரும்பி வந்து கொண்டிருந்தது; குதிரையின் முதுகிலிருந்து அவன் கீழே குதித்த இடம் வண்டி நின்ற இடத்திலிருந்து ஐம்பது அடிகளுக்குள்ளாகவே இருந்தது என்று இப்போது விளங்கி விட்டது.

9

தட்டுத் தடுமாறி மறுபடியும் வண்டியை அடைந் ததும் வாஸிலி ஆன்ட்ரீவிச் அதைப் பிடித்துக் கொண்டு நீண்ட நேரம் அசைவற்று நின்றான்.

அவன் தன்னைத் தானே சாந்தப் படுத்திக்கொண்டு மூச்சு வாங்குவதை சரிப்படுத்த முயன்றான். நிகிட்டா முன்பு இருந்த இடத்தில் இல்லை. ஆனால், பனியினால் நன்கு மூடப்பெற்ற ஏதோ ஒன்று வண்டியினுள்ளே கிடந்தது. அது தான் நிகிட்டா என்று வாஸிலி முடிவு செய்தான்.

அவனுடைய பயம் முற்றிலும் அவனை விட்டு நீங்கிவிட்டது. அவனுக்கு இப்பொழுது ஏதாவது பயம் இருந்தது என்றால், அதுதான் குதிரையின்மீது அமர்ந்திருந்தபோதும், முக்கியமாக பனி ஓட்டத்தி னூடே தன்னந்தனியனாக விடப்பட்ட போதும், அவ னைப் பற்றிக் கொண்ட மகாபயங்கரமான பயம் மறு படியும் தன்னைக் கவ்விக்கொள்ளுமே என்பதே ஆகும். எந்த விதத்திலாயினும் அவன் அந்த பயத்தை விலக்கியே ஆகவேண்டும். அது தன்னை அணுகாமல் கவனித்துக்கொள்வதற்காக அவன் ஏதாவது செய்தாக வேண்டும் – சும்மா இராமல் எந்தக் காரியத்திலாவது அவன் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

எனவே, அவன் செய்த முதல் காரியம், காற்றுக்கு எதிராக முதுகைத் திருப்பி வைத்து, தனது ரோமக் கோட்டைத் திறந்துவிட்டுக் கொண்டதுதான். பிறகு, தனது மூச்சு ஓர் சிறிது சரிப்பட்டதும், அவன் தன்னு டைய பூட்ஸினுள் புகுந்திருந்த பனியை வெளியே கொட்டினான். இடது கை உறையிலிருந்து அதை அகற்றினான். (வலது கை உறை கிடைக்கும் என்று நம்புவதற்கே இடமில்லாதபடி தொலைந்து போய் விட்டது. எங்கோ விழுந்து கிடக்கும் அதன்மீது இந் நேரத்திற்குள் ஒரு அடி உயரம் பனி படிந்து மூடியிருக்கும்.) அதன் பிறகு, அவன் குடியானவர்களிடம் போய் தானியம் வாங்கி வரக் கிளம்புவதற்கு முன்னால் வழக்கமாகச் செய்து கொள்வது போலவே இப் பொழுதும் தனது அரைக் கச்சையைக் கீழே தணித்து இறக்கி இழுத்துக் கட்டிக் கொண்டு வேலைக்குத் தயாரானான்.

முதன் முதலாக, அவனுக்குத் தோன்றிய விஷயம், முக்கார்ட்டியின் காலை வாரிலிருந்து விடுவிக்க வேண்டும் என்பதுதான். அதைச் செய்து முடித்து, வண்டியின் முன்புறத்தில் உள்ள இரும்புப் பிடியில் ஆரம்பத்தில் கட்டப்பட்டிருந்தது போலவே குதிரையை இப்பொழுதும் கட்டி வைத்தான். பிறகு, அதன் கால் பட்டையையும் சேணத்தையும் சரிப்படுத்தி அதனு டைய தேகத்தைத் துணியால் மூடுவதற்காக அவன் குதிரையைச் சுற்றி வந்தான். அவ்வேளையில் வண்டி யினுள் ஏதோ அசைவதை அவன் கவனிக்க நேர்ந்தது.

மூடி மறைந்திருந்த பனிக்கு வெளியே உயர்ந்து தோன்றியது நிகிட்டாவின் தலை. அரைவாசி உறைந்து போயிருந்த நிகிட்டா மிகுந்த சிரமத்தோடு எழுந்து உட்கார்ந்தான். அவன் தனது கையை மூக்கின் முன்னால் விசித்திரமான முறையில் ஆட்டி அசைத்துக் கொண்டிருந்தான், ஈக்களை விரட்டி ஓட்டுகிறவன் போல. அவன் தன்னுடைய கையை அசைத்தான்; என்னவோ சொன்னான்.

அவன் தன்னை அழைப்பதாகத் தோன்றியது வாஸிலிக்கு. அதனால் வாஸிலி துணியைச் சரிப்படுத் தாது அப்படியே போட்டுவிட்டு, வண்டியை நெருங்கிச் சென்றான். ‘என்ன விஷயம்? நீ என்ன சொல்கிறாய்?’ என்று கேட்டான்.

‘நான் செத்…செத்துக்…கொண்டிருக்கிறேன். அதுதான் விஷயம். எனக்குச் சேர வேண்டிய பணத்தை என் மகனிடம் கொடுங்கள். அல்லது என் மனைவியிடமே கொடுங்கள்; பரவாயில்லை’ என்று நிகிட்டா கஷ்டத்தோடு விட்டு விட்டுப் பேசினான்.

‘ஏன், நிஜமாகவே நீ உறைந்து போனாயா?’

‘இது எனது சாவு என்றே நான் உணர்கிறேன். கிறிஸ்துவின் பெயரால், நீங்கள் என்னை மன்னித்து விடுங்கள்’ என்று அழுகிற குரலில் சொன்னான் நிகிட்டா. ஈக்களை விரட்டுவது போல முகத்துக்கு எதிரே இன்னும் கையை வீசிக்கொண்டு தான் இருந்தான் அவன்.

அரை நிமிஷ நேரம் பேச்சற்று, அசைவற்று நின்றான் வாஸிலி. எதையாவது லாபகரமாக வாங்குகிறபொழுது அவன் கைதட்டி முடிவு செய்வது வழக்கம். இப்போதும் அதே தீர்மானத்தோடு திடீரென்று செயல் புரியத் தொடங்கினான் அவன். ஒரு அடி பின்வாங்கி நின்று, தனது சட்டை யின் கைகளை மடித்துவிட்டுக் கொண்டு, நிகிட்டா மீதிருந்தும் வண்டியிலிருந்தும் பனியை அகற்றுவதில் அவன் ஈடுபட்டான். இதைச் செய்தானதும், அவன் அரைக் கச்சையை அவிழ்த்து ரோமக் கோட்டை நன்றாகத் திறந்து விட்டான். பிறகு, நிகிட்டாவைக் கீழே தள்ளி அவனுக்கு மேலே தான் படுத்துக்கொண்டு அவனை ரோமக் கோட்டினால் மட்டுமில்லாமல், சூடு பெற்றுக் கதகதத்துக் கொண்டிருந்த தனது தேகத் தினாலும் மூடி மறைத்தான். தனது கோட்டின் விளிம்புகளை நிகிட்டாவுக்கும் வண்டியின் பக்கங்களுக்கு மிடையே திணித்து வைத்து, அதன் ஓரத்தை முழங் கால்களினால் அழுத்திக் கொண்டான் வாஸிலி. தன் முகம் கீழ் நோக்கியிருக்க, தலையை வண்டியின் முன் புறத்தோடு பதித்துக் கொண்டு அவன் படுத்து விட் டான். இங்கே அவன் குதிரையின் அசைவுகளையோ, காற்றின் கீச்சொலியையோ கேட்டானில்லை. நிகிட்டா மூச்சு விடுவதை மாத்திரமே கேட்க முடிந்தது அவனால்.

ஆரம்பத்தில், வெகு நேரம் வரை, நிகிட்டா அசைவற்றுக் கிடந்தான். பிறகு ஆழ்ந்த நெடு மூச்சுயிர்த்து அசைந்து கொடுத்தான்.

‘அதோ! நீ செத்துப் போவதாகச் சொல்கிறாயே! அசையாமல் படுத்து, சூடு பெற்றுக் கொள். இது தான் நமது வழி…’ என்று பேசத் தொடங்கினான் வாஸிலி.

ஆனால் அவனுக்கே ஆச்சரியமாகிவிட்டது. அவனால் மேற்கொண்டு பேசமுடியவில்லை. ஏனெனில் அவன் கண்களில் நீர் பெருகியது. அவனுடைய கீழ்த் தாடை வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது. அவன் பேசுவதை நிறுத்திவிட்டு, தொண்டைக் குழியில் எழுந்தவற்றை உள்ளே விழுங்கினான், ‘நான் படுமோசமாகப் பயந்து விட்டேன். அதனால் மிகுந்த பலவீனனாகிப் போனேன் என்று தோன்றுகிறது’ என அவன் நினைத்தான். ஆயினும் இந்த பலவீனம் அதிருப்திகரமானதாக இல்லை என்பது மட்டுமல்ல; அவன் அதற்குமுன் எப்போதுமே அனுபவித்திராத விசேஷமான தொரு ஆனந்தத்தையும் அவனுக்குத் தந்தது.

‘அது தான் நமது வழி!’ என்று அவன் தனக்குத் தானே கூறிக்கொண்டான். அதிசயமுள்ள, பக்தி பூர்வமான, இரக்க உணர்ச்சியை அவன் அனுப வித்துக் கொண்டிருந்தான். தனது கோட்டு ரோமத் தின் மேல் கண்களைத் துடைத்தும், காற்றினால் அடிக் கடி விலக்கப்பட்ட மேல் சட்டையின் வலது புற விளிம்பை முழங்காலுக்குக் கீழே திணித்துக் கொண்டும், அவன் அதே நிலையில் வெகு நேரம் கிடந்தான்.

எனினும், தனது ஆனந்தமயமான நிலைமையை யாருக்காவது எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற அடக்க முடியாத ஆசைத் துடிப்பு அவனுக்கு ஏற்பட்டி ருந்தது. ஆகவே’ நிகிட்டா!’ என்று கூப்பிட்டான் அவன்.

‘சுகமாக இருக்கிறது. சூடாகவும் இருக்கிறது’ என்று ஒரு குரல் அடியிலிருந்து மேலெழுந்தது.

‘பார்த்தாயா நண்பா! நான் அழிந்து போக இருந்தேன். நீயும் உறைந்து மடிந்திருப்பாய். நான் வந்து..’

ஆனால் மீண்டும் அவன் வாய் துடிக்கத் தொடங்கியது. கண்களில் நீர் கட்டியது. அவனால் மேலும் பேசமுடியவில்லை. ‘நல்லது. பரவாயில்லை. நான் எதை உணர்ந்தேன் என்கிற என்னைப்பற்றிய உண்மை எனக்கே தெரிகிறது’ என்று அவன் எண்ணினான்.

அதற்குப் பிறகு அவன் மௌனமாக நெடுநேரம் அப்படியே கிடந்தான்.

கீழே கிடந்த நிகிட்டாவினாலும் மேலே கிடந்த ரோமக் கோட்டுகளாலும் அவன் உஷ்ணம் பெற்று வந்தான். நிகிட்டாவின் விலாப்புறங்களைச் சுற்றி கோட்டின் ஓரங்களைப் பிடித்துக் கொண்டிருந்த கைகளும், காற்றினால் அடிக்கடி திறந்து போடப்பட்ட அவனது கால்களும்தான் பனியில் உறையத் தொடங்கின. முக்கியமாக, கையுறை இல்லாத வலது கைதான் மிகுதியும் பாதிக்கப்பட்டது. ஆனாலும் அவன் தனது கால்களைப் பற்றியோ கைகளைப் பற்றியோ சிந்தித்தானில்லை. தனக்குக் கீழே கிடக்கும் குடியான வனை எப்படி உஷ்ணப்படுத்தலாம் என்பது பற்றியே எண்ணினான் அவன்.

பலமுறைகள் அவன் முக்கார்ட்டியின் பக்கம் பார்வை எறிந்தான். அதன் முதுகு மூடப் பெறாத தையும், கம்பளித் துணியும் வார்ப்பட்டையும் கீழே பனியில் விழுந்து கிடந்ததையும் அவன் காண முடிந்தது. எழுந்து, அவற்றை எடுத்து, குதிரையைப் போர்த்த வேண்டும் என்று பட்டது அவனுக்கு. ஆயினும், நிகிட்டாவை விட்டு விலகி, தான் அனு பவித்துக் கொண்டிருந்த ஆனந்த நிலையைக் குலைத்து விட அவன் மனம் இடம் தரவில்லை. எவ்விதமான பயத்தையும் அவன் அப்புறம் உணரவில்லை.

‘பயப்பட வேண்டாம். இந்தத் தடவை நாம் அவனை இழந்துவிட மாட்டோம்’ என்று அவன் தனக்குத்தானே சொல்லிக் கொண்டான். குடியான வனை உஷ்ணப் படுத்துகிற தனது முயற்சிபற்றித் தான் அவன் குறிப்பிட்டான். தான் பொருள்களை வாங்குவதையும் விற்பதையும் பற்றிப் பெருமையாகப் பேசிக் கொள்வது போலவே இதையும் குறிப்பிட்டான் அவன்.

இப்படி ஒரு மணி நேரம், இரண்டு மணி, மூன்று மணி என்று வாஸிலி ஆன்ட்ரீவிச் படுத்துக் கிடந் தான். ஆனால் கால ஓட்டத்தின் கணக்கு அவன் பிரக்ஞையில் படவேயில்லை. முதலில், பனிச் சூறாவளி, வண்டிச் சட்டங்கள், சட்டத்தினூடே நின்று அவன் கண்முன்னாலேயே நடுங்கிக் கொண்டிருந்த குதிரை ஆகியவற்றின் நிழல்கள் அவன் மனவெளியில் ஊர்ந்து சென்றன. பிறகு, தனக்குக் கீழே கிடக்கும் நிகிட்டா வின் நினைப்பு அவனுக்கு வந்தது. பிறகு, பண்டிகை, அவன் மனைவி, போலீஸ் அதிகாரி, மெழுகுவர்த்திகள் நிறைந்த பெட்டி ஆகிய நினைவுகள் நிழலிட்டுக் குழம்பின. மறுபடியும் நிகிட்டாவின் நினைவு. ஆனால் இம்முறை அவன் அந்தப் பெட்டிக்கு அடியில் படுத்துக் கிடந்தான். அப்புறம், குடியானவர்கள், வாடிக்கைக்காரர்கள், வியாபாரிகள் தோன்றி மறைந் தார்கள். தகரக் கொட்டகை போட்ட களஞ்சியத்தோடு கூடிய தனது வீட்டின் வெள்ளை நிறச் சுவர்கள் தோன்றின. அவற்றின் கீழே நிகிட்டா கிடந்ததாகத் தோன்றியது. பின்னர் இவ் வெல்லா நிழல்களும் கலந்து குழம்பி ஒன்றாகி சூன்யத்தில் ஐக்கியமாகி விட்டன. வானவில்லின் வர்ணங்கள் அனைத்தும் ஐக்கியமாகி ஒரே வெள்ளொளியாகப் பரிணமிப்பது போல் தான், வெவ்வேறு விதமான நிழல்கள் பலவும் ஒன்றுபட்டுக் கலந்தன. முடிவில், அவன் தூக்கத்தில் ஆழ்ந்தான்.

நெடுநேரம், கனவு எதுவும் இல்லாமலே உறங் கினான் அவன். ஆனால் விடிவதற்குச் சிறிதுநேரம் இருந்தபொழுது, அவனது கனவுகள் மீண்டும் தலை தூக்கின. மெழுகுவர்த்திகள் உள்ள பெட்டியின் அருகே அவன் நின்று கொண்டிருந்ததாகத் தோன் றியது. டிக்கோனின் மனைவி மாதாகோயில் பண்டி கைக்காக ஐந்து கோப்பெக் விலையுள்ள மெழுகுவர்த்தி ஒன்று தரும்படி கேட்டு நின்றாள். பெட்டியிலிருந்து அதை எடுத்து அவளிடம் கொடுக்க விரும்பினான் அவன். ஆனால் அவனது கைகள், பைகளினுள் இறுக்கமாகச் சிக்கியிருந்ததால், மேலே எழவில்லை. அந்தப் பெட்டியைச் சுற்றி நடக்க அவன் ஆசைப் பட்டான். ஆனால் அவன் கால்கள் நகர மறுத்தன. அவன் கால்களில் அணிந்திருந்த புத்தம் புதிய சுத்த மான ரப்பர் உறைகள் தரையோடு ஒட்டி வளர்ந் திருந்தன. அவனால் அவற்றைத் தூக்கவும் முடிய வில்லை; அவற்றினுள்ளிருந்து கால்களை விடுவிக்கவும் இயலவில்லை. அதன்பிறகு, மெழுகுவர்த்திப் பெட்டி பெட்டியாக இராமல் ஒரு படுக்கையாகக் காட்சி – அளித்தது. திடீரென்று வாஸிலி ஆன்ட்ரீவிச் தான் தனது வீட்டிலுள்ள படுக்கைமேல் படுத்துக் கிடப்ப தைக் கண்டான். அந்தப் படுக்கையில் அவன் நன்றாகப் படுத்துக் கிடந்தான். அங்கிருந்து அவனால் எழுந் திருக்க முடியவில்லை. ஆனாலும் அவன் அவசியம் எழுந்தாக வேண்டும். ஏனெனில் போலீஸ் அதிகாரி ஐவான் மேட்வீயிச் அவனைத் தேடி வருவார். அவன் அவருடன் போயாக வேண்டும் – காட்டு விஷயமாகப் பேரம் பேசி முடிவு செய்வதற்கோ, அல்லது முக்கார்ட் டியின் உடல் மீதுள்ள பட்டைவார்களைச் சரியாகப் போடுவதற்கோ, எதற்கோ!

நிக்கலீவ்னா, இன்னும் அவர் வரவில்லையா?’ என்று அவன் தன் மனைவியிடம் கேட்டான். ‘இல்லை, வரவில்லை’ என்று அவள் சொன்னாள். வீட்டு முன் வாசல்படியருகே யாரோ வண்டியில் வந்து நின்றது போல் சத்தம் கேட்டது. அது அவராகத்தான் இருக்க வேண்டும். இல்லை. அவர் கடந்து போய்விட்டார்.’ ‘நிக்கலீவ்னா! ஏய் , நிக்கலீவ்னா! அவர் இன்னும் இங்கே வந்து சேரவில்லையா?’ ‘இல்லை.’ அவன் இன்னும் தனது படுக்கையில் தான் கிடந்தான். எழுந்திருக்க முடியவில்லை. என்றாலும் ஓயாது காத்துக் கொண்டிருந்தான். இவ்வாறு காத்துக் கிடப்பது இயற்கைக்கு விரோதமான ஏதோ ஒரு விசித்திர மாகத் தோன்றிய போதிலும் ஆனந்தமாகத் தான் இருந்தது திடீரென்று அவனுடைய ஆனந்தம் பூர்த்தியாயிற்று. அவன் யாரை எதிர்பார்த்துக் காத் திருந்தானோ அந்த நபர் வந்து விட்டார். வந்தது போலீஸ் அதிகாரி ஐவான் மேட்வீயிச் அல்ல. வேறொருவர். எனினும், அவருக்காகத்தான் அவன் காத்துக் கிடந்தான். அவர் வந்தார், அவனை அழைத் தார். அவனைக் கூப்பிட்டு , நிகிட்டாவின்மீது கிடந்து உஷ்ணப்படுத்துமாறு சொன்னவர் அவர்தான். தன்னைத் தேடி அவரே வந்து விட்டதற்காக வாஸிலி ஆன்ட்ரீவிச் மிகுந்த சந்தோஷம் அடைந்தான்.

‘இதோ வருகிறேன்!’ என்று அவன் மகிழ்ச்சி யோடு கத்தினான். அந்தக் கூவல் அவனை விழிக்க வைத்து விட்டது. ஆனாலும், தூங்க ஆரம்பித்தபோது இருந்த அதே ஆளாக அவன் விழித்தெழும்படி அது துணைபுரியவில்லை. அவன் எழுந்து உட்கார முயன் றான்; முடியவில்லை. தனது கையை அசைக்க முயற்சித்தான்; முடியவில்லை. காலை அசைக்க முயன்றான்; அதுவும் முடியவில்லை. தன் தலையைத் திருப்ப முயன் றான்; முடியவில்லை. அதனால் அவன் ஆச்சர்யம் அடைந் தான். ஆயினும் மனம் கலங்கிவிடவில்லை. இதுதான் மரணம் என்று அவன் புரிந்துகொண்டான். அந்த உணர்ச்சியினால் கூட அவன் குழம்பிவிடவில்லை. தனக் குக் கீழே நிகிட்டா கிடக்கிறான்; அவன் சூடுபெற்று விட்டான்; உயிரோடும் இருக்கிறான் என்கிற விஷயம் வாஸிலியின் நினைவில் எழுந்தது. தானே நிகிட்டா; நிகிட்டாவேதான்; தன்னுயிர் தன்னிடம் இல்லை; அது நிகிட்டாவிடமே இருந்தது எனத் தோன்றியது அவனுக்கு. அவன் சிரமத்தோடு செவிசாய்த்துக் கவனித்ததில், நிகிட்டா மூச்சு விடுவது கேட்டது. அவன் லேசாகக் குறட்டை விடுவதாகவும் தெரிந்தது. நிகிட்டா உயிரோடு இருக்கிறான். ஆகையால் நானும் உயிரோடு வாழ்கிறேன்’ என்று வெற்றி மிடுக்கோடு அவன் தனக்குத்தானே கூறிக் கொண்டான்.

தனது பணம், தனது கடை, தனது வீடு, வாங்கு வது விற்பது, மிரொனோவின் லட்சங்கள் ஆகிய வற்றைப்பற்றி அவன் எண்ணிப் பார்த்தான். தனக்குத் தொல்லை தந்த இவ்விஷயங்கள் பற்றி எல்லாம் வாஸிலி பிரக்குனோவ் என்கிற மனிதன் ஏன் தான் அல்லற்பட்டுக் கொண்டானோ என்பதை அவன் புரிந்து கொள்வது சிரமமாக இருந்தது.

ஆமாம். அது ஏன் அப்படியென்றால், உண்மை யான விஷயம் எது என்பதை அவன் அறியவில்லை’ என்று நினைத்தான். வாஸிலி பிரக்குனோவ் என் பவனைக் குறித்தேதான். ‘அதை அவன் அறியவில்லை. ஆனால் இப்பொழுது நான் அறிகிறேன். நிச்சயமாக- அறிகிறேன்.’ முன்பு தன்னை அழைத்தவரின் குரலை அவன் மீண்டும் கேட்டான். நான் வருகிறேன்! வந்து விட்டேன்!’ என்று உவகையோடு எதிர்க்குரல் கொடுத்தான் அவன். அவன் உள்ளமும் உடலும் ஆனந்த மயமான உணர்ச்சியினால் நிறைந்துவிட்டன. தான் கட்டற்றவனாகி விட்டதையும், இனி எதுவும் தன்னைப் பிடித்து வைத்திருக்க முடியாது என்பதையும் அவன் உணர்ந்தான்.

அதன் பிறகு வாஸிலி ஆன்ட்ரீவிச் இந்த உலகத்தில் உள்ள எதையும் பார்க்கவில்லை, கேட்கவில்லை, உணரவுமில்லை.

சுற்றுப்புறம் எங்கும் பனி இன்னும் சுழலிட்டுக் கொண்டுதானிருந்தது. பனியைச் சுருட்டி வீசும் காற்றுச் சுழல்கள் அதே நிலையில் வட்டமிட்டுக் கொண்டுதானிருந்தன. செத்துப்போன வாஸிலி ஆன்ட்ரீவிச்சின் ரோமக் கோட்டுமீதும், நடுங்கியபடி நின்ற முக்கார்ட்டியின் மேலும், பார்வைக்குத் தெளி வாகப் புலனாகாத தன்மையை அடைந்து விட்ட வண்டியின் மீதும் அவை பனியை அள்ளி எறிந்தன. நிகிட்டா வண்டியினுள்ளே, இறந்து போன தனது எஜமானுக்குக் கீழே உஷ்ணம் பெற்றவாறு, படுத்துக் கிடந்தான்.

10

பொழுது புலரும் முன்னரே நிகிட்டா விழித்துக் கொண்டான். அவன் முதுகின் மேலே ஊர்ந்து வரத் தொடங்கிய குளிரினால் அவன் எழுப்பி விடப்பட்டான்.

அவன் ஒரு கனவு கண்டான். மில்லிலிருந்து மாவு மூட்டைகளை வண்டியில் ஏற்றிக்கொண்டு அவன் திரும்பி வந்தான். ஓடையைக் கடந்தபோது பாலத் தைத் தவற விட்டுவிட்டான். வண்டி ஓடையில் சிக்கிக் கொண்டது. அதனால் அவன் வண்டிக்கு அடியிலே ஊர்ந்து சென்று, தனது முதுகை வளைத்து உயர்த்தி வண்டியைத் தூக்கி நகர்த்திவிட முயன்றான். ஆனால், அதிசயம்!, அந்த வண்டி நகர்வதாயில்லை. அது அவன் முதுகோடு ஒட்டிக் கொண்டது. அவன் அதைத் தூக்கவும் முடியவில்லை; அதற்குக் கீழேயிருந்து வெளிவர இயலவுமில்லை. அவன் இடுப்பு முழுவதையும் அது நசுக்கத் தொடங்கியது. மேலும் எத்தகைய குளிர் அடித்தது! அவன் வெளியேறத்தான் வேண்டும். ‘விட்டு விடு!’ என்று கத்தினான் அவன். தன்மீது வண்டியை அழுத்திக் கொண்டிருந்த எவரிடமோ பேசுவதுபோல, சாக்குகளை அப்புறப்படுத்து’ என்றான். ஆனால் வண்டியோ மேலும் மேலும் குளிர் அடைந்து அவனை அழுத்தியது. அதன் பிறகு, யாரோ விசித்திர மாகத் தட்டுகிற ஒலியை அவன் கேட்டான். நன்றாக விழித்து விட்டான்.

எல்லாம் அவனுக்கு நினைவு வந்தன. தன் மீது படுத்து உறைந்துபோய் உயிரிழந்து கிடந்த எஜமான் தான் குளிர்ந்த வண்டி. முக்கார்ட்டி தான் தட்டுகிற ஓசையை எழுப்பியது. அந்தக் குதிரை இரண்டு தடவை தனது குளம்பினால் வண்டியைத் தட்டியது.

ஆன்ட்ரீவிச்! ஏ ஆன்ட்ரீவிச்!’ என்று நிகிட்டா கூப்பிட்டான். உண்மையை அவன் உணரத் தொடங்கி யிருந்ததால், தனது முதுகை நேர்படுத்திக்கொண்டு, எச்சரிக்கையோடு குரல் கொடுத்தான் அவன். ஆனால் வாஸிலி பதில் பேசவில்லை. அவனது வயிறும் கால்களும் விறைப்படைந்து, குளிர்ந்து, இரும்புக் குண்டுகள் போல் கனத்துக் கிடந்தன.

அவர் செத்துப் போயிருக்க வேண்டும். மோட்ச சாம்ராஜ்யம் அவருக்குப் சித்திப்பதாக!’ என்று நினைத் தான் நிகிட்டா.

அவன் தனது தலையைத் திருப்பிக்கொண்டு. தன்னைச் சுற்றிலுமிருந்த பனியைத் தன் கையினால் தோண்டி விலக்கி விட்டு, கண்களைத் திறந்து பார்த்தான்.

பகலின் ஒளி எங்கும் பரவியிருந்தது. முன் போலவே காற்று, வண்டிச் சட்டங்களினூடாக, விசிலடித்துத் திரிந்தது. பழைய மாதிரியே இன்னும் பனி விழுந்து கொண்டிருந்தது. ஆனால் இப்போது அது வண்டியின் சட்ட அமைப்புகளை மோதி விலகி ஓடவில்லை; ஓசை எதுவுமின்றி வண்டியையும் குதிரை யையும் கனமாக, அதிகக் கனமாக, மூடி மறைத்தது. குதிரையின் அசைவுகளோ, மூச்சுவிடும் ஓசையோ இப்பொழுது காதில் விழவில்லை.

‘அதுவும் உறைந்துதான் போயிருக்கும்’ என்று நிகிட்டா முக்கார்ட்டியைப்பற்றி எண்ணினான். உண் மையும் அது தான். வண்டி மீது பட்ட குளம்பின் தாக்குதல் – நிகிட்டாவை எழுப்பிவிட்ட ஓசைதான் – முக்கார்ட்டியின் இறுதிப் போராட்டமாகும். அதற்கு முந்தியே குளிரினால் உணர்ச்சி குன்றியிருந்த குதிரை சாகும் தறுவாயிலும் சோர்வுறாது நிற்பதற்காகச் செய்த தீவிர முயற்சிதான் அது.

‘ஓ எந்தையே, என் இறைவா! நீ என்னையும் அழைப்பதாகத் தோன்றுகிறது. நின் சித்தம் நிறை வேறுவதாக! ஆனால் இது ஏதோ இயற்கைக்கு விரோதமான விந்தையாக இருக்கிறது…என்றாலும், ஒரு மனிதன் இரண்டு தரம் சாகமுடியாது; ஒரே ஒரு தடவைதான் சாகவேண்டும். அதுமட்டும் சீக்கிரம் வந்து சேர்ந்தால்!’ என்று நிகிட்டா பேசிக் கொண் டான்.

அவன் மீண்டும் தன் தலையை உள்ளே இழுத்துக் கொண்டான். கண்களை மூடினான். இப்பொழுது சந்தேகத்துக்கு இடமில்லாமலும், இறுதியாகவும் சாகி றோம் என்ற நம்பிக்கை ஏற்படவே, அவன் தன் நினைவு இழந்து விட்டான்.

அன்று மத்தியான வேளைக்குப் பிறகுதான் தடியானவர்கள் வாஸிலி ஆன்ட்ரீவிச்சையும் நிகிட்டா வையும் பனிக்குள்ளிருந்து தோண்டி வெளியே எடுத் தார்கள். அவ்விருவரும் புதையுண்டு கிடந்த இடம் ரோட்டிலிருந்து எழுபது கஜ தூரத்திற்குள் தான் இருந்தது; கிராமத்துக்கும் அதற்கும் அரைமைல் தூரம்கூட இல்லை.

வண்டியைப் பனி நன்றாக மூடியிருந்தது. எனினும், அதன் சட்டங்களும் அவற்றில் கட்டப் பட்டிருந்த கைக்குட்டையும் பார்வையில் பட்டுக் கொண்டு தானிருந்தன. முக்கார்ட்டி வயிறு வரை பனியில் புதையுண்டு நின்றது. பட்டை வாரும், கம்பளித் துணியும் கீழே விழுவதுபோல் தொங்கின. குதிரையின் உடல் பூராவும் வெள்ளை வெளேர் ‘ என்றிருந்தது. உறைந்துபோன குரல்வளையுடன் அழுத்தப்பட்டிருந்தது அதன் தலை. நுண்பனிக் கம்பிகள் அதன் நாசித்துவாரங்களிலிருந்து தொங்கின. வெண்பனிப் படலம் பரவியிருந்த அதன் கண்களில் துயர நீர் தேங்கி நின்றதாகத் தோன்றியது. அந்த ஒரே இரவில் வெறும் எலும்பும் தோலுமாக மாறிவிடும் அளவுக்கு அது மெலிந்து போயிருந்தது.

வாஸிலி ஆன்ட்ரீவிச் உறைந்து போன பிணம் மாதிரி விறைப்பேறிக் கிடந்தான். நிகிட்டாவின் மேலிருந்து அவனை உருட்டித்தள்ளிய போதும், அவனுடைய கால்கள் அகண்டும் கைகள் நீண்டும் ஒரே நிலையிலேயே இருந்தன. அவனது பெரிய கழுகுக்கண்கள் உறைந்து விட்டன. கத்திரித்து விடப் பெற்ற மீசையின் கீழே திறந்திருந்த வாய் பூராவும் பனி நிறைந்து காணப்பட்டது. ஆனால் நிகிட்டா நன்கு குளிர்ந்து போன போதிலும் இன்னும் உயிருடனிருந்தான்.

அவனுக்குப் பிரக்ஞை ஏற்பட்ட உடனே, தான் அதற்கு முந்தியே இறந்து விட்டதாகவும், தனக்கு நிகழ்வன அனைத்தும் இந்த உலகத்து அனுபவங்கள் அல்ல; மறு உலக நிகழ்ச்சிகளே என்றும் அவன் நிச் சயமாக நம்பினான். அவனை வெளியே தோண்டி எடுத்து, வாஸிலியின் உறைந்த சடலத்தை உருட்டித் தள்ளிய போது குடியானவர்கள் கூச்சலிட்டுக் கொண் டிருந்தனர். முதலில் அது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. மறு உலகத்தில் கூட குடியானவர்கள் பழைய ரீதியிலேயே கத்துகிறார்களே என்றும், அவர் கள் அதே உடலோடு இருக்கிறார்களே என்றும் அவன் அதிசயித்தான். அப்புறம் அவன் இன்னும் இந்த உலகத்திலேயேதான் இருக்கிறான் என்று புரிந்து கொண்டதும் அதற்காகச் சந்தோஷப்பட வில்லை. வருத்தமே அடைந்தான் அவன். அதிலும், தனது இரண்டு கால்களிலுமுள்ள விரல்கள் உறைந்து போய்விட்டன என்பதை உணர்ந்த பிறகு அவன் வருத்தம் அதிகரித்தது.

நிகிட்டா இரண்டு மாத காலம் ஆஸ்பத்திரியில் கிடந்தான். அவனுடைய கால் விரல்களில் மூன்று வெட்டி எறியப்பட்டன; மற்றவை குணமாகி விட்டன. அதனால் அவன் மறுபடியும் வேலை செய்வது சாத்திய மாயிற்று. மேலும் இருபது வருடங்கள் அவன் உயிர் வாழ்ந்தான். முதலில், பண்ணைத் தொழிலாளியாகப் பாடுபட்டான். பிறகு, வயோதிக காலத்தில் காவல் காரன் வேலைபார்த்தான். முடிவில் அவன் ஆசைப் பட்டது போலவே, வீட்டில் விக்கிரகங்களின் அடியில், ஒளி ஏற்றப் பட்ட மெழுகு வர்த்தி ஒன்றைத் தனது கைகளில் பற்றியவாறே உயிர் துறந்தான்.

அவன் சாவதற்கு முன்பு தனது மனைவியிடம் மன்னிப்பு கோரினான். சில்லறை வேலைகள் செய்கிறவனோடு அவள் கொண்டிருந்த தொடர்புக்காக அவளை அவன் மன்னித்து விட்டான். தனது மகனிடமும் பேரக் குழந்தைகளிடமும் விடை பெற்றுக் கொண்டான். தனக்கு உணவளித்து போஷிக்கும் பொறுப்பிலிருந்து தனது மகனையும் மருமகளையும் விடுவிக்கிறோம்; தனக்கு அலுப்புத் தந்த இந்த வாழ்க்கையை விட்டு விட்டு வேறொரு வாழ்விலே – ஆண்டு தோறும், மணி தோறும் தெளிவினும் தெளிவாகி, அவாவினை அதிகமாக்கி நின்ற ஒன்றிலே – பிரவேசிக்கிறோம் எனும் உண்மையான ஆனந்தத்தோடுஅவன் மரணம் அடைந்தான். அங்கே, மரணத் திற்குப் பிறகு விழித்தெழுந்த இடத்தில், அவன் முன்னிலும் நன்னிலையில் வாழ்கின்றானா, மோசமாய் மாறினானா; ஏமாற்றம் கண்டானா , அல்லது தான் எதிர்பார்த்து ஏங்கியதைப் பெற்றுவிட்டானா என்பதை நாமும் ஒரு நாள் அறிவோம்.

– டால்ஸ்டாய் கதைகள், முதற் பதிப்பு: 1956, ஆசிரியர்: லியோ டால்ஸ்டாய், தமிழாக்கம்: வல்லிக்கண்ணன், அலைய்டு பப்ளிஷிங் கம்பெனி, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *