இன்னும் அரைமணிநேரத்தில்…

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தென்றல்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 7, 2014
பார்வையிட்டோர்: 16,669 
 

மாறனுக்குக் கண்ணத்தில் அறை வாங்கியதுபோல் இருந்தது. அவமானமும் ஆத்திரமும் ஜிவுஜிவுயென தலைக்குமேல் ஏறி உச்சந்தலையில் ஆணியடித்துப் பொறிகிளப்பின. ஒன்றும் செய்யமுடியாத வக்கற்ற நிலை அவனை ஏளனம் செய்து உட்கார வைத்துவிட்டது. பக்கத்து நாற்காலியில் எதிர்த்த வரிசையில் என்று எல்லாரும் தன்னைப் பற்றித்தான் குசுகுசுக்கிறார்கள் என்பது காதார விளங்கிற்று. “அப்படி என்னத்தச் செஞ்சிட்டோம் இப்படி மட்டமா நடந்துக்குறாரு தலைவரு?” புருவத்தைச் சுறுக்கி முகத்தில் ஒரு கடுகடுப்பை இழையோடச் செய்தபடி அமர்ந்துகொண்டான் மீண்டும் இருக்கையில். இனியும் அங்கிருக்க அவனுக்குப் பிடிக்கவில்லைதான் என்றாலும் அவையொழுக்கம் கெட்டு நடக்க வேண்டாம் என்ற பண்பு அவனைப் பணியச் செய்தது.

அறைமணி நேரத்துக்கு முன்னால் . . .

ஆண்டுப் பொதுக்கூட்டம் ஐந்தரை மணிக்கு என்று சொல்லி ஆறரை மணிக்குத்தான் தொடங்கிற்று என்றாலும் மாறன் அங்கு வந்து சேர்ந்தது என்னவோ ஏழரை மணிக்குத்தான். அவன் என்ன செய்வான் பாவம்; மழையென்றாலும் பரவாயில்லை என்று சொல்லி புரப்பட காரா வைத்திருக்கிறான்? ஏதோ இப்போதுதான் மோட்டார் சைக்கில் வாங்கியிருக்கிறான்.

மழையில் மழையாடை போட்டுக்கொண்டு வருவதும் போடாமல் வருவதும் ஒன்றுதான் போல இருந்தது. வெறி பிடித்த மழை பெட்டாலிங் ஜெயாவையே பிடித்து உலுக்கியதோடு திருப்தி கொண்டுவிடாமல் மோட்டாரில் செல்லும் அப்பாவிகளையும் கொடுமை படுத்தியது. நிராயுதபாணியாய் இருப்பவர்களோடு சண்டை போடுவது போர் தர்மம் அல்ல என்று மனிதனும் மறந்துவிட்டான், இயற்கையும் மறந்துவிட்டது. அப்படியிருக்க, மாறனுக்கு மட்டும் சிறப்புக் கருணையா கொடுத்து வைத்திருக்கும்? ஆதியந்தம் முழுவதையும் தாண்டி அந்தரங்கத்தையே சீண்டிவிட்டது அந்தக் கோர மழை.

அடைந்தால் மகாதேவி, இல்லையேல் மரணதேவி என்று பி.எஸ்.வீரப்பா அடம்பிடிப்பாரே, அதுமாதிரி அடம்பிடித்து வந்து சேர்ந்துவிட்டான் என்றாலும் அங்கே அதற்கெல்லாம் குறிப்பாக மாறனுக்குச் சபையில் மதிப்பில்லைதான்.

“நீயெல்லாம் எதுக்குய்யா பதவியில இருந்து எங்க கழுத்தயெல்லாம் அறுக்குற? பதிவியில இருக்கோமே, கொஞ்சமாசம் பொறுப்பு பருப்புன்னு ஏதாச்சும் இருக்குதாய்யா ஒனக்கு? அதுவும் இன்னைக்கு ஆண்டுக் கூட்டம் வேற,” இந்த முறை தலைவர் கொஞ்சம் ஓவராகப் போய்விட்டார்.

“மழையென்ன வெயிலென்ன, நான் கண்டிப்பாகக் கூட்டத்துக்குப் போயே ஆகவேண்டும்,” என்று, “போக வேண்டாம் பரவாயில்லை,” எனத் தடுத்த மனைவியிடம் பொறுப்போடு சொல்லிவைத்துவிட்டு வந்த மாறனிடம் பொறுப்பைப் பற்றி விசாரணை செய்துகொண்டிருந்தார் இயக்கத் தலைவர் நான்கு பேருக்கு முன் நிற்கவைத்து.

“இவருக்கெல்லாம் தலைவர் நாக்காலியத் தாரைவார்த்தவன் யார்? மொதல்ல அவன அடிக்கனும்” அதை மனசுக்குள் மட்டும் மிக ரகசியமாக பகிர்ந்துகொண்டானே தவிர யாருக்கும் விளங்கவே இல்லை அந்த மெல்லிய முனுமுனுப்பு.

சமீப காலமாகவே தலைவர் தன்மீது அதிருப்தியுடன்தான் இருக்கிறார் என்று மாறனுக்குச் சற்று அழுத்தமாகவே புரிந்தது. எதை மனதில் வைத்துக்கொண்டுத் தன்மேல் இவ்வளவு கோவத்தைக் காட்டுகிறாரோ? ஒருவேளை…

இரண்டு நாள்களுக்கு முன்னால் . . .

“யேம்பா மாறென், நீ ஜாலான் காசிங் வழியாத்தான வீட்டுக்குப் போவற; எனக்கு ஒரு சின்ன காரியம் செஞ்சிட்டுப் போய்யா,” என்றார். மற்றவர்களிடம் கேட்டு வாங்கும் பழக்கமில்லை அவருக்கு. நேரடியாக எடுத்துக்கொள்வதுதான் அவரது கோட்பாடு. எனக்கு ஆரம்பத்திலிருந்தே தலைவருடைய இந்த குணம் பிடிக்காது. அதோடு சேர்த்து, பௌர்ணமிக்கும் அமாவாசைக்கும் இடைபட்ட காலத்தில் தோன்றும் அரைநிலாவை விண்ணிலிருந்து திருடி வயிற்றுக்குள் பதுக்கிவைத்தது போன்று முட்டையாய்த் தொப்பையும் “தங்கப்பல்லு போட்டிருக்கேன்” என்பதைக் காட்டும் பெப்பரப்பே இளிப்பும் மாறனுக்கு அறவே பிடிக்காது.

“இல்ல தலைவரே” என்று சொல்ல நினைத்தால் மட்டும் போதாது. அதைச் சட்டென சொல்லும் சானக்கியமும் சாகசமும் கொஞ்சம் பழகிவைத்திருக்க வேண்டும் என்ற படிப்பினைதான் அன்று அவனுக்குக் கிடைத்தச் சம்பளம். உபரியாகக் கிடைத்தது தலைவரின் சீற்றம்.

“ஸ்கூல் இந்நேரம் முடிஞ்சிருக்கும். நீ என்னா செய்யிற; எம்பையன ஸ்கூல்லயிருந்து ஏத்திக்கிட்டு வந்து இங்க வுட்ரு. நான் கொஞ்சம் வேலயா இருக்கேன்,” அவ்வளவுதான் மாறனின் சொல்லுக்கு வாய்ப்பு கொடுத்தப்பாட்டைக் காணோம்;

அவர் ஏதோ தீவிரமாய் நண்பர்கள் சிலருடன் சம்பாசித்துக் கொண்டிருந்தார். பல சமயங்களில் ஊர் கதை, உறவுக் கதை, வேலைக் கதை, வெட்டிக்கதை என்று வட்டம் வளர்ந்து பெரிதாகிக் கொண்டிருந்தாலும் சில சமயங்களில் இயக்கத்தைப் பத்தின பேச்சும் அடிபட்டதுதான். அதை வைத்தாவது மாறனுக்குத் தெரிந்திருக்காதா இயக்கம் சம்மந்தமான வேலையில் மும்முறமாக இருக்கிறேனென்று? இவ்வாறு தலைவர் அனுமானித்திருக்கலாம்; வாஸ்தவம்தாம்.

ஆனால், தலைவர் பிள்ளையை ஏற்றப் போய்விட்டால் தன் பிள்ளை பாலர்பள்ளியை முடித்துவிட்டு அம்போவென்று நிற்குமே, அதை யார் கவனிப்பார். இவ்வாறு மாறன் நினைத்துக் கொண்டிருந்தான்.

சரி, மரியாதையாகச் சொல்லிவிட்டுத்தான் போவோம் என்று கொஞ்ச நேரம் அங்கேயே நின்றான் அவர்களின் பேச்சு வார்த்தைகளுக்கு இடையே ஏதாவது இடைவெளி வருமா என்று. இடைவெளி வந்தபாட்டைக் காணோம்!

தலைவர் சீற ஆரம்பித்துவிட்டார். “அதில்ல தலைவரே, மகள் கிண்டர்கார்டன்…” “யோவ்! என்னாய்யா சொதப்பிக்கிட்டு இருக்க? போய்யா. போய் சொன்ன வேலையப் பாரு. புள்ள அங்க வெய்ட் பண்ணிக்கிட்டுருப்பான்,” மறுபடியும் தலைவர்தான் ஜெயித்தார்.

மரியாதையாகச் சொல்லிவிட்டுப் போகலாம் என்று நினைத்திருந்த மாறனின் தன்மானத்தை கிள்ளி கன்ற வைத்துவிட்டது அவரது பேச்சு. “இனி மரியாதைக்கு இடமில்லை. எக்கேடாவது போய்த் தொலையட்டும் விடு” என்று அசுர மனசு அவசர ஆலோசனை காட்ட மோட்டாரை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான் பாலர்பள்ளிக்கு!

ஓருவேளை, பெத்த அப்பனுக்கு இல்லாத அக்கரை எனக்கு மட்டும் என்ன வந்துச்சு என்று அவர் பையனை அப்படியே விட்டுவிட்டதை மனதில் வைத்துக்கொண்டுதான் கோவத்தைக் காட்டுகிறாரோ? அல்லது…

ஐந்து நாட்களுக்கு முன்னால் . . .

இந்த இயக்கத்துத் துணைச் செயலாளர் என்ற பொறுப்பில் இருப்பதால் ஆண்டறிக்கை தயாரிப்பதில் மாறனுக்கும் கொஞ்சம் வேலை வைத்திருந்தார் செயலாளர் சுப்புரத்தினம். ஆண்டறிக்கை செய்வது என்பது கச்சான் சாப்பிடுகிற வேலை இல்லை. அதற்கான முறையான ஆவணங்களைச் சேகரித்து, பின்னர் அவற்றைப் பிரித்து, வரிசைபடுத்தி, என்று பல வேலைகள் உண்டு. இதையெல்லாம் இருக்கிற சொந்த வேலைகளுக்கு நடுவே செய்தாக வேண்டிய கட்டாயமும் நிர்பந்தமும் உந்தித் தள்ளும்போது கொஞ்சம் கூடுதல் கஷ்டத்தைப் பட்டுத்தான் பார்க்கவேண்டும்.

தலைவருடைய தகவலின்படியும் ஆலோசனையின் பேரிலும் கட்டளையின் கீழும்தான் அறிக்கைப் பணி இங்கு நடைபெரும் என்பதால் அவரைச் சந்தித்துவர அவரது வீட்டுக்குச் சென்றிருந்தான் மாறன். ஆனால் உள்ளே நடந்தது இயக்கத்தின் ஆண்டறிக்கை பற்றிய கலந்துரையாடல் அல்ல; வியாபார கருத்தரங்கும் பட்டறையும் மட்டுமே. ‘எம்வே’ அன்று ஒரு ‘எம்.எல்.எம்’ வியாபாரத்தைப் பற்றி மாங்கு மாங்கென்று எடுத்துரைத்துக் கற்பித்து அதில் மாறன் சேர்ந்தால்தான் அன்ன ஆகாராமே என்று அவனைப் பிடுங்கிக் கொண்டிருந்தார்.

மாறனோ இப்போதுதான் மோட்டார்பைக் வாங்கும் அளவுக்கு முன்னேறியிருக்கிறான் பொருளாதார ரீதியில். நூற்றுக்கணக்கில் முன்பணம் கேக்கிற இந்த வியாபாரத்துக்கு நுழைவது என்பது என்னவோ அவனுக்குக் கஷ்டமான காரியம்தான். அதிலும் ஆளைச் சேர்க்கிற வியாபாரம் இது. எப்படி இன்ஸூரன்ஸ்காரர்களைக் கண்டால் பத்தடி தூரத்திலேயே பதுங்கி ஒளிந்துகொள்வோமோ அதுமாதிரிதான் இந்தவகை ‘எம்.எல்.எம்’ வியாபாரமும் மாறனைப் பொருத்தமட்டில்.

ஏற்கனவே இந்த மாதிரி வியாபாரத்தில் சூடுபட்ட அனுபவம் மாறனுக்கு சிவப்பு விளக்கு காட்டி எச்சரிக்கை செய்ததைக் கருத்தில் கொண்டு “யோசித்துச் சொல்கிறேன்” என்று போனவன்தான்.

ஒருவேளை அந்த வியாபாரத்தில் சேராமல் போனதை மனதில் வைத்துக்கொண்டுதான் கோவத்தைக் காட்டுகிறாரோ? அல்லது…

பதிமூன்று நாட்களுக்கு முன்னால்…

இயக்கத்தின் முக்கிய நடவடிக்கைகளுல் ஒன்று தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கான இலவச பிரத்தியேக வகுப்பு. நல்ல, பாராட்டத்தக்க, ஊக்குவிக்கத் தகுந்த நடவடிக்கைதான். இந்த இலவச வகுப்புத் திட்டத்தைத் துணைத் தலைவர் குருசாமி முன்மொழிய “மாறனாகிய நான் வழிமொழிகிறேன்” என்று வாயாரச் சொன்னவன்தான். அதற்கான கடித வேலைகளையும் இதர முக்கிய வேலைகளையும் கவனித்தவர்களில் அவனும் ஒருவன்தான். “அப்படியிருந்த என்னை எப்படி சொல்லலாம் சுயநலவாதி என்று?”

“யப்பு, நீதான் ஸ்கூல்ல வாத்தியாரா இருக்கெல்ல. இந்த சயின்சும் கணக்கும் இங்கிலீசும்…” என்று இழுக்கும்போதே மாறனின் அடிவயிறு நாதம் எழுப்பிவிட்டது. “இதையெல்லாம் நீ சொல்லிக் கொடுத்துப்புடு. மூனு பாடத்துக்கு உண்டான ஆசிரியர் செலவ மிச்சம் பண்ணலாம்ல,” என்றார் அந்தக் கூட்டத்துக்கு நடுவே.

“என்னைக் கண்டால் இந்தப் ‘பெப்பெரப்பே’ வாயனுக்கு எளக்காரம்மாகத் தோன்றுகிறதா என்ன,” என்று மணியடித்தது மண்டைக்கு! “வகுப்பு வைத்திருக்கிற நாள் வெள்ளிக்கிழமை சாயந்திரத்தில். இயக்கத்தில் உள்ள எல்லாருக்கும் தெரியும் தனக்கு வெள்ளிக்கிழமை மூன்று மணியிலிருந்து மலாயாப் பல்கலைக்கழகத்தில் முதுகலை வகுப்பு உள்ளது என்று. கட்டாயமாகத் தன்னால் அந்த வகுப்புகளை நடத்தித்தர முடியாது என்று தெரிந்தும் வேண்டுமென்றே தன்னைச் சீண்டிப் பார்க்கிறாரா அல்லது உண்மையிலேயே அவருக்கு இது நினைவில் இல்லையா?” மாறன் உஷ்ணமானான்.

“என்னால் அந்த வகுப்பை நடத்தமுடியாது தலைவரே…”

“நான் நெனச்சேன் உங்கிட்டயிருந்து இந்த பதில்தான் வரும்னு. பெருசா வழிமொழிஞ்சிட்டா மட்டும் பத்தாது. வேராளு பாத்துக்குவாங்கன்னு அப்படியே கண்டும் காணாம இருந்துக்குறது சரியில்ல மாறென்! எல்லாத்துலயும் சுயநலத்தக் காட்டாதீங்க”

“இல்ல தலைவரே, எனக்கு மாஸ்டர் க்லாஸ் இருக்கு வெள்ளிக்கெழம மத்தியானம்,” மாறன் குரல் இன்னமும் தாக்குப்பிடித்தது.

“எனக்குக்கூடத்தான் அது ஜிம்முக்குப் போகுற நேரம். மாசத்துக்குக் கட்டின காசு போனாலும் பரவாயில்லன்னு நான் தியாகம் பண்ணிட்டு வந்து சேரல?”

ஜிம்முக்கும் முதுகலை வகுப்புக்கும் பேதம் காணத் தெரியாத இந்தப் ‘பழசுக்கு’ என்ன சொன்னாலும் விளங்காது என்ற வெட்ட வெளிச்ச உண்மையை உணர்ந்து அதற்குமேல் ஏதும் தர்க்கம் செய்துகொள்ளவில்லை.

அதையெல்லாம் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்பதை மனதில் வைத்துக்கொண்டுதான் கோவத்தைக் காட்டுகிறாரோ? அல்லது…

இந்த நிமிடம்…

அல்லது அல்லது என்று அசைபோட எத்தனையோ சம்பவங்கள் உண்டு! இனியும் இதற்கு இடங்கொடுக்கும் அளவு பெருந்தன்மை கிடையாது என்பதை மாறன் மரியாதையாக ஒப்புக்கொண்டிருந்தான்.

மழையில் முற்றுமுழுதாக நனைந்த உடம்பை குளிர் அறையில் வாட்டியெடுத்துக் கட்டாயப்படுத்தி இருத்தி வைத்திருந்தான். இன்னும் கிட்டத்தட்ட அறைமணி நேரம்தான் இருக்கிறது கூட்டம் நிறைவுற. “போங்கடா நீங்களும் உங்க எட்டாம் உலக அதிசய இயக்கமும்” என்று தூக்கி வீசியெரிந்துவிட்டு அந்த ஆண்டுப் பொதுக்கூட்டத்தோடு தன் சேவையை முடித்துக்கொள்ள!

தென்றல் – மலேசிய இதழ் ஜனவரி 2010இல் பிரசுரமானது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *