இதய அஞ்சலி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 19, 2019
பார்வையிட்டோர்: 5,383 
 
 

மாலை மணி 7.00.

நான் அறைக்கதவைச் சாத்தி மும்முரமாக எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில் என் மனைவி வைதேகி மெல்ல கதவைத் திறந்து……” கோயிலுக்குப் போகனும்ங்க…..” தயக்கமாய்ச் சொன்னாள்.

எனக்குக் கோயில் பிடிக்காது. சாமி கும்பிடுபவனில்லை. அதனால் என் மனைவி உள்ளூரில் உள்ள எல்லா கோயிலுக்கும் என் தயவில்லாமலேயே நடந்து சென்று பூசை புனஸ்காரங்கள் முடித்து தரிசித்து வருவாள்.

இன்றைக்கு இவ்வளவு தாமதமானதற்குக் காரணம் வீட்டில் திடீர் விருந்தாளி. என் நண்பன் சொல்லாமல் கொள்ளாமல் திடுதிப்பென்று குடும்பத்தோடு மதியம் வந்து குதிக்க….அவர்கள் மதிய சாப்பாடு சாப்பிட்டுவிட்டு…மாலை 5.00 மணிக்கு மேல் காபியும் டீயும் குடித்துவிட்டுத்தான் புறப்பட்டார்கள்.

இதனால் என் மனைவி அவர்கள் புறப்பட்டு சென்ற அடுத்த வினாடியே சமயோசிதமாக….

” இதுக்கு மேல் உங்களுக்கு முக்கிய வேலை இருக்கா ? ” கேட்டாள்.

” ஏன்…?? ” ஏறிட்டேன்.

” இப்போ உபயோகப்படுத்தின பாத்திரம் பண்டங்கள் மட்டுமில்லாமல் இன்னைக்குச் செவ்வாய்க்கிழமை சாமி அறையில் விளக்கும் ஏத்தனும். முடிக்க…ஏழு மணியாகும். இன்னைக்கு நான் வழக்கப்படி நம்ம ஊர் மாரியம்மன் கோயிலுக்குப் போகனும். கொண்டு விட்டு அழைத்து வரனும். முடியுமா ? ” கேட்டாள்.

நான் முடியாது என்று மறுக்க முடியாது. காரணம்….இரண்டு மகன்களைப் பெற்று அவர்களை வளர்த்து, ஆளாக்கிப் படிக்க வைத்து, கைநிறைய சம்பாதிக்கவும் வைத்து, திருமணம் முடித்து… ஒருவன் சென்னை. இன்னொருவன் பெங்களூரு என்று இருக்க….அரசாங்க வேலையிலிருந்து ஓய்வு பெற்ற நாங்கள் இருவரும் தற்போது சொந்த ஊர், சொந்த வீட்டில் தனிக்குடித்தனம். இதனால் ஒருத்தருக்கொருத்தர் துணை.

எனக்குச் சாமி பிடிக்கவில்லை என்பதற்காக….நான் என் குடும்பம் மற்றும் சுற்றம் நட்பு எவரையும்….கும்பிடாதே, கோயிலுக்குப் போகாதே என்று வற்புருத்தியதில்லை, தடுத்ததில்லை. அது அவரவர்கள் சொந்த விருப்பு வெறுப்பு என்பது என் எண்ணம். இதன் விளைவு…என் வீட்டில் சாமி அறை உண்டு. என் மனைவி மகன்கள் சாதாரண மனிதர்களைப் போல் எல்லா கோயில் குளங்களுக்கும் சென்று வருவார்கள்.

மகன்கள் வீட்டில் இருந்தவரை… வாசுகி என்னை எதிர்பார்க்காமல் அவர்கள் துணையோடு உள்ளூர் கோயில் குளங்களுக்குச் சென்று வருவாள். அவர்கள் இல்லையென்றான பிறகு தனி ஆளாய் சென்று சமாளிப்பவள்…. இப்படிப்பட்ட நேரங்களில் என் உதவியை நாடுவாள். நானெப்படி மறுக்க முடியும் ? அதனால் நானும் தயக்கமில்லாமல்….அவளைக் கோயில் வாசல்வரை விட்டு அவள் கோயில் உள் சென்று அனைத்து வேலைகளையும் முடித்து வரும்வரை இருந்து அழைத்து வருவேன். இன்றைக்கு அப்படிப்பட்ட சூழல்.

” சரி போகலாம் !..” தலையாட்டி….பேனா, தாட்களை மேசை மேல் வைத்து விட்டு…நாற்காலியில் வைத்து எழுதிய பேடையும் மேசை ஓரம் சாய்த்து விட்டு சட்டை அணிந்து இருசக்கர வாகனச் சாவியை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்தேன்.

தெரு மின்கம்பங்களில் விளக்குகள் எரிந்தன.

வாசுகி பூக்கூடை சகிதம் சுமந்து வெளியே வந்து வீட்டைப் பூட்டி சாவியையும் எடுத்துக் கொண்டு தயாராய் இருந்த என் இருசக்கர வாகனத்தில் ஏறினாள்.

வாகனம் அடுத்த சில நிமிடங்களில்….அடுத்தத் தெருவிலிருக்கும் கோயில் வாசலில் நின்றது. பத்தடி தள்ளி வந்து கலையரங்கம் ஓரம் வண்டியை ஒரு பக்கமாக சாய்த்து நிறுத்தி அதன் மீது சாய்ந்து நின்றேன். என் மனைவி வரும்வரை எனக்குப் பொழுது போக வேண்டும் !

எங்கள் ஊர் பத்துப் பதினைந்து வலுவான கடைகள் அமைந்த குட்டி நகரம் என்று சொல்ல முடியாத அளவிற்கு பெரிய ஊர்.

கிழக்குத் தெரு, மேற்குத் தெரு, வடக்குத் தெரு, தெற்குத் தெரு என்று திசைக்கு நான்கு பகுதிகளாகப் பிரிந்து சுமார் பத்தாயிரம் மக்கள் தொகையைக் கொண்ட பெரிய கிராமம். இங்கு குட்டிக் குட்டிக் கோயில்களாக நிறைய தெய்வங்கள் தெருவிற்கொன்றாய் இருந்தாலும்….எங்கள் தெருவிற்குப் பக்கத்திலிருக்கும் இந்த மகாமாரியம்மன் கோயில் ரொம்ப பிரசித்தம், பழமையானது, பூர்வீகமானது.

ஐம்பதாண்டுகளுக்கு முன்…. இந்த கோயில் சுமார் பத்து ஏக்கர் பரப்பளவின் நடுவில் ஐம்பது அறுபது இலுப்பைத் தோப்பு மரங்களுக்கிடையில் ஒரு கோபுரமும், சிறிய தாழ்வாரமும் கொண்ட சிறிய கோயில். கால மாற்றம்…. மக்கள் தொகை பெருகப் பெருக…அரசியல்வாதிகள் தங்கள் ஓட்டு வசதிக்காக…கோயில் இடத்தை இலவச மனைகளாக ஏழை மக்களுக்குக் கொடுக்க….. கோயிலைச் சுற்றி முப்பது அடி சுற்று வட்டாரத்திற்கு மேல்… மரங்களை அழித்து எல்லாமே கான்கிரீட்மற்றும் குடிசை வீடுகள்.

அதேசமயம்…கோயிலும் மக்கள் வசதிக்காக நல்ல பிரமாண்டமாய் வளர்ந்து….திருமணங்கள் நடக்கும் அளவிற்கு மண்டபம் கட்டி விரிவாகி அதற்கு வேண்டிய எல்லா வசதிகளுடனும் இருக்கிறது. கோயிலின் வாசல் கிழக்குப் பக்கம் என்பதால்…. எதிரே பெரிய குளம். சுற்றிலும் படிக்கட்டுகள். கரையின் நாற்புறங்களிலும் பிரமாண்டமாய் ஆலமரங்கள். அதன் கிளைகள் பட்சிகளின் கூடாரங்கள். அதன் விளைவால் அதில் எப்போதும் அவைகளின் கூப்பாடுகள், அழைப்புகள், ரீங்காரங்கள். அதன் எச்சங்களின் வீச்சம், வாசம். சமயங்களில் அது மனிதன் சுவாசிக்க முடியாது அளவிற்குக் கூட வீசும்.

கோயிலுக்குத் தென்புறம் கருமாதி மண்டபம். மேற்புறம் கோயில் மதில் சுவற்றை ஒட்டி மண்;டபத்தின் கழுவுநீர் தேக்கத்தொட்டி. அதைத் தாண்டி குடியிருப்புகள்வரை வெற்றிடம். அப்படியே சுற்றிவந்தால் வடபுறம் வந்தால்…கோயிலை ஒட்டி பெரிய வேப்பமரம். அதனடியில் சிறு புற்று. புற்று ஓரத்தில் நாக சிற்பம். அதற்கு பூசை புணஸ்கர வழிபாடுகள். விளக்கு எரிய சிறு மண்டபம். அதன் எதிரே மேற்கு பார்த்தப்படி கற்சுவர் கான்கிரீட்டினால் ஆன கலையரங்கம். இந்த கலையரங்கத்தில்hன் தீமிதி திருவிழாக் காலங்களில்….அரிச்சந்திரா, வள்ளித் திருணம், ராமர் பட்டாபிசேகம் போன்ற….நாட்டுப்புற கூத்துகள் நடக்கும். சமயத்தில் இளைஞர் மன்றங்களின் கலை நிகழ்ச்சிகளும் நடக்கும்.

கலையரங்கம் எதிரே உள்ள பிரமாண்ட வெற்று வெளியில்…. தீக்குழி ஏற்பாட்டிற்கான இடம். கோயில்…. மக்கள் கூடும், புழங்கும் இடமென்பதால்…. திறந்தவெளிகள் நாற்புறங்களிலும் உயரத்தில் அதிக வெளிச்ச வசதியில் மின் விளக்குகள். இரவு எப்பொழுதும் கோயிலும்,அதன் சுற்றுப்புற இடங்களும்..மின் விளக்கொளியில் பளீர், பளிச்சென்றிருக்கும். இதன் விளைவால்…..கோயில் திறந்த வெளியில் எங்கும் அருகிலுள்ள குடியிருப்;புகளில் கட்டப்படாத ஆடு மாடுகளெல்லாம் பகலில் எங்காவது மேய்ந்து விட்டு இரவில் இங்கு வந்து ஓய்வெடுத்து சவகாசமாக ஆசைபோட்டு சாணி போட்டு, மூத்திரங்கள் பெய்யும். மண் தரையில் ஆடுகளைவிட பசுமாடு, கன்றுகள்தான் அதிகம் சுவாதீனம், சுதந்திரமாகப் படுத்திருக்கும்.
கோயிலுக்கு எதிரே….முப்பது அடி தூரத்தில் குளம். இதன் நான்குபுறமும் படித்துறைகள். கரைகளில் பிரமாண்டமான ஆலமரங்கள், வேப்பமரங்கள். எப்படிப்பட்ட கோடையிலும் சூரியக் கதிர்கள் தரையில் படாத காரணத்தால்….நிழல் குளத்தின் தண்ணீர் காற்றால் இடம் சிலுசிலுவென்று, குளுமையாய் இருக்கும்.

கோயிலுக்கும் குளத்திற்கும் இடையேயுள்ள முப்பது அடி இடைவெளிதான் பக்தர்கள் வாகன வசதிகள் சென்று வர நூறு மீட்டர் நீளத்திற்கான கான்கிரீட் தளம். இங்குதான் ஆடுகள் அடைக்கலம். தாய்ஆடு, குட்டி, குறால், கிடாக்களென்று இந்த இடம் இரவில் எப்போதும் நிறைந்திருக்கும். பக்தர்களின் போக்குவரத்து, வருகையைவிட இவைகளின் வருகை, படுக்கை நடமாட்டங்கள்தான் அதிகம். இவைகளோடு ஒன்றிரண்டு நாய்கள் தலைகள் தெரியும். மற்றப்படி அவைகள் அதிகமில்லை. தொந்தரவுமில்லை.

திருவிழா காலங்களில்தான் இவைகள் எல்லாமே துரத்;தப்பட்டு இடங்கள் தூய்மையாக இருக்கும். மற்ற நேரம், காலங்களிலெல்லாம் இவர்கள் ஆளுமைக்குப் பிறகுதான் மக்களின் ஆளுமை.

நான் கான்கிரீட் தளத்தில் இருசக்கர வாகனத்தை ஏற்றி…பத்தடி தூரத்தில் உள்ள கலையரங்க சுவர் ஓரம் வண்டியை நிறுத்தினேன். வாசுகி இறங்கி பத்தடி தூரமுள்ள கோயில் வாயிலுக்குச் சென்றாள், நுழைந்தாள்.

அவள் வரும்வரை நான் காத்திருக்க வேண்டுமென்பதால் நான் வண்டியைச் சாய்த்து நிறுத்திவிட்டு அதில் சாய்ந்து நின்றேன்.

ஆலமரங்களில் பட்சிகளின் சத்தம், சலசலப்பு, சந்தடிகள் இன்னும் ஓயவில்லை. பத்து மணிக்கு மேல்தான் அவைகள் அடங்கி அமைதியாகும். அரை மணி நேரத்திற்கு முன்பு மழை லேசாக பொய்த் தூற்றல் போட்டு விட்டதன் விளைவால் பட்சிகளின் எச்ச வீச்சம் கொஞ்சம் அதிகமாக இருந்தது.

கான்கிரீட் தளத்தில் ஒரு பெட்டை ஆட்டை இரண்டு கிடா ஆடுகள் துரத்திக் கொண்டே வந்தது. அவைகள் என்னையும் என் வண்டியையும் இரண்டு முறை சுற்றின. பின்…பெட்டை தப்பிப்பிதற்காக தூர ஓடியது. கிடாக்களும் அதை விடுவதாய் இல்லை. தெற்குப்புறம் ஓடி…கோயில் மதிற்சுவர் மறைப்பில் மறைந்தது.

வளர்ந்த ஆடுகளைவிட ஒரு மாதத்திலிருந்து ஆறுமாத கால இடைவெளிகளில் உள்ள குட்டிகளின் அழகு உடல் மினுமினுப்பாய் ரொம்ப அற்புதம். வெள்ளை, கருப்பு, செவலை…. என்று நிறங்களில் அவைகள் கொள்ளை அழகுகள்.

தாய்களோடு படுத்துக்கொண்டும், அவைகளின் மேல் ஏறி விளையாடிக் கொண்டும் , உலாவிக்கொண்டும், அசைபோட்டுக்கொண்டும், பசித்தால் பால் குடித்துக் கொண்டும் இருக்கும் அழகுகளை மின் விளக்கொளியில் நான் ரசித்துக்கொண்டிருந்தேன்.

அப்போதுதான்…ஒரு பிச்சைக்காரன்… வயது ஐம்பதைத் தாண்டியத் தோற்றம். முகத்தில் வெகு நாட்களாக மழிக்கப்படாத தாடி மீசை. எண்ணைகண்டு பல நாட்களாக சீப்பேக் காணாதப் பரட்டைத்தலை. அழுக்கு வேட்டி, சட்டை. முதுகில் தொங்கும் ஒரு வெள்ளை அழுக்குக் கோணி சகிதமாய் கோயில் முகப்புப் பக்கமிருந்து நடந்து வந்தான். அவனைச் சுற்றி…மூன்று நாய்கள்…ஓவ்வ்…ஓவ்வ்…ஊம் ம்ஆவ்…. என்று கூவி முணகி.. வாலை ஆட்டி, உடலை அசைத்துக்கொண்டு அவனைத் தொடர்ந்து வந்தது. எல்லாம் அவன் வளர்ப்புப் போல.

அவன் என்னைக் கடந்து… கலையரங்கம் சுவர் ஓரம் கோணியை வைத்து உட்கார்ந்தான். நாய்களும் விடாமல் அதே கூச்சல் கூப்பாடு குலவல், சமயத்தில் குறைப்பு என்று அவனைச் சுற்றி நின்றன.

பிச்சைக்காரம் அவைகளைப் பார்த்து, ” நீங்க என்னத்தக் கத்தி கொஞ்சி குலாவினாலும் இன்னைக்கு உங்களுக்குச் சோறு கிடையாது. நானே சோறு கிடைக்காம பசியோடு வர்றேன். உங்கள் சோத்துக்கு நான் எங்கே போவேன்…? ” என்றான். பேச்சின் செய்கை, தொணியில் ஆள் கொஞ்சம் போதையிலிருக்கிறான் புரிந்தது.

நாய்கள் அவன் குரலை சட்டை செய்யவில்லை. அவைகள் அவனை இன்னும் நெருங்கி தோளில் உரசி, முகத்தை நக்கி…உவ்வ் ஆவ்.. என்றன.

” என்ன செய்ஞ்சாலும் இன்னைக்கு நீங்க பட்னி பட்னிதான். நான் போதையிலிருக்கேன். படுத்தாத் தூங்கிடுவேன். இந்த மூணு பயலும் ராத்திரிக்கு என் பக்கத்துல வந்து படுக்கக்கூடாது. படுத்தா முழிச்சி அடி. ”கையைக் காட்டி எச்சரித்தான்.

” ஆவ்;வ்வ்….ஊவ்வ்;;;;…ழ்ழ்;;….” அவை பதில்கள்.

” பசிச்சா… கோயில் வாசல்ல போய் நில்லுங்க. சர்க்கரை சோறு புளி சோறு ஏதாவது கிடைக்கும். தின்னுட்டுத் தூங்குங்க திரிங்க. மாறா பசியில வந்து என்னை ராத்ததிரியில பிராண்டி தொல்லை பண்ணுணீங்க…கொன்னுபுடுவேன். ஆமா…”

இது அவன் மாமூல் கூப்பாடு கொஞ்சலோ என்னவோ… நாய்கள் இந்த எச்சரிப்பு ஏசல்களுக்கெல்லாம் அசங்கவே இல்லை.

அவன் ஒரு வளர்ந்த நாயின் கழுத்துப் பகுதியைப் பற்றி கொத்தாக இழுத்தான்.

அது வலியில் ஆ…ஊவென்று கத்தினாலும் திமிறவில்லை. அவன் இழுத்த இழுப்பில் மண்ணில் விழுந்து வந்தது.

” படவா! உன்னை இத்தினியூண்டு குட்டியிலேர்ந்து வளர்க்கிறேன். நீயும் என் சொல் பேச்சு கேட்கலைன்னா எப்படி ? ” என்று கூறி பிடியை விடாமல் இடது கையால் அடித்தான். அதற்கு வலிக்கவில்லை. மாறாக….அவன் அடிக்கும் கையைக் கவ்வியது.

” கடி எவ்வளவு வேணுமின்னாலும் கடி. நீ கடிச்சா எனக்கு வலிக்காது. நான் அடிச்சாலும் உனக்கு வலிக்காது.” என்று உளறி….கையை அதன் திறந்திருக்கும் வாயில் குறுக்காக வைத்தான்.
மற்ற இரண்டுகளும் இவன் செய்கையில் பயந்து ஒதுங்காமல்…ஒன்று அவன் இன்னொரு கையைக் கவ்வியது. இன்னொன்று அவன் அடுத்தத் தோள் பட்டையில் உரசியது.

” உங்களுக்கும் ரெண்டு போடனுமா…” என்ற அவன் தன் எதிரிலிருந் நாயை விட்டுவிட்டு அவைகள் இரண்டையும் தன் இருகைகளால் வளைத்து இழுத்து….ஆளுக்கு இரண்டு போட்டான். அவைகளும் இதை சட்டை செய்யாமல்..அவன் கைகால்களைக் கவ்வி உறுமி விளையாடியதேத் தவிர…. விலகவில்லை.

அவன் அவைகளுடன் பேசிக்கொண்டும் விளையாடிக் கொண்டும்……அவைகளும் இவன் அடி உதைகளையெல்லாம் தாங்கி விலகாமல் விளையாடிக் கொண்டிருப்பதைப்..பார்த்த…எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

என்னைக் கவனித்த அவன்….

” என்ன சார் பார்க்குறீங்க.? இதுங்க எல்லாம் என் வளர்ப்புங்க. இந்த பெரிசு…நான் ஒரு தெருவுல பிச்சை எடுக்கும்போது…குட்டியாய் வந்து என் காலைச் சுத்துச்சு. நான் அதைச் சட்டை செய்யாமலே நாலு வீடு ஏறி பிச்சை எடுத்தேன். இதுவும் என்னைவிடாமல் என்கூடயே சுத்தி வந்திச்சு. பிச்சை எடுத்து இங்கே வந்து உட்கர்ந்தா….இங்கேயும் வந்து நின்னுச்சி. சரிதான்! நம்பளைப் போல இதுவும் ஒரு அனாதை. போக்கிடமில்லே. நம்மைப் பிடிச்சுக்கிச்சுப் புரிஞ்சு போச்சு. அப்பால என்ன..? எனக்குக் கிடைச்சதுல அதுக்கும் கொஞ்சம் வைச்சேன்.”

” அன்னையிலேர்ந்து இது என் கூடவே தங்கல். இந்த இடத்தை விட்டு நகராது. நான் பிச்சை எடுக்கப் போனா…பின்னால் வராது. நான் எடுத்து வந்து தின்னுன்னு போட்டால் தின்னும். நான் திங்கிறது என்ன என் அப்பன் ஆத்தா வீட்டு சொத்தா சோறா… குறைஞ்சு போக.? பிச்சை! இந்த பிச்சையிலும் நான்…தின்னது போக மீதமிருக்கிறதை வீணாக்காமல் தின்றதுக்கும் ஒரு ஜுவன் வேணுமே நெனைச்சி.. தினம் மீந்ததைப் போட்டேன். அப்புறம்… இதுக்காகவே பிச்சை எடுக்க வேண்டியதாய்ப் போச்சு. என்னால முடியலைன்னாலும் இது பட்டினி கிடக்கலாமா ? அப்புறம்…. இதோட….இந்த ரெண்டு படவா விடலைப் பசங்களும் எங்கிருந்தோ வந்து இங்கே ஒட்டிக்கிட்டானுங்க. வேலை அதிகமாப் போயிடுச்சு.”

” வயித்து சோத்துக்குப் பிச்சை எடுப்பேன் சார். கைக்காசு பொழைப்புக்கு…ரோட்ல கிடக்குற பழசெல்லாம் பொறுக்கி இந்த கோணியில சேர்த்து கடையில கொடுத்து காசாக்குவேன். அந்த காசுல இந்த ஜீவன்களுக்கு பொரை, ரொட்டி, வருக்கி எல்லாம் வாங்கி வந்து கொடுப்பேன் சார். அதுக்காகவே காத்திருக்கும். என் உடம்புக்கு ரொம்ப முடியலைன்னா….கோயில் வாசல்ல உட்கார்ந்து, அம்மா! தாயே! என்பேன். அஞ்சோ பத்தோ கிடைக்கும். வயித்துக்கும் சாமிக்குப் படைக்கிற சாதத்துல ஏதாவது கிடைக்கும். ”

” நமக்கு புள்ளையா குட்டியா. கிடைச்சதை இறுக்கி சேர்த்து வைக்க.? ஒண்டிக்கட்டை! வயித்துக்குச் சோத்தைத் தவிர உழைக்கிற காசுக்கு செலவு வேணாமா. அதான்….இதுங்களை வளர்க்கிறேன். இந்த அனாதை… என் ஆசாபாசம் நேசங்களை யார்கிட்டே சார் காட்ட முடியும். இதுங்க வடிகாலாய் இருக்கு. பாருங்க…. என்ன கொஞ்சல், குலாவல். என்னை விட்டு ஒரு நிமிசம் நகராதுங்க. உசுருக்கு உசுருதானேய்யா துணை. அது நாயாய் இருந்தாலென்ன மனுச சென்மமா இருந்தாலென்ன.?! ”

” ஆனா… மனுசன்களை விட நாய் நன்றி உள்ளது சார். என்னடா பலபேர்கிட்ட பிச்சை எடுக்கிற பிச்சைக்காரன் இப்படி சொல்றானேன்னு நெனைக்காதீங்க. மனுச சென்மத்திலேயே மனுசன் குறையாய் வளர்றதுனாலதான் சார் குறை சொல்றேன். இதோ இந்த நாய்களைக் குறை சொல்ல முடியுமா ? ஒரு வேளை சோத்தைப் போட்டால் வீட்டைவிட்டு நகராது. அடிச்சாலும் துரத்தினாலும் அந்த சோத்துக்காகக் காவல் காக்கும், வாலாட்டும். மனுசன் அப்படீங்களா..? தின்னும்போதே…. போட்டவனைக் குறை சொல்வான். அந்தண்டைப் போனா குழி பறிப்பான். உலக நடப்பு சார்.! ”

” என் பிச்சைச் சோத்தைத் தின்னு வளரும் இந்த நாய்களுக்கு என்னைவிட்டா வேறு போக்கிடங்கள் இல்லியா. எத்தினியோ இருக்கு.! அவ்வளவு ஏன்…. நாலு வீட்டு வாசல்ல நின்னாலே என்னைப் போல வயித்தை வளர்த்து வரலாம். செய்யாதுங்க. இதுங்களுக்கு நான் போடனும், செய்யனும். இதுங்களுக்கு எதனால என் மேல இம்பூட்டு பாசம்ன்னு தெரியலை. இதுங்களுக்கு…. எனக்குப் பின்னால எதை வைச்சுட்டுப் போறதுன்னும் தெரியலை. எதை வைச்சுட்டுப் போக முடியும்?…”

” என்னமோ போங்க சார். நான் தினம் இந்த நாய்கிட்ட பேசுறது போல உங்கிட்ட பேசிட்டேன். நீங்களும் என் பேச்சு புரிஞ்சோ புரியாமலோ…இந்த நாய்ங்க பேசாதது மாதிரி மௌனமாய் இருந்து கேட்டுட்டீங்க. மனசுல இருந்ததைக் கொட்டிட்டேன். தப்பா இருந்தா மன்னிச்சுக்கோங்க. ” என்று சொல்லி எழுந்தவன்… போதையின் தாக்கம் கொஞ்சம் தடுமாறினான். சமாளித்து…கீழே இருந்த சாக்கை எடுத்துக் கொண்டு நடந்து கலையரங்க படி ஏறினான். நாய்களும் அவன் முன்னும் பின்னும் தொடர்ந்தன.

கோயிலில் இன்னும் அர்ச்சனை, ஆரத்தி மணி ஒலிக்கவில்லை. அலங்காரம் நடக்கிறதோ என்னவோ. நடக்க நாழியாகும் என் மனைவியும் திரும்ப சிறிது நேரமாகும். புரிந்தது.
காத்திருக்கும் எனக்குப் பொழுது போக வழி…? மேலும்….எனக்கும் அவன் என்ன செய்கிறான் என்பதைப் பார்க்க ஆவல். நானும் நாலடி நகர்ந்து மேடை முன் நின்று அவர்களைக் கவனித்தேன்.

மேடை முழுக்க நிறைய ஆடுகள். புழுக்கைகள், மூத்திரங்கள் அதன் வீச்சங்கள். அதையும் தாண்டி அந்தப் பிச்சைக்காரன் ஒரு மூலைக்குப் போனான். அங்கு இவன் உடமைகளாய் மூன்று கோணி சாக்குகள். தான் கொண்டு வந்த சாக்கையும் அவைகளுடன் வைத்துவிட்டு எதில் ஒன்றிலிருந்து எதையோ எடுத்து தூக்கி விரித்தான். கிழிந்த போர்வை.! அதை இப்படியும் அப்படியும் அசைத்து தரையைச் சுத்தப்படுத்தி விரித்து அமர்ந்தான். நாய்களும் விடாமல் அவன் முன் பின்னங்கால்களை மடக்கி முன்னங்கால்களை நீட்டி அமர்ந்தன.
ஆள் படுக்கப் போகிறான் ! நினைத்தேன். படுக்கவில்லை. மாறாக…ஒருக்களித்து சாய்ந்து தான் கொண்டு வந்த கோணியை அருகில் இழுத்து…. அதிலிருந்து ஒரு பொட்டலத்தை எடுத்தான். நாய்கள் மூன்றும் எழுந்து விரைப்பாக அமர்ந்து நாக்கைச் சுழற்றியது.

புரிந்து விட்டது. சோற்றுப் பொட்டலம்.! பிச்சை எடுத்ததல்ல. உழைத்த பணத்தில் கொஞ்சம் ஊற்றிக் கொண்டு மிச்சத்தில்…. கடையில் வாங்கியதுபோல. அப்படித்தான் இருக்க வேண்டும். பார்சல் அப்படி இருந்தது.

அதைப் பிரித்து விரித்த அவன், ” இந்தா உனக்கு ஒரு பிடி. உனக்கு ஒரு பிடி …” என்று மூன்றிற்கும் கணிசமான அளவு கவளம் வைத்துவிட்டு, ” சாப்பிடுங்க. ” சொல்லி இவனும் ஒரு கவளம் அள்ளி வாயில் வைத்தான். அதன் பிறகுதான் நாய்களும் தன் முன்னிருந்த சோற்றில் வாய் வைத்தன.

எப்படி இப்படி ஒரு பழக்க வழக்கம்! – எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.

அட என்ன ஒரு வாழ்க்கை ! என்ன நேசம் ! எனக்குள் சிலிர்த்தது.

இந்த பிச்சைக்காரனுக்குள்ளும் பாசம், நேசம், பரிதாபம். நாய்களின் பேரால்….வாழ்க்கையின் மீது பிடிப்பு. அதே மாதிரி இந்த நாய்களுக்கும் அவன் மீது பற்று, பாசம் நேசம்., பிடிப்பு!
பிச்சைக்காரனாய் வாழ்ந்தாலும் இவன் வாழ்க்கையிலும் ஒரு நிறைவு, அர்த்தம் இருக்கிறது. இவனைப் போல எத்தனை மனிதர்களுக்குக் கிடைத்ததைப் பகிர்ந்து உண்டு, உதவி வாழும.;…. குணம் மனம் இருக்கிறது. அப்படி இருந்தால்…. உலகில் ஏன் இந்த கொலை, கொள்ளை !?

ஓரு வேளை இவன் அனாதை என்பதால்…. இந்த வாயில்லா ஜீவன்கள் மேல் இப்படி ஒரு பாச நேசமோ ? – மனம் இப்படியும் நினைத்தது.

எப்படியோ…இவனுக்குப் பாசம் நேசம் காட்ட ஆள், மனிதர்களில்லை. கிடைத்த ஏதோ உயிர் வாயில்லா ஜீவன்களிடம் காட்டுகிறான்.! புரிந்தது.

இந்த நாய்களுக்கு என்ன பஞ்சம் ?! எத்தனைத் தெரு நாய்கள் கிடைத்ததைத் தின்று உண்டு உறங்கி வாழ்கின்றன. அதைப் போன்று வாழலாமே. அப்படி இருக்காமல் இவன்தான் சாசுவதமென்றிருக்க காரணம் ? கேள்வி விஸ்வரூபமாக எழுந்தது. பதில் தேட முடியாமல் மனம் திக்கித் திணறியது.

ஒரு வழியாய்…. இவைகளுக்கும் தங்கள் இனத்தில்… சுற்றம் நட்பிற்கு வழி இல்லாமல் அனாதைகளாகி போனவைகள் போல. அதனால்தான் கிடைத்த மனித சென்மத்திடம் அவைகள் பிச்சைக்காரனைப் போல் பற்று பரிவு, பாசம் நேசம் காட்டுகின்றன. புரிந்தது.

” என்னங்க போகலாமா ? ” என் மனைவியின் குரல் சில அடிகள் தூரத்தில் கேட்டது.

” இதோ வர்றேன்! ” என்று நானும் வண்டியை நோகக்கி நகர்ந்து வர…

” கலையரங்கத்தில் என்ன பார்வை ? ” என்னைக் கவனித்து வந்த வாசுகி கேட்டாள்.

” பி…பிச்சைக்காரன்..! ” என்றேன்.

” எங்கெங்கெல்லாமோ சுத்தி அங்கேதான் அவனுக்குப் படுக்கை. நீங்க இங்கே அடிக்கடி வந்திருந்தால்தானே அவனை நீங்க அவனைப் பார்த்திருக்க முடியும், தெரியும். அந்த நாய்களோட அவன் கொஞ்சல் தாங்காது.” ஆளைப் பார்க்காமலே சரியாகச் சொல்லி வந்தாள்.

எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

” எத்தனைப் புள்ளைக் குட்டிங்க பெத்து மனைவி மக்களைப் பிரிஞ்சவனோ. இல்லே.. பெக்காமத்தான் அனாதையாத் திரியறவனோ..?! நாய்ங்க மூனை உசுருக்குசுராய் வளர்க்கிறான். அதுங்களும் இவன் மேல் அப்படியே இருக்குது. வாங்க போவோம்.” வண்டியைத் தொட்டாள்.

வீடு வந்தோம். ராத்திரி முழுக்க…எனக்கு அவன் நினைப்பு.

மறுநாள் ஒரு அவசர வேலையாக நான் ஊரில்லை. வெளியூர் பயணம். அப்படியே பதிப்பக விசமாக ஒரு வாரம் சென்னையில் தங்கிவிட்டு எட்டாம் நாள் வீட்டிற்கு வந்தேன்.
பயணக்களைப்பு, வெயில் தாக்கம் மோரெல்லாம் குடித்து தாகம் தணித்து விட்டு… ” அப்புறம்… நம்ப ஊர்ல என்ன விசேசம் ? ” வாசுகியைக் கேட்டேன். நான் ஊர் போய் திரும்பி வந்தால் இப்படி கேட்பது வழக்கம்.

” அந்த பிச்சைக்காரன் நேத்து செத்துப் போயிட்டான்! ” சொன்னாள்.

” அப்படியா ?! ஏன்.. எப்படி…? ” துணுக்குற்றேன்.

” அவனுக்குத் திடீர்ன்னு உடம்புக்கு முடியலை. குளிர் சுரம். நாலு நாளாய் போர்த்திக்கிட்டு சுருண்டு படுத்து பட்டினியாலேயே செத்தான் பாருங்க…. அதுதான் கொடுமை.! அதைவிடக் கோரம், கொடுமை…..அந்த மூணு நாய்ங்களும் அவனைவிட்டு அசையாமல் அவனைச் சுத்தி படுத்து….சோறு தண்ணி சாப்பிடாம செத்துப் போனது எல்லாத்தையும்விட ஆச்சரியம். ஊரே கூடி வேடிக்கைப் பார்த்து…மூக்கின் மேல் விரலை வைச்சுது. அப்புறம் நம்ம ஊர் சனங்களே….போலீஸ்ல விசயத்தைச் சொல்லி…. அந்த நாலு பொணங்களையும் ஒரே பாடையில் தூக்கி போய் நம்ம ஊர் சுடுகாட்ல ஒரே குழியிலலேயும் பொதைச்சுட்டு திரும்பிச்சு. பார்க்காத மிச்ச சொச்ச மக்களும் அந்த சமாதியைப் போய்ப் பார்த்துட்டு திரும்புறாங்க.” சொன்னாள்.
எப்படி எப்படி…..? மாற்று உயிர்களும் மனிதனுடன் நேயம் வைத்து இப்படி மடிவதென்பது…? எனக்குள்ளும் ஒரு அதிர்ச்சி ஆச்சரியம்.

சடனாய் அந்த சமாதியைப் பார்க்க ஆசை எனக்கும் தோன்றியது.

” நானும் பார்த்து வர்றேன்.” வாசுகியிடம் சொல்லிவிட்டு உடன் கிளம்பினேன்.

அடுத்த சில நிமிடங்களில் அந்த இடத்தில் நின்றேன்.

அந்த புது சமாதி மீது.. மலர்கள் தூவப்பட்டிருந்தது.

தன்னந்தனி ஆளாய் நின்ற நான் அதன் முன் கைகட்டி மௌனமாக நின்றேன். என்னையுமறியாமல் இறுதி அஞ்சலியாய் இரண்டு சொட்டு கண்ணீர் பொங்கி புறப்பட்டு மேடை மீது விழுந்தது.

இது எனக்குள் இயல்பாய் எழுந்த ‘ இதய அஞ்சலி !! ‘ புரிந்தது.!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *