கணேசனுக்கு இன்று காலையிலிருந்தே எல்லாம் அவசரகதி. aஅலுவலக வேலையாக காலை ஒன்பது மணிக்கு திருச்சி செல்லும் பேருந்து. பயணச்சீட்டும் முதல் நாளே எடுத்தாகிவிட்டது. இருந்தும் எப்படியோ இன்று படுக்கையிலிருந்து எழுந்ததிலிருந்து எல்லாமே தாமதம். குளித்து, தயாராகி மணி பார்த்தால் எட்டு. இனிமேல் ஆட்டோப் பிடித்தால் கூடப் பேருந்தைப் பிடிக்கமுடியாது. காலைச் சிற்றுண்டியை முடித்துக்கொண்டு மனைவியிடம் சொல்லிக்கொண்டு, பெட்டியைக் கையில் எடுத்துக்கொண்டு கிளம்பினான். பாக்கெட்டைத் தொட்டுப்பார்த்துக்கொண்டான். பர்ஸ் இருப்பதை உறுதிப்படுத்திக்கொண்டான். நேற்று இரவே பர்ஸில் பணம், கார்டு, டிக்கெட் எல்லாம் வைத்திருந்தான்.
ஒருவழியாக ஆட்டோப் பிடித்து, கோயம்பேடு வரும்போது மணி ஒன்பது பதினைந்து. அவன் போகவேண்டிய பஸ் போய்விட்டது. அடுத்த பேருந்து எது என்று விசாரித்து அதில் ஏறி உட்கார்ந்தான். அது இன்னும் பத்து நிமிடம் கழித்துத்தான் கிளம்பும் என்று சொல்லிவிட்டார்கள். காலையிலிருந்து இருந்த பதட்டமெல்லாம் கொஞ்சம் குறைந்து, நிதானத்துடன் அலுவலகக்கோப்பு எடுத்து வந்திருக்கிறோமா என்று பெட்டியைத்திறந்து உறுதிப்படுத்திக்கொண்டான். பிறகு பர்ஸைத் திறந்தான். அதில்தான் அவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பணம் இருந்தது, கார்டுகள் இருந்தன. அவனுடைய இஷ்டத்தெய்வத்தின் படம் மட்டும் காணவில்லை. அது இல்லாமல் அவன் எங்குமே சென்றதில்லை. பதட்டத்துடன் பஸ்ஸைவிட்டு இறங்கினான். எங்கும் தவறவிட்டு விட்டோமோ சிறிது தூரம் வரை தேடிப்பார்த்தான். ம்ஹும். எங்கும் இல்லை. அவன் மட்டும் இந்த நேரம் ஆணாக இல்லாமல் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் கண்ணீர் விட்டிருப்பான்!!! நெஞ்சில் திகிலுடன் பேருந்தில் ஏறி உட்கார்ந்தான்.
அவனுக்குச் சிறுவயதிலிருந்தே அப்படியொரு பழக்கம். பள்ளிக்கூடம் போகும்போதும், கல்லூரியில் படிக்கும்போதும் எப்பொழுதும் அது அவன் கூடவே இருக்கும். தெய்வம் தன் கூடவே இருக்கிறார் என்ற நம்பிக்கை அவனுக்கு. இதுவரை அப்படித்தான் நடந்து வந்திருக்கிறது. கையில் அந்தத் தெய்வத்தின் துணையுடன் போகும்போது அவனுக்கு எல்லாம் நல்லதாகவே நடந்திருக்கிறது. இரண்டு முறை இல்லாமல் போயிருக்கிறான். ஒருமுறை அவன் பள்ளியில் நடந்த ஓட்டப்பந்தயத்தில் தோற்றுப் போய்விட்டான். இன்னொருமுறை மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்த அவனுடைய பாட்டி இறந்துவிட்டாள். அந்தப்படம் அவனிடம் இருந்திருந்தால், பாட்டி இறந்திருக்கமாட்டாள், தான் பந்தயத்தில் தோற்றிற்கமாட்டோம் என்று நம்ப ஆரம்பித்தான். அந்தப் பழக்கம் இன்றுவரை இல்லை, இல்லை நேற்றுவரை தொடர்ந்தது. இன்றுதான் அவனிடத்தில் அது இல்லையே!
பயம் அவனுடைய உணர்வு, உடல் எங்கும் பரவி, அவனை பீதிக்குள்ளாக்கியது. மனைவி வசந்தியிடம் ஃபோன் செய்து அவளிடம் புலம்பினான். வீட்டில் படம் இருக்கிறதா என்று தேடிப்பார்க்கச்சொன்னான். அவளும் அவனைச் சமாதானப்படுத்தினாள். ஒன்றும் பலனில்லை. இன்று காலையிலிருந்து தாமதம் ஆனது, பேருந்தைத் தவறவிட்டது எல்லாம் அதனால்தான் என்று மனதுக்குள் புலம்பிக்கொண்டிருந்தான். இன்று இன்னும் என்னென்ன ஆபத்துகள் ஏற்பட இருக்கிறதோ என்று கவலைப்பட்டுக்கொண்டான். இவன் பேருந்திலிருந்து இறங்கி வீட்டுக்குத் திரும்பி விடலாமென்று முடிவெடுத்தப்போது அது வெகுதூரம் வந்திருந்தது. இனி விதிவிட்ட வழி என்று அமர்ந்தான்.
இவனுடைய கவலையைப் பற்றிக் கவலைப்படாமல் வண்டி வேகமெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. கையில் கொண்டு வந்திருந்த பாட்டிலிலிருந்து சிறிது தண்ணீர் எடுத்துக் குடித்துவிட்டு, கண்ணைமூடிக்கொண்டு, தன்னை நிதானத்திற்குக் கொண்டுவந்து உட்கார்ந்திருந்தான். கொஞ்ச நேரத்தில் பேருந்து ஏதோ ஒரு ஊரில் நின்றது. ஒரு இளம்பெண், ஒரு இரண்டு வயது குழந்தையுடன் பேருந்தில் ஏறினாள். அவளை வழியனுப்ப வயதான தம்பதி வந்திருந்தனர். அவர்களும் பேருந்தில் ஏறி இவனுக்கு முன்னிருக்கையில் ஜன்னலோரஇருக்கையில் அவர்களை அமர்த்திவிட்டு இறங்கினர். பின்பு பேருந்திற்கு வெளிப்புறம் நின்றுகொண்டு அவளிடம் பேருந்து கிளம்புவரை பேசிக்கொண்டிருந்தனர். பேருந்து நகர ஆரம்பித்தது. அந்தச் சத்தத்தில் அந்தப் பெரியவர் சத்தமாக, {அந்தப்பெண், அவர்களுடைய மகள் போலும், “அம்மாடி, நீ ஒண்ணுத்துக்கும் கவலைப்பட்டுக்காதே, ஆண்டவன் இருக்கான், எல்லாம் அவன் பார்த்துப்பான். ஊர் சேர்ந்ததும் ஃபோன் செய்யும்மா” என்று அவர் முடிக்கவும் வண்டி வேகமெடுக்கவும் சரியாக இருந்தது.
அதைக் கேட்டுக்கொண்டிருந்த கணேசனுக்கு, அந்த வார்த்தைகள் தனக்கே சொல்லப்பட்டவை போல் இருந்தது. மனதில் கொஞ்சம் சமாதானமேற்பட கண்ணைமூடிக்கொண்டான். aஅப்படியே சிறிது கண்ணயர்ந்தவன் ஒரே சமயத்தில் நிறைய மனிதர்களின் பேச்சுக்குரல்கள் கேட்டு திடுக்கிட்டு விழித்தான்.
பேருந்து ஓடாமல் நின்றிருந்தது. தான் பயந்தபடியே ஏதோ ஆகிவிட்டது என்று நினைத்தான். பேருந்தில் இருந்த அனைவரும் வெளியில் எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தனர். பேருந்து ஓட்டுனர் கீழே இறங்கிக்கொண்டிருந்தார். பயணிகள் சிலரும் என்னவென்று பார்ப்பதற்கு கீழே இறங்க ஆரம்பித்தனர். கணேசனும் இறங்கினான்.
வெளியில் வந்து கொஞ்சதூரத்தில் அவன் கண்ட காட்சி!!!!
ஒரு பேருந்தை குறுக்குச்சாலையில் வந்த ஒரு லாரி மோதி விபத்துக்குள்ளாக்கியிருந்தது.
விபத்து நடந்த இடத்துக்கு அருகில் சிறிது தூரம்வரை கண்ணாடிச் சிதறல்களும் ரத்தத்துளிகளும். பேருந்தைப் பார்த்த கணேசனுக்கு ஒரு நிமிடம் உடல் நடுங்கியது. அது அவன் தவறவிட்ட பேருந்து!!!
கடவுள் என்பது நாம் கையில் வைத்திருக்கும் பொருளில்தான் இருக்கிறார் என்று நம்புவது எவ்வளவு பேதமை என்று உணர்ந்தான். உண்மையான நம்பிக்கை அவரை எப்பொழுதும் அருகிலேயே இருக்கவைக்கும், நம்மைக் காக்கும் என்று நினைத்தபொழுது கணேசனுக்கு உடம்பு சிலிர்த்தது.