கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 14, 2024
பார்வையிட்டோர்: 1,729 
 
 

(1967ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பொறி ஆறுபொறி ஏழு| பொறி எட்டு

நாட்டுக்குத் தேவையான கூட்டுறவு முறை 

“பன்னிரண்டு பேர் சேர்ந்து, தொடர்ந்து ஒரு நாவலை எழுதுவதாவது? சுவாரசியப்படுமா? நடை மாறுபாடுகளும், கருத்து வேற்றுமைகளும் குறுக்கிட்டு நாவலின் சுவையைக் குறைத்து விடாவா?” என்று என்னிடம் சிலர் ‘ஆடும் தீபம்’ பற்றி ஐய வினா எழுப்பினார்கள். மழுப்பினாற்போல் பதில் சொன்னேன். எனக்குள்ளேயே இந்த ஐயம் இருந்ததுதான் மழுப்பலுக்குக் காரணம். 

ஆனால் – 

இதுவரை வளர்ந்து வந்திருக்கிற கதைப்பகுதி அந்த ஐயம் வீண் என்பதை மெய்ப்பித்து விட்டது. 

கதாநாயகி அல்லியின் நிலை-அதாவது அவளுடைய அந்தஸ்து சிறுகச் சிறுக, மறைமுகமாக, வெகு அழகாக வளர்ச்சி பெற்று வந்திருக்கிறது. இப்போது அவளிடம் கிலி இல்லை. மருட்சி இல்லை. தன்னைப் பற்றி, தன்னைச் சுற்றி உள்ளவர்களைப் பற்றி, ஊரைப்பற்றி உலகத்தைப்பற்றி அவள் நன்றாகத் தெரிந்து கொண்டவள் ஆகி விட்டாள். பள்ளிக்கூடத்திலே படிக்காததையும், அந்தப் படிப்பிலே அறிந்து கொள்ள முடியாததையுங்கூட வாழ்க்கையில், உலக அனுபவத்தில் நேரில், கண்டு அறிந்து கொண்டு விட்டாள். இனி எந்தச் சக்தியும் அவளை எதுவுமே செய்ய முடியாது. கதையின் முடிவிலே அவள் வீராங்கனையாக நின்று நம்மை நோக்கி வெற்றிப் புன்முறுவல் செய்யப் போகிறாள். ‘ஆடும்’ தீபத்தைப் படித்த அனைவர் உள்ளங்களிலும் அழியாச் சித்திரமாக ஒளி வீசப் போகிறாள். 

கதையும் அதன் வளர்ச்சியும், கதாநாயகியும் மற்ற பாத்திரங்களும், அவர்களின் இன்ப துன்ப அனுபவங்களும் ஆகிய எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். இந்தப் படைப்பைத் திட்டமிட்டபடி வெற்றிகரமாகத் தொடங்கி, வெற்றிகரமாக நடத்திக் கொண்டு போகும் ‘உமா’வின் துணை ஆசிரியர், திரு பூவை எஸ்.ஆறுமுகத்தின் பணியாற்றும் திறன் அல்லவா இவ்வளவுக்கும் காரணம்? முதற் பாராட்டு அவருக்குத்தான்! 

கூட்டுறவு முறை சரியாக இயக்கப் பெற்றால் எந்தத் துறையிலும் நல்ல பயனை அளிக்கும் என்பதற்கு இந்த ‘ஆடும் தீபம்’ தொடர்கதையே ஓர் அத்தாட்சி! 

எல்லார்வி 

பொறி ஏழு

மாற்றமா? தடுமாற்றமா? 

நின்று நிதானித்து நெட்டுயிர்த்து நெடுமூச்செறிந்து சிந்தனை செய்வதற்கே அவகாசம் அற்ற முறையில் நிகழ்ச்சிகள் அடுத்தடுத்துத் தொடர்ந்து கொண்டே போயின. அபலை அல்லி திணறினாள். தவித்தாள், தடுமாறினாள். 

கடிதம் முழுவதையும் படிப்பதற்குள்ளாகவே அவள் உள்ளம் கொந்தளிக்கத் தொடங்கி விட்டது. அந்தப் புதிய செய்தியால் ஏற்பட்ட அதிர்ச்சியைச் சமாளித்துக் கொண்டு அருணாசலத்தைப் பற்றி அவள் எண்ணமிட முயல்வதற்குள், ‘அம்மா!… அல்லி!” என்று ராஜநாயகத்தின் குரல் ஒலித்தது. 

கடிதத்தைக் காண்பிப்பதா, மறைப்பதா, மேற்கொண்டு என்ன செய்வது, எப்படி நடந்து கொள்வது, எதனால் நலம் கிட்டும்.எதனால் தீமை ஏற்படும் என்பனவற்றை உடனடியாக முடிவுசெய்வது இப்போது அவளுக்குப் பெரும் பிரச்சினை ஆகிவிட்டது. அதற்குப் போதிய அவகாசம் இல்லை. பிறகு யோசித்துத்தகுந்தபடி நடந்துகொள்ளலாம் என்று எண்ணிக் கடிதத்தைச் சட்டென தலையணையின் அடியிலே மறைத்து வைத்தாள். இதற்குள் ராஜநாயகம் அவள் இருந்த இடத்தை அணுகி விட்டார். 

‘அல்லியோட முகத்திலே புது மலர்ச்சி ஒளி வீசுது!’ என்று சற்று முன் தமக்குப் பலகாரம் அளிக்கிற போது நாச்சியாரம்மா சொன்னதைக் கேட்டதும் ராஜநாயகத்துக்குப் பலகாரமே இறங்கவில்லை. அங்கே இருப்பே கொள்ளவில்லை. உடனே அல்லியைப் பார்க்கவேண்டும் என்று அவர் உள்ளம் பரபரத்தது. இந்த மலர் முகத்தைக் காணும் ஆவலால் அவர் அங்கே விரைந்து வந்தார். 

அல்லி எழுந்து நின்றாள். அவர் குரலிலே இழையிட்ட மகிழ்வுணர்ச்சி, புதிய செய்தி ஏதோ ஒன்றை அவர் கொண்டு வருகிறார் என்று கட்டியம் கூறிற்று. தன் முகத்தை அவர் பார்வையிலிருந்து மறைத்துக் கொள்ள முயன்றவள் அசப்பிலே லாகவமாக அவர் முகத்தைக் கவனித்தாள். அவரது குரல் கூறியது எதுவோ அதையே தான் அவர் முகமும் காட்டிற்று. புதிய ஊரில், புதியமனிதர்களிடையே, புதிய நிலையில் மகிழ்ந்து, முற்றும் புத்தம் புதிய வாழ்க்கையில் ஈடுபட இருக்கிற நிலை. எந்நேரமும் ‘புதுமை, புதுமை’ என்று கூவியழைத்துக் கொண்டிருந்த அவளுடைய மலர்ந்த உள்ளத்திற்கு இப்போது எந்தப் புதுமையும் வேண்டி இருக்கவில்லை. ‘புதுமை ஒரு புற்று; அதனுள் இருப்பது பாம்பு! வேண்டாம் புதுமை ‘ என்று ஓலமிட்டது உள்ளம். 

”வாங்க!” சற்று ஒருக்களித்த நிலையில் நின்று கொண்டிருந்தாள். 

அனுபவம் சொல்லாததை வேறு எது சொல்லும்? ராஜநாயகத்தின் குடும்ப அனுபவம் – உலக அனுபவம் கொஞ்சமா? அல்லியின் கரகரத்த குரல் அவரை அதிர்ச்சியுற வைத்தது. அன்று வரை இல்லாத உணர்வு அவரைத் தூண்டிற்று. பாய்ந்து அவள் முன் புறத்தை அடைந்தார். அவள் சட்டென்று தலைகவிழ்ந்தாள். அவர் அந்த முகத்தை நிமிர்த்தினார். அந்தச் செயலே அடங்கி யிருந்த அவளது துயர உணர்வைத் தட்டி எழுப்பிற்று. ஆயினும் அவள் உணர்ச்சியோடு போராடினாள். மேல் வரிசைப் பற்களால் கீழுதட்டைக் கடித்துக்கொண்டாள். சிரிக்க முயன்றாள். அழுகை சிரிப்பாக மாறினால் எப்படியிருக்குமோ, அப்படி அசடு வழிந்தது. முகம் நிமிர்ந்த படி இருக்க, கண்கள் நிலத்தை நோக்கிக் கொண்டிருந்தன. 

ராஜநாயகம் அவள் நிலை கண்டு தி டுக்கிட்டார். “என்னம்மா இது? ஏன் என்னவோ போல் இருக்கே?” என்று பரிவுடன் கேட்டார். 

“ஒண்ணும் இல்லீங்க”

“இல்லே; என் கிட்டே எதையோ நீ மறைக்கிறே. உன் மனசிலே ஏதோ எண்ணங்கள் புரண்டுகிட்டிருக்கு. இதோ பார் அல்லி. இப்பவும் ஒண்ணும் முழுகிப் போயிடலே இந்த விநாடியிலே நீ ஒரு வார்த்தை சொன்னா இப்பவே இந்த ஏற்பாட்டை நான் நிறுத்திடுறேன். உன்னோட சந்தோஷம் ஒண்ணு தான் எனக்கு முக்கியம்.”

ராஜநாயகம் நீள நெடுகபூத்தொடுத்தாற்போல் சொல்லிக் கொண்டே போனார். அல்லி தெருவை நோக்கி இருந்த ஜன்னல் கதவைப் பற்றிக்கொண்டு பதுமை போல் அசைவற்று நின்று கொண்டிருந்தாள். நிலையில் ராஜநாயகத்தை நேருக்கு நேர் பார்ப்பதற்கு அவள் மனம் இசையவில்லை; அவளால் முடியவில்லை. 

ஏற்பாட்டை நிறுத்திவிடுவதாக அவர் இப்போது எதைக் குறிப்பிட்டுச் சொல்ல இருக்கிறது? கல்யாணத்தைத் தான். 

கல்யாணத்தை நிறுத்திடுறதா?’ 

அவளின் உடம்பு சிலிர்த்தது 

‘பின்னே?… நடக்கிறதா?… சுகுணா?… அவளோடகதி?…’ 

அவள் முகத்திலே உணர்ச்சிகள் புரிந்த ஜாலத்தை அவர் கவனிக்க முயன்றார்; அவள் மறைத்துக்கொள்ள முயன்றாள். 

“அல்லி, இதோ.என்னை நிமிர்ந்து பாரம்மா!” 

அவள் மெல்ல நிமிர்ந்தாள். 

“என்ன யோசனை? என்ன குழப்பம்!” 

“ஒண்ணுமே இல்லீங்க”-மறுபடியும் அவள் சிரிக்க முயன்றாள். 

“பின்னே ஏன் அம்மா என்னவோ போல இருக்கே? ஒரு வேளை – அப்பாவையும் அம்மாளையும் நினைச்சுக்கிட்டியா? இந்த நல்ல நேரத்திலே அவங்க இல்லேயேன்னு வருத்தப்படுறியா?” 

அல்லியின் கண்கள் குபீரென்று நீரைக் கக்கின. உள்ளம் ஒரு நொடிக்குள் பல மைல்களையும் பல ஆண்டுகளை யும் கடந்து பின் நோக்கிப் பறந்தது; மாங்குடியை அடைந்தது; பெற்றோரைக் கண்டது. அவளால் தாங்க முடியவில்லை. இரு கரைகளையும் தொட்டுக்கொண்டு வேகமாக ஓடும் புது வெள்ளம் சிறு கண்ணியைக் கண்டதும் குபீரென்று அதில் பாய்வது போல அல்லியின் நெஞ் சிலே வேறு வகையில் கொந்தளித்துக்கொண்டிருந்த துயர உணர்ச்சி, ராஜநாயகத்தால் நினைப்பூட்டப்பெற்ற பெற்றோர் நினைவால் அவள் கண் மடையை உடைத்துக் கொண்டு குபீரென்று வெளிப்பட்டது. முன்றானையால் முகத்தை மூடிக்கொண்டு விம்மி விசித்து அழத் தொடங்கினாள். 

”பார்த்தியா நான் நினைச்சது சரியாய்ப்போச்சு”, என்று கூறிப் பெருமூச்செறிந்தார் ராஜநாயகம். பிறகு இதமான மொழிகளால் அவளுக்குத் தேறுதல் சொல்ல முற்பட்டார். இப்போது அவர் உடம்பில் படபடப்பு இல்லை; குரலில் பதற்றமும் இல்லை. 

“ஒருவேளை உனக்கு இந்தக் கல்யாண விஷயத்திலே ஏதாச்சும்மனக்குறை இருக்குமோண்ணு முதல்லே நினைச்சேன். அந்த நினைப்பு என்னையே ஒரு ஆட்டம் ஆட்டி வச் சிட்டுது. இப்போ அது இல்லேன்னு தெரிஞ்சதும் கொஞ்சம் நிம்மதி ஏற்படுது. இந்தமாதிரி சமயத்திலே.ஒரு பொண்ணு பெத்தவங்களை நினைக்கப்படாதின்னு எந்தப் பாவியும் சொல்லமாட்டாங்க. ஆனா, நான் என்ன சொல்றேன்னா. புத்திசாலியான நீ…” 

“பு..த்..தி..சாலி!” அவள் உதட்டைக் கடித்துக் …… கொண்டாள்
 
“அம்மா? ஏன் அலுத்துக்கிறே? உன் புத்திசாலித்தனத்துக்கு என்ன? உன் சம்பந்தமா என் மனசிலே உண்டான தகாத நினைப்பை ஒரு பார்வையாலே, ஒரு சொல்லாலே முளையிலே கிள்ளி எறிஞ்ச காரியத்தைவிட வேறே என்னம்மா வேணும் உன்னோட புத்திசாலித்தனத்தை நான் கொண்டாட? இது மாத்திரம் இல்லே அல்லி; உன்கிட்டே சொல்லிக்கிறதிலே என்ன? உன்னாலே கண் திறந்துவிடப்பட்ட நான் உன் சம்பந்தமா மாத்திரம் திருந்தல்லே; பொதுவாகவே ஒரு நல்ல திருத்தத்தை அடைஞ்சிட்டேன். உண்மையைச் சொல்லணும்னா, நீ இங்கே வந்து சேர்ந்தப்புறந்தான்- உன்னாலேதான்- நான் நல்லவன் ஆனேன், அல்லி,” 

இதற்குள் அல்லி துயரம் குறையப் பெற்றவளாய் முகத்தைத் துடைத்துக் கொண்டு ஒரு சிறிது நிதானம் உடையவள் ஆனாள். 

”நிக்கிறீங்களே? உக்காருங்க.” 

“ஆமாம்; அது கூடத் தோணலே.நீயும் உக்காந்துக்க” 

இருவரும் அமர்ந்தார்கள். ராஜநாயகம் தொடர்ந்து பேசினார். 

“பெத்தவங்களை இந்த மாதிரி சமயத்திலே யாராலேயும் நினைக்காமெ இருக்கமுடியாது. நினைச்சா மனசுக்குரொம்பக் கஷ்டமாய்த்தான் இருக்கும். நினைக்காமெ இருக்கணும்னு நான் சொல்லவும் இல்லே. ஆனா நமக்குள்ள விவேகத்தினாலே வருத்தத்தைக் குறைச்சுக்கணும்னு தான் சொல்றேன். எதனாலே அப்படிச் சொல்றேன்னா, நீ புத்திசாலியா இருக்கறதனாலேதான், உன்னாலே அது முடியுமிங்கிறதனாலேதான். ஒண்ணை நினைச்சுப் பார்; கதில்லாமெ, திட்டம் இல்லாமெ, நிர்ப்பந்தம் தாளாமே தறிகெட்டு ஓடிவந்தே நீ. அப்படிப்பட்ட உனக்குப் புகலிடமா என்னை இங்கே முன்கூட்டியே நியமிச்சு வச்சிருக்கான் ஆண்டவன். அவனோட கருணைக்கு இதைவிட என்ன அத்தாட்சி வேணும்? நம்மோட நிலைமை இந்த மட்டும் மேன்மையா இருக்கேன்னு நீ சந்தோஷம்அடையணும். சந்தோஷமாய்த்தான் நீ இருந்துக்கிட்டிருக்கே, இருந்தாலும் ரத்தபாசம் இந்தச் சமயத்திலே…” 

திடீரென்று அல்லி மலர் கட்டவிழ்த்து இதழ் விரித்துச் சிரிப்பைச் சிந்திற்று. அந்தச் சிரிப்பின் கிண் கிணி ஓசை அந்த அறை முழுவதும் நிறைந்து காற்றிலே கலந்து மிருந்து வெளியேறிற்று. 

”அப்பாடா!” என்று நிம்மதிப் பெருமூச்செறிந்தார் ராஜ நாயகம் செவிட்டு மருமகன்கதை மாதிரி நாம் எதையோ எண்ணிச் சங்கடப்பட்டுக்கிட்டிருக்கறப்ப, இந்த மனிதர் தன் இஷ்டத்துக்கு என்ன என்னவோ சொல்லிக்கிட்டே போறாரே!’ என்று எண்ணியதும் அல்லிக்குச் சிரிப்பு வந்துவிட்டது. அவள் இயல்பின்படி, ‘அழுகையின் நடுவே சிரிப்பு’ என்று அமைந்த அவள் வாழ்க்கைத் தத்துவத்தின்படி அவள் கலீரென்று தன்னை மறந்து சிரித்து விட்டாள். ராஜநாயகம் அந்தச் சிரிப்பையும் தம் போக்குக்கு அனுசரணை ஆக்கிக்கொண்டு, ‘அப்பாடா!’ என்று கூறி நிம்மதிப் பெருமூச்செறிந்ததும். அவளது சிரிப்பு மேலும் தொடர்ந்தது; சிரித்துக்கொண்டே இருந் தாள், 

”அம்மா; இதில்ல அழகு!… இதுதான் பழைய அல்லி. இதை விட்டுப்பிட்டு நீ சும்மா கண்ணைத் துடைச்சுக் கிட்டு, மூக்கைச் சிந்திப் போட்டுக்கிட்டிருந்தா அதை என்னாலே எப்படிச் சசிக்க முடியும் தாயே? நீ சாமானியப் பெண் இல்லே. என்னைத் திருத்தினே; அருணாசலம் பயலை மயக்கித் திருத்தினே ; இன்னும் சாத்தையா, தொடப்பக்கட்டை இப்படி எத்தனை பேரை உன் அழ காலே ஆட்டிவச்சு மதியாலே திருத்த நீ பிறந்திருக் கியோ? அழகும் அருளும் அன்பும் பண்புமே உருவான மங்கல தீபம் நீ. ஆடாமெ அசையாமெ, பேசாமெ,சிரிக் காமெ பதுமை மாதிரி இருந்திட்டா பேச்சுக்கே இடம் இல்லே. நீயோ ஆடும் தீபமாய்ச் சுடர்விட்டுப் பிரகாசிக் கிறே. அல்லி, உன்னோட ஜோதிப் பிழம்பை நாடிவந்து அதன் மேலே மோதற விட்டில் பூச்சிங்க ஒண்ணு ரெண்டில்லே; இன்னும் எத்தனை எத்தனையோ! நீயோ அந்தப் பூச்சிங்களை மடிய அடிக்காமெ இருக்கலாம்; ஆனா!” 

‘பாம் பாம்’ என்ற குழலோசையுடன் தெருவாசலில் கார் வந்து நிற்கும் சந்தடி கேட்டது. தொடர்ந்து கார்க் கதவு திறந்து மூடும் சத்தமும்கேட்டது. ராஜநாயகம் தம் கவனத்தை அங்கே ஓட்டி உற்றுக் கவனித்தார். அச் சமயத்தில் அல்லியின் முகத்திலும் அவர் பார்வை பதிந்தது. சற்று முன் அங்கே மலர்ந்த சிரிப்பின் சுவடு எங்கே? அந்த முகம் இதற்குள் ஏன் இப்படி இருண்டு விட்டது? அவர் உள்ளம் குழம்பியது. அதே சமயத்தில் நாச்சியாரம்மா அங்கே வந்தாள். “காரிலே யாரோ வந்திருக்காங்க, உங்களைத் தேடிக்கிட்டு,” என்றாள். ராஜநாயகம் பெருமூச்சுடன் எழுந்தார்; நிதானமாக நடந்தார். அவர் தலை மறைந்ததும் அல்லி படுக்கையின் மேல் விழுந்தாள். 

அவ்வளவு நேரமும் ராஜநாயகம் பொழிந்து தள்ளிய அன்பு மொழிகளால் அவள் உள்ளம் துன்பத்தை மறந் திருந்தது. அவருக்குத்தான் அவளிடம் எத்தகைய வாத்சல்யம்! பெற்ற தந்தை ஒருவர் தம் மகளிடம் இத்துணை வாத்சல்யம் செலுத்துவாரா? அல்லிக்கு அது பற்றி ஒன்றுமே தெரியாது. அவளுக்குத்தான அந்த வாய்ப்பு இல்லையே! ராஜநாயகம் சொல்வது போல, எடுப்பில் அவளிடம் எப்படியோ நடந்து கொள்ளத் தலைப்பட்ட அவர் பின்னர் எப்படித்தான் மாறிவிட்டார்! எடுப்பிலிருந்தே அவர் அவளிடம் வாத்சல்ய உணர் வுடையவராக இருந்திருந்தால், அவருடைய ‘தந்தை யன்பு’ இத்தனைச் சிறப்பை அடைந்திருக்காதோ? ராஜநாயகத்தைப் பற்றி எண்ணமிட்டுக் கொண்டே வந்த அவள் செவியில் அவருடைய சொற்களில் சில ரீங்காரமிட்டன. ‘நீ புத்திசாலி!… என்னைத் திருத்தினே; அருணாசலம் பயலை மயக்கித் திருத்தினே; இன்னும் இப்படி எத்தனை பேரை உன் அழகாலே ஆட்டிவச்சு, மதியாலே திருத்தப் பிறந்திருக்கியோ?’ 

அல்லி சர்ப்பம் சீறுவது போல் பெருமூச்செறிந்தாள். ‘நான் மத்தவங்களைத் திருத்திக் குட்டிச் சுவராய்ப் போனேன் ; என்னையே என்னாலே திருத்திக்க முடியாமெ இதோ சந்தியிலே நிக்கிறேனே!’ அவளின் அடி மனம் குமுறிற்று. ‘புத்தி உள்ளவளா இருந்திருந்தா ஓடற ரெயிலிலே முன்னே பின்னே தெரியாத ஒரு காளையைச் சிநேகம் புடிச்சிருப்பேனா? அதோட பலன் இப்ப என்ன ஆச்சு?’ விடிஞ்சாகல்யாணம் ; பிடிடாபாக்கு வெத்திலையை ன்னு இருக்கிற நிலைமையிலே பூகம்பம்னு ஏதோ சொல்லுவாங்களே, அந்த மாதிரி இல்ல வெடிச்சு வருது சேதி! ‘அருணாசலம் பார்வைக்கு ஒரு மாதிரியா இருந் தாலும், பேச்சு, நடவடிக்கை எல்லாம் ஒரு மாதிரியா இருந்தாலும், மனசு சுத்த வெள்ளைன்னு வாத்தியாரை யாவும் சொன்னாங்க; ஆச்சியம்மாவும், சொன்னாங்க. சுகுணாவோட கடுதாசு என்ன சொல்லுது? கறைபடிஞ்ச கவலை நிறைஞ்ச நெஞ்சின்னு இல்லே சொல்லுது? வயசுப்பொண்ணு ஒருத்தி மனசுவிட்டு எழுதக் கூடிய அளவு கடுதாசிலே எழுதியிருக்கா. எழுதாத சங்கதி இன்னம் என்ன என்ன இருக்குமோ?…’ 

வாத்தியாரையாவின், ‘ஓகோ’ என்ற சிரிப்பொலி அவள் கவனத்தை ஈர்த்தது. அடுத்து அவர் பேசிய சொற்கள் சிலவும் காதிலே விழுந்தன; கவனித்தாள். 

“நல்லாச் சொன்னீங்க பலராமையா; நல்லாச் சொன்னீங்க! ” 

“அது சரி; எதுக்கு நீங்க இப்போ இப்படிச் சிரிச்சீங்க?” 

”எதுக்கா? அல்லிக்குப் பேசவராது; கொச்சைத் தமிழ் தான் பேசவரும்னு நான் சொல்லி வாய் மூடுறதக்குள்ளே,
‘அந்தக் கவலையெல்லாம் உங்களுக்கு வேணாம்; நான் கவனிச்சுக்கிறேன்’ன்னு நீங்கசொன்னதும் எனக்குச்சிரிப்புத்தாங்க முடியல்லீங்க. இப்பவெல்லாம் சினிமாவிலே பாட்டுக்குத்தான் இரவல் குரல்னா, நீங்க பேச்சுக்குக்கூட இரவல் குரல் ஏற்பாடு பண்ணிடுவீங்க போல் இருக்கேன்னு நினைச்சேன். அப்படியானா பிரபல நடிகர், நடிகைன்னு ஜொலிச்சு நட்சத்திரம்னு பேர் வாங்கறவங்ககளுக்குப் படத்திலே என்ன வேலை? உடம்பைக் காட்டி உதட்டை அசைக்கிறதுக்கு ஆயிரக்கணக்கான தொகை! இது அதிசயம் இல்லீங்களா பலராமையா?” 

பலராமையா என்ற சினிமாக்கம்பெனி முதலாளி ஒருவர் வந்திருக்கிறார்; அல்லி படத்தில் நடிக்க வேண்டும் என்று அவர் கேட்கிறார். ராஜநாயகம் அவரோடு பேசுகிறார்- அல்லி இதைப் புரிந்து கொண்டாள். ஆனால் வாத்தியாரையாவின் நோக்கம் என்ன? மறுப்பா, இணக்கமா?-அது புரியவில்லை. சற்று முன்புறம் சென்று உற்றுக் கேட்கத் தொடங்கினாள். 

பலராமையா லேசாக நகைத்தார். பிறகு சொன்னார்: 

“நீங்க சொல்றதெல்லாம் ரொம்ப சரிதான், ராஜநாய கம்: இந்த இடத்திலே நாம இன்னொரு விஷயத்தையும் கவனிக்கணும். அதுதான் பொதுமக்களோட ரசனை. இது தொழிலுக்கு முக்கியம்! இல்லீங்களா? அந்தப் பொண்ணு சூட்டிகை உள்ளது. படத்திலே அது ஆடின ஆட்டத்திலே, அதன் முக பாவத்திலே நான் அதைக்கண்டுக்கிட்டேன். அழகி படக்கம்பெனியாரும் சொன்னாங்க. அந்தப்பாத்திரத்துக்கு வேண்டிய வசனங்களை மட்டும் மனப்பாடம் செய்துவச்சிட முடியும்ங்கற நம்பிக்கை எனக்கு உண்டு”.

“எல்லாம் சரிதான்.ஆனாலும், அப்படியே இருந்தாலும் முதலிலே நான் சொன்னேனே அந்தத் தடையில்லமுக்கியம்…?”

“அல்லியோட கல்யாணத்தைப் பற்றித்தானே சொல்றீங்க?”

அல்லி பெருமூச்செறிந்தாள். 

“ஆமாம், இனிமே அல்லிக்கு நான் கார்டியன் இல்லே.”

”வச்சிருக்கிற முகூர்த்தத்திலே கல்யாணம் நடக்கட்டுங்க, அப்புறம் படப்பிடிப்பை வச்சுக்கிடுறது”. 

“அதுக்கு அல்லியோட புருசன்தான் சம்மதிக்கணும். அவன் கூடச் சம்மதிச்சிடுவான். அவனைச் சேர்ந்த பெரியவங்க சம்மதிக்கணுமில்லே?”

“உங்களைப் போல உள்ள பெரியவங்க, அனுபவசாலிங்க எடுத்துச் சொல்லித்தான் சம்மதிக்க வைக்கணும். எத்தனையோ பேர் கல்யாணங் கட்டிக்கிட்ட அப்புறமும் ஆடவும் பாடவும் நடிக்கவும் உத்தியோகம் பார்க்கவும் செய்யலீங்களா?” 

“பலராமையா, ஒரு படம் எடுத்தாலே உலக அனுபவம் ஒண்ணுகூடவிடாமெதெரிஞ்சிடும். நீங்களோ உருப்படியா மூணு படம் எடுத்து நல்ல பலனையும் கண்டவங்க. இப்படியே பேசறீங்களே? கலைப்பித்தும் பணப்பித்தும் காரணமா எத்தனை பேரோட வாழ்க்கையிலே பிளவு ஏற்பட்டிருக்கு? அதை நீங்க எண்ணி.. பார்க்கவே இல்லையா? பகிரங்கமா பிளவு ஏற்படாமப் போனாலும், உள்ளுக்குள்ளே குமைஞ்சுகிட்டிருக்கிற உள்ளங்கள் எத் தனை தெரியுமா? இதோ பாருங்க. நீங்க பட முத லாளி; பெரிய மனிதர்; என்னைப் பொருட்டாக்கி என் இடம் தேடிவந்து இவ்வளவு நேரம் பேசறீங்க. உங்க மனசை சடக்குனனு முறிக்கப் படாதுன்னு நானும் ஏன் னவோ பேசிக்கிட்டே வந்தேன். என் மக என் நெஞ் சிலே மண்ணை அள்ளிப்போட்டுட்டுப் போயிட்டா.அதோட ஸ்தானத்திலே தெய்வமாய்ப் பார்த்து இந்தப் பொண்ணு அல்லியைக் கொண்ணாந்து என்கிட்டே ஒப்படைச்சிருக்கு. அது வளமனையிலே வாழப் பிறந்த பொண்ணு, அத்தோட வாழ்க்கையைப் பாழ் செய்ய நான் விரும்பல்லே; அதுக்கும் விருப்பம் இருகாது; அதைக் கட்டிக்கிடப் போறவனுக்கும் விருப்பம் இராது. இது தான் என்னோட முடிவான பதிலுங்க”

பலராமையா சற்று நேரம் பேசவில்லை. 

“அல்லி வளமனையிலே வாழப்பிறந்த பொண்ணுன்னு நீங்க சொல்றீங்க. நானும் அதை ஒத்துக்கிடுறேன். ஆனா அத்தோடே, அல்லி வெள்ளித் திரையிலே பிரமாதமாப் பிரகாசிக்கவும் பிறந்த பொண்ணுன்னுநான் நினைச் சேன். இருபதாயிர ரூபாய் சாமானியமான தொகை இல்லை. இளந் தம்பதிகள் சுகமாய் வாழ அது உதவும். எல்லாத்துக்கும் மேலே ஒண்ணு; அல்லி சம்பந்தமா தனிப் பொறுப்பு எடுத்துக்கிட்டு அதனுடைய பரிசுத்தத் தன்மைக்குத் துளி மாசு கூட ஏற்படாதபடிகண்காணிப்பேன். இது என் மகள் மேலே ஆணையா சத்தியம்!”

ஓடிச்சென்று, ‘சம்மதம்’ என்று கூற அல்லி துடித்தாள் ஆனால் அப்படிச் செய்யாமல், சிறிது தூரத்தில் ஏதோ செய்து கொண்டிருந்த நாச்சியாரம்மாளை அழைத்தாள். அவள் மூலம் ராஜநாயகத்தை அழைப்பித்தாள். 

“அம்மா,கூப்பிட்டாயா?…”

“ஆமாம்; அப்பா…!”

‘அப்பா’ என்ற சொல் ராஜநாயகத்தை ஓர் உலுக்கு உலுக்கியது. 

“சரின்னு சொல்லுங்க” 

“என்னம்மா சொல்றே? சரின்னு சொல்றதா?…”

”ஆமாம். சினிமாவிலே நடிக்க அல்லிக்குச் சம்மதம்னு சொல்லுங்க.”

ராஜநாயகம் திகைத்தார். 

“அருணாசலத்தைக் கேக்கவேணாமா?” 

“கல்யாணம் ஆன அப்புறமில்லே அதெல்லாம்?” 

“அதான் நிச்சயமாயிட்டுதேம்மா?” 

”அதை ஒத்திப் போட்டுக்கலாம்.” 

“எதை?”

‘கல்யாணத்தை…!”

“நீ தான் பேசிறீயா?… திடீர்னு ஏம்மா இந்தத் தடுமாற்றம்?”

“என்னவோ, மனசிலே அப்படித் தோணுது. அதை யெல்லாம் பற்றி அப்புறம் பேசிக்கலாம், சரி சொல்லி அவரை அனுப்பிடுங்க.” 

“தீர்மானமாகச் சொல்றியா அம்மா?”

“ஆமாம் அப்பா.”

ராஜநாயகம் தலை குனிந்தவாறு சற்று நேரம் நின்றிருந்தார். பிறகு மௌனமாக, மெதுவாக, தயங்கியபடி முன் புறம் சென்றார். 

“இரண்டு நாளிலே சொல்றேங்க,” என்றார் அவர்.

“நல்லது, உங்க பதில் நல்ல பதிலாகவே இருக்கட்டும்.” 

சிரித்தமுகத்துடன் பலராமையா சென்றார். 

ராஜநாயகம் வீட்டின் உள்ளே வந்தார். 

“அல்லி…!”

அல்லிக்கு ஏனோ அழுகை குமுறிக்கொண்டு வந்தது. அதை மிகவும் பாடுபட்டு அடக்கிக்கொண்டு பேசினாள்.

“அப்பா, என்னை ஒண்ணுங் கேக்காதீங்க. என் மனசு சரியா இல்லே, கொஞ்ச நேரம் தனியா இருக்க விடுங்க. ‘இப்பவும் ஒண்ணும்முழுகிப்போயிடலே; நீ ஒருவார்த்தை சொன்னா இப்பவே இந்த ஏற்பாட்டை நிறுத்திடுறேன்; உன்னோட சந்தோஷம் ஒண்ணுதான் எனக்கு முக்கியம்’னு கொஞ்ச நேரத்திற்கு முன்னே சொன்னீங்களே? அல்லிக்கு உடம்பு சுகமில்லே; அதனாலே கல்யாணம் இப்போதைக்கு நிறுத்தல்’ னு அவங்களுக்கு எழுதிடுங்க அப்பா!”

ராஜநாயகம் பெருமுச்செறிந்தார். அவர் முகத்தில் ஈயாடவில்லை. 

”அல்லி, நீ புத்திசாலி. தவறா எதுவும் நினைக்கமாட்டே சொல்லமாட்டே, செய்யமாட்டே. அந்த ஒரே நம்பிக்கையிலே நீ சொன்னபடி அவங்களுக்கு எழுதிடறேன். ஆனா உன்னோட மனமாற்றத்துக்குள்ளே ஏதோ பயங்கரமான காரணம் புதைஞ்சிருக்கிறதாக எனக்குத் தோணுது. அது என்னன்னு தெரிஞ்சுக்காத வரையிலே எனக்குச் சோறு தண்ணி இறங்காது; ராத்தூக்கம் வராது.இப்போ இல்லாவிட்டாலும்,கூடிய சீக்கிரம் அது என்னங்கறதை உன்னோட அப்பாவுக்கு சொல்லிடு அம்மா.” 

“ஆகட்டும் அப்பா. கட்டாயம் சொல்லுவேன்” சிரித்தபடி இவ்வாறு கூறிய ‘மக’ளின் முகத்தை ஏறிட்டுப்பார்த்தார், ‘தந்தை’. அவள் திடீரென்று ஒரு பத்து ஆண்டுகளைக் கடந்துவிட்டவள் போல் மட்டுமின்றி கல்வி கேள்வி, அறிவு அனுபவங்களிள் மிகத் தேர்ச்சியுடைய ‘நகரத்துப்பெண்’ போலவும் அவர் கண்ணுக்குத் தோன்றினாள். 

.’யாரப்ப நீ?’ – தெரு வாசலில் காரை நிறுத்தி விட்டு, “அல்லியம்மா இருக்காங்களா?” என்று கேட்டுக் கொண்டே படியேறிய மனிதனை நோக்கிக் கேட்டாள் அல்லி. 

“பலராம் பிக்சர்ஸிலிருந்து வர்றேன். நீங்கதான் அல்லி அம்மாவா? கூட்டிக்கொண்டு வரச்சொன்னாங்க.”

“யார் பலராமையாவா?”

“இல்லே உங்க ஐயா –ராஜநாயக ஐயா.”

அல்லி உள்ளே சென்றாள்; ராஜகுமாரிபோல் திரும்பி வந்தாள். அவளைச் சுமந்துகொண்டு கார் பறந்தது. 

“அருணாசலம், நீங்கதான் என்னோட உசிரு. ஆனா அது நீங்க களங்கமில்லாதவரா இருந்தாத்தான். நீங்க மாசு உள்ளவரா இருந்தா என் உசிரு செத்தது. அப்புறம் நான் நடமாடும் பிணந்தான். அந்த உண்மை தெரியற வரைக்கும் இந்த ஈடுபாடு. உண்மை எப்படி இருக்கும்?…” 

காரில் போகிறபோது மட்டும் அல்ல; எப்போதும் அவளுக்கு இதுவேதான் சிந்தனை. தன் உள்ளத்தை மரத்த நிலைக்கு உட்படுத்தும் நோக்கமும் இந்தப் புதிய ஈடு பாட்டிலே நிறைவேறும் என்பது அவள் எண்ணம். ஆனால் ராஜநாயகத்தினிடம் எதுவுமே சொல்லாமல் மறைத்து வைத்தது அவர் மன நிலையை அவள் அறிந்திருந்ததால் மட்டும் அல்ல; அதனால் பெரிய விபரீதங்கள் நிகழ்ந்து விடுமோ என்ற அச்சத்தினாலுந்தான்! சுகுணா என்ற பெண்ணை நேரில் பார்தது அவள் அனுமதி பெற்றுப் பிறகு அருணாசலத்தை மணக்கவேண்டும் என அவள் எண்ணினாள். 

கார் ஓடிக்கொண்டே இருந்தது. 

“அல்லி…!”

“வாத்சல்யம் ததும்ப அழைத்துக்கொண்டே உள்ளே நுழைந்த ராஜநாயகத்தை நாச்சியாரம்மா எதிர் கொண்டாள். 

”என்ன இது? நீங்க கூட்டிக்கிட்டுவரச் சொன்னதாக சினிமாக் கம்பெனி ஆள் வந்து அதைக் காரிலே கூட்டிப் போனானே?” 

“ஆ!…என்ன?…நான் கூட்டிக்கிட்டு வரச் சொன்னேனா? ஐயையோ! யார் வந்தாங்க? எங்கே இட்டுப் போனாங்க?” 

கேட்டுக்கொண்டே வந்தவர், நாச்சியாரம்மாவின் கையி லிருந்த கடிதத்தைக் கவனிக்கத் தவறவில்லை. 

ராஜநாயகம் வெடுக்கென்று கடிதத்தைப் பிடுங்கிப் படித்தார்.”அட பாவிப்பயலே!” என்று கூவினார். 

”வாத்தியாரையா!” 

ராஜநாயகம் கண்டார். நேர்முகமாக அருணாசலத்தையே கண்டார். 

”பாவி! மகாபாவி!”- பாய்ந்து அவன் கழுத்தைப் பிடிக்கப்போனார். அவன் தப்பித்துக்கொண்டு தூர விலகி, “வாத்தியாரய்யா! பைத்தியம் பிடிச்சிட்டுதா?” என்றான். 

“என் மகளை அநியாயமாகக் கொன்னுப்பிட்டேயடா பாவி! அவள் ஏன் கல்யாணத்தை ஒத்திப்போட்டாங்கறதை இந்தக் கடுதாசில்லே சொல்லுது?”

அருணாசலம் அவர் கையிலிருந்த கடிதத்தை வாங்கிப் படித்தான். “சுகுணா…! இப்படி ஒரு உறவுப் பொண்ணே எனக்குக் கிடையாதே!” என்றான். 

“சீ! மூடுடா வாயை! குட்டு வெளியானதும் இப்படி ஒரு புளுகா?” என்று சீறினார் ராஜநாயகம். அருணாசலம் பொறுமையோடு பேசினான். கடிதமும் புரளி; அல்லி கடத்தப்பட்டிருப்பதும் மோசடி என்ற முடிவை இருவரும் எட்டினர். உடனே “டாக்ஸி’ பிடித்து பலராமையா சினிமா கம்பெனியை நோக்கி விரைந்தனர். 

வழியில் பரதகலாகேசரி கனகசபை எதிர்ப்பட்டார். 

”சென்டிரல் ஸ்டேஷனிலே அல்லியைப் பார்த்தேன்”, என்று கனகசபை முடிப்பதற்குள் அருணாசலம் டாக்ஸி டிரைவரை, ஊக்கினான். “ஐயோ அல்லி” என்று ஆசனத்தில் சாய்ந்தார் வாத்தியார் ராஜநாயகம்.

– தொடரும்…

– ஆடும் தீபம் (நாவல்), முதற் பதிப்பு: மார்ச் 1967, செல்வி பதிப்பகம், காரைக்குடி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *