கதையாசிரியர்:
தின/வார இதழ்: மறுமலர்ச்சி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 20, 2021
பார்வையிட்டோர்: 3,388 
 
 

(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘எப்பொழுது ஆஸ்பத்திரியை விட்டு வெளியேறினாய்? ‘

‘நானா?’

‘இல்லை; எப்போது உன்னை வெளியே தள்ளி விட்டார்கள்? ‘

‘நேற்று’

‘இதுதான் உனக்கு முதல் பிரசவமா?’

‘ஆமாம், இதுவே முதலும் கடைசியுமென்று எண்ணுகிறேன்’

பெரியவள் சிரித்தாள்.

‘ஏன் சிரிக்கிறாய்?’

‘இதுவே முதலும் கடைசியுமாக இருக்கலாமென்றாயே அதை எப்படி உன்னால் சொல்லிவிட முடியும்?’

‘ஏன் முடியாது?’

அவ்வளவோடு நிறுத்திவிட்டு அவள் ஒரு நீண்ட மூச்சு விட்டாள். மற்றவள் சிறிது நேரம் மௌனமாக இருந்துவிட்டு மறுபடியும் ஆரம்பித்தாள்.

‘உனக்கு இப்பொழுது என்ன வயது?’

‘பதினெட்டு’

‘புருஷன் உன்னை விட்டுவிட்டானா?’

‘இல்லை’

‘செத்துப்போனானா?’

‘இல்லை’

அவளுடைய தொண்டை கரகரத்தது.

‘அப்படியானால்?’

அவள் ஒன்றுமே பேசாமல் மௌனமாக இருந்தாள். மற்றவள் அவ்வளவில் நிறுத்திவிட விரும்பவில்லை. தொடர்ந்து பேசிக் கொண்டேயிருந்தாள்.

“ஏன் பேசுகிறாயில்லை? ஒருவேளை அவனை உனக்குத் தெரியாதாக்கும்!”

“என்னை அப்படிப் பிசகாக நீ எண்ணக்கூடாது”

அவளுடைய வார்த்தைகளில் ஒருவித ரோசமும் ஆத்திரமும் கலந்து காணப்பட்டது.

மற்றவள்தான் இப்பொழுது பேச்சற்றிருந்தாள். அவளே தொடர்ந்து பேசினாள். ‘அவரை எனக்கு நன்றாகத் தெரியும். பல வருஷங்களாகத் தெரியும். வருஷக்கணக்காக அந்த வீட்டிலேயே சீவித்திருக்கிறேன்.’

‘அப்படியா?’

அவள் பிறகு மௌனமாகி இரண்டொரு பெருமூச்சு மட்டும் விட்டாள்.

‘உனது வாழ்வைக் கெடுத்தவன் எவனானாலும், அவனை “அவா” என்று சொல்ல உனக்கு வெட்கமாயில்லை?’

‘பழக்கத்தினாலே சொல்லிவிட்டேன். உண்மையில் மரியாதை செய்ய வேண்டும் என்று நான் கனவிலும் எண்ணுவதேயில்லை’.

‘அவன் இப்போது எங்கே இருக்கிறான் என்று நீ அறிவாயா?’

‘ஆமாம் நன்றாகத் தெரியும். ஆனால் அதைக் கேட்காதே!’

‘ஏன் அதை மறைக்க வேண்டுமென்று விரும்புகிறாய்?’

‘அதனால் யாருக்குமே பிரயோசனம் கிடைக்காது.’

‘நீ உனக்கு எப்படிப் பிரயோசனம் அற்றவளோ, அப்படியேதான் எனக்கும் பிரயோசனப் படமாட்டாய் என்பதை நான் தெரிந்து கொண்டேன்.’

‘எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை. நீ யார் என்பதையும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை’

‘நீ புத்திசாலியானால் இதற்குள்ளாகத் தெரிந்திருக்கமுடியும் இல்லா விட்டாலும் என்னை நன்றாகக் கவனித்துப்பார்!’

அப்பொழுது அவள் மடியில் கிடந்த அந்தச் சிசு வீரிட்டழுதது. அதைப் பார்த்துக்கொண்டே பெரியவள் மீண்டும் சொன்னாள்.

‘இதையாவது ஆஸ்பத்திரியில் விட்டு வரவேண்டும் என்று உனக்குப் படவில்லையே!’

‘என்னுடையது என்று இது ஒன்றுதானே இருக்கிறது. இதையும் இழந்துவிட்ட பிறகு நான் எதற்காக வாழவேண்டும்?’

‘நான் அல்லது என்னைப் போன்ற எவளும் உன்மாதிரி எண்ணுவதில்லை ‘

அவள் இந்தப் புதுமாதிரியானவளுடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அதற்குள் வெயில் மரக்கிளைகளைக் கடந்து அவர்களைச் சுடத் தொடங்கியது. இரண்டு பேருமாகவே எழுந்து மரத்தடியிலே போய் உட்கார்ந்தார்கள். குழந்தை அந்த ஏழைத் தாயின் அணைப்பிலே பாலைக் குடித்தபடி அயர்ந்து கிடந்தது. அவர்களுடைய பேச்சு மேலும் தொடர்ந்து சென்றது. பெரியவளே பிறகும் ஆரம்பித்தாள்.

‘உனக்கு வேறு யாரும் இல்லையா? இனி என்ன செய்ய உத்தேசித்திருக்கிறாய்’.

‘எங்கேயாவது வேலை செய்துதானே வயிற்றை வளர்க்க வேண்டும்?’

‘இந்தக்குழந்தையையும் வைத்துக்கொண்டு அப்படிச் செய்யமுடியுமா?’

பெரியவள் மிகுந்தபரிவுடனேயே இதைக்கேட்டாள். சிறிது நேரம் வரை அங்கே மௌனமே நிலைத்திருந்தது.

‘உனக்குக் குழந்தைகள் இல்லையா?’

இதற்கு ஒருமாதிரியான தொனியிலே அந்தப் பெரியவள் பதில் சொன்னாள். பதிலும் மிகவும் சுருக்கமாகவேயிருந்தது.

‘இருக்கலாம்’

இந்தப்பதில் அவளுக்குத் திகைப்பையே உண்டு பண்ணியது. அதனால் மறுபடியும் அவளே, “‘இருக்கலாம்’ என்றால் எனக்கு ஒன்றுமே விளங்கவில்லையே” என்று நிறுத்தினாள்.

‘ஆமாம்; அவைகள் ‘எங்கே’ இருக்கின்றன. ஒருவேளை இல்லை தானோ என்றும் என்னால் நிச்சயமாக சொல்ல முடியாது’

‘பிள்ளைகளைப் பெற்ற எந்தத் தாயும் உன்னைப்போல இருக்க முடியாதென்றே எனக்குப்படுகிறது. என்னளவில் நிச்சயமாகச் சொல்லமுடியும். என்னால் முடியாது.’

‘நீ சொல்லுவது வேறு உலகங்களுக்குப் பொருத்தமாக இருக்கலாம். ஆனால்? நம்முடைய இந்த உலகம் இருக்கிறதே, இதற்கு முற்றிலும் பொருந்தாது. நானும் முதலில் உன் மாதிரியே தயங்கினேன். கொஞ்சக் காலத்தின் பிறகே கேவலமான இந்த உலகத்தைப் பழிவாங்க வேண்டுமென்று முடிவு செய்து கொண்டு எல்லாவற்றையும் உதறித் தள்ளினேன். என் ஆசை உண்மையில் நிறைவேறிவிட்டது. பணம், படைத்த, மிருக இச்சை கொண்ட மனிதப் பிசாசுகள் தங்கள் இச்சைக்கு ஏழைகளாகிய எங்களைப் பலியெடுக்கிறார்கள். பிறகு பாவப் பெயரையும் சூட்டி உதைத்து தள்ளிவிடுகிறார்கள். அந்த நிலையில் ‘தாசீ என்ற அவப்பெயரோடு அலைவதைத் தவிர வழியுண்டா ? நீயே யோசித்துப்பார் ! தாசியாகவே இருக்காமல் தாசி என்ற பெயர் கேட்ட ஒருத்தி ஏன் அந்தத் தொழிலில் இறங்கக்கூடாது?. உண்மையில் உன்னுடைய கதையோடு சேர்த்து இதை யோசித்துப்பார். நான் சொல்வதில் எவ்வளவு சரியிருக்கும் என்பதை உணர்வாய்!’

அவள் மௌனமாகவே கேட்டுக் கொண்டிருந்தாள். பெரியவள் தொடர்ந்து பேசிக்கொண்டே போனாள்.

‘மனுஷ உள்ளமே இல்லாத உலகத்தில் நீ மட்டும் எதற்காக அந்த உள்ளத்தை வைத்துக் கொண்டு அழவேண்டும்?’

குழந்தை திடீரென்று வீரிட்டு அழுதது. அதை எடுத்து மார்போடு அணைத்துக் கொண்டு மறுபடியும் பாலை ஊட்டினாள் அந்தத் தாய். அப்பொழுது எதைத்தான் கண்டாளோ , மற்றவளுடைய கண்ணும் கலங்கியது. ஒருவேளை தன் குழந்தைகளினுடைய நினைப்புக்கள் தோன்ற அவளுள்ளமும் அலறியிருக்கக் கூடும். சிறிது நேரம் வரை ஒருவரும் பேசவில்லை . வெயில் காய்ந்துகொண்டே இருந்தது. முகத்தில் அரும்பிய வியர்வையைத் துடைத்துக் கொண்டு, சாப்பிட்டாயா?’ என்று அந்தப் பெரியவளே மற்றவளைப் பார்த்துக் கேட்டாள்.

‘நேற்று இரவுக்குப் பிறகு இல்லை ‘

‘காலையிலிருந்து ஒன்றும் அகப்படவில்லையா?’

ஒருபதிலுமே கிடைக்கவில்லை.

‘நான் இன்று உனக்கு ஒருவிருந்து போடப்போகிறேன்’ என்று மறுபடியும் அவள் தொடங்கினாள்.

உடனே ‘எதற்காக அப்படி விரும்பினாய்?’ என்று கேட்டாள் அந்தப் புதிய தாய்.

‘உன்னைப்போலவே ஒரு காலத்தில் நானும் தெருத்தெருவாக அலைந்திருக்கிறேன், இதைத்தான் காரணமாகச் சொல்ல முடியும். ஆனால் என்னோடு வந்து என்னைப் போலவே வாழ்க்கையை நடத்து என்று சொல்ல நான் விரும்பவில்லை . நீ மட்டும் விரும்பினால் தாராளமாக வரலாம். என்னால் இயன்ற உதவிகளைச் செய்து வழிகாட்டுவேன்’

பேச்சு முடிந்ததும் அவள் மௌனமாக இருந்தாள். மற்றவளும் சும்மா இருந்தாள்.

பேசினவளே மறுபடியும் தொடங்கினாள்.

‘நேற்று வழக்கத்துக்கு மாறாக ஒருவன் நிறையப் பணந்தந்தான். அவனும் எங்கோ சூதில் அடித்துக்கொண்டு வந்ததுதானே! அவ்வளவும் இங்கேதான் இருக்கிறது. அதை உனக்கே கொடுத்துவிடப் போகிறேன்.’

அவள் பணத்தை எடுத்தாள். அதற்குள் ‘எனக்கு ஒரு ரூபா மட்டும் கொடுத்தால் போதும்’ என்றாள் மற்றவள்.

‘எப்படி உனக்கு அது போதுமென்று எண்ணினாய்?’

‘ஒருதடவை நிறையச் சாப்பிட ஒருரூபாபோதுமல்லவா? அவ்வளவுதான் இனி எனக்குத் தேவை என்று முடிவு செய்து விட்டேன்’

‘நல்லது உன்னுடைய எந்த முடிவுக்கும் குறுக்கே நிற்க நான் விரும்பவில்லை என்று சொல்லிக் கொண்டே ஒரு ரூபாவை மட்டும் எடுத்துக் கொடுத்துவிட்டு, நான் போய்வரட்டுமா?’ என்று எழுந்தாள் அந்தப் பரோபகாரி.

குழந்தையை மடியிலே அணைத்து வைத்தபடியே நமஸ்கரித்து விட்டு, ‘கடவுளுடைய கணக்குப் புஸ்தகத்தில் உன்னைப்பற்றி நிச்சயமாக நன்றாகவே எழுதப்படும்’ என்றாள் அந்த அபலை.

‘அந்தக் கடவுள் செத்துப் போனான் என்ற கதை நீ இதுவரை கேட்டதில்லையாக்கும்!’ என்று ஒரு மாதிரிச் சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு அவள் நடந்து மறைந்தாள்.

எங்கோ சாப்பாட்டை முடித்துக்கொண்டு மறுபடியும் அந்த மரத்தடிக்கே வந்து அவள் உட்கார்ந்தாள். அவளுடைய கண்கள் அடிக்கடி மேற்கே சரிந்து செல்லும் சூரியனையே பார்த்துக் கொண்டிருந்தன. அஸ்மித்ததும் குழந்தையையும் ஏந்திக் கொண்டு நடக்கத் தொடங்கினாள். இளைத்து வலுவற்ற அந்த நிலையிலும் அவளால் வேகமாக நடக்க முடிந்தது. நடுச்சாமமாவதற்குள் தான் போக வேண்டிய வெகுகாலம் பழகின அந்த இடத்துக்குப் போய்விட்டாள். ஒரு நாள் எந்தத் தோட்டப் பக்கத்தால் எந்த நேரத்தில் வெளியேறினாளோ, அதே பாதையால் அதே நேரத்தில் உள்ளே நுழைந்தாள். வீட்டிலிருந்த எல்லோரும் நன்றாகத் தூங்கிவிட்டார்கள். அங்கே படுத்துக்கிடந்த அவள் வளர்த்த நாய் மட்டும் ஒரு முறை உறுமிவிட்டு அடையாளங் கண்டுகொண்டு ஓடிவந்து வாலையாட்டிற்று. அதைத் தடவிக் கொடுத்துவிட்டு நடந்தாள். நாயும் பின்னாலே நடந்தது.

அந்தப் பக்கத்தில் உள்ளே நுழைய ஒரு கதவு மட்டும் இருந்தது. சில சமயங்களில் அதையும் பூட்டி விடுவார்கள். அந்த நினைவு வந்ததும் மெல்ல அதில் கையை வைத்தாள். அது தானாகவே திறந்து வழிவிட்டது. நேராக உள்ளே சென்றாள். அவள் கால்கள் மாடியறையை நோக்கி நடந்தன.

அங்கேதான் அவளை இந்த நிலைக்குக் கொண்டு வந்த உத்தம பிரமச்சாரி தூங்குவது வழக்கம்.

ஒரு முறை அறையின் வாயிலுக்கு வந்ததும் அவள் உள்ளம், உயிர் எல்லாம் கலங்கி நிலைக்கு வந்தன. பிறகு குழந்தையை தன் அணைப்பிலிருந்து எடுத்து முத்தமிட்டாள். அது மெல்ல முனகியது. அவள் கண்களிலிருந்து தாய்மையின் உதிரம் போல் கண்ணீர் பீறிக்கொண்டு வந்தது. ஆயினும் அவள் தைரியத்தை இழந்துவிடவில்லை . தான் கிழித்து வைத்திருந்த பாதிப் புடவையை விரித்து குழந்தையைக் கீழே படுக்க வைத்துவிட்டு நிமிர்ந்தாள்.

திடீரென்று கதவு திறக்கப்பட்டது. ‘யாரது?’ என்று கேட்க வாயெடுத்தவன், அவளைக் கண்டதும் திகைப்படைந்து நிறுத்திக்கொண்டான்.

அதற்குள் அவள் திரும்பினாள். அவனோ அப்பொழுதும் பேசவிரும்பாதவன் போலவே வாயடைத்து நின்றான். ஆனால் அவள் பேசினாள்.

‘உனது மானத்தைக் காப்பாற்றவே ஒரு நாள் வெளியேறினேன். உன்னுடையது அதோ இருக்கிறது. உன் வீட்டிலிருந்த அடிமை ஒருத்தி பெற்றதானாலும் அது உனது சொத்து ஏன்? மறுக்கிறாயா?’

அவன் அப்பொழுதும் மரமாகவே நின்றான். அவள் தலையை ஒருமுறை தூக்கி அவனைப் பார்த்துவிட்டுக் கீழே கிடந்த குழந்தையையும் பார்த்தாள். அந்தப் பார்வையில் அவனை நடுங்கச் செய்யும் ஏதோ ஒரு சக்தியிருந்தது.

அவள் திரும்பி இரண்டு படி இறங்கிய பிறகே அவனால் பேச முடிந்தது. வந்த இரண்டொரு வார்த்தைகளும் கிணற்றினுள்ளேயிருந்து கேட்பது போலவே ஒலித்தன.

‘நீயும் இங்கேயே இருக்கலாம்.’

‘நான் அதற்காக இந்த நேரத்தில் வரவில்லையே!’

நிதானமாகவும் உறுதியாகவும் அவள் இதைச் சொல்லிவிட்டு நடந்தாள். அவளுடைய நடையிலும் ஒரு கெம்பீரம் இருந்தது.

தோட்டத்தின் எல்லையைக் கடந்து தெருவுக்கு வரும் வரை அந்த நாயும் அவளுடன் சென்று திரும்பியது.

தெருவில் நின்று அந்த வீட்டை ஒருமுறை பார்த்தாள். குழந்தையின் மிருதுவான கீச்சுக் குரல் மட்டும் கேட்டது. உடனே கைகளினால்காதுகளை அடைத்துக் கொண்டு நடக்கத் தொடங்கினாள். அந்த நடை ‘தனக்கே தெரியாத ஏதோ ஒரு உலகத்தை நோக்கி நடக்கிறாள்’ என்பதையே காட்டிற்று.

– மறுமலர்ச்சி கார்த்திகை 1947

– மறுமலர்ச்சிக்கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 1997, ஈழத்து இலக்கியப் புனைகதைத் துறையின் மறுமலர்ச்சிக் காலகட்டத்துச் சிறுகதைகள் இருபத்தியைந்து 1946 – 1948, தொகுப்பாசிரியர்: செங்கை ஆழியான் சு. குணராசா, வெளியீடு: கல்வி, பண்பாட்டு அலுவல்கள், விளையாட்டுத்துறை அனமச்சு, திருகோணமலை

– துறவு (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: ஜூலை 2004, ஸ்ரீலங்கா வெளியீடு, யாழ்ப்பாணம்.

– ஈழத்துச் சிறுகதைக் களஞ்சியம், முதற் பதிப்பு: நவம்பர் 2019, பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வடக்கு மாகாணம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *