அவள் அன்பு தேவதையே

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 25, 2021
பார்வையிட்டோர்: 3,714 
 
 

வீதியை நோக்கி பார்த்தபடி முன் வாசல் படிக்கட்டில் இருந்து குருவிகள் ரீங்காரமிடுவதையும் வீதியால் வாகனங்கள் செல்வதையும் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தான் ரகு. வீதியில் வழக்கத்துக்கு மாறாக வாகனங்கள் மிகக் குறைவாகத்தான் இருந்தன. கொரோனா தொற்று நோய் வீரியம் காரணமாக நடமாட்டம் மட்டுப்படுத்தப்பட்டிருந்தமையால் அனுமதிக்கப்பட்ட வாகனங்கள் மட்டுமே சென்றுகொண்டிருந்தன. இது தான் வாகனங்கள் குறைவாக காணப்படுகின்றமைக்கு காரணம். ஆயினும் வழக்கமாக காணக்கிடைக்காத சில குருவியினங்களுடன் பறவைகளின் தொகை அதிகமாகத்தான் காணப்பட்டது. வீதியில் மக்கள் நடமாட்டம் மிகக்குறைவாக இருந்தமையும் வாகன இரைச்சல் குறைவாக இருந்தமையும் பறவைகள் சுதந்திரமாக நடமாட அனுமதித்திருந்தது. தனது விரல்களை பின்னியும் குடைந்தும் ரசித்துக்கொண்டிருந்தவன் தனது சின்ன விரலை மெதுவாக வரடியவனாக ஆழ்ந்த சிந்தனைக்குள் தன்னை அறியாமலேயே மெதுவாக நுளைந்துகொண்டிருந்தான்.

இவ்வாறு அமைதியாக இயற்கையழகை ரசிக்கும்போது கைகளை பின்னி பின்னர் ஒவ்வொரு விரல்களாக நெட்டி முறித்து வருடிவிட்டுக்கொண்டு இருப்பது அவனுடைய வழக்கம். அப்படியே மெதுவாக அந்த சிந்தைக்குள் ஆழமாக மூழ்கத்தொடங்கினான்.

அப்போது அவனுக்கு எட்டு வயது திருகோணமலை வளனார் ஆண்கள் பாடசாலை இரண்டாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தான். அப்போது முதலாம் வகுப்பு இரண்டாம் வகுப்பு என்றுதான் வகுப்புகள் இருக்கும். ஏழு வயதில் பாடசாலைக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்வார்கள். ரகு நன்றாக படிப்பான். ஆரம்பம் முதல் ஒவ்வொரு பரீட்சையிலும் முதலாவது மாணவனாக தேர்ச்சிபெறுவதை எந்த சந்தர்ப்பத்திலும் யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டான். அவ்வளவு ஆர்வமாக கவனம் செலுத்தி தனது படிப்பை தொடர்ந்தான். தாங்கள் முதல் மாணவர்களாக வரவேண்டும் என்று முயற்சிசெய்து கொண்டிருந்த ஏனைய சிலரும் அவனது வகுப்பில் இருந்தார்கள். ஆனாலும் வெற்றி பெறமுடியவில்லை. இத்தனைக்கும் அவனது குடும்பம் வசதியான குடும்பமல்ல. பாடசாலையில் கற்பிக்கப்படுவது எல்லாம் உடன் மனதில் பதிந்துவிடும் அவ்வளவு ஞாபக சக்தி அவனுக்கு. பாடசாலையில் கற்பிப்பது தவிர ஏனைய நேர சகல கற்றல் செயற்பாடுகளையும் சுயமாகவே மேற்கொண்டான்.

இதனால் அவனுக்கு வகுப்பில் அனைவரும் நெருக்கமான நண்பர்கள். போட்டியிடும் மாணவர்களும் கூட நல்ல நண்பர்களாகவே இருந்தார்கள். இவன் கற்ற பாடசாலையும் அவ்வளவு வசதி படைத்த பாடசாலையென்று கூறமுடியாது. அந்தக் காலப்பகுதியில் அந்தப் பாடசாலையில் அடிப்படை வசதிகள்கூட மிகக் குறைவாகவே இருந்தது. பாடசாலை நகரப்பகுதியில்தான் இருந்தது. ஆயினும் ஏனோ அந்த பாடசாலையின் வசதிபற்றி யாரும் கவனமெடுத்ததாக தெரியவில்லை. அந்த வயதில் கூட பாடசாலை வசதி குறைபாடுகள் பற்றி மிகவும் கவலைப்பட்டிருக்கிறான்.

இரண்டாம் வகுப்புதானே எல்லா மாணவர்கள் மத்தியிலும் சுட்டித்தனம் நிறைந்தே காணப்பட்டது. இவனும் ஏனைய நண்பர்களோடு சேர்ந்து சின்ன சின்ன சுட்டித்தனங்கள் செய்வான். எல்லாமே விளையாட்டு தொடர்பானதாக தான் இருக்கும்.

மாணவர்கள் அதுகும் சிறுவர்கள் விளையாடுவதென்றால் அவ்வளவு ஆர்வம் அவர்களுக்கு. ஒவ்வொருநாளும் காலை பாடசாலை வந்ததும் வகுப்பில் பாடங்கள் நடந்துகொண்டிருந்தாலும் பாடத்தில் கவனம் செலுத்துவதோடு இடைவேளை எப்போது நெருங்கும் என்று காத்துக்கொண்டு இருப்பார்கள். இடைவேளை முடிவடைந்து மீளவும் வகுப்பு தொடங்கும் முன்னர் பிஸ்கட் கொடுப்பார்கள் அதை வாங்கி கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு மிகுதியை காற்சட்டை பொக்கட்டுக்குள் வைத்துக்கொண்டு பாடசாலை முடிந்ததும் சாப்பிடுவார்கள் அல்லது வீட்டிற்கு தங்கள் தங்கையையோ தம்பியையோ நினைத்து அவர்களுக்காக கொண்டுபோவார்கள். இடைவேளை மணி அடித்தவுடன் ஓட்டமாக ஓடிச்சென்று வெளியே விளையாடத் தொங்கிவிடுவார்கள். அப்போது விளையாட்டிலே மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். இன்றும் அந்த ஆர்வத்தோடு எப்போது இடைவேளை வரும் என்று காத்துக்கொண்டிருந்தான் ரகு. அவனைப்போல தான் ஏனைய மாணவர்களும் அந்த நேரத்துக்காக ஆவலோடு காத்துக்கொண்டிருந்தார்கள்.

பார்த்துக்கொண்டிந்தவர்களின் எதிர்பார்ப்பு வீண்போகவில்லை அதிபரின் வாசலுக்கருகிலிருந்து

டிங்…. டிங்…. டிங்….. டிங்…. மணி கணீர் கணீர் என்று ஒலித்தது.

ஒட்டு மொத்த குட்டிகளும் ஓ… வென கூச்சலிட்டவாறு பாடசாலைக்கு முன்புறமாக இருந்த முற்றத்தை நோக்கி ஓடினார்கள்.

பார் அவுட்டு விட்டதும் ஓடிற நாய்கள் மாதிரி கத்திக் கொண்டு ஓடுதுகள்…. சனியன்கள்… சனியன்கள் என்று பேசியபடி முகத்தை முறாய்ப்பாய் வைத்துக்கொண்டிருந்தாள் அவர்களின் வகுப்பாசிரியை.

பாடசாலைக்கென்று விளையாட்டு மைதானம் ஏதும் இல்லை. ஒரு புறம் நீளமாக பாடசாலைக் கட்டடம் மறுபுறம் மரியாள் கோவில் கட்டடம் அக்கட்டடம் பாடசாலையின் நீளத்துக்கு சமமாக இருந்தது. இரண்டு கட்டடங்களுக்கும் மத்தியில் மேற்குப்புறமாக தெற்கு நோக்கி பார்த்தபடி ஆலயத்திற்கு சொந்தமான மேடையொன்று அமைந்திருந்தது. அந்த முற்றத்தின் எல்லையில் ஒரு மஞ்சள் நிற பூக்களை பூத்துச்சொரியும் பாரிய மரம். அந்த மரத்துக்கு கீழே மாணவர்கள் வட்டமாக அமர்ந்திருந்தும் சில வேளைகளில் சில பாடங்களைப்படிப்பதுண்டு. ஏறத்தாள எண்பதடி நீளம் முப்பதைந்தடி அகலமும் இருக்கும் அந்த முற்றம். அதில் தான் இளைவேளையின் போது அனைவரும் விளையாடுவார்கள். இடைவேளையின்போது மட்டுமல்ல பாடசாலை வருடாந்த விளையாட்டுப்போட்டிக்கு முன்னரான பயிற்சிகளும் இங்குதான் நடக்கும்.

பலவிதமான விளையாட்டுக்களையும் விளையாடுவார்கள் இந்த சிறுவர்கள். மறக்க முடியாத பல விளையாட்டுக்கள் இவர்களது இடைவேளை நேரத்தில் பங்கெடுத்துக்கொள்ளும். மிக்க மகிழ்சியோடும் குதூகலத்தோடும் அந்தப்பொழுது கலைந்து போகும்.

ஒடிப்பிடித்தல், கெந்திப்பிடித்தல், குதிரையோட்டம், ஒளித்துப் பிடித்தல் மற்றும் இரண்டு குழுவாகப் பிரிந்து மிகச்சிறிய மரக்கொப்பை நடுவில் குத்தி வைத்துவிட்டு ஒருபக்கத்திலிருப்பவர் ஓடிவந்து அதை எடுத்துக்கொண்டு ஓட மற்றப்பக்கத்திலிருந்து ஒருவர் வந்து முதல் வந்த அடுத்த அணியைச் சார்ந்தவரை அந்த சிறிய மரக்கொப்பை எடுத்து செல்லாமல் தடுக்க வேண்டும் அல்லது அவர் அந்த கொப்பை எடுத்து ஓடும்போது அவரது எல்லையை தாண்டுவதற்கு முன்னர் அவரை அடிக்க வேண்டும். அடித்தால் இந்தக் குழுவுக்கு வெற்றி இல்லா விட்டால் மற்றக்குழுவிற்கு வெற்றி. இது இவர்களது பிரபலமான விளையாட்டு. இதைத் தான் அடிக்கடி விளையாடுவார்கள்.

அதையும் விட அந்த சின்ன வயதிலேயே அவர்களுக்குள் குழு பிரிந்து சண்டை செய்வார்கள். இரண்டு குழுவிலும் பெரிய சண்டியர்கள் ஒருவர் அல்லது இருவர் இருப்பார்கள். குழுக்களில் இருப்பவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் அந்தந்த குழுக்களுடன் சேர்ந்து செயற்படுவார்கள். இடை வேளை நேரத்தில் இந்த குழுக்களுக்கிடையிலான சண்டைகளும் அவ்வப்போது இடம்பெறும்.

இந்த குழுக்களுக்குள் ரகு மற்றும் இன்னும் படிப்பில் முன்னணியில் இருக்கும் சிலரும் பக்கம் சார்ந்து சேர்வதை தவிர்த்துக்கொள்வார்கள். அந்த சண்டைக்கோஸ்டிகளும் இவர்களுடன் அனேகமாக சண்டைக்கு போகமாட்டார்கள் தங்கள் சண்டைக்குள் இவர்களை இழுக்கவும் மாட்டார்கள். மிகவும் அவதானமாக ரகுவோடு பழகுவார்கள் எந்த சந்தர்ப்பத்திலும் அவனது நட்பை இழந்துவிட யாருக்கும் விருப்பம் வராது. இலகுவில் யாரும் அவனுடன் பொருதமாட்டார்கள் மாறாக மிகுந்த நட்பாகவே இருப்பார்கள். அவன் முதல் மாணவனாக இருப்பதும் மிகவும் அமைதியான சுபாவம் உள்ளவனாக இருப்பதுமே அதற்கு காரணம். முடிந்தளவு முயற்சிபண்ணி அவர்களுக்குள் பெரிய அளவிலான சண்டை மூண்டுவிடாதபடி பார்த்துக்கொள்வார்கள்.

தங்கள் குழு உறுப்பினர்களுக்குள் அவர்கள் பேசிக்கொள்வதையும் சிலசந்தர்ப்பங்களில் ரகு அவதானித்திருக்கிறான். டேய்… மச்சான்… ரகுக்கு மட்டும் ஒண்டும் பிரச்சனவராம பாத்துக்கொள்ளோணும் சரியோ… அவன் பாவம்டா… இதுக்கெல்லாம் அவன இழுத்திடக்கூடாது.. மற்றவர்களும் அதை ஆமோதித்து ஓமோம்… அவன… இதுக்குள்ள இழுக்கக்கூடாது… என்று பதிலிறுப்பார்கள். இதேபோலதான் மற்றக் குழுவிலும் சம்பாசணைகள் இடம்பெறும்.

அன்றைக்கு இடைவேளைக்கு வெளியே வந்தவர்கள் குழுப்பிரிந்து அந்த விளையாட்டை விளையாடிக்கொண்டிருந்தார்கள். விளையாட்டு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. ரகுவும் விளையாட்டில் தான் இருந்தான். நல்ல மகிழ்சியாக ஆரவாரத்தோடு விளையாடிக்கொண்டிருந்தான். விளையாட்டில் எவ்வளவு அக்கறையாக இருப்பானோ அதேபோல் மணி எப்போது அடிக்கும் என்ற எதிர்பார்ப்பிலும் கவனமாக இருப்பான். காரணம் இவனைப்பொறுத்தவரை வகுப்பில் முதல் மாணவனாக இருப்பதுபோல் மணி அடித்ததும் ஓட்டமாக ஓடிப்போய் முதல் வரிசையில் நிற்கவேண்டும் என்பது அவனது தீராத அவாவும்கூட. அதுமட்டுமல்ல இந்த வரிசையில் வைத்துத்தான் அவர்களுக்கு பிஸ்கட்டும் வழங்குவார்கள்.

அன்றைய விளையாட்டு களைகட்டியிருந்தது ஆனால் விளையாட்டில் அந்த குழுக்களின் முக்கிய நபர்கள் சிலர் பங்கெடுக்கவில்லை. இவனுடைய மனதில் அவர்களை காணாதது ஏதோ உறுத்திக்கொண்டிருந்தது. அவனது கணிப்பு தவறாகவில்லை. இரண்டு குழுவும் எங்கிருந்தோ திடீரென அந்த முற்றத்தில் தோன்றினார்கள். தற்கால படங்களில் வருவதுபோல் கெட்டப்பில். அவர்கள் வரவோடு விளையாட்டு குளம்பிப்போனது. குழுக்கள் இரண்டும் சண்டைக்கு தயாரானது அவர்களுக்குள் முறுகல் நிலை உச்சத்துக்கு வந்துகொண்டிருந்தது.

ரகு ஓட்டமாக ஓடி வந்தான் புலேஸ்…. பொறு… பொறு… வேண்டாம்டா.. சண்டை வேண்டாம்.. நிப்பாட்டுங்கடா. அதேபோல் அடுத்த குழுவிடமும் ஓடிப்போய் பாஸ்கர்… டேய் வேண்டாம்… நிப்பாட்டுங்கடா…

ரகு… நீர் இதுக்குள்ள வராதயும்… உமக்கும் அடிகிடி.. பட்டிடப்போகுது… நீர்.. அங்கால.. போம்.. மற்ற குழுவில் இருந்து பாஸ்கர்தான் சொன்னான்.

மச்சான் என்ன.. ரகு இதுக்குள்ள தலப்போடுறேர்… என்னண்டு கேக்கவா.. புலேஸ் குழுவிலிருந்து ஒருவன் புலேஸிடம் கேட்க. டேய் சும்மா இருடா… அவன் பாவம்…. அவனிட்ட ஒன்டும் பிரச்சனை பண்ணாத… என்று புலேஸ் பதிலிறுத்தான்

ரகு மீண்டும் மீண்டும் மாறி மாறி இரண்டு பக்கமும் சென்று அவர்களை சமாதானம் செய்து கொண்டிருந்தான். ஆனால் சிறுசுகளாக இருந்தாலும் அவர்களது வைராக்கியம் ஒரு கைபாத்துத்தான் நிற்பாட்டுவது என்ற தோரணையில் இருந்தது.

சமாதானப்படுத்திக்கொண்டிருந்த ரகு அத்தோடு கடவுளே கெதியா மணியடிச்சிடோணும் என்று கடவுளை மனதுக்குள் வேண்டிக்கொண்டும் இருந்தான்.

மெல்லம் மெல்லமாக குழுச்சண்டைக்கான தயார் நிலை உச்சநிலையை அடைய எத்தனித்துக் கொண்டிருந்தது. ரகுவும் விட்டபாடில்லை அவன் வேண்டிக்கொண்டதுபோல் டிங்… டிங்…. டிங்… மணி சத்தம் வரவேண்டிய பக்கத்திலிருந்து வந்தது. இப்போ எப்படியும் எல்லேரும் வகுப்படைக்குள் சென்று விடவேண்டும் ஆகவே இனி சண்டையிருக்காது என்ற நம்பிக்கையோடு ரகு முதலிடத்தை பிடிக்க வகுப்பறை கதவை நோக்கி ஓட்டமாய் ஓடினான்.

ஓட்டமாய் ஓடி வந்தவன் முதலாவது ஆளாக கதவு வாசலில் வந்து நின்றான். உள்ளே இருந்து மற்றொரு மாணவன் கதவை அடித்து சாத்தினான். முதலில் கதவை மூடி எல்லோரும் வந்து நின்ற பின்னர் தான் கதவை திறந்து ஒவ்வொருவராக பிஸ்கட்டை கொடுத்து வகுப்பறைக்கு உள்ளே எடுப்பார்கள். பிஸ்கட் கொடுக்கும் பணியை செய்யும் மாணவர்களில் ஒருவன்தான் கதவை அடித்து சாத்தியது.

அடே… ராஜன்… கதவ திறடா… ஐயோ… ஐயோ…. ராஜன் கதவ திறடா…. என்ர கை விரல் கதவுக்க மாட்டிற்றுடா… கதவ திறடா… ஐயோ…. ஐயோ…. ராஜன் கதவ திறடா…

ரகுதான் அலறினான். இரத்தம் சொட்டிக்கொண்டிருந்தது. அவனுடைய சின்ன விரல் கதவுக்கும் நிலைக்கும் இடையில் மாட்டிக்கொண்டு விட்டது. அவனுக்கு மிகவம் வலி எடுத்தது. ஆனாலும் அழவில்;லை. கதவை திறக்க சொல்லி சத்தம் போட்டுக்கொண்டு மட்டும் இருந்தான்.

இப்போது தான் மற்ற மாணவ நண்பர்களும் இதை அவதானித்தார்கள். இரத்தம் சொட்டிக்கொண்டிருந்ததை அவதானித்து அவர்களும் சேர்ந்து கதவை அடித்துக்கொண்டு கத்தத் தொடங்கினார்கள்.

ராஜன் கதவ திற… ரகுவின்ர கை விரல் கதவுக்க மாட்டிற்று கெதியா… திற… ரெத்தம் போகுதுடா கெதியா திறடா…. பலபேர் சேர்ந்து கதவை தட்ட அது பெரிய சத்தமாக கேட்டது.

இந்த கதவை தட்டிய சத்தமும் எல்லோரும் சேர்ந்து கூக்குரலிட்ட சத்தமும் கேட்டு அவர்களுடைய வகுப்பாசிரியர் அவ்விடத்திற்கு வந்தார்.

என்னடா… கத்திறீங்கள்…. இருங்கோவன் கதவ திறப்பாங்க தானே… பசாசுகள் நாய் மாதிரி கத்திறீங்க…. சனியன்கள்…

ரீச்சர் ரகுவின்ர கை விரல் கதவு இடுக்கில மாட்டுப்பட்டிட்டு.. ரெத்தம் போகுது ரீச்சர்… கதவ திறங்க ரீச்சர்…

ஆசிரியை கதவை மெல்ல திறந்தார். அதற்குள் நிறைய இரத்தம் அந்த இடத்தில் சொட்டியிருந்தது.

ரகு கதவு இடுக்கில் சிக்கியிருந்த விரலை மெதுவாக வெளியே எடுத்தான். வலி மிகவும் அதிகமாக இருந்தது. வலி மேலீட்டோடு விரலை மெதுவாக பார்த்தான். சிறிய விரலின் முன்பகுதி இரண்டாக பிரிந்திருந்தது. அப்படியே கையை மற்றக்கையால் இறுக்கி அழுத்திப் பிடித்தபடி உள்ளே நுளைந்தான்.

அனைத்து மாணவர்களினதும் கண்கள் பனித்துப்போய் ஏக்கத்துடன் இவனையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். வெளியே குழுச்சண்டைக்கு தயாராக இருந்த குழுத்தலைவர்கள்தான் இவனை தாங்கலாக உள்ளே அழைத்துச் சென்றார்கள்.

ரகு வாரும்…. உள்ள வாரும்… புலேஸ் மற்றவனிடம் புடிமச்சான் வடிவா தாங்கிக்கொண்டு உள்ள கூட்டிக்கொண்டுபோய் கதிரையில் இருத்துவோம்…. என்று கூற மற்ற குழுத் தலைவன் பாஸகரும் சேர்ந்து கைத்தாங்கலாக உள்ளே ரகுவை அழைத்து வந்து கதிரையில் அமர்த்தினார்கள்.

சனியன்கள்….. சனியன்கள்…. என்ர உயிர எடுக்கிறதுக்கெண்டு வருகுதுகள் இங்க.. இதுகளையெல்லாம் கொண்டுபோய்… என்று திட்டித் தீர்த்துக்கொண்டிருந்தாள் ரகுவின் வகுப்பாசிரியை. இவ்வளவு பிரச்சனையாகி எட்டு வயதேயான சின்னஞ்சிறிய மாணவன் விரல் கதவு இடுக்கில் சிக்கி துண்டிக்கப்பட்டிருக்க அதைப்பற்றி துளியும் கவலையோ கரிசனையோ இல்லாமல் அவள் நின்றுகொண்டிருந்தாள். அவளது முகத்தில் உள்ளத்துக்குள் எரிந்து விழுவது தெளிவாக தெரிந்தது. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று முன்னோர்கள் சும்மாவா சொன்னார்கள். இவளுடைய உள்ளத்தில் இருந்த வக்கிர குணம் முகத்தில் பளிச்சிட்டுக்கொண்டிருந்தது. இதுகள் வீடுவாசல்ல யெல்லாம் எப்பிடி இருக்கிதுகளோ… இதுகளின்ர தாய் தகப்பன் எப்பிடித்தான் சமாளிக்குதுகளோ… இதுகளால எங்களுக்குத்தான் கரச்சல்.. சனியன்கள்… சனியன்கள்… என்று இன்னமும் பொரிந்து தள்ளிக்கொண்டிருந்தாள்.

ரீச்சர்… ரகுக்கு ரெத்தம் இன்னும் போய்கொண்டு இருக்குது…. மருந்து ஏதாவது போடவேணும்.. போட்டாத்தான் இரத்தம் போறது நிக்கும் ரீச்சர்… பாலேஸ் உரத்து திட்டிக்கொண்டிருந்த ரீச்சரை நோக்கி கத்தினான்.

ரகுவின் அருகில் சென்ற ஆசிரியை எங்க பராக்கு பாத்துக்கொண்டு கைய கதவுக்க வச்சனீ… பாத்து கவனமா நிக்க தெரியாதா உனக்கு…. மூதேசி.. இங்க எங்களுக்கு ஆக்கின தாறத்துக்கெண்டு வாறனீங்களே… என்று பேசியபடி ரகுவின் தலையில் குட்டிவிட்டு சரி அது ஒண்டும் செய்யாது… எல்லாம் சரியாகிடும்… என்று வேண்டா வெறுப்பாக கூறிக்கொண்டு அங்கே செய்து வைக்கப்பட்டிருந்த கைப்பணிப்பொருட்களில் ஒன்றில் இருந்த சிறிய துணி ஒன்றை எடுத்து விரலை சுற்றி கட்டும்படி அங்கு நின்ற புலேஸிடம் கொடுத்தாள். அங்கு முதலுதவிக்கான எந்த பொருளும் இருக்கவில்லை.

புலேஸ் ரகுவின் கையை இறுக்கமாக பிடிக்க பாஸ்கர் துணியை வாங்கி கட்டிவிட்டான். ரகுவோ வலி தாங்க முடியாது அவஸ்தையோடு துணியை கட்ட ஒத்துளைத்துக்கொண்டு இருந்தான்.

கட்டி முடித்ததும் நீ புத்தகங்கள் எல்லாத்தையும் எடுத்துக்கொண்டு… வீட்ட போ.. அங்கபோய் நடந்தத சொல்லி ஆசுப்பத்திரில போய் மருந்தக்கட்டு… என்று அதே கடுப்போடு சொல்லி முடித்தாள் வகுப்பாசிரியை.

வலி ஒருபுறம்… அந்த ஆசிரியர் நடந்துகொண்ட முறையினால் ஏற்பட்ட கவலையுடன் காயப்பட்ட கையை மேலே ஓரளவு அந்தரத்தில் உயர்த்தியவாறு புத்தகக் கட்டை கையிலெடுத்துக்கொண்டு அப்படியே தனது முதலாம் ஆண்டு வகுப்பறையை திரும்பிப்பார்த்தான்.

என்ன மகன்…. என்னப்பன் நடந்தது…. சரியா வலிக்கிதா… கொஞ்சம் பல்லக்கடிச்சுக்கொண்டு பொறுத்துக்கொள்ளுங்கோ… நாங்கள் உடனே ஆசுப்பத்திரிக்கு போய் மருந்து போடுவம்… டொக்டர் மருந்து தருவேர் அதக் குடிச்சா.. நோ.. வலி ஒண்டும் தெரியாது.. அப்பிடியே வீட்டை கொண்டு பொய் விட்டு விடுறன் நீங்கள் வடிவா நித்திரைகொள்ளலாம்… பிறகு நோகாது என்ன.. விரல் காயம் ஒரு நாலஞ்சு நாள்ல சரியாகிடும்.. ஒண்டும் கவலப்படக்கூடாது சரியா.. மகன்… வாறிங்களா.. ஆசுப்பத்திரிக்கு போவம்… அந்த அன்பு தேவதை அன்னை மரியாள் வந்தது போலவே வகுப்பறைக்குள் இருந்து கொண்டு ஓட்டமாய் ஓடிவந்து அவனுடைய தலையை வருடி விட்டவாறு அவனை அணைத்துக்கொண்டு கூறுவது போன்ற பிரமை மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்தது.

அவனது முதலாம் ஆண்டு ஆசிரியை அன்றைக்கென்று பாடசாலைக்கு வரவில்லை. அவன் ஆண்டு ஒன்று படிக்கும்போது அந்த ஆசிரியை இப்படித்தான் நடந்துகொள்வார். அந்த நினைவுதான் இப்படியே அவன் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

பாஸ்கர் மற்றும் புலேஸ் இருவரும் ஆசிரியரிடம் அனுமதியை பெற்றுக்கொண்டு ரகுவை வீட்டிற்கு அழைத்துச் சென்றுகொண்டிருந்தார்கள்

இருவரும் ஆசிரியர்கள்தான் இருவருக்கும் ஒரே பெயர்தான் அதுகும் மரியாளின் மற்றொரு பெயர்தான். ஆனால்… இருவருக்கும் ஏன் இப்படி இருவேறு குணம் என்று ஆழமாக தனது மனதை குடைந்து கேட்டுக்கொண்டிருந்த ரகுவை அவனது மகன் வந்து அப்பா… என்ன விரலை பிடிச்சுக்கொண்டு ஏதோ கடுமையாக யோசிச்சுக்கொண்டிருக்கிறீங்க… எழும்புங்கோவன்… எழும்பி வாங்க.. வந்து சாப்பிட அம்மா கூப்பிடுறா…. என்ற அவனது இரண்டாவது மகனின் குரல்கேட்டு திடுக்கிட்டவன் தன்னை சுதாகரித்துக் கொண்டு எழும்பி சென்றான் மதிய உணவுக்காக.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *