சாதுர்யப் பேச்சுகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 28, 2021
பார்வையிட்டோர்: 2,277 
 

புத்திசாலித்தனமும், சாதுர்யமும் எங்கும் எப்போதும் இருந்தால்தான் பிழைக்கமுடியும் என்பதுதான் இந்தக் காலத்திற்கான உண்மை!!

விதவிதமான சந்தர்ப்பங்களில் விதவிதமான புத்திசாலிகள் விதவிதமாக நடந்துகொண்டு தங்கள் சாதுர்யத்தால் எப்படி நிலைமையைச் சமாளித்தனர் என்று பார்ப்போம்…

நாட்டின் மிகப்பெரிய சூப்பர் மார்க்கெட் ஒன்றினால் அவர் புது பொதுமேலாளராக தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தார். அவர் வேலைக்குச் சேர்ந்தபோது அங்கிருந்து பதவி விலகிச் சென்ற பொதுமேலாளர் புதியவருக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.

“ஸார், உங்கள் அறிவுரை எனக்கு என்ன ஸார்?”

“இதோ இப்போது உங்களுக்கு மூன்று கடித உறைகளைத் தருகிறேன். மிக மிக கஷ்டமான சூழ்நிலையில் மட்டும் இந்தக் கடிதத்தைப் படித்து அதன்படி செயல்படுங்கள்… உடனே உங்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும்…” என்று கூறி 1,2,3 என்று எண்ணிட்ட மூன்று உறைகளை அவரிடம் கொடுத்தார்.

சூப்பர் மார்க்கெட்டில் வேலை சூப்பராகப் போய்க்கொண்டிருந்தது. சில மாதங்கள் கழிந்த பின்னர் சிக்கல் ஆரம்பித்தது. விற்பனை படு மந்தம். ஸீஇஓ மேலாளரை தினமும் குடைய ஆரம்பித்தார் என்ன நடக்கிறது? என்று.

ஏதேனும் வழிபிறக்கும் என்று முதல் உறையைப் பிரித்தார் பொதுமேலாளர்.

அதில், “எல்லாப் பழியையும் முந்தைய பொதுமேலாளர் மேல் போடு” என்று இருந்தது.

அவ்வளவுதான். உடனே உற்சாகமாக, ஸிஈஓவிற்கு எப்படி முந்தைய பொதுமேலாளர் கண்ட கண்ட சரக்கையெல்லாம் வாங்கிக் குவித்து வைத்திருக்கிறார், அவைகளை விற்றுத் தள்ளுவதற்கு தான் எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கிறது என்று ஒரு பெரிய புராணத்தையே பாடினார்.

ஸீஈஓ அவர் சொன்ன விளக்கத்தை ஏற்றுக்கொண்டார்.

தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று நினைத்து கடுமையாக உழைத்து விற்பனையை சரி செய்தார் பொதுமேலாளர்.

அடுத்த சில மாதங்கள் நன்றாக ஓடின. அடுத்தாற்போல மீண்டும் சில மாதங்களில் விற்பனை சரியத் தொடங்கியது. ஸீஈஓ மீண்டும் தினமும் கேள்வி மேல் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்.

வேறுவழி தெரியாத நிலையில் இரண்டாவது கடித உறையை பிரித்து படித்துப் பார்த்தார்.

REORGANIZE: அனைத்தையும் மறுபடி சீர்படுத்து என்று இருந்தது. உடனே இதையே உற்சாகமாக சீஈஓவிடம் காரணம் சொன்னார்.

காலத்திற்கேற்றபடி புது உத்தி தேவையாக இருக்கிறது போலும் என்று ஸீஈஓ ஒப்புக் கொண்டார். விதவிதமாக சரக்குகளை வாங்கி வாடிக்கையாளர்களைக் கவர்ந்து விற்பனையை உயர்த்தினார் பொதுமேலாளர். இன்னும் சில மாதங்கள் நன்றாக ஓடின…

அதன்பிறகு விற்பனையில் ஒரு மிகப்பெரிய சரிவு. இந்தமுறை மேலிடம் மிகக் கடுமையாக காரணத்தை எழுதிக் கேட்டிருந்தது.

வேறு வழியில்லாமல் மூன்றாவது கடித உறையைப் பிரித்துப் படித்தார்.

அதில், “உடனே மூன்று கடித உறைகளைத் தயார் செய்…” என்று இருந்தது.

***

காமராஜ் அமைச்சரவையில் இருந்த சி.சுப்பிரமணியம், புகழ்பெற்ற ஒரு கிரிமினல் லாயரும் கூட! அவர் ஒரு கொலை கேஸில் தன் கட்சிக்காரருக்காக பிரமாதமாக வாதிட்டார்.

நீதிபதி தீர்ப்பைக் கூறினார். “குற்றம் சாட்டப்பட்டவர் குற்றம் இழைக்கவில்லை. நிரபராதி. ஆகவே அவரை விடுதலை செய்கிறேன்…”

தீர்ப்பு இப்படி வழங்கப் பட்டபோதும் கூட, குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளிக் கூண்டிலிருந்து கீழே இறங்கவில்லை. அங்கேயே நின்று கொண்டிருந்தார்.

நீதிபதி வக்கீலைப் பார்த்து, “என்ன உங்கள் கட்சிக்காரரைத்தான் நிரபராதி என்று சொல்லி விடுவித்து விட்டேனே, இன்னும் அவர் ஏன் குற்றவாளிக் கூண்டில் நகராமல் நின்று கொண்டிருக்கிறார்?” என்றார்.

உடனே வக்கீல், “யுவர் ஆனர், அவர் குற்றம் இழைக்கவில்லை என்று உங்களிடம் நான் நிரூபித்து விட்டேன்… ஆனால் அவரிடம் நான் இன்னும் அதை நிரூபிக்கவில்லையே!!” என்றார்.

நீதிமன்றத்தில் இருந்த அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர். நல்ல வேளையாக தீர்ப்பு முன்னமேயே வழங்கப் பட்டிருந்தது.

***

ஸ்வீடன் மன்னராக புகழ்பெற்று இருந்தவர் இரண்டாம் ஆஸ்கார் (King Oscar II – 1827-1907).

ஒருநாள் அவர் பள்ளி ஒன்றுக்கு திடீரென விஜயம் செய்தார். சிறிய வகுப்பில் பயிலும் மாணவர்கள் வகுப்பறைக்குச் நுழைந்த அவர் மாணவர்களைப் பார்த்து, “ஸ்வீடன் சரித்திரத்திலேயே மாபெரும் மன்னர் யார்?” என்று கேட்டார். அவருக்கு உள்ளூர ஆசை தன்னுடைய பெயரைச் சொல்வார்கள் என்று…

ஒரு பையன் எழுந்து, “குஸ்டாவஸ் வாஸா…” என்றான்.

இன்னொரு பையன் எழுந்து நின்று, “குஸ்டாவஸ் அடோல்பஸ்” என்றான்.

அங்கே நின்று கொண்டிருந்த வாத்தியாருக்கு தர்மசங்கடமாக இருந்தது. அவர் ஒரு பையன் அருகில் சென்று அவன் காதில் மெதுவாக முணுமுணுத்தார். அந்தப் பையன் உடனே எழுந்து நின்று, “இரண்டாம் ஆஸ்கார்” என்று கத்திக் கூறினான்.

உடனே மன்னர் “அப்படி என்ன அவர் பெரிதாகச் செய்துவிட்டார்?” என்று கேட்டார்.

அந்தப் பையன் “எனக்கு… எனக்குத் தெரியாது…” என்று குரல் கம்மச் சொன்னான்.

அதற்கு மன்னர், “அதனால் என்ன பரவாயில்லை, எனக்கும்தான் தெரியாது..” என்று சிரித்தார்.

***

முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி சிலேடையாகப் பேசக்கூடியவர் என்பது நமக்குத் தெரியும். அவர் முதல்வராக இருந்தபோது வருடாவருடம் சீசனில் குற்றாலத்தில் “சாரல்” விழா நடக்கும்.

அப்போதெல்லாம் ஜிலு ஜிலுவென சாரல் விழுந்து கொண்டிருக்கும். அனால் ஒருமுறை சீசன்போது சாரல் விழவே இல்லை.

அப்போது கருணாநிதி விழாவில் மையமாக அமர்ந்திருந்தார். கடைசியாக அவர் பேச அழைக்கப் பட்டார். அப்போது சிலேடையாக இதுதான் “சாரல் விழா..” என்றார். எல்லோரும் சிரித்தனர்.

ஒருமுறை அரசியல் கூட்டத்தில் பேசிய கருணாநிதி, “மூன்றெழுத்தில் என் மூச்சு இருக்கும்…” என்றார். அப்போது கூட்டத்தினர் புகழின் உச்சியில் இருந்த எம்ஜிஆரைத்தான் தலைவர் சொல்கிறார் என்று நினைத்து பலமாக கை தட்டினர். எம்ஜிஆர் நடித்துப் பாடிய பாடல் காட்சி ஒன்று ‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும..’.

உடனே கருணாநிதி அமைதியாக என் மூச்சு “திமுக” என்கிற மூன்றெழுத்து என்றார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *