அவன் சிலையாய் நின்றான்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 3, 2024
பார்வையிட்டோர்: 1,401 
 
 

(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அண்ட சராசரங்கள் எல்லாம் இயங்கத் துவங்கிய காலக் கட்டம்…. 

ஞாலக் கிறுக்கன் மெல்ல மெல்லத் தன் விழிகளைத் திறந்தான். வண்ணங்கள் பல இழையோடிய மேகப்படலத்தைக் கடந்து, மெதுமெதுவாக மண்பரப்பை நாடி வந்தான். 

சிற்றூர்களின் வனம்பும், பெரியாறுகளின் பசுமையும் மனத்தை ஈர்த்தன. அண்ணாந்து பார்த்தான். நெடுமரமாம் தென்னைகளில் தொங்கும் குலைகளும், மா, பலா. வாழை என்று கனி குலுங்கும் தோட்டங்களும்., கருணையின் வடிவான மலையருவி ஒழுக்கும்., வரப்பெடுத்த வயல்களும் தோப்புத் துரவுகளும் என்று எல்லாவற்றையும் கண்டு பூரித்தவன்… ஒன்று கண்டான், கண்டுணர்ந்தான்…. 

அது… அன்பகமாய்த் திகழும் அந்தச் சிற்றூராரின் இதய வாயில்கள். 

காலைக் கதிரொளி பட்டு மறையும் பனிப்படலம்போல் ஆவியாகி மறைந்தான்… புயலும், பூகம்பமும், சூராவளியும் நிலநடுக்கமும் இன்னபிற இயற்கைப் பேரிடர்களின் மூலகர்த்தாவாம்-காலக்கணிதனான-ஞாலக்கிறுக்கன். 


பசுமையின் பிறப்பிடமான அந்தச் சிற்றூருக்கு இன்னும் பெயர்க்கல் நாட்டப்படவில்லை. நேர்த்தியாக வைக்கோல் வேய்ந்த குடிசைகள், ஊருணி, கொட்டில்கள், தொழுவங்கள். கோழிக் கூண்டுகள். ஆடுகளும், மாடுகளும் கோழிகளும் நாய்களும் எப்படி வந்து சேர்ந்தன. எங்கிருந்து வந்து சேர்ந்தன என்பதெல்லாம் பழய வரலாறு கிண்டிடத் தேவையில்லை. 

இரண்டு மீட்டர் உயரத்தில் கருங்கல்லால் அமையப் பெற்ற ஒரு பீடம், அதை எட்டி எட்டு மரத்தூண்கள் தாங்கி நிற்கும் வைக்கோலால் வேயப் பெற்ற ஊர் “மண்டபம்”. சாணத்தால் மெழுகப்பெற்ற மண்டபத் தரையின் மத்தியில், களிமண்ணால் எழுப்பப்பெற்ற சின்னஞ்சிறு மண்டபம். அதனுள்ளே…மண்ணால் செய்யப் பெற்ற வட்டவடிவிலான ஒருமுக விளக்கு, 

இரும்புத் தளவாடம் செய்வோரிலிருந்து மட்பாண்டம் செய்வோர்வரை. பச்சிலை மருத்துவர் பச்சையப்பர் குடும்பம் முதல் நூல் நூற்போர் குழுமம் ஈராகப் பிணக்கின்றி ஒற்றுமையுடன் வாழ்ந்திருந்த குறுகிய வட்டம், 

இரவு நேரங்களில் காட்டு விலங்குகளின் ஆபத்தி லிருந்து சிற்றூரைக் காக்கும் பொருட்டு, நாளும் இரண்டு பேர், மண்டபத்தில் விளக்கேற்றி வைத்தும், மண்டப வாயிலில் மரத்துண்டங்களைக் கொண்டும், உலர்ந்த சருகுகளைக் கொண்டும் தீ மூட்டியும் விடியும் வரை காவல் புரிவது என்பது ஊரார் ஏற்பாடு. 

முழுநிலா அன்றும், அமாவாசையின் அடுத்த நாளான வளர்பிறையின் முதல் நாள் அன்றும் சிற்றூர் மக்களிடையே ஒரு பரபரப்பு ஏற்படுவது வாடிக்கை. மாலை மறைந்து முன்னிரவு துவங்கும் நேரம் முதலாய் மண்டபத்தில் மக்கள் திரள்வது வழக்கம். 

முழுநிலா. முன்னிரவு நேரம் மண்டபத்தில் மக்கள் திரள். கற்பீடத்தைச் சுற்றிலும் புகை மூட்டம் திடீரென்று கிளம்பும் ….. 

“சாமி வந்துட்டாரு! சாமி வந்துட்டாரு! !” அனைவரும் எழுந்து நின்று வானோக்கிக் கரங்களை உயர்த்தி ஆரவாரம் செய்த சில நொடிப் பொழுதில் மெல்லிய புகை மண்டலத்தினூடே ஓர் உருவம் தோன்றும்……… 

வாழும் முறையின் இலக்கணத்தை, நன்மை தீம களின் வெளிப்பாட்டை, பாவ புண்ணியங்களின் ஏற்ற இறக்கங்களை அந்தப் பாமர் மக்களுக்கே உரித்தான வழக்கில், புரிந்து கொள்ளும் விதத்தில் உபதேசித்துவிட்டு, குறைகளைக் கேட்டறிந்து ஆவன செய்து, நோய் நொடிகளுக்குச் “சூரணத்”தை வழங்கி, சிற்றூர்மக்களால் ”சாமி” என்று கொண்டாடப்படும் அந்த உருவம் புகையோடு புகையாகி மறைந்துவிடும். 

திங்கள் பணியாரங்களை விழுங்கிக் கொண்டே ஆண்டுப் பந்துகளை உதைத்து நிதானமாக ஓடிக்கொண்டிருந்தான் காலக்கணக்கன் எனும் ஞாலக் கிறுக்கன்… 

ஊருணிக் கரையோரத்தில் பச்சிலை வைத்தியர் பச்சை யப்பரின் குடில். மனைவி, மூன்று ஆண்மக்கள், இரண்டு பெண்கள் என்று குடும்பம் விரிவடைந்து கொண்டிருந்தது. ஏழெட்டு ஆண்டுகளில் பச்சிலை வைத்தியத்தின் மூலமாக வரும் வருவாயைக் கொண்டு குடும்பத்தை நடத்திச் செல்லத் திணறிக்கொண்டிருந்தார் பச்சையப்பர். குழந்தைகளுக்கு மருத்துவ ஞானத்தை மட்டும் கற்றுக்கொடுத்து வளர்த்தால் கட்டுப்படியாகாது, “சூரணம் கொடுத்து நோய் தீர்க்கும் அந்தச் சாமியிடமே மாற்றுவழி காட்டும்படி ஆலோசனை கேட்கவேண்டும் என்று முடிவு செய்து கொண்டு, அடுத்து வரவிருக்கும் வளர்பிறை நாளை எதிர் பார்த்துக் கொண்டி ருந்தார். பிணிபோக்கும் வித்தை கற்ற பச்சையப்பர். 


அன்று வளர்பிறை….. 

ஒத்திகை பார்த்து வைத்தாற்போல், புகைமூட்டம்…. பீடத்திலே சாமி தரிசனம்… உபந்நியாசம்… “சூரணம் வழங்குதல்… ” முதலியன நிகழ்வுற்று, கூட்டம் கலையத் துவங்கியது. 

மெல்லிய புகை மண்டலத்தினூடே சாமி நின்று கொண்டிருந்தார். 

எல்லோரும் போய்விட்டார்கள். தனித்து நின்று கொண்டிருந்தார் பச்சையப்பர். 

“பச்சையப்பா. நீ இன்னும் இல்லம் செல்லவில்லையா?” சாமி தான் கேட்டார். 

“போகணும்’ னு தானுங்’க சாமி இருந்தேன்…உங்களோட கொஞ்சம் தனியாப் பேசனும்’ணு தோணிச்சு…” நீட்டி முழக்கினார் பச்சையப்பர். 

“எல்லோர் முன்னிலையிலேயே பகிரங்கமாகவே பேசியிருக்கலாமே.. இதில் எதற்குக் கமுக்கம்?” 

”கமுக்கமு’னு ஒண்ணும் இல்லிங்க சாமி. உங்க உபதேசம் கேட்டுக் கேட்டு எதை, எங்கே, எப்படிப் பேசணும்’கிற ஞானம் பொறந்துட்டுதுங்க சாமி” 

‘ஆகா,மனிதன் ஞானம் பெறத் துவங்கிவிட்டான். எம் முயற்சி சித்திபெற ஆரம்பித்து விட்டது’ என்று அகம் மகிழ்ந்துபோன சாமி, “பச்சையப்பா! உன் கோரிக்கையாதோ!” 

குனிந்த தலையைக் கொஞ்சமாக நிமிர்த்திய பச்சையப்பர், “சாமி… சாமி… முதல்’ல உங்க பேரு என்னா’னு சொல்லுங்க சாமி…! தெரிஞ்சுக்க ஆசையா இருக்கு.. ” 

சாந்தப் பொய்கையில் விலாங்குகள்போல் நெளிந்த சாமியின் புருவங்கள், பகை கண்டு சிலிர்த்து நிற்கும் பூனை உருக்கொண்டன. ‘மானிடன் கேள்வி கேட்க முயன்றுவிட் டான். இனி நாம் அதிக எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும்.’ எனத் தனக்குள் உறுதி எடுத்துக் கொண்டு, “பச்சையப்பா! என் பெயர் கடவுள்!” என்றார். 

“கடவுளா? அப்படி’னா என்னாங்க சாமி அருத்தம்?”

‘கதகளி’ கூத்துக் கதாநாயகன் கண்களைப் போன்று, விழிகளை அகல விரித்து, பச்சையப்பரைப் பார்த்த கடவுள், “அடியனே, உன் உள்ளத்தில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய் என்பது உனக்குத் தெரியுமல்லவா?” 

“தெரியுமுங்க, கடவுளே…..” 

“அந்தக் கோடியிலே குடிசைபோட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறானே கொடுமுடி, அவன் உள்ளத்தில் இப்பொழுது என்ன நினைவுகள் நர்த்தனமாடிக் கொண்டிருக்கின்றன என்று உன்னால் சொல்ல முடியுமா?” பச்சையப்பரை ஏற இறங்கப் பார்த்தார் கடவுள். 

“அதை எப்படிங்க என்னா’ல சொல்ல முடியும்?” பச்சையப்பர் தலையைச் சொறிந்துக் கொண்டார். 

“என்னாலே சொல்ல முடியும். இந்தப் பிரபஞ்சத்துப் பிறவிகளின் உள்ளங்களை எல்லாம் கடந்து ஆரோகணித்து நிற்பவன்தான் உள்ளத்தைக் கடந்தவன். அவன் தான் கடவுள்!” கடவுளின் குரலில் ஓர் அழுத்தம் 

“இம்புட்டுப் பெரிய அருத்தம் அந்தப் பேரு’ல இருக்குதுங்களா?” வியந்து போனார் பச்சையப்பர். 

“அடியானே, இன்னும் கேட்பதற்கு ஏதாவது…?” கடவுள் அவசரப் பட்டது போல் தோன்றிற்று. 

“வெவகாரமே இனிமே தானுங்களே ஆரம்பமாவுது… கடவுள்சாமி… உங்களுக்கே நல்லாத் தெரியும் … தனிக் கட்டையாக் கெடந்து, நோய் நொடி போக்குற இந்தப் பச்சிலை மூலிகைகளை ரொம்பவும் சிரமப்பட்டுக் கண்டு புடிச்சேன். முழுநிலா அன்னிக்கும், அமாவாசைக்கு அடுத்த நாளும் நீங்க வந்துட்டுப் போறிங்க. ஆரம்பத்து’ல உங்க செய்கை எனக்கு ஒருசுமையா தெரியலே. இடைப்பட்ட நாளுங்கள்’ல ஒடம்பு முடியாம வருவாங்க. மருத்துவம் பார்ப்பேன். வந்த வருவாய் போதுமானதா இருந்துச்சு. அதுக்கப்புறம் ஒரு துணை சேர்ந்துச்சு…” 

பச்சையப்பர் பேசிக்கொண்டிருக்க, கடவுள் சிந்திக்கலானார். 

“மனிதனுக்கு ஞானம் வளர வளர, கடவுளை முட்டாளாக்கி விடுவான் போலிருக்கிறதே…” கடவுளின் தலை கனத்தது. அவரைச் சுற்றிப் புகை மூட்டம் பெருமளவில் சூழ ஆரம்பித்தது. 

“அப்புறம், வரிசையா அஞ்சு பிள்ளைங்க” – பச்சையப்பர் சொல்லிக் கொண்டே வீடு நோக்கி நடந்தார். “குடும்.பம் பெருத்துப் போச்சு. நானும் இதை ஒரு பெரிசா நெனச்சு உங்கக்கிட்டே புகார் செய்ய’ல. கடந்தவங்களாச்சே..! இப்ப முடியல. புள்ளைங்க வளர்ந்துக்கிட்டு வராங்க. பசியைக் கட்டுப்படுத்த முடியல. கட்டுப்படுத்த என்னால மூலிகையைக் கண்டுபிடிக்க முடியாது’னு சொல்ல மாட்டேன் கடவுளே. அதனால எதிர்காலத்து’ல மனிதப் பொறப்பே ஒரு அருத்தமில்லாம ஆயிடும் பாருங்க… அதனால, புள்ளைங்களுக்கு மருத்துவம் கத்துக் கொடுக்கிறது’ல அருத்தமில்லே’னு தோனுதுங்க கடவுளே. வைத்தியத் தொழில் ஒத்து வராது. அதனால, புள்ளைங்கள வெவசாயம் செய்ய அனுப்ப நெனைக்கிறேன், என்னை மன்னிச்சுருங்க்…” 

பச்சையப்பர் திரும்பிப் பார்த்தார். ஒரே புகை மூட்டம் சாமி விடைபெற்றுச் சென்றுவிட்டார் என்ற நினைப்பில் இல்லம் நோக்கி நடக்கலானார். 

காலை இளஞ்சூரியன் கிழக்கினின்று ஒளிவீசி எழுந்த காலை. ஊரே மண்டபத்தின் முன் குழுமியிருந்தது. பச்சையப்பரும் அங்கே வந்திருந்தார். அந்த இரண்டு மீட்டர் உயரக் கருங்கல் பீடத்தில் கற்சிலை ஒன்று நின்றுகொண்டிருந்தது.

– அவன் (சிங்கப்பூரன் சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூன் 1993, நிலவுப் பதிப்பகம், சிங்கப்பூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *