கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: நகைச்சுவை  
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 23,567 
 

அதிகாலை மணி, 5.30 —
இரட்டைப் படுக்கையில் படுத்திருந்த சோமநாதன், எழுந்து சம்மணமிட்டு அமர்ந்தான்; வயது 35. விருதுநகர் நிறம்; பழனி உயரம். பக்கத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் மனைவியையும், ஒன்பது வயது மகனையும், ஓரு பார்வை பார்த்தபடி, இறைவனை வணங்கினான்.
“இன்றைய பொழுது எல்லாருக்கும் நல்லா இருக்கணும். தீயவை களிலிருந்து விலகி நிற்கும் மன வலிமையை, மக்களுக்கு வாரி வழங்கு பரம்பொருளே!’
டாஸ்மார்க் எச்சரிக்கைபல் துலக்கினான். சுய சவரம் செய்து, குளிர் நீரில் குளித்தான். புத்தாடை உடுத்தி, திருநீறு, குங்குமம் இட்டுக் கொண்டான்.
தாமதமாக எழுந்த மனைவி, காலை டிபனாக, ஓட்ஸ் கஞ்சி தயாரித்துக் கொண்டிருந்தாள். இட்லி சாப்பிட்டு, பள்ளிக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தான் மகன்.
வாசலில் அழைப்பு மணி சிணுங்கியது. நூற்றாண்டு கொண்டாட்டத்தில் இருக்கும் தினமலர் நாளிதழை வாசித்துக் கொண்டிருந்தவன், எழுந்து போய் கதவைத் திறந்தான். சிக்னேச்சர் விஸ்கி நிறத்தில் சீருடை அணிந்த இளைஞன் ஒருவன் நின்றிருந்தான். அவன் கையில், நூற்றுக்கும் மேற்பட்ட பழுப்புக் கவர்கள். கவரை கொடுத்து கையெழுத்து வாங்க, தனித் தாளும் வைத்திருந்தான்.
“”வாழ்க வளமுடன்… யார் நீங்க?”
“”நான் டாஸ்மாக் அமைச்சகத்தின் ஊழியன். டாஸ்மாக்கின் உள்ளுர், வெளியூர் தபால்களை கொண்டு சேர்க்கும் விரைவு தபால்காரன்!”
“”என்ன விஷயமாக வந்திருக்கிறீர்கள்?”
“”உங்கள் பெயர் சோமநாதன் தானே!”
“”வாழ்க வளமுடன்… ஆமாம்!”
“”டாஸ்மாக் அமைச்சகம், உங்களுக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது; பெற்றுக் கொண்டு கையெழுத்திடுங்கள். வாங்கவும், கையெழுத்திடவும் மறுத்தால், இன்று மாலைக்குள் கைது செய்யப்படுவீர்கள். முதல் எட்டு வாரங்களுக்கு ஜாமீன் கிடையாது!”
“”வாழ்க வளமுடன்… எனக்கும், டாஸ்மாக்குக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லையே… எனக்கெதுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கின்றனர்?” – புலம்பியபடியே கையெழுத்திட்டு, கவரை வாங்கினான்.
டாஸ்மாக் ஊழியன் அகன்றான்.
வீட்டுக்குள் வந்த சோமநாதன், படபடக்கும் இதயத்துடன் கவரை பிரித்தான். கணவனுக்கு பின் வந்து நின்ற மனைவி, கடிதத்தின் உள்ளடக்கத்தை வாசிக்க ஆரம்பித்தாள்.
கடிதத்தில் —

குடி, குடியை பெருக்கும்; குடிப்பழக்கம், நாட்டுக்கும், வீட்டுக்கும் பெருமை!

சென்னை,
x xx xx – (தேதி)
அனுப்புநர்:
டாஸ்மாக் அமைச்சக தனிச் செயலர்,
தமிழ்நாடு அரசு தலைமையகம்,
சென்னை.
பெறுநர்:
தீ.சோமநாதன்,
த/பெ.தீர்த்தகிரி,
ரத்த பகுப்பு தொழில்நுட்பன்,
சிதம்பரம்.
ஐயா,
பொருள்: உங்களின் பகுதி டாஸ்மாக் கடைக்கு, நீங்கள் ஏன், தொடர்ந்து ஒரு வருடமாய் விஜயம் செய்யாமல் இருக்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதில் வேண்டி.
பார்வை: அ) டாஸ்மாக் கடை எண். CDM/6048/MIDDLE CLASSன் மேற்பார்வையாளரின் x xx xx, x xx xx, x xx xx, x xx xx தேதிய புகார் கடிதங்கள்.
ஆ) தீ.சோமநாதனின் வாக்காளர் அடையாள அட்டை எண். சிஎம் ஆர். 40916433ன் ஒளிநகல்.
—–
தீ.சோமநாதன் (த/பெ.தீர்த்தகிரி, லால்கான் பள்ளிவாசல் தெரு, சிதம்பரம்-1) ஆகிய உங்களின் மீது, டாஸ்மாக் கடை (எண்.சித/ 6048/நடுத்தர வகுப்பு)யின் மேற்பார்வையாளர் தொடர்ந்து புகார் கடிதங்கள் அனுப்பி வருகிறார். து துது துது தேதிக்கு முந்தைய 14 வருடங்கள், குடிக்காதோர் வரி கட்டி, குடியிலிருந்து தப்பித்து வந்திருக்கிறீர்கள்.
x xx xx தேதிக்கு பின், குடியாதோர் வரி ரத்து செய்யப்பட்டு, கட்டாயக்குடி அமல்படுத்தப்பட்டது.
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடிமகனும், மாதம் குறைந்தபட்சம், 25 குவார்ட்டர் பாட்டில் விஸ்கி / பிராந்தி / ரம் / வோட்கா / ஜின் குடிக்க வேண்டும் என்பது, தமிழக அரசின் உத்தரவு. அதாவது, நீங்கள் உங்கள் ஏரியா டாஸ்மாக் கடையில், மாதா மாதம், 3,750 ரூபாய்க்கு சரக்கு வாங்க வேண்டும். நீங்கள், கடந்த ஒரு வருடமாக சரக்கு வாங்காததால், லோக்கல் டாஸ்மாக்கின் வருடாந்திர நஷ்டம், 45 ஆயிரம் ரூபாய். நஷ்டத்திற்கு வட்டி கணக்கிட்டால், மூன்றாயிரம் ரூபாய் வருகிறது; மொத்த நஷ்டம், 48 ஆயிரம் ரூபாய்.
இது தவிர, நீங்கள் குடிகாரர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து, அவர்கள் குடிப்பதை குறைக்கிறீர்கள் அல்லது அறவே நிறுத்துகிறீர்கள் என்ற குற்றச்சாட்டும், உங்கள் மீது உள்ளது. அதற்கான எங்கள் டாஸ்மாக் பறக்கும் படையின் வீடியோ கிளிப்பிங் ஆதாரங்களை, உங்களுக்கு எம்.எம்.எஸ்., பண்ணியுள்ளோம்; பாருங்கள். எங்களது டாஸ்மாக் புள்ளி விவரத்துறை, நீங்கள் எத்தனை குடிகாரர்களை கெடுத்திருப்பீர்கள் எனக் கணக்கிட்டு, அதன் வருடாந்திர நஷ்டக் கணக்கு, 19 லட்சத்து, 20 ஆயிரம் ரூபாய்என தெரிவித்துள்ளது.
ஆக மொத்தம், டாஸ்மாக்குக்கு உங்களால் ஏற்பட்டிருக்கும் வருடாந்திர நஷ்டம், 20 லட்சம் ரூபாய். டாஸ்மாக் குற்றவியல் சட்டத்தின், பிரிவு 9, ஷரத்து, 111ன்படி, உங்களுக்கு, 10 வருட கடுங்காவல் தண்டனையும், 50 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் வாய்ப்புள்ளது. அபராதம் கட்டாவிட்டால், ஐந்து வருட கூடுதல் கடுங்காவல் தண்டனை. (தலைவர் பிறந்த நாளில், உங்களது தண்டனை குறைக்கப்பட மாட்டாது என்பதை அறிக!)
மற்றவை நேரில்.
என்றென்றைக்கும் அரசின் விசுவாசியாய்
(கையொப்பமும், இலச்சினையும்)
– சரக்கில்லா வாழ்க்கை குப்பையிலே; நாம் ஏன் பிறந்தோம், வயிறு முட்ட குடிக்கவே பிறந்தோம்!
கணவனுக்கு முன் படித்து முடித்த மனைவி, தன் முகத்திலும், நெஞ்சிலும் அடித்தபடி கதறினாள்.
“”குடிக்கத் தெரியாத கிராதக பையனை எனக்கு கட்டி வச்சிராதேன்னு கெஞ்சினேன்; எங்கம்மாகாரி கேக்கல. ஒரு நாளாவது, கணவனின் வாந்தியைக் கண்டேனா… ஹாங் ஓவரைக் கண்டேனா… குடித்துவிட்டு வரும் கணவனை, மானம் @பாறாப்பல எவ்வளவு வேண்டுமானாலும் திட்டலாம்; அந்த வாய்ப்பை, இந்த சண்டாளன் கொடுக்கவில்லையே… குடிமாமணி பட்டம் வாங்கினால், இலவச சிங்கப்பூர், துபாய் ட்ரிப் பரிசளிக்கப்படும். குடிக்காரன்ற அடிப்படைத் தகுதியே இல்லாத உனக்கு, எப்படி பட்டம் கிடைக்கும்! எங்களுக்கு எப்படி இலவச சிங்கப்பூர் ட்ரிப் அமையும். சென்னைக்கு கூப்பிட்டிருக்காங்க. வேலையும் போய், ஜெயில்ல களி திங்கப் போற. உன் ஈனச் செயலால், நாங்கள் நடுத்தெருவில் நிற்கப் போகிறோம். குடிக்க தொண்டை வரை, குடித்தபின் மட்டையாகாமல் நிற்க அதற்கு தக என்ற முதல்வரின் பொன்மொழி அறியாத முண்டமா நீ? “யாழினிது குழலினிது என்பர் தம் சரக்கு மூடி திறக்கும் ஓசை கேளாதோர்…’ என்ற பொன்மொழி உணராத மண்ணாக்கா நீ?” கேட்டபடி, சோமநாதனின் குமட்டில் குத்தினாள் மனைவி.
தமிழ்நாடு அரசு தலைமையகம்.
டாஸ்மாக் அமைச்சக அலுவலகம், ஷாம்ப்பெய்ன் பாட்டில் வடிவத்தில் அமைந்திருந்தது. “ஏசி’ அறையில், டாஸ்மாக் அமைச்சர், தனிச் செயலர், டாஸ்மாக் கண்காணிப்பு தலைவர் அமர்ந்திருந்தனர்.
“”வணக்கம்!” – உட்பட்டான் சோமநாதன்.
“”குடியாதவன் வணக்கம் எங்களுக்கு எதுக்கு… தமிழக அரசை பார்த்தால், உனக்கு கிள்ளுக் கீரையாக தெரிகிறதோ! “பிறக்கும் போதே சிறந்த குடிகாரனாக பிற; இல்லாவிட்டால், நீ பிறக்காமலிருப்பதே மேல்…’ என நம் முதல்வர் அருளிய பொன்மொழி கேட்டதில்லையா நீ? ஒரு கிலோ அரிசி, 10 பைசா திட்டம், வீட்டுக்கொரு கழுதை வழங்கும் திட்டம், திருடர்கள் நல வாரிய செயல்பாடுகள், ஜால்ரா முறைசாரா கல்வி வளர்ச்சி அனைத்துக்கும், டாஸ்மாக் காசு தேவைப்படுதில்ல?”
மவுனித்தான் சோமநாதன்.
“”உன் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு, என்ன பதில் கூறப் போகிறாய்?”
“”எங்களுடைய முந்தைய தலைமுறைகள், குடிப்பழக்கத்தால் வீழ்ந்தவை. அந்த நினைவுகள், என் நெஞ்சில் பச்சைக் குத்தலாய். உற்சாக பானத்தை பார்த்தால், எனக்கு ஓங்கரிக்கிறது. உற்சாக பான வகைகளை கண்டால், மெல்லக் கொல்லும் விஷத்தில் இத்தனை பிரிவுகளா என தோன்றுகிறது. உற்சாக மனநிலையில், அன்னதானம் செய்கிறேன்; சோகமான மனநிலையில், தன்னம்பிக்கை நூல்கள் படிக்கிறேன்.”
“”உன்னுடைய புதிய குற்றங்களுக்கு, ஒப்புதல் வாக்குமூலம் தராதே. குடிக்க மாட்டேன் என நீ தொடர்ந்து அடம் பிடித்தால், உன் மீது சிறைத் தண்டனையும், அபராதமும் உறுதியாகும்.”
“”குடியை விரும்பும் வண்ணம், என் மனோநிலையை மாற்ற உதவுங்களேன் ஐயா!”
“”கல்லையும், மண்ணையும் கூட குடிகாரனாக்கும் கவுன்சிலிங் யூனிட் நம்மிடம் உள்ளது. ஒரு வார கவுன்சிலிங்கில், உன்னை வழிக்கு கொண்டு வந்து விடலாம். ஆலோசனையுடன், ஒரு வாரமும், மூன்று வேளையும், உலகின் விலை உயர்ந்த உற்சாக பானங்கள், அசைவ சைடு டிஷ்ஷுடன் வழங்கப்படும்… குடி!”
“”நான் குடிக்க ஆரம்பித்தால், என் மீதான நடவடிக்கைகள் முழுமையாக ரத்து செய்யப்படுமா?”
“”நல்ல கதை போ… அடுத்த, 15 வருடங்களுக்கு, தினம், நான்கு மணி நேர பார்ட் டைம் பணியை, நீ சாராய தொழிற்சாலையில் செய்ய வேண்டும். உன்னுடைய வார்டில் அல்லது நகரில் யாராவது குடிக்காமல் அரசை ஏமாற்றிக் கொண்டிருந்தால், அவர்களை காட்டிக் குடுத்து, சாராய தொழிற்சாலை பணி காலத்தை, கணிசமாக குறைத்துக் கொள்ளலாம். அரசு தயாரிக்கும் புது சரக்குகளுக்கு பெயர் சூட்டும் போட்டியில் வெற்றி பெற்றாலும், தண்டனை குறைப்பு உண்டு. அரசு நிர்ணயித்துள்ளதை விட அதிகம் குடித்து, சலுகை பெறலாம். குடிப்பழக்கத்திற்கு எப்படி தாவினாய் என்பதை, அரசின் குடி விளம்பரங்களில் நடித்து காட்டி, சலுகை பெறலாம்.”
கண்களை மூடி யோசித்தான் சோமநாதன்.
“”சரி… அப்படியே செய்கிறேன்!”
“”நீ சொல்வதை நாங்கள் நம்ப வேண்டுமென்றால், எங்கள் முன்னே, மூன்று லார்ஜ் விஸ்கி சாப்பிட்டுக் காட்டு!”
“”இப்ப எப்படியிருக்கு நாதா?”
“”செமத்தியா இருக்கு அமைச்சுக்குட்டி. வர்றியா, உன்னை உப்பு மூட்டை தூக்கிக்கிட்டு, தலைமை செயலகத்தை நாலு ரவுண்டு சுத்திக்காட்றேன். மக்கள் தப்பு செஞ்சா, அரசிடம் புகார் பண்ணலாம். அந்த அரசே தப்பு செஞ்சா, எங்க போய் முட்டிக்கிறது. இனி என் வழி, குடி வழி! தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான்!” வேட்டியை அவிழ்த்துப் போட்டு விட்டு, பட்டாப்பட்டி ட்ரவுசருடன் குத்தாட்டம் போட்டான் சோமநாதன்.
விசாரணை அதிகாரிகளும் சேர்ந்தாடினர்.
இரண்டு வாரங்களுக்குப் பின்….
முழு குடிகாரனாய் ஊர் திரும்பியிருந்தான் சோமநாதன். “வாழ்க வளமுடன்’ என்ற இரட்டை வார்த்தைகளுடன் பேச ஆரம்பிப்பவன், “நாசமாப் போங்க’ என ஆரம்பித்தான். டாஸ்மாக் மேற்பார்வையாளருடன், தோளுடன் தோள் நின்று, “நாங்க நண்பேன்டா…’ என்றான்.
டாஸ்மாக் கடைகளை சுற்றி வட்டமிட்டான். ஒரு கடையிலிருந்து வெளியேறிய சோமநாதனை, ஓர் உருவம், தனி இடம் அழைத்துச் சென்றது. “”வீணாகிட்டியே சோமநாதா… இனி குடிக்காதே… குடிப்பது போல நடி. தினம் அரசு நிர்ணயித்த சரக்கை வாங்கி, சாக்கடையில் கொட்டி விடு. குடி போதையில் இருப்பது போல, ழ, ற வராமல் பேசு. காத்திருந்து, இந்த குடிநோயாளி அரசை கவிழ்ப்போம்!”
“”நல்ல யோசனை புரட்சி தம்பி; உன் பெயர்?”
“”பெயர் பேச்சிமுத்து. வாக்காளர் அடையாள அட்டை எண், ஆர்.எஸ்.டி., 123456789!”
வீடு திரும்பியதும், முதல் வேலையாக, சோமநாதன் டாஸ்மாக் கண்காணிப்பு குழுவிடம், பேச்சி முத்துவை காட்டி கொடுத்தான்.
“”இனி, குடிக்கு எதிரான புரட்சி சாத்தியமேயில்லை. தவிர, புரட்சி என்று வந்த ஆசாமி, நம்மை வேவு பார்க்க வந்த கைக்கூலியோ, என்னவோ! நான் முந்திக் கொண்டேன். குடி குடியை பாதுகாக்கட்டும்!” என்று சொன்னான் மனைவியிடம்.
டபுள் ஆம்லெட் போட்டு வந்த மனைவி, கணவன் பேச்சைக் கேட்டு, “”சபாஷ் புருஷா!” என்றாள்.

– ஏப்ரல் 2011

Print Friendly, PDF & Email

2 thoughts on “டாஸ்மார்க் எச்சரிக்கை!

  1. படிக்க தமாஷாக இருந்தாலும் எவ்வளவு மனம் நொந்து வயிறேரிந்திருந்தால் இப்படி எழுதியிருப்பார் என்று யோசிக்க வைக்கிறது. தமிழ் நாடே உன் கதி இப்படியும் ஆகிவிடுமோ என்று அஞ்சவும் வைக்கிறது.

  2. முன்ஜாமீன் எடுப்பது நல்லது அருமை

    பாராட்டுக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *