அவனுக்கென்று ஓர் உலகம்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 30, 2023
பார்வையிட்டோர்: 4,252 
 
 

(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கருணாகரனுக்கு உத்தியோக வாழ்க்கை கசந்தது. போட்டிகளும், பொறாமைகளும், அதிகார மமதைகளும் தமக்குத்தான் எல்லாம் தெரியும். தம்மைவிட கெட்டிக்காரர்கள் இல்லை என்ற தம்பட்டங்களும் நிறைந்தது அந்த உத்தியோக உலகம். அந்த உலகம் அவனுக்குப் பிடிக்கவே இல்லை, அப்படிப்பட்டவர்களையும் அவனுக்கு பிடிக்காது. இந்த பரந்த உலகின் எங்கோ ஒரு மூலையில் அமைதியாக அடக்கமாகவே வாழ அவன் விரும்பினான். அதிகார ஆசைகளும் ஆடம்பரமுமற்ற வாழ்வையே அவன் அவாவி நின்றான். விதம் விதமான விசித்திரம் விசித்திரமான வாழ்க்கைச் சோதனைகளை அவன் வெறுத்தான். கிராமியச் சூழலில் நெளிந்து வளைந்தோடும் அழகிய நீரோட்டம் போலவே தனது வாழ்வு அமைய வேண்டுமென அவன் விரும்பினான். 

ஆயிரம் வருடங்களுக்கொரு முறை உலகில் மேதாவிகள் தோன்றுவதாகச் சொல்வார்கள். இந்த உலகின் யதார்த்தமான கூட்டு மொத்தமான மனிதக் குணாதிசயங்களினின்றும் வேறுபட்ட அந்த மேதாவிகள் உலகில் அபூர்வமாகவே பிறப்பார்கள். அந்த அபூர்வ மனிதர்கள் உலக குணாதிசயங்களிலிருந்து ஏதோ வகைகளில் வேறுபட்டிருக்கிறார்கள். மனிதனின் சிந்தனைப் போக்கிற்கு மாறாக சிந்தித்து புதிய புதிய உண்மைகளை கண்ட மனிதர்கள்; புதிய புதிய வாழ்க்கை முறைகளை உலகிற்கு உணர்த்திய மகாத்மாக்கள்: அழியாத அமரத்துவமான காவியங்களைத் தந்த கவிஞர்கள். 

கருணாகரனும் ஒர் அபூர்வ பிறவியாகத்தான் இருந்தான். நிச்சயமாக அவன் இந்த உலகின் மயங்குகின்ற மாயப் பிடிப்புகளிலிருந்து தன்னை விடுவிக்க முயன்றான். இந்த உலகில் ஏதோ ஓர் ஆதர்சன தரிசனத்துக்காக அவன் ஏங்கித் தவித்தான். 

அவனை ஒருமுறை பார்த்தவர்கள் பின் மறக்கமாட்டார்கள். அவனது தோற்றமே இந்த உலக மனிதர்களினின்றும் ஏதோ ஒரு விதத்தில் வேறுபட்டவன் என்ற உணர்வைப் பார்ப்பவர்கள் மனதில் ஏற்படுத்தும். ஏதோவொரு கவர்ச்சி கொண்டவனாகவோ அல்லது உடல் வேறுபாடு கொண்டவனாகவோ அவனிருந்தான். 

அவனை பலரும் பல விதமாகச் சொல்வார்கள். சிலர் பைத்தியம் என்றார்கள். சிலர் ஒன்றுமறியாத அசடு என்பார்கள். சிலர் ஆள் அசகாயசூரன் என்பார்கள். வேறு சிலர் அவன் ஒர் அபூர்வ பிறவி, பிற்காலத்தில் மேதாவியாக வரக்கூடியவன் என்று ஆரூடம் சொன்னார்கள். அத்தனைக்கும் ஒல்லியான ஐந்தடி உயரமான மனிதனாக அவன் இருந்தான். மங்கிய சிவந்த நிறம் கொண்டவனான அவன் முகத்தில் எப்போதும் ஓர் ஒளி வீசிக்கொண்டிருக்கும். கண்களில் ஒரு தீட்சணியம் பிரதிபலிக்கும். அடக்கமில்லாத கற்பனை உலகில் துள்ளித் திரியும் அவன் மனம் போலவே அவனது தலை மயிர்களும் குத்திட்டு நிற்கும். நாலைந்து மயிற்கற்றைகள் அவன் நெற்றியில் பிறைவடிவில் நெளிந்து கிடக்கும். முழங்காலளவுக்கு நீண்ட அவனது கைகளை ஆட்டி காலை ஒரு விதமாக வைத்து நடக்கும் அவனது நடையைப் புதிதாக பார்ப்பவர்களுக்கு சிரிப்புவரும். 

அவன் இந்த உலகில் ஒருவித பிடிப்புமற்றவனாக வாழ்ந்தான். தன்னை பார்த்துச் சிரிப்பவர்கள், தன்னைப் பார்த்து தூற்றுபவர்கள் தன்னைப் பார்த்து போற்றுகிறவர்கள், மரியாதை செய்பவர்கள் யாரையும் அவன் இலட்சியம் செய்வதில்லை. இழிவுப்படுத்துபவர்களைக் கண்டு கோபங்கொள்வதும் இல்லை. உயர்வுபடுத்துபவர்களைக் கண்டு அவன் மகிழ்வதுமில்லை. உலகின் சலனங்கள், கொந்தளிப்புகள், இயற்கையின் சீறல்கள், அரசியல் குமுறல்கள் எவற்றையும் அவன் சலனத்துடன் பார்த்ததில்லை. அவனுக்கென்றோர் உலகம், அது அவனுக்குள்ளேயே இருந்தது. 

அவனுடன் நான் பழகியதே ஒரு சுவாரசியமான கதைதான். ஒரு நாள் மாலை மூன்று மணியிருக்கும். மேகக் கூட்டங்கள் வானத்தை ஆக்கிரமித்திருந்தன. மழை பெய்வதற்கு முன்பிருக்கும் ஒரு வித கதகதப்பில் தனிவழியே விரைந்து கொண்டிருந்தேன். நான் அந்த ஊருக்கு புதிதாகையால் மனதில் கவிந்த நினைவுகளுடன் ஊரின் அமைப்பையும் அவதானித்தபடியே நடந்தேன். வீதிக்கப்பால் வானைத்தொடும் வண்ணம் நெடிய மலையொன்று நீண்டிருந்தது. மலையின்அரை வாசிக்கும் கூடிய பகுதியில் பச்சை பசேலென செடி கொடிகள் பரந்திருந்தன. மேல் முகட்டில் வானம் கவிந்திருந்தது. வடகீழ்த் திசையில் பல முடிச்சுகளுடன் மலைத் தொடரொன்று காட்சி தந்தது. மனோரம்மியமான சூழலில் இயற்கை காட்சிகளில் மனதைப் பறிகொடுத்து நினைவு இலயிப்பில் சுகம் கண்டவனாக நான் நடந்தேன். 

வீதிக் கரையிலிருந்த பஸ் தரிக்குமிடத்துக்கு அருகில் அவன் தனிமையில் நின்றான். இந்த உலகத்தை மறந்தவன் மாதிரி அவன் எதையெதையோ சுற்றிச் சுழன்று பார்த்து கொண்டிருந்தான். அவனது கண்களின் தீட்சணியம் என்னை கவர்ந்தது. அவனது செய்கை அவனை ஒரு பைத்தியக் காரனாகவே என்னை நினைக்கத் தூண்டியது. பலத்த மழைக்கு அடையாளமாக அங்கொன்றும் இங்கொன்றுமாக மழைத் துளிகள் விழுந்தன. பலத்த காற்று சுற்றி சுழன்று அடித்தது. நான் அவனை அண்மினேன். 

‘என்ன அழகு! என்ன அழகு!’ அவன் தனக்குள் கூறிக்கொண்டான். ஆடாமல் அசையாமல் வடகீழ்த் திசை மலைத்தொடரைப் பார்த்துக்கொண்டிருந்தான். மொட்டை மரமொன்று காற்றுக்கு அசையாமல் தனிமையிலேயே நிமிர்ந்து நின்றது. தனிமையான வாழ்வே இவ்வுலகில் சுதந்திரமான துணிகரமான, சந்தோஷமான வாழ்வென்று அது அவனுக்கு உணர்த்தியதா. தனிமையான வாழ்வு சத்து நிறைந்ததா? 

அவன் தனிமையான வாழ்வையே விரும்பினான். இந்த உலகின் பாசங்கள், நேசங்கள், சோகங்கள், உணர்ச்சி குமுறல்கள் எல்லாவற்றினின்றும் ஒதுங்கி வாழ முற்பட்டு, தனிமையில் இன்பம் காண விழைந்தான். ஒற்றை மரம் ஆடாமல் அசையாமல் நின்றது. மழை பலத்து பெய்தது. அவன் அருகிலிருந்த பஸ்தரிக்குமிடக் கூடாரத்துள் ஒதுங்கிக்கொண்டான். நானும் அங்கேயே ஒதுங்கி நின்றேன். அவன் என்னைக் கவனித்ததாகத் தெரியவில்லை. அந்த ஒற்றை மரத்தையே பார்த்தப்படி நின்றான். அவன் போக்கு எனக்கு வியப்பை அளித்தது. அவனை நெருங்கி “என்ன அப்பிடிப் பார்க்கிறீர்கள்” என்றேன். 

அவன் என்னைப் பார்த்து மெல்ல சிரித்துவிட்டுச் சொன்னான். “அந்த ஒற்றை மரம் எப்படி நிமிர்ந்து நிற்கிறது பாருங்கள், பலத்த புயலையும் மழையையும் கூட அது இலட்சியம் செய்யவில்லை. இந்த உலகின் எதுவித பிடிப்புமற்றதினால் தான் அதனால் அப்படி நிற்க முடிகிறது. நானும் அப்படி வாழத்தான் நினைக்கிறேன். இந்த உலக பந்தங்களினின்றும் ஒதுங்கி அழகிய ஆத்மார்த்தமான காவியங்களில் வரும் அந்த அற்புத உலகை அனுபவிக்க விரும்புகிறேன்”. 

அவன் என்னை நிமிர்ந்து பார்த்தான். தான் ஏதோ அதிகப் பிரசங்கித்தனமாகப் பேசிவிட்டது போல அவன் நாணி நின்றான். அந்த நாணத்திலும் ஒருவித மிடுக்குடன் அவன் என்னையே பார்த்து நின்றான். அவன், என்னிலும் ஏதாவது தத்துவார்த்தங்களைத் தேடுகிறானா? உலகில் தோன்றுகின்ற ஒவ்வொரு பொருளிலுமே ஆழ்ந்த தத்துவங்கள் அடங்கியிருக்கின்றனவா? ஒவ்வொரு பொருளின் அசைவிலும், அசைவின்மையிலும், கண்காணும் பொருளிலும் காணாப் பொருளிலும், காது கேட்கும் ஒலியிலும், கேளாத மௌனகீதத்திலும் எல்லாமே தத்துவந்தானா? 

“உனக்கு என்ன பெயர் தம்பி” என்றேன் நான்.

“கருணாகரன்”

மழை நின்றிருந்தது. மலைத்தொடர்களில் மேகங்கள் கலைந்தன. அடி வானத்துக்குச் சற்று மேலே, மரங்களின் உச்சியில் தங்கச் சூரியன் பளபளத்துக் கொண்டிருந்தான். வடகீழ் மலைத்தொடரில் மஞ்சள் வெயில் பரவியிருந்தது. மரம், புல்செடிகளில் தங்கி நின்ற மழைத்துளிகள் வெய்யிலில் மினுமினுத்தன. வீதிக்கருகிலிருந்த கால்வாயில் வெள்ளம் ஓடிக்கொண்டிருந்தது. அவன் மழை விட்டதைக் கூட கவனியாமல் சுற்றாடலில் தன்னை மறந்து நின்றான். அவன் இந்த மாய உலகின் அழகை அணுவணுவாக அனுபவித்தான். 

‘அப்ப தம்பி நான் வாறேன்’. ஒரு புன்முறுவலினால் விடைகொடுத்த அவன் அப்படியே நின்றான். சிறிது தூரம் சென்று திரும்பிப்பார்த்தேன். அப்போதும் அவன் அங்கேயே அழகில் ஆழ்ந்திருந்தான். உலகில் எங்குமே அழகு பூத்துக்கிடக்கிறதா? 

ஓரு நாள் எதிர்பாராத விதமாக நகரப் பொது நூலகத்தில் அவனை சந்திக்க நேர்ந்தது.”கவின்கலைகள்” என்ற ஆங்கில நூலை கையில் தாங்கிய வண்ணம், ஜன்னலருகில் நின்று வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். வானத்தில் என்ன புதுமையைக் கண்டானோ…? நானும் அவன் அருகில் நின்று வானத்தைப் பார்த்தேன். 

வானம் களங்கமற்று நிர்மலமாக இருந்தது. இரு ஜோடிப் பறவைகள் எட்டாத தொலைவில் இணைந்து பறந்து கொண்டிருந்தன. அவன் அவற்றையே கண்கொட்டாமல் குறுகுறுப்பாகப் பார்த்துக்கொண்டிருந்தான். 

“தம்பி! இரு பறவைகள் அல்லவா இணைந்து பறக்கின்றன” என்றேன். 

திடீரென என்னை திரும்பிப் பார்த்த அவன், நான் சொன்ன கருத்தைப் புரிந்து கொண்டவன் போல, ஒரு கணம் சிரித்தான். “என்ன செய்வது? உலகம் எங்கணுமே உண்மைகள் மறைந்து கிடக்கின்றன. மாய உலகம், பொய் உலகம், மயக்குகின்ற உலகம் என்றெல்லாம் கூறுகின்றார்களே? அதெல்லாம் பொய்” என்றான். 

என்னை நிமிர்ந்து பார்த்துவிட்டு, மீண்டும் சொன்னான். 

“மனிதனது தத்துவம், தாகம், ஆசை எல்லாம் அவனின் அனுபவம், சூழல்,பருவம் என்பனவற்றை ஒட்டியே பிறக்கின்றன. எல்லாம் ஒன்றிலொன்று சங்கமாகி இணையும் இந்த உலகில் நான் மட்டுமேன் தனியாக இருக்கக் வேண்டும்”. 

“தம்பிக்கும் வாலிப வயது தானே!” என்றேன். 

நாணத்தினால் சிவக்கும் பெண்ணின் முகம் போல அவன் முகம் சிவந்தது. “ஆமாம்! நான் ஒரு பெண்ணைக் காதலிக்கிறேன். அந்த அனுபவம் மிக மிக மகத்தானது. இரண்டு இதயங்களின், உணர்வுகளின், உயிர்களின் கலப்பில் சங்கமத்தில் இந்த உலகமே சுவர்க்கமாகின்றது. ஓர் உயிரின் இதய தாகங்கள், ஆசாபாசங்கள், துன்ப துயரங்கள், இன்பங்கள் இதய பூரிப்புகளில் மற்ற உயிரும் கலக்கும் போது ஓர் அருமையான காவியத்துக்கான உணர்ச்சிகள் அந்த அனுபவத்தில் பிறக்கின்றன”. 

வார்த்தை தடைப்பட அவன் முகத்தில் மகிழ்ச்சி பொங்க எதையோ பார்த்தான். நானும் பார்த்தேன். ஒரு அழகான பெண் நின்று கொண்டிருந்தாள். அவனை நோக்கி வந்த அவள் என்னை அவனுடன் கண்டதனால் தயங்கி நின்று அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். 

கண்கள் காந்தங்களா? அவை ஒன்றையொன்று கவர்கின்றனவா? 

“அப்ப தம்பி வாறன்” என்று நான் விடைபெற்றேன். அப்பால் சென்ற என் காதில் அவர்களின் கலகலவென்ற களங்கமற்ற சிரிப்பொலி ஒலித்தது. 

ஒரு நாள் எதேச்சையாக வீதியில் சந்தித்த அவன், அன்று மாலை நாலுமணியளவில் என்னைப் பூந்தோட்டத்திற்கு வருமாறு கேட்டிருந்தான். அவன் மிகவும் பரபரப்புற்று வாட்டமடைந்திருந்தான். அவன் முகத்தில் இனம் தெரியாத ஏதோ ஒரு சோகம் குடி கொண்டிருந்தது. 

அன்று மாலை நாலு மணியளவில் பூந்தோட்டத்துக்குச் சென்று அவன் இருக்குமிடத்தை தேடி அலைந்தேன். பூந்தோட்டத்தின் மத்தியில் நெளிந்து வளைந்தோடும் அமைதியான நீரோட்டத்திற்குப் பக்கத்தில், மண்ணை அணைத்து நிற்கும் ஒரு மரக் கிளையில் காலைத்தொங்கப் போட்டவாறு அடிமரத்தோடு சாய்ந்து அவன் அமர்ந்திருந்தான். அவன் கைகள் தாளம் போடுவதும் தெரிந்தது. 

அவனை நோக்கிச் சென்றேன். அவன் வாயிலிருந்து வந்த இனிமையான கீத அலைகள் என் காதில் இனித்தன. அவன் கண்ணை மூடிக்கொண்டு, மெதுவாக இனிமையான குரலில் ஏதோவொரு சோகப் பாட்டைப் பாடிக்கொண்டிருந்தான். “இவன் ஓர் அபூர்வ மனிதன் தான்” என நான் எண்ணினேன். பாடி முடிந்து கண்ணை விழித்த அவன் ஒரு புன்னகையால் என்னை வரவேற்றான். 

“என்ன தம்பி! இனிமையாகப் பாடுகிறீர்களே”! என்றேன். என்னை இருக்கச் சொல்லி உபசரித்த அவன், “எனது நெஞ்சில் துயரங்கள் குவிந்து கிடக்கின்றன. ‘இனிமையான பாடல்கள் துயரமான நினைவுகளையே சொல்லுகின்றன’ என்று ஆங்கிலக் கவிஞன் ஷெல்லி கூறியிருக்கிறான்” என்றான். 

“என்ன தம்பி உலகின் எந்த அணுவிலும் அழகையே காணும் நீங்கள் அதன் இனிமையை உணரும் நீங்கள், துயரப்படுகிறேன் என்று கூறுகிறீர்களே” என்றேன். 

அவன் ஏதோ சிந்தனையில் மூழ்கியவனாக மெளனம் சாதித்தான்.”என்ன துயரங்கள் எனக்கு சொல்லலாம் தானே” என்றேன். “உங்கள் மொழியில் நான் ஓர் அழகைக் காண்கிறேன். உங்களுக்கு சொல்வதற்காகத்தான் உங்களை இங்கு அழைத்தேன். உங்களுக்கு சொல்ல வேண்டும் போல என் மனம் துடிக்கிறது. என்னோடு இணைந்து பறந்தவளை எனக்கு சொந்தமில்லை என்று சொல்லிவிட்டார்கள்”. அவன் தொண்டை கரகரத்தது. 

“என்ன காரணம்” என்றேன். 

‘பொருளாதாரம் தான். அவள் பணக்கார வர்க்கம்; நான் கமக்கார வர்க்கம்” என்றான். சிறிது நேரத்தின் பின் ‘எனக்கு ஓர் உத்தியோகம் கிடைந்திருக்கிறது’ என்றான். 

“நல்லது தானே” என்றேன். 

என்னை நிமிர்ந்து ஒரு மாதிரியாக பார்த்துவிட்டு சொன்னான் “எனக்கு உத்தியோகம் பார்க்கவே பிடிக்கவில்லை. இந்த உலகில் இதே போன்ற ஒரு சுதந்திர மனிதனாக உலகத்து அழகையெல்லாம் அணுவணுவாக அனுபவிப்பவனாகத்தான் நான் வாழ விரும்புகிறேன். ஆனால்… ஆனால்… எனது குடும்பத்தின் வறுமைச் சூழல் என்னைப் பிடித்துத் தள்ளுகிறதே”. 

“என்ன தம்பி செய்வது வாழ்க்கை என்பதில் நாம் நினைத்த மாதிரி எல்லாம் வாழ முடியுமா? சிற்சில இடங்களில் எமது உணர்ச்சிகள், எண்ணங்கள், ஆசைகளையும் தியாகம் செய்யத்தான் வேண்டும்” 

“நான் யாருக்காக தியாகம் செய்ய வேண்டும். ஏன் எனக்காக என் குடும்பத்தினர் தம் வாழ்க்கை வசதிகளை தியாகம் செய்தாலென்ன?” நான் மெளனம் சாதித்தேன். 

‘ஓ! துயரத்திலிருந்து பிறக்கும் இனிய கீதங்கள் போல துயரங்களும் இனிக்கின்றன தான். ஆனால் நான் என்னில், என்னையறியாமலே கிளர்ந்தெழும் அந்த மகிழ்ச்சி உணர்ச்சிகளை களைந்தெறிய முடியாதே. இந்த உலகத்து மனிதர்களைப் போல எனக்கு வாழத் தெரியவில்லை. இந்த உலகத்தில் வாழ எனக்குத் தெரியாது. எனக்கென்று ஓர் உலகம் வேண்டும்’. 

அவன் விசித்து விசித்து அழுதான். 

எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. 

பூமி வெண்ணிலவில் பால் வண்ணம் கொள்ளத் தொடங்கியது. மாலையில் மலரும் மலர்கள் மலர்ந்து மணம் பரப்பின. நீரோட்டம் ஒரே சீராக இரைந்து கொண்டோடியது. ஒரு பெருமூச்சு விட்டவாறு அவன் எழுந்தான். நானும் எழுந்தேன். ‘நெளிந்து வளைந்தோடும் இந்த நீரோட்டம் போல என் வாழ்வு அமைய வேண்டுமென நான் விரும்பினேன். ஆனால், எனக்கு அது கொடுத்துவைக்கவில்லை. நான் நாளைக்கு உத்தியோகம் ஏற்பதற்காக பயணப்படுகிறேன்’. அவனுக்கு ஆறுதல் கூறி அனுப்பி வைத்தேன். 

நாட்கள் சில சென்றன. அவனிடமிருந்து எனக்கொரு கடிதம் வந்தது. “தனக்கு உத்தியோக வாழ்க்கை கசப்பதாகவும் அங்குள்ளவர்களை தனக்குப் பிடிக்கவில்லையெனவும் தனக்கு இந்த உலகில் வாழ முடியவில்லையெனவும் தான் தேய்ந்து உருகி வருகிறேன்” எனவும் எழுதியிருந்தான். 

அவனுக்கு ஆறுதல் கூறி ஒரு பதில் கடிதம் வரைந்தேன். 

அவனிடமிருந்து மீண்டும் ஒரு கடிதம் வந்தது. 

அன்புள்ளவருக்கு, 

தாங்கள் என்மேல் காட்டும் அக்கறைக்கு நன்றி. நீங்கள் கூறிய ஆறுதல்களை, சமாதானங்களை என்னால் ஏற்க முடியவில்லை. தன்னடக்கத்தைவிட்டு சொல்லுகிறேன். நான் இந்த உலகில் ஓர் அபூர்வபிறவி. விதிவிலக்கான பிறவி. 

என்னை இந்த உலகம் நன்றாக பயன்படுத்தவில்லை. வேண்டாத பொருளாதார காரணங்களினால் அது என்னை பழிவாங்குகிறது. நான் அந்த உலகிற்கு என்ன செய்தேன். அதன் அழகை அம்மணமாக அறிந்து அனுபவித்ததுதான் என் குற்றமா? என்னால் இந்த உலகத்தில் வாழ முடியவில்லை. எனக்கென்று ஓர் உலகத்தைதேடி நான் போகிறேன்! 

பின் அவனிடமிருந்து ஒரு கடிதமும் வரவில்லை. நித்தமும் அவனிடமிருந்து கடிதத்தை எதிர்பார்க்கும் நான் ஏமாற்றமடைந்து வருகிறேன். அவன் தனக்கென்று ஓர் உலகத்தைத் தேடிச் சென்றுவிட்டானோ! என்னவோ? எனக்குத் தெரியாது.

– வீரகேசரி 30.12.1969

– உதிரிகளும்…(சிறுகதைகள்), முதலாம் பதிப்பு: ஆவணி 2006, புதிய தரிசனம் வெளியீடு.

Print Friendly, PDF & Email
ஐ. சண்முகலிங்கம் (பிறப்பு 1 ஆகத்து 1946 – 24 ஏப்ரல் 2023, குப்பிழான், யாழ்ப்பாணம்) குப்பிழான் ஐ. சண்முகம் என்ற பெயரில் எழுதும் ஈழத்து எழுத்தாளர். பேராதனைப் பல்கலைக் கழகத்தில் கலைப்பட்டம் பெற்ற இவர் ஓர் ஆசிரியர். சிறுகதையாசிரியராக கவனம் பெற்ற சண்முகன் இசை, சினிமா, ஓவியம் போன்றவற்றிலும் ஈடுபாடுடையவர். அலையின் ஆரம்ப ஆசிரியர் குழுவில் இடம்பெற்றவர். ஜீவநதி 2022.06 (174) (குப்பிழான் ஐ. சண்முகன் சிறப்பிதழ்)https://noolaham.net/project/1029/102876/102876.pdf இவரது…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *