அந்த இரயில் பிரயாணத்தில் என்னை முகம் சுழிக்க வைத்தது அந்த அழுக்கு மனிதன் தான்.
கண்டிப்பாய் குளித்து வாரங்களாவது ஆகியிருக்க வேண்டும். அருகில் உட்கார்ந்திருவரை பார்த்தேன். அவர் முகம் சுழிப்புடன் அவன் அருகில் உட்கார்ந்திருந்ததை உணர முடிந்தது.
இது பகல் நேர இரயில் சேவை என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது. ரிசர்வேஷனும் இல்லை. பொது இருக்கைகள்தான். சென்னை போகவேண்டும். இரவு அங்கிருக்க வேண்டும் வேறு வழியின்றி இதில் ஏறி விட்டேன்.
என்னைப்போல் பலர் இதன் காரணமாகவே இதில் ஏறியிருப்பார்களோ என்னவோ, நல்ல கூட்டம் இருந்தது. நிம்மதி என்னவென்றால் அனைவருக்கும் உட்கார இருக்கை இருந்ததால் கொஞ்சம் எழுந்து நடமாட வசதியாக இருந்தது.
கடைசி வரிசையில் தான் அந்த அழுக்கு மனிதன் உட்கார்ந்திருந்தான். நான் அவனிடமிருந்து நான்கு வரிசை முன் தள்ளி இருந்தாலும் அவனை பார்த்து உட்காரும் இருக்கையில் இருந்ததால் அவன் என் கண்களுக்கு நன்கு தென்பட்டான்.
பிச்சைக்காரனாகவும் இருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால், பிச்சை எடுப்பவன் இப்படி இருக்கையில் உட்கார்ந்து வரமாட்டான். இரண்டாவது இரயில் கிளம்பி ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகியிருந்ததால், இந்நேரம் வரைக்கும் எழுந்து கையேந்தாமல் இருந்திருக்க மாட்டான்.
எனக்கு மட்டும் அவன் இப்படி தோன்றுகிறானா? அங்குமிங்கும் சுற்றி பயணிகளின் முகத்தை பார்த்தேன். அவரவர்க்கு அவரவர் கவலை. தங்கள் வேலையை பார்த்துக்கொண்டிருந்தனர். என்றாலும் ஒரு சிலர் அவன் இருந்த பக்கம் பார்ப்பதும் சட்டென தன் பார்வை திருப்பி கொள்வதும் தெரிந்தது.
ஈரோடு ஸ்டேசனில் ஐந்து நிமிடம் என்று சொல்லி பத்து நிமிடம் நிறுத்தி விட்டார்கள். எழுந்து கீழே இறங்கி நிற்கலாமென்றால் சீட்டில் யாராவது உட்கார்ந்து விட்டால் ! ரிசர்வேசன் என்றாலும் சண்டை போடலாம், இதில் அப்படி செய்ய முடியாதே.
அதனால் எழுந்து பக்கத்து இருக்கை காரரிடம் சொல்லி விட்டு கீழிறிங்கி நின்றேன். இருந்தாலும் என் சீட்டை ஒட்டித்தான் கீழே நின்று அவ்வப்போது இருக்கையயும் பார்த்து ஸ்டேசனில் நடப்பவைகளையும் வேடிக்கை பார்த்தபடி நின்று கொண்டிருந்தேன்.
இரயில் கிளம்புவதற்கு விசில் ஊதி விட்டான். நான் சட்டென ஏறி எனது இருக்கையில் உட்காரபோனவனின் பார்வை அந்த அழுக்கு மனிதன் இருக்கும் பக்கம் போனது.
அங்கு ஒரே கசமுசவென்று சத்தம் கேட்டது. எல்லோரின் பார்வையும் அங்குதான் இருந்தது
என் பார்வையும் அங்கே போனது. அந்த அழுக்கு மனிதன் உட்கார்ந்திருந்த மனிதனிடம் கெஞ்சிக்கொண்டிருந்தான். ப்ளீஸ், இங்கு நான் உட்கார்ந்திருந்தேன், என்னால் நிற்க முடியாது, கொஞ்சம் தயவு பண்ணி எந்திரியுங்கள்.
அந்த ஆள் கண்டு கொண்டதாக தெரியவில்லை, நின்று நின்று பார்த்தும், அந்த ஆள் எழுவதாக தெரியவில்லை. அதுவரை அழுக்கு மனிதனாக தெரிந்தவன் இப்பொழுது பரிதாப்படக்கூடிய மனிதனாகி விட்டான். (எழுந்து போய் நியாயம் கேட்டு சண்டையிடுவேன் என்று எதிர்பார்க்காதீர்கள்) எல்லாரையும் போல அவன் மீது பரிதாபம் மட்டும் பட்டபடி உட்காந்திருந்தேன்.
அழுக்கு மனிதன் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவன் செய்த சதி இது, என்று முன் புற சீட் (எங்கள் புறம் பார்த்தபடி )ஆள் சொல்லிக் கொண்டிருந்தார். இவன் இறங்கி யாரிடமோ “செல்போன்” கொஞ்சம் கொடுங்க சார் அப்படீன்னு கெஞ்சிகிட்டிருந்தான். ஒருத்தர் கூட இவனுக்கு செல்போனை கொடுக்காம திட்டிட்டு போயிட்டிருந்தாங்களாம். யாரோ ஒரு பையன் இவன் கிட்டே
செல்போனை கொடுத்திருக்கான். அவன் போனை வாங்கி யாருக்கோ போன் பண்ணி நான் வந்திடுவேன், வந்துட்டேன், அப்படீன்னு சொல்லிகிட்டிருந்ததை நானும் அங்க நின்னு கேட்டுகிட்டு இருந்தேன். போனை அந்த பையன் கிட்டே கொடுத்துட்டு இவன் உள்ளே ஏறியிருக்கான்.
அதுக்குள்ள, அவன் பக்கத்து ஆள் வேறொரு ஆளை கூப்பிட்டு பக்கத்துல உட்கார வச்சுட்டிருக்கான், எந்திரிக்க வேணாமுன்னும் சொல்லி வச்சிருக்கான். ஒருத்தன் ‘ட்ரெஸ் அழுக்கா’ இருந்தா அவனை என்ன்னென்னவெல்லாம் பண்னாறானுங்க, இப்படி சொல்லியபடி இருந்ததை நானும் கேட்டு கொண்டுதான் இருந்தேன். எனக்கும் சேர்த்து அவர் சொன்னது போல் இருந்தது.
நான் அவன் எங்கே இருக்கிறான் என்று தலையை உயர்த்தி பார்த்தேன். அவன் அங்கிருந்த கம்பியின் மீது சாய்ந்தபடி கீழே உட்கார்ந்தநிலையில் இருந்தான். இரயில் அசைவுக்கேற்ப அவன் தலையும் ஆட்டத்தில் இருந்தது.
அரை மணி நேர பிரயாணம் “தடால்” என்ற சத்தம்’ எல்லோரும் பதட்டத்துடன் பார்க்க “ முன்னர் அழுக்கு மனிதன் உட்கார்ந்திருந்த சீட்டின்” மேல் மேல் புறம் மாட்டி வைக்கப்பட்டிருந்த இருக்கையின் கம்பிகள் இணைப்பு கழண்டு,கீழே உட்கார்ந்திருந்தவர்கள் தலை மீது மோதி இருந்தது. அந்த இடம் முழுவதும் ஒரே களேபரம் “குய்யோ முய்யோ” அலறல். இருவருக்கு தலையில் நல்ல காயம்,மூன்றாவது ஆளுக்கு கழுத்து பகுதியில் நல்ல அடி. மூவரும் மயங்கிய நிலையிலேயே, சேலம் ஜங்க்ஷனில் இறக்கி மருத்துவமனைக்கு கொண்டு போய் விடலாம் என்று முடிவு செய்து காத்திருந்தார்கள் மற்ற பயணிகள்.
பாவம் அழுக்கு மனிதன்தான் எழுந்து உடனடியாக அந்த சீட்டை மேல் தூக்கி பிடித்து மூவரையும் வெளியே கூட்டி வந்திருந்தான். அவனின் அழுக்கு உடையில் நிறைய இரத்த கறையாகியிருந்தது. விபத்து நடந்ததன் அருகில் இருந்த பயணிகள் சிலர் உடலில் கறை விழுந்து விடும் என்று சற்று ஒதுங்கியே இருந்தார்கள்.
எங்களுக்கு ஒன்று புரிந்து விட்டது, இவனின் நேரம், இவனுக்கு அடிபட கூடாதென்றே வலுக்கட்டாயமாக வெளியே எழுப்பிவிட்டது போலிருக்கிறது.
சேலம் ஜங்ஷனில் பிளாட்பார்மில் சரியான கூட்டம், இவர்கள் அடிப்பட்டதை பார்ப்பதற்கு இவ்வளவு கூட்டமா? அல்லது சென்னை ஏறுவதற்கு இவ்வளவு கூட்டமா? புரியாமல் பார்த்துக்கொண்டிருக்க..
ஒரு கூட்டம் நாங்கள் இருந்த பெட்டிக்குள் திபு திபுவென ஏறியவர்கள்,இந்த அழுக்கு மனிதனை கட்டி பிடித்து ஆனந்த கூச்சலிட்டார்கள். அப்படியே அவனை தூக்கிக்கொண்டு வெளியேறி சென்றார்கள்.
எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன நடக்கிறது என்று, இறங்கி சென்று கொண்டிருந்தவர்களில் ஒருவனை பிடித்து நிறுத்தி யார் இவர்? என்று கேட்க, சார் இவர் சென்னையில பெரிய கோடீஸ்வரன், ஊட்டிக்கு போனவர், அங்க இருக்கற பங்களாவுல தங்கியிருக்காரு. காலையில மலையில “ட்ரக்கிங்க்” போறேன்னு காட்டுக்குள்ள போனவரு ஒரு வாரமா திரும்பி வரலை” இரண்டு
மூணு நாளா இவரை அந்த காடு மலை எல்லாம் தேடிகிட்டிருந்தாங்க. இவர் என்னடான்னா ட்ரெயின்ல வந்திட்டிருக்கேன்னு போன் பண்ணியிருக்காரு. அவரை சென்னைக்கு கார்ல கூட்டிட்டு போகணும். அதுக்கு முன்னாடி பெரிய ஓட்டலுக்கு கூட்டிட்டு போறாங்க.
நான் உட்பட அனைவரும் வாய் பிளந்து இந்த கதையை கேட்டுக் கொண்டிருக்க, ஆடி அசைந்து வந்த மருத்துவ சேவகர்கள், அடிபட்டு உட்கார்ந்திருந்த இந்த மூவரையும் கீழே இறக்கி நடந்து கூட்டிக்கொண்டு சென்றதையும் பார்த்து கொண்டுதான் இருந்தோம்.
அதற்காக நாங்கள் எல்லோரும் ரொம்ப நல்லவர்கள் என்று சொல்ல வரவில்லை.