மனசாட்சி விற்பனைக்கு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 22, 2023
பார்வையிட்டோர்: 1,896 
 
 

பொன்னியில் மென்மையான பாதங்கள் இத்தனை வேகமாய் பாயுமா என்று எனக்கே ஆச்சரியமாக இருந்தது. என்னை முந்திகொண்டு அவள் முன்னேறினாள். அவசரமும் பரபரப்பும் என்னைவிட பொன்னிக்குத்தான் அதிகமாக துளிர்ந்திருந்தன. என் காப்புக்காய்த்த உள்ளங்கையை பொன்னியின் வெண்ணெய் தோய்ந்த உள்ளங்கை இறுக்கமாகப் பற்றியிருந்தது.

வலது தோளில் மாட்டியிருந்த பையை கனம் தாங்காமல் இடது தோள்பட்டைக்கு மாற்றிக்கொண்டாள். “அதையும் நான் தூக்கிக்கிட்டு வரட்டா?” என்று கேட்டேன். கொஞ்சம் மூச்சடைத்தது. “நீங்கதான் ஏற்கனவே ஒன்னத் தோள்ள மாட்டிக்கிட்டு வரீங்களே, இதையும் எப்படி தூக்குவீங்க? அதவிட இது அவ்வளயும் கனமில்ல. நானே தூக்கிக்கிட்டு வரேன்,” என்றாள். அவளுக்கும் மூச்சு திணரியது.

“இன்னும் கொஞ்ச தூரந்தான். மோட்டர அங்கதான் நிப்பாட்டி வெச்சிருக்கேன்,” என்று சொன்னதும் நடையில் உற்சாகம் புகுந்து வேகம் அதிகரித்தது பொன்னிக்கு.

மோட்டரைப் பூட்டியிருந்த சங்கிலியைக் கழற்றி வக்கிலில் போட்டேன். சாவியைத் திருகி வண்டியை உசுப்பேற்றியதும் அது சன்னமான புகையை காற்றுக்கு வரிவட்டி போல் தந்து நிதான நிலைக்கு வந்தது; நாங்களும்தான். நான் மாட்டியிருந்த பையை எடுத்து வக்கிலில் நுந்திவைத்துக்கொண்டேன். பொன்னி என் தோள்பட்டையைப் பிடித்து ஓர் உலுக்கு உலுக்கி ஏறிக்கொண்டாள். அவள் எப்போதுமே இப்படித்தான். உலுக்கல் இல்லாமல் ஏறமாட்டாள். பைபை இருவர்களுக்கும் இடையே இருந்த சிற்றிடைவெளியில் செருகிவைத்துக்கொண்டாள்.

“சரி,” என்றாள் பொன்னி. அவளுடைய அந்த “சரி,” எனும் அனுமதிச் சான்றிதழ் பெற்றால்தான் வண்டி நகரவே முடியும்! மோட்டாரை எடுத்துச் சாலையில் கலந்தேன். சில நிமிடங்கள் பயணத்திற்குப் பின் அந்தச் சாலை நெடுஞ்சாலையில் சென்று கலந்தது, நதி கடலுடன் கலப்பது போல.

“அப்பாடா…” என்று பெருமூச்சோடு கலந்து செய்த வார்த்தை அவள் உதிர்த்தபோது காற்றழுத்தத்தில் எதிர்நீச்சல் போட்டு என் செவிமடல்களை வந்தடைந்தது. எனக்கும் “அப்பாடா,” என்றிருந்ததில் மறுப்பேது? இனிமேல் நிம்மதிதான். மோட்டார் நெடுஞ்சாலையின் போக்கில் விட்டுக்கொடுத்தது.

பொன்னியின் அழகைக் கண்டுதான் நான் மயங்கி சொக்கிப் போனேன். ஆண்கள் பலரின் கனவுகளைக் கொள்ளையடிக்கும் திறன் பெற்றது அவளுடைய வசீகர அழகு. அந்த அழகின் பலத்தை அவள்தான் உணராமல் போய்விட்டாள்.

சுத்தமான நெய் இருக்கிறதே அந்த நிறத்தில் பொன்னியின் பொன்மேனி; க்ரிஸ்டல் கல்லை கண்முன் கொணரும் கண்கள்; பாலத்தால் இணைந்த மலேசிய இரட்டை கோபுரத்தைப் போல இணைந்த புருவங்கள்; உதட்டுச்சாயம் போடாமலே சிவந்து பழுத்துக் கிடக்கும் உண்ணதமான உதடுகள்; என் உயரத்தை எட்டிவிட முயற்சிக்கும் உயரம்; வரம்புகள் மீறாத சமசீர் வம்புகள் இரண்டு; மின்னல் வெட்டும் இடைவெட்டு; கண்ணைப் பறிக்கும் பழுத்த கெண்டைக் கால்கள்; உண்மையிலேயே பொன்னியின் அழகை பொன்னியே உணர்ந்திராதவள்தான்.

இப்படியொரு கிளி என்னிடம் சிக்கியது என்னவோ என் அதிர்ஷ்டம்தான். நாங்கள் இருவரும் இந்த ஊரை விட்டே புறப்படுகிறோம். இந்த இரவுப் பொழுது எங்களது வாழ்க்கையின் திசைகளைச் சொல்லப்போகும் பொழுது. அதை இந்த இரவு உணராமல் இருந்திருக்கலாம்; பொன்னி உணராமல் இருந்திருக்கலாம். கட்டாயமாக நான் உணராமல் இல்லை. மத்தியானத்திற்குள் பந்திங்கின் தலைவாசலைத் தொட்டுவிடலாம் என்று நினைக்கிறேன். சுங்கை சிப்பூட்டிலிருந்து பந்திங்கிற்கு மோட்டாரில் வருவது என்ன சாமானிய காரியமா? இந்த இரவைக் கடந்து வர; இந்த தூரத்தைக் கடந்து வர என்னுள் எதிலிருந்தோ விடுதலையாகிற ஆனந்தம். அதே சமயம் எதிலோ சிக்கிக்கொள்கிற சங்கடம்.

பொன்னி என் தோள்மீது சரிந்திருந்தாள். எங்கே அவள் கண்ணயர்ந்து விடுவாளோ என்கிற அச்சம் வேறு! நான் போகிற வேகத்திற்கு மோட்டாரிலிருந்து சரிந்து கீழே விழுந்து தொலைத்தால் உடம்பில் உள்ள சதையில் நாற்பது சதவீதத்தைத் தார்ச்சாலை தின்றிருக்கும். அடிக்கடி அவளை உசுப்பிவிட்டுக்கொண்டே இருந்தேன்.

நடுநிசி குளிரில் உடல்கூடு நடுங்கி உதறல் போட்டது. அந்த நேரத்திலும் என் வலது தோள்பட்டையில் ஈரம் படர்வது போன்ற மெல்லிய உணர்வை நான் உணர்ந்தேன். பணி நீரோ என்று தொட்டுப் பார்த்தேன். இல்லை; அது பொன்னியின் கண்ணீர்.

இருபத்து மூன்று ஆண்டுகள் கண்ணாகப் பார்த்து வளர்த்துவிட்டார்களே அந்த நன்றிக் கடனுக்காக கண்ணீர் மரியாதை செலுத்துகிறாள் என்று நினைக்கிறேன். விடிந்ததும் வீடு முழுவதும் தேடுவார்கள். வீட்டில் பொன்னி இருக்கமாட்டாள். உறவினர்களுக்கும் பொன்னியின் தோழிகளுக்கும் விசாரணைகள் பறக்கும். பெண்ணைக் காணவில்லை என்று போலீசில் புகார் செய்வார்கள். ஒரு நாளைக்கு முன்னதாகவே பொன்னி கைப்பட எழுதிய கடிதம் வீட்டிற்கு மதிய நேரத்தில் போய்ச்சேர வீட்டில் இடி விழும். அந்த நேரத்தின் நாங்கள் பந்திங்கில் இருப்போம்.

“அழறியா?” என்று கேட்டேன். பொன்னி ஒன்றும் பேசவில்லை. என்னை இன்னும் இறுக்கமாகப் பற்றிக்கொண்டாள். எல்லாவற்றையும் விட்டுவிட்டேன்; நீங்கள் மட்டும்தான் ஒற்றைப் பற்றுதல் என்பதன் குறியீடுதான் அப்பற்றுதல் என்று விளங்கியது எனக்கு.

மணி அதிகாலை நான்கே முக்கால். கொஞ்ச நேரம் தெருவோர பாதசாரிகளின் பாதையில் நின்றுகொண்டோம். பிட்டம் வீக்கம் கொண்டிருக்கும் என்று நினைக்கிறேன். வின்னுவின்னென்று வலி! பொன்னி அந்த வலி தாங்காமல்தான் அழுகிறாளா அல்லது இன்னும் குடும்பத்தை நினைத்து நினைத்து உருகுகிறாளா? “பொன்னி?” என்றேன். அவள் பார்த்தாள். கண்களின் ஈரம் கோத்திருப்பது தெருவிளக்கு எடுத்துக் காட்டியது.

“எனக்குப் பயம்மா இருக்கு,” என்றாள். வீட்டை விட்டு ஓடிப்போவது என்ற முடிவு எடுக்கப்பட்டதிலிருந்து இப்போதுவரை பொன்னி உச்சாடானம் செய்துகொண்டிருக்கும் தொடர் இதுதான். எரிச்சல் படவா முடியும்? எத்தனை எரிச்சல் வந்தாலும் அவளது அழகு முகத்தின்முன் மண்டியிட்டுவிடுமே. அவளுடைய அந்த வெகுளித்தனம்தான் எனக்கு மிகப் பிடித்தமான ஒன்று. நான் எதைச் சமாதானமாகச் சொன்னாலும் தலையாட்டும் தஞ்சாவூர் பொம்மை; அழகான பொம்மை. சொன்ன சமாதானத்தில் அவளது ஐயம் தெளிவுரக் கண்டேன்.

இருபது நிமிடம் இடைவெளி எடுத்துக்கொண்டபின் மீண்டும் எங்களது எதிர்காலத்தை நோக்கிப் பயணித்தோம்.

பொன்னி இன்னும் தூக்கத்தைக் கட்டுப்படுத்தி உட்கார்ந்திருந்தாள். க்ரிஸ்டல் போன்று இருந்த கண்கள் வீக்கம் கண்டு சிகப்பேறி ரோஜாப்பூவைப் போன்று மாறியிருந்தது. என் கண்களைக் கண்ணாடியில் பார்த்தேன். பார்க்காமலே இருந்திருக்கலாமோ என்று தோன்றியது. என் கண்களில் ஏதோ குரூரமும் கலவரமும் கலந்து சிதறிக்கிடந்தன.

பசிப்பதாகச் சொன்னாள் பொன்னி. அவள் பசிக்கிறது என்று கேட்டால் எனக்குச் சிரிப்புதான் வரும். எனக்கெல்லாம் பசியெடுத்தால் முதல் சுற்றை முடித்துவிட்டு இரண்டாவது சுற்றைத் தொடாமல் எழுந்திருக்கமாட்டேன். அதிலும் மாமீசம் இல்லையென்றால் சாப்பாடு இறங்காது. பொன்னி எப்படி சாப்பிடுவாள் தெரியுமா? ஒரே ஒரு கரண்டி சோறு, கறி ஊற்றமாட்டாள். இரண்டு வகை கறிக்காய்கள் போதும். இதுதான் அவளுடைய சாப்பாடு. இப்படித்தான் சாப்பாட்டைக் கட்டுப்படுத்தி உடல்வாகுவைத் தக்கவைத்துக் கொள்கிறாள் என்பது எனது யூகம்.

மலாய்க்காரன் ஒருத்தனுடைய ரோட்டோர ஒட்டுக்கடை இருந்தது. அதிகாலையில் வேலைக்குப் போகிறவர்களுக்கு பசியாறை போடுபவர்கள் இந்த மாதிரி நிறைய பேர் ரோட்டோரம் கடையைப் போட்டு வைத்திருப்பது எங்களுக்கும் வசதிதான். போய் உட்கார்ந்து சாப்பாடு வரவழைத்தோம்.

எப்போதும் சாப்பாட்டைப் பார்த்ததுமே எனது உலக சோகங்களும் மாயைகளும் மறந்து கவனம் சாப்பாடு எனும் மையப் புள்ளியில் சங்கமித்துவிடும். ஆனால், இன்று என் கவனமும் கண்களும் பொன்னியையே சுற்றிச் சுற்றி வட்டமிட்டன. என் மையலிடும் பார்வையை அவள் உணர்ந்தாளோ இல்லையோ. அனேகமாக இன்னும் அவளுக்கு குற்ற உணர்வு குறுகுறுத்துக் கொண்டிருந்திருக்கும் என்றுதான் நினைக்கிறேன்.

பொன்னியோடு ஆறு மாதங்கள் பழகியாகிவிட்டது. தினமும்தான் அவளைப் பார்த்துவருகிறேன். ஆனால், இன்று மட்டும் ஆசை தீர பார்த்து ரசிக்கவேண்டும் போல் இருந்தது.

என் தோள்பட்டையை அழுத்திக் குலுக்கிப் பிடித்து ஏறிக்கொண்டாள் வண்டியில். இன்னும் பல கிலோமீட்டர்கள் உள்ளன எங்கள் பயணத்தின் இலக்கை அடைய. சன்னஞ்சன்னமாய் ஆதவனின் புரட்சி அடிவானத்தில் எதிரொலிக்கத் தொடங்கியது. எனது விடாப்பிடியான முயற்சியோ வண்டியை விரட்டிக்கொண்டிருந்தது.

நாங்கள் பந்திங்கின் தலைப்பை அடைந்துவிட்டோம். இந்நேரம் பொன்னி எழுதிப் போட்ட கடிதம் போய் சேர்ந்திருக்கும். அங்கே பெரிய கலவரம் வெடித்துக் கொண்டிருக்கும். நல்லவேளை, என்னைக் கேக்க யாரும் இல்லை. எனக்காக் களிப்படையவும் கவலைப் பட்டுக்கொள்ளவும் இருக்கும் ஒரே ஜீவன் நானே தான்.

“இன்னும் இருவது நிமிஷத்துல வீட்டுக்குப் போயிருவோம்,” என்றேன். வீடு என்று குறித்தது ‘என் வீட்டை’. பொன்னியின் பற்றலில் தளர்வு தெரிந்தது. அயர்ந்து போய்விட்டாள். எனக்கே தூக்கம் கண்ணைப் பிடுங்கி தள்ளும்போது பூப்போன்று வளர்ந்த பெண், அவளுக்கு எப்படியிருந்திருக்கும்?

வீட்டை வெற்றிகரமாக வந்தடைந்தோம். பொன்னி வண்டியிலிருந்து இறங்கி நான் கதவைத் திறந்துவிடும்வரை காத்திருந்தாள். கையிலிருந்த கனமான அந்தப் பையை கீழே வைக்கலாமே என்ற சிந்தனை கூட இல்லாமல் பிரக்ஞை தடுமாறிப் போயிருந்தாள். நான் வண்டியை விட்டிறங்கி வந்து கதவைத் திறந்துவிட்டேன்.

பேதை! முதல் முதலாக வீட்டுக்குள் நுழையும்போது வலது கால்வைத்து உள்ளே போகவேண்டும் என்று இன்னும் நம்பிகொண்டு என்னை வற்புறுத்தினாள். அவளுடைய இன்றைய ஆசைகளுக்கு நான் எதையும் மறுப்பு சொல்வதாக இல்லை. பாவம், இப்போதுதான் விலைமதிக்க முடியாத தனது குடும்பத்தை இழந்து என்னோடு வந்திருக்கிறாள். இதற்குப் பிறகு இன்னும் எத்தனையோ இழக்கவேண்டியுள்ளது. மாற்றங்கள் பல காணவேண்டியுள்ளது. இன்றைய தினம் பொன்னியின் வாழ்வில் மறக்கமுடியாத நாளாக விளங்கும் என்பதில் சந்தேகமே இல்லை. நான் சிரித்தபடி அவளுடைய கைகளைக் கோத்தபடி வீட்டினுள் நுழைந்தேன். என்னுடைய பையை மோட்டரிலேயே விட்டுவிட்டேன்.

ஏற்கனவே வீட்டில் ஆள் தங்குவதற்கு குறைந்தபட்ச ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. நாற்காலிகள், ஒரு மேசை, படுத்துறங்க கட்டில் இல்லையென்றாலும் மெத்தை இருக்கிறது. மற்றபடி மின்சாரம், தண்ணீர் எல்லாம் உண்டுதான்.

உள்ளே வந்ததும் நான் நாற்காலியில் பொத்தென சரிந்தேன். அசதி உடம்பைப் பின்னியெடுத்துக் கொண்டிருந்தது. பொன்னியைத் தேடினேன். எப்படித்தான் அந்த மெத்தை அவள் கண்களில் சிக்கிற்றோ தெரியவில்லை. அவள் சாஷ்டாங்கமானாள். கையிலிருந்த கடிகாரத்தைப் பார்த்தேன். மணி பன்னிரண்டைத் தாண்டி ஐந்து நிமிடம் என்றது. மத்தியான சாப்பாட்டு நேரம் என்று தெரிந்ததும் வயிற்றில் பசி குடிபுகுந்தது மறுபடியும்.

விறுவிறுவென வேலையை முடித்தால் நல்லது என்று தோன்றியது. எழுந்து வாசலுக்கு வந்தேன். இந்தக் கம்பத்துக்கு வந்து பல மாதங்கள் ஆகின்றன. இன்னும் அப்படியேதான் இருக்கிறது; சுற்றிமுற்றி இருந்த மலாய் குடும்பங்கள் எல்லாம் காலிசெய்து போய்விட்டிருக்க இந்தோனேசியர்களின் ஆக்கிரமிப்பு இங்கு அதிகரித்துள்ளது என்பதைத் தவிர.

போனை எடுத்து “டன்” என்று அனுப்பினேன். பத்து நிமிடம் கழித்து காரில் வந்து சேர்ந்தார்கள் சொக்கனும் காளியும் முனியாண்டியும். காளி வீட்டுச் சன்னல் வழியாக உள்ளே எட்டிப்பார்த்து “ஓக்கே” என்று சமிக்ஞை காட்டினான். சொக்கன் பாக்கெட்டிலிருந்து பணக்கட்டை எடுத்து என் முன் நீட்டினான். அதை வாங்கி எண்ணிப்பார்த்துக்கொண்டேன். ஏழாயிரம் இருந்தது. ஏற்கனவே முன்பணம் ஐயாயிரம் வாங்கியிருந்ததையும் சேர்த்தால் பன்னிரண்டாயிரம் வெள்ளி.

மோட்டாரில் ஏறினேன். மனசு கனத்தது. வண்டியை முடுக்கிவிட்டு அங்கிருந்து நகர்ந்தபடி மோட்டாரின் கண்ணாடியை ஏறிட்டுப் பார்த்தேன். மூவரும் வீட்டுக்குள் நுழைந்துகொண்டிருந்தனர்.

நன்றி: தமிழ் நேசன் ஞாயிறு பதிப்பு (29-12-2013)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *