கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 14, 2023
பார்வையிட்டோர்: 1,961 
 
 

(1955ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வக்கீல் வேணுகோபாலாச்சாரியார் அந்த ஊருக்கே ஒரு புதிர்! அவரைப் புரிந்து கொள்ளவே முடியாது பேச்சு அவ்வளவு குழப்பம் என்று பொருள் கொண்டு விடாதீர்கள் அவர் எப்படிப்பட்டவர் என்பதை, அவருடைய சொல், செயல், நினைப்பு, நிலைமை இவைகளைக் கொண்டு திட்டவட்டமாகத் தீர்மானித்து விடமுடியாது. திறமைசாலியா, கையாலாகாதவரா, வேணுகோபாலாச்சாரியார் எப்படிப்பட்டவர் என்று கூறிவிட முடியாது. பார் கிளப்பில், (வக்கீல்கள் சங்கத்தில்) “கெட்டிக் காரண்டா வேணு! யாருக்கும் உதிக்காத ‘பாயிண்ட்’ அவனுக்குச் சுலபத்திலே உதிக்கிறது” என்று அவரைப் பாராட்டுகிறார்கள். ‘போயும் போயும் எனக்குச் கிடைச்சவர், வேணுகோபாலாச் சாரியார்தான்! எவன் வருகிறான் இவரைத் தேடிக் கொண்டு? எந்தக் கேசிலாவது பிரமாதமாக ஜெயமடைந்து பிரக்யாதி யானாதானேத! கட்சிக்காரன், இந்த கவைக்குதவாத வக்கீலை. ஏன் தேடப் போகிறான்’ என்று சலித்துக் கொள்கிறான், சங்கர மூர்த்தி வக்கீல் குமாஸ்தா.

இரவு இரண்டு மணி வரையில் அவர், சட்டப் புத்தகங்களைப் படிக்கிறார். கலர் பென்சிலால் கோடிடுகிறார். குறிப்புகள் எடுக்கிறார். திறமைசாலிக்கு உரிய நடவடிக்கைதானே! ஆனால், அதோ பாருங்கள், ஒவ்வொரு வக்கீலும் கட்சிக்காரர், தேவதேவனைத் தொழும் பக்தர்கள் போலப் பின் தொடர, ஒரு கோர்ட்டிலிருந்து மற்றொரு கோர்ட்டுக்கு, வேக வேகமாகச் செல்கிறார்கள் வேணுகோபாலாச்சாரியார் சாவதானமாக, கிளப் ஐயருக்கு, கணேஸ் காபி பவுடருக்கும் லோடஸ் காபி பவுடருக்கும் உள்ள தார தம்மியத்தைப் பற்றி விளக்கமளித்துக் கொண்டிருக்கிறார்.

உண்மையிலேயே அவர் ஒரு புதிர்தான்!

வக்கீல் வேணுகோபாலாச்சாரியார், பணக்காரரா ஏழையா என்பதுகூட, ஒரு புரியாத விஷயமாகத்தான் இருந்து வந்தது.

“கிராமத்துக்குப் போயிருக்கிறார். திரும்பி வர நாலு நாள் ஆகும்” என்று சங்கரமூர்த்தி கூறுகிறான், அத்திபூத்தது போல் வந்திருக்கும் கட்சிக்காரரிடம்.

”கிராமத்துக்கா? ஏன்?” என்று கேட்கிறான் கட்சிக்காரன். சற்று கோபமாகவே பதில் சொல்கிறான் குமாஸ்தா. “ஏனா? அவருக்கு என்ன நீங்கள் தூக்கிக் கொண்டு வரும் கட்டுகள்தான் சோறு போடுவதாக உங்கள் நினைப்போ? அவருக்கென்று நிலம் நீர், எதுவும் இல்லையென்று எண்ணுகிறீரா? அவர் ஆரியனூர் கிராமத்தில் பெரிய மிராசுதாரரய்யா பெரிய புள்ளி” என்று கூறுகிறான். கட்சிக்காரன் இரண்டு ஏகரா நிலத்தைச் ‘சுத்தபோக்கியம்’ போட்டுவிட்டு, அதிலே ஏற்பட்ட வழக்குக்காக, அதிக ‘பீஸ்’ கேட்காத வக்கீலைத் தேடிக் கொண்டு வந்தவன். எனவே வக்கீல் வேணுகோபாலாச்சாரியார், கிராமத்திலே பெரிய புள்ளி – மிராசுதாரர் – என்று கூறப்பட்டதும், பயமும் மரியாதையும் ஏற்படுகிறது. மிராசுதாரராக. இருப்பதனால்தான் வக்கீல் வேலையைப் பற்றி அவர் அதிக அக்கறை எடுத்துக் கொள்வதில்லை போலும், இல்லையானால், அவருடைய திறமைக்கு, பலாப்பழத்தை ஈ மொய்த்துக் கொள்வது போலல்லவா, கட்சிக்காரர்கள் மொய்த்துக் கொள்வார்கள்!’ என்றுகூட எண்ணுகிறான்.

ஆரியனூர் கிராம முனிசீபு ஆறுமுகம் கூறுவதைக் கேட் கிறீர்களா!

”என்னய்யா, வேணுகோபாலாச்சாரி, கோர்ட் வேலையைக்கூடக் கவனிக்காமல், இங்கே வந்து கூடாரம் போட்டுக் கொண்டிருக்கிறாரே. என்ன விசேஷம்? என்று கேட் கிறார், வரம்பு மாற்றி வம்பு வல்லடி செய்த அந்த வட்டாரத் துக்கே பெரிய கிலியாக இருந்த கந்தப்பன்.

”அங்கே என்ன வாழுதாம்! சும்மா காலையிலே பத்து பதினோரு மணிக்கெல்லாம் சாப்பிட்டுவிட்டு கோர்ட்டுக்குப் போவதும், மாலையிலே வீடு திரும்புவதும்தானே மிச்சம். பெரிய அல்லாடியோ! வெறும் வாய்தான் வலிக்கும். என்ன கிடைத்து விடும் அதிலே – காப்பி செலவுக்குக்கூடக் கட்டி வராது – இங்கே வந்து, ஏண்டா டோய்! ஏலே! விளைச்சல் என்னமாடா இருக்கு? ஏண்டா களை பறிக்கலே! கடலைக்கா போட்டா நல்லா வருமானம். எல்லாம் கூவினாத்தான், ஐயாவுக்குக் கை நிறைய பணம், கோர்ட்டிலே என்ன இருக்கு அதெல்லாம் வக்கீல்களுக்குப் பீஸ் கிடைக்கும் – இது ஈர வைக்கல்தானே!” என்று கேலி பேசுகிறார், கிராம முனிசீபு.

“இதோ பாரடா, நான் போன மாதம் வந்தபோதே உனக்குச் சொல்ல வேண்டியதை எல்லாம், சொல்லியாச்சி; நானோ ஊரார் விவகாரங்களைக் கவனித்துக் கொண்டு வீடும் கோர்ட்டுமா அலைந்து கொண்டு இருக்கிறேன். நீ நாணயஸ்தன் சத்யத்துக்குக் கட்டுப்பட்டு நடப்பவன் என்கிற நம்பிக்கையிலேதான், நிலத்தைப் பூராவும் உன்னிடம் ஒப்படைத்து விட்டிருக்கிறேன். ஊராருக்கு வருகிற வம்பு வல்லடி வழக்கு இவைகளை நான் அங்கே கவனிக்க வேண்டி இருக்கு. என் சொந்த காரியத்தைக் கவனித்துக் கொள்ள நேரம் கிடையாது. அதனாலே தர்மத்துக்குப் பொதுவா நடந்து கொண்டு, ஏதோ நீயும் சௌக்யமாக இருக்க வேணும். நானும் கெட்டுப் போகக் கூடாது என்கிற எண்ணத்தோடு நிலத்தைக் கவனித்துக் கொள்ள வேணும். எனக்கு ஒண்ணும் இந்த நிலத்து வருமானம் குடும்பத்துக்குப் போதுமென்று எண்ணாதே. சொல்லப்போனா, அங்கே கட்சிக்காரர் கொடுக்கிற பணத்தைக்கூட இங்கே கொண்டு வந்து எருதாகவும், எருவாகவும், ஏராகவும் போட்டுக் கொண்டிருக்கிறேன்” என்று வேணுகோபாலாச்சாரியார் நில குத்தகைக்காரனிடம் கூறுவதைக் கேட்டால், நமக்குப் பரிதாபம் கூடத்தான் வரும். அவ்வளவு விசாரப்படுகிறார்.

நிலத்தின் அளவு பார்த்தாலோ .பிரமாதமாகத்தான் இருக்கும் – 60 ஏக்கர். கந்தாயம் குறைவுதான் அதற்கே கட்டி வருவதில்லை என்கிறார். பொய்யல்ல உண்மைதான். மொத்தமாக பதினாறு ஏகராதான் பயிர் மற்றது பணம் போட்டுப் பண்படுத்தினால் பயிர் செய்யும் பக்குவம் பெறும்.

பெரும்பாலான நிலம், மழை வந்தால், வெள்ளக்காடு. இல்லையானால் வறண்ட இடம். இரண்டு சமயமும் உழவுக்கு ஏற்றதல்ல – உனக்கு மட்டும் கச்சிதமாக இருக்கிறது 60 ஏக்கர்!

இப்படி அவருடைய ஒவ்வொரு விஷயமும் புதிராகவே இருக்கும்.

கோர்ட்டிலே இந்த வக்கீலுக்குத்தான் ஏராளமாக ‘வேலை’ இருக்கும் என்று எவரும் எண்ணுவர். இரவு நடுநிசிக்குப் பிறகும், அவர் சட்டப் புத்தகங்களை படித்துக் கொண்டிருக்கக் கண்டு வக்கீலின் மனைவியேகூடக் கொஞ்ச நாள் அப்படித்தான் எண்ணி வந்தார். சட்டப் புத்தகங்களைப் பார்க்கும்போது. மகிழ்ச்சி மட்டுமல்ல கொஞ்சம் பெருமையும் அடைவார். ஏனெனில் அவ்வளவும் அவளுடைய தகப்பனார், அவருக்குத் தந்தவை!

முதன் முறையாக, வேணுகோபால், எப்.எல். வக்கீல் சுந்தராச்சாரியாரைச் சந்திக்கச் சென்றபோது அடுக்கடுக்காக, பீரோவில் வைக்கப்பட்டிருந்த அந்த சட்டப் புத்தகங்களைக் கண்டேதான் அந்த இடத்திலே பெண் கொள்ள வேண்டியது என்று தீர்மானித்தார். பீரோவில், கண்ணாடிப் பலகை இரண்டோர் வரிசையில் இல்லை சுந்தராச்சாரியார் சமயலறையில் உத்தரவு பிறப்பித்துக் கொண்டிருந்த சமயம். ஆகவே பீரோவுக்குள் இருந்த புத்தகத்தை எடுக்கவும், பார்க்கவும் வேணுகோபாலுக்கு முடிந்தது.

”ஒரே பெண் மகனும் கிடையாது” இதை முதலில் தன் தாயார் கூறக் கேட்டபோது, இது ஒரு பிரமாதமா? என்று அலட் சியமாக எண்ணிய வேணுகோபால், பீரோவிலிருந்து சட்ட புத்தகங்களைக் கண்டதும் தன் அபிப்பிராயத்தைத் திருத்திக் கொண்டான். இவ்வளவு புத்தகங்களும் தனக்கே அல்லவா! என்று எண்ணிப் பூரித்தான்.

எண்ணமும் ஈடேறிற்று. எச்சம்மா அவ்வளவு புத்தகங் களோடு வந்து சேர்ந்தாள்; திரும்பி தாய்வீடு போகக்கூட இல்லை சுந்தராச்சாரியார் இறந்து விட்டார்.சீ மந்தத்தை’க்கூட காணாமல் – தாயாரம்மாவும் மகளோடு வந்து சேர்ந்து விட்டாள்.

தன் வீட்டுப் புத்தகங்கள் என்பதால் எச்சம்மாவுக்கு பெருமையாகவே இருந்தது. பிறகோ, “இவ்வளவு இருந்தும் என்ன பயன்? படித்தபடி இருக்கிறார் பலன் இல்லை!” என்று சலித்துக் கொண்டாள். சகஜந்தானே.

ஊரார் மட்டுமல்ல, கோர்ட்டார்கூட வக்கீல் வேணு கோபாலாச்சாரியார் பெரிய புத்திசாலி என்றுதான் புகழ்ந்தனர்.

“வேணுவைக் கேட்டால் தெரியுமே” – வேணுவிடம் சொன்னால் குறித்துக் கொடுக்கிறான்” என்று மற்ற வக்கீல்கள் பேசுவர்.

“இதே போல ஒரு கேசில், 1926ல்.. ” என்று ஆரம்பித்து அருமையான சட்டக் குறிப்புகளை, வாத நுணுக்கங்களைச் சொல்வார் வேணுகோபாலர். சொல்லி என்ன பலன்? கேஸ் நடத்திய வக்கீலுக்கு! இவருக்கு! மாலையிலே, வக்கீல் சங்கத்திலே முதுகிலே ஒரு தட்டு கிடைக்கும்! ஜெயித்த வக்கீல் இவர் முதுகில் ஒரு தட்டு தட்டிவிட்டுச் சொல்வார், “ரொம்ப தாங்ஸ்டா வேணு. நீ, சொன்னயே ஒரு பாயிண்ட் -அதை வைத்துக் கொண்டு ஒரு அடி அடித்தேன். சப்ஜட்ஜ் திணறி விட்டான். கேஸ் ஜெயம்” என்று புகழ்வார். இப்படி இருந்தது, அவர் வாழ்க்கை.


உழுபவனுக்கே நிலம்! நிலப் பிரபுத்வமுறை ஒழிக! என்று முழக்கங்கள், வேணுகோபாலாச்சாரியார் செவியில் விழ ஆரம்பித்தது.

உழுபவனுக்கே நிலம்! ஒட்டுபவனுக்கே வண்டி! செய்பவனுக்கே சட்டி பானை! – நெய்பவனுக்கே துணி மணி! கட்டுபவனுக்கே வீடு! – என்று வேணுகோபாலாச்சாரியார், கேலி பேசினார் வக்கீல் கிளப்புக்கு அன்று ருசிகரமான விருந்தாக அமைந்தது, அவருடைய கேலிப் பேச்சு.

உழுகிறான் அதற்கான பணம் தருகிறோம் இதோ இங்கே, சட்ட விளக்கம் தருகிறோம், பீஸ் தருகிறார்கள் – இந்த வழக்கு என்னால்தானே ஜெயித்தது, ஆறு இலட்ச ரூபாய் மதிப்புள்ள பங்களாவும் தோட்டமும் உமக்குக் கிடைததே, அது எனக்கல்லவா தரப்பட வேண்டும். என்று நாம் இங்கே பேசினால், ‘பித்துக்குளி’ என்பார்கள். நிலம் உழுபவனுக்கு என்று பேசுகிறார்கள் பேசுபவர்களுக்குப் பெயர் சீர்த்திருத்தக்காரனாம்! என்று இடித்துரைக்கலானார்.

உழுபவனுக்கு நிலம் என்ற முழக்கம். ஒட்டு வேட் டைக்காரரின் வெத்து வேட்டு, என்று திட்டவட்டமாகக் கூறிவந்த, வேணுகோபாலாச்சாரியாருக்கே, ஒருமுறை கிராமம் சென்ற போது, திகில் கிளம்பும் நிலை பிறந்தது.

“ஏண்டாப்பா, நீங்க ஒண்ணும் ஒழிக கோஷம் போடுவதில்லையே” என்று வேடிக்கையாகக் கேட்டார் வேணுகோபாலார் – கிராம உழவர்கள் சிலரைக் கண்டு.

“நாங்கமட்டுமென்னங்க – நாடே இப்ப, ஏதேது ஒழிய வேணுமோ அதை எல்லாம் ஒழிக்க வேணும்னு தானுங்களெ பேசுது” என்றனர் உழவர்.

”ஓஹோ! நாடு பேசறதுன்னு சொல்ற அளவுக்கு வந்தாச்சா!” என்று எண்ணித் திகில் அடைந்தார்.

“இப்ப பாருங்க சாமி.” என்று பேசத் தொடங்கினார் ஒரு வயதான விவசாயி…உடனே வேணுகோபாலாச்சாரி, “டே. அப்பா! சாமின்னு சொல்லாதேடா. . சாமின்னு சொல்லப்படாது… அது ஒங்க சொயமரியாதைக்குக் குறைவு..” என்றார்.

அவருடைய குரலில் கேலி தொனித்தது.

“அட, இவரும் விஷயத்தைப் புரிஞ்சு கொண்டுதான் இருக்காரு”, என்று கூறிக் கிழவன் சிரித்துவிட்டு, “சாமியோய்.. அது பழக்கமாயிட்டுது. .. தப்புத்தான். ” என்று பேச ஆரம்பித்தான். “பொன்னம்பலம்னு ஒருத்தன் இங்கே வந்து கூட்டம் போட்டானா” என்று கோபமாகக் கேட்டார் வக்கீல்.

”ஆமாங்க. ” என்று சுருக்கமாகப் பதில் சொல்லி விட்டு, கிழவன், தன் பக்கத்திலிருந்தவனைக் காட்டி, “இவன்தான் கூட்டிகிட்டு வந்தான்-கல்யாணத்துக்கு…” என்றான்.

வக்கீலுக்கு விஷயம் விளங்கி விட்டது.

சுயமரியாதைத் திருமணம் நடந்திருக்கிறது. சூறாவளி புகுந்திருக்கிறது!! என்று புரிந்து கொண்டார் இனி ‘வாதம்’ பயன்படாது, என்று விளங்கிவிட்டது.

”உழுபவனுக்குத்தாண்டா நிலம் வந்து சேரும். இப்பவும் அவனிடம்தானே இருக்கு… என்னோட நிலம்னு நான், சும்மா ‘பட்டா’வைப் பார்த்துப் பார்த்து பெருமை பேசலாமே தவிர, சதா சர்வ காலமும் அதை அனுபவிச்சுண்டு இருப்பவர் யார்? நானா? நீங்கள்தானே உங்களோட நிலம்னுதானே அர்த்தம்” என்றார்.

”ஆமாங்க. எங்களோட நிலம்தான். . . உழுது பயிர் செய்து, களை பறித்து, கதிர் முத்தற வரைக்கும்” என்றான் அரும்பு மீசைக்காரன்.

எல்லோரும் சிரித்தனர் பெரிய கிழவனுடைய கண்களிலே குறும்பு கூத்தாடிற்று.

வக்கீல் சங்கத்தில், இந்தக் காட்சியை விரிவாக விவரித்து. வேணு பேசப் பேச, கொலைக் கேசுகளில் கிடைத்த பீசால், புதுக் கொல்லைகள் வாங்கிய வக்கீல்கள் வயிற்றிலெல்லாம், புளி கரைத்தது போலிருந்தது.

வேணுகோபாலாச்சாரியார், நிபுணர் அல்லவா, அவர் சொன்னார். ”சட்டம் தெரியாமல் இதுகள் கூவின்டிருக்கு – இண்டியன் கான்ஸ்டிடூஷன் (இந்திய அரசியல் சட்டம்) சொத்துக்குப் பாதுகாப்பு தந்திருக்கு. பயப்பட வேண்டிய அவசியமே இல்லை என்று ஆரம்பித்து, பல கற்பனை வழக்குகளை நடத்திக் காட்டி, ஒவ்வொன்றிலும் ஜெயித்தார்.


”வேணு! காலையிலே ‘இந்து’ பார்த்திருப்பாயே என்ன விசேஷம். சொல்லு – நேக்கு நேரம் இல்லை – நெட்டியூர் மிட்டாதார் வந்து உயிரை வாங்கிண்டிருந்தார் காலையிலே” என்று. வேணுகோபாலாச்சாரியாருக்கு வேலை தந்தார், கிரிமினல் லாயர் கீர்த்தனாச்சாரியார்.

“இந்து பார்க்கிலையா. .. பார்த்தாகணும். அவசியமா பார்க்க வேணுமே.. அருமையான விஷயம் வந்திருக்கு என்று முகவுரை தீட்டலானார் வேணுகோபாலர் எடிட்டோரியலா?” என்று கேட்டார் ஒரு (M.A. B.L.,) எம்.ஏ., பி.எல்., “அல்லடா அசடா! ஒரு படம் வந்திருக்கு பாரு நாட்டிலே உள்ள நிலப் பிரச்சினைக்கு பரிகாரம் என்ன, பரிகாரம் என்னான்னு நாமெல்லாம் மூளையைப் போட்டுக் குழப்பிண்டிருந்தமே, படம் இருக்கு ‘இந்து’விலே. பாரு பளிச்சுன்னு பரிகாரம் புரியும்” என்றார் வேணு பிறகு பல அத்யாயங்களைத் தாண்டி விஷயத்துக்கு வந்தார். “நம்ம ராஜாஜி, ஏர் உழுவது போல போட்டோ வந்திருக்கு” -என்றார்.

“அதனாலே” என்றார் ஒரு அனுபவமற்றவர்.

”அது, உற்பத்தி பெருகும் திட்டத்துக்காகல்லவா” என்றார் ஒரு ஜூனியர்.

”அல்ல! அல்ல! பைத்யக்காரனா இருக்கேளே உழுபவனுக்கு நிலம்னுதானே சொல்றா அதைக் கேட்டு கிலி கொள்றேளே – ஏன் பயம் – உழுபவனுக்கு நிலம்னு சொன்னா. நீங்களும் உழுது காட்டுங்கோ – என்ன பிரமாதமிருக்கு இதிலே… என்று நமக்கெல்லாம் புத்தி கூறி பரிகாரம் காட்டுவதற்குத்தான். நம்ம ராஜாஜி ஏர் உழற மாதிரியா படம் எடுத்துப் போட்டிருக்கு” என்று விளக்கமளித்தார் வேணு.

மற்றவர்கள், அவர் கூறியதை ஹாஸ்யம் என்று தள்ளி விட் டனர். அவர் அதைத் ‘தாரக’மாக்கிக் கொண்டார், விவசாயி ஆகிவிட்டார்!! அப்படியென்றால் கிராமம் சென்று தங்கிவிட்டார் என்று எண்ணி விடாதீர்கள். அடிக்கடி போவார் – ஏர் உழுவார் படம் எடுக்கப்படும். பிறகு கிராம வீட்டில் தங்குவார்

உழுபவனுக்கு நிலம் என்பதிலே என்ன தவறு நான் உழவன், எனக்கு நிலம் இருக்கிறது என்று பேசலானார்.

பொதுக் கூட்டங்களிலே பேசலானார்!

உழைப்பின் பெருமை! உழவுத் தொழிலின் மேம்பாடு! இவை பற்றிய ஏடுகளைப் படித்தார், மக்கள் முன் கொட்டினார்.

சர்க்கார், விவசாய அபிவிருத்திக்காக, உலகில் பல நாடுகளிலே உள்ள உழவு முறைகளைக் கண்டறிந்து வர ஒரு கமிட்டி நியமித்து வேணுகோபாலாச்சாரியார், பி.ஏ.பி.எல். அதிலே ஒரு மெம்பர்!

இரண்டாண்டு உலகச் சுற்றுப் பயணம்.

செலவு சர்க்காருடையது; மாதம் ஆயிரம் ரூபாய்க்குக் குறையாமல் படியும் உண்டு.

உழவுத் தொழில் அனுபவம் உள்ளவரும், உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற புரட்சிகரமான திட்டத்தை ஆதிரிப்பவரும் பிரபல வக்கீலுமான வேணுகோபாலாச்சாரியார் நம் நாட்டு உழவுத் தொழில் அபிவிருத்திக்கான முறைகளைத் தெரிந்து கொண்டு வர உலகப் பயணம் செல்ல இருப்பதால், அவருக்கு ஒரு பாராட்டுக் கூட்டம் நடத்த வேண்டும் என்று பார் கிளப் தீர்மானித்தது. நகர மண்டபத்தில், திரளான கூட்டம் – வக்கீல்கள் ஏராளமாக வந்தனர்.

மண்டப வெளியில் மட்டும் நூறு மோட்டார்கள்! ஜட்ஜ் சபேசய்யர் தலைமை வகித்தார்.

விழா நிகழ்ச்சியிலே முக்கியமான பகுதி, குமாரி குலேபகாவலியின் ‘அறுவடை நாட்டியம்.’

குமாரி குலேபகாவலி, வேறு யாருமல்ல வக்கீல் வேணுகோபாலாச்சாரியாரின் திருமகள், ஆண்டாள்!!

ஐயா, உழவுத் தொழிலோட பெருமையை அறிந்து வர உலகமே சுத்தப் போறாரமில்லே – என்று பேசிக் கொண்ட ஆரியனூர் உழவர்கள், களை பறித்துக் கொண்டிருந்தனர்.

“அறுவடை! அறுவடை! அறுவடை!
ஆனந்த அறுவடை!
அற்புதமாம் அறுவடை!
நம்மை ஆளும் பண்டிதர்
நாளும் கண்டு
மனமகிழும்
அறுவடை!”

என்ற பாடலுக்கு அருமையான நடனம் நடந்தது.

பக்க வாத்ய கோஷ்டியைச் சேர்ந்த பாண்டு, அவசர, அவசரமாக ரிக்ஷா’விலிருந்து இறங்கி உள்ளே சென்றான். ரிக்ஷா இழுத்து வந்தவன், உள்ளே நடக்கும் வைபவம் உழவுத் தொழிலின் மேன்மைக்கான விழா என்று கண்டானா!! உழவுத் தொழிலின் பெருமையை உணர்ந்து புதுமுறைகளைக் கண்டறிந்து கூற வேணுகோபாலாச்சாரியார் உலகம் சுற்றக் கிளம்புகிறார் என்பது அவனுக்கு என்ன தெரியும்! மிரள மிரள விழித்தான் – அவ்வளவு அழகழகான மோட்டார்கள் – அலங்காரவல்லிகள் சீமான்கள் – சிட்டுகள்! மண்டப வாயிலில், ‘ஏர் எருது’ தீட்டப்பட்ட சித்தம் தொங்குகிறது.

குடிசைக்குப் பக்கத்தில், குப்பைமேட்டு அருகில், ஏரும், எருதும், அவன் கண்டிருக்கிறான் – இங்கே இவ்வளவு மோட்டார்கள் – ஏர் எருது!

ஆச்சரியமாக இருந்தது. அவனுக்கு அங்கு ஒரு அண்ணன் கிடைத்தான் – பட்டாணிக் கடலையை, டிரைவர்களிடம் விற்றுக் கொண்டிருந்தவன்.

”அண்ணேன்! என்ன இது அமக்களம்.”

”டேய்! உரக்க அண்ணன் கிண்ணன்னு கூவாதேடா கடலைப் பட்டாணி வாங்கமாட்டானுங்க…”

“எண்ணதண்ணேன்…”

“இதா? நம்ம ஐயரு தெரியுமல்லோ”

”யாரு! வேணுகோபாலாச்சாரியா.”

”அவரேதான். . அவரு சீமைக்குப் போறார் டோய்..”

“சீமைக்கா. ஏனாம்?”

“உழவுத் தொழிலை படிச்சிக்கிட்டு வர்ராராம்”

“என்னண்ணே, வேடிக்கை பேசறே, நாம்ம தலைமுறை தலைமுறையா உழவுத் தொழிலிலே இருந்து விட்டு, வயிறு ஒட்டிப் போயி, இங்கே பிழைப்புக்காக ஒடியாந்திருக்கறோம்…”

“ஆமாம் நீ வண்டி இழுக்குறே நான் இதோ வியாபாரம். நமக்கு, உழவுத் தொழிலு, சோறு போடல்லே, ஊரைவிட்டு ஊர் ஒடி வந்து, நாய் படற பாடுபட்டு, சோறு தேட வைக்குது. பாரேன், ஐயருக்கு உழவுத் தொழிலு, உலகப் பிரயாணமில்ல தருது! கொள்ளை கொள்ளையாப் பணமாம் டோய், அவருக்கு.’

“ஏது?”

“கெவர்மெண்டு குடுக்குது”

”எதுக்கு?”

“உழவுத் தொழிலு வளர”

“என்ன அண்ணேன், அக்ரமம், இங்கே, உழவுத் தொழில் செய்யற நாம்ப, கூலிக்காரனாகி, குமுறிச் சாகறோம் – பட்டணத்திலே குந்திக்கிட்டு, சால் ஒட்டறதுன்னா என்னா, பரம்பு அடிக்கறதுன்னா என்னான்னு தெரியாதவங்க பலாச்சுளை மாதிரிப் பணத்தை விழுங்கிகிட்டு, உழவுத் தொழிலைப் பத்திப் பேசறதாம். அதுக்குச் சர்க்கார்லே சன்மானம் கொடுக்கறதாம். நல்லா இருக்குண்ணே, நியாயம்.”

உள்ளே ஒரே கரகோஷம்!

டிரைவர்கள் பரபரப்பாயினர். ரிக்ஷாக்காரன், ஒரு புறம் ஒதுங்கி நின்று கொண்டான்.

மோட்டார்கள் கிளம்பின!

– 14-1-1955

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *