நான் என்ன செய்யட்டும் சொல்லுங்க…!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 10, 2023
பார்வையிட்டோர்: 1,335 
 

நான் அந்த நகரத்திலுள்ள முக்கியமான தொழிலாளர் சங்கத்தின் தலைவன்.

இரண்டாண்டுகளுக்கு முன்தான் என்னிடம் சங்கத் தலைவர் பதவி வந்து சேர்ந்தது.

பதவியேற்றது முதல், எங்கள் நகரத்தில் வழக்கமாகப் பொதுக்கூட்டங்களும், கட்சிக் கூட்டங்களும் நடைபெறும் பழைய பேருந்து நிலையமும் வடக்கு வீதியும் இணையும் வளாகத்தில், தேரோடும் வீதியை அடைத்துப் மேடை, தட்டுப்பந்தல் எனப் போட்டு மே 1ம்தேதியன்று தொழிலாளர் தினச் சிறப்புக் கூட்டம் நடத்துகிறேன்.

இந்த ஆண்டும் அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்ய முக்கியமான உறுப்பினர்களுகளுக்கு அனுப்பக் கணினியில் தபால் ‘டைப்’ செய்தேன்.

என்னுடைய லெட்டர் ‘ஹெட்’டில் ‘பிரிண்ட்-அவுட்’ எடுத்தேன்.

என் மகன் ராமனாதன் ஏழாம் வகுப்புத் தேர்வு எழுதியிருக்கிறான். வரும் ஜூன் மாதம் எட்டாம் வகுப்புக்குச் சென்றுவிடுவான்.

வீட்டில் ஏதாவது லூட்டியடிப்பவனுக்கு பொறுப்பான வேலை ஏதாவது தரலாம் என எண்ணினேன்.

“ஏய் ராமநாதா…”

“ஏம்ப்பா?”

இந்தத் தபால்களை ஒவ்வொண்ணா மடிச்சி இந்தக் கவர்ல போடு, அப்பாவோட விலாசம் உள்ள ரப்பர் ஸ்டாம்ப்பை கவரோட இடது கீழ் ஓரத்துல சீல் வை;

வலது கார்னர்ல ஸ்டாம்ப் ஒட்டு;

நான் விலாசம் பிரிண்ட் அவுட் எடுக்கறேன். அதைக் கட்பண்ணித்தரேன். ஒட்டி போஸ்ட் பண்ணிடலாம்.”

நான் சொன்ன அத்தனையையும் காதில் வாங்கினான் மகன் ராமனாதன்.

ஒரு பிரிண்ட் அவுட் பேப்பரை எடுத்துப் படித்தான்.

“போன வருஷம் கூட நடந்துச்சே அதுபோல விழாவாப்பா?”

‘தந்தை மகற்காற்றும் நன்றி இவன் தந்தை…!’ என்ற குறள் மனதில் ஓடியது.

சென்ற வருடம் நடந்த மேதின நிகழ்வை நினைவு வைத்து, “அதுபோலத்தானே…?” என்று கேட்கும் மகனின் அறிவை நினைத்துப் புளகாங்கிதமடைந்தேன்.

“அதேப் போல விழாதான் ராமனாதா இதுவும். அப்பாவுக்கு நிறைய ஒத்தாசை செய். தொழிலாளர்கள்தான் நாட்டின் முதுகெலும்பு…” என்றெல்லாம் உணர்ச்சிவசப்பட்டு அவனிடம் நிறையப் பேசினேன்.

நான் சொல்வதையெல்லாம் கவனமாகக் கேட்டபடியே இருந்தான் ராமனாதன்.

“மடிச்சி கவர்ல போட்டபடியே கேளு ராமாநாதா?” என்று என் காரியார்த்த புத்தியை அவனிடம் காட்டினேன்.

அவன் அதற்கெல்லாம் மசியவில்லை.

“அப்பா எனக்கு சில சந்தேகங்கள் இருக்கு? கேக்கலாமா?”

“கேளு…! கேளு…!” ஆர்வமாகக் காதை தீட்டிக்கொண்டேன்.

பெரீ…….ய பந்தல் எல்லாம் போட்டு, ரோடு அடைச்சி நாற்காலியெல்லாம் போட்டு பழைய பஸ்டாண்ட் முக்கூட்ல நடக்கற ‘மேதின விழா’தானேப்பா இது…”
விழாவை உறுதி செய்துகொண்டான் ராமநாதன்.

பந்தல் கால் நட்டுக் குறுக்குக் கழி கட்டிக் கீற்று வேயர பந்தல் சரவணன் கோஷ்டில பத்துபேரு இருப்பாங்கதானேப்பா.

“ம்…!”

தட்டுப் பந்தலோட அடிப்பாகத்துல சலவை வெள்ளைத் துணி கட்டி, காகிதப்பூ அலங்காரம் செஞ்சி, மேடைக்குப் பின் அடைப்புல ஃப்ளக்ஸ் கட்டி மேடைப்பலகையை மறைச்சி ஜமக்காளம் விரிச்சி, நாற்காலி மேசைகளெல்லாம் போட்டு, முறைப்படி அலங்கரிக்கற டெக்கரேட்டர் குழுவுல ஆறேழுபேர் இருப்பாங்கதானே?

“இருப்பாங்க..”

“குட்டியானை-வேன்ல பெஞ்சு நாற்காலிகளை முத்தண்ணன்தானே ஏத்திவருவாரு..?

“…..”

“வாடகை நாற்காலிங்களை இறக்கி விழாப் பந்தல் முன்னால வரிசையாய்ப் பரத்தர நாலைஞ்சிபேரும் முத்தண்ணன் கம்பெனிலதானே வேலை பார்க்கறாங்க?”

“டேய் இதெல்லாம் என்னடா கேள்வி. கவர்ல மடிச்சி போட முடிஞ்சாப் போடு இல்லேன்னா, நீ வெளீல போய்விளையாடு. நான் பாத்துக்கறேன்..”

கோபத்தில் சற்றே பலமாகவேக் கத்திவிட்டேன்.

அப்பா…! கோபப்படாதீங்கப்பா. இன்னும் சில கேள்விங்க மனசுல இருக்கு. கேட்டுடறேனே..”

“கேட்டுத் தொலை?”

“சீரியல் லைட்டு, வளாகம் அடைச்சிப் பிரகாசிக்கும் ஃபோக்கஸ் லைட்டு, வரிசையா ரெண்டு பக்கமும் நிற்கும் டியூப் லைட்டுங்க, பெட்டி ஸ்பீக்கர், புனல் ஸ்பீக்கர், இதையெல்லாம் வழக்கமா சரவணா சவுண்டு சர்வீஸ்காரங்கதானேக் கட்டுவாங்க.; ஜெனரேட்டர் முத்து லிங்கம் அங்க்கிள் தானேப்பா அதுக்கு ஓனர்.

“…..”

“போட்டோ பிடிக்கறதும், வீடீயோ எடுக்கறதுமா, விழாவைப் பதிவு செய்யற கனகராஜ் ஸ்டுடியோக்காரங்க;

மேடைல பேசப்போறச் சிறப்புப் பேச்சாளருக்குப் அணிவிக்க ஆளுயர மாலை தயார் செய்யும் கலியபெருமாள், மலர்வணிகக் கூலிங்க;

விழா ஏற்பாடுங்களை கவனிக்கறவங்களுக்கு, விழாக் கமிட்டி ஏற்பாடு செய்யற வடை, உப்பு பிஸ்கெட், டீ இதெல்லாம் தயார் செய்யும் தாண்டவன் தேநீர் நிறுவனம்;

அதை விநியோகிக்கும் தேநீர் நிறுவன ஊழியர்கள்.

சிறப்புப் பேச்சாளருக்கும் அவர் கூடவே வர்ற விருந்தினர்களுக்கும், சிறப்பு விருந்து ஏற்பாடு செய்யற ராமப்பிரியா கேட்டரிங்.

விழாவை கவர் செய்து, விழாத்தலைவர் கிட்டே பேட்டி வாங்கி, உலகம்பூராவும் ‘ஃபோக்கஸ்’ செய்யற மீடியாக்காரங்க.

“அப்பா நான் மேலோட்டமாத்தான் கேட்டிருக்கேன்..! நுணுக்கமாகப் பார்த்தா இன்னும் எத்தனை எத்தனையோ தொழிலாளர்கள் இதுல இருப்பாங்க;

என் கேள்வி இதுதான்;

இவங்க எல்லாரும் தொழிலாளர்கள்தானே…?;

இவங்க மட்டும் ஏன் மேதின விடுமுறை நாள்ல கூட உழைச்சிக்கிட்டே இருக்காங்க…?”

அரசுப் பள்ளியில் ஏழாவது படிக்கும் மகனின் அறிவுபூர்வமான கேள்விகள் கண்டு அரண்டுவிட்டேன் நான்.

அரசுப்பள்ளியின்மேல், அதில் பணியாற்றும் ஆசிரியர்கள்மேல் எனக்கு மரியாதை கூடியது.

என் மகனின் கேள்விகளில் இருந்த உண்மை சுட்டது.

நான் ஒரு முடிவுக்கு வந்தேன்.

“என்னப்பா எதுவும் பேச மாட்டேங்கறீங்க. என் சந்தேகத்தைத் தெளிவு படுத்துங்கப்பா…!”

கேட்டான் மகன் வெள்ளந்தியாக.

“நீ சொல்றது சரிதான் ராமனாதா. அவங்களும் தொழிலாளர்கள்தான். அவங்களும் விடுமுறையில்தான் இருக்கணும். நீ இவ்ளோ கேட்டப்பறம் நானும் ஒரு முடிவுக்கு வந்துட்டேன்…”

“என்னப்பா முடிவு?” ஆர்வமாய்க் கேட்டான் மகன்.

“மே மாசம் 2ம் தேதி விழாவைக் கொண்டாடலாம்’னு முடிவு பண்ணிட்டேன்.”

“அப்பா…! மே மாசம் 1ம் தேதிதானே தொழிலாளர் தினம்…?”

அடுத்த கேள்வி.

என்ன செய்வதெனத் தெரியாமல் முழிக்கிறேன். நான் என்ன முடிவெடுப்பது என்று உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்களேன்.

– மே- 1, 2023 தொழிலாளர் தின சிறப்புச் சிறுகதை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *