கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 22, 2022
பார்வையிட்டோர்: 2,968 
 
 

(1998 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அதிகாலை நேரம் மீனாசாதியாத் பிரதேசத்தை பனி மூடியிருந்தது. அபுதாபி நகரின் ஆரவாரங்களிலிருந்து சற்று ஒதுங்கி கடற்கரையோரமாக இருக்கும் மீனாசாதியாத் கடற்கரையில் தான் நான் பணிபுரியும் பிரிட்டிஸ் கிளப் இருக்கிறது. பல ஏக்கர் நிலத்தை வளைத்துப் போட்டுக் கொண்டு ஒரு பக்கம் கடலாலும், மற்றைய பக்கங்கள் நீண்டு உயர்ந்த மதில்களாலும், ஏராளமான கட்டடங்களையும், நீச்சல் குளங்களையும் அழகிய பூந்தோட்டங்களையும் தன்னுள்ளே கொண்டு அந்த நாட்டில் ஆங்கிலேயர்களுக்கு இருக்கும் செல்வாக்கையும், வசதியையும் வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறது.

உள்ளே நுழையும் நுழைவாயிலிலேயே பெரிய கேட். அவ்விடத்தில் பெரிய செக்கியுரிடி அறை. அந்த அறைக்கு இரண்டு பக்கமாகவும் உள்ளே வரவும் வெளியே போகவும் சிமெண்டுப் பாதைகள், உள்ளே நுழைந்தவுடன் கொஞ்ச தூரத்திற்கு பாதையின் இருமருங்கும் பச்சை நிறப் புல்வெளிகள்.

புற்றரையின் இடையிடையே அளவோடு இடைவெளி விட்டு நடப்பட்டிருந்த உயர்ந்த ஒலியெண்டர் மரங்கள் அவைகளின் சிகரங்களில் இளஞ்சிகப்பு நிறத்தில் பூக்கள், மதில்களின் ஓரமாக அடர்த்தியான வர்ணக் கலவையுடன் போகன்வில்லாச் செடிகளின் அடர்த்தி. மதில்களை சுத்தமாக மறைத்துக் கொண்டு நிற்கிறது. எதிர்ப்புற மதிலோரம் வரிசையாக யூகலிப்டஸ் மரங்கள்.

இந்த அற்புதங்களைத் தாண்டினால் வரிசை வரிசையாக நான்கு டென்னிஸ் விளையாடும் இடங்கள் பெரிய நீலநிற இரும்புக் கம்பி வலைகளுக்குள் சிறைப்பட்டுக்கிடக்கிறது. சற்று முன்புறம் எதிர்ப்பக்கமாக ஸ்விம்மிங்பூல் பார். மறுபக்கம் மணல் வெளி. அப்பால் அலையடித்துச் சிலுங்கும் நீலக்கடல், கடற்கரை முழுவதும் மணல் வெளி இல்லாத இடங்களில் ஓயஸிஸ் மாதிரி விஸ்தீரணமான இடத்தில் கட்டடங்களையும், பாதைகளையும் தவிர்த்து மற்றைய இடங்களில் கண்ணைப் பறிக்கும் வண்ண வண்ணப் பூச்செடிகள் மெர்ரிகோல்ட், பெர்ரி வின்கலர் சீனியாஸ் இப்படி இத்யாதி இனங்கள்.

யூரியா உரத்தின் அனுக்கிரகத்தினால் புல்வெளிகள் கரும்பச்சை நிறத்தில் காணப்படுகிறது. அந்தப் புல்வெளிகளுக்குள் ஆங்காங்கே ஸ்பிரிங்லர்கள் ஒளிந்து கொண்டிருக்கின்றன. குழாய் வால்வை திறந்தால் போதும் எல்லா ஸ்பிரிங்லர்களுக்கும் உயிர் வந்துவிடும் ஸ்சென்று நீர்க்கோடுகள் வெள்ளிக்கம்பிகளாய் மேலெழும்பி ஒரே சீராக ஒரு வட்டத்தில் இறங்கும். அதிகாலை நேரத்தில் நூற்றுக்கணக்கான சிறிய குருவிகள் இதற்காகவே மரங்களில் காத்திருக்கும். உயர எழும்பும் நீர்க்கோடுகளுக்கூடாக அவைகள் குதூகலமாக நனைந்து நனைந்து பறக்கும்போது தான் இந்த மனிதப்பிறவி எவ்வளவு அற்பத்தனமானது என்று நமக்குப் புரியும்.

நர்சரியில் இருந்து சிறு செடிகளை கொண்டு வந்து நடும்போது இந்தக் குருவிகளின் தொல்லை சொல்லி மாளாது. இளந்தளிர்களை கொத்தி முழுங்குவதில் அவைகளுக்கு பரம சந்தோஷம். ஒரு நிமிடத்தில் எல்லாச் செடிகளையும் மொட்டையடித்துவிடும். இதில் அவைகளுக்கு பாட்டு வேறு. சும்மா சொல்லக்கூடாது. அற்புதமான சங்கீத ஸ்வர ஞானம். மீண்டும் மீண்டும் ஒரே ஸ்ருதியில் ஆரம்பம். பிரமாதமான டைமிங். அவைகளின் சங்கீத ஆசானை யாரென்று தேடுவது?

அதுசரி, இவ்வளவு விபரமாக இவ்வளவு அக்கரையாக மாஞ்செடி கொடிகள் பற்றி சொல்லிக்கொண்டிருக்கின்றானே என்று யோசிக்க வேண்டாம். அடியேன் தான் இந்த பிரிட்டிஷ் கிளப்பின் கார்டனர். இந்த வேலைக்கு வர எத்தனை இண்டர்வியூக்கள், எத்தனை கேள்விகளுக்கு பதில்கள்! சரி அதெல்லாம் இப்போது வேண்டாம். |

அபுதாபிக்கு, இந்த பிரிட்டிஷ் கிளப்புக்கு வேலைக்கு வந்து இரண்டு வருடங்களாகி விட்டன. இங்கு வந்த பின்தான் இந்தக் குருவிகளோடு, அரணைகளோடு எனக்கு ஸ்நேகம் ஏற்பட்டது. குருவிகளோடு சரி அரணைகளோடுமா? ஆமாம்! எனக்கு தெரிந்தமட்டில் அரணைகளோடு சிநேகம் வைத்திருப்பவன் நான் ஒருவனாக மட்டும்தான் இருக்க முடியும். அப்படித்தான் நம்புகிறேன்.

-நான் இங்கு வருவதற்கு முன்னர் ஓர் ஈரான்காரன்தான் இங்கு பணி புரிந்தானாம். திடீரென்று அவன் போய்விட சுமார் ஒரு மாத காலம் வரை கிளப் லாண்டரியில் பணி புரியும் கன்னிலால் என்ற டில்லிக் கிழவன் தான் தோட்டத்தைப் பராமரித்தானாம். அவனும் அவனுக்கு அளிக்கப்பட்ட இரண்டு மணிநேரத்தில்தான் எல்லா வேலையையும் செய்ய வேண்டியிருந்தது. அவனைச் சொல்லிக் குற்றமில்லை. அவன் தன் லாண்டரி வேலையைக் கவனிப்பானா, அல்லது தோட்டத்தைப் பார்ப்பானா?

நான் வந்து சேர்ந்ததும் எனக்கு தோட்டத்தில் நிறைய வேலைகள் இருந்தன. போகன்வில்லாச் செடிகளின் அடிகள் உதிர்ந்த பூக்களும், காய்ந்த இலைச் சருகுகளும் இரண்டு வண்டிகளுக்கு இறைந்து கிடந்தன. ட்ரிம் செய்யப்படாத செடிகள் லோன் மூவர் தழுவாத புல்வெளிகள் இப்படி இத்யாதி பிரச்னைகள்.

மெயின் கேட்டை ஒட்டி இருக்கும் நீண்ட மதிலோர செடிகளின் அடிப்பாகங்களைச் சுத்தம் செய்து கொண்டிருக்கும்போதுதான் முதன் முதலில் சருகுகளின் இடையில் அந்த பளபளப்பைக் கண்டேன். நெளிந்து செல்லும் பாம்பின் உடல் மீது காணப்படும் பளபளப்பு. முதலில் இலைச்சருகுகளுக்கடியில் சரசரவென்று நகர்வது ஒரு பாம்பு என்றுதான் நினைத்தேன். பிறகுதான் அறிந்துகொண்டேன் அது பாம்பல்ல, மிக நீளமான அரணை என்று. எங்கள் நாட்டில் இருக்கும்

அரணைகளைவிட அபுதாபி அரணைகள் நீண்டும் பெரிதுமாய் இருந்தன.

சிறுவயதில் அப்பா சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. அரணை கடித்தால் மரணம் ” என்று. ஆனால் இதுவரை அரணை கடித்து யாரும் மரணமடைந்தார்கள் என்று நான் அறிந்தது கிடையாது. ஆனால் ஒரு தடவை ஏதோவொரு பத்திரிகையில் சிறைச்சாலை ஒன்றில் அரணையை சமைத்து சாப்பிட்ட சில கைதிகள் மரணமானார்கள் என்று படித்திருக்கிறேன்.

அரணைகள் மிகவும் முட்டாள்தனமானவை என்பது என் அனுபவத்தில் நான் கண்ட உண்மை.

நீர்க்குழாயைத் திறந்தவுடன் தரைக்குள் இருந்து பீறிட்டு எழும் நீர்க் கோடுகளில் இவைகள் நனைந்து பளபளவென மின்னும். ரேக்கையால் சருகுகளை வாரி இழுக்கும்போது இவைகள் விலகி ஓடாமல் மிகவும் முட்டாள்தனமாக எதிராகவே ஓடிவரும். சில சமயம் புற்களை வெட்ட யந்திரத்தை உபயோகிக்கும்போது இவைகள் படும்பாடு வேடிக்கையாக இருக்கும். முதல் நாள் நான் புல்வெட்டும் யந்திரத்தை இயக்க அதன் சப்தம் இவைகளை மிகவும் பயமுறுத்தியது. சுவர் ஓரமாக யந்திரத்தை தள்ளிக்கொண்டு போனேன். இரண்டு அரணைகள் சுவர் ஓரமாக விறுவிறுவென ஓடிக்கொண்டிருந்தன. சுவரின் எல்லையில் மேற்கொண்டு ஓடுவதற்கு இடம் கிடையாது. பெரிய சுவர் குறுக்கே நின்றது.

யந்திரத்தை நிறுத்திவிட்டு மெல்லக் குனிந்து பார்த்தபோது அந்த அரணைகள் இரண்டும் ஒன்றின் மேல் ஒன்று நெருங்கிக்கொண்டு கண்களை இறுக மூடிக்கொண்டு சலனமற்று இருந்தன. மிகவும் அருகாமையில் நெருங்கி உற்றுப் பார்த்ததில் அச்சத்தால் அவைகள் நடுங்குவது புரிந்தது. ஒரு சிறிய குச்சியை எடுத்து அவைகளை விரட்டத் திரும்பி மறுபக்கம் ஓடி மறைந்தன. அன்றிலிருந்து வாரம் ஒரு தடவை புல்வெட்டும் போது மிகவும் கவனமாக செயல்பட ஆரம்பித்தேன்.

எத்தனையோ அரணைகள் அங்கிருந்த போதும் அந்த இரண்டு பெரிய அரணைகளும் எனக்குப் பரிச்சயமாயின. அவைகளை அடிக்கடி கூர்ந்து அவதானித்ததில் அந்த இரண்டும் மற்றவைகளில் இருந்து மிகவும் வேறுபட்டவையாகத் தெரிந்தது. ஒன்று பெரியது, மற்றது சிறியது. சிறியதின் வால் நுனி அறுபட்டிருந்தது. சிறியதின் உடலில் பளபளக்கும் சிறிய புள்ளிகள். பெரியதின் உடலில் அதே பளபளப்போடு மங்கலான நீண்ட வரிகள். இவைகளை மிகவும் உன்னிப்பாகப் பார்த்தால் ஒழிய வித்தியாசம் புரியாது.

பிறகு தினமும் ஒருமுறையாவது பார்க்கக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது. நாட்கள் போகப்போக அவையிரண்டும் ஆண் பெண் சோடியாக இருக்கும் என நினைத்தேன். அவைகள் மீது எனக்கிருந்த பயமும், என்மீது அவைகளுக்கிருந்த பயமும் குறைந்து போயிற்று.

பிறகு அந்த இடத்திற்கு வந்து வாயினால் விசில் சப்தம் எழுப்பினால் போதும், சரசரவென இரண்டும் ஓடிவரும். அந்த அளவிற்கு அந்த இரண்டு அரணைகளும் என்னோடு நட்புக் கொள்ள ஆரம்பித்தன. இந்த நிலைக்கு அவைகளை கொண்டு வருவதற்கு ஒரு வருடத்திற்கு மேல் பிடித்தது. கிளப் மெயின் கிச்சனில் கழிவாக வீசும் மெக்கரல் மீன் டின்னில் எஞ்சி இருக்கும் துண்டுகளை எடுத்து அவைகள் இருக்கும் இடத்தில் தூவினால் அதைவிட பெரிய கொண்டாட்டம் இவைகளுக்கு கிடையாது. இவைகளுக்காகவே மெயின் கிட்சன் பின்புறம் இருக்கும் பெரிய கழிவுப் பொருட்களைப் போடும் ட்ரம்மில் வெற்று மெக்கரல் டின்களைத் தேடுவேன்.

சில நாட்களாக வாலறுந்த அரணை மற்றதைப் போல சுறுசுறுப்பாக ஓடுவது கிடையாது. உற்றுப்பார்த்தபோதுதான் தெரிந்தது அதன் அடிவயிறும், இடுப்பசைத்து நகரும் விதமும் அது பிள்ளைத்தாச்சி என்று. வால் அறுந்த அரணைதான் பெண்

அரணை என்று யூகித்திருந்தேன். என் யூகம் இப்போது சரியாயிற்று. அரணைகள் முட்டையிடுமா? அல்லது குட்டி போடுமா? எனக்கு இதுபற்றி எதுவும் தெரியாது. யாரிடம் கேட்பது? கேட்டால் சிரிப்பார்கள். சரி எப்படியோ இருக்கட்டும். சில நேரங்களில் என் அறையில் என்னோடு இருக்கும். நண்பரிடம் இதுபற்றிக் கூறுவேன். அவர் பதில் சொல்லாமல் என்னையே நோக்குவார். காரணம் எனக்கு ஏதாவது மூளைக் கோளாறு ஏற்பட்டு வருகிறதோ என்ற சம்சயம் அவருக்கு.

வழக்கமாக அதிகாலை நான்கு மணிக்கு படுக்கையை விட்டு எழவேண்டிய நான் அன்றைய தினம் ஆறு மணிவரை தூங்கிவிட்டேன். முதல் நாள் இரவு அறையில் நண்பர் ஒருவர் ஜானி வாக்கர் விஸ்கி போத்தல் ஒன்றைக்கொண்டு வந்திருந்தார். அதன் தயவுதான் இந்தத் தாமத எழுச்சி.

அன்றைய தினம் நிறைய வேலைகள் இருந்தன. அதோடு இன்ஸ்பெக்ஷன் வேறு. எனக்கு மேலதிகாரியாக இருப்பவன் ஒரு ஸ்காட்லாந்துக்காரன். அவனிடம் இரக்கம் என்பது துளியும் கிடையாது. சில பிரிட்டிஷ்காரர்களிடம் இருந்த ஆளப்பிறந்தவர்கள் என்ற மனோபாவம் இவனிடம் நிறைய இருந்தது. போதாக்குறைக்கு சமீபத்திய கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து மிக மோசமாக ஒதுங்கிப் போனது வேறு அவனது எரிச்சலுக்கு ஒரு காரணம்,

படுக்கை விட்டு எழுந்ததும் முதல் வேலையாக மெயின் கேட்பக்கம் விரைந்தேன். அந்தப் பக்கம் தான் முதலில் அந்த ஸ்காட்லாந்துக்காரன் செக்கிங் வருவான். இன்று மெயின் கிட்சன் பக்கம் போய் வெற்றுமெக்கரல் டின் தேடமுடியாது. இப்போதே இரண்டு மணித்தியாலம் தாமதம். ஒரு நாளைக்கு இந்த அரணைகள் மெக்கரல் மீன் கழிவுகள் சாப்பிடாவிட்டால் இறந்து போகாது.

அதிகாலையில் அபுதாபி முனிசிபல் மஞ்சள் நிற வண்டி குப்பைகளை ஏற்றி வரும். மஞ்சள் நிறப் பெரிய வண்டி அதன் முன் நெற்றியில் மஞ்சள் நிற விளக்கு ஒன்று சுழன்று கொண்டிருக்கும் வண்டியின் பக்கவாட்டில் நீலநிற சீருடை அணிந்த ஊழியர்கள் தொங்கிக் கொண்டு வருவார்கள். மார்ச் மாதம் பிறந்தும் பனிமூட்டம் குறையவில்லை.

தினமும் நான் வேலை செய்து எல்லா இலைக் கழிவுகளையும் சருகுகளையும் கறுத்த பெரிய பொலிதீன் பைகளில் கட்டி வைத்து நீர் வால்வுகளை திறந்த பின்னர்தான் சாவகாசமாக அந்த வண்டி வரும். இன்று நான் அவசரமாக மெயின் கேட்டை நோக்கிப் போகும் போதே என்னைத் தாண்டி அந்த பலதியா வண்டி கிளப்பின் பின்புறம் நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. பின்புறம் இருக்கும் பெரிய கழிவுட்ரம்களை காலிபண்ணிவிட்டு மீண்டு திரும்பி வரும். அதற்குள் நான் என் வேலையை முடித்துவிட வேண்டும்.

முன்புறத்தை கூட்டிப் பெருக்கி பொலிதீன் பைகளை பாதையில் வைக்க வேண்டும்.

வந்தவுடன் விறுவிறுவென எல்லாச் சருகுகளையும் கூட்டி அவசர அவசரமாக பெரிய பொலிதீன் பைகளில் அடைக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் அந்தத்தவறு நிகழ்ந்ததாக உணர்ந்தேன். நான் வேலை செய்யும் அவசரத்தில் தினமும் என்னைத் தேடி வந்து மெக்கரல் மீன் கேட்கும் அரணைகள் இரண்டையும் கவனிக்கவில்லை.

அந்த இரண்டில் ஒன்று எப்படியோ ஏதோ ஒரு பொலிதீன் பையில் மாட்டிக் கொண்டிருக்க வேண்டும். ஏனெனில் எல்லாப் பைகளையும் கட்டி பாதையோரத்தில் எடுத்து வைக்கும் போதுதான் அந்த ஒற்றை அரணை வந்து சரசரத்தது. வால் அறுந்த கர்ப்பிணி அரணை. அவசரத்தில் வேலை செய்யும்போதே ஏதோ மென்மையான பொருளும் இலைச் சருகுகளுடன் போன உணர்வு ஏற்பட்டதை உணர்ந்தேன். கையில் நீண்ட ரப்பர் கையுறைகள் இருந்தபோதும் அரணையின் மென்மை புரியாமலா போகும். நன்றாகப் பார்த்தேன். ஆண் அரணையைக் காணவில்லை. சருகுகளோடு சேர்ந்து பொலிதீன்

பைகளுக்குள் போய் விட்டது. அங்குமிங்கும் ஓடியது வாலறுந்த பெண் அரணை. இதயத்தில் ஒரு நிமிடம் வேதனையின் சுழற்சி. தூரத்தில் ஸ்காட்லாந்துக்காரன் வந்துகொண்டிருந்தான். அவனுக்குப் பின்னால் திருப்பத்தில் மஞ்சள் நிற முனிசிபல் வண்டியின் மஞ்சள் விளக்கொளி.

இப்போது என்ன செய்வது? மீண்டும் எல்லாப் பைகளையும் அவிழ்த்து உதற முடியாதே ! ஸ்காட்லாந்துக்காரன் கழுத்தை நெறித்து விடுவான். இந்த அரணைச் சோடியைப் பிரித்த பாவம்?

சரி! ஒன்று செய்யலாம். மிக அவசரமாக செயல்பட்டேன். ஆம் ஏதோ ஓர் இடத்தில் கொண்டு போய் இந்தக் கழிவுகள் கொண்டு போய் கொட்டப்படலாம். ஒரு அரணை ஏற்கெனவே ஒரு பையினுள் இருக்கிறது. மற்றதையும் ஒன்றில் போட்டு அனுப்பி விட்டால்! அங்கே இரண்டும் சந்தித்துக் கொள்ளும். புதிய இடமாக இருக்கலாம். மனிதர்கள் கூட அகதிகளாக ஏதோ நாடுகளில், புதிய சூழ்நிலைகளில் இருக்கவில்லையா! இவைகள் போகும் இடத்திலும் அரணைகள் இருக்கலாம்.

ஒரு பையை மட்டும் பிரித்து வாய்ப்புறத்தை தரையோடு வைத்து ஒரு சிறிய குச்சியினால் அந்த வால் அறுந்த கர்ப்பிணி அணையைத் தட்ட, அது வெகுண்டு அந்த பைக்குள் ஓடியது. உடனே அதை எடுத்து வாய்ப்புறம் கட்டி முடிக்க அந்தப் பெரிய மஞ்சள் நிற வண்டி வந்து நின்றது. இப்போது மனத்தில் ஒரு நிம்மதி. இரண்டு அரணைகளும் இரண்டு பைகளில் இருகின்றன. எங்கேயோ கொண்டு போய் கழிவுகள் கொட்டப்படும் இடத்தில் ஆச்சர்யத்துடன் சந்தித்துக் கொள்ளும். புதிய இடத்தில் உங்கள் புதிய வாழ்க்கையைத் தொடங்குங்கள். இந்த கார்டனர் உங்களை நினைத்துக்கொண்டே இருப்பான்.

பைகள் வண்டியில் ஏற்றப்பட்டன. ஸ்காட்லாந்துக்காரன் திருப்தியுடன் தலையாட்டிவிட்டுப் போய்விட்டான். நீல நிற உடையணிந்த தொழிலாளர்கள் வண்டியில் ஏறித் தொங்க வண்டி புறப்பட்டது. நான் கையசைத்தேன். ஒருவன் பதிலுக்கு கையை ஆட்டினான். நான் என்ன அவனுக்கா கைகாட்டினேன். அந்த வண்டியில் போகும் அரணைகளுக்காக அல்லவா?

தூரத்தில் வண்டி போய்கொண்டிருந்தது. நிம்மதியுடன் திரும்பிப் போக முற்படுகையில் சரசரவென்ற ஒலி, அருகில் காலடியில் கீழே தரையைப் பார்த்தேன். பெரிய ஆண் அரணை தனியாக நின்று அங்குமிங்கும் பார்த்தது. என் மனைவி எங்கே என்று கேட்பது மாதிரி. அப்படியானால்!

-1996

– சுதந்திர இலங்கையின் தமிழ்ச் சிறுகதைகள், முதற் பதிப்பு: பெப்ரவரி 1998, இலங்கைக் கலைக்கழகம், பத்தரமுல்ல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *