தலைக்கொரு கூரை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 22, 2022
பார்வையிட்டோர்: 2,436 
 

(1993 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

குஞ்சரங்கள் கூட்டம் கூட்டமாக தூங்குவதைப் போல் குவிந்து… குவிந்து கிடக்கும் தீப்பாறைக் குவியல்களை சுற்றி வளைத்து ஆயாசத்துடன் ஓடி வந்த “டாட்டா” பஸ் வண்டி அந்த இராட்சதப் பாறைகளின் பாதச் சுவடென படிந்திருக்கும் பஸ் நிலையத்தினுள் புகுந்து பெருமூச்சு விட்டவாறு நின்றது.

நகரின் கிழக்கு எல்லையினுள் கரும்பூதமென குந்தியிருக்கும் “எத்தாகல்லுக்கு” மேலே மெல்லிய இரும்புக் கம்பிகளினால் தொடுக்கப்பட்டிருக்கும் சமாதி நிலையிலான போதி மாதவனின் பிரதியமைப்பில் இழையோடியுள்ள மின் குமிழ்கள் உயிர்ப்புப் பெற மலையிடுக்கில் எழுந்த பெருமானின் பிரம்மாண்டமான முகம் நகரை ஆசீர்வதித்துக் கருணை மழையைப் பொழிந்து கொண்டிருந்தது.

“மாத்தலே… மாத்தலே..” “ரிதிகம்… ரிதிக……” “நுவர… நுவர்….”

ஒவிலிகந்த… ஒவிலிகந்த… கொழும்பிலிருந்து குருணாகலுக்கு கடைசியாக புறப்பட்ட இப்பஸ் வண்டியில் வந்து சேர்ந்த பயணிகள் எப்படியேனும் பஸ் எடுத்து தத்தம் வீடுகளுக்கு போய் சேர்ந்து விட வேண்டுமென்ற, அந்தரிப்பில் முட்டி மோதி இடித்துக் கொண்டு இறங்கும்போது “ரன்னர்கள் ” போட்டி போட்டுக்கொண்டு போடும் கோஸங்கள் வரவேற்பளிக்கின்றன.

இன்று வெள்ளிக்கிழமை வார விடுமுறைக்காக வீடு வருவோர் தொகை அதிகம். எனவே தான் நெருக்கடி. எல்லா பஸ்களும் நிரம்பி வழிகின்றன. உள்ளே இருப்பவர்கள் “சாடின் அடைப்பின்” நெரிசலில் விழிபிதுங்கி நின்றாலும்; மிதிப்பலகையில் கால் வைத்தவரை இறங்கி “திரும்பிப்போ” என்று மறுக்காமல் உள்ளே அடைபட்டிருப்போரை திட்டி ஏசி இடம் எடுத்து வந்தவரையும் உள்வாங்கி அணைத்துக் கொள்ளும் மினி பஸ்சின் தாராள மனசு நம் அனைவருக்கும் இருந்து விட்டால், உலகில் எத்தனையோ பிரச்சினைகளுக்கே இடம் இல்லாமல் போய்விடும்.

பூதத்தையே ஒரு சிறு புட்டியில் அடைத்து விடும் சூ…. மந்திரவாதிகள் இந்த மினி வேன் பொடியன்களிடம் பாடம் கேட்க வேண்டும்….!

“அரக்கப் பரக்க இறங்கி ஆவப்போவதுதான்” என்ன? என்ற நியாயத்தின் அடியில் எழுந்த சலிப்பில், தாவி, முண்டியடிப்போரின் போட்டியிலிருந்து ஒதுங்கி, எல்லோருக்கும் வழிவிட்டு தன் இனத்திற்கேயுரிய மகா பொறுமையுடன் தம் வாழ்வின் பயனே போன்ற ஏமாற்றத்துடனும் நகர்ந்து கொண்டிருந்த கறுப்பையாவையும் நந்தபாலவையும் “இக்மன்ட்ட இக்மன்ட்ட” என்ற அதட்டும் கண்டக்டரின் குரல் துரிதப்படுத்தியது.

இருவரும் மூடிய ‘றப்பர்’ சிரட்டையில் கரந்துரைந்த ‘சுருட்டை’ தீண்டியதுபோல வெடுக்கென பஸ்சை விட்டு இறங்கினர்.

‘மட்காட்” தரையில் அரைந்து தேய புல்லோட் அடித்து கிறீச்சிட்டு ஈனக்குரல் எழுப்பி நகரும் அளவத்துகொட வேன் இந்த இருவரையும் பார்த்து யனவாத…? என்ற கேட்டு “நே… நே…” என்ற தலையசைப்பினால் கோபமும் வெறுப்பும் கொண்டு “ரைட்… ரைட்…” என்ற குரலோடு ஒரு குலுக்கலுடன் உரசிக் கொண்டு கடந்து சென்றது.

பஸ் நிலையத்தை விட்டு இருவரும் வெளியே வந்தனர். முன்னால் பெரகும்பா வீதி. வீதியின் கடைசிக் கோடியில் அமைந்திருந்த நைட்கடை மட்டுமே திறந்திருந்தது. கடையின் முன் உள்ள பக்கிஸ் பெட்டியில் இருவர் குந்திக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவரினதும் தோற்றமே ‘பஜார் பேர்வழிகள்’ என்பதை பறைசாற்றிக் கொண்டிருந்தது. “யாரை மடக்கலாம்” என்ற அவர்களின் பார்வையில் படாமல் கறுப்பையாவும், நந்தபாலவும் எதிர்திசையில் நடந்தனர். கடையின் முன்பகுதியில் கேஸ் அடுப்பில் தகிக்கும் கொத்து ரொட்டித் தகரம் போடும் தாளம் இருவரையும் தொடர்ந்து வந்து அழைத்தது.

பாதையோரத்தில் “கண்ணி” வைத்து நின்ற ஆட்டோகாரன் இந்த இருவரையும் கண்டு முதலில் சுறுசுறுப்படைந்தாலும், பின்னர் வாடிச் சோர்ந்து வரும் இவர்களை பார்த்து சலிப்புற்று இந்த “கேஸ் நடை வண்டி” சரிப்படாது என ஊகித்து மீண்டும் ஆட்டோ வண்டியினுள்ளே தன்னை புதைத்துக் கொண்டான்.

“நந்தபால…” இருவருக்கும் இடையே நிலவிய மௌனத்தைக் கலைப்பது போல் மெதுவாக பேச்சை எடுத்தான் கறுப்பையா தலைவர். இருவரும் இப்போது புதிய மார்கட் தொகுதியைக் கடந்து ரவுண்ட் போட்டிற்கு சமீபமாக நடந்து கொண்டிருந்தனர்.

மார்கட் கட்டிடத் தொகுதிக்கு எதிரே இரண்டாம் உலக யுத்தத்தில் நேச நாட்டு படைகளுடன் சேர்ந்து சமர் செய்து மடிந்த நம் நாட்டு வீரர்களின் நினைவாக எழுப்பப்பட்ட மணிக்கோபுரம் இரவு மணி பத்து என்பதை பெருமையுடன் எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தது.

“தலைவர் இப்ப கடையில் போய் தேத்தண்ணி குடிச்சிட்டு மெழுகுதிரியும் நெருப்பெட்டியும் வாங்கிட்டு பத்தரை மணிக்கு புறப்படுற மாத்தளை பஸ்சில போய் ரேந்தகொட சந்தியில் இறங்கி நடந்து தோட்டம் போயிறுவோமா ……?”

“இல்ல; நந்தபால முந்தி நடந்தது அதுக்குள்ள மறந்திட்டியா? நம்ம சைவக்கடைக்குப் போய் இருக்கறத சாப்பிட்டு கோச்ஸ்டேசன் முன்னுக்கிருக்கிற விறாந்தையில கொஞ்ச நேரம் கண் அசந்தமுனா விடிஞ்சிடும். காலையில முதல் பஸ் எடுத்து தோட்டத்திற்கு போனோம்னா நாளைக்கி வேலைக்கும் போயிறலாம்.”

தலைவர் கறுப்பையாவின் பேச்சுக்கு மறுப்பின்றி, அவன் பின்னே நடந்தான் நந்தபாலா.

இருவரும் சைவக்கடையை அடைந்தபோது கடையை மூடி பலகை போட்டுக் கொண்டிருந்தார்கள். . மேக்கர் சுடு தண்ணீர் பாய்லரைக் கழுவி சுத்தம் செய்து கொண்டிருந்தான்.

கறுப்பையா தலைவரைக் கண்ட கடை முதலாளி “வாங்க தலைவரே வாங்க” என்று அழைத்தபடியே, “என்ன இந்த ரெண்டாங்கெட்ட நேரத்தில்” என்றார். தோட்டப் பகுதியில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் போலீசுக்கு செல்லும் முன்னர் தலைவர் சைவ கடை முதலாளியைக் கண்டு ஆலோசனை கேட்க தவறமாட்டார்.

“இப்பதான் கொழும்பில இருந்து வாரோம். எல்லாம் இந்த லயத்து விசயமாகத்தான் எட்ஒப்பீசுக்கு போயி ஜீ. எஸ்ஸை கண்டு பேசி எல்லா பிரச்சினையும் கூறிவிட்டு வார்ரோம். பஸ் இல்ல வீட்டுக்கிப் போறதுக்கு, முதல்ல

குரலில் பெருமை இழைந்தது. “ரொபட் புறூஸ் – விக்கிரமாதித்தன் முயற்சியாக இந்த தடவைதான் அவர் கொழும்பு சென்றதிற்கு பெரியோர்களை நேரில் சந்தித்து; தம் குறைகளை எடுத்துச் சொல்லும் வாய்ப்பு ஏற்பட்டது. அதுதான் மகிழ்ச்சிக் கடலில் மிதக்கின்றார்.

“என்னதான் இருந்தாலும் இப்ப காலம் கெட்டுப்போய் கெடக்கிறபோது நேரங்காலத்தோடு வீடு வாசல் போய்சேர தெரிஞ்சிக்கிறணும். இங்கேயும் நேரத்தோட சாப்பாடெல்லாம் முடிஞ்சிறிச்சி இல்லன்னு சொல்ல முடியாது. ஏதோ இருக்கிறத சாப்பிடுங்க. டேய் தம்பி தலைவருக்கு பாத்துவை” என்று குரல் கொடுத்தார்.

கடையை மூடி படுப்போம் என்ற நினைப்பில் மேசை நாற்காலிகளை துடைத்து அடுக்கிக் கொண்டிருந்த பையன் மீண்டும் வேலை செய்ய வேண்டியுள்ளதே என்ற கோபத்தில் வேண்டா வெறுப்புடன் இலை போட்டு மீதியிருந்த தோசைகளை பரிமாறி ஊசிப்போன சாம்பாரை ‘தடாலென” ஊற்றினான்.

தாமரை இலையைக் கடந்து வழியும் சாம்பார் சாரத்தில் இறங்கியது. வழியும் சாம்பாரை துடைத்தபடி கோபத்துடன் சப்ளை பையனைப் பார்த்த நந்தபாலாவை, சாடையில் கையமர்த்தி சமாதானப்படுத்தினார் கறுப்பையா தலைவர்.

இவர்கள் பசி இவர்களுக்கு ! அவன் கோபம் அவனுக்கு பெரிது.!!

சாப்பிட்டுக் கொண்டிருக்கும் தலைவரிடம் சில்லறையை எண்ணி கணக்கிட்டபடியே முதலாளி கேட்டார். “என்ன தலைவரே, மாதம் தவறாமல் கொழும்பு கொழும்புன்னு போய்க்கிட்டுதான் இருக்கிறீங்க. இந்த லயத்து பிரச்சினைக்கு ஒரு முடிவு வருமா?” சைவக்கடை முதலாளியும் முன்பு அட்டனில் தோட்டப் பகுதியில் வாழ்ந்தவர்.

“அப்பாடா இங்க மாதிரியா அங்க என்னா ஒற்றுமை ஒன்னுன்னா குளவிக்கூட்டைக் கலைச்சா ஒன்னா சேர்ந்து துரத்துமே அந்த மாதிரி”ன்னு பெருமைப்பட்டுக் கொள்வார்.

முதலாளி அப்படி கூறும் பொழுது, “இங்க அப்படி ஆவுங்களா. இங்கேயும் நாங்க தமிழன்னு வாழுறோமே அதுவே பெருசுதாங்கன்னு”, என தலைவர் கறுப்பையா எடுத்துச் சொல்லி திருப்திப்பட்டுக் கொள்வார்.

கண்டி, மாத்தளை குன்றுகளுக்கு வடமேற்கில் தாழ்ந்து செல்லும் மலைப்பகுதிகளிலும் மாவத்தகம குருணாகல் சரிவுகளிலும் பாரிய கிராமங்களுக்கிடையேயும் வரண்ட காடுகளுக்கு மத்தியிலும் அநாதரவாக, குட்டி குட்டி தோட்டங்களாக சிறைபட்டுக் கிடக்கும் றப்பர் தென்னந் தோட்டங்களில் வாழும் நம்மவரின் நிலை கயிற்றுந்த பட்டம் போல் தொடர்பற்றதுதான்!

அந்த தனிமைதான்; அவர்களின் தனித்துவம்! தோட்டங்களில் இழையோடி கிடக்கும் கிராமியச் செல்வாக்கும், பேச்சு மொழியில் கூட ஒரு மணிப்பிரவாளத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

தொடர்ச்சியில்லாது ஆங்காங்கே தொட்டம் தொட்டமாக பரந்து கிடக்கும் தோட்டங்கள், தொடர்பில்லாது அறுபட்டுகிடக்கும் உறவுகள்,. தீர்வே இன்றி நீக்கமற நிறைந்து கிடக்கும் பிரச்சினைகள்…… ஓயாத உழைப்பு இவற்றின் கூட்டுக்கலப்புதான் இவர்கள்….

“லயத்தை ரிப்பேர் செய்யும்படி கடிதம் எழுதுறதாக சொன்னாங்க. போன மாசமும் இப்படித்தான். ஒரு கடிதம் கொண்டு வந்து கொடுத்தோம். துரை ரீஜனல் ஆபிசு ? அனுமதி கொடுக்கல்ல நம்மால் முடியாதுண்டான். இன்னைக்கி நேத்து கட்டின லயமா ? வெள்ளக்காரன் கட்டுனது. இந்த பயலுகளும்தான் வன்செயல் கொளப்பமுன்னு நெருப்ப வச்சி… வச்சி கொழுத்தினாதங்க. எத்தனை காலத்து லயம். மழை காத்துன்னு இத்துப் பாய் உக்கி இப்ப ஒழுகுது. காம்பிரா உள்ளுக்கும் புளங்க வசதியில்லை. பின்பக்கம் குசினி இறக்கி கட்டினா அதையும் இடிச்சி ஒடைக்கச் சொல்லுறானுக. இப்ப எங்க வீட்டில் என் மகன் குடும்பம், மகள் குடும்பம்னு மூணு குடும்பங்கள் இருக்கிறோம். நாங்க குடும்பம் நடத்துறதே பெரிய

அசிங்கமுங்க” தலைவர் பெருமூச்சு விட்டுக் கூறினார்.

“என்ன தலைவரே, எனக்கு தெரியாத தோட்டத்து சங்கதிகளா… என்னமோ நம்ம ஆளுக தலைவிதி. இறைவன் விட்டபடி நடக்கும். தோசை சாப்பிட்டிங்களா. எப்படி நல்லா இருந்திச்சா தெரியல பிளேன்டி குடிக்க முடியாது பொயிலரை அணைச்சாச்சி. இப்ப எங்க தங்க போறீங்க ? கடைசி பஸ் போயிருக்குமே, முந்தி மாதிரி வெளியாளுக இப்ப இங்க தங்க முடியாது. நாங்க கடையில உள்ளவங்க பெயர்களை போலீசில பதிவு செய்திருக்கோம். எந்த நேரத்தில் போலீஸ் வந்து செக் பண்ணுதோ சொல்ல முடியாது.”

“இல்லங்க, நாங்க கோச்ஸ்டேசன்ல படுத்திருந்திட்டு விடியற்காலையில் வெள்ளன வீடு போய் சேர்ந்திருவோம். உங்களுக்கு என்னத்திற்கு எங்களால வீண் தொல்லை….” முதலாளியிடம் விடைபெற்றுக் கொண்டு புகையிரத நிலையத்தை நோக்கி நடந்தனர். நந்தபால ஒரு பீடியை பற்ற வைத்து உடலுக்கு தெம்பேற்றிக் கொண்டான்.

பத்தரை மணிக்கு இங்கிருந்து புறப்படும் மாத்தளை பஸ்சில் ஏறி ருக்கதென சந்தியில் இறங்கி கிராமங்களுக்கூடாகவும் பற்றைக் காடுகளுக்கூடாகவும் நடந்து தோட்டத்திற்குப் போய் சேர்ந்துவிட அவர்கள் உடலில் தெம்பு இல்லாமல் இல்லை.

ஒரு காலத்தில் நேரம் காலம் பாராது இப்படி வந்து போனவர்கள் தான். ஆனால் இன்று காலம் கெட்டுபோய் கிடக்கின்றது போகமுடியுமா? –

பட்டப்பகலிலேயே ஒத்தை செத்தை வந்து விட்டால் “காசை எடு” “உருளோசை கழட்டு”ங்கிற காலமாச்சே, போதாதற்கு இவர்கள் சங்கத்திற்கு ஆள் சேர்க்கின்றபடியால் துரை வேற “நாட்டில் அடி ஆள் வைத்திருக்கின்றான்.

சங்கத்திற்கு சேர்ந்த பின்னர் துரைமார்களின் தட்டிக்கேட்க முடியாத அதிகாரத்திற்கு ஆபத்து வந்துவிட்டது. “அரைப்பேர் போடாதே,” “குறைவாக அளக்காதே,” “லயத்தை திருத்து” என்றெல்லாம் கோரிக்கைகள் வர இந்த பிரதேசத்தில் புகுந்த இந்த புது நோயையும் அதன் சூத்திரதாரிகளான கறுப்பையா தலைவர், நந்தபால உட்பட இன்னும் தோட்டங்களில் உள்ள சிலரையும் எப்படியும் மடக்கி விட வேண்டுமென துரைமார் கங்கணம் கட்டி நிற்கின்றனர்.

மூன்று மாதங்களுக்கு முன்னர் அந்த சம்பவம் நிகழ்ந்தது. கறுப்பையா தலைவரும் நந்தபாலவும் கொழும்பு போய், இது போல் இரவில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருக்கும் வேளையில் ரேந்தகொட சந்தியில் வைத்து காடையர்களினால் தாக்கப்பட்டனர். நந்தபால சிங்களத்தில் கூச்சலிட்டபடியால் பக்கத்து கிராமவாசிகள் ஓடிவந்து இருவரையும் காப்பாற்றினார்கள்.

எனினும் இருவரும் ஒரு வாரம் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெறவேண்டி இருந்தது. எனவேதான் இவ்வாறான வேளைகளில் தோட்டங்களுக்கு திரும்பிச் செல்வதை தவிர்த்துக் கொண்டார்கள்.

புகையிரத நிலையத்திற்கு செல்லும் வழியில் பிள்ளையார் கோயிலை கடக்கும்போது நந்தபால, தலைவரை கேட்டான், “இந்த வருஷம் நம்ம தோட்டத்தில காமன்டி ஊன்றுறது இல்லையா?”

“காமன், மட்டுமல்ல “சிந்தாகட்டி, தோக்கல் எல்லாம் கும்பிடனும். அதோட உச்சி மலையில இருக்கிற கலேபண்டார கோயிலயும் பொங்க வைக்கனும். ஆனா; இப்ப தோட்டத்ல அநேகமானவுங்க சேர்ச்சிற்குதானே போறாங்க. எப்படி வரி வசூலிக்கிறது…..” தலைவரின் குரல் சோகமாக ஒலித்தது.

“ஆமா தலைவரே, நானும் சொல்லனும்னுதான் இருந்தேன். நம் தோட்டத்தில் உள்ள மொத்தம் எழுபது குடும்பத்திலே அஞ்சி குடும்பம் நாங்க சிங்களவங்க. நாங்க ரிதிகம பன்சலைக்கு போறதோட, பத்தினி தெய்யோ கோயிலுக்கும் வந்து சாமி கும்பிடுகிறோம். நம்ம தோட்டத்தில உள்ளவங்க சடங்கு, கல்யாணம்னு டவுன்ல உள்ள கோயில்களுக்கு போனா நம்ம ஆளுகளுடைய நெலமை தெரியாம அங்க உள்ள ஐயர்மாருக சின்ன விசயத்திற்கெல்லாம் ஐநூறு, ஆயிரம்னு புடிங்கி திங்கிறாங்களாம். குளியாபிட்டி பக்கம் ஒரு ஐயர் கழிப்பு கழிக்கணும் நூல் கட்டனுன்னு ஊர் உலகத்தில இல்லாத சாமான் சட்டெல்லாம் கேட்கிறதோட, ஏழைகளுக்கு ஒரு மாதிரியும், பணக்காரங்களுக்கு ஒரு மாதிரியும் நடத்துராராம். இதுனாலதாம் நம்ம சனங்க இப்ப ஆதரிப்பார் இல்லாம கோயிலுக்கு போகவே பயப்படுறாங்க. ஆனா பாதிரிமார்களும் சிஸ்டர்மார்களும் இப்ப தோட்டம் தோட்டமா வந்து உடுப்பு துணி வகைகள் எல்லாம் கொடுக்கிறதோட, காசு பணம் வாங்காம ஜெபம் சொல்லிக் கொடுத்து ஆதரிக்கிறாங்க. இப்ப அவுங்க தோட்டத்தில் கூறின புத்திமதிகளாலதான் நம்ம தோட்டத்து ஆம்புள பொம்புளங்க ஸ்பிரிட் காயவைச்சி குடிக்கிற பழக்கத்தை விட்டிருக்காங்க…”

“ஆமா நந்தா, இப்ப அநேகமான கோயில்கள் நம்ம ஏழைகள் மதிக்காமல் நடக்கிறபடியால்தான் இதெல்லாம் நடக்குது. நான் முந்தி சொன்னது ஒனக்கு ஞாபகம் இருக்குமுன்னு நெனைக்கிறன். முந்தி நாங்க வன்செயல்ல அடிபட்டு காட்டுல ஒளிஞ்சி இருந்து பிறகு அகதி முகாம்ல இருந்தோம் இல்ல, அங்கேயும் எங்கள தோட்டத்து ஆளுன்னு பிரிச்சு வைச்சுத்தான் நடத்துனாங்க. பாண் வாங்கிய போலிம்ம கூட வேற வேறயாகத்தான் வைச்சாங்க….”

“அநியாயக்காரனுக… மழை வருற மாதிரி இருக்கு. வாங்க வேகமா நடப்போம்” என்றவாறு “ஆமா தலைவரே நம்ம இருக்கிற லயன் காம்பிரா நமக்கே சொந்தமாகப் போகுதுன்னு ஒரு பேச்ச அடிபடுதே…”

தலைவர் கறுப்பையா எட்டி நடையைப் போட்டவாறு கூறினார், நந்தா உனக்கு நாட்டுல வயல், வீடு இதெல்லாம் இல்ல”

“உன்ன போல குடும்பங்கள் எங்க மாதிரி தோட்டத்தில இருக்கீங்க. நான் இந்த தோட்டத்து லயத்திலதான் பிறந்தேன். எங்கப்பாவும் இதே தோட்டத்திலதான் இந்த லயத்தில் பிறந்திச்சாம். நாங்க பரம்பரையா இந்த தோட்டத்திலதான் வாழ்ந்தோம். இந்த லயத்தை விட்டு எங்கள போகச் சொன்னா நாங்க எங்க போவோம். இப்ப அஞ்சி வருஷம், பத்து வருஷம் ஒரு வீட்டுல கூலிக்கு வாடகைக்கு இருப்பவங்களைக் கூட வெளியே அனுப்ப முடியாம இருக்கு. அப்படி இருக்க நேரம் பரம்பரையா இருக்க நமக்குத்தான் இந்த லயம் காம்பிரா எல்லாம் சொந்தம் ” இப்பொழுது மழை கொட்டத் தொடங்கிவிட்டது. இருவரும் ஓடி ரயில்வே நிலையத்திற்கு முன்பிருக்கும் விறாந்தையை அடைந்தனர்.

ரயில் நிலையத்தில் பலர் இரவு வண்டிகளுக்காக காத்து நின்றனர். தம் கைவசம் இருந்த அன்றைய செய்தித்தாளை இருவரும் தரையில் விரித்து படுத்து சிறிது நேரத்திற்குள் மெய்மறந்து தூங்கிவிட்டனர்.

“தூறிக் கொண்டு வந்த மழை பெரும் பாட்டமாக பெய்து கொண்டிருந்தது. எவ்வளவு நேரம் தூங்கினோம் என்று தெரியாத இருவரும் பெரும் மழையோடு பயங்கரமாக இடித்து முழங்கும் ஓசை கேட்டு திடுக்கிட்டு எழுந்தனர்.

மூன்றாம் சாமம் கழிந்து பொழுது புலரும் வேளை அடைமழை விடாது பெய்து கொண்டிருந்தது. வரவர அதன் வேகம் அதிகரித்து ஓங்காரத்துடன் பெய்யத் தொடங்கியது. எங்கும் வெள்ளக்காடு. ஒருவாறு இருவரும் மறுநாள் வீடு வந்து சேரும்போது நண்பகல் தாண்டிவிட்டிருந்தது.

மழை… மழை… பெருமழை… விட்டபாடாக இல்லை. தோட்டத்து கான் குட்டைகள் கூட நிரம்பி வழிந்து பெருக்கெடுத்து ஓடுகின்றன. வானம் லயத்துக் கூரையாக பொத்துக் கொண்டு ஒழுகுகின்றது. மேட்டு லயத்தில் இருந்து ஓடி வந்த ஒருவன் “தலைவரே எங்க லயத்துமேல் ஈரப்பலா மரம் விழுந்திருச்சின்னு ஐயையோன்னு” ஒப்பாரி வைத்தான்.

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் எல்லோரும் அங்கு ஓடினர். நல்ல வேளை லயத்திற்கு பெரிதாக சேதம் ஒன்றும் இல்லை, விழுந்த ஈரப்பலா மரத்தின் சிறிய வாது ஒன்று மட்டுமே லயத்தைத் தாக்கி இருந்தது.

மழை… மழை… பெருமழை…. போதாதற்கு ஊளையிட்டுச் சீறும் காற்றும் சேர்ந்து சுழன்று மரங்கள் பேயாட்டமாடிப் பயமுறுத்தின.

பண்பட்ட இதயம் போல் மூன்று தலைமுறையின் சோகங்களைத் தாங்கிக் கொண்டு; மழை, வெயில், காற்று ஆகிய இயற்கையின் சீற்றங்களை சகித்துக் கொண்டும் கல்வீச்சு, சூறையாடல், எரியூட்டல் ஆகிய இன வெறிச் செயல்களினால் புண்பட்டும் நிலைகுலைந்து போன தோட்டத்து லயங்களின் தகரங்கள் தம் ஆற்றாமையைச் சொல்லி அழ சுவர்கள் கரைந்து காரை பெயர்ந்து இடிந்து விழத்துடிக்கின்றன.

தொடர்ந்து பெய்யும் மழையினால் தரை ஊற்று கிளம்பி பொங்குகின்றது. துரையைத் தேடி ஓடினார் தலைவர். அவர் கொழும்பில் நடைபெறும் ”றகர் விளையாட்டுப்” போட்டியில் கலந்து கொள்ள போய் விட்டிருந்தார்.

அவருக்கும் கீழே இருப்பவர்கள் ஒரு முடிவும் எடுக்க முடியாத நிலை தலைவர் ஏமாற்றுதலுடன் திரும்பி வந்தார்.

இனியும் பார்த்துக் கொண்டிருந்தால் நிலைமை மேலும் மோசமடையலாம். எல்லோருமே கறுப்பையா தலைவரை நச்சரித்துக் கொண்டிருந்தனர்.

கூரைகள் பெருமளவில் ஒழுக தரை ஊற்று கண்டு போய்விட்டது. எவ்வளவு தண்ணீரைத்தான் அள்ளி அள்ளி வெளியே ஊற்றுவது. அள்ளிய கைகள் அசந்து போய்விட்டன.

“லயத்தை ரிப்பேர் செய்” என்ற கோரிக்கையை அன்றே கவனித்திருந்தால் இன்று நிலைமை வேறு. அதைப்பற்றி இப்போது பேசிப் பலனில்லை. காற்றில் பறக்கத் துடிக்கும் தகரங்களையும் இடிந்து சாய்ந்துவிட நழுவும் சுவர்களையும் தாங்கிப் பிடிக்க வேண்டும்.

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது சிறுவர்கள் உட்பட அனைவரும் புறப்பட்டனர். தோட்டத்தை அடுத்து காட்டுத் தொங்கலில் இருக்கும் மானாப்புல் மலையிலிருந்தும், சிந்தா கட்டி மலையில் இருந்தும் கட்டு கட்டாக கட்டிப் போடப்பட்டு நிரவி விடப்பட்டன.

இற்றுப் போய் உடைந்த “பரால” ரீப்பை களுக்காக; காட்டுத்தடிகளும் உக்கிப் போய் ஒழுகும் கூரைத் தகரங்களுக்கு மேலாக இலுக்கு மானாப்புல்லு

கட்டு கட்டாக கட்டிப் போடப்பட்டு நிரவி விடப்பட்டன.

கூரையை ஊடறுத்து நிலத்தில் கொட்டிய நீர் குறைய தரை காய்ந்தது. நெளியும் சுவர்களும் நிமிர்ந்து கொண்டன. அன்றிரவு அனைவரும் அமைதியாக

தூங்கினர். மறுநாள் மழை குறைய சூரியன் எட்டிப் பார்த்தான்.

மரம் காஞ்சிட்டா இன்னைக்கு இல்லாட்டியும் நாளைக்காவது பால்வெட்டலாம் என்று பேசிக் கொண்டனர். அப்போது மேட்டு லயத்துப் பக்கமாக துரையும் பெரிய கன்டக்டரும் வருவதாக ஒருவர் ஓடி வந்து தகவல் கூறினார்.

தலைவர் கறுப்பையாவும் நந்தபாலாவும் ஒட்டமாக அங்கு ஓடிச் சென்றனர். துரை மழையினால் ஏற்பட்ட சேதங்களையும் லயங்களையும் பார்வையிட்டுக் கொண்டிருந்தார். துரைக்கு சலாம் தெரிவித்த கறுப்பையா தலைவர் பார்த்தீங்களா, துரைகளே நான் எத்தனை தடவை லயத்தை ரிப்பேர் செய்ங்க செய்ங்கன்னு ரிப்போட் செஞ்சேன். இப்ப பார்த்தீங்களா, எங்களுக்கு நடந்த கதியை, நாங்க மட்டும் இந்த தடவை காட்டுக் கம்பு தடிகளை வெட்டிப் போட்டு இலுக்கு மானாவை வச்சி கட்டாட்டி லயமே மழையில ஊறிப்போய் இடிஞ்சி விழுந்திருக்கும்ங்க. அதுனால துரை இனியும் சுனங்காமல் வயத்தை ரிப்பேர் செய்து கட்டித்தாங்க” பவ்யமாகக் கேட்ட கறுப்பையா தலைவர் துரையை வணங்கி நின்றார். தான் எடுத்த சமயோசித நடவடிக்கையை துரை பாராட்டுவார் என்ற நம்பிக்கையில் வார்த்தைகள் பெருமிதப்பட்டுத் தெறித்தன. நம்பிக்கை பூத்த முகம்…!

“அது இல்ல தலைவரே, இப்ப நீங்க பெரிய குத்தம் செஞ்சிட்டீங்க. இந்த லயம் தோட்டத்து சொத்து. தோட்டம் அரசாங்கத்தினதும் கம்பெனியினதும் சொத்து. இதுல உள்ள ரீப்ப பராலகளை உடைச்சி மாத்தி காட்டுக் கம்புகளை போட்டுக் கட்ட உங்களுக்கு அதிகாரம் கிடையாது. தகரத்திற்கு மேலே இலுக்கு மானாப் புல்லு வைத்து யாரைக் கேட்டுக் கட்டினீங்க. இதுக்கெல்லாம் நம்ம மேல் இடத்தில் அனுமதி பெறனும். உங்க உங்க விருப்பத்திற்கு இதெல்லாம் நடக்க முடியாது. அதனால நான் பொலீசில் என்றி “போட்டிட்டு ரீஜனல் ஆப்பீசுக்கும் அறிவித்து உங்கமேலே நடவடிக்கை எடுத்து தண்டம்’ போடப்போறேன். இதை இப்போது நான் அறிவிச்சி; நடவடிக்கை எடுக்காட்டி பின்னுக்கு எனக்கும் குத்தம் கிடைக்கும்.

“துரை இதென்னங்க அநியாயம்,” கறுப்பையா தலைவர் கண் கலங்கி குரல் கொடுத்தார். இடிந்து விழுற வீட்ட…

கறுப்பையா தலைவரின் பேச்சைக் கேட்க அங்கு துரை இல்லை. அவர் தூரத்தில் நிறுத்தியிருக்கு ஜீப் வண்டியை நோக்கி நடந்து கொண்டிருக்கின்றார்.

இதுவரை ஊமையாகக் காய்ந்த வெயில் சற்றே தணிய வானத்தில் மீண்டும் கரு மேகங்கள் திரண்டுவர; வானம் இருண்டு கொண்டு வருகின்றது. வானம் ஒரே கூரைதான். மெல்லிய தூறல்கள் பனித்துளியென துமிக்கிறது. மழை மழை.

மீண்டும் பெரும் மழை! மழை ஒரு பாட்டம் பெய்து, அழுதுதான் தீர்க்கும் போலிருக்கிறது.

– 1993, சுதந்திர இலங்கையின் தமிழ்ச் சிறுகதைகள், முதற் பதிப்பு: பெப்ரவரி 1998, இலங்கைக் கலைக்கழகம், பத்தரமுல்ல

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *