அபலையின் சாபம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 23, 2024
பார்வையிட்டோர்: 1,027 
 
 

(1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆங்கார முற்ற கண்ணகியின் அவதாரம் போல் தெருத் தெருவாகத் திரிந்தாள் அவள். உள்ள வேதனையும், கோபத்தின் குமுறலும் செக்கச் சிவந்த கண்களை அனலாக மின்னச் செய்தன. வயிற்றின் பசியும், தாய்ப் பாசமும், பழி வாங்கும் எண்ணமும் அவளை வெறி பிடித்த காளியாக்கி விட்டன. ‘அவன் விளங்குவானா! அவன் குடி விளங்குமா?’ என்று நெடு மூச்செறிந்தாள் அவள். அவள் அபலை.

அன்று காலைவரை அவள் மகிழ்வுடன் தானிருந்தாள். அவளுக்கு எவ்வித குறையும் இருக்க வில்லை, கணவன் இறந்து போனான் என்பதைத் தவிர. அந்தத் துயரைக் கூட காலம் தேய்த்து விட்டது. மைந்தரின் அன்பு, அவளுக்கு வாழ்வில் பெருமை கொடுத்தது. குல அந்தஸ்தும், கௌரவமும் அவளைத் தலை நிமிர்ந்து வாழ இடமளித்தன. ஆனால்….ஆனால்?

அவள் ராஜனின் மனைவி. அரசனின் தங்கை, என்றாலும் அவள் அநாதை. கொடுந் துயரில் மூழ்கி விட்ட, மூழ்கடிக்கப் பட்ட அபலை ‘தெய்வமே, உனக்கு கண்ணில்லையா அவனும் அவன் குடும்பமும், அவன் ஊரும் அடியோடு நாசமாகரதா?’ என்று வயிறெரியும் நிலை அவளுக்கு ஏற்பட்டது. முந்திய தினம் தன் மைந்தர் லக்கண்ணா, வீரண்ணா இருவருடன் அண்ணன் வீடு தேடி வந்த ஆனந்த முற்ற அவளுக்கு இந்நிலை விளையும் என யார் தான் சொல்ல முடியும்?

ஹோசால வம்சத்தில் வந்த நான்காவது வல்லாள ராஜன் ஆண்டகாலம் அது. அவளும் அதே பரம்பரையைச் சேர்ந்தவள் தான். ராஜனின் சகோதரி அவள். அப்பொழுது செஞ்சி ராஜனாயிருந்த வல்லப உடையாரை மணந்தவள் அவள். செஞ்சி நாட்டரசன் இறந்து போனான். அவள் தன் இரு மைந்தருடன் பிறந்தவள். அவளது வாழ்வின் முடிவு அங்கு காத்திருந்ததை அவள் கண்டாளா!

அவளது செல்வர்கள் லக்கணாவும் வீரண்ணாவும் ஆணழகர்கள். அவளைக் கண்ட ‘ ஆண்களும் பெண்மையை அவாவும் தொளினர்’, கண் முன் பூத்த நிறை அழகைக் கண்டதும் அரசனின் மனைவி மனம் பேதலித்தது: மோகம் கொண்ட அந்த அந்தப்புர சுந்தரி அவர்கள் அன்பைப் பெற அணுகினாள். ஒவ்வொருவரிடமும் கெஞ்சியும் ஒருவரும் அதர்மத்தின் சுமையை ஏற்றுக் கொள்ள விரும்ப வில்லை. தனது ஆசை நிறைவேறாமல் போனது கண்ட அழகி பெண் புலியானாள்!

அரசனிடம் முறையிட்டாள். அவன் தங்கை மைந்தர் தன்னிடம் தகாத முறையில் நடந்தனர். தன்மானம் குலைத்தனர் எனப் பசப்பினாள். அவ் வஞ்சகியின் கபடத்தை உணரும் திறனற்ற வல்லாளன் சீறினான். தனது சாரை தாக்குண்டது கண்டெழுந்த நாகம் போல் வெகுண்டான். ‘முறை தவறிய, ஒழுக்கம் கெட்ட, துரோகிகள் லக்கண்ணா விரண்ணா இருவரையும் கழுத்தை இறுக்கிக் கொல்லுங்கள். அவ் விழிதகையோரின் பிணங்கள் இத்தலை நகரின் மணி வாசலை அலங்கரிக்கட்டும், மற்றோருக்கு எச்சரிக்கையாக’ முழங்கினான்.

மன்னவன் ஆணைக்கு மறு பேச்சு ஏது? கண்ணிமைப்பில் விண்ணேகியது ஆணழகர்களின் ஆவி. அணிநகரின் ஆசார வாசலை அழகு செய்தன அழகுச் சடலங்கள்!

விஷயம் அறிந்த அன்னை வேதனையுற்றாள். உண்மை உரைக்கலாம் என்று அண்ணனை அணுகினாள், அழுதாள். ஆனால் வல்லாளனின் ஆத்திரம், தணியவில்லை. ‘துரோகிகளின் தாய்க்கு என்ன பேச்சு வேண்டியிருக்கிறது? என் முகத்தில் விழியாதே. போ’ என்று சீறினான்.

அவள் ‘ லக்குவும் வீரனும் இப்படி செய்யவே மாட்டார்கள். அவர்கள் செய்யவுமில்லை. எல்லாம் அந்தச் சண்டாளி, சூர்ப்பனகை, உன் மனைவி செய்தது’ என்று ஓல மிட்டாள். அரசன் ஏன் கேட்கிறான்! மூர்க்கரின் கொள்கை முதலைப் பிடி அல்லவா.

அவள் கோபம் அவள் மேல் இடியாகப் பாய்ந்தது. அவளை வெளியே விரட்டினான். அவன் வெறி அத்துடன் தணிய வில்லை. அந்த ஊரில் யாரும் அவளுக்கு இருக்க இடமோ, உண்ண உணவோ, குடிக்க நீரோ கொடுக்கக் கூடாது. ராஜ உத்திரவை மீறினால் உயிருக்கு ஆபத்து எனப் பணித்தான் ஈரமற்ற அக் கொடுங்கோலன்.

அநியாயமாக வஞ்சிக்கப்பட்ட் அவள் வஞ்சனைக்குப் பலியான தன் மக்களின் உடலைக் காண நகர் வாசலை அடைந்தாள். அவற்றைக் கண்டதும் அவள் புழுங்கினாள். வெகுண்டாள். குமுறினாள், துயரத்தால் வெதும்பினாள். சந்திரமதி போல் புலம்பினவள் மறுகணம் கண்ணகியானாள். அவள் உள்ளத்தின் சூடு ‘அவனும் அவன் குலமும் விளங்குமா? அவன் நாசமாப் போக?’ என்ற சொற்களாகப் புகைந்தது.

அவள் எங்காவது போகலாம் எனக் கிளம்பினாள். பித்துப் பிடித்தவள் போல் தெருத் தெருவாக அலைந்தாள். மேலே பகலவனின் சூடு. கீழே, தெரு மணலின் சூடு காலைக் காய்ச்சியது. உள்ளத்தில் துயரச் சூடு, அத்துடன் பசி தீயாகக் கவ்வியது.

நா வரண்டது. யாராவது அன்னமிட மாட்டார்களா என ஏங்கினாள்.

திறந்திருந்த வீடுகளில் உள்ளவர்கள் இரங்கவில்லை. அடைத்திருந்த கதவுகளைத் தட்டினாள். கதவுகள் திறக்கப் பட்டன. எனினும், மனத்தின் தாழ் அகலவில்லை. அவள் நிலைக்குப் பச்சாதாபப் பட்டவர்களை ‘அரசன் ஆணை’ அச்சுறுத்தியது. அவன் தண்டனையை எண்ணி குலை நடுங்கினர் ஊரார்.

அவள் அரசனின் சகோதரி. ராஜாவின் மனைவி. ஆயினும் அநாதையாகி விட்டாள். சூட்டின் குழ்நிலையில் ஓர் எரிமலையாய்த் திரிந்த அவள் ‘எல்லோரும் நாசமாகட்டும். ஊரே சுடுகாடு ஆகட்டும்’ எனச் சுடு சொல் வீசி அனல் சூறையாய் சுழன்றாள்.

ஒரு தெருவின் மூலையை அடைந்ததும் ஒரு மரத்தடியில் சோர்ந்து போய் அமர்ந்து விட்டாள். அவள் அருகிருந்த வீட்டார் மனித இதயம் பெற்றவர்கள். தொழிலாளி குயவர்கள். அவர்கள் நிலைக்கு இரங்கினர். கஞ்சியும் நீரும் கொடுத்தனர். அவள் உள்ளம் குளிர்ந்தது. ‘நீங்கள் சௌக்கியமாயிருங்கள்!’ என்று நிறைந்த வயிருடன் வாழ்த்தினாள்.

‘இந்த நகரமும், ராஜாவும், அவன் குடியும் மண்ணாய் போகும். ஆனால், மண்ணை நம்பி வயிறு வளர்க்கும் உத்தமர்கள் வாழும் இந்தத் தெரு செழிப்பா யிருக்கட்டும்’ என்று நாவினால் சுட்டு – மண்ணை வாரி மும்முறை வீசிவிட்டு, தலைநகரிலிருந்து மறைந்தாள் அவள்.

அவள் உள்ளத் தீ அந் நகரையும், அரசையும் தீய்த்தது. அபலையின் சாபம் பலித்தது.

ஹோசால வம்சம் நாலாம் வல்லாள மன்னனுடன் இற்றது என்பது சரித்திரம். சாபத்தால் நாசமான தலைநகரில், அபலையின் வாக்கு பொய்க்காமல் குயவர் வீதி தப்பிப் பிழைத்து ஓங்கி வளர்கிறது என்பது பரம்பரைக் கதை.

(இந்தக் கதை, செஞ்சியின் கதையும் அதன் அரசர்கள் சரிவதையும்’ என்ற நூலில் கண்ட அடிக்குறிப்பின் அஸ்திவாரத்தில் எழுந்த கற்பனை.)

– கல்யாணி முதலிய கதைகள், முதற் பதிப்பு: 1944, சினிமா நிலையம் வெளியீடு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *