கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 24, 2024
பார்வையிட்டோர்: 139 
 
 

அன்று கோவிந்தசாமி வரவில்லை. அவர் எங்கள் தெருவுக்கு வந்த இந்த ஒரு வருடத்தில் அன்றுதான் அவர் முதன்முதலில் வரவில்லை. அவருடன் வேலைக்கு வரும் காக்கையன் வராமல் போனாலும், கோவிந்தசாமி வந்துவிடுவார். காலை நான் வாசலில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருக்கும் போது “அம்மா குப்பை” என்று ஒரு குரல் கேட்கும்போதே சொல்லிவிடலாம் மணி சரியாக ஏழு என்று.

சிலநாட்கள் நான் வாசலில் இல்லாமல் உள்ளே வேலையாக இருந்தால், “சார்” என்று சன்னமாக ஒரே ஒரு குரல் மட்டும் வரும். நான் வாசலை விட்டு வெளியே வருவதற்கு முன்பே குப்பையை என் கையிலிருந்து, “குடு சார்” என்று பிடிங்கிக் கொண்டு தன் வண்டியில் கொட்டிக்கொள்வார்.

எல்லோர் வீட்டின்முன்னின்றும் சப்தமாக ‘குப்பை’ என்று கத்தும் கோவிந்தசாமி, என் வீட்டின் முன் மட்டும் சன்னமான குரலில் பேசுவதற்கு காரணம் தெரியவில்லை. ஒருவருடத்திற்கு முன்பு அவரை முதன் முதலில் சந்தித்ததிலிருந்து அப்படிதான் பேசுகிறார். அன்று, தாத்தாவின் பழைய பெட் ஒன்றை எடுத்துச் செல்வதற்காக காக்கையனை வரச் சொல்லியிருந்தேன். தாத்தா இறந்ததிலிருந்து அதை தூக்கி கொல்லையில் போட்டு வைத்திருந்தோம். அன்றுதான் காக்கையனுடன் முதன்முதலில் வேலைக்கு வந்திருந்தார் கோவிந்தசாமி.

காக்கையன் கொல்லையில் நின்றுகொண்டு தள்ளாடியபடியே “அம்பதுரூபா கொடுங்க வாத்தியார் சார்” என்றான்.

“குடுக்காமா எங்க போறாங்க? கணக்கு பாக்குற வீடா இது?”அம்மா அடுப்படி உள்ளே இருந்து சிடுசிடுத்தாள். காக்கையனால் அந்த பெட்டை மடித்து தூக்க முடியவில்லை.

“அன்னையா” என்று கத்தினான். வாசலில் நின்றிருந்த கோவிந்தசாமி வேகமாக ஓடிவந்தார். பெட்டை சுருட்டி தோளில் வைத்துக் கொண்டு விறுவிறுவென வெளியே நடந்தார். காக்கையன் ஐம்பது ரூபாயில் மட்டும் குறியாக இருந்தான்.

“உடனே போய் குடிக்காத” என்று சொல்லிவிட்டு அம்மா அவன் கையில் ஐம்பது ரூபாயை கொடுத்தாள்.

“டீ தான் மா குடிக்கப் போறோம்” சொல்லிவிட்டு அவன் கோவிந்தசாமியை சுட்டிக் காட்டி, “இனிமே குமாரி வராது. இவருதான் என்கூட வருவாரு” என்று சொல்லிவிட்டு நகர்ந்தான். கோவிந்தசாமி வீட்டின் வாசலிலே அமைதியாக நின்றார். நான் அவரை அழைத்து, அவர் கையில் ஒரு அம்பது ரூபாயை கொடுத்தேன். சந்தோசமாக வாங்கிக் கொண்டு, “தாங்க்ஸ் சார்” என்றார். அன்றிலிருந்து தினமும் காலை என்னைப் பார்த்து, “குட்மார்னிங்” சொல்லிவிட்டு தான் நகர்வார்.

கோவிந்தசாமிக்கு வயது முப்பைந்தைந்திற்கு மேல் இருக்கும். எப்போதும் குடி போதையில் திரியும் காக்கையனிடமிருந்து மாறுபட்டு, தலையை படிய வாரி நெற்றியில் சந்தனப் பொட்டுடன் வலம் வருவார். பாக்கெட்டில் ஒரு சாய்பாபா படம் இருக்கும், கையில் க்ளவுஸ் போட்டுக் கொண்டு தான் குப்பைக்கூடையை வாங்குவார். அவர் சுத்தத்தில் கண்ணாக இருப்பதை பார்த்து, அம்மாவுக்கும் அவரைப் பிடித்து விட்டது. உணவு, பலகாரம் என்று எதையாவது அவருக்கு உண்ணக் கொடுப்பாள். முதன்முதலில் பலகாரம் கொடுத்த போது வாங்க தயங்கியவரிடம், “அட வாங்கிகோங்க தம்பி” என்று அம்மா அவர் கையில் உரிமையாக கவரை திணித்தாள்.

ஒருமுறை அம்மா முந்தையநாள் மீந்த உணவை நீட்ட, “இன்னைக்கு வியாழக் கிழமமா பாபாக்கு விரதம்” என்று கோவிந்தசாமி சொன்னார். அம்மா சந்தோசமாக உள்ளே ஓடிச்சென்று ஆரஞ் பழங்களை எடுத்து வந்து கொடுத்தாள்.

“பாத்தியா, எவ்ளோ பக்தி அந்த தம்பிக்கு. வியாழக் கிழமை விரதம் இருக்கானாம். நீயும் இருக்கியே” அம்மா என்னை கோவிந்தசாமியின் முன்வைத்தே இதுபோல எதாவது சொல்வாள். அவர் திருதிருவென விழித்துவிட்டு, “சார திட்டாதீங்கமா. அவருக்கு எவ்ளவோ வேலை இருக்கும்” என்பார்.

காக்கையனுக்கு எது கொடுத்தாலும் காசாக கொடுக்க வேண்டும். சிறிது நேரத்தில் அதை சோமபானமாக மாற்றிவிடுவான். அதனால் அம்மா காக்கையனிடம் எந்த உரையாடலிலும் ஈடுபடவில்லை. ஆனால் கோவிந்தசாமியை பார்த்தால், அம்மாவிற்கு பாசம் கலந்த மரியாதை வந்துவிடும். அவரை பற்றியும் அவர் குடும்பத்தைப் பற்றியும் விசாரிப்பாள்.

“என்ன தம்பி எப்போ கல்யாணம்?”என்பாள்.

“ஆவும் மா. முதல சாருக்கு பொண்ண பாருங்க” என்று சொல்லிவிட்டு நகர்வார். தினமும் என்னிடமும் அம்மாவுடனும் சில வார்த்தைகள் பேசாமல் அவர் நகர்ந்ததில்லை. வாரம் ஏழு நாளும் வந்துவிடுவார். உழைப்பாளி.

“கல்யாணத்துக்கு சொல்லணும் சொல்லிபுட்டேன்” அம்மா சொல்வாள்.

“நீங்களும் சாரும் தான் நடத்திக் கொடுக்கணும்” அதே சன்னமான குரலில் சொல்வார் கோவிந்தசாமி.

ஒருநாள் காலையில் வீட்டின் அருகே இருந்த ராவுத்தர் மெஸ்ஸிற்கு டீ குடிக்கச் சென்றிருந்தேன். கர்பமாக இருந்த அண்ணியை பார்க்க அம்மா ஊருக்கு சென்றுவிட்டாள். அம்மா இல்லாத நாட்களில் ராவுத்தர் மெஸ்ஸில் தான் டீ டிபன் எல்லாம். வாசலில் போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்து டீ குடித்துக் கொண்டிருந்த கோவிந்தசாமி என்னைப் பார்த்ததும் எழ எத்தனித்தார். நான் வேண்டாம் என்று கை அசைத்துவிட்டு, டீயை வாங்கி பருகியவரே பேப்பரில் மூழ்கினேன். ஒரு குரல் என் கவனத்தைக் கலைக்க நிமிரிந்து பார்த்தேன். அங்கே ஒரு திருநங்கை நின்று கொண்டிருந்தாள். அவள் என்னிடம் காசு கேட்க நான் பாக்கெட்டை தடவினேன். சில்லரை இல்லை.

உள்ளே அமர்ந்து வெள்ளிமலர் படித்துக் கொண்டிருந்த பரமசிவன் “ஊருக்குள்ளயே வந்துட்டீங்களா?” என்று கேலியாக கேட்டான். வேலை வெட்டிக்கு போகாமல் அடிதடி செய்துக் கொண்டிருப்பதே பரமசிவனின் வேலை. அந்த திருநங்கை அவனை முறைத்தாள்.

என்னிடம், “விரட்டிவிடு வாத்தியாரே. சில்லறை தேடிகிட்டு இருக்க” என்றான். வெறுங்கையுடன் நகர்ந்த திருநங்கையை அழைத்து கோவிந்தசாமி ஐந்து ரூபாயை கொடுத்தார்.

“நான் காசு கொடுக்காதனு சொன்ன நீ என்னடா தர்ம பிரபு” பரமசிவன் கோவிந்த சாமியை பார்த்து கத்தினான். கோவிந்தசாமி எதுவும் பேசவில்லை.

“பேசிட்டே இருக்கேன்…” என்றவரே எழுந்த பரமசிவன், நாங்கள் சுதாரிப்பதற்குள் கோவிந்தசாமியின் கன்னத்தில் அறைந்தான்.

“உழச்சு சாப்டாம ஆடுறாளுங்க” என்றவாறே பரமசிவன் நகர்ந்தான். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. பரமசிவன் மீது கோபம் வந்தது. அனால் அவனை எதிர்க்கும் அளவிற்கு எனக்கு தைரியமோ, பலமோ இல்லை. கோவிந்த சாமியின் கண்கள் கலங்கியிருந்தன, “அவங்களும் நம்பளமதிரி தான சார்?” என்று என்னைப் பார்த்துக் கேட்டார்.

“அந்த தடிப்பையன் கிடக்கான். யாரும் கிடைக்கலன்னு உன்ன ஏறுறான்” ராவுத்தர் கோவிந்தசாமியை ஆசுவாசப் படுத்துவதற்காக சொன்னார்.

அதன்பின் கோவிந்தசாமி பரமசிவன் இருக்கும் பக்கமே திரும்புவதில்லை. நான் மறுநாள் அவரை பார்த்து ‘சாரி’ கேட்டேன். “அவன் பொறுக்கி சார். அடிச்சான். அதெல்லாம் நான் மறந்துட்டேன். நீங்க என்ன பண்ணுவீங்க பாவம்” என்றார். எங்கள் நட்பிலோ பேச்சிலோ எந்த மாற்றமும் இல்லாமல் தான் நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன.

இன்று கோவிந்தசாமி ஏன் வரவில்லை என்று தெரியவில்லை? உடம்பு ஏதும் சரியில்லாமல் போய் விட்டதா? காக்கையனைக் கேட்டேன். காக்கையன் தனக்கு எதுவும் தெரியாது என்றான்.

மறுநாளும், அதற்கு அடுத்த நாளும் கோவிந்தசாமி வரவில்லை.

“சொல்லிக்காம கொள்ளாம வேலையை விட்டு போய்டான் சார்” காக்கையன் சொன்னான். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. எங்களிடம் ஏன் சொல்லவில்லை. அம்மா ரொம்ப வருத்தப்பட்டாள். அண்ணனுக்கு குழந்தை பிறந்ததால், நாங்கள் அந்த கொண்டாடத்தில் மூழ்கிவிட்டோம். கோவிந்தசாமிக்கு பதில் காக்கையனுடன் வேறொரு சிறுவன் வரத் தொடங்கிவிட்டான். அவனும் போக, இன்னும் இரண்டு பேர் மாறினார்கள். அவரவர் வேலையுண்டு என்று நாட்கள் நகர்ந்தன. காக்கையன் மட்டும் வழக்கம் போல போதையில் வந்து போனான்.

பாப்பாவின் முதல் பிறந்தநாளை எங்கள் வீட்டில் கொண்டாட வேண்டுமென்று அண்ணனும் அண்ணியும் வந்திருந்தார்கள். அண்ணிக்கு விரால் மீன்தான் பிடிக்கும், அதுவும் ஆற்று மீன் தான் பிடிக்கும். அம்மா தேடிப் பிடித்து வாங்கி வர சொன்னாள். நானும் வண்டியை எடுத்துக் கொண்டு இருபது கிலோமீட்டர் செல்ல வேண்டியதாக இருந்தது.

“அதெல்லாம் கட்டுபடியாகும் குடு சாமி” பேரம் பேசிக்கொண்டிருந்த அந்த குரலை நான் எங்கேயோ கேட்டிருக்கிறேன். திரும்பி பார்த்தால், கோவிந்தசாமி. என்னை பார்த்ததும் அவர் முகம் திகைத்தது.

“என்ன கோவிந்தசாமி சவுக்கியமா?” என்றேன்

“நல்ல இருக்கேன் சார்” என்றார்.

நான் “எங்க போனீங்க. அம்மாகிட்ட கூட சொல்லல?” என்றேன். அவர் தயங்கினார். அப்போது அங்கே வந்த அந்த திருநங்கை கோவிந்தசாமியிடம் ‘போலாமா மாமா?” என்றாள். நான் அன்று டீக்கடையில் பார்த்த அதே திருநங்கை. எனக்கு புரிந்து விட்டது.

“அன்னைக்கு அந்த தடியன் அடிச்சதும் கஷ்டமா இருந்துச்சு. சாயங்கலாம் இவர பாத்து பேசினேன். அப்டியே லவ் வந்திருச்சு” அந்த திருநங்கை சொன்னாள். கோவிந்தசாமி வெட்கப்பட்டார்.

“ராதா நான் சொன்னேன்ல சாரு, இவருதான்” என்று என்னை அறிமுகம் செய்துவைத்தார்.

“என்கிட்ட இருந்து உங்க லவ்வ மறச்சிருக்கீங்களா கோவிந்த சாமி!” என்று கேட்டு அவர் தோளை தட்டினேன். சிரித்தார்.

“திடிர்னு ஒரு நாள் கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணுனோம். அவங்க ஊர் பக்கம் கோவில்ல போய் பண்ணிக்கிட்டோம்” கோவிந்தசாமி சொன்னார். “கல்யாணத்துக்கு எங்கள ஏன் கூப்டல?” கோவமாக கேட்பது போல் பாசாங்கு செய்தேன்.

“அது அது” என்று இழுத்தார். நான் சிரித்துவிட்டு, “சொல்லிட்டாவது வந்திருக்கலாம்ல. அம்மா சந்தோசப் பட்டிருப்பாங்க” என்றேன்

“சொல்லிகிட்டே இருப்பார் சார்” ராதா பேசினாள். “வாத்தியார் சாரும் அவங்க அம்மாவும் பாசமா இருப்பாங்க. சொல்லிக்காம வந்துட்டேனு”.

“அந்த ஏரியா வந்தா உங்கள அம்மாவலாம் பாக்கணும்… எல்லாரும் கேலி பேசுவாங்க அதான் வேலையை விட்டுடேன் சார்” என்றார்

“உங்க மனசுக்கு புடிச்ச ஒரு விசயத்த பண்ணிருக்கீங்க? இதுல என்ன வெட்கம் அவமானம்! அன்னைக்கு உங்கள அடிச்சப்ப பாத்துகிட்டு இருந்த நான் தான் அவமானப் படனும்” என்றேன். அமைதியாக நின்றார்.

“இப்ப எங்க வேலை பண்றீங்க?”

“வாட்ச்மேன் வேலைக்கு போயிட்டு இருக்கார் சார்” என்றாள் ராதா.

“முன்னமாதிரி இவ யார்ட்டையும் கை ஏந்துறது இல்ல சார். வீட்டயும் என்னையும் நல்லா பாத்துக்குறா. நல்லா சமைப்பா சார்.” கோவிந்தசாமி பெருமையாக சொன்னார்.

“ஏன் நீங்களும் வேலைக்கு போலாமே?” நான் ராதாவை பார்த்துக் கேட்டேன்.

“யார் சார் வேலைக்கொடுப்பா?” ராதா வினவினாள்.

ராவுத்தரிடம் வேலை பார்த்த மாஸ்டர் தனியாக கடை போட போய்விட்டதாக ராவுத்தர் சொன்னது நினைவுக்கு வந்தது. அவரிடம் பேசினேன். அவர் சந்தோசமாக ராதாவை வேலைக்கு வைத்துக் கொண்டார். முதல் நாள் நான் கடைக்கு வந்து டிபன் சாப்பிட வேண்டுமென்று ராதா ஆசைப்பட்டாள். அவள் செய்த பொங்கலும் வடையும் சுவையாக இருந்தது. நான் உண்டுகொண்டிருக்கும்போது, பரமசிவன் வந்தான். நான் உள்ளே அமர்ந்திருப்பதைப் பார்த்தான். ராதா உள்ளே சட்னி அறைத்துக் கொண்டிருப்பதையும் பார்த்துவிட்டு என்னை முறைத்தான். மேஜையில் வைக்கப்பட்டிருந்த தட்டிலிருந்து ஒரு வடையை எடுத்து தின்றுகொண்டு என்னை முறைத்தவாறே நின்றான். நான் அவனை சட்டை செய்யாமல்,

“பொங்கல் அருமையா இருக்கு ராதா” என்றேன். அவள் சந்தோசப் பட்டாள். வழக்கமாக கடைக்கு சாப்பிட வரும் பேச்சுலர்கள் இரண்டு பேர் என் அருகில் வந்து அமர்ந்தனர்.

“பொங்கல்” என்றனர். பொங்கல் வருவதற்குள், உள்ளே ராதா சமைத்துக் கொண்டிருப்பதை பார்த்ததும் அவர்களின் முகம் எப்படியோ மாறியது. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அங்கிருந்து எழுந்து ராவுத்தரிடம்., “இனிமே வெளிய சப்ப்ட்டுக்குறோம்” என்றனர். ராவுத்தர் பேசுவதற்குள் அவர்கள் கடையை விட்டு வெளியேறினர்,

அவர்களின் வழியை மறைத்துக்கொண்டு நின்ற பரமசிவன்,. “ஏன் சாணிய பாத்தா மாதிரி போற. அவ உழைக்குறா. உங்களுக்கு எங்க எரியுது. இது அவ சுட்ட வட.. நல்லாத்தான் இருக்கு. நேத்து வரைக்கும் அந்த சீக்காளி மாஸ்டர் செஞ்ச வடையை ரசிச்சி தின்னீங்க! இவ சமையலுக்கு என்ன குறைச்சல்!” என்றான்.

அவர்கள் என்ன சொல்வது என்று விழித்தனர். இருவரின் தோளின் மீது தன் கைகளை வைத்து அழுத்தியாவாறே, “எப்பவும் இங்கதான சாப்பிடுவீங்க! போய் சாப்டு போ” என்று அவர்களை உள்ளே தள்ளினான். அவர்கள் என்னருகே வந்து அமர்ந்தனர். நான் பரமசிவனைப் பார்த்து புன்னகை செய்தேன். அவன் என்னைக் கண்டுகொள்ளாமல், எதுவும் நடக்காதது போல் அங்கிருந்து நகர்ந்தான். ராதா சூடாக வடையை சுட்டெடுத்துக் கொண்டிருந்தாள்.

– அக்டோபர் 2018

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *