தேர்தல் பிரச்சாரம் ஆரம்பமாகி விட்டிருந்தது…. எங்கு பார்த்தாலும் பலவித கட்சிகளின் கொடிகள்…. வண்ணங்கள்…. பிரச்சார பொன்மொழிகள்…. வாக்குறுதிகள்….
ஒரு கட்சியின் தலைவர் (பெயர், மற்றும் ஆணா பெண்ணா என்பதை அவரவர் கற்பனைக்கு!!) ஊர் ஊராகச் சென்று பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்.
தலைவர் என்பதால் அவருக்கு பலத்த பாதுகாப்பு இருந்தது…. எங்கு சென்றாலும் முன்னும் பின்னும் நான்கு படை வீரர்கள், இயந்திரத் துப்பாக்கியுடன் அவரை சூழ்ந்து காவல் காத்தனர்….. அவர் நடந்தாலும்…. உட்கார்ந்தாலும்…. பொதுவாக ஒருத்தருக்கு ஒரு நிழல் தான் என்றால்…. இந்த தலைவருக்கு மட்டும் நான்கைந்து நிழல்களாக பாதுகாவலர்கள்!!
அவ்வளவு பலத்த காவல் இருந்தும்…. அன்று…. காரைவிட்டு இறங்கி…. கூட்டத்தைப் பார்த்து…… கை கூப்பியவாறு மேடையை நோக்கி அவர் நடந்து கொண்டிருக்கையில்…,. அந்தக் கூட்டத்திலிருந்து….. எங்கிருந்தோ பறந்து வந்து…. அவர் முகத்தில் அப்பியது அந்த ‘அசிங்கம்’…
‘என்னது அது?’ என்று கையில் துடைத்து பார்த்தவர் ‘உவேக்க்க்’ என்று வயிறுமுட்ட தின்ற பிரியாணியை அப்படியே வாந்தி எடுத்தார்.
அதைக்கண்ட கூட்டத்தினர்…. ஆதரவாளர்கள்…’த்ச்சூ….த்ச்சூ’ என்று வருத்தம் காட்டினர்…. எதிர்க்கட்சி மக்களோ ‘ஆஹா…. ஓஹோ!’ என்று கைகொட்டி சிரித்தனர்.
அன்றைய சம்பவம் கேலிக்கூத்தாக தினசரியில் வெளிவர…. கோபமும் வெட்கமும் ஒன்று சேர்ந்து தலைவரை தாக்கியது.
அடுத்த நாள்..
“ஐயா… ஐயா…. இன்னிக்கி பிரச்சாரம் போக..…..” பி.ஏ ஆரம்பிக்க….
“பிரச்சாரம் இல்லை….. மண்ணும் இல்லை…. இவ்வளவு பேர் இருந்து என்னய்யா மயிரு புடுங்கினீங்க?… அதை தடுக்க முடிந்ததா??…. என்னை தலைகுனிய வைத்த அந்த இனத்தையே ஒழித்துக் கட்டணும்….. அப்பத்தான் இனிமே என்னால நிம்மதியா வெளியே வரமுடியும்….. போங்கய்யா….ஏதாச்சும் ஏற்பாடு பண்ணுங்க” தலைவர் சீறினார்.
மறுநாளே தலைவர் முன் நான்கு பேரை கொண்டு வந்து நிறுத்தினார் அவருடைய பி.ஏ.
அந்த நால்வரிடமும் ஒரு வித்தியாசம்….. அவர்கள் உடையில்…. அவர்கள் வைத்திருந்த துப்பாக்கியில்…..
“யார் இவங்க?” தலைவர் கடுகடுத்தார்.
“நேரிலேயே பாருங்க இவங்க சாமர்த்தியத்தை” என்று கூறிய பி.ஏ அனைவரையும் தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார்.
சின்னச்சின்ன பிளாஸ்டிக் தட்டுகளை வானத்தில் வீசி எறிய…. அவர்களை அந்த நால்வரும் குறி தவறாமல் சைலன்ஸர் பொருத்தப்பட்ட அந்த வினோத துப்பாக்கியால் ‘வ்ஸ்க்க்…ப்ஸ்க்க்’ என சுட்டு வீழ்த்தினர்.
“இயந்திரத் துப்பாக்கியால் கண்மண் தெரியாமல் இஷ்டத்துக்கு சுடலாம்…. ஆனால் இவங்க…. அமைதியாக…. வேண்டியதை மட்டும்…. அந்த இனத்தை…. உங்களை தலைகுனிய வைத்த அந்த எதிரிகளை மட்டும்…. பதட்டம் ஏற்படாமல்…. சுட்டுத் தள்ளுவார்கள்! ….இப்பவே கிளம்புங்க…. நீங்க இன்னும் போக வேண்டிய இடம்…. பிரச்சாரம் செய்ய வேண்டிய இடங்கள் நிறைய இருக்கு” பி.ஏ பேச…..
இப்பொழுது அந்த நால்வரும் தலைவர் போக வேண்டிய இடத்திற்கு முதலில் சென்று காவல் காத்தனர்.
ஊர் வந்ததும் பிரச்சார மேடை அருகே (ஏன் வீணாக நடந்து… வம்பில் மாட்ட வேண்டும்!?) காரிலிருந்து இறங்கினார் தலைவர்….
அந்த நால்வரும் இப்போது அவரை சூழ்ந்து கொண்டனர்…. சுற்றும் முற்றும் கூட்டத்தையும் வானத்தையும் பார்த்து காவல் காத்தனர்….
திடீரென்று ஒரு காக்கை எங்கிருந்தோ பறந்து வர…. அதை குறி தவறாமல் நால்வரும் ‘விஷ்க்க்… ப்ஷ்க்க்’ என்று சுட…. அந்த காக்கை உயிர் துறந்து பொத் என்று கீழே விழுந்தது!
அதை பார்த்த தலைவர் “சபாஷ்…. சபாஷ்… ஜோர்….இனி ஒன்று கூட விடாமல்…. அந்த காக்கை இனத்தையே ஒழித்துக் கட்டுங்க!” என்று உற்சாகமாக மெச்சினார்.
கூட்டத்தில் பலர் “அடக் கடவுளே!” என்றனர்.