(1982 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
வைகாசி மாதத்துக்குரிய இளம் வெப்பமான காற்று.
ஒரு மாசப் பயிர் பசேலென்று எதிரே பரவியிருந்தது. காற்றில் மெலிதாய் அசைந்தது. வேலாயுதனுக்குப் பயிரைப் பார்க்கப் பார்க்கச் சந்தோஷமும், அதே நேரம் ஆதங்கமும் ஒரு சேர எழுந்தது.
‘என்ன சோக்கான வேளாண்மை….. இதை எப்பிடிக் கரையேத்தப் போறனே …. தண்ணியை ஒழுங்காகத் தருவான்களோ, அவங்களோட அடிபட்டு இடிபட்டு தண்ணி பாய்ச்சிப் பயிரை எப்பிடி ஒப்பேற்றப் போறன்.’
துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு வரம்பில் நடந்தான்.
‘மழை பெய்கிற சிலமனையும் காணேலை. வருஷ மழைக்குப் பிறகு இனிக் காத்து கிளம்பியிட்டுது. மழைவராது. மனிசருக்குத்தான் நாங்கள் நாயினும் கேவலமாப் போனம் அந்தக் கடவுளாவது மனமிரங்கி மழை தரக்கூடாதா?’
வேலாயுதத்தின் மூன்று ஏக்கர் காணிக்கு அந்தப் பக்கம் சிதம்பரத்தின் காணி. பத்து ஏக்கர் வயல் செய்கிறார். வாய்க்காலில் ஒவ்வொரு தடவையும் தண்ணீர் வரும் போதெல்லாம் இவர் அதிகம் எடுப்பதால் வேலாயுதன் போல கொஞ்சம் வயல் செய்பவர்களுக்கு தண்ணீர் வருவதில்லை. வர சிதம்பரம் விடுவதில்லை.
ஓவசீயர்மார் வேலாயுதம் போன்றோரை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. ‘ம்….. ஓவசியர் மாருக்கு ஐஞ்சைப் பத்தைக் குடுத்தால் எங்களையும் கவனிப்பினம். குடுக்க எங்களுக்கு என்ன வழி’ பெருமூச்சு விட்டுக் கொண்டே நடந்தான். தெருவில் ஏறிப் பாலத்துக் கரையில் வந்தபோது சிலர் கூட்டமாய் நிற்பது தெரிந்தது.’
‘எஞ்சினியர் மாறிப் போறாராம். நாளையிலயிருந்து புது எஞ்சினியராம். ஓவசியர் சொன்னவர்.’
‘இந்த எஞ்சினியர் போய்த் துலைஞ்சால் நல்லதுதானே, மிளகாய், உளுந்து, நெல்லு எண்டு கொண்டு போய்க் குடுக்கிறவையின்ரை வயலுக்கு ஒழுங்காய்த் தண்ணி வர ஏற்பாடு செய்வார். குடுக்க வழியில்லாத எங்கடை வயலுகள் எரிஞ்சு காய வேண்டியது தானே. புதிசாய் வாறவரும் எப்படியோ….’
வேலாயுதம் இந்த உரையாடல்களைக் கேட்டுக் கொஞ்சம் தயங்கி நின்று விட்டு மீண்டும் நடந்தான்.
ஆர் வந்தால் என்ன? நல்லவங்களாய் வாறவைகளையும் இங்கை உள்ளவையள் பழுதாக்கிப் போடுவினம். நானும் இருபது வருஷமாய் இங்கை வயல் செய்யிறன். எவைதான் நேர்மையாய் எங்களைப் போன்ற ஆட்களுக்கு உதவுகினம். எல்லாம் செல்வாக்குத்தான்.’
வீடு அண்மித்து விட புதிதாய் வேறு கவலைகள் கிளம்பின. பூமணியின் வெறும் கழுத்து. வெறும் காதுகளைச் சந்திக்கும் போது மனதை நெருடுகின்ற இயலாமையின் அழுத்தங்கள், அவள் பாவி என்ன சுகத்தைக் கண்டாள். வரிசையாய் ஆறைப் பெத்தாள். அதுகளை வளர்க்க முடியேலை. இண்டைக்கு அரிசி இருக்கோ, தூள் இருக்கோ, புளி இருக்கோ என்ற கேள்விகள் தினமும் எழ…..
என்ன அவல வாழ்க்கை இது. வயல் செய்கிற பெயர் தான்…. ஒரு பிடி நெல் வீட்டில் இருக்காத ஏழ்மை.
வேலாயுதம் வீட்டுக்கு வந்த போது ஓலையால் வேய்ந்திருந்த விறாந்தை வளையில் புகை பிடித்திருந்த லாம்பு அழுது வடிந்து கொண்டிருந்தது.
சிமினியைத் துடைச்சுப் போட்டு லாம்பைக் கொழுத்தினால் என்ன. எருமை மாடுகள் ஏதோ ஆவேசத்தை எதிலேயோ தீர்த்துக் கொள்ள முயலும் ஆவேசம்.
இதற்குக் கொஞ்சமும் குறையாமல் அடுக்களைக்குள்ளிருந்து வெடிப்பு வந்தது.
‘அந்தச் சனியன் தேவி எங்கை. அதுக்கு முதுகும் வளையாது, கையும் வணங்காது. எந்த வேலையைத்தான் செய்யிறாள். லாம்பு துடைக்க அலுப்பு. கூப்பிடுங்கோ அவளை’
‘நான் ஒண்டும் வேலை இல்லாமல் இருக்கேல்லை. வீடு கூட்ட வேணும், முத்தம் கூட்ட வேணும், ஆடு மாடு பார்க்க வேணும் எதைச் செய்யிறது. எனக்கென்ன பத்துக் கையே?’
‘எப்ப பார்த்தாலும் திருப்பிக் கதைக்கத்தான் தெரியும். வாய்க்கு ஒரு நாளைக்கு சூடு போடுறன் பார் பூமணி சத்தம் போட்டாள். அருகேயிருந்து ஓயாமல் சிணுங்கிக் கொண்டிருந்த குழந்தையைத் தூக்கி ‘ணங்’ என்று தள்ளி இருத்த அது வீரென்று அலற – இந்த லாம்புப் பிரச்சனையை ஏன் தொடக்கினோம் என்று ஆகிவிட்டது வேலாயுதனுக்கு. லாம்பு புகை பிடித்துக் கிடந்தால் தான் என்ன?
கிணற்றடிக்குப் போய் கைகள் கழுவிக் கொண்டு வந்த போது பன்னிரண்டு வயசு தேவி கண்ணைக் கசக்கிக் கொண்டே தேத்தண்ணியை நீட்டினாள். ‘நீ அழாதை மோனை கொம்மாவுக்கு வாயும் கையும் நீளம்’ தேத்தண்ணியைக் குடித்துவிட்டுத் திண்ணையில் போய் அமர்ந்தான்.
‘ரவி வந்திட்டானே’
‘இல்லை ஐயா…’
‘அந்தப் பாலத்தடியில கனக்கப் பேர் நிண்டவை. சந்திரன், பாலேந்திரன் நிண்டபடியால் இவனும் அங்கைதான் நிற்பான். அதுவும் வளர்ற பிள்ளை. புத்தகம் தூக்க வேண்டிய வயதில புல்லுப் புடுங்கிக் கூலி வேலை செய்து உழைக்குது. ஆன சாப்பாடுமில்லை. அளவுக்கு மீறி வளர்ந்து கண்ணுக்கை தான் குத்துது. அவன் ஆட்பட்டிட்டான் எண்டால் எனக்கென்ன குறை’
பூமணி வெளியில் வந்து எதிர்த் திண்ணையில் அமர்ந்தாள்.
‘தம்பி சொன்னவன், நாளைக்கு தண்ணிப் பகுதிக்குப் புது இஞ்சினியர் வாறாராம்’
‘ஆர் வந்தால் என்ன எங்களுக்கு எல்லாம் ஒண்டுதானே.’
இந்தக் கருத்து இரண்டாம் நாள் மாறிய போது ஒருவர் விடாமல் அதிசயித்தனர். ஜீப்பில் புதிய இஞ்சினியர் ஒவ்வொரு இடமாகப் பார்வையிட்டு அன்று மாலை அவர்கள் பகுதிக்கு வந்தார்.
வேப்பமரத்தின் கீழே கூடியிருந்த சிறிய கூட்டத்திடம் அவர் ஆதரவாய்ப்பேசினார்.
‘இனிமேல் உங்கடை குறையெல்லாம் இங்கு ஒழுங்காய், நேர்மையான முறையில் தண்ணி கிடைக்கும். வடிவாய் வயல் செய்யுங்கோ’
அந்த ஆதரவை உலக மகா அதிசயத்தில் ஒன்றாக அந்தக் கூட்டம் வியப்புத் தாளாமல் நின்று பார்த்தது. பக்கத்தில் ஓவசியருடன் நின்ற சிதம்பரத்தின் முகம் கொஞ்சம் வாடிப் போனதை ரவி சந்திரனின் தோளில் தட்டிக் காட்டினான்.
‘இவர் பாடு இனிக் கொஞ்சம் கஷ்டம்தான். என்ன செய்வார் பாப்பம். இப்பிடிப் பட்ட இஞ்சினியர்மார் தான் உவைக்கு நல்ல பாடம் படிப்பிப்பினம்’
வேலாயதனுக்கு இப்போதெல்லாம் மனதில் நிறைய நம்பிக்கை. தண்ணி வாய்க்காலில் ஒழுங்காய் வந்தால் நெல்லு நல்லாய் விளையும். தோடு அடைவு எடுக்கலாம். வட்டிக் கடன்கள் அடைக்கலாம். பூமணிக்கு ஒரு சீலை எடுக்க வேணும். கிழிசலைக் கட்டுறாள் பாவி. தேவிப் பெட்டைக்கு பாவாடை சட்டை வாங்க வேணும். பெரிசாகிற வயசாச்சு. சின்னப் பெடியனுக்கும் உடுப்பு வாங்க வேணும். ஒரு வாட்டர்பம் எடுத்தால் மேட்டுக் காணியில் கொஞ்ச மிளகாய் நடலாம். ஏதோ நாலு விதத்தாலயும் உழைச்சால் தானே ஏதாவது மிஞ்சும்.
ஒவ்வொரு நாள் நகர்வும் அவனுக்கு நிளைய நம்பிக்கையைத் தந்தது. அந்த நடை வாய்க்காலில் ஒழுங்காய் தண்ணி வந்து வரிசையாய் வயல்களுக்குப் பாய்ந்தது.
சிதம்பரத்தாருக்குத் தான் மூலை வயல் இரண்டுக்கும் தண்ணீர் விட முடியாமல் போய்விட்டது.
‘வேலாயுதன், ஒரு நாள் பொறு. நான் தண்ணியைப் பாய்ச்சிட்டு விடுறன்’ என்று தன்மையாய்க் கேட்டபோது மறுக்க முடியாமல் சம்மதித்து விட்டு வீட்டுக்கு வந்து ரவியிடம் ஏச்சு வாங்கினான்.
‘ஏன் ஐயா ஓமெண்டனீங்கள். எங்கடை வயல் காஞ்சு செத்தாலும் தன்ரை பங்கில ஒரு சொட்டுத் தண்ணி தருவரே அவர். நான் போய்க் கடவானைத் திறக்கப் போறன்’
‘வேண்டாம் விடு. ஒரு மனிசன் தன்மையாய் வந்து உதவி கேட்டால் செய்யிரேலையே’
‘இது உதவியே. அவன் செய்வெனாமே. அவரை ஆர் வயலைக் கூட விதைக்கச் சொன்னது. உள்ள பங்குக்கு விதைக்கிறது’
‘விடு விடு போகட்டும். நாளைக்கு காலமை எங்களுக்கு விடுறானாம்.’
அடுத்த வாரம் இஞ்சினியர் அந்தப் பகுதிக்கு ஜீப்பில் வந்து இறங்கிச் சுற்றிப் பார்வையிட்டார்.
‘தண்ணி எல்லாம் ஒழுங்காய் வருகுது ஐயா. இப்பதான் கஷ்டமில்லாமல் எங்களுடைய வயலுக்கும் தண்ணி கிடைக்குது’ வேலாயுதம் முந்திக் கொண்டு சொன்னான்.
‘அப்பிடியே… அதுதான் நானும் விரும்பிறன். முந்தி இருந்தவர் செய்த அநியாயங்களையும் வாங்கின லஞ்சங்களைப் பற்றியும் நான் வந்த அண்டைக்கே எனக்கு வந்து சொல்லிப் போட்டினம். இங்கை இருக்கிற பெடியன்தான். ரவி எண்டு அவனோட இன்னும் நாலைஞ்சு பேர் வந்து என்னோட கதைச்சவை.’
‘ரவியோ…..! அது என்ரை மோன்தான் ஐயா. ஆள் வலு விண்ணன். படிக்கவைக்க வசதியில்லாமல் போயிட்டுது. மற்றப் படி காரியத்தில சூரன்’. வேலாயுதனுக்குப் பெருமிதமும் மகிழ்ச்சியும் தாங்க முடியாமல் போய் விட்டது.
அன்று இரவு அவர்களுக்கு தண்ணீர் பாய்ந்து முடியுமுன்னமே ஓவசியர் வந்து சிதம்பரத்தின் காணிக்கு தண்ணீரைத் திருப்பி விட்டார்.
‘எனக்கு இன்னம் பாயேலை’ வேலாயுதன் மண்வெட்டியுடன் அவசரமாய் வாய்க்காலுக்கு வந்தான்.
‘இனி உன்ரை வரிசை முடிந்தது. இனிப் பாய்ச்சேலாது’
‘இதென்ன அநியாயம். நாலு வயல் தண்ணியில நனையவுமில்லை.’ வேலாயுதன் மன்றாடிக் கேட்டும், ரவி வந்து ஓவசியரோடு சண்டை போட்டும் பிரயோசனம் இல்லை.
‘எங்களுக்குத் தண்ணி பாயாமல் எப்பிடி வாய்க்காலைத் திருப்பலாம்’
‘அதைப்பற்றி எனக்குத் தெரியாது. உங்கடை நேரம் முடிஞ்சுது’
‘சரி நான் எஞ்சினியரிட்டப் போறன்’
‘போவன்’
‘அவரையும் உம்மை மாதிரி நினைச்சீரே……
அடுத்த நாள் இஞ்சினியர் வந்து ஓவசியரிடமும் விளக்கம் கேட்டு, சிதம்பரத்துக்குப் பாய்ச்சிய கூடுதல் தண்ணீருக்கு அவரிடம் விளக்கம் கேட்டபோது, அதிகமாய் விதைப்பதை மறைக்க முடியாமல் போய்விட்டது.
எல்லோருக்கும் முன்னால் வைத்து சிதம்பரத்தை அவர் எச்சரித்து விட்டுப் போனது சிதம்பரத்துக்கு அவமானத்தையும் ஆத்திரத்தையும் கொடுத்தது.இஞ்சினியர் போன பிறகு வாய்க்கு வந்தபடி வேலாயுதன் மீது எரிந்து விழுந்தார்.
‘இவ்வளவு காலமும் நான் வயல் செய்யிறன், ஒரு தம்பி தட்டிக் கேட்கேலை. வந்து ஒரு மாதமாகேலை, என்னைக் கேள்வி கேட்டிட்டான். எனக்கு மினிஸ்றியில ஆள் இருக்குது. உவரை மாத்தி அனுப்பிறன் பார்?’
சிதம்பரத்தின் ஆவேசத்தின் அளவு கோல் அடுத்த வாரம் தெரிந்தது. அன்று மாலை ரவி வந்து சோகமாய்ச் சொன்னான்,
‘எங்கட எஞ்சினியருக்கு மாற்றல் வந்திட்டுதாம், முந்தி இருந்தவன்தான். திரும்பவும் வரப்போறானாம். பெரிய மனுசன் செய்து காட்டிப் போட்டான்’
‘நாசமாய்ப் போச்சு. இனி நாங்கள் வயல் செய்த மாதிரித் தான்’ மனதில் கொஞ்சம் கொஞ்சமாய் சேர்ந்த நம்பிக்கைகள் ஆட்டம் காணத் தொடங்கின.
தளதளப்பாய் கரும் பச்சையுடன் வளர்ந்து நிற்கும் பயிரை ஏக்கத்துடன் பார்த்தான். ரவி தன் மணிக்கூட்டை விற்றுப் போட்ட பசளையை ஜீரணித்து என்னமாய் நிற்கிறது. எல்லாமே வீணாகி விடுமோ என்று மனம் பதைபதைத்தது.
அடுத்த முறை தண்ணி அவனது வாய்க்காலுக்கு வரவில்லை. இஞ்சினியரையும் அந்தப் பக்கம் காணவில்லை. சிதம்பரத்தின் காணிக்கு தண்ணீர் வந்திருந்தது.
‘ஒரு கடவான் தண்ணி தாருங்கோ, என்ரை பயிரெல்லாம் எரியுது’ என்று சிதம்பரத்திடம் கெஞ்சலாகக் கேட்டுப் பார்த்தான்.
‘தண்ணியை உனக்குத் தந்திட்டு என்ரை வயலை எரிய விடுறதே’ வேலாயுதம் ஓவசியரிடம் ஓடினான்.
‘தண்ணி வேணும் ஐயா. வயல் பாளம் பாளமாய் காய்ஞ்சு கிடக்கு’
‘அண்டைக்குப் பெரிய எழுப்பம் விட்டாய். உன்ரை மோன் இஞ்சினியரைக் கூட்டி வந்து என்னை விளங்கிப் போட்டான். இப்ப தண்ணி நீ நினைச்ச நேரம் தர ஏலாது
‘எப்ப தண்ணி வாய்க்காலில் வரும்?’
‘குளம் பூட்டிப் போட்டாங்கள். இனி அடுத்த கிழமைதான் தண்ணி வரும்’
அதுவரை பயிர் தாக்குப் பிடிக்குமா? குடலையும் கதிருமாய் மஞ்சளாய் வயல் காய்ந்திருந்தது. இப்ப தண்ணி விட்டால் தான் ஏதோ நெல்லெண்டு வரும்.
‘ஓவசியர் என்னவாம் தண்ணி தருவினமாமோ….?’ ரவி கேட்டான்.
‘அடுத்த கிழமையாம் குளம் திறக்கினம். அதுவரை பயிர் தாங்குமே…. கடவுளே!’
‘நான் போய்க் கேட்டு வாறன்’
‘ஐயோ வேண்டாம் தம்பி. நீ நட வீட்டுக்கு. அவனோட போய் வாயைக் காட்டாதை
‘இல்லை ஐயா கேட்கத்தான் வேணும்’
‘சொல்லுறதைக் கேட்கப் போறியா இல்லையா. போ’ வீட்ட சீறி விழுந்த தகப்பனிடம் மேலே பேசாமல் முணுமுணுத்துக் கொண்டே போனான் ரவி.
இரவு யோசித்துக் கொண்டிருந்த வேலாயுதனிடம் வந்தாள் பூமணி. ‘வீட்டில ஒரு பிடி அரிசியும் இல்லை. பாக்கியக்காவிட்ட அரிசி வெட்டித்தாறன் எண்டு சொல்லி ஒரு புசல் நெல்லுக் கேட்டனான் தந்தவ’
சட்டென்று நிமிர்ந்து பூமணியைப் பார்த்தான்.
‘நெல்லு எங்கை?’ வேலாயுதன் விறாந்தை மூலைக்குப் போய் நெல்லுச் சாக்கை உலுக்கித் தூக்கித் தோளில் வைத்தான்.
‘ஏனப்பா….?’ கலவரத்தோடு கேட்டாள் பூமணி.
‘அந்த ஓவசியருக்கு எதையாவது குடுத்தாத்தான் தண்ணி தருவான்’
‘அதுக்கு இந்த நெல்லைக் கொண்டுபோய்க் குடுக்கப் போறியளே. ஐயோ என்ன அநியாயம். பிள்ளையளுக்குக் கஞ்சியாவது வாய்க்குக் குடுப்பம் எண்டு கடனாய் வாங்கினது. அதை அவனுக்குக் குடுக்கப் போறியளே. ஐயோணை வேண்டாம்’
‘கத்தாமல் பேசாமலிரு… தண்ணி விடாட்டில் வயல்ல ஒரு பிடி நெல்லும் வெட்டேலாது
‘இந்தப் பிள்ளையளின்ரை வயித்துக்கு எதைக் குடுக்கிறது’
வேலாயுதன் அவளின் புலம்பலைத் தவிர்த்து நடந்தான்.
‘ஐயோ….. இந்த மனிசன் செய்யிற அநியாயம். இதுகளைப் பிடிச்சு நான் கிணத்தில தள்ளி விட்டா, கடவுளே’ கூப்பாடு போட்டாள். படலையடிக்கு ரவியிடம் ஓடினாள். ரவியைக் கண்டதும் வேலாயுதன் நின்றுவிட்டான். தோளின் சுமையைவிட மனச்சுமை பாரமாய் இருந்தது. ரவி சட்டென்று நிலைமையைப் புரிந்து கொண்டு-
‘ஐயா நெல்லை ஓவசியருக்குக் குடுக்கப் போறீங்களே….’ என்றான்.
பளபளத்த விழிகளைத் தாழ்த்திக் கொண்டு நின்றான் வேலாயுதன்.
‘நெல்லைக் கீழ போடுங்கோ’
‘ஏன்ரா?’
‘போடுங்கோ சொல்லுறன்’
‘வயலில தண்ணி பாயுது போய்ப் பாருங்கோ’
‘எப்படி?’ வியப்பாய் இருந்தது.
‘எங்களுக்குத் தண்ணி இல்லை. சிதம்பரத்தாருக்கு மட்டும் இரண்டாம் தரம் பாயுது. அதுதான் ஒரு கடவான் வெட்டி விட்டனான். எங்கடை பங்குத் தண்ணி தானே அவைக்குப் போகுது. இண்டைக்கு இரவு பாஞ்சிடும். விடியிற வரைக்குமாவது வாற தண்ணி வரட்டும்’
‘ஏன்ரா வெட்டிவிட்டனி’ என்று கேட்க முடியவில்லை. அவசியத் தேவை தண்ணி. வேலாயுதன் மண்வெட்டியுடன் வயலுக்கு ஓடினான்.
மேற்குக் கரையில் தண்ணீர் பாய்வதை இருட்டுக்குள்ளும் கவனித்து விட்டான். ‘தண்ணி இதோடு பாய்ஞ்சுதெண்டால் பயிர் ஓரளவு தப்பிவிடும்.’
நேரம் போவதே தெரியவில்லை. பாதியில் வீட்டுக்குப் போக மனம் வரவில்லை. நாலாவது வயலில் தண்ணீர் பாய்ந்த போது ஆட்களின் நடமாட்டம் தெரிந்தது.
‘வேலாயுதன்! உதென்ன கள்ளவேலை செய்யிறாய்? எப்பிடி நீ தண்ணி எடுப்பாய்?’சிதம்பரத்தின் வயலில் தண்ணி பாய்ச்சிய ஆள் சத்தம் போட்டான். வேலாயுதனுக்குச் சப்த நாடியும் ஒடுங்கிவிட்டது. மனம் அதிர்ச்சியில் நைந்தது.
‘கள்ள வேலையா…. அது எங்கடை பங்குத் தண்ணிதானே’ என்று திரும்பிக் கத்தினான்.
‘இரவில் கள்ளமாய் தண்ணி எடுத்துப் போட்டு உனக்குக் கதை வேறயே…’ ஓடி வந்தவன் மண்வெட்டிப் பிடியால் ஓங்கி அடித்தான். அது நேராக வேலாயுதனின் மண்டையில் தாக்க ஒரு வினாடியில் அவன் துடிப்புக்கள் அடங்கிப் போக சேற்றுக்குள் விழுந்தான்.
விறாந்தையில் இருந்து தன்னையறியாமல் உறங்கிவிட்ட பூமணி திடுக்கிட்டு விழித்து ‘டேய் ரவி…. இப்ப என்ன நேரம் இருக்கும், ஐயாவை இன்னும் காணேலையடா. போய் பாத்திட்டு வா தம்பி’ என்று எழுப்பினாள். ரவி கொஞ்சம் யோசனையுடன் எழுந்து சேர்ட்டையும் போட்டுக் கொண்டு நடந்தான். முன் வாய்க்காலில் தங்கள் வயலுக்கு அருகே விழித்து நின்று தண்ணி விட்டுக் கொண்டிருந்த சந்திரனும், பாலேந்திரனும் அவனுடன் சேர்ந்து கொண்டார்கள்.
வயலின் வரம்புகளில்….. சாம்பல் நிறத்து இருட்டுக் குவியலிடையே தகப்பனைத் தேடி ‘எங்கையடா ஐயாவைக் காணேலை’ என்று நடக்கையில் தான் காலில் கை தடக்குப் பட்டது.
பகீரென்றது. திகிலுடன் குனிந்து பார்த்தான். தாறுமாறாய்க் கிடந்த அந்த விறைத்த உடம்பைக் கண்டு அலறியே விட்டான்.
‘டேய்! ஐயாவைப் பாரடா’ சந்திரனும் பாலேந்திரனும் அதிர்ந்து போய் நிற்க அவன் தலைதலையாய் அடித்தான்.
“டேய்….. சிதம்பரத்தால தான் இவ்வளவும் வந்தது. அவனை….’ கைகளால் சேற்று வரம்பில் ஓங்கி அறைந்தான்.
சந்திரன் வேலாயுதனைத் தூக்கி வந்து வீட்டில் சேர்த்தான். என்ன ஏதென்று விபரம் புரியாமல் தூக்கக் கலக்கத்தில் பிள்ளைகளும் பூமணியும் அலறத் தொடங்கினார்கள்.
‘அவன்ரை வயலுக்கு நெருப்பு வைக்க வேணுமடா’ சந்திரன் பல்லைக் கடித்தான்.
‘வேண்டாம். நெல்லின்ரை ஒவ்வொரு மணியும் லட்சுமி மாதிரி. அதை எரிக்கக் கூடாது. அவன்றை வீட்டை எரிப்பம். அப்பவாவது எங்கடை வயித்தெரிச்சலை அவன் விளங்கிக் கொள்ளட்டும்’
இங்கே ஒப்பாரி எழுந்த அதே நேரத்தில் அங்கே சிதம்பரத்தின் வீட்டைப் புகை மண்டலம் சூழ்ந்து கொண்டது.
மெதுவாகப் புலர்கின்ற அந்தக் காலை நேரத்தில் பல காலடிகள் ஈர மண்ணில் தமது சுவடுகளைப் பதித்துக் கொண்டு ஓடி வந்து கொண்டிருந்தன.
– இதழ் 166 – டிசம்பர் 1982, மல்லிகைச் சிறுகதைகள், முதற் பதிப்பு: ஜூன் 2002, மல்லிகை பந்தல் வெளியீடு, கொழும்பு.