அநித்தியம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 19, 2015
பார்வையிட்டோர்: 8,176 
 
 

அந்தப் பிண்டம் அதன் விருப்பின்றி அதன் மூலத்தின் தேவையில், விருப்பில், இயற்கையின் உந்தலில் வயப்பட்ட காமக் கிளற்சியில், கண்மூடித்தனமான வேகத்தில், அவசர அவசரமாகப் பூமியில் வந்து பிறந்தது. பிறந்த அந்தப் பிண்டத்தின் மூளையில் கேட்காமலே சில கேள்விகள், இரசாயனத்திற்கும் மின்சாரத்திற்கும் ஏற்படும் தாக்கத்தில், இயற்கை கொடுத்த வரத்தால் அல்லது சாபத்தால் அல்லது மனிதர் இன்னும் கண்டுபிடிக்காத வியாதியால், பொறுக்க முடியாத அவதியோடு, மூளையென்னும் திண்மம் போன்ற கூழில், பொங்கிப் பொங்கி எழுந்தது. காதல் ஆனாலும், காமம் ஆனாலும், சோகமானாலும், சந்தோஷ்மானாலும் கொட்டித் தீர்க்கவேண்டிய அற்பப் பிண்டத்தின் ஆசை, அந்தப் பிண்டத்தையும் விட்டுவைக்காது ஆட்டிப்படைக்க, அவல தேசத்தில் பிறந்த அது, அன்னிய தேசத்தில் குடியேறி, அங்கு கிடைத்த வசதியில், பேனைகளையும் அதன் மைகளையும், காட்டை அழித்து உருவாக்கிய காகிதங்களையும் பொறுப்பில்லாது பாவித்து, தானும் கர்த்தா என்கின்ற கற்பிதத்தில், பிண்டத்தின் அறிவை மிஞ்சிய கற்பனைச் சதிக்குள் விழுந்து, குப்பைக் கிறுக்கல்களைத் தத்துவமாய் வரித்து, வரைந்து, மகிழ்ந்து, மற்றவர் பராட்டிற்காய் ஏங்கி, இரந்து, புத்தகம் என்னும் திருவோடு கையில் ஏந்தி, கரைகாணக் கற்பனையில் மிதந்தது.

வரைந்த கிறுக்கல்களைத் தனக்குள் வைத்திருக்கும் பக்குவம்கூடப் பெறாத அற்பப் பிண்டம் அதைத் தூக்கிக்கொண்டு அலைந்து, நாலு பேரிடம் காட்ட, அவர்களுக்கு அது குப்பை என்பது புரிந்தாலும், மூஞ்சைக்கு எதிராகக் குற்றம் பேச விரும்பாது, ஆகா என்று நுனி நாக்கால் அகம் ஒவ்வாது கூற, அதன் அர்த்தம் புரியாது, தானும் ஒரு மகா கர்த்தா அல்லது தானே ஒரு மகா கர்த்தா என்கின்ற மாயையில் விழுந்து, மையில் எழுதியதை அச்சில் பார்க்க வேண்டும் என்கின்ற கற்பனையில் துடித்து, காசைக் கொடுத்து, மையில் இருந்ததை அச்சில் ஏற்றிக், காசைச் செலவு செய்து தமிழ் இலக்கியத்திற்குக் காசைச் சேர்த்து, தமிழ் இலக்கியத்திற்கே காசு சேர்ப்பது தெரியாது கலிகொண்டு, மதுவுண்ட குரங்காகப் பிண்டமாகிய தன்னையும், பிண்டத்தைச் சுற்றியுள்ளதையும் அசிங்கம் செய்வதைத் தொடர்ந்து, அது அறிவீனத்தோடு, அதன் எழ முடியாத கற்பனைச் சதிக்குள் விழுந்து, எழமுடியாது அதில் நிரந்தரமாக அழுந்தி, அத்தால் அதையே சுகித்துச், சுகம் என்று, சொற்கம் என்று நினைத்து, நினைவால் சுயம் இளந்து…

பிறப்பு என்கின்ற எம் கை வசப்படாத உலக நிகழ்வில் பிண்டமாக அவதரிக்கும் கோடான கோடிக்கும் உள்ள குணமாகத் தன்னைத் தான் அறியாத மாயையில், நான் என்கின்ற செருக்கின் மேல் ஏறிய குரங்காய்க் கோடி கோடி பிண்டங்கள் அழிந்து போகும் வரலாறாகத் தானும் ஆகாது இருக்க வேண்டும் என்கின்ற பேராசையில், தனது நானைத் தக்கவைத்துக்கொள்ள, தமிழைக் கொன்று, உலக இயற்கையை அழித்து, அழிந்து போகும் நானை தனது பிண்டம் மாண்ட பின்பும் கெட்டியாக அழியாது வைத்துக் கொள்ள, இந்தப் பிண்டம் முனைப்போடு மேலும் மேலும் அர்த்தம் உள்ளவற்றிற்கு அழிவை ஏற்படுத்தி, அர்த்தமற்ற தனது நானை அழியாது காப்பாற்ற அது கங்கணம் கட்டியது. இலக்கியம் படைப்பதாய்க் கிறுக்கலை ஓயாது தொடர்ந்தது.

பைத்தியமான பிண்டங்களின் உலகம் இது. அதில் சிலவற்றிற்குப் பொருளில் பைத்தியம். சிலவற்றிக்குப் பொன்னில் பைத்தியம். சிலவற்றிற்கு எதிர்பாலில் பைத்தியம். சிலவற்றிற்குப் புகழில் பைத்தியம். உலகில் அவதரித்த பிண்டங்கள் எல்லாம் பைத்தியங்கள் என்பது உண்மை என்பதும், அதன் அளவும் திசையும் மாத்திரமே வேறுபடுகிறது என்பதும் இந்தப் பிண்டத்திற்குச் சில வேளைகளில் அதன் மூளையில் தோன்றி மறைந்தாலும், நான் என்பதை நிலை நாட்டிவிட வேண்டும் என்கின்ற அதன் பைத்தியம் மாறாது, அதை நிலைநாட்ட, அது மதுவருந்திய மந்தியாக, நேரத்தையும் தனது சக்தியையும் அதற்காகச் செலவு செய்து. அந்தப் பிராயத்தனத்தில் அது அந்தரித்து, அலைமோதி, அலை பாய்ந்து, மகிழ்ந்து, சோகமாகிச், சுருங்கி, அவமானப்பட்டு, கோபமாகிச், சாபமாகிச், சபதமாகி, நான் என்பதைப் இந்தப் பிண்டம் போன பின்பு காப்பாற்றிக்கொள்ள இப்போது இருக்கும் பிண்டத்தையும், கிடைத்த நேரத்தையும் பலியாக்கி, நானையும் வதைத்து, தான் கர்த்தா என்கின்ற கற்பிதத்தில் அது காலத்தைப் போக்கியது.

அன்று… அது… நித்தம் நித்தியம் அற்ற உலகத்தை நினைவுபடுத்த வேண்டும் என்பதற்காக ஒஸ்லோவில் இருக்கும் பெரிய சவக்காலை ஒன்றின் ஊடாகத் தனது நடைப் பயணத்தை நடத்துகின்ற பணியில், அந்தச் சவக்காலையின் ஒருபக்கத்தால் இறங்கி மறுபக்கம் சென்று ஏறும் முயற்சியில் அது இறங்கியது. கோடைகாலத்து மயானம் பூங்காவனமாக மலர்கள் சொரிந்து, மனதை மயக்க, இயற்கையிடம் சிலகணம் தன்னை மறந்து, தனது கற்பனைப் பாடத்தைச் சொற்களில் வடிக்க முயன்று, அது முடியாதபோது, கருக்கண்ட பின்பு கற்பனை செய்ய வேண்டும் என்கின்ற சமாதானத்தோடு, அது நான் என்பதின் எச்சங்களைப் பார்த்த வண்ணம் நடந்தது.

அப்போது அந்தப் பிண்டத்தின் கர்த்தா என்கின்ற கற்பனை பிறக்கும் காசு நிறை மூளையில் மாணிக்க வாசகரின் முத்துக்கள் தப்பிதமாக முளைவிட,

உற்றாரை யான் வேண்டேன்; ஊர் வேண்டேன்; பேர் வேண்டேன்;
கற்றாரை யான் வேண்டேன்; கற்பனவும் இனி அமையும்;
குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா! உன் குரை கழற்கே,
கற்றாவின் மனம் போல, கசிந்து, உருக வேண்டுவனே!

என்கின்ற திருவாசகம் பிண்டத்தின் பித்தத்தைக் கலைக்க, அந்தக் கலக்கத்தில் தெளிவு ஏற்பட்டதான நினைவில், குழம்பித், தனது நிலை கலங்கி, மனமேங்கி, எல்லாம் வேண்டாம் என்று அறிவில் தெளிந்தவர் கூறிய போது, நான் ஏன் இது வேண்டும் என்று எண்ணினேன் எனப் பிண்டத்திற்குப் பித்துப்பிடிக்க, அதற்குத் தான் பித்துப் பிடித்து அலைந்த உண்மை அப்போது விளங்கக், கண்கள் கசிய, வேண்டும், வேண்டாம், விட்டுச் செல்வது என்பதாக எதுவும் இல்லை என்பது புரிய, நித்தியம் என்பது அநித்தியமாகும் என்கின்ற பிரபஞ்சத்தைத் தாண்டிய நித்தியம் புரிய, பிண்டமாகிய தனக்கும், தான் உலாவுகின்ற உலகத்திற்கும், பிரபஞ்சத்திற்கும், பிரபஞ்சத்தைப் படைத்த கடவுளுக்கும்கூட நித்தியம் என்பது இல்லை என்பதாக அமைதி அடைந்து, ஞானம் பெற்றுச், சுடலையை நீங்கிச் செல்லக், கற்பிதமான அந்தப் பிண்டத்தின் கர்த்தா கல்லறைக்குள் நிரந்தரம் அற்ற நிரந்தரம் கண்டது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *