தனது சொந்தசெலவில் அச்சிட்ட கவிதைதொகுப்பு நூல்கள் ஒவ்வொன்றையும் எண்ணியபோது இருநூற்றி ஐம்பது நூல்களுக்கு குறையாமலிருந்தது. அதை அப்படியே பேப்பர்காரனுக்கு எடைக்கு எடை போட்ட போது அவன் முகத்தில் மகிழ்ச்சி மின்னலடித்தது.
“இதெல்லாம் நீங்களா எழுதினீங்க?” தராசிலிருந்த நூல்களில் ஒன்றை எடுத்து பின்பக்கத்தில் சிரித்தபடி இருந்த நிகிதாவின் புகைப்படம் பார்த்துக்கேட்டான் பேப்பர்காரன்.
“ஆமா, அதுக்கென்ன இப்போ, காச குடுத்துட்டு இடத்த காலி பண்ணு!” ஒன்றுமறியாத பேப்பர்காரனிடம் எரிந்து விழுந்தாள் நிகிதா. பேப்பர்காரன் முந்நூறு ருபாய் பணத்தை தந்துவிட்டு மொத்த நூல்கலையும் கோணிப்பையில் வாரிக்கொட்டினான்.
“பார்த்து நூல் கசங்கிடப்போகுது” பேப்பர்காரனிடம் சொல்லவேண்டும் போலிருந்தது நிகிதாவுக்கு, சொன்னால் அவன் கேட்பானா?, காசு வாங்கியாயிற்று இனி நூல்களின் உரிமை அவனுக்கு, அவன் என்ன வேண்டுமானாலும் செய்வான், நூல்களை கடைகளுக்கு தரலாம் அதன் ஒவ்வொரு பக்கங்களையும் கிழித்து பொட்டலம் கட்டலாம், அல்லது பழைய புத்தகக்கடையில் பாதி விலைக்கு விற்று அதிக லாபம் சம்பாதிக்கலாம், எதுவேண்டுமானாலும் செய்யலாம்.
தனக்கு ஏன் எழுதும் ஆர்வம் வந்தது, அதற்க்கு பதிலாக ஓவியம் வரையவோ பாட்டு பாடவோ ஆர்வம் வந்திருக்கக்கூடாதா? நிம்மதியாக இருந்திருக்கும். இனிமேல்தான் எழுதறத விட்டுட்டோமே என்றபடி வீட்டிற்க்குள் நுழைந்தாள் நிகிதா.
வீட்டினுள் இதுநாள்வரை அடுக்கிவைத்திருந்த புத்தக அலமாரி காலியாக இருந்ததைப்பார்த்ததும் நிகிதாவுக்கு அழவேண்டும் போல் தோன்றியது. மேகங்கள் சூழும் வானத்தைப்போல பழைய நினைவுகள் வந்து அவளை சூழ்ந்துகொண்டன. மெல்ல பழைய நினைவுகளில் சஞ்சரிக்கத்தொடங்கினாள்.
பிரபல வார இதழில் வெளிவந்த தனது கவிதையைக் கண்டதும் பிரசவம் முடிந்து ஆர்வமுடன் குழந்தையைப் பார்க்கும் ஒரு தாயைப்போல கவிதையை பலமுறை படித்தும், பார்த்தும் தனக்குத்தானே சந்தோஷப்பட்டாள் நிகிதா. தனது கைபேசியில் கவிதை வெளிவந்த வார இதழின் பெயர் நாள் போன்றவற்றை குறிப்பிட்டு அதில் தனது கவிதை வெளிவந்த விபரத்தை குறுஞ்செய்தியாக எழுதி தனது தோழிகளுக்கெல்லாம் அனுப்பி வைத்தாள்.
அரைமணி நேரம் வரை காத்திருந்தாள், யாரும் திரும்ப அழைக்கவோ பதிலுக்கு குறுஞ்செய்தி அனுப்பவோ இல்லை. பொறுமையிழந்த நிகிதா தனது கைபேசியில் அவர்களைத் தொடர்பு கொண்டு கவிதை வெளிவந்த விபரத்தைக் கூறினாள்.
“அப்படியா?” என்ற வார்த்தையைக்கூட அவளது தோழிகள் ஆச்சரியம் கலந்து கேட்காதது நிகிதாவுக்கு ஒரு மாதிரியாகவே பட்டது. தோழிகளின் பாராட்டு கிடைக்காமல் போனாலும் பரவாயில்லை. நிறைய கவிதைகள் எழுத வேண்டும் அதை எல்லா பிரபல வார இதழ்களுக்கும் அனுப்பி வைக்க வேண்டும் என தீர்மானமெடுத்தாள்.
அவளது ஆர்வத்தில் விளைந்த கவிதைகள் ஒவ்வொன்றும் சமுதாயத்தின் தோல்களை உரித்ததோடு எல்லா பிரபல வார இதழ்களிலும் வெளிவந்து கொண்டிருந்தது.
வெளிவந்த கவிதைகள் ஒவ்வொன்றையும் வெள்ளைக் காகிதத்தில் ஒட்டி பாலுதீன் கவர் பைலில் சேமிக்க ஆரம்பித்தாள். நூறு கவிதைகள் வெளிவந்த பிறகு அதை தொகுத்து ஒரு கவிதை நூல் ஒன்றை வெளியிட வேண்டும் என்ற ஆசை அவள் மனதில் நிரந்தரமாய் நிலைகொண்டிருந்தது.
அவள் எதிர்பார்த்தபடியே அவளது நூறாவது கவிதையும் வெளிவந்து இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தது. சென்னையிலிருக்கும் பிரபல அச்சகங்களுக்கெல்லாம் தனது நூறு கவிதைகள் வெளிவந்த வார இதழ்களின் பெயர்களை எழுதி இதை கவிதைத்தொகுப்பு நூலாக வெளியிட முடியுமா எனக்கேட்டு கடிதம் எழுதினாள்.
எல்லா அச்சகத்தாரும் பிரபல எழுத்தாளரின் படைப்புகளை மட்டுமே கேட்டு வாங்கி அதை நூலாக அச்சிட்டு வியாபாரம் பார்க்கும் சூழ்நிலையில் நிகிதாவின் கவிதைத்தொகுப்பு நூல் வெளியிட அச்சகத்தார் யாருக்கும் ஆர்வம் இல்லாமல் போனது.
சில அச்சகத்தார் கவிதைத்தொகுப்பு நூலுக்கு ருபாய் பத்தாயிரம் அனுப்பி வைக்கவும் வெளியிடுகிறோம் என கடிதம் அனுப்பியிருந்தார்கள். அதைப்படித்த போது கவிதை எழுதும் ஆர்வம் குறைந்து ஏன் இத்தனை கவிதைகளையும் எழுதினோம் என்று வெறுப்பு தோன்றியது நிகிதாவுக்கு.
சில நாட்கள் வரை கவிதை எழுதுவதை நிறுத்தியிருந்தாள். இருந்தாலும் எழுதிய கை சும்மாயிருக்கவில்லை, மறுபடியும் எழுத ஆரம்பித்தாள். கவிதைத்தொகுப்பு நூல் வெளியிடவேண்டும் என்ற கனவு மட்டும் அவளை விடாமல் துரத்திக் கொண்டிருந்தது.
தனது சேமிப்பிலிருந்த ஏழாயிரம் பணத்தையும் தனது தோழிகளிடமெல்லாம் கடன் உதவி கேட்டு வாங்கிய பணத்தையும் சேர்த்து பத்தாயிரமாக்கி அச்சகத்துக்கு அனுப்பி வைத்தாள். மூன்று மாத இடைவெளியில் அழகிய கவிதைத்தொகுப்பு நூல் வெளிவந்து அதில் முந்நூறு நூல்கள் அவள் கொடுத்த பத்தாயிரம் ருபாய்க்கு ஈடாக கிடைத்தன.
தனது கனவுகள் நனவாகிப்போனதில் அளவுக்கதிகமான சந்தோசம் அவளை விடாமல் துரத்தியது. நாட்கள் நகர நகர அவளது சந்தோசங்களூம் மெல்ல மெல்ல கரையத்தொடங்கியது. தன் கையிலிருக்கும் கவிதை நூல்களில் பாதியாவது விற்று தீர்த்தால்தான் தான் போட்ட முதல் திரும்பக்கிடைக்கும்.
பிரபல வார இதழ்களுக்கு நூல் விமர்சனம் என்ற பெயரில் இரண்டிரண்டு நூல்கள் இலவசமாக அனுப்பியதில் முப்பது நூல்கள் எண்ணிக்கையில் குறைந்திருந்தன. ஒருசில வார இதழ்கள் நூல் விமர்சனம் வெளியிட்டு நிகிதாவின் ஆர்வத்தை மேலும் மேலும் உயரத்தில் கொண்டு போய் நிறுத்தியது.
உறவுக்க்காரர்களில் சிலர் கவிதை நூல்களைப் பார்த்து படிக்க கேட்டார்கள், அவர்களிடம் காசு வாங்குவதா வேண்டாமா என மனசு தடுமாறியது. சிலரிடம் விலை ஐம்பது ருபாய் என்ற போது படிச்சுட்டு திரும்ப தந்துடுறேன் என்று வாங்கிவிட்டு போனவர்கள் திரும்ப கொண்டு வரவே இல்லை. மொத்தம் ஐம்பது புத்தகம் குறைந்திருந்தது.
இனிமேல் சொந்தகாசில் புத்தகம் வெளியிடக்கூடாது ஏதாவது பதிப்பகம் வெளியிட்டால் மட்டுமே கவிதைநூல் வெளியிடவேண்டும் என்ற தீர்மானத்திலிருந்தாள். நிகிதாவின் கைபேசி சிணுங்கவே எடுத்து காதுக்கு தேய்த்தார்போல் வைத்தாள்.
“நிகிதாவா”
“ஆமா, நீங்க?”
“என்பேரு கலைதூதன், உங்க `கனவிலொரு காதல்’ கவிதை நூல் படிச்சேன் ரொம்ப பிரமாதமா இருந்துது எல்லா கவிதை வரிகளும், அடுத்த கவிதைநூல் எப்போ வெளியிடப்போறீங்க?” அவனது குரலைக்கேட்க கேட்க நிகிதாவுக்கு வார்த்தைகள் வரமறுத்து தொண்டைக்குழியை அடைத்தது.
“ரொம்ப நன்றி சார்!” தடுமாறியபடியே சொன்னாள் நிகிதா.
“இது என்னோட நம்பர், நீ எப்ப வேணுமுன்னாலும் என்ன தொடர்பு கொள்ளலாம், என்னப்பத்தி சொல்லணுமுன்னா நான் ஒரு தமிழ் வாத்தியார் இன்னும் மூணு வருஷத்துல ரிட்டயர் ஆகப்போறவன், கவிதை நூல்ல உன்னோட புகைப்படம் பார்த்தேன் என்னோட மகளோட வயசுதான் உனக்கும் இருக்குமுன்னு நினைக்கிறேன். சரி வைக்கிறேன்.
“சரிங்க சார்!”
ஒரு கவிதைத்தொகுப்பு நூல் மூலமாக தனது பெயர் பிரபலமடையத்தொடங்கிவிட்டது என்பதை நினைக்க நினைக்க அன்றைய தூக்கம் அவளை அணைக்க தவறியிருந்தது. ஊரே உறங்க நடு ஜாமம் வரை கவிதைகள் தானாய் வந்து விழ, உறக்கம் விற்று கவிதை எழுதி குவித்தாள்.
பொழுது விடிந்து அயர்ந்த தூக்கத்தில் கிடந்தவளை அவளது கைபேசி சிணுங்கியபடியே எழுப்பிவிட்டது. கலைதூதன் அழைப்பதை பார்த்ததும் கொட்டாவிக்காக திறந்த வாயை இறுக்க மூடிவிட்டு ஹலோ சொல்வதற்க்கு சிறிது நேரம் எடுத்துக்கொண்டாள்.
“அடுத்த கவிதைத்தொகுப்பு எப்போ?”
“கவிதைகள் தயாராத்தான் இருக்கு, ஆனா… எந்த பதிப்பகமும் வெளியிட தயாரா இல்ல!”
“அப்படியா, எனக்கு தெரிஞ்ச ஒரு பதிப்பகம் இருக்கு, அச்சுக்கூலி ரொம்ப குறைவு தான், முதல்ல நீ உன்னோட கவிதைகள கொண்டுபோய் காட்டு, அவங்களுக்கு புடிச்சிருந்தா அவங்களே வெளியிடுவாங்க, நான் அச்சகத்தோட முகவரிய எஸ்.எம்.எஸ் பண்றேன் சரியா!” கலைதூதன் சொன்னபோது அவளது நம்பிக்கைகள் மொட்டிலிருந்து விரியும் ரோஜாப்பூவைப்போல விரிய ஆரம்பித்தன.
தனது கைபேசியில் வந்திருந்த அச்சகத்தின் முகவரியை கண்டுபிடித்து தனது கவிதைகளைக் காட்டியபோது அவர் அதை முழுசாக ஒரு கவிதைகூட படிக்கவில்லை.
“இப்பல்லாம் கவிதைநூலே அச்சிடுறதில்ல, நூலகத்துல கூட வாங்குறதில்ல, நல்ல எழுத்தாளரோட கட்டுரைகள், நாவல்கள் மட்டும்தான் அச்சிடுறோம்!” என்றபடி அவள் தந்த கவிதை எழுதிய காகிதங்களை திரும்பத்தந்தார்.
“சார், கலைதூதன் சார் தான் உங்கள வந்து பார்க்கச் சொன்னாரு,
“இதாபாரும்மா அவரு சொல்லிஅனுப்பினதுனால அச்சுக்கூலியுல கொஞ்சம் கொறைக்கலாம், மத்தபடி முழுச்செலவையும் ஏத்து புத்தகம் அச்சிட முடியாதும்மா எல்லாம் கலைதூதன் சார்கிட்ட பேசிக்குங்க, அதோ அவரே வந்துட்டாரு!”
நிகிதா திரும்பிபார்த்தபோது கலைதூதன் வந்துகொண்டிருந்தார். அவரிடம் இதுநாள் வரை கைபேசியில் தான் பேசியிருக்கிறாள், நேரில் பார்க்கவில்லை, முதன் முதலாய் அவரைப்பார்த்ததும் பரவசமானாள். தனக்காக உதவவந்திருக்கும் கிருஷ்ணபரமாத்மாவாகவே அவரை நினைத்துக்கொண்டாள்.
“நிகிதா எப்பிடிம்மா இருக்கே!”
“நல்லாயிருக்கேன் சார்!”
“அடுத்த கவிதைநூலும் அசத்தலா இருக்கணும்!”
“இருக்கும் சார்!”
` செலவப்பத்தி நீ கவலப்படாத, எல்லாம் நான் பார்த்துக்கறேன், அடுத்த மாசம் உன்னோட ரெண்டாவது கவிதைநூல் வெளிவரப்போகுது, இப்போ சந்தோஷம்தானே!”
“ ரொம்ப சந்தோசமா இருக்குசார்!”
“வா, ரெண்டுபேரும் பேசிகிட்டே பஸ்டேண்டுக்குப்போலாம்!”
“சரியிங்க சார்!” தாய் ஆட்டுக்குட்டியின் பின்னால் செல்லும் குட்டிஆட்டுக்குட்டியைப்போல அவர் பின்னால் நடக்க ஆரம்பித்தாள் நிகிதா.
“என் வீட்டுல என் மனைவியும் புள்ளைகளும் உன்னோட புத்தகத்த படிச்சுட்டு ரொம்ப பாராட்டினாங்க, வா என் வீட்டுக்குப்போலாம் அவங்கள உனக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன்!”
“சரியிங்க சார்!”
வீடு பூட்டிக்கிடந்தது, தனது கையிலிருந்த கைபேசியில் எண்களை அழுத்தி காதுக்கு வைத்தார்.
“சாவித்திரி எங்க போயிட்ட, மார்க்கெட் போனியா, சரி சீக்கிரம் வந்திடு, நம்ம வீட்டுக்கு நிகிதா வந்திருக்கிறா, சரி!”
கலைதூதன் பர்ஸ்சிலிருந்து சாவி எடுத்து கதவைத் திறந்து வைத்தான்.
“உள்ள வாம்மா!”
நிகிதா உள்ளே நுழைந்தாள். வீடு அலங்கோலமாய் கிடந்தது. கலைதூதன் நூறுருபாய் நோட்டுக்கட்டு ஒன்றை எடுத்துவந்து நிகிதாவின் கைகளில் திணித்தான். நிகிதா நெகிழ்ந்தாள். திருமணம் முடிந்து தனது தந்தையின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கும் மணப்பெண்ணைப்போல அவரது காலில் விழுந்தாள் நிகிதா. அவளை தூக்கியபடி அப்படியே கட்டி அணைத்தான் கலைதூதன்.
சற்றும் எதிர்பார்க்காத நிகிதா நொடியில் அவரை தள்ளிவிட்டாள் அவர் விழுவதாக இல்லை அவரது பிடியிலிருந்து விலகவே அதிகம் சிரமமாக இருந்தது. தனது முழு பலத்தையும் திரட்டி அவர் பிடியிலிருந்து விலகி பணத்தை அவரது முகத்தில் எறிந்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறி விறுவிறுவென நடக்க ஆரம்பித்தாள்.
அன்றைய சம்பவத்தை நினைக்க நினைக்க எழுத்தின் மீதிருந்த ஆர்வம் மிக வேகமாக கரைந்து இனி கவிதைகளே எழுத்க்கூடாது என்ற முடிவுக்கு வந்தாள்.
தபால்காரன் வீசிவிட்டுப்போன வார இதழை பிரித்தபோது அதில் அவளது கவிதை ஒன்று ஒருபக்கத்தை ஆக்கிரமித்திருந்தது. போனமாதம் அனுப்பிய கவிதை அது. அந்த பக்கத்தைப் பார்த்ததும் அதுவரை எடுத்திருந்த தீர்மானங்கள் தண்ணீரில் கரையும் உப்பைப்போலவே கரைந்துபோக பேனாவைத் திறந்து கவிதை எழுத ஆரம்பித்தாள் கவிதைத்தொகுப்பு நூல் எதுவும் வெளியிடும் நோக்கமின்றி