ஸ்மார்ட் போனின் அன்பு

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 27, 2019
பார்வையிட்டோர்: 8,556 
 

இந்தத் தொழில்நுட்ப யுகம் எந்தளவுக்கு நம்மை மனித உறவுகளில் இருந்து அப்பால் இழுத்துச்சென்று அதல பாதாளத்தில் தள்ளிவிட்டுள்ளது என்பதை நம்மால் உணர முடிவதில்லை. இதைப்பற்றி சிந்திக்க எப்போதாவது நாம் ஒரு நிமிடத்தை ஒதுக்கியுள்ளோமா? அனுபவங்கள் அவரவருக்கு தலையிடியாக வந்து குத்திக்குடையும் போதுதான் அவரவருக்கு நச்சென்று மண்டையில் உரைக்கிறது.

நித்தியா அன்றைய தினம் எல்லா வேலைகளையும் முடித்துக்கொண்டு படுக்கையறைக்குச் சென்றாள். அவள் ஒரு ஆரம்பப் பாடசாலை ஆசிரியை. முதல் நாளன்று பிள்ளைகளுக்கு வழங்கியிருந்த ஒப்படைகளைத் திருத்தி மாணவர்களிடம் ஒப்படைக்க வேண்டிய ஒரு வேலை மாத்திரமே பாக்கியிருந்தது. அவர்களது ஒரே மகன் கார்த்திக் படுக்கையில் அசந்து தூங்கிக் கொண்டிருந்தான். அவன் அவள் வேலை செய்யும் அதே பாடசாலையிலேயே ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். அவளது கணவன் தினேஸ் தான் அண்மையில் வாங்கிய ஸ்மார்ட் போனை வைத்துக்கொண்டு முக நூலில் மும்முரமாகப் பதிவிட்டுக் கொண்டிருந்தான்.

நளினி மாணவர்களின் ஒவ்வொரு கட்டுரையையும் கவனமாகத் திருத்திக் கொண்டிருந்தபோது ஒரு கட்டுரையை வாசித்ததும் அவள் புருவங்கள் நீண்டு நெளிந்து மேலுயர்ந்தன. கண்கள் இருண்டன. கண்ணீர் பொல பொலவென உதிர ஆரம்பித்தது. அவளது இந்த மாற்றத்தை ஒரு கண்ணால் அவதானித்த தினேஸ், “ஏன் என்ன நடந்தது?” என்று விசாரித்தான்.

நேற்று என் வகுப்பு மாணவர்களுக்கு ‘எனது விருப்பம்’ என்ற தலையில் ஒப்படை ஒன்று தயாரிக்கும்படி பணித்திருந்தேன்

அதற்கு என்ன இப்போது, தினேஸ் ஆர்வமின்றி பதில் சொன்னான். இன்னும் முகநூலில் இருந்து அவன் கவனம் விடுபடவில்லை.

அதில் ஒரு மாணவன் எழுதியிருந்த ஒப்படை எனக்குத் துக்கத்தைத் தருகிறது. எனக்கு வாய்விட்டு அழவேண்டும் போல் இருக்கிறது. அவள் தழுதழுத்த குரலில் கூறினாள்.

அப்படி என்னதான் அவன் எழுதியிருக்கின்றான். அவன் இன்னமும் அவள் சொல்வதை நம்பத் தயாராக இல்லை.

சொன்னால் உங்களுக்கு அது புரியாது. இருங்கள் வாசித்துக் காட்டுகிறேன். அவன் அப்போதுதான் தனது ஸ்மார்ட் போனில் இருந்து தலை நிமிர்ந்து அவளைப் பார்த்தான். அவள் தன் கையில் வைத்திருந்த காகிதத்தில் இருந்ததை வாசிக்கத் தொடங்கினாள்.

எனது பெற்றோர் என்னை விட அவர்கள் கையில் வைத்திருக்கும் ஸ்மார்ட் போன் மீதே அதிக அன்பு காட்டுகிறார்கள். அதனை மாத்திரமே அவர்கள் நேசிக்கிறார்கள். அநேகமான சந்தர்ப்பங்களில் அவர்கள் தங்களுக்கு இப்படி ஒரு மகன் இருக்கிறான் என்பதையே மறந்து விடுகிறார்கள்.

என் தந்தையார் வேலை முடிந்து வீட்டுக்கு மிகுந்த களைப்புடன் வருவார். அவர் ஆவலுடன் காத்திருக்கும் என்னிடம் வந்து அன்புடன் நாலு வார்த்தை பேசமாட்டார். அவர் தனது ஸ்மார்ட் போனை வைத்துக்கொண்டு வீடியோ பார்ப்பதில் மூழ்கிவிடுவார். அந்த ஸ்மார்ட் போன்தான் அவரை உற்சாகப்படுத்தி வைத்திருக்கிறது. அவருக்கு அதற்குப் பின் என்னிடம் பேச நேரம் கிடைப்பதே இல்லை.

என் பெற்றோருக்கு அவசரமாக செய்வதற்கு பல காரியங்கள் இருக்கும். அவர்கள் எப்போதும் அதில் மூழ்கிப்போய் விடுவார்கள். ஆனால் எத்தனை வேலையிருந்தாலும் தொலைபேசி அழைப்பு வந்தால் தமது வேலையை விட்டுவிட்டு மிக மகிழ்ச்சியாக போனில் நேரம் போவதே தெரியாமல் பேசிக்கொண்டிருப்பார்கள்.

நான் அழைத்தாலோ, எனது பிரச்சினையை சொல்ல வந்தாலோ, ஏன் நான் அழுது கொண்டிருந்தால் கூட ஏன் என்னவென்று கேட்கமாட்டார்கள்.

அவர்கள் தங்கள், தங்கள் ஸ்மார்ட் போனை எடுத்துக்கொண்டு கேம் விளையாடுவார்கள். என்னுடன் விளையாட்டுக்குக்கூட விளையாட முன் வருவதில்லை. அவர்கள் தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்கும்போது நான் அவர்களுடன் பேச விரும்புவதை அவர்களால் உணர முடியாது. அது எவ்வளவு முக்கியமான விடயமாக இருந்தாலும் அதில் கவனம் செலுத்தமாட்டார்கள். ஆதலால் எனது விருப்பம் என்னவென்றால் நான் ஒரு ஸ்மார்ட் போனாக மாறிவிட வேண்டுமென்பதுதான்.

அந்த முழுக்கடிதமுமே மிகுந்த சோகத்தை வரவழைப்பதாக இருந்தது. தினேஸ் அவள் வாசிப்பதை இப்போது மிகக் கவனமுடன் கேட்டுக் கொண்டிருந்தான். அவனையும் சோக உணர்ச்சி ஆட்கொண்டுவிட்டது. அவன் கண்களில் இருந்தும் இரண்டு சொட்டுக் கண்ணீர்த்துளிகள் உருண்டோடின. அவன் அதனை தன் விரல்களால் வடித்து சுண்டியெறிந்தான்.

இந்தக் கடிதத்தை எழுதிய மாணவன் யார் என்று தெரியுமா? தினேஸ் தனது சோக உணர்வை கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமலேயே மனைவியின் முகத்தைப் பார்த்துக்கேட்டான்.

அவள் அமைதியாக அருகே கட்டிலில் அசைவற்று ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கும் அவர்கள் மகனைக் காட்டி நமது மகன்தான் தினேஸ் என்று தழுதழுத்த பதற்றமான குரலில் கூறினாள் அவள்.

தினேஸுக்கு அதனைக் கேட்டதும் யாரோ தன் தலையில் சம்மட்டியால் ஓங்கி அடித்தது போல் இருந்தது.

ஒரு உயிரற்ற தொலைபேசி நம் வாழ்வை எந்த அளவுக்கு அசைத்து ஆட்டி வேறுடன் பிடுங்கி விடுகின்றது என்பதனை பலர் காலங்கடந்துதான் உணர்ந்து கொள்கின்றனர். ஒரு சடப்பொருள் மீது மோகங்கொள்வதால் நாம் நம் உறவுகளை இழந்து விடுவது புத்திசாலித்தனமானதா? என்பதனைதான் இதுவரை புரிந்து கொள்ளாதது தொடர்பில் தினேஸ் வருத்தப்பட்டான்.

ஸ்மார்ட் போன் போன்ற தொழில்நுட்பங்கள் மனிதனின் வாழ்க்கை வசதிகளை அதிகரிக்கின்றன என்பது வேண்டுமானால் உண்மையாக இருக்கலாம். ஆனால் அவை நம் வாழ்வை கட்டுபடுத்த நாம் அனுமதிப்பது போன்ற முட்டாள்தனம் போன்ற வேறொன்றும் இருக்க முடியாது. அநேகமான சந்தர்ப்பங்களில் நம்மவர்கள் இவற்றுக்கு அடிமையாகி நம் பழக்கவழக்கங்களை அவை தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள அனுமதித்து விடுகின்றார்கள்.

எனினும் எந்த சந்தர்ப்பத்திலாவது நாம் இதனை உணர்ந்துகொள்ளும் போது நமது பழைய பாரம்பரிய குடும்ப வாழ்வுக்கு மீள்வதற்கு நம்மால் கூடுமானதாக இருக்க வேண்டும். சின்னத்திரை மெகா தொடர்களும் கம்பியூட்டர் மற்றும் ஸ்மார்ட் போன் கேம்களும் வருவதற்கு முன்னர் நாம் நம் குடும்ப வாழ்வில் மனைவி, பிள்ளைகளுடன் எவ்வளவு மகிழச்சியாக இருந்தோம். நண்பர்களின் வீட்டுக்குச் சென்று நட்புடன் அளவளாவி எவ்வளவு சந்தோசத்துடன் வீடு திரும்புவோம். இன்று மெகா சீரியல் நேரத்தில் யாராவது வீட்டுக் கதவைத் திட்டினால் எந்த சனியன் வந்திருக்கிறதோ என்று முகத்தைச் சுழிக்கின்றோம்.

இப்போதாவது இந்தச் சனியன் ஸ்மார்ட் போனை சற்றே கீழே வைப்போம். நமது மனைவி, பிள்ளைகளுடன் அன்பாக நாலு வார்த்தை பேசுவோம். நாம் யாரிடமெல்லாம் அன்பு காட்டுகிறோமோ அவர்களிடம் இருந்துதான் நாமும் அன்பைப் பெறமுடியும்.

ஸ்மார்ட் போனிடம் இருந்து நாம் அன்பை எதிர்பார்க்கலாமா?

Print Friendly, PDF & Email

1 thought on “ஸ்மார்ட் போனின் அன்பு

  1. ஸ்மார்ட் போனின் அன்பு கதை வாசித்தேன். கண்களில் நீர்வழிய வைத்துவிட்டார் கதாசிரியர். காலத்துக்கு தேவையான கதை. நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *