எழிலன் வயது 22. ஒல்லியான உருவம். உருண்டை முகம், எடுப்பான மூக்கு. கூர்மையான கண்கள். கன்னங்களில் கொஞ்சம் தாடி. கொஞ்சம் மீசை. பட்ட படிப்பு முடித்து விட்டு வேலை தேடும் இளைஞன். இவனுக்கு எத்தனை நாட்கள், எப்படி யோசித்தும் மனம் சமாதானமாகவில்லை. தன் தேடலுக்கான விடை கிடைக்கவில்லை.
ஒரு முடிவுடன் தன் அறையை விட்டு வெளியே வந்து மாடிப் படிகளில் நடந்த கீழிறங்கினான்.
கூடத்து சோபாவில் அம்மாவும் அப்பாவும் அமர்ந்திருந்தார்கள். அப்பா முருகேசனுக்கு வயது 63. அரசாங்க அலுவலகத்தில் தாசில்தாராக இருந்து ஓய்வு. அம்மா அகிலாவிற்கு வயது 61. பள்ளிக்கூட தலைமை ஆசிரியையாக இருந்து அவளும் ஓய்வு.
தம்பதிகள் இருவரும் சிவந்த நிறம். கைபட்ட இடம் சிவந்து கன்றிப்போகும் அளவிற்குச் செம்மை ஏறும். அந்த அளவிற்கு அவர்கள் நிறம்.
எழிலன் அமைதியாக வந்து அவர்கள் முன்னுள்ள சோபாவில் அமர்ந்தான்.
பத்து நாட்களாக…. ஏதோ மந்திரித்து விட்டப் பிள்ளையாய்……தங்களுடன் அதிகம் பேசாமல், பழகாமல், ஏதோ யோசனையில் இருந்த மகன் தங்கள் முன் வலிய வந்து அமர்ந்தது அவளுக்குள் கிலியை ஏற்படுத்தியது.
‘ என்ன பிரச்சனை…? ‘ கலவரமாக ஒருவரை ஒருவர் பார்த்தார்கள்.
இவர்கள் கலவரத்தை அதிகப்படுத்துவது போல்…எழிலன்,
” அப்பா..! ” மெல்ல அழைத்தான்.
” அம்மா..! ” அடுத்து அவளையும் அழைத்தான்.
இருவரும் அவனைப் பார்த்தார்கள்.
” நாம கொஞ்சம் மனம் விட்டுப் பேசனும்ப்பா… ” எழிலன் மெல்ல வார்த்தைகளை இறக்கினான்.
” த…தாராளமாய்ப் போசலாம்…” முருகேசனுக்கு மகனின் மனப்பாரத்தை வாங்க ஆசை. சொன்னார்.
” எனக்கு ரொம்ப நாளாய் ஒரு சந்தேகம்…”
” என்ன…? ” – அகிலா.
” நான் யார் பிள்ளை…? ”
இது திடீர் தாக்குதல். இருவரும் எதிர்பாராத அணுகுண்டு. உள்ளுக்குள் கொஞ்சம் ஆடிப் போனார்கள்.
ஆனாலும் அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல்…
” நீ எங்க பிள்ளை….. ” முருகேசன் மெல்ல சொன்னார்.
” பொய்ப்பா. பொய் சொல்றீங்க. கண்டிப்பா நான் உங்க பிள்ளை இருக்க முடியாது. இருக்க வாய்ப்பில்லே.! ” எழிலன் குரலில் எந்த பிசிறுமில்லமல் அடித்துச் சொன்னான்.
” என்னப்பா சொல்றே..? ! ” அகிலா பதறி திடுக்கிட்டாள்.
” விபரம் சொல்றேன். ஒன்னு….நான் உங்க கலர், நிறமில்லே. உங்களைவிட நிறம் கம்மி. கருப்பு.”
” நீ எங்களை விட கலர் கம்மியே தவிர…கருப்பு இல்லியே. கோதுமை நிறம்.” சொன்னாள் அகிலா.
” பிள்ளைங்க அம்மா அப்பா நிறத்தை விட கொஞ்சம் கூடுதல், குறைவாய் பிறக்கலாம். இப்படி மாறாய் என்னை மாதிரி பிறக்க வாய்ப்பே இல்லே.”
” நிறமா உள்ளவங்களுக்குக் குழந்தை நிறமா பிறக்கும்ன்னு ஒன்னும் கட்டாயமில்லே. எழில். அம்மா உன்னை வயித்துல சுமக்கும்போது குங்குமப்பூ கொஞ்சமா சாப்பிட்டாள். அதனாலதான் நீ நிறம் கம்மி. ” முருகேசன் சொன்னார்.
” இல்லேப்பா. குங்குமப் பூ சாப்பிடறதுனால குழந்தை ஓரளவுக்கு நிறமா பிறக்குமேத் தவிர…என் அளவுக்கு கருப்பா பிறக்காது. ” இவன் சொன்னான்.
” சிகப்பா இருக்கிற தம்பதிகளுக்கு உன்னைவிட அதிக கருப்பா பிள்ளை பிறந்திருக்கு எழில்.” அகிலா.
” ஆமாம். நம்ம கண்ணுக்குத் தெரிஞ்ச விசயம். அடுத்தத் தெரு ஐஸ்வரியா. உன் வயசு உன் வளர்த்தி. அவள் அப்பா அம்மா… எங்களை மாதிரி நல்ல சிகப்பு. ஆனா அவர்களுக்குப் பிறந்த மகள் ஐஸ்வரியா..செம கருப்பு. ! ” முருகேசன் சொன்னார்.
” ஆனா… அவள் அப்படியே அப்பா ஜாடை. அவரை உரிச்சு வைச்சிருக்கிற முகம், உருவம். அவருக்குப்; பிறந்த குழந்தைன்னு நல்லாத் தெரியும். குழந்தைகள் நிறம் கூடுதல் குறைவாய் இருந்தாலும்…அம்மா அப்பா ஜாடை இருக்கும் ஆனா… நான் அப்படி இல்லே. உங்க ரெண்டு பேருக்கும் சம்பந்தமில்லாத நிறம், ஜாடை. ” சொன்னான்.
” நீ எங்க ஜாடை இல்லே.! என் அம்மா ஜாடை. பாட்டி ஜாடை.” சொன்னார் முருகேசன்.
” அப்பா…! நான் பாட்டியைப் பார்க்கலைங்கிறதுக்காகப் பொய் சொல்லாதீங்க.” திருப்பி அடித்தான்.
” எழில். குழந்தைகளுக்குக் கலர் என்கிறது இயற்கையாய் வரும் வரம். அதில் பெத்தவங்க பங்களிப்பு குறைவு. ” கொஞ்சம் இறங்கி சமாதானமாகச் சொன்னாள் அகிலா.
எழிலன் இதை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்கு அடையாளமாய் தலையை இப்படி அப்படி அசைத்துத் தரையைப் பார்த்தான்.
தம்பதிகள் இருவரும் ஒருவரையொருவர் கலவரமாகப் பார்த்தார்கள்.
” நம்பர் ரெண்டு…! என்கிட்ட உங்க ரெண்டு பேரோட நடப்பு, குணம் கொஞ்சமும் இல்லே. ” எழிலன்.
” அப்படியா….ஆ….!! ” இருவருமே கேட்டு வாயைப் பிளந்தார்கள்.
” ஆமாம் ! கொடுக்கப்பட்ட குணமாய்……உங்க வளர்ப்பு குணம்தான் என்கிட்ட மேல் பூச்சாய் இருக்கேத் தவிர அடிமட்ட மனதில்… உங்க ரெண்டு போரோட மனம், குணம், கொஞ்சமும் இல்லே. ” நிறுத்தினான்.
தம்பதிகள் முகங்களில் குழப்பம்.
” எப்போதும்….நீங்க ரெண்டு பேரும் எல்லார் கிட்டேயும் அன்பு, பண்பு, பாசமா பேசுறீங்க, பழகுறீங்க. கோபம் கிடையாது. ஏன்….. வார்த்தைகளில் வல்லினம், வன்மை இல்லே. முகங்களில் நிறைய பொறுமை, சாந்தம் இருக்கு. நான் அதுக்கு நேரெதிர். என் முகத்தில் சாந்தம் இல்லே. அடி மனசுல அன்பு, பண்பு இல்லே. கோபம், குரோதம் இருக்கு.” என்றான்.
” இது உன் வயசு கோளாறு. எழில். ! ” என்று முருகேசன் பதில் சொன்னார்.
” இல்லேப்பா….என்கிட்ட முரட்டுக் குணம்தான் தலை தூக்கி அதிகமா இருக்கு. அதை நான் சின்ன வயசுல பள்ளிக்கூடத்துல பலமுறை வெளிப்படுத்தி இருக்கேன். பசங்களை அடிச்சிருக்கேன். அதுக்காக நீங்க ரெண்டு பேரும் நாலைஞ்சு தடவை பள்ளிக்கூடத்துக்குப் பஞ்சாயத்துக்கும் வந்திருக்கீங்க. இனிமே என் பையன் இப்படியெல்லாம் பேச மாட்டான், அடிக்க மாட்டான், நடந்துக்க மாட்டான், கண்டிக்கிறோம்ன்னு….. வகுப்பு ஆசிரியர், தலைமை ஆசிரியர், ஆசிரியையிடமெல்லாம் சொல்லி மன்னிப்புக் கேட்டு, எழுதி எல்லாம் கொடுத்து வந்திருக்கீங்க. அப்படியெல்லாம் நடந்துக்காதேப்பான்னு வீட்டுக்கு வந்து என்னிடமும் புத்திமதி சொல்லி இருக்கீங்க. நான் அப்போ அதை கேட்டுக்கிட்டாலும்…வருத்தப் பட்டாலும்….என் பிறவிக் குணம் மாறவே இல்லே. அதுக்காக நான் மாறாமலும் இல்லே. அந்தக் குணங்களையெல்லாம் நான் உங்க வளர்ப்புக் குணத்தால அடக்கி, அமுக்கி…. நம்மால அப்பா அம்மாவுக்கு அவமானம், கெட்ட பேர் வந்துடக் கூடாதுன்னு வந்திருக்கேன், வர்றேன். இதுதான் நிஜம்.” நடந்த நடப்பை, நடக்கும் நடப்பை விலாவாரியாகச் சொன்னான்.
தம்பதிகள் வாயைத் திறக்கவில்லை.
” அப்புறம்…. மூணாவது…! என் படிப்பு, அறிவு விசயத்திலும்…நான் உங்க ரெண்டு பேர் அளவு கிடையாது. கம்மி.! நான் என்னதான் டியூசன் போனாலும், வகுப்பறையில் கூர்ந்து கவனிச்சி….. விழுந்து விழுந்து படிச்சாலும்….பாஸ் பண்ற அளவுக்குத்தான் முடியுதேத் தவிர அதிக மதிப்பெண்கள் வாங்க முடியலை. இது உண்மை. உங்களுக்குத் தெரிஞ்ச விசயம்….! ” நிறுத்தி நிதானமாகச் சொன்னான்.
எழிலன்; எவ்வளவு தூரம் யோசித்து…தங்களையும் அவனையும் துலாக்கோலில் வைத்து எடை போட்டு துல்லியமாய் தூசுபடாமல் நிறுத்து விசயத்தைப் புட்டு புட்டு வைக்கிறான் நினைக்க…. முருகேசனுக்கும் அகிலாவிற்கும்…. அதிர்ச்சி, ஆச்சரியமாக இருந்தது.
” அம்மா ! அப்பா…! இப்படி எல்லா வகைகளிலும், விசயங்களிலும் முற்றிலும் முரண்பாடாய் இருந்து, சம்பந்தமில்லாமல் இருக்கிற நான் எப்படி உங்க மகனாய் இருக்க முடியும்..? இதுதான்…எனக்கு விபரம் புரிந்த நாள்லேர்ந்து கேள்வி. இப்போ….பிரச்சனை, மன உளைச்சல்.! ” நிறுத்தினான்.
‘ என்ன பதில் சொல்ல…? ‘ கணவன் மனைவி இருவரும் திணறினார்கள், வழித்தார்கள்.
” இந்த மன உளைச்சல். கஷ்டத்திலிருந்து நான் மீண்டு வரனும்ன்னா….உங்கிகிட்டே இருந்து உண்மை வெளிவரனும். நான் யார்ன்னு எனக்குத் தெரியனும்….! ” சொன்னான்.
” …………………… ”
” அப்பா ! அம்மா ! என்கிட்ட உண்மையை மறைச்சீங்கன்னா… உங்க குணம், மனத்துல ஒட்டு உறவு இல்லாத நான் இனியும் உங்க மகனாய் இருக்க முடியாது. கண்டிப்பா நான் இந்த வீட்டை விட்டு வெளியேறி கண் காணாமல் போவேன். இல்லே…. மன உளைச்சல், அழுத்தம் காரணமாய் மனப்பிறழ்வு ஏற்பட்டு மன நோயாளியாய் ஆவேன். இது நிசம். கண்டிப்பா நடக்கும்.” அழுத்தம் திருத்தமாகச் சொன்னான்.
இது தம்பதிகள் வயிற்றைக் கலக்கியது.
” நான் உங்கள் மகன் இல்லே என்கிற உண்மை உறுதியானால் நான் உங்களை விட்டுப் பிரிஞ்சுடுவேன்னு கனவிலும் நினைக்க வேணாம். நீங்க ரெண்டு பேரும்தான் எனக்குக் கடைசிவரை அம்மா, அப்பா. நான்தான் உங்களுக்குக் கொள்ளி போடுவேன். இது நிஜம். அந்த விசயத்தில் எள்ளவும் மாற்றமில்லே.” என்றான்.
அகிலா, முருகேசனுக்குள் கொஞ்சம் நிம்மதி.
” அப்பா! அம்மா…! உங்க ரெண்டு பேர் வயசும் அறுபதுக்கு மேல. எனக்கு 22. நமக்குள் வயசு வித்தியாசம் ஏறக்குறைய நாப்பது. . உங்களுக்குப் பிள்ளை இல்லாத குறை. என்னை வாங்குனீங்களா, எங்கிருந்தாவது தூக்கி வந்தீங்களா..? நான் யார் பிள்ளை, எப்போ வந்தேன், எப்படி வந்தேன். சொல்லுங்க..? ”
முருகேசன், அகிலா மனங்களில் கிலி, பீதி !
” நீங்க வாயைத் திறக்காமல் வியசத்தை மூடி மறைக்கலாம்ன்னு மட்டும் கனவிலும் நினைக்க வேணாம். விடமாட்டேன்.! கடைசிக் கட்ட நடவடிக்கையாய் நமக்குள் டி.என்.ஏ சோதனை எடுத்து உண்மையைத் தெரிஞ்சுப்பேன். ” சொன்னான்.
தம்பதிகளுக்குள் இது சம்மட்டி அடி. தலை கிறுகிறுத்தது. மயக்கம் வந்தது.
” இதுக்கும் நீங்க சம்மதிக்கலைன்னா…உண்மையை வரவழைக்க அடுத்தும் ஒரு வழி இருக்கு. என்னைத் தத்தெடுத்து நீங்க என்னைக் கொடுமைப் படுத்துறதா மனித உரிமை கமிசனுக்குப் புகார் அளிப்பேன். இல்லே… வழக்குத் தொடுப்பேன். அந்த வகையில நீங்க டி.என்,ஏ பரிசோதனைகன்கு வந்தே ஆகனும். உண்மை வெட்ட வெளிச்சமாகும். அந்த உண்மையில் நான் உங்களுக்கு மகன் இல்லேன்னா…உங்க வளர்ப்பு , பாசம், நேசத்தை உதறி .நன் கண்டிப்பா வீட்டை விட்டு வெளியேறி விடுவேன். அப்பா…! எனக்கு நான் யார்ன்னு தெரியனும். நீங்க அமைதியாய் இருக்க இருக்க… எனக்கு உங்க ரெண்டு பேரையும் அடிக்கும்; அளவுக்கு ஆத்திரம் வருதுப்பா. என் பிறப்புல ஏதோ மர்ம முடிச்சி இருக்கிறதா சந்தேகம் வலுக்குது. இப்படியெல்லாம் கோபப்படுறது, ஆத்திரப்படுறதெல்லாம்…. உங்க ரெண்டு பேரோட குணாதிசயம் இல்லே. தயவு செய்து என்னைப் புரிஞ்சிக்கிட்டு உண்மையைச் சொல்லுங்கப்பா…! ” எழில் கெஞ்சி தழுதழுத்தான். கண்களின் ஓரம் கொஞ்சமாய்க் கண்ணீர் துளிர்த்தது.
தாய்ப் பாசம். அகிலாவிற்கு அதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை.
” உண்மையைச் சொல்றேன் எழில். நீ தத்துப்பிள்ளை ! ” சொல்லி உண்மையை உடைத்தாள்.
முருகேசனுக்கு அதிர்ச்சி. இதை எதிர்பார்க்கவில்லை.
‘ என்ன கஷ்டம் வந்தாலும் மகனிடம் உண்மையைச் சொல்லக் கூடாது ! ‘ – என்கிற தங்கள் கட்டுப்பாட்டை மீறிய மனைவியைத் துணுக்குற்றுப் பார்த்தார்.
” சும்மா இருங்க. எத்தினி வருசத் தாக்கமோ….வயசுக்கு வந்த புள்ள மனசுல உள்ளதையெல்லாம் கொட்டி இவ்வளவு தூரம் கெஞ்சி கேட்கிறான் என்கிறபோது உண்மையைச் சொல்லாம இருக்கக் கூடாது. தத்துப்பிள்ளை பிள்ளையானாலும் அவன் சட்டப்படி நம்ம பிள்ளை. உண்மையைச் சொல்றதுல தப்பே இல்லே. மேலும்…. இந்த விசயத்தில் இவன் ரொம்ப சிந்திச்சிருக்கான். அதிக மன உளைச்சலில் தவிச்சிருக்கான். என் புள்ளைக்கு எதுனாலேயும் எந்த பாதிப்பும் வரக் கூடாது. நான் என் புள்ளையை இழக்க மாட்டேன். நீ தத்துப் பிள்ளைதான் கண்ணு.! ” கொட்டி தன் தாய்ப் பாசத்தை வெளியிட்டாள்.
எழிலனுக்கு உண்மை வெளி வந்ததில் அதிர்ச்சி, மகிழ்ச்சி. ஆனாலும்… அதை அவன் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
” என்னை எங்கே எப்படி தத்தெடுத்தீங்க..? ” அடுத்துக் கேட்டான்.
அகிலா உணர்ச்சி வேகத்தில் உண்மையை உடைத்து வி;ட்டாலும்…இதற்குப் பதில் சொல்ல வாய் வரவில்லை. திருதிருவென்று விழித்தான். அருகிலிருந்த கணவனைப் பாவமாகப் பார்த்தாள்.
” நீங்க சொல்லுங்க.. ” சொன்னாள்.
” சொல்லுங்கப்பா.? நான்… உங்க ரெண்டு பேர் உறவுக்காரக் குழந்தையா. இல்லே… முகம் தெரியாத ஏழைங்ககிட்ட பணம் கொடுத்து வாங்கிய பையனா…?. இல்லே…. அனாதை ஆசிரமம், மருத்துவமனை போய் தத்தெடுத்தீங்களா…? ” கேட்டான். .
உண்மை உடைந்து விட்டதால் முருகேசனுக்கும் இப்போது தெம்பு, தைரியம் வந்தது.
” தெரிஞ்சு என்ன செய்யப் போறே.. எழில் ? ” கேட்டார்.
” ம்ம்…. அடுத்தக் கட்ட நடவடிக்கையாய் அவர்களைத் தேடல் ! ” சொன்னான்.
” எழில்….! ” கணவன் மனைவி அலறினார்கள்.
” அதிர்ச்சி அடையாதீங்க. வேர்களைத் தேடி கண்டுபிடிக்க எனக்கும் ஆசை! தேடல்… நான் அவர்களோட ஒன்னு சேர்றதுக்கில்லே. என் குணாதியமும் அவர்கள் குணாதியமும் ஒத்துப் போயிருக்கான்னு பார்க்கிறதுக்கு. தொட்டுப் பார்க்காமல்…விசாரிச்சு….தாமரை இலை தண்ணீராய் திரும்பிடுவேன். தொட்டாலும்… அந்த அம்மா அப்பாவிடம் உண்மையைச் சொல்ல மாட்டேன். அவர்களைப் பொறுத்தவரை… நான் வேண்டாத பிள்ளை, வித்த பிள்ளை, செத்தப் பிள்ளை. எதுக்கு உண்மையைச் சொல்லனும். ? பிரச்சனை. !….நான் அவர்;களை நெருங்கி பேசாமல்…. தூர இருந்தே மத்தவங்க வாயால விசாரிச்சு வருவேன். இது சத்தியம். உண்மை. கடைசிவரை நீங்க தான் என் அப்பா, அம்மா ! ” சொன்னான்.
” இதுக்கு அவர்களைத் தேட வேண்டிய அவசியம் இல்லே எழில்.! ” முருகேசன் தன் மனதில் பட்டதைச் சொன்னார்.
” ஆமாம்ப்பா….” அவர் அருகிலிருந்த தாயும் அதை ஆமோதித்தாள்.
” இல்லே !.. வேர் தெரிஞ்சாத்தான் என் மனம் சாந்தி அடையும்..!” கறாராய்ச் சொன்னான்.
” இல்லே எழில். எனக்குப் பயமா இருக்கு..” சொல்லும்போதே அகிலாவின் குரல் உடைந்தது.
முருகேசனுக்கும் பயம்.
” மனுச மனசு நிலையில்லாதது எழில். சொந்த அம்மா, அப்பா…அங்கே உள்ள சூழல், ஏழ்மை, வறுமையைப் பார்த்தா மனசு மாறும்.! வாய்ப்பிருக்கு ! ” சொன்னார்.
” பெத்தத் தாய் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்து சுலபமாய் வளர்க்க முடியும்.. ஆனா.. தாயே இல்லாத ஒரு பெண் தாயாகி… குழந்தைக்குப் புட்டிப்பால் கொடுத்து வளர்க்கிறதென்கிறது ரொம்ப சிரமம். தாய் வளர்ப்பிற்கும் தத்து வளர்ப்பிற்கும் ரொம்ப வித்தியாசம், கஷ்டம் இருக்கு. உங்க தத்துக்கும் வளர்ப்புக்கும் நான் சத்தியமா துரோகம் செய்ய மாட்டேன். நான் கடைசி வரை உங்க பிள்ளை. நம்புங்க ! ” எழிலன் இருவரையும் பார்த்துச் சொன்னான்.
தம்;பதிகள் முகத்தில் கலவர மேகங்கள் மெல்ல விலகி கொஞ்சமாய் மலர்ச்சி வந்தது.
கவனித்த எழில்…
” என்னை எங்கே, எப்படி தத்தெடுத்தீங்க..விபரம் சொல்லுங்க ? ” கேட்டு மீண்டும் விசயத்திற்கு வந்தான்.
” ஒரு அனாதை ஆசிரமத்துல… ” அகிலா மெல்ல சொன்னாள்.
” எந்த அனாதை ஆசிரமம்…? ”
” புதுச்சேரி அரவிந்தர் அனாதை ஆசிரமம்.”
” எத்தனை வயசு குழந்தையாய்த் தத்தெடுத்தீங்க…? ”
” பொறந்து…. ஒரு மாசத்துக் குழந்தையாய்..”
” ஏன் எடுத்தீங்க…? ”
” நாங்;க ரெண்டு பேரும்…நல்ல வேலையில இருந்து அதிகமா சம்பாதித்தாலும்…பத்து வருசமா குழந்தை இல்லே……”
” குழந்தை இல்லாதது தப்பாம்மா…? ” தாயைப் பார்த்தான்.
” அது…. உறவு, ஊர், உலகத்துக்கு ஏளனம், தப்பா குறையாய்த் தெரியுது எழில்.!” என்றார் முருகேசன்.
” அப்படியா…? ” எழிலன் அகிலாவைப் பார்த்தான்.
” ஆமாம் எழில். அது வழி வழி மரபணு தாக்கம். அது எனக்கே பெரிய குறையாய் இழப்பாய், ஏக்கமாய்த்தான் தெரிஞ்சுது. அது மட்டுமில்லே….குழந்தை இல்லாம புருசனும் பொண்டாட்டியும் சந்தோசமாய்ச் சேர்ந்து வாழ்றது கொடுமை. வாழ்க்கையில்….. எந்தவித மாற்றமுமில்லாமல் ரொம்ப நாளைக்கு ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்துக்கிட்டு ரொம்ப போர். அதுவே வருசக் கணக்காய் ஆகும் போது கொடுமையோ…கொடுமை.! பிள்ளைகள் பிறப்பு, இருப்பு…இந்த கஷ்டம்;, கொடுமைகளைத் தடுக்குது. கணவன் மனைவி…. திருப்தி, நிம்மதியாய் வாழ… பிள்ளைகளும் ஒரு காரணம். பிள்ளைகளால..தம்பதிகள் கஷ்டப்பட்டாலும், நஷ்டப்பட்டாலும், பலன் இருந்தாலும் இல்லாது போனாலும்…அந்த ஏற்றத்தாழ்வுகள், கஷ்ட நஷ்டங்களெல்லாம் மனித வாழ்க்கைக்குத் தேவையாய் இருக்கு.” சொன்னாள்.
கேட்ட எழிலனுக்கு இது சரியாகப் பட்டது.
” சரி. என் அப்பா அம்மா யாரு…? ” கேட்டான்.
” அனாதை ஆசிரமத்துல பெத்தவங்க குழந்தைங்களை விட்டுப்போனதாய் சரித்திரம் இல்லே எழில்.” என்றார் முருகேசன்.
” இருக்குப்பா. முடியாத ஏழைகள் அப்படி விட்டுப் போனதா கேள்விப்பட்டிருக்கேன்.” பதில் சொன்னான்.
” சரி விடு. உன் அம்மா அப்பா எங்களுக்குத் தெரியாது! ” அகிலா அதற்கு முற்றுப் புள்ளி வைத்தாள்.
ஆனால் எழிலன் விடவில்லை.
” அங்கே நான் எப்படி வந்தேன்னு ஆசிரமத்துல சொல்லலையா..? ” அவளைத் திருப்பிக் கேட்டான்.
” இல்லே.”
” நீங்களும் விசாரிக்கலையா..? ”
” இல்லே.! ” – முருகேசன்
” ஏன்..? ”
”எங்களுக்கு அது தேவை இல்லாதது.”
பின்னால… என்னை எவராவது சொந்தம் கொண்டாடி சிக்கல் வரலாம் என்கிற பயம் காரணமாய்க் கூட நீங்க என் வரவைப் பத்தி அங்கே கேட்கலையா ? ”
” இல்லே..! ”
” ஏன்..? ”
” கேட்கத் தோணலை. தேவை இல்லே. கேட்கலை. ”
” அங்கே என் பேர் என்ன ? இதே பேர் எழிலனா ? ”
” இல்லே.”
” பேர் ? ”
” ராபர்ட் ! ”
” நான் கிருஸ்டினா ? ”
” தெரியலை….”
” புரியலை…? !” குழப்பமாகப் பார்த்தான்.
” எங்களுக்கு…மதம், குலம் பற்றி யோசனை இலிலே. அது தேவை, அவசியமில்லாதது. எங்களுக்குத் தேவை குழந்தை. அது கிடைச்சாச்சு. உன்னை சட்டப்படி தத்து எடுத்து வந்து…அப்புறம்…ராபர்ட் பெயரை நீக்கி எழிலன்னு எங்களுக்கு விருப்பப்பட்ட பெயரை வைச்சு …சட்டப்படி மாத்தினோம் அவ்வளவுதான் விசயம் முடிஞ்சுப் போச்சு ! ” சொன்னார் முருகேசன்.
இந்த தகவல் எழிலனுக்குத் திருப்தியாய் இருந்தது.
” உங்க கைவசம் இருக்கும் என் தத்துப் பத்திரம் எனக்கு வேணும்.. ” சொன்னான்.
” எதுக்கு..? ” அகிலா துணுக்குற்றாள்.
” ஆதாரம் இல்லாமல் நான் எப்படி அனாதை ஆசிரமத்துல விசாரிக்கிறது…? ”
” எழில் ! இது வீண் முயற்சி. அநாவசியம் ! ” முருகேசன் சொன்னார்.
” அவசியம்ப்பா. என் மன உளைச்சலுக்கு முற்றுப்புள்ளி.”
” கிடைக்கலைன்னா என்ன செய்வே..? ”
” முயற்சி செய்தோம் முடியலைன்னு விட்டுடுவேன்.”
” அந்த முடிவை இப்பவே எடுத்துடேன்.”
” முயற்சி செய்யாமல் எப்படிப்பா முடிவு, முற்றுப்புள்ளி வைக்க முடியும் ? ”
” நீ முயற்சி எடுத்து நீ யார் பிள்ளைன்னு தெரிஞ்சாலும் அவர்கள் பிள்ளையாகப் போறதில்லே. முடியாத காரியம். அப்புறம் எதுக்கு அந்த வீண் முயற்சி..? ”
” எனக்கு என் வேர்களைத் தேட, தெரிய…ஆசை, உரிமை இருக்கக் கூடாதாப்பா..? ” பரிதாபமாகக் கேட்டான்.
” இருக்கலாம் எழில். அதனால மனம் சாந்தி அடைய வாய்ப்பு கம்மி. வலி வர்றதுதான் அதிகம்.! ”
” புரியலை..?! ” அவரைக் குழப்பமாகப் பார்த்தான்.
” விசயத்தை உடைச்சு சொல்றேன். நீ கள்ள உறவுக்குப் பிறந்து… கொண்டு வந்து போட்ட குழந்தையாய் இருக்கலாம். எந்த சாதிக்குப் பிறந்தவன், எந்தெந்த சாதி கலப்பு, வாலிபனுக்குப் பிறந்தவனா, வயசானவனுனக்குப் பிறந்தவனா, அப்பா குரூபியா, அம்மா அசிங்கமா, ஏழைக்குப் பிறந்தவனா, பிச்சைக்காரர்களுக்குப் பிறந்தவனா…அப்படி இப்படின்னு இப்படி ஏகப்பட்டது இருக்கு எழில் ! ” நிறுத்தினார்.
அகிலா தொடர்ந்தாள்.
” அப்புறம்…. எனக்குத் தெரிஞ்சதைச் சொல்றேன். நீ தேடிப் போற வேர்….உன் அப்பா அம்மா இருக்கலாம். இல்லாமலும் இறந்து போயிருக்கலாம். இல்லே…. அவர்கள் வேற வேற குடும்பத்துல ஆளுக்கொரு மூலையில் எவர் எவருக்கோ கணவன் மனைவியாய் வாழலாம். இவர்களை எல்லாம் எப்படி கண்டு பிடிச்சி என்ன செய்ய முடியும்…? . கண்டு பிடிச்சாலும்…நீ அவர்கள்கிட்ட உன்மையைச் சொல்ல முடியாது. சொன்னாலும் அவுங்க ஏத்துக்குவாங்களோ ஏத்துக்க மாட்டாங்களோ தெரியாது. ஏத்துக் கிட்டாலும் சிக்கல். ஏற்காமல் போனாலும் உன்னால அவர்கள் குடும்பத்தில் குழப்பம், சிக்கல்.. இதுக்கு நீ பேசாமல்…அதெல்லாம் இறந்த காலங்கள்ன்னு ஒதுக்கி இந்த நிகழ்காலத்தை ஏற்று நடக்கிறதுதான் நல்லது.” சொன்னாள்.
” இதையெல்லாம் நானும் ரொம்ப யோசிச்சுட்டேன்ம்மா. இந்த யோசனை குழப்பத்தில்தான்…நான் உங்க கூட ஒருவாரமா சரியா பேசலை. பழகலை. நான் யார்கிட்டேயும் போய் என்னை அறிமுகப்படுத்திக்கப் போறதில்லே, பேசப் போறதில்லே. பழகப் போறதில்லே. என் அப்பா அம்மா யார், அவர்கள் குணாதியம் எப்படி ? அவர்கள் குணாதியசம்தாய் எனக்கு இருக்கா இல்லே… இயல்பாவே உங்களுக்கு மாறான இந்த குணாதிசயம் எனக்கு இருக்கான்னு தெரிஞ்சுக்கத்தான் இந்தத் தேடல்! ” சொல்லி எழிலன் மறுபடியும் முதலிடத்திற்கே வந்தான்.
கணவன் மனைவி இருவருக்கும்…’ இதற்கு மேல் மகனுக்கு புத்தி சொல்லி புரிய வைக்க முடியாது ! ‘ தெளிவாகத் தெரிந்தது.
” சரிப்பா. இதுக்கு மேல் உன் இஷ்டம். உன் திருப்தி தான் எங்க திருப்தி !” முருகேசன் சொல்ல….அதற்குச் சம்மதமாய்… அகிலாவும் தலையசைத்தாள்.
எழிலனுக்கு இவர்களிடம் சம்மதம் பெற்று விட்டதில் திருப்தி.
” சரிப்பா. நான் புறப்படுறேன்.” எழுந்தான்.
” எங்கே ? ” கேட்டாள் அகிலா.
” புதுச்சேரி. அரவிந்தர் அனாதை ஆசிரமத்துக்கு…”
” கொஞ்சம் இரு எழில்.நான் போய் உனக்குத் தேவையான அந்த தத்துப் பத்திரத்தை எடுத்து வர்றேன். ” சொல்லி முருகேசன் எழுந்து அடுத்து உள்ள அறையை நோக்கி நடந்தார்.
அவர்;…பத்து நிமிடங்களில் அந்த பத்திரத்துடன் திரும்பி வந்தார்.
” இந்தா பத்திரம். பத்ரம் ! ” சொல்லி மகன் கையில் கொடுத்தார்.
வாங்கிய எழிலன் அதன் முதல் பக்கத்தைப் படித்தான். விபரங்கள் சரியாக எழுதி இருந்தது. அடுத்தப் பக்கத்தைப் புரட்டினான்.
2
பத்திரப் பதிவுகள் போல்….தத்து எடுப்பவர்கள் என்கிற தலைப்பில்… முருகேசன் அகிலா சிறிய அளவு புகைப்படங்கள் ஒட்டி இருந்தது.
அதை அடுத்து தத்துப் பிள்ளை – ராபர்ட் என்கிற எழுத்துக்களுக்கடியில்… இவனின் குழந்தைப் பருவ புகைப்படம் ஒட்டி இருந்தது.
அடுத்து தத்து கொடுப்பவர்.. என்கிற குறிப்பின் கீழ்
அரவிந்தர் அனாதை ஆசிரம நிறுவனர் ஜான்சி என்கிற பெயரில்…முப்பது வயது பெண்ணின் புகைப்படம் ஒட்டி இருந்தது.
அவைகளை மனதில் படம் பிடித்து…முற்றிலும் படித்து முடித்து கையில் பத்திரப்படுத்திக்கொண்ட எழிலன்…நேராக நடந்து மாடியிலுள்ள தன் அறைக்குள் நுழைந்தான்.
முதுகில் சுமக்கும் பயணப் பையை எடுத்து…. அதில் தனக்குத் தேவையான நான்கு செட் பேண்ட் சட்டை துணி வகைகள், லேப் டாப், பென் டிரைவர், தத்து பத்திரம்… எடுத்து வைத்துக் கொண்டு கீழே வந்தான்.
முருகேசனும், அகிலாவும் இருந்த இடத்திலேயே இருந்தார்கள்.
” நான் வர்றேன்ப்பா, வர்றேம்மா ! ” சொல்லி விடை பெற்றுக் கொண்டு வாசலை நோக்கி நடந்தான்.
அகிலா – முருகேசன் வாசலுக்கு வந்து அவன் முதுகை வெறித்தார்கள்.
தங்களுக்கு இந்தப் பிள்ளை திரும்ப கிடைப்பானா…? என்கிற நினைவு வர…பெரு மூச்சு விட்டார்கள்.
2
புதுவை கருவடிக்குப்பத்தில்…ஒதுக்குப் புறமான ஒரு இடத்தில் பத்து ஏக்கர் பரப்பளவு நடுவில் எந்தவித ஆர்ப்பாட்டமுமில்லாமல்….அமைதியாய் இருந்தது அந்த அரவிந்தர் அனாதை ஆசிரமம்.
சாலையை ஒட்டிய சுற்றுச் சுவர் முகப்பிலேயே…வங்கிகளின் ஏ.டி.எம் அறை போல் உள்ள கண்ணாடி அறை வாசலில்…. ‘ குழந்தைகள் விடும் இடம்; ‘ என்று எழுதப்பட்டு அதற்குள்; நான்கு தொட்டில்கள் இருந்தது. ஏ.சி இயங்கி…அறையின் ஒரு மூலையில் கண்காணிப்புக் கேமரா இருந்தது.
முதுகில் மாட்டிய பயணப் பையோடு எழிலன் அதைத் தாண்டி உள்ளே நுழைந்தான்.
நடுவில்…. சாலை. இருமருங்கும் விசாலமான இடம். அதில்….தோட்டம். வகை வகையான மரங்கள், பூச்செடிகள், புல் தரைகள், .குழந்தைகள் விளையாட சறுக்கு மரம், தொட்டில், ஊஞ்சல், சுழல் நாற்காலிகள்.
கட்டிட படி ஏறினான் எழில்.
ஆடம்பரமில்லாத வரண்டாவில் ஒரு மேசை நாற்காலி. மேசை மேல் கணணி. அதன் திரையில்….கண்காணிப்புக் கேமரா காட்சிகள். சுவரெல்லாம் குழந்தைகளுக்கான ஓவியங்கள்.
புகைப்படக் கடைகளில் இருப்பதைப் போல் போர்டில்…இன்றைய அழகுச் செல்வங்கள் என்கிற தலைப்பின் கீழ்…பத்திற்கும் மேற்பட்ட ஆண் பெண் குழந்தைகளின் வண்ணப் புகைப்படங்கள் பின் விளக்கு மின்னொளியில் கொள்ளை அழகுகளில் சிரித்தன.
ஆசிரமம்….ஏனோ தானோவென்றில்லாமல் திட்டமிட்டு கட்டி வடிவமைக்கப் பட்டது போலிருந்தது.
எழிலன் அங்கு நாற்காலியில் அமர்ந்திருந்த பெண் முன் நின்றான்.
சீருடையில் இருந்த அந்த இருபது வயது பெண் இளம்பெண்…
” வணக்கம். உட்காருங்க சார்… ” இனிமையாகச் சொன்னாள்.
பதிலுக்கு வணக்கம் சொன்ன இவன்…எதிரிலுள்ள நாற்காலியில் அமர்ந்து தனது பயணப் பையைத் திறந்து அதில் தத்துப் பத்திரத்தை எடுத்து அவளிடம் நீட்டி…
” நான் எழிலன். திருநெல்வேலி. இந்த ஆசிரமத்துக் குழந்தை ! ” தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு கொடுத்தான்.
வாங்கிப் பார்த்த அவள் முகத்தில் மலர்ச்சி.
படித்து முடிக்க… முகத்தில் இன்னும் பிரகாசம்.
” நன்றி வாழ்க. என்ன விசயமா எங்களைப் பார்க்க வந்தீங்க…? ” கேட்டாள்.
” நான் ஜான்சி மேடத்தைப் பார்க்கனும்…” சொன்னான்.
” என்ன விசயமா பார்க்கனும்…? ”
” இந்த தத்து சம்பந்தமா அவுங்ககிட்ட பேசனும்…! ”
” ஏதாவது சந்தேகமா ? ”
” ஆமாம். ”
அதற்கு மேல் அவள் இவனைக் கேள்விகள் கேட்கவில்லை.
” ஒரு நிமிசம் ! ” சொல்லி தன் எதிரிலுள்ள இண்டர்காம் தொலைபேசியை எடுத்தவள்…உடன் வைத்து விட்டு எழுந்து .கையில் அவன் கொடுத்த பத்திரத்தை எடுத்துக் கொண்டு அடுத்து இருந்த வாசல் வழியே உள்ளே சென்றாள்.
பத்து நிமிடத்தில் திரும்பி வந்து…
” வாங்க பார்க்கலாம். ” அழைத்து எழிலனுடன் நடந்தாள்.
நடக்கும் பாதை மேலே கூரைகள் போட்டு நீண்ட வரண்டாவாக இருந்தது. அதன் இரு பக்கங்களிலும் திறந்தவெளி இடங்கள் அதில் மரங்கள். இடம்…. இலை தழைகளில்லாமல் தூய்மை, துப்புரவாக இருந்தது. அங்கு அறுபதிலிருந்து எழுபது, எண்பது… வயதை தொட்ட ஆண் பெண் முதியவர்கள் பேசி, சிரித்து, நடமாடி, அமர்ந்து கொண்டிருந்தார்கள். பத்துப் பதினைந்து வயது சிறுவர் சிறுமிகள் ஓடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். அதைத்தாண்டி வரிசையாய்க் கட்டிடங்கள். அறைகள்.
எழிலன் தன்னுடன் நடந்தவளை ஆச்சரிமாகப் பார்த்தான்.
இவன் பார்வையைப் புரிந்து கொண்ட அவள்…
” இது அனாதை ஆசிரம்….குழந்தைகள் காப்பகம் மட்டுமில்லே. முதியோர் காப்பகமும் உண்டு. இங்கே இருக்கும் முதியவர்கள் அழும், அழாத குழந்தைகளை எடுத்து பேரன் பேத்திகளாக தூக்கி, தொட்டு கொஞ்சலாம், பேசலாம், பழகலாம். அது குழந்தைகள் முதியவர்கள் ரெண்டு பேருக்குமே நல்ல ஆரோக்கியமான சூழல், மனமாற்றம், நெகிழ்வு. இங்கே குழந்தைகள் தத்து மட்டும் நடக்கலை. வயதானவர்களை அம்மா, அப்பாவாய் தத்தெடுத்துச் செல்லும் நிகழ்வுகளும்; நடக்கும், நடந்திருக்கு.! ” சொன்னாள்.
” அப்படியா…. ” கேட்ட எழிலனுக்கு ஆச்சரியம். பிரமிப்பாய் நடந்தான்.
முதல் அறை முகப்பிலேயே ஜான்சி, நிறுவனர் என்கிற போர்டு இருந்தது.
வாசல் கதவு திறந்தே இருந்தது. கணணி, கண்காணிப்புக் கேமரா என்று…அதுதான் முக்கிய நிர்வாக அறை என்பது அதன் அமைப்பிலேயேத் தெரிந்தது.
அவர்கள் அதில் நுழைந்தார்கள்.
மேசைக்கு அடுத்து இருந்த நாற்காலியில் ஐம்பது வயதில் ஜான்சி அமர்ந்திருந்தாள். தலையில் கொண்டை. முகத்தில் தங்க பிரேம் கண்ணாடி. சீருடை.
உடன் வந்தவள் எழிலன் பத்திரத்தை அவள் மேசை மீது வைத்து அகன்றாள்.
நின்ற எழிலன் ஜான்சியின் எதிர் நாற்காலியி;ல் அமர்ந்தான்.
” நான் எழிலன்.” மேசை மேல் இருந்த பத்திரத்தை அவள் அருகில் நகர்த்தினான்.
” பார்த்தாச்சு என்ன விசயமா என்னைப் பார்க்க வந்தீங்க…? ”
” எனக்கு என் அம்மா அப்பா விபரம் வேணும் மேடம்…” இவன் நேரடியாக விசயத்திற்கு வந்தான்.
சிறிது நேரம் அவனை உற்றுப் பார்த்த ஜான்சி, ” வேண்டாத பிள்ளைன்னு விட்டுப் போனபிறகு…அம்மா, அப்பான்னு யார் வருவா..? ” கேட்டாள்.
” அந்த அறையில கண்காணிப்பு கேமாரா இருக்கு மேடம். கொண்டு வந்து விட்டுப்போன ஆள் தெரியும் மேடம். ” சொன்னான்.
” ஓ…..! ” ஆச்சரியப்பட்டாள்.
” அந்த ஆளைப் பிடிச்சு விசாரிச்சா…. விசயம் விளங்கும் மேடம்..! ”
” அது ரொம்ப கஷ்டம் ! ”
” எனக்கு ரொம்ப மனக்கஷ்டம், அவுங்களைப் பார்க்கனும்ன்னு பிடிவாதம். மத்தப்படி ஒட்டு உறவு என்கிற எந்த நோக்கமுமில்லே மேடம்..! ”
” உனக்கு வயசு என்ன ? ”
” 22 மேடம். ”
” 22 வருட சம்பவத்தை எங்கே எப்படி புரட்ட…? ”
” தயவு செய்து கொஞ்சம் யோசனை செய்து பார்த்து சொல்லுங்க மேடம். ”
ஜான்சி தன் முன் இருந்த அந்த பத்திரத்தை எடுத்தாள், பார்த்தாள்.
கணணியைத் தட்டினாள். கொஞ்சம் கண் மூடினாள். யோசித்தாள். பின் விழித்து….
” ராபர்ட் ! என் நினைவுக்கு வந்ததைச் சொல்றேன். நீ இங்கே வந்த அன்னைக்கு ராத்திரி ஒரு மணிக்கு வாசலில் உள்ள தொட்டில் அழைப்பு மணி சத்தம் கேட்டு விழிச்சு போய் பார்த்தேன். பொறந்த குழந்தையாய் நீ மட்டும் கிடந்தே. தூக்கி வந்தேன்.” சொன்னாள்.
” என்னை அங்கு தூக்கிக் கொண்டு போட்டது யார் ? ” கேட்டான்.
” தெரியாது !. ஆனா…அங்கே .நான் எந்த குழந்தையை எப்போ எடுத்து வந்தாலும்…. காண்காணிப்புக் கேமரா ஓடவிட்டு…. யார் விட்டுப் போனா கவனிச்சு அதை அப்படியே அந்த குழந்தைப் புகைப்படத்தோடு… இந்த கணிணியில் பதிவு செய்து வைக்கிறது பழக்கம். காரணம்….பின்னால ஏதாவது திருட்டுக் குழந்தைன்னு புகார் வந்தால்…அதை போலீஸ்ல காட்டி நிரபராதின்னு தப்பிக்க அப்படி ஒரு ஏற்பாடு. அப்படிப் பார்க்கும் போது… உன்னை ஒரு முக்காடு போட்ட முஸ்லீம் பெண் தூக்கி வந்து போட்டுப் போனதாய் அதில் பதிவாகி இருந்துது. இங்கே சாதி மதம் கூடாது , வேணாம் என்கிறதுக்காக உனக்கு ராபர்ட்ன்னு கிருஸ்டின் பேர் வைச்சு மதம் மாற்றினேன். எப்பவுமே நான் இப்படித்தான். மும்மதம் சம்மதமாய் நான் எல்லாக் குழந்தைகளுக்கும் எல்லா பேர் வைச்சாலும் உன் விசயத்தில் மட்டும் இப்படி ஒரு மாறுபாடு. ” நிறுத்தினாள்.
” அப்புறம் மேடம்..? ” எழிலன் காரியத்தில் கண்ணாய் இருந்தான்.
” அதுக்கு அப்புறம்… நாளைஞ்சு நாள் கழிச்சு…உன்னைக் கொண்டு வந்து விட்டுப் போன அந்த முஸ்லீம் பெண்ணை எதார்த்தமா ஒரு பெரிய துணிக்கடையில் சந்திச்சேன். வயசு 20, 22 இருக்கும். மேடம் ! உங்க பேர் என்ன..? கேட்டேன். என்னை யார்ன்னு அவளுக்குத் தெரியலைன்னாலும்….குற்றம் உள்ள நெஞ்சு திடுக்கிட்டாள். ஏன் ? கேட்டு திடுக்கிட்டாள். பயப்படாதேம்மா…… எனக்கு உன்னை மாதிரி ஒரு முஸ்லீம் தோழி இருந்தாள். இப்போ இல்லே…அவள் சாயலில் நீ இருக்கே. அதான் கேட்டேன்ன்னு சொன்னேன். அதுக்கு அப்புறம்தான் அவள் பெயரை மும்தாஜ் பீவி சொன்னாள். எந்த ஊர் ? கேட்டேன். இந்த ஊர்தான். செட்டித்தெரு 7ஆம் நம்பர் வீடுன்னு விடுவிடுன்னு விலாசமும் சொன்னாள். அதுக்கு அப்புறம்….அவள் பலமுறை என் கண்ணில் பட்டாலும்…பேசலை.”
” ஏன் மேடம்..? ”
” என்னை யார்ன்னு தெரிஞ்சா கண்டிப்பா மிரண்டு அரள்வாள். யாருக்கு என்ன சூழ்நிலை, கஷ்டமோ…. அதனால…குழந்தையை விட்டுப் போனவங்க முகம் தெரிஞ்சாலும்… நான் கண்டுக்கிறதில்லே. ! என்னால் மதம் மாற்றப்பட்டவன் என்பதால் உன் நினைவு பசுமையாய் இருக்கு. ” சொன்னாள்.
” இப்போ… நான் எழிலன் என்கிற பேர்ல ஒரு இந்துவா இருக்கேன் மேடம். ” இவன் சொன்னான்.
” சந்தோசம். இப்போ நீ மும்மதம் சங்கமித்தப் பையன் !” சொல்லி அவனை ஆழமாகப் பார்த்து ஜான்சி மெல்ல முறுவலித்தாள்.
” இப்போ… செட்டித்தெரு ஏழாம் நம்பர் வீட்டுல பீவி இருக்காங்களா மேடம். ?” எழிலன் காரியத்திற்கு வந்தான்.
” இல்லே..! அதுக்கு அப்புறம் ரெண்டு மாசம் கழிச்சு அவளுக்குத் திருமணமாகி வெளி நாடோ, வெளி ஊரோ போய்ட்டாப் போல. கண்ணுல படலை. அவள் நிக்காஹ் டிஜிட்டல் பேனரை ஆனந்தா திருமண நிலைய வாசலில் பார்த்தேன். பெரிசா வைச்சிருந்தாங்க. ”
” இப்போ அந்த வீட்ல ஆள் இல்லையா மேடம்..? ”
” தெரியலை…” ஜான்சி கையை விரித்தாள்.
” நான் இங்கே இருக்கும்வரை என்னைத் தேடி யாராவது வந்தாங்களா மேடம்..? ”
”; வரலை.”
” இதுக்கு மேல என்னைப் பத்தி விபரம் தெரியுமா மேடம் ? ”
” இல்லே. கிடையாது.”
” இன்னொரு முக்கியமான கேள்வி மேடம்..”
” என்ன…? ”
” இந்த ஆசிரமம் எப்படி மேடம்…? ”
” புரியலை…? ”
” நான் எங்க ஊர்ல இருக்கும் ரெண்டு மூணு குழந்தைகள் ஆனாதை ஆசிரமங்களைப் போயிருக்கேன், பார்த்திருக்கேன். என் பொறந்த நாளுக்கு அந்த ஆசிரமங்களுக்கு என் அம்மா அப்பா விருந்து ஏற்பாடு செய்வாங்க. மதியம்… நாங்க போய் கொடுத்து சிறப்பா கொண்டாடி வருவோம். இது… அப்பா அம்மா மனிதாபிமான நேயல் செயல்ன்னு நெனைச்சேன். அது…என் கண்டெடு;ப்பின் நன்றிக் கடன்னு அதோட அர்த்தம் எனக்கு இன்னைக்குத்தான் தெரியுது. விடுங்க. அந்த ஆசிரமங்களெல்லாம்…. மக்கள் மேலுள்ள மக்கள் மேலுள்ள அன்பு, அபிமானம் , தொண்டுள்ளத்தோடு ஆரம்பிக்கப் பட்டதாய்த் தெரியலை. வெளிநாட்டுப் பணம், உதவிக்கு ஆசைப்பட்டு நடத்துறாப்போல தெரியுது. இந்த ஆசிரமம் அப்படி இல்லாமல்…மாறுபட்டு நடத்துறாப் போல என் மனசுக்குப் படுது. இது எப்படி என்னன்னு புரியலை… ” இழுத்தான்.
” இது என் சுயநலத்துக்காக ரொம்ப யோசிச்சு திட்டமிடப்பட்:டு உருவாக்கப்பட்ட ஆசிரமம்.” ஜான்சி தயங்காமல் சொன்னாள்.
எழில் துணுக்குற்றுப் பார்த்தான்.
” பட்டப்படிப்பு முடிச்சு எனக்கு இருபத்தி இரண்டு வயசுல திருமணம். மாப்பிள்ளை என்னைவிட அறிவு, அழகு. தகவல் தொழில் நுட்ப வேலையில் அதிக சம்பளம். சம்பந்திகள் ரெண்டு வீடும் வசதி என்பதால் திருமணம் நல்ல கோலாகலமாய் நடந்துது. உடன்…சென்னையில் தனி வீடு வாங்கி குடித்தனம். அஞ்சு வருசமா குழந்தை இல்லே. என்னென்னனோ வேண்டுதல்கள், முயற்சிகள்… பலனில்லே. ஆறாவது வருசம்….என் கர்ப்பப்பையில் கட்டி வந்து அதை எடுக்க வேண்டியதாய்ப் போச்சு. எல்லோருக்குமே அதிர்ச்சி. அதைவிட அதிர்ச்சி… மாப்பிள்ளை வீட்டிலிருந்து எனக்கு விவாகரத்து நோட்டீஸ். நீதிமன்ற முதல் அழைப்பிலேயே…அந்த வேலையை முடிச்சேன், முறிச்சேன். அதுக்கு அப்புறம்தான் இப்படி ஒரு ஆசிரமம் ஆரம்பிக்கனும்ன்னு ஞானோதயம்.! ”
எழிலன் சொன்னவள் வாயைப் பார்த்துக் கொண்டு இருந்தான்.
ஜான்சி தொடர்ந்தாள்.
” எனக்கும்… குழந்தைகள் ஆசை. பெற்றால்தான் பிள்ளையா…? நினைக்க….இப்படி ஒரு ஆசிரமத்தை ஆரம்பித்தால் வாழ்நாள் முழுக்க குழந்தைகளோடேயே குதூகலமா இருந்து சாகலாமே…தோணிச்சு. அம்மா அப்பாக்கிட்ட விசயத்தைச் சொன்னேன். சந்தோசமா சம்மதம் சொன்னதோடு மட்டுமில்லாம தங்கள் சொத்து முழுவதையும் தானமாய்த் தந்தாங்க. அதுல உருவானதுதான் இந்த ஆசிரமம். எந்தவித குறையும் இருக்கக் கூடாது என்பதற்காக யோசிச்சு யோசிச்சு இழைச்சேன். அப்படியே இங்கே முதியோர் காப்பகத்தையும் தொடங்கினேன். இந்த முதியோர் காப்பகத்து முதன் முதலாய் சேர்ந்தது என் அம்மா, அப்பா. ஆமாம்….எல்லா சொத்துகளையும் இதுக்காக இழந்த பிறகு அவுங்க எங்கே இருக்க முடியும்..? எனக்கு உதவிக்கு உதவி. உறுப்பினருக்கு உறுப்பினர்கள்.!
இங்கே குழந்தைகளைப் பராமரிக்க நல்ல தாய்மார்கள் மாத சம்பளத்துக்கு இருக்காங்க. இதைத் தவிர… என்னை மாதிரி குழந்தை இல்லாத ஆண் பெண் , தம்பதிகள் இங்கே வந்து இலவசமாய் கொஞ்சிப் போக அனுமதி உண்டு. அப்புறம்…பெரியவர்கள், குழந்தைகள் நோய் நொடிகளைக் கண்காணிச்சு குணப் படுத்த ரெண்டு டாக்டர்கள் முழு நேர பணியாளராய் இருக்காங்க. அவருக்கு உதவியாய் நான்கு செவிலிகள். அதுக்கப்புறம்…சமையல், தோட்டம் பராமரிக்கன்னு சில பேர். குழந்தைகளைத் தத்து எடுத்து பிச்சை எடுக்க வைக்கக் கூடாது என்பதற்காக தத்து எடுப்பவர்கள் பின்புலம் ஆராய்ந்து திருப்தியாய் இருந்தால்தான் தத்து. அதனால் தத்துக்காக இங்கே முன் கூட்டியே பதியனும். ” விபரங்கள் சொன்னாள்.
‘ எப்படி இப்படி ஒரு சிலரால் யோசிக்க முடிகிறது. நடக்க, நடத்த முடிகிறது..?!’ எழிலனுக்குள் ஒரு சிந்தனை வந்து சென்றது.
” மேடம்! அடுத்து ஒரு உதவி…என்னை விட்டுப் போன அந்த கண்காணிப்புக் கேமரா பதிவை எனக்குக் கொடுத்தால்…நான் பீவியை அடையாளம் கண்டு பிடிச்சு பேச வசதியாய் இருக்கும். இல்லேன்னா….ஆள் கிடைச்சாலும்…. நானில்லேன்னு அவுங்க சொல்லி தப்பிக்கிறதுக்கு வாய்ப்பிருக்கு! ” சொன்னான்.
ஜான்சிக்கு ‘ சரி ‘ சொல்ல சட்டென்று வாய் வரவில்லை
முகத்தில் சிந்தனைக் கோடுகள் படர்ந்தது.
” இது சம்பந்தமா உங்களுக்கு சங்கடம் வர வாய்ப்பில்லை மேடம். கள்ளம் உடையாக்கூடாது என்பதற்காக அவுங்க கட்டுப்பாடாய் இருப்பாங்க. ” சொன்னான்.
ஜான்சி இன்னும் கொஞ்சம் யோசித்து… எதையும் சமாளித்துக் கொள்ளலாம் என்று துணிந்து… சரி தலையசைத்தாள்.
எழிலன் அவளிடம் பென் டிரைவர் நீட்ட….அதில் ஜான்சி கணணியில் இருந்த அவன் காட்சி ஏறியது.
” நன்றி மேடம்..! ” சொல்லி எழுந்தான்.
3
செட்டித் தெரு புதுச்சேரி நகருக்குள்ளேயே இருந்தது. ஆட்டோவில் ஏறி விலாசத்தைச் சொன்னதும்….ஆட்டோக்காரர் அந்த வீட்டு வாசலிலிலேயே இறக்கி விட்டுப் போய் விட்டார்.
எழிலன் படி ஏறி அழைப்பு மணி அழுத்தினான்.
மடிசார் மாமி திறந்தாள்.
முக்காடு முஸ்லீம் பெண்மணியை எதிர்பார்த்த எழிலனுக்கு இது அதிர்ச்சி. வீடு மாறி வந்துவிட்டோமோ…பயம்!
” இ…இந்த வீடு ஏழாம் நம்பர்தானே… ? ” கேட்டான்.
” ஆமாம். ”
” மாறலையே….?! ”
” மாறலை. யார் வேணும்…? ” அவள் பதில் சடனாய் வந்தது.
” மும்தாஜ் பீவி…. ”
” அவுங்க இங்கே இல்லே. எங்ககிட்ட வித்துட்டு காரைக்கால் போய்ட்டாங்க.”
” அங்கே….எங்க…விலாசம்…? ”மறுபடியும் இழுத்தான்.
” மஸ்தான் பள்ளிவாசல் தெரு. 50ம் நம்பர் வீடு.”
நின்றான்.
” எங்களுக்கு அங்கே அது சொந்த வீடு. புள்ளைங்க படிப்பு, வேலை சம்பந்தமா நாங்க இங்கே மாற வேண்டிய கட்டாயம். புரோக்கர் மூலமா அவுங்களைப் பிடிச்சி .பேசி தொகை கொடுத்து வீட்டை மாத்தி எழுதிக்கிட்டோம். ” சொன்னாள்.
பேருந்து பயணத்தில்…. கணிணியில் பார்த்த மும்தாஜின் முகம் வந்து வந்து போனது.
‘ இப்போது அவளுக்கு எத்தனை வயது இருக்கும். கிட்டத்தட்ட நாற்பது நாற்பத்தைந்து ! ‘ கணக்குப் போட்டு உருவத்தைக் கற்பனை செய்து கொண்டு கழித்தான்.
காiரைக்கால்…பேருந்து நிலையத்தில் இறங்கினான்.
இங்கேயும் அவனை ஆட்டோக்காரர் மஸ்த்தான் பள்ளி வாசல் தெருவில் சரியான முகவரியில் கொண்டு வந்து விட்டார்.
அழைப்பு மணி அழுத்தினான்.
அவளே திறந்தாள். வயசு ஏற்றம், காலமாற்றம்….முகம், உடல் பூசி இருந்தது.
” மும்தாஜ் பீவி….” எழிலன் சந்தேகமாக இழுத்தான்.
” நான்…தான்..! ”
” உங்க வீடு புதுச்சேரி செட்டித்தெரு..? .” அந்த சந்தேகத்தையும் கேட்டான்.
” அதேதான்…! நீங்க….? ”
‘ உங்க மகன் என்று சொல்ல ஆசை.’ சொல்லவில்லை. மாறாய்…..
” உங்களுக்கு வேண்டியப்பட்டவன்…புதுச்சேரி அரவிந்தர் அனாதை ஆசிரமத்துப் பையன்…! ” சொன்னான்.
அவள் கண்களில் சட்டென்று ஒரு மின்னல். பயப் பார்வை.!
” நான் உங்க பையன்னு நெனைக்கிறேன். கொஞ்சம் உள்ளே வந்து பேசலாமா..?” துணிந்து சொன்னான்.
அவள் அடுத்து பேசாமல்…நம்ப முடியாதவளாய், ” வாங்க…” அழைத்து உள்ளே திரும்பினாள்.
இவனும் தொடர்ந்தான்.
வீடு வெளியே வீண் ஆடம்பரங்களின்றி சாதாரணமாய் இருந்தாலும்… உள்ளே…டைல்ஸ் கிராணைட்கள் பதித்து அமர்க்களமாய் இருந்தது.
தொலைக்காட்சிப் பெட்டி ஓடிக் கொண்டிருந்து. சுவர்களில் மும்தாஜ் கணவர் ஜோடியாக எடுத்தப் புகைப்படங்கள். அடுத்து இரண்டு குழந்தைகள் படங்கள் மாட்டி இருந்தது.
ஆனாலும்… வீட்டில் வேறு நபர்கள் இல்லாததற்கு அடையாளமாய் அமைதியாய் இருந்தது.
தொலைக்காட்சிப் பெட்டியை அணைத்துவிட்டு அவள் சோபாவில் அமர்ந்தாள்.
இவனும் முதுகு பயணப்பையைக் கழற்றி எதிர் சோபாவில் அமர்ந்தான்.
” வீட்ல யாரும் இல்லையா..? ” கேட்டான்.
” இல்லே. அவர் துபாய்ல இருக்கார். பொண்ணுங்க ரெண்டும் படிக்கப் போயிருக்கு.”
எழிலன்…தன் கைபையிலிருந்து….தத்துப் பத்திரத்தை எடுத்து……
” நான் அந்த ஆசிரமத்திலேர்ந்து தத்துப் போனதுக்கு ஆதாரம்..!” நீட்டினான்.
வாங்கிப் பார்த்த மும்தாஜ் முகத்தில் கொந்தளிப்பு. கைகளில் நடுக்கம். அதில்; ஜான்சி படத்தைப் பார்த்தும் கண்களில் மிரட்சி., மருட்சி. இவனின் அந்த குழந்தை பருவ படத்தை ஒரு நிமிடம் உற்றுப் பாhக்க…. கண்களில் பனித்துளி.
இந்த இடைப்பட்ட நேரத்தில் எழிலன் தன் லேப்டாப் எழுத்து உயிர்ப்பித்து அதில் பென் டிரைவர் சொருகி….
” நீங்க என்னை ஆசிரமத்துல விட்டு வந்ததற்கு அத்தாட்சியாய்…அங்கே உள்ள கண்காணிப்பு கேமராவுல பதிவான படம்.! ” .சொல்லி.. அவள் பக்கம் திருப்பிக் காட்டினான்.
பார்த்த பீவி உறைந்தாள். சத்தம் போடாமல் மனசுக்குள் விம்மினாள்.
” பயப்படாதீங்க. நான் உங்க அம்மான்னு வெளியில சொல்லவும் மாட்டேன். காட்டிக்கவும் மாட்டேன். அந்த பத்திரத்துல இருக்கிறவங்கதான் என்னைத் தத்து எடுத்து வளர்க்கும் என் உண்மையான அம்மா. நான் உங்களுக்கு வேண்டாத பிள்ளை. தூக்கிப் போட்ட கழிவு. சும்மா…. என் வேர்களைத் தேடி வந்தேன். மத்தப்படி எனக்கும் உங்களுக்கும்…அதாவது பெத்தவங்களுக்கும் எந்தவித சம்பந்தமுமில்லே. நேர்ல அம்மாவைப் பார்த்துட்டேன். படத்துல உள்ள உங்க கணவர்தான் என்னைப் பெத்த அப்பாவா..? ” கேட்டான்.
” இல்லே…நான் உன் அம்மாவும் இல்லே ” சொன்னாள்.
அதிர்வாய்ப் பார்த்தான்.
பீவி எதுவும் பேசாமல்;….எழுந்து எதிரிலுள்ள அறைக்குள் நுழைந்து கையில் சிறு புகைப்பட ஆல்பத்துடன் திரும்பி வந்து அமர்ந்தாள்.
பிரித்து ஒரு புகைப்படத்தைக் காட்டி……
” இவுங்கதான் உன் அம்மா அப்பா ! ” சொல்லி நீட்டினாள்.
அழகான ஒரு இளம் ஜோடி மார்பளவு புகைப்படம்..ஏறக்குறைய இவன் சாயலில் அவன்….
அதிர்ச்சியாய்ப் பார்த்தான். அடுத்துப் புரட்டிப் பார்க்க….மாணவ மாணவிகளாய் மும்தாஜ் பீவி மற்றும் சிலரோடு இவர்கள் கல்லூரியில் எடுத்தப் புகைப்படங்கள்.
நிமிர்ந்தான்.
” உன் அம்மா பேர் ராஜேஸ்வரி. என் தோழி. அவளும் நானும் கோவை கல்லூரியில் ஒன்னா படிச்சோம். அப்போதான்….எங்களோட படிச்ச பொன்னரசன் என்கிற வேத்து சாதிப் பையனைக் காதலிச்சாள். ரெண்டு வீட்டு அம்மா அப்பா எதிர்ப்புகளை மீறி கலியாணம் செய்துகிட்டு சென்னையில் குடி இருந்தாங்க.
இவள் அப்பாவுக்கு ஆத்திரம், அவமானம். தேடிப் பிடிச்சி…தனியே மாட்டிய பொன்னரசனை வெட்டி பொளந்து தள்ளிட்டு வீட்ல வந்து மனைவியோடு தற்கொலை செய்து கதையை முடிச்சிக்கிட்டார். ராஜேஸ்வரி…. நிறை மாத கர்ப்பிணியாய் என் வீட்டுக்கு வந்து அடைக்கலம் ஆனாள். வீட்டில் என் அம்மா இருந்து இவளை அரவணைச்சாங்க. பிள்ளை உயிரோடு இருக்க…பிரசவத்தில் ராஜேஸ்வரி இறந்ததுதான் எங்களுக்குப் பேரதிர்ச்சி. கைக்குழந்தையான உன்னை வைச்சிக்கிட்டு கன்னிப் பெண்ணான நான்… என் அம்மா, அப்பாவால என்ன செய்ய முடியும்…? அம்மா அப்பா யோசனையின்படி இரவு ஒரு மணிக்கு நான் உன்னை அந்த அனாதை ஆசிரம தொட்டிலில்; சேர்த்துட்டு திரும்பினேன்.” சொன்னாள்.
‘ நிஜமா…?! தன் பின் புலத்தில் எவ்வளவு சிக்கல்கள். பயங்கரம் ! ‘ மனம் கனத்தது. சிறிது நேரம் மவுனமாய் இருக்க அந்த கனம் மெல்ல கரைய.. எழிலனுக்குள்.. தனக்குள் தன் வேர் தேடிய திருப்தி வந்தது. ஆனாலும் அதில் கொஞ்சமாய் பிசிறு தட்டியது.
” என் அம்மா, அப்பா குணாதிசயம் எப்படி மேடம் !? அதையும் மனதில் வைக்காமல் கேட்டான்.
” அம்மா…புத்திசாலி. பொன்னரசனுக்குத்தான் கோபம், முரட்டுக் குணம் அதிகம். படிப்பில் சுமார் ! ” சொன்னாள் பீவி.
எழிலன் முகத்தில் மலர்ச்சி.
” வணக்கம். நன்றி ! வர்றேன் மேடம்!..என்னை மறந்துடுங்க.” சர்வ சாதாணமாக சொல்லி எழுந்து வாசல் நோக்கி நடந்தான்.
பீவி கண்களில் குபுக்கென்று கண்ணீர்.
‘ தன் தோழியின் உயிர், உதிரம், எச்சம் ! ‘ நினைக்க…தன்னையுமறியாமல் விம்மினாள்.