நீ யாருடன் மோதுகிறாய் தெரியுமா?
கேட்டவரை ஒரு நிமிடம் ஆழ்ந்து பார்த்தான் சிவா..தெரியும், இந்த ஊரில் மிகப்பெரிய தொழிலதிபர், பெயர் சாம்பசிவம், அந்த பெரிய மனிதரிடம் மோதிக் கொண்டிருக்கிறேன்.
ஒரு நிமிடம் அவனை உறுத்து விழித்தவர், இந்த பொடியனிடம் சண்டையிட்டு என் மரியாதையை குறைத்து கொள்வதா? இந்த எண்ணத்தில் அவனை போ என்று சைகை மூலம் காட்டினார்..
அவருடன் வாய் வார்த்தையில் மோதி பார்த்து விடுவது என்று எதிரில் நின்ற சிவா அவரின் சைகை கண்டவுடன் அங்கிருந்து நகர்ந்தான்.
என்ன சார் அவனை அப்படியே விட்டுட்டீங்க, பெரியப்பான்னு மரியாதை கூட இல்லாமல் ! உங்க முன்னாடியே அப்படி பேசிட்டு போறான். உங்க கடையில வேலை கத்து கிட்டவன், இப்ப இப்படி எதுத்து பேசிட்டு போறான், சும்மா அவனை அனுப்பறீங்க? பக்கத்தில் இருந்த சாம்பசிவத்தின் நெருங்கியவர் கேட்டார்.
போகட்டும், அவன் என் கூட மோதித்தான் பார்க்கட்டுமே..!
அந்த ஊரில் மொத்த சரக்கு வியாபாரக் கடை ஒன்றை அந்த நகரின் மத்தியில் நடத்திக் கொண்டிருந்தார் சாம்பசிவம் விவசாய பொருட்கள் முதல், புதிய எலக்ட்ரானிக் சாமான்கள் வரை அவரது கடைக்குள் நுழைந்துதான் அடுத்த கடைகளுக்குள் போகும். அந்த அளவுக்கு ஏஜன்சிகளாய் எடுத்து அந்த நகரின் வியாபார உலகத்தை நிர்ணயிக்கும் சக்தியாய் தன்னை வைத்திருந்தார். அதற்குத்தான் இப்பொழுது ஒரு அடி விழுந்திருக்கிறது சிவா சொந்த தம்பியின் மகன், இவனுக்கு தொழில் கற்று கொடுத்தது தவறாக போய்விட்டது.
இந்த கடைக்கு பக்கத்திலேயே ஒரு கடையை திறந்திருக்கிறான். அவரை பார்க்கும்பொழுது சிவா ஒன்றுமில்லாதவன். சாதாரண பணக்காரன் அவ்வளவுதான்.
அவரை விட சற்று குறைவாக அனைத்து கடைகளுக்கும் மளிகை முதல் அனைத்து பொருட்களையும் கொடுக்கிறான். நிறைய சிறு கடைக்காரர்கள் இப்பொழுது சிவாவின் வாடிக்கையாளர்கள் ஆகியிருந்தார்கள். மளிகை பொருட்களிலும் தன்னுடைய போட்டியாளராகியிருந்தான் சிவா.
அவனை வியாபாரத்தில் கவிழ்க்க ஆரம்பத்தில் முயற்சித்த சாம்பசிவம், போகப்போக அவனின் வளர்ச்சியை தடுக்க முடியாமல் தடுமாறினார். இப்படியே விட்டால் இவன் கை மீறி இந்த வியாபார உலகை பிடித்து விடுவான் என்பதை அறிந்தவுடன் பதட்டமானார். சிவாவை நேரடியாக மிரட்டி வைக்க ஏற்பாடு செய்தார்.
அன்று ஒரு நிகழ்ச்சி ஒன்றில் இவரை பிரதம விருந்தாளியாகவும், சிவாவை மற்றொரு விருந்தாளியாகவும் ஒரு நிறுவனம் அழைத்து சிறப்பித்திருந்தது.அங்கு வந்து கலந்து கொண்டு இருவரும் ஓய்வு எடுப்பதற்காக கொடுக்கப்பட்டிருந்த அறையில் சாதாரணமாக பேசிக்கொண்டிருந்த அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பேச்சு வார்த்தை தடித்து சாம்பசிவம் சிவாவை பார்த்து மிரட்டி பேசும் சூழ்நிலை வந்து விட்டது.
விழாவுக்கு இவர்களை அழைத்தவர்களும், விழாவிற்கு வந்திருந்த மற்ற பெரிய மனிதர்களும் சமாதானப்படுத்த முயற்சித்தாலும் பக்கத்தில் இருந்த நெருக்கங்கள் சாம்பசிவத்தை அடிக்கடி உசுப்பேற்ற, இந்த சச்சரவு பெரியதாகி விட்டது. சிவா அங்கிருந்து கிளம்பி விட்டான். விழா அழைப்பாளர்கள் அவனை சாந்தபடுத்த முயற்சித்த பொழுது, பரவாயில்லை இன்னொரு முறை பார்க்கிறேன் என்று சொல்லி விட்டு விடை பெற்றுக்கொண்டான்.
இரண்டு மூன்று வருடங்கள் ஓடியிருந்தன. சிவா தன்னை நன்றாக வியாபார உலகில் நிலை நிறுத்திக்கொண்டான். சாம்பசிவத்துக்கு வர வேண்டிய பெரிய பெரிய ஏஜன்சிகள் இவனை தேடி வர ஆரம்பித்தன. அந்த நகரத்தில் சாம்பசிவமா, சிவாவா? என்கிற அளவிலேயே வியாபார போட்டி இருந்தது.
திடீரென சாம்பசிவத்துக்கு உடல் நிலை சரியில்லாமல் அங்கிருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடனே மருத்துவர்கள் அவரை இரண்டு மாதமாவது ஓய்வு எடுங்கள் என்று சொல்லிவிட்டார்கள். சாம்பசிவம் சற்று ஓய்வு எடுக்க விரும்பினார். சிவாவுக்கு போனை போடு..! சொன்ன சாம்பசிவத்தை ஆச்சர்யத்துடன் பார்த்தார் அவரது காரியதரிசி. தயங்கிய அவரை பார்த்து ம்..போடு மீண்டும் சொல்லவும் காரியதரிசி போனை சிவாவின் எண்ணுக்கு அழுத்தினார்.
போனை எடுத்த சிவாவின் காரியதரிசியிடம் எங்கள் முதலாளி உங்கள் முதலாளியிடம் பேச விரும்புவதாக சொல்லவும் சிவா லைனுக்கு வந்தான். அவர்கள் என்ன பேசிக்கொண்டார்களோ தெரியாது, அன்று மாலை பிரபல ஓட்டலில் சிவாவும், சாம்பசிவமும் யாருக்கும் அறியாத வகையில் சந்தித்து கொண்டனர்.
சிவா..பயபக்தியுடன் அவர் முன்னால் நிற்க சாம்பசிவம் சரி நான் இரண்டு மூணு மாசம் ரெஸ்ட் எடுக்க போறேன், பாத்துக்க..இடையில எவனும் நுழைஞ்சிட கூடாது,
இவர் சொல்ல சிவா தலையாட்டிக்கொண்டே அதெல்லாம் நான் பாத்துக்கறேன், நம்ம இரண்டு கடைய தவிர்த்து இப்ப எவனும் புதுசா வர முடியாது. இரண்டுமே உங்களுதுதான்னு எவனுக்கு தெரியும். .நீங்க இரண்டு மாசம் ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க பெரியப்பா..
இருவரும் சத்தமில்லாமல் அந்த ஹோட்டலை விட்டு வெளியேறி பிரிந்து அவரவர்கள் இருப்பிடங்களுக்கு சென்றனர்.