வீட்டுக்கு வரவேயில்லை!

0
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 19, 2013
பார்வையிட்டோர்: 9,743 
 
 

“எதுக்குப்பா? இவ்வளோ அவசரமா? அதுவும் கோயிலுக்கு? அப்படியென்ன, வீட்ல பேச முடியாத விஷயம்?’ – படபடவென்று மகனை வேதனை தோன்ற பார்த்தார் ராஜமாணிக்கம். திரட்டி வைத்திருந்த தைரியமெல்லாம் மகனின் இந்தத் தவிப்புக்கும் பாசத்துக்கும் முன் காணாமல் கரைந்து போவதை அவரது உள்மனம் உணரத்தான் செய்தது.

“உட்காரேன்…’ மேல்துண்டால் திருக்குளத்துப் படிக்கட்டைத் தட்டினார். ஆளரவமற்ற மூலை. அரையிருட்டு, குளத்து மீன்கள் அந்த மெல்லிய வெளிச்சத்தில் அசாத்திய ஜொலிப்புடன் துள்ளிக் கொண்டிருந்தன. அப்பா கண்ணெடுக்காமல் அதிலேயே லயித்திருந்தார்.

“சொல்லுங்கப்பா!’

வீட்டுக்கு வரவேயில்லை!தான் பேச வேண்டிய வார்த்தைகளையெல்லாம் அந்தக் குளத்தில் விழுந்து விட்டதைப் போன்றதொரு தவிப்போடும் சோகத்தோடும், வார்த்தைகளை மீட்டுக் கொள்ளும் ஒரு தீவிர பாவத்தில் தன் கண்களை இடுக்கி, உதடு கடித்துக் குனிந்து கொண்டார். சமநிலையில் அவர் இல்லை என்பதை மட்டும் சட்டென்று உள்வாங்கிக் கொண்டான் அவன்.

“சிவா, நீ உன் பொண்டாட்டியை அழைச்சிக்கிட்டுத் தனியாப் போயிடுடா!’ – தன் வாழ்க்கையில் ஆகப் பெரிய வலியை உணர்ந்தான் சிவா – அந்த நிமிஷத்தில். வாயடைத்துப் போயிற்று. வெகு நேரம் கழித்தே, “ஏம்பா’ என்றான்.

“பொறுப்பில்லாம, கவலையில்லாம, ஃபூல்! சாப்பிடறதுக்கும் தூங்கறத்துக்கும் தான் நீ வீட்டுக்கு வறியா?’

“என்னப்பா, அதான் நீங்க எல்லாத்தையும் பார்த்துக்கிறீங்களே? அப்புறம்?’

“க்கும்! நான் “பார்த்துக்கிறேன்…’ ஆனா நான் “வெறுமனே பார்த்துக்கிட்டே’ தானடா இருக்கேன்!’ – அப்பா மிக ஆற்றாமையோடு பேசினார்.

“ஏம்பா, வித்யா ஏதும் கத்தினாளா? அவளுக்கு இப்பல்லாம் ஜாய்தியா கோபம் வருதில்ல… ஆக செக் பண்ணணும்….. but, she’s good. அவ நல்லவதான்ப்பா…’

“ஆனா என் பெண்டாட்டி நல்லவ இல்லயேடா…’ அப்பா பரிதாபமாய்ச் சொன்னார்.

“ஓ, அப்பா, கமான்! சாதாரண லேடீஸ் ப்ராப்ளம் – அதையா இத்தனை பெரிசாப் பேசணும்னு கூப்பிட்டீங்க? நான் என்ன மோன்னு பயந்தேன்…’ காற்றை விழுங்கிப் பெருமூச்சு விட்டுக் கொண்டான் சிவா!

“உனக்கு புரியப் போறதில்லை…. இன்னும் வேளை வரலை போலருக்கு… சரி நீ கிளம்பு!’

ஆனாலும், சொல்லத் தெரியாத வலி மனசெங்கும், வித்யாவா? பிரச்னையா? எப்படி முடியும்? காலையில் பத்து மணிக்குள் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்தாள் எனில், குவிந்து கிடக்கும் டி.டி.பி. வேலைகளில் புதைந்து போவாள். எல்லாம் பக்கத்திலுள்ள இன்ஜினீயரிங் காலேஜ் பசங்களின் ப்ராஜக்டுகள்…! இத்தனைக்கும் நடுவில் அவளுக்கு வம்பு பேசவும் சண்டைக்கு நிற்கவும் கூட நேரமிருக்கிறதா? வித்யா, அண்ணியைப் போன்றோ, அல்லது தம்பி மனைவியைப் போன்றோ இல்லையென்று இறுமாந்திருந்ததெல்லாம்…?

“சார், விசிட்டர்!’ பத்தே முக்காலுக்கு ப்யூன் ராமசாமி தகவல் சொன்னதும், யாராயிருக்கும் என்ற யோசனையோடு நடந்தான் சிவா. ரிசப்ஷனில் அப்பா! முகம் அத்தனை சரியாகயில்லை. அன்ளைக்குக் குளக்கரையில் கண்டதை விடவும் இருண்டிருந்தது.
“வா என்னோட, ஒரு அரைமணி நேரம்!’ ஒரு கட்டளை போல் அவர் சொன்னாலும், அந்தக் குரலில் கொஞ்சம் கலவரம்; நிறைய வேதனை. தலையைக் கூட வாரிக் கொள்ளாமல் அவர் வந்து நின்ற கோலம் அவனைச் சங்கடப் படுத்தியது.

“சரி, எங்க?’ பர்மிஷன் போட்டு, வண்டியை கிளப்பினான்.

“வீட்டுக்கு!’ பின் சீட்டில் தடுமாறி ஏறிக் கொண்டார்.

அடுத்ததாய் என்ன கேட்பதென்று புரியவில்லை. வீட்டில், ஆறு வருடங்களாய் சக்கர நாற்காலியிலேயே சமைந்து போன ஜீவனாய், அம்மா இருக்கிறாள்…. அவளது இடது காலை சக்கரை தின்று தீர்த்திருந்தது. ஒரு பக்கம், சிறுகுறிஞ்சான் பொடி, வேப்பம்பூ ரசம், நாவல்பழக் கொட்டை என்று தூள் கிளப்புவாள்.

“ஆமாம் போ!’ – என்று அடுத்த வேளை காப்பிக்கே இரண்டு ஸ்பூன் சர்க்கரை கேட்பாள்.

“ரெண்டு வீட்டுக்கு முன்னாடியே வண்டியை நிறுத்திடு. நீ பின்வாசல் வழியாவே வா’

“பச்! என்னப்பா இது?’

“சொல்றதைக் கேளுடா…’

“வந்துட்டீங்களா?’ – சக்கர நாற்காலியை உருட்டி வந்து ஏறக்குறைய அப்பாவின் மேல் மோதுவது போல் நிறுத்தினாள் அம்மா.

“தூக்கிக் கடாசுங்க அந்த சனியனை!’

“எதை?’

“அந்தக் கம்ப்யூட்டரைதான்… இவ மாசா மாசம் நீட்டுற பத்தாயிரத்துக்கு இந்த வீட்டு மானத்தை விக்கணுமா?’

“இப்ப என்ன குடி முழுகிப் போச்சு?’

“நீங்க போயி ஒரு அரைமணி நேரம் இருக்குமா? அதுக்குள்ள ஒரு ஏழெட்டுப் பேருக்கு ஃபோன் போட்டு இளிச்சு இளிச்சுப் பேசியாச்சு! பத்தாகுறைக்கு இன்னும் அரைமணிக்குள்ள வான்னு ஒருத்தனைக் கூப்பிட்டிருக்கு! கிட்டத்தில சேர் போட்டு உட்கார்ந்துகிட்டு கும்மாளம் போட… என்ன நடக்குது இந்த வீட்ல?’- அம்மா மூச்சிரைக்க ஆங்காரமாய்க் கத்தினாள்.

“எல்லாம் சரியாத்தான் நடக்குது விசாலம்! நீ ஒருத்தி நடக்கலைங்கறதால உலகமே ஒழுக்கம் கெட்டுப் போயிடாது… கையெழுத்துப் புரியலையேன்னு சந்தேகம் கேட்டிருப்பா. இல்ல, நீ கொடுத்த வேலை முடிஞ்சிடுச்சு… வந்து வாங்கிட்டுப்போன்னு தகவல் சொல்லியிருப்பா…’

“இருக்கட்டும்… அதெப்படி? சொல்லி வைச்சாப்புல எல்லாரும் ஆம்பிளை கஸ்டமர்தானா?’

“சீ… அபத்தமாப் பேசாத… வாயை மூடிட்டு உன் ரூமுக்குப் போ முதல்ல… இல்ல…’

“எனக்கு இந்தக் கால் விளங்காம போனதுக்குப் பதில் கண்ணும் காதும் போயிருக்கலாமே… பகவானே!’

சிவா இத்தனையையும் கேட்டுக் கொண்டு அடுப்படியிலேயே நின்றான். க்றீச் என்ற சப்தத்துடன் சக்கர நாற்காலி ரூமுக்குள் நுழைந்ததும் பாய்ந்து முன்னறைக்குச் சென்றான் சிவா. வித்யா டேபிளில் கவிழ்ந்து குலுங்கிக் குலுங்கி அழுது கொண்டிருந்தாள்.

“இப்பவாவது புரியுதா?’ என்கிற பார்வையோடு அப்பா நகர்ந்து கொண்டார். சந்தேகம் சர்க்கரையை விடக் கூடுதல் வேகத்தில் அம்மாவைத் தின்கிறது… வித்யாவைக் கொல்கிறது!

சிவாவுக்குத் தெரியும்! சினிமாக்களும் சிறுகதைகளும் காட்டுகிற அம்மா தமக்கு வாய்க்கவில்லையென்று! சராசரிக்கு சற்று கீழ்தான் – பாசம், பரிவு, இங்கிதம் எல்லாவற்றிலும். சிவாவின் அண்ணனும் தம்பியும் வீட்டை விட்டுப் போனதைக் கூட மிக எளிதாக ஏற்றாள். அம்மாவைப் பொறுத்தவரை உறவுகளென்பது ரத்த சம்பந்தம் உள்ளவர்களுக்குள் நடக்கும் சம்பிரதாயங்கள் நிறைந்த வியாபாரம்! போகட்டும்! அதற்காக வித்யாவைக் குறி வைப்பதா?

“சொல்லு வித்யா, தனியாப் போயிடலாமா?’ நகம் வெட்டுவதை நிறுத்தி விட்டு சிவாவைப் பார்த்துச் சிரித்தாள். “ரெண்டரை வருஷமா மாமா தினம் நூறு தரம் சொல்றாங்க! நான் அதுக்கே மசியலை… என்ன? வருஷக் கணக்கில் அம்மா இப்படிக் குதறியெடுக்கிறாளா? இதான், இவ்வளவுதான் விடு.
ஒரு விஷயம் சொல்லவா? உங்க கிட்ட நூறு ரூபா இருந்தா நீங்க ஒரு ரூபா பிச்சை போடுவீங்க! நீங்களே பணம் இல்லாம நிக்கறப்போ, ஒருத்தன் உங்ககிட்ட கைய நீட்டினா, வெறுப்பா விரட்டுவீங்க! இல்லையா? அந்த மாதிரிதான். அத்தைக்கிட்ட கொடுக்கிறதுக்கு இப்ப வெறுப்பைத் தவிர வேற ஒண்ணும் இல்ல… விடுங்க! அவங்க சுபாவம் அப்படி!’

“தினம் சந்தேகத்தினாலேயே சாகலாம்னு முடிவு பண்ணிட்டியா?’

“என் சுபாவம் இப்படி!’

நேற்று முழுக்க, பொங்கலுக்காக வீட்டைச் சுத்தம் செய்ததில் பயங்கர அசதி. “க்றீச்’ என்ற சத்தத்துடன், ஹாலில் ஆஜராகிவிடும் அம்மாவையும் காணோம். ஆறரைக்கு வித்யா காப்பி டம்ளரைக் கையில் கொடுத்த போதும் கூட, அம்மா ரூமிலேயே இருந்தாள். ஏதோ உந்தித் தள்ள, அறைக்கதவைத் திறந்த வித்யா, அதே வேகத்தில் அலறினாள். அம்மா, காதோரம் வரை நுரை தள்ளியிருக்க, நிலைகுத்திய பார்வையோடு, மல்லாந்து, செத்துக் கிடந்தாள். “ஐயையோ, வெறும் வயத்துல, சிறுகுறிஞ்சான் பொடின்னு நினைச்சு எலிமருந்தைச் சாப்பிட்டாங்க போலிருக்கே!’ – வித்யா பெருங்குரலில் கதறினாள்.

வாக்கிங் சென்றிருந்த அப்பா வெளிறிப் போய்த் திரும்பி வந்தார்.
16 நாள் காரியமெல்லாம் முடிந்து வீடு இன்று பழைய ரொட்டீனுக்கு வந்திருந்தது. என்றாலும் ஒரு சூன்யம் சுற்றி வருவதைப் பொறுக்க முடியாமல் சிவா, “எனக்கு ஒரு விஷயம் புரியல! சிறுகுறிஞ்சான் பொடி அம்மாவுக்கு எட்றாப்புல எப்பவும் கீழ்தட்டுல தான் இருக்கும். எறும்பு மருந்து, எலிமருந்தெல்லாம் மேல ஷெல்ஃப்ல கிடக்கும்! எப்படி அம்மா மாத்தி எடுத்திருப்பாங்க? முதல்ல மேல் தட்டுலேர்ந்து எப்படி எடுத்திருப்பாங்க?’ – சாப்பிட மனமில்லாம் சோற்றை அளைந்தபடி பேசிக் கொண்டிருந்தான்.

மறுநாள் காலையில் வாக்கிங் சென்ற அப்பா, ஏனோ, வீட்டுக்கு வரவேயில்லை!

– ரோஷினி (ஜனவரி 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *