கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 10, 2024
பார்வையிட்டோர்: 261 
 
 

(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“ஏம்மா !கொஞ்சமாவது அறிவிருக்கா… ?பச்சப் புள்ளையை போட்டு அடிச்சிருக்கிறே… உனக்கெல்லாம் கல்யாணம்னு ஆகிக் கணவன்னு ஒருத்தன் வந்து ஒரு புள்ளைன்னு உண்டாகிப் பொறவு வளர்த்தியானா, அப்பா தெரியும் பசங்களோட அருமை…. புள்ளைங்களோட பெருமை”… அந்தச் சிறுவனின் தாய், கௌசல்யாவை வசை பாடினாள்.

முந்தின நாள் ஒரு சிறுவனை வகுப்பில் அடித்ததனால் வந்த வினை இது!

“அப்படியில்லேம்மா… உன் பையன் வீட்டுக் கணக்கு, போட்டுட்டு வரணும்னு சொல்லியனுப்பிச்சா, ஒழுங்காப் போட்டுட்டு வர்றதில்லை? வகுப்பிலே சொல்லிக் கொடுக்கிறதையும் சரியாக் கவனிக்கிறதில்லை… அவனுக்கு எப்படிப் படிப்பு வரும்…?” கௌசல்யா மறுமொழி கூறினாள்.

“அது பத்தி உனக்குக் கவலை எதுக்குன்றேன்? படிக்கிறானா?, இல்லியான்றதைப் பத்தி நானில்ல கவலைப் படணும். நீங்கள்லாம் ஒழுங்காகச் சொல்லிக் குடுத்தாக்க அவங்க… ஏன் படிக்காமப் போறானுங்க?” அந்தச் சிறுவனின் அம்மாள் ஒன்றும் தெரியாமல் எகிறினாள்.

அதைக் கேட்டதும் கௌசல்யா சிறிது சினம் கொண்டாள். அந்தம்மாவுக்கு எப்படி அதைப் புரிய வைப்பது?

“அதோட கூட இந்தப் பொண்ணுக் கிட்டே குறும்பு வேற பண்ணியிருக்கான். உம் பையன்… இவ பாவாடையைத் தூக்கறதுக்காக முயற்சி செஞ்சி அவ தொடையில வேற கிள்ளியிருக்கான்… வகுப்பிலே இதை நானே நேர்ல பார்த்துட்டுத் தான் முதுகில இரண்டு வச்சேன்… பிரம்பாலே விளாசினேன்…” நியாயம் கற்பித்தாள் கௌசல்யா. “ஆமாம், நீங்க மட்டும் யோக்கியமாக்கும்! வாத்தியாருங்கக் கூடச் சிரிச்சிப் பேசிட்டுக் கும்மாளம் போட்டுட்டுக் கூத்தடிச்சிட்டு இருப்பீங்க… அதைப் பார்த்துட்டுத் தான் இந்த பயலுங்கள்லாம் கெடுறானுக அதான் இதுபோல எம்மவன் செஞ்சிருப்பான்…மொதல்லே நீங்களெல்லாரும் ஒழுங்கா வந்து ஒழுங்காப் பாடம் சொல்லிக் குடுத்தாக்க, ஏன்… இந்தப் பசங்கள் எல்லாம் இப்படிக் கெட்டுப் போறானுங்க…” அந்த அம்மாள் வார்த்தைகளை நெருப்பாய் அள்ளி வீசினாள்.

கௌசல்யாவுக்குச் சுரீர்ரென்று மனம் தீய்ந்து போனது. மனம் கசந்து கோபமாய்ப் பேசினாள். “சர்தான், போம்மா! உம் பையன் பால வகுப்பிலே ஒருத்தன் இருந்தான்னாக்க, அதுகூட வேணாம், பள்ளிக்கு ஒருத்தன்னு இருந்தாலே போதும்… நல்லாப் படிக்கிற, நல்லா இருக்கிற பசங்களும்கூடக் கெட்டுப்போயிடுவானுங்க…” என்றாள்.

“சரிதான் போம்!சிறுக்கி மவ மாதிரிச் சும்மாச்கம் சிலுத்துக்குறே… நீ ஒருத்திதான் கண்ணகி போலச் சொல்லிக்குடுத்துப் பசங்கள் எல்லாத்தையும் விளங்க வைக்கிறீயாக்கும். உனக்கும் வவுத்திலே புழு, பூச்சின்னு உண்டாகிப் புள்ளைக்குட்டின்னு ஒண்ணு இருந்திச்சின்னாக்கத் தான் அப்போ தெரியும் புள்ளையோட அருமை? டேய் நாயீ! வாடா போகலாம்… கட்டையில போறவனே… இந்தச் சிறுக்கிக் கிட்ட படிச்சிக் கிழிச்சது போதும் வா… அப்படிப் படிச்சி என்னாத்தைக் கிழிக்கப்போற? உங்கப்பன் தான் குடிச்சிச் சீரழிஞ்சி போறான்னா… நீயாவது ஒழுங்காப் குட்டிச் கவராப் போயிடுவே போல இருக்கேடா. பேமானி!படிச்சது படிச்சி நாலு எழுத்துத் தெரிஞ்சிக்கிட்டு வேலைக்குப் போயி நாலு காசு சம்பாதிப்பேன்னு நான் நெனச்சாக்க… நீ என்னடான்னா இப்படிக் கெட்டுக் குட்டிச் சுவராப் போயிடுவே போல இருக்கேடா. பேமானி! படிச்சது போதும், புத்தகப் பையை எடுத்துட்டு வா… வந்து ஒழுங்கா இட்டிலிக் கடை வியாபாரத்தை எங்கூட இருந்து கவனிச்சிக்க… அது போதும் உனக்கு” கைகளால் நெட்டி முறித்து விட்டு அந்தச் சிறுவனை இழுத்துக் கொண்டு கோபத்துடன் அவள் பள்ளியை விட்டு வெளியேறினாள்.

பக்கத்து அறையில் இருந்த ஆசிரியர்-ஆசிரியைகள் எல்லாரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கௌசல்யாவைக் கோபமும், வேதனையும் வாட்டி வதைத்தன. பெரிய அவமானமாய்ப் போய்விட்டது. அவளுக்கு ‘ஓ’ வென்று கதறி அழலாம் போபிருந்தது.

அந்தச் சிறுவனின் தாய், தனக்குச் ‘சாபமிட்டது, கண்டு மனம் வெந்தும், நொந்தும் போனாள்…

வீடு –

இரவு நேரம்… மங்கலான வெளிச்சத்தில் கணவனின் பக்கம் திரும்பிப் படுத்தாள். பள்ளியில் நடந்தது எல்லாவற்றையும் சொன்னதும், கண்களில் கண்ணீர் அவளின் கன்னத்தில் கோடு போட்டது அவளின் நெஞ்சம் விம்மியது.

“சரிதான் போடீ! உனக்கும் வவுத்திலே புழுப், பூச்சின்னு உண்டாகிப், புள்ளைககுட்டினனு ஒண்ணு இருந்துச்சின்னாக்கத் தான் அப்போ தெரியும் புள்ளையோட அருமை…” காலையில் அந்தச் சிறுவனின் தாய் குத்திக் காட்டிய வார்த்தைகள் மனத்தில் முள்ளாய்த் தைத்தன, ஈட்டியாய்ப் பாய்ந்தன…

“ஏங்க… என்னாங்க… !நமக்குன்னு ஒரு வாரிசு வேணும், குழந்தைன்னு சொல்லிக்கிட்டு நெஞ்சுல சாத்திக்கிட்டுப் பாலூட்டணும், இரண்டு கால்லேயும் கிடத்திட்டுக் குப்புறப் படுக்க வச்சிக் குளிப்பாட்டணும், ஈரம் காயுறதுக்காகச் சாம்பிராணிப் புகையைப் போட்டுத் தலையை மெல்லத் துவட்டணும், அந்தப் பிஞ்கக் கையும், பஞ்கக் காலும் என் நெஞ்கல எட்டி எட்டி உதைக்கணும் போல ஆசையாய் இருக்குங்க… எனக்கு அந்தப் பாக்கியம் கெடைக்கலைங்களே…? அந்தம்மாவோட சாபம் உண்மையாகவே என்னைப் பழிவாங்கிடுச்சோன்னு தோணுதுங்க…” சத்தமாய்க் கேவிக்கேவி வாய்விட்டு அழுதாள் கௌசல்யா.

“அடி அசடு! இதுக்குப் போயா அழறே… கடவுள் மேலே நம்பிக்கை வைம்மா.. நாம யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யலே… கடவுள் பெரும்பாலும் நல்லவங்களைத்தான் வாழ்க்கையில் அதிகம் சோதிப்பாரு… நீ மனத்தைப் போட்டுக் குழப்பிக்காதே…” அவளை அணைத்து, மெல்ல அவள் முதுகில் தட்டிக் கொடுத்தான் அவனது கணவன்.

“முதல்லே ‘நாம் இருவர்-நமக்கு இருவர்’ ன்னு சொன்னாங்க, அப்புறம் ‘நாம் இருவர்-நமக்கு ஒருவர்’ ன்னு சொன்னாங்க, இப்போ நாம் இருவர்- நமக்கேன் ஒருவர்ன்னு கேட்கிறாங்க, இதுகூடச் சரிதான்னு படுதும்மா எனக்கு..ஏன்னா.. நீயே எனக்குக் குழந்தைபோலத் தானேடா…!” அப்படிச் சொல்லி முடித்தானோ, இல்லையோ, உடனே அவனை அப்படியே கட்டிக் கொண்டு, ”ஒ” வென்று கதறி அழுதாள் அவள். அந்த அழுகையில் அவளது கண்ணிரில்… அந்த “வாரிசு” என்ற ஏக்கம் பனிக் கட்டியாய் மெல்லக் கரைந்து போயிற்று.

– கவிஞர். கோ.சந்திரன், ஓமகுப்பம்

– மனங்கவர் மலர்கள் , முதற் பதிப்பு: ஜூன் 2005, சிங்கைத் தமிழ்ச் செல்வம், சிங்கப்பூர்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *