வாணியைச் சரணடைந்தேன்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 4, 2024
பார்வையிட்டோர்: 3,723 
 

(2013ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 11-12 | அத்தியாயம் 13-14

அத்தியாயம்-13

“என்னடா.. ஏனிந்தக் கண்ணீர்?” என்று மறுபடியும் கேட்டான் வித்யாசாகரன். 

“அது… உங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தேனா…” என்று மதுரவாணி பதில் சொல்லத் தொடங்கவும், “என்னது? என்னை நினைத்ததும் அழுதாயா? நான் என்ன அவ்வளவு கோரமாகவா இருக்கிறேன்? இந்தக் கோரத்தை போய் மணக்க வேண்டியிருக்கிறதே என்று வருத்தத்திலா, அழுதாய்? பாவமாய் பயங்கரமாயிருக்கிறதே!” என்று கண்ணை உருட்டிப் படபடவென்று வேகமாகப் பேசினான் வித்யா. 

அவனது வேடிக்கை புரிந்தது “வருத்தப்பட்டால் மட்டும்தான் கண்ணீர் வருமாக்கும்?” என்று கேட்டாள் அவள். 

“ஓஹோ! அப்படியானால் இந்த அழகு மன்மதனை அடைய இருப்பது குறித்து வந்த ஆனந்தக் கண்ணீர் இது என்று சொல்லு” என்றுரைத்து சட்டைக் காலரைத் தூக்கி விட்டு. அவன் பெருமை காட்ட அவளுக்குச் சிரிப்பு வந்தது! 

இருந்திருந்து இந்த நேரத்தில் நீதாவின் பேச்சு எதற்கு? 

வந்த காரியம் பலிக்காமல் திரும்பிச் சென்ற புஸ்வாணம் அவள்!

“ஆமாம் ஐயா என்ன, இந்த நேரத்தில் இங்கே சுற்றிக் கொண்டிருக்கிறீர்கள்? தொழிற்சாலை, அலுவலகம் எதிலும் வேலையில்லையா? நேற்று மட்டும்தான் விடுமுறை என்று நீங்கள் சொன்னதாக எனக்கு ஞாபகம்! அல்லது மறதியில் நேற்றை இன்று என்று தப்பாக எண்ணி விட்டீர்களா சார்?” என்று கேலிக் குரலில் கேட்டாள் அவள். 

“விட்டால் ஒரு சாட்டையைக் கையில் எடுத்து வேலையைப் பார்… ஓடு.. என்று விரட்டுவாய் போல…” என்றான் அவள் பதிலுக்கு! 

“பின்னே… மாட்டேனா? நாளைக்கு அரை வயிற்றுக் கஞ்சிக்காவது வழியிருக்க வேண்டுமே! முழுப் பட்டினியெல்லாம் என்னால் முடியாதம்மா” என்று அவள் பதில் கொடுக்கவும் “வாணியல்லவா? வாயைக் கொடுத்து மீள முடியுமா? ஆனால் நினைவிருக்கட்டும்? என்னைப் பொறுத்தவரையில் நீ மது மட்டும்தான்!” என்று அவன் ஒரு பார்வை பார்க்க, அடக்க மாட்டாமல் அவளது கன்னங்கள் சூடேறின! 

நல்லவேளையாக அந்த நேரத்தில் “வாருங்கள் தம்பி நேற்று விழா மிகவும் சிறப்பாக நடந்தது. நிலாப் பொண்ணு ஜொலித்தாள், அவளுக்குப் பரிசு கிடைத்தது பற்றி, ரொம்ப சந்தோஷம்” என்றவாற மணிவாசகம் வந்து சேர்ந்தார். 

“அது பற்றித்தான் அவளது பள்ளிக்குப் போய், அவளது வகுப்பாசிரியை, தலைமை ஆசிரியை எல்லோரிடமும் சொல்லிவிட்டு வந்தேன். அவர்களுக்கும் ஒரே மகிழ்ச்சி! பள்ளிக்குப் பெருமை தேடித் தந்திருக்கிறாள் நிலா என்று பாராட்டினார்கள்..! ம்ம்ம்… அவளது இந்தச் சாதனைக்காக நிலாவுடைய வகுப்பாசிரியை உன்னிடம் நன்றி சொல்லச் சொன்னார்கள். மதுரவாணி. முக்கியமாக அதற்காகத்தான் வந்தேன்” என்று முறுவலித்தான் அவன். 

அவனது ஓரக் கண்ணின் லேசான சிமிட்டல். அதற்காக மட்டுமாக வரவில்லை என்று வாணியிடம் ரகசியமாய்த் தெரிவித்தது. 

நிலாவுக்குப் பரிசு கிடைத்தது பற்றி எல்லோருக்குமே அளவிட முடியாத ஆனந்தம்! 

கிடைத்த நேரத்தில் எல்லோரும் கூடி கூடிப் பேசினார்கள். 

பத்திரிகைகளில் வந்த செய்தி, படங்களைப் படித்தும் பார்த்தும் ஆனந்தப் பட்டார்கள். 

பள்ளி வாசகசாலை ஒன்றில் பணி புரிந்த ஒரு பெண், வித்யாசாகரனின் நிறுவன அலுவலர் ஒருவரை மணம் புரிந்து ‘சொர்க்க புரி’க்கு வந்திருக்கும் சேதி தெரிந்ததுமே, அவளைக் ‘கலைவாணி’க்கு அனுப்பி விட்டான் வித்யாசாகரன், 

அவள் வேலையை திறமையோடு ஏற்று நடத்த, மணிவாசகம் இலகுவாக இருக்க முடிந்தது. 

வாணியும் உறுத்தலின்றி நிலா வீட்டில் பெருமளவு பொழுதைக் கழிக்க முடிந்தது. 

அதற்காக அவள் நன்றி தெரிவித்தபோது “எல்லாம் சுய காரியமாகச் செய்ததுதான்” என்றான் வித்யா. 

அவள் கேள்வியாக நோக்கவும் “மெய்! நாளைக்கு திருமணமாகித் தேனிலவுக்குக் கிளம்பும்போது, என் தாத்தாவால் வாசகசாலையைத் தனியே நிர்வகிக்க முடியாது என்று, நீ கூட வர மறுத்து விட்டால்? தேனிலவுக்கு நான் மட்டும், தனியாகவா போக முடியும்? அதற்காகத்தான்!” என்று அவள் காதுக்குள் அவன் கிசுகிசுக்க, வாணியின் கன்னங்கள் செந்நிறம் பூசிக் காண்டன. 

பேச்சும் சிரிப்புமாக பொழுதைக் கழிக்கையில் வாணி, வித்யாவின் அன்பு விவரம் வெளிப்பட்டு விட, அதுவும் எல்லோருக்கும் மகிழ்ச்சியையே அளித்தது! 

பளீரென்று முகம் மலர, “இதை நான் ரொம்பவும் ஆசையாக எதிர்பார்த்தேன்” என்றாள் சுபா. “முதலில் இருந்தே!” என்றாள் தொடர்ந்து. 

ஆனால், வாணி கேலியாக நோக்கவும், “நிஜம் வாணி! காட் பிராமிஸ். காரணம் எங்கள் நிலாதான், சூடுபட்ட பூனை மாதிரி, அவளுக்கு லேசில் எந்தப் பெண்ணையும் பிடிக்காது! ஆனால், உன்னைப் பிடித்துப் போயிருந்தது தான், அடிப்படை! முன்னே புத்தகம் எடுக்க வரும்போதே ‘லைப்ரரி ஆன்ட்டி’ அழகாய் இருக்காங்க என்பாள். அப்போது நாங்கள்… அம்மாவும் நானும்தான். அதைப் பெரிதாக நினைக்கவில்லை, பக்கத்தில் நின்று இரண்டு வார்த்தை பேசுமுன் வெறுத்து ஒதுங்கி விடுவாளே என்று நினைப்போம்! அந்த அளவுக்கு அம்மா, நான் தவிர, மற்ற பெண்களிடம் அவள் தொட்டால் சிணுங்கி…” என்று சுபா சொன்னபோது முதல் நாள் நீதாவைப் பார்த்ததும், நிலா உறைந்து போய் நின்றது, வாணிக்கு நினைவு வந்தது. 

நீதா கூப்பிட்டபோது கூட அசையவில்லையே!

நிலாவுடைய வகுப்பு ஆசிரியைகூட. அவளைப் பற்றி இப்படித்தான் ஏதோ கூறினார்! 

“…ஆனால் போட்டிக் கதைக்காக உன்னிடம், அவள் தானாக வந்து பேசியதே, எங்களுக்கு அதிசயம். அவளுக்கு உதவியாக ஏதோ சொன்னாயாமே! அதிலிருந்து நிலா உன் பயங்கர விசிறி. விட்டால் விசிறி சங்கமே தொடங்கி, கூட்டம் போட்டு… அதிருக்கட்டும். அடுத்த முறை நீ அவளை வாசகசாலைக்கு வரக்கூடாது என்று விரட்டிய அன்று, இரவெல்லாம் ஒரே அழுகை. அப்போதுதான் அம்மாவுக்கும் எனக்கும் பொறி தட்டியது. அதைவிடக் கூடாது, முயன்று பார்க்க வேண்டும் என்று நினைத்தோம், ஏனென்றால், அப்போது நித்தியண்ணனைப் பற்றி எங்களுக்குக் கவலை வந்திருந்தது. நிலாவோடு சேர்ந்து அவருக்கும் அன்னியப் பெண்களைப் பிடிக்காத நிலை! இன்னொரு பக்கம் நீதா. கதைப் போட்டி ஒரு சாக்கு கிடைத்திருக்கிறதா? என் மின்னிக் குட்டியை அம்மாவிடம் விட்டுவிட்டு நான் வந்தேன், நல்லவேளை! தாத்தாவும் வீட்டுக்கு வந்தாரா? இனிமேல், நானும் அவரைத் தாத்தா என்று சொல்லலாம்தானே? அன்றைக்கு அவரிடம் உன்னைப் பற்றி துளைத்து எடுத்து விட்டோம். அவர் சொல்லச் சொல்ல…எங்களுக்கு உச்சி குளிர் விட்டது! அப்புறம், அடிக்கடி அங்கே வருவதும் இங்கே கூப்பிடுவதுமாக… எப்படியோ, நாங்கள் ஆசைப்பட்டது நடந்து விட்டது” என்று அவளறிய நடந்ததை எல்லாம் சுபா உற்சாகத்துடன் பிட்டு வைத்தனர். 

புன்னகையோடு ஆமோதித்தார் தேவகி! 

“ஆஹா! இந்தச் சூது தெரியாமல் அப்பாவியாக, ஏமாளியாய், இந்த லைப்ரரி மேடத்துக்கு, நான் காரோட்டி வேலை பார்த்தேனே, ஒரு காசு சம்பளம் கூட இல்லாமல்!” என்று போலியாக வருத்தப்பட்டான் வித்யா 

“புதையலையே அடித்துக் கொண்டு வந்து விட்டு, பைசாவுக்கு கணக்குப் பார்க்கிறான் பார்!” என்று தேவகி கூற, எல்லோரும் குபீரென நகைத்தனர்! 

இப்படி எல்லோருடனும் கலகலப்பாகப் பேசிக் கொண்டிருப்பது பிடிக்காமல், பிரித்துக் கொண்டு போனாளாமே! அவள் எப்படியிருப்பாள்? 

உறவினள் ஆகப் போகிறாள் என்பதாலோ என்னவோ, முதல் முறையாக வாணி சுலேகாவைப் பற்றி யோசனை வந்தது! 

இப்படித்தான் என்று காட்டுவது போல கணவனுடன் நேரிலேயே வந்து நின்றாள் சுலேகா!

“கடவுள் கொடுத்த கெட்டிக்கார மகள். குடத்துக்குள் விளக்காய் வீணாகும்படி விட அம்மா, அப்பாவால் முடியுமா? குன்றின் மேல் நிறுத்தி, மொத்த உலகத்துக்கும் காட்டுகிற கடமையைத் தாய் தகப்பன் தானே செய்தாக வேண்டும்? அதற்காகத்தான், அங்கே எல்லாவற்றையும் அப்படி அப்படியே விட்டு விட்டு அவரும் நானும் வந்திருக்கிறோம்! இப்போதே நிலாக் கண்மணியை எங்களோடு அழைத்துப் போய், ஈர்க்குச்சியாக இருக்கும் அவள் உடம்பைக் கொஞ்சமேனும் தேற்றி, அப்புறம் அங்கிருந்து, அப்படியே லண்டனுக்குப் போகப் போகிறோம்?” என்று அவள் அறிவித்தபோது அங்கிருந்த யார் முகத்திலும் ஈயாடவில்லை. 

லண்டனில் நிலாவுக்குப் பரிசு கொடுக்கும் நாள் நேரம் மற்றும் விவரங்கள் இரு தினங்களுக்கு முன்தான் வந்திருந்தன! 

தாய், தந்தை நிலையில் இரண்டு பேரை அழைத்து வர அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது! 

இலவசப் பயணம்! இரு மாத கால அவகாசமும் இருந்தது! 

பள்ளியில் ‘கார்டியன்’ என்று வித்யாசாகரனின் பெயரே இருந்ததால், வாணியை மணந்து, இருவருமாக நிலாவை அழைத்துச் செல்லலாமே என்பது தேவகியின் கருத்து! 

வித்யாசாகரனுக்கும், அது பிடித்திருந்தது என்பதோடு சரியாகவும் பட்டது! 

மணிவாசகத்தின் மூலமாக, மதுரவாணியுடைய பெற்றோர்களிடம் விவரம் சொல்லி, மேற்கொண்ட ஏற்பாடுகளைச் செய்யலாம் என்று திட்டமிட்டிருந்தனர். 

இப்போது, எல்லாவற்றையும் தகர்த்து எறிவது போல, அம்மா, அப்பா என்று சொல்லிக் கொண்டு வந்து நின்ற சுலேகாவைப் பார்க்கையில் வித்யாசாகருக்கு நெஞ்சு கொதித்தது! 

அவள் பேசிய எல்லாவற்றுக்கும் மண்டையை உருட்டும் தலையாட்டி பொம்மை போலக் கூட வந்து வாய் திறவாது நின்ற அண்ணனைப் பார்க்கும்போது அவனது கோபம் இன்னமும் அதிகமாயிற்று. 

இவனிடமிருந்து நிலாவுக்கு விடுதலைப் பத்திரம் வாங்கி விடாமல் தடுத்த தந்தை மீதும் கூட இப்போது அவனுக்கு ஆத்திரம்தான். 

ஆனால், அவை அனைத்தையும் விட, நிலாவைப் பற்றி பயம்தான். அவனுடைய தாய், தங்கையைப் போல அவனுக்கும் அதிகமாக இருந்தது! 

இப்போதுதான் அவள் மீண்டு வந்து கொண்டிருக்கிறாள். 

அதுவும் வாணியிடம் உள்ள ஒட்டுதலும் அவளோடனான பழக்கமுமாக, நிலாவுக்கு முலாம் பூச, அவள் பூவாய் மலர்ந்து கொண்டிருந்தாள் எனலாம்! வயதுக்குரிய உற்சாகமும் துள்ளலுமாக அவளைப் பார்க்கவே, மனதுக்கு சந்தோஷமா இருக்கும். 

இந்த நிலையில் அவளை அவர்கள் அழைத்துப் போனால், பழைய மாதிரி நத்தைக் கூட்டுக்குள், நரங்கிப் போய்விட மாட்டாளா? 

அப்படி என்ன பாசத்தில் வந்தவர்களா? 

ஓசி லண்டன் பயணம்! கூடவே அவளுக்கு வரக் கூடிய பரிசுகள்! இதெல்லாம்தானே இவர்களை இழுத்து வந்திருக்கின்றன. 

பெற்ற மகள் வேண்டாம், அவளைப் பற்றிய பொறுப்புகளை எண்ணிப் பார்ப்பது கூடக் கிடையாது! ஆனால் அவளால் வரக்கூடிய ஆதாரங்கள் மட்டும் வேண்டுமா? 

திகைத்து நின்ற சுபாவின் பின்னே மிரட்சியுடன் முடிந்தவரை மறைந்து நின்ற நிலாவைப் பார்த்ததும், வித்யாசாகரின் உள்ளே தீப்பிடித்தது. 

ஆத்திரத்துடன் ஏதோ சொல்ல அவன் வாயைத் திறக்குமுன் அவசரமாக “அதெல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்! இப்போது பயணக் களைப்பாக இருக்கும். இரண்டு பேரும் போய் குளித்துவிட்டு வந்து சாப்பிடுங்கள்” என்று மூத்த மகன் மருமகளை அங்கிருந்து அகற்ற முயன்றார் தேவகி. 

சின்ன மகனின் சீற்றம், அவள் அறிந்ததுதானே? 

ஆனால், கழுகுக்கு மூக்கில் வேர்த்தது போல, இந்த நேரத்தில் நித்யானந்தனும் சுலேகாவும் அங்கே எப்படி வந்தார்கள் என்பது அப்போது தெரிய வந்தது! 

“அதெல்லாம் ஒன்றும் வேண்டாம்! கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறையாக எங்களை விரட்டிய இந்த வீட்டில் சாப்பாட்டுக்கு வந்து நிற்பதற்கு, நாங்கள் ஒன்றும் வக்கற்றுப் போய் விடவில்லை. என் சித்தப்பா வீட்டில் எல்லாம் முடித்துக் கொண்டுதான் வந்தோம். இப்போதும் சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டு உடனே அங்கே சாப்பிட வந்துவிட வேண்டும் என்று நீதா ஆசையாக சொல்லி, அதன் பிறகுதான் எங்களை அனுப்பியிருக்கிறாள்?” என்றாள் சுலேகா! 

நீதா! அவள் தகவல் கொடுத்துதான், இவர்கள் இருவரும் அங்கே வந்திருக்கிறார்களா? 

பாவி! பாதகி! ஒரு சின்னக் குழந்தையை வதைப்பதில், அவளுக்கும்தான் என்ன லாபம்? குறைந்த பட்சமாகச் சும்மா இருந்திருக்கலாமே என்று தவித்தது வித்யாவின் மனம்! 

அவனது தவிப்பின் எதிரொலிபோல, “நீதாவா? அவளா? அவள்தான் இந்தப் பரிசு பற்றியெல்லாம் தெரிவித்தாளா?” என்றாள் சுபா. 

அவள் சும்மா இருந்திருக்கலாம். இப்போது அடுத்த குத்து வருமே என்று வித்யா நினைக்கும்போதே “ஆ…மாம்” என்று ஒரு நொடிப்புடன் தொடங்கினாள் சுலேகா! 

“பெண்ணுக்குப் பெரிய பரிசு கிடைத்திருக்கிறது. வெளி நாட்டுக்குக் கூட்டிப் போய் வர வேண்டும்… வாருங்கள் என்று இந்த வீட்டில் இருந்து தகவல் தெரிவித்து அழைத்திருக்க வேண்டும்! யாரேனும் செய்தார்களா? வீட்டுக்கு மூத்த பிள்ளை என்று பேர்தான் ‘பெத்த’ பேர்! மற்றபடி, என் நித்தியிடம்தான், இங்கே யாருக்கும் பாசமே கிடையாதே! நல்லவேளை என் சித்தப்பா மகளுக்கு உள்ளத்தில் அக்கறை இருந்தது! சொன்னாள். இல்லா விட்டால், எங்கள் நிலா.. அந்தப் பலவீனமான குழந்தைக்கு, இந்தப் பயணம் தாங்காமல் ஏதாவது கெட்டது நேர்ந்திருந்தால் கூட அதையும் எங்களுக்குச் சொல்லாமல் தானே விட்டிருப்பீர்கள்?” 

என்ன பேச்சு பேசுகிறாள்! 

கை முஷ்டி இறுக, அண்ணனைப் பார்த்தான்.

ஆனால் மறுபடியும் அவளேதானா? 

மனைவியே பேசிப் பேசிக் கேட்டுக் கொண்டிருந்தது. அண்ணனுக்குப் பேசவே மறந்து போய் விட்டதா? 

நிலா மறுபடியும் தந்தையோடு சென்றால், என்ன ஆகும் என்பதற்கு இது ஓர் ‘ஒரு சோற்றுப் பதம்.’ 

இந்த மாதிரி மறைமுகமாகவும், நேரடியாகவும் குத்திக் குத்திப் பேசி, அந்தக் குழந்தை மனதை இவள் நோகடிப்பாள். காந்திஜியின் ‘மூன்று குரங்குகள்’ போலக் கண், காது, வாய், எல்லாவற்றையும் மூடிக் கொண்டு, நித்யானந்தன் உட்கார்ந்திருப்பான்! இதற்கும் மேலாக, அவன் இல்லாத நேரம் இருட்டறை வாசம், பட்டினி போடுவது எல்லாமே நடக்கும்! நிலா ஓய்ந்து ஒடுங்கி, நரங்கிப் போவாள்! 

இதை எப்படி அனுமதிப்பது? 

எது எப்படி ஆனாலும், இதை ஒரு போதும் நடக்க விடக்கூடாது என்று முடிவு செய்தான் வித்யாசாகரன். 

என்ன, மிஞ்சி மிஞ்சிப் பணம்தானே இவர்களுக்கு வேண்டும்? 

இவர்கள் கேட்ட பணத்தைக் கொடுத்துவிட்டு ஒரு தரம் பாடுபட்டு உழைத்து, மீண்டு வரவில்லையா? இன்னொரு தரமும் அதையே செய்து விட்டால் போகிறது? 

தொழிலில் நல்ல பெயரும், அனுபவமும் இருப்பதால் முன்னே விடவும் சீக்கிரமே வளர்ந்து விடலாம்! 

நல்லவேளை! வாணி இவளைப் போலப் பணப் பேய் இல்லை, பாசமுள்ளவள்! 

நிலாவுக்காகத் தியாகம் செய்ய அவளும் தயாராக இருப்பாள்! 

நேரில் சென்று வாணியிடம் வித்யாசாகரன் விஷயத்தைச் சொன்னபோது, அவளும் அவனைத்தான் எதிரொலித்தாள். 

“அவளது பெயருக்கேற்றபடி நிலா இப்போதுதான் ஜொலிக்கத் தொடங்கியிருக்கிறாள் வித்தி! இப்போது போய் அவர்களிடம் அவளை மீண்டும் ஒப்படைத்தால், எல்லாமே கெட்டுப் போகும். நீங்கள் உழைக்கத் தயங் காதவர்! எப்படியும் நிமிர்ந்து விடுவீர்கள். அதனால், அவர்கள் என்ன விலை கேட்டாலும், கொடுத்து தொலைத்து விடுங்கள்!” என்று வாணி சொன்ன விதத்தில் அவனது மனம் சுமையிறங்கி லேசாயிற்று. 

வாணி தொடர்ந்து. இன்னொன்றும் சொன்னாள் “உங்கள் அப்பாவின் ஆசை மெய்யாகி, நிலாவுடைய தந்தையின் மனதில் கொஞ்சமேனும் மக்களிடம் பாசம் இருக்கும் என்று, இவ்வளவு நாளும் உள்ளூர நினைத்திருந்தேன்… நித்தி! ஆனால்… அது எப்படியோ போகட்டும். ஆனால் இந்த முறை, நிலாவின் சட்டப் பூர்வமான ‘கார்டியனாக’ அவள் பற்றிய உரிமைகள் அனைத்தும் உங்கள் கைக்கு வருமாறு எப்படியாவது செய்து விடுங்கள்” என்று கூறியவளை, அப்படியே கட்டி அணைத்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது வித்யாசாகருக்கு! 

அந்த உரிமைக்கு, இன்னும் கொஞ்ச காலம் காத்திருக்க வேண்டும் என்று எண்ணியவனுக்கு, அண்ணனைக் கண்ட பிறகு, அன்று முதல் முறையாக, முகத்தில் புன்னகை மலர்ந்தது! 

உள்ளூர அந்த மலர்ச்சியுடனேதான், அண்ணன் குடும்பத்தோடு, அவன் பேச உட்கார்ந்தது! 

ஆனால், நிலாவை வித்யாசாகரின் பொறுப்பிலேயே விட்டுப் போவதற்காக சுலேகா கேட்ட விலையில், வீட்டினர் அத்தனை பேரும் அதிர்ந்து போயினர். 

அதிர்ச்சி என்றால், கொஞ்ச நஞ்சமானது அல்ல! இடி விழுந்தது போன்ற அதிர்ச்சி! 

மூத்த மகனின் முகத்தை ஏக்கமாகப் பார்த்துக் கொண்டிருந்த தேவகி, நெஞ்சை அழுத்தியவாறு சோபாவில் சாய்ந்தார். 

சுபா, கையிலிருந்து குழந்தையை நழுவவிட்டு, அது கீழே விழுமுன் அனிச்சையாய்ப் பிடித்தாள்! 

“சித்தப்பா” என்ற கதறலுடன், நிலா ஓடி வந்து, வித்யாசாகரின் மேல் விழுந்து அவனை ஒண்டி முகம் புதைத்து நடுங்கினாள்! 

ஓர் ஏளனப் புன்னகையோடு, சுலேகா சொல்லப் போகும் விலைக்காகக் காத்திருந்த வித்யாசாகரின் முகம் இறுகிப் பாறையாய் உறைந்தது. 

அத்தியாயம்-14

எப்போதுமே, சுலேகா பேசினால், ஒரு குத்து, அடிக்குத் தயாராக இருப்பது வீட்டில் எல்லோருக்கும் பழக்கம் தான்! 

ஆனால், அவளது இன்றையப் பேச்சு, எல்லோரின் இதயத்தையும் நடுங்கச் செய்து விட்டது எனலாம்! 

அத்தனை பேரின் பாவனை, செயல்களையும் விழி சுழற்றிப் பார்த்துவிட்டு “என்ன இது? கல்யாண விஷயம் பேசுகிறேன்… எல்லோரும் பேயறைந்த மாதிரி இப்படி விழிக்கிறீர்களே! ஆனந்த அதிர்ச்சியா! அல்லது… ஐயய்யோ, கல்யாணம் பண்ணிக் கொள்ள முடியாமல், வித்யா தம்பிக்கு ஏதேனும் கெட்ட வியாதியா?” என்று வாய் கூசாமல் கேட்டாள் சுலேகா! 

அவளது வாய்க்குப் பழகியிருந்தபோதும், இந்தப் பேச்சில், எல்லோருக்குமே இன்னமும் அதிக அதிர்ச்சி தான். 

தேவகி கையால் வாயைப் பொத்திக் கொள்ள “அண்ணீ ஜாக்கிரதை” என்றாள் சுபா. கண்ணில் கனல் எழ! 

“ஜாக்கிரதையாகத்தான் இருக்க வேண்டும்! இப்படி ஏதும் இருக்கக் கூடும் என்று தெரியாமல், நான் வாக்குக் கொடுத்துவிட்டு வந்திருக்கிறேனே! இந்தக் கேவலத்தைச் சொல்ல நேரும்போது, எனக்கல்லவா, அசிங்கம்!” என்றாள் அவள் பேச்சுத் தொடர்பை விடாமல். 

தொடர்ந்த இந்தப் பேச்சில், நித்யானந்தன் கூட சற்று, அசைந்து கொடுத்தான் எனலாம்! 

தோளில் முகம் புதைத்து ஒண்டிக் கிடந்த சிறுமியின் தலையை ஆதரவாக வருடிக் கொடுத்தவாறு, அண்ணன் மனைவியின் முகத்தைக் கூர்ந்து ஆராய்ந்தான் வித்யா. 

இவள் மெய்யாகவே நிலாவைப் பொறுப்பேற்று அழைத்துப் போக வரவில்லை! 

லண்டன் பயணத்தை ஓசியில் அனுபவிக்க ஆசை தான்! ஆனால், அதற்கு மேல் நிலா, இவளுக்கு வெறும் சுமையே! வேண்டாத சுமை! 

ஆனால், அந்தப் பயண காலத்துக்குள்ளாகவே நிலாவின் மனதை இவள் ஒடித்து விடுவாள்! ஒடித்து அவளை மீண்டும் எப்படியாவது இங்கே கொணர்ந்து தள்ளியும் விடுவாள். ஆனால் அதற்குள் நிலா ஒன்றுமில்லாமல் போய் விடுவாள்! 

தொழிலை மறுபடியும் வளர்த்து விடலாம். ஆனால் மனதை? அதுவும் நிலா மீள்வது கடினம்! அதற்கு இடம் கொடுக்க முடியாது! கூடாது! 

ஆனால் அதற்காக, சுலேகா கேட்ட விலையைக் கொடுப்பதும் முடியாத காரியம்! 

மிகவும் தரக்குறைவான இந்த வார்த்தைகளை சுலேகா சும்மா சொல்லவில்லை! எல்லோரையும் கலங்கடித்து, இதைத் தவிர எதையும் யோசிக்க முடியாமல் செய்து, அவளது பேச்சுக்குத் தலையாட்டச் செய்யவும் அவளது வழக்கமான வித்தை! 

ஒரு தரம் வெற்றி பெற்று பிரித்துக் கொண்டு போனவள் தானே? 

நித்தியண்ணன் ஒரேடியாக அடங்கிப் போனதுதான் காரணமும். இதுவாகவே இருக்கலாம்! 

ஆனால், அவள் என்ன ஜாலம் செய்தாலும், அவளது இந்தத் திட்டம் நிறைவேறாது. அதற்கு இந்த வித்யாசாகர் விடப்போவதில்லை! 

யோசனையை மறைத்து தங்கையை அழைத்து “நிலாவை உள்ளே கூட்டிக் கொண்டு போ சுபா” என்று அண்ணன் மகளைத் தங்கையோடு அனுப்பி வைத்தான். 

அண்ணனை ஒரு பார்வை பார்த்து “சின்னப் பிள்ளைகள் பொறுப்பு என்பது சாதாரணமானதல்ல… அவர்கள் முன்னிலும் கொஞ்சம்… கொஞ்சமேனும் நாவடக்கத்தோடு பேச வேண்டும்!” என்று கூறிவிட்டு “இப்போது சொல்லுங்கள், உங்களுக்கு என்ன வேண்டும்” என்று சுலேகாவை நோக்கிக் கேட்டான். 

அவனது பேச்சின் முன் பகுதியை அலட்சியம் செய்து “என்ன வேண்டும்? உங்களுக்குத் திருமணம் செய்யும் தகுதி இருக்கிறதா என்று தெரிய வேண்டும்?” என்று வேண்டும் என்றே அவனை சீண்டினாள் அவள். 

“இருந்தால்?” 

“அருமைக் கொழுந்தனாருக்கு கல்யாணம் செய்து கண் குளிரப் பார்க்க ஆசை?” என்றாள் அவள் கேலி போல! 

“தாராளமாகப் பார்க்கலாம். என் திருமணம் நடக்கும் போது, நிச்சயமாக உங்களுக்கு அழைப்பு அனுப்புவார்கள்” என்றான் வித்யாசாகரும் இலகுவாகவே, ஆனால். கவனத்துடன்! 

“அதே சமயம், என் சித்தப்பா மகளுக்கும் நடக்க வேண்டுமே” என்றாள் அவள் எக்களிப்போடு! 

எலியைப் பிடித்து வைத்துக் கொண்டு விளையாடும் பூனையின் எக்களிப்பு என்று புரிந்தபோதும், ஒரு வழியைத் தேடியவாறே, “செய்யச் சொல்லுங்கள்! உங்களுக்கு இரண்டு திருமண விருந்தாயிற்று” என்றான் வித்யா. 

“இரட்டை விருந்தா? ஐயய்யோ… என் வயிறு கெட்டு விடும்!” என்று விழிகளை உருட்டினாள் சுலேகா. 

வயிறு கெட்டுவிடுமா? உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை, முழுக்க கெட்டவளாக இருந்து கொண்டு, வயிறு மட்டும் கெடாமலா இருக்கும் என்று அவன் ஆத்திரத்துடன் எண்ணமிடும்போதே, “அதனால், இரண்டையும் சேர்த்து ஒன்றாகவே வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்” என்று வெற்றிக் குரலில் முடித்தாள் சுலேகா. 

“ம்ம்ம்…” என்று யோசனையோடு அண்ணன் நித்யானந்தனின் முகத்தைப் பார்த்தான். வித்யாசாகர் “சரியாகப் புரியவில்லை அண்ணி?” என்று விளக்கம் கேட்டான். 

கவலையோடு ஏதோ சொல்ல வாயெடுத்த தேவகியைச் சின்ன மகனின் கண்ணில் இருந்த தீவிரம் தடுக்க, ஒன்றும் பேசாமலே வாயை மூடிக் கொண்டார். 

வெற்றி மிதப்பில் இருந்த சுலேகா “கொழுந்தனாருக்குக் கொஞ்சம் புத்தி மட்டு என்று நான் நினைத்தது சரியாகத்தான் இருக்கிறது” என்று திமிராகக் கூறிவிட்டு “உங்களுக்கும் என் சித்தி மகள் நீதாவுக்கும் ஒரே பந்தலில்… ஊகூம், அதற்குக் கூட விளக்கம் கேட்டாலும் கேட்பீர்கள். அதனால், இன்னும் விளக்கமாகவே சொல்லுகிறேன். நீங்கள் நீதா கழுத்தில் தாலி கட்டிக் கல்யாணம் செய்ய வேண்டும்! இப்போதேனும் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்” என்றாள் ஏளனக் குரலில். 

“ஏதோ கொஞ்சம்!” என்றான் வித்யா கொஞ்சம் பணிவாகவே “ஆனால், இது நடக்காது என்றால்?” என்று கேட்டான். 

சற்று நிமிர்ந்து அமர்ந்த தேவகி “நிலாவை நாங்கள் கூட்டிப் போய் விடுவோம்” என்ற சுலேகாவின் தெளிவான பதிலில் மீண்டும் தோய்ந்தார். 

“அதாவது?” என்று புரியாதவனைப் போல வித்யாசாகரன் கேட்கவே, “அதாவது நிலாவை இங்கேயே… அதாவது இந்த சொர்க்க புரியிலேயே நாங்கள்… அதாவது உங்கள் அண்ணனும் நானும் நிலாவை இங்கேயே விட்டுப் போக வேண்டும் என்றால், நீங்கள் என் ஒன்றுவிட்ட தங்கையான நீதாவைக் கல்யாணம் செய்து கொண்டாக வேண்டும்!” என்று வார்த்தை வார்த்தையாக பிரித்துத் தெளிவாகச் சொன்னாள் சுலேகா. 

“அதாவது… இப்போது நான் சொல்வது சரியாக இருக்கிறதா என்று பாருங்கள், அண்ணி. நீங்கள் நிலாவைத் தொல்லை பண்ணாமல், அவளது விருப்பம் போல இங்கேயே இருக்க விடுவதானால், அதற்குரிய நிபந்தனையாக, நான் நீதாவை மணக்க வேண்டும் என்கிறீர்கள்? அப்படித்தானே?” என்று கேட்டான் வித்யாசாகரன். 

“அப்படியேதான், ஒரு வழியாக உங்களுக்குக் கூட விஷயம் விளங்கி விட்டதே!” என்று இளக்காரம் செய்தவளிடம் “மனதுக்குப் பிடிக்காததாலோ என்னவோ, இன்னமும் குழம்புகிறது, அண்ணி, அதனால் இன்னொரு தரம் தெளிவாகச் சொல்லி விடுங்களேன் ப்ளீஸ்” என்று வித்யா வேண்ட, வேதனையோடு முகம் திருப்பினார் தேவகி. 

அந்த முகம் திருப்பல் உற்சாகமூட்ட “தாராளமாகச் சொல்லுகிறேன். கல்யாணக் காரியம் ஆயிற்றே! அதுவும் நெருங்கிய உறவினருக்குள்! சொல்வதற்கு எனக்குக் கசக்குமா? நிலாவை அவளது, உங்களது, உங்கள் தாயாரது விருப்பம் போல, இங்கேயே வளர விடுவது என்றால், நீங்கள் இப்போது என் ஒன்றுவிட்ட தங்கை நீதாவை மணந்து கொண்டாக வேண்டும்! இது உங்களுக்கு என் நிபந்தனை!” என்று தெள்ளத் தெளிவாகக் கூறி, தேவகியின் முகம் மேலும் வாடுவதைக் கண்டு ரசித்தாள் சுலேகா. 

“என்ன இப்போதேனும் கொழுந்தனாரின் உலக்கைக் கொழுந்து மூளைக்கு என் நிபந்தனை புரிந்ததா?” 

“நன்றாக! எனக்கு மட்டுமின்றி, இங்கே உள்ள எல்லோருக்கும் உங்கள் நிபந்தனை மிகத் தெளிவாகப் புரிந்திருக்கும் என்பதும் எனக்கு நிச்சயம். இப்போது எனக்கு இது.. உங்கள் நிபந்தனை பற்றி யோசித்துப் பதில் சொல்ல, ஒரு நாள் அவகாசம் தருவீர்கள் அல்லவா?” என்று மறுபடியும் பணிவாகவே கேட்டான் வித்யா. 

“யோசிப்பதற்கு இதில் எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லையே! என் நிபந்தனை ரொம்பத் தெளிவு! நிலா பாட்டியோடு இருப்பதானால். நீங்கள் நீதாவை மணந்தாக வேண்டும் மணக்காவிட்டால், அவளைக் கூட்டிப் போய் விடுவோம். அவ்வளவுதான், ஆனால் ஒரு நாள் தானே? என்று கேட்கிறீர்கள் எடுத்துக் கொள்ளுங்கள். இங்கே வெளிநாட்டுச் சாமான்கள் விற்கும் கடை ஒன்று ரொம்ப பெரிதாக வந்திருக்கிறதாமே, சுற்றிப் பார்க்க அரை நாள் ஆகுமாம்! அதற்கு ‘ஷாப்பிங்’ போகலாம் என்று நீதா சொன்னாள். அதனால் எனக்கு பொழுது சந்தோஷமாகக் கழிந்து விடும். நாளையிலிருந்து கல்யாண வேலையைத் தொடங்கி விடலாம். வாருங்கள் நித்தி. என் சித்தி வீட்டுக்குப் போகலாம்” என்று கணவனைக் கையைப் பிடித்து எழுப்பி கூட்டிச் சென்றாள் சுலேகா. 

சென்று வருவதாக வெறுமனே தலையை மட்டும் ஆட்டி சென்ற மூத்த மகன் சென்ற திசையைப் பார்த்து கண்ணீர் விட்டார் தேவகி. 

தாயின் அருகே வந்து அமர்ந்து கொண்டு “வருத்தப் படாதீர்கள் அம்மா. எல்லாம் சரி செய்து விடலாம்” என்றான் தேறுதலாக. 

“என்னத்தை நன்றாக இருப்பது?” என்றார் தாயார் நம்பிக்கையற்று. “எப்படியோ அவனுக்கும் அவளுக்கும் ஒத்துப் போகிறது. எங்கேயோ நன்றாக இருக்கட்டும் என்று அதை ஒரு மாதிரி ஏற்றுக் கொள்ளப் பழகி விட்டேன். நீயும், வாணியும் மணந்து, உங்களிடம் நிலா நல்லபடியாக வளருவாள் என்று ஆசைப்பட்டால் அதுவும் வெறும் கனவாகிப் போய் விடும் போல இருக்கிறதே” என்றார் வேதனையோடு! 

ஏதோ சொல்ல வாயெடுத்தவன் பேசாமல் தாயின் கைகளைப் பற்றித் தட்டிக் கொடுத்து விட்டு போனான். 

அவனே அரைகுறை நம்பிக்கையில் செய்யும் முயற்சி! அதை நம்பி தாயாருக்கு எப்படித் தைரியம் சொல்வது? மதில் மேல் இருக்கும் பூனை தப்பான திசையில் பாய்ந்து விட்டால்? 

இந்தத் தவிப்பு, அவனோடயே இருக்கட்டும்! தினமும் காலையில் நடப்பது நித்யானந்தனின் வழக்கம்! 

காலை காற்று உடம்பில் படுவது அவனுக்குப் பிடிக்கும் என்பதோடு, அவன் மனைவியும் அதை ஊக்குவித்திருந்தாள். 

‘சொர்க்கபுரி’ பூங்காவில் நடக்கத் தொடங்கியவன், முதல் சுற்று முடியுமுன்னே குறுக்கே வந்த வழி மறித்தவனைப் பார்த்ததும் திகைத்து நின்றான். 

அடியோடு எதிர்பாராதது என்று சொல்ல முடியாது! ஆனால் அவனிடம் பேசி என்ன பயன்? 

சுலேகா முடிவு செய்து விட்டால், அவளிடம் பேசியும் பயனிராதுதான்! யாரையோ காதலிக்கிறானாம் பாவம்! 

நடை பாதையை ஒட்டி, அங்கங்கே போடப்பட்டிருந்த சிமெண்ட் பெஞ்ச் ஒன்றிற்கு அண்ணனை அழைத்துச் சென்று, அதில் உட்கார வைத்துப் பேசினான் வித்யாசாகர் 

“நேற்று உன் மனைவி பேசியதை கேட்டாய் அல்லவா? அதில் இருந்த முரண்பாடு உணர்ந்தாயா? யோசி, அண்ணா! உன் மகளை நன்றாக வைப்பதற்கு, உனக்கு நிபந்தனை இடுவது நியாயம், நிலாவின் நலத்துக்காக என்னிடம் நிபந்தனை கூறினால், நீ என்ன மாதிரி தந்தை என்று தெரிகிறதா? 

“அதைவிட உன் மகளிடம் யாருக்கு அதிக அக்கறை இருக்கிறது என்று அதுவேனும் புரிகிறதா? இது உனக்குப் பெருமையா அண்ணா? 

“தயவு பண்ணிக் கொஞ்சம் யோசி, அண்ணா! நீதாவுக்கும் உன் மனைவிக்கும் அதிகம் வித்தியாசம் கிடையாது, நிலா உன் மனைவியிடம் பட்டது போதாதா? அவளுடைய தங்கையிடமுமா? இவர்களிடம் சிக்கி நிலா அழிந்து போவதுதான் உனக்கு விருப்பமா?

“எப்படியேனும் மகள் என்பது உனக்கு வந்து விடாதா என்று அப்பா எவ்வளவு ஆசைப்பட்டார்! கடைசியில் உனக்கு இந்த மாதிரி தந்தைப் பாசம் இல்லாமலேயா போக வேண்டும்?” என்று கேட்டவன், நித்யானந்தனின் பதிலுக்குக் காத்திராமலேயே விடுவிடுவென்று நடந்து, பூங்காவை விட்டு வெளியேறிச் சென்று விட்டான். 

அண்ணன் வழக்கம்போலச் சும்மா இருந்தாலோ, அன்றி ஒன்றும் செய்வதற்கின்றி வழவழ கொழ கொழ என்றாலோ, பொறுக்க முடியாத சினத்தில், பெரியவன் என்றும் பாராமல் கை நீட்டி விடுவோமா என்ற பயம் அந்தச் சின்னவனுக்கு! 

வித்யாசாகரிடமிருந்து ஒரு தகவலும் இல்லாதிருந்தது, வாணிக்கு குழப்பமாக இருந்தது! நிலாவின் கதி பற்றி, என்ன முடிவாயிற்று என்று குழப்பமாகவும்! 

அவளே பொறுக்க மாட்டாமல், நேரில் வந்து கேட்டு விடலாம் என்று எண்ணியபோது, “நீங்க இங்கே வாங்க ஆன்ட்டி!” என்று நிலாவின் கண்ணீர் குரல் அழைக்கவே, அதற்கு மேல் ஒன்றும் யோசியாது கிளம்பி வந்து விட்டாள். 

அவளைக் கட்டிப் பிடித்துக் கொண்டு நிலா ஒரே அழுகை! 

தேவகி வருத்தப்பட, சுபா கொதிக்க, நிலாவைச் சமாதானப்படுத்த முயன்றபடி நிமிர்ந்து பார்த்தால், அறை வாயிலில் வித்யாசாகர் நின்று, அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தான்! 

அவள் பார்த்ததும் “இங்கே வேலையை முடித்துக் கொண்டு வந்து பார்க்கலாம் என்று எண்ணினேன். ஆனால் நீ வந்தது, மனதுக்கு நிம்மதியாக இருக்கிறது!” என்றான். 

அவளும் சேர்ந்து வருத்தப்படக் கூடாது என்று சொல்லுகிறான் என்று நினைத்தாள் வாணி. மற்றபடி. இந்தச் சிக்கலிலிருந்து அவனால் எப்படி மீள முடியும் என்று எண்ணும்போது அவளுக்கும் நெஞ்சு உலர்ந்தது! இதில்தானே. அவளது வாழ்வும் தொக்கி நிற்கிறது! 

ஆளுக்கொரு விதமாக எல்லோரும் தவித்துக் கொண்டிருக்கையில் சொன்ன நேரத்துக்குச் சற்று முன்னதாகவே சுலேகாவும் நித்யானந்தனும், அங்கே வந்து சேர்ந்தனர். 

நடுக்கத்தோடு கட்டிப் பிடித்திருந்த நிலாவை ஆறுதல் படுத்தியவாறு வாணி உட்கார்ந்திருக்க. அறிமுகமற்ற ஓர் அன்னியப் பெண் இருக்கிறாள் என்பதே இல்லாமல், சுலேகா உற்சாகமாகப் பேசினாள். 

“என்ன கொழுந்தனாரே, கல்யாண வேலைகளைத் தொடங்கலாமா? நான் ஏற்கனவே, அடுத்த ஒரு மாதத்துக்குள் இருக்கும் முகூர்த்த தேதிகளைக் குறித்து வந் திருக்கிறேன்? அதில் நாலு நாட்கள் நீதாவுக்குப் பிடித்திருக்கின்றன. அவைகளில் என்றைக்குக் கல்யாணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லுங்கள்” என்றாள் உரத்த குரலில். 

இப்போதே, நீதாவுக்குப் பிடித்த நாலு நாட்களில் ஒரு நாளைத்தான், வித்யா தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிறாளே! அவள் இந்த வீட்டுக்கு வந்தால் நிலைமை எப்படியாகும்? 

தவிப்புடன் வாணி பார்த்துக் கொண்டிருக்க, “என்றைக்குமே வைப்பதற்கில்லை” என்றான் வித்யாசாகர் அண்ணனைப் பார்த்தபடி! 

இவன் சும்மாவேதான் உட்கார்ந்திருக்கப் போகிறானா என் மனம் கொதிக்க “இந்த நாலு நாட்களில் மட்டுமல்ல! ஆண்டில் முன்னூற்று அறுபத்தைந்து நாட்களில், எந்த நாளிலுமே நீங்கள் சொன்ன திருமணம் நடப்பதற்கில்லை. அதனால் இந்த வீண் வேலையை விடுங்கள்” என்றான் அழுத்தம் திருத்தமாக. 

இந்த மாதிரி மறுப்பை எதிர்பார்த்திராத சுலேகா, ஒரு கணம் திகைத்துப் போனாள்! 

ஆனால் உடனே நிமிர்ந்து “மறுத்தால் என்ன ஆகும் தெரியுமில்லையா? என் நிபந்தனை நினைவிருக்கிறது தானே?” என்று ஆத்திரத்துடன் கேட்டாள் அவள் “மறந்து போயிருந்தால், இன்னொரு தரம் சொல்லுகிறேன் கேட்டுக் கொள்ளுங்கள், நிலா இங்கே நல்லபடியாக வளர வேண்டும் என்றால், நீதாவை வித்யாசாகரன் மணக்க வேண்டும்! இல்லாவிட்டால் நிலாவை நான் அழைத்துப் போய் விடுவேன்! அப்புறம் அவள் கதி என்ன ஆகுமோ?” என்று மிரட்டினாள். 

மடியில் கவிழ்ந்து கிடந்த நிலாவின் உடலில் அதிக நடுக்கத்தை உணர்ந்த வாணி. சினமுற்று “ரொம்பவும் மிரட்ட வேண்டாம்! அப்படி நீங்கள் நினைத்தால் அழைத்து போவதற்கும், கொடுமைப்படுத்துவதற்கும், நிலா ஒன்றும் கேட்பதற்கு நாதியற்றவள் அல்ல” என்றாள் கோபக் குரலில். 

“நாதியா? அந்த நாதியே, நாங்கள்தானேடீ? பதினெட்டு வயது வரை, அவள் என் அதிகாரத்தின் கீழே தான் கிடந்தாக வேண்டும்?” என்று கத்தினாள் சுலேகா. 

“அப்படி ஒன்றும் கட்டாயமில்லை. மைனர் குழந்தைகள் சட்டம் பற்றி நானும் படித்திருக்கிறேன். நீங்கள் நிலாவைக் கொடுமைப்படுத்துவதாக நிரூபித்து விட்டால், அப்புறம் களிதான் உண்ண வேண்டும்! நினைவிருக்கட்டும்!” என்றாள் வாணி ஆத்திரமாக. 

கோபத்தின் உச்சியில் சுலேகாவுக்கு வார்த்தைகள் தடுமாறின “எ… என்னது? என்னைக் களி தின்ன வைப்பாயா? சட்டம் படித்தாயா? எனக்கும்… ஓ, நீ அந்த வாடகை வாசகசாலைப் பெண்ணில்லை? வித்யாவைப் பிடிக்க, அவனைச் சுற்றுகிறவள்… ஏண்டி, உனக்கு வெட்கமாயில்லை? என் தங்கையை மணக்கப் போகிறவனை, இந்தச் சின்னப் பெண்ணை வைத்து பிடிக்கப் பார்க்கிறாயாமே! அப்படியாவது எதற்கடி இந்த வெட்கம் கெட்ட பிழைப்பு? உனக்கென்ன, வேற ஆண் பிள்ளையே கிடைக்கவில்லையா?” என்று சுலேகா வாயிலிருந்து விழுந்த வார்த்தைகளில் வாணி அதிர்ந்து போனாள். 

என்ன மோசமான பேச்சு! இந்த சுலேகா எப்படியிருப்பாள் என்று யோசித்தாளோ! அப்படி என்று காட்டுகிறாள் சீச்சீ.

தேவகி அம்மாவுக்கு, இன்னொரு மருமகள் இப்படி அமைந்தால், அவர்களே அவ்வளவுதான்… 

அவளுக்கு இந்த மாதிரி தரம் இறங்கத் தெரியாதே! இப்போது என்ன பேசி, இவள் வாயை அடைப்பது என்று வாணி யோசிக்கும்போதே “ஏய் வாயை மூடு” என்று சீறினான் வித்யாசாகரன். “வாணி இந்த வீட்டு மருமகளாக வரப் போகிறவள். அதாவது நல்ல மருமகள்.. அவளிடம் மரியாதையாகப் பேச வேண்டும். உன் தரம் கெட்ட புத்தியை அவளிடம் காட்டினால் நான் சும்மா இருக்க மாட்டேன். அண்ணி என்று பாராமல் தோலை உரித்து அனுப்பி விடுவேன். ஜாக்கிரதை!” என்று மரியாதையின்றி ஏக வசனத்தில் அதட்டிப் பேசி ஆத்திரக் குரலில் எச்சரிக்கை விடுத்தான். 

அவனது குரலும் பேச்சுமாக, சுலேகாவே சில கணங்கள் நிலை குலைந்து போனாள்! 

ஆனால் விரைவிலேயே சமாளித்து, பாம்பாய் தலை உயர்த்திச் சீறினாள், “ஏ.. ஏ.. இவன் என்ன பேச்சு பேசுகிறான். பாருங்கள்! இவனை மோசமாக தண்டிக்க வேண்டும்! ரொம்ப மோசமாக… அதற்கு.. அதற்கு… நிலாவை இங்கிருந்து கூட்டிப் போவதுதான் இவனுக்குச் சரியான தண்டனை! முதலில் அதற்கு ஏற்பாடு செய்யுங்கள்!” என்று கணவனுக்கு உத்தரவிட்டாள். 

ஐயோ என்று எல்லோரும் திகைக்கையில் விசித்திரமாய் மனைவியைப் பார்த்தான், அந்த வீட்டின் மூத்த பிள்ளை நித்யானந்தன்! 

நிலாவுடைய தந்தை அவன்! 

தகப்பனான அவன் மகளைத் தன்னோடு கூட்டிப் போவது, அவனுடைய தம்பி தண்டனையா? 

இதன் அர்த்தத்தை அறிய அகராதி தேவையில்லை!

காலையில் பூங்காவில் தம்பி சொன்னது அப்போது தான் அவனுக்கு மிக நன்றாக, தெள்ளத் தெளிவாக என்பார்களே அதுபோலப் புரிந்தது. 

இது கடினம்தான்! பழக்கமற்றுப் போனதால், ரொம்பவே சிரமமும்தான். ஆனால் எவ்வளவு கடினமும், சிரமமும் என்றாலும் செய்துதான் ஆக வேண்டும்! 

வாணியின் மடியில் விழுந்து, முகம் சிவக்க அழுது கொண்டிருக்கும் மகளைப் பார்த்தான். 

ஒரு பெருமூச்சுடன் சட்டைப் பையிலிருந்து ஒரு காகிதத்தை எடுத்து தம்பியிடம் கொடுத்தான் நித்யானந்தன்! 

“இது முத்திரையிடப்பட்ட பத்திரம். கீழே கையெழுத்திட்டு வைத்திருக்கிறேன். நிலா மீதுள்ள உரிமைகளை விட்டுக் கொடுப்பதாக மேலே எழுதிக் கொள்” என்றான் மெல்லிய குரலில் ஆனால் தெளிவாக. 

“ஏ..ய்.. என்ன இது பைத்தியக்காரத்தனம்..” என்றபடி பத்திரத்தை பிடுங்க ஓடி வந்த மனைவியை முரட்டுத்தனமாக பிடித்து தடுத்து நிறுத்தினான். 

“நிலா இருக்கப் போவது, இனிமேல்தான் இங்கே தான், வாயை மூடிக் கொண்டு கிளம்பு, இல்லை என்றால் இல்லையென்றால் அடுத்து நான் விவாகரத்து பத்திரத்திலும் கையெழுத்துப் போட வேண்டியிருக்கும்” என்றான் அழுத்தமான குரலில். 

மீண்டும் பிரமித்து நின்றவளைப் பார்த்து சற்று இறங்கிய குரலில் “வா போவோம்! நம் வாழ்வையும் சற்று நல்ல விதமாக்க முயற்சி செய்யலாம். முடியா விட்டாலும். அது நம்மோடு போகட்டும். நிலாவைப் பாதிக்கக் கூடாது” என்றவன் தாயை ஒரு பார்வை பார்த்து விட்டு திகைப்பு மாறாத சுலேகாவைக் கையால் பற்றியபடி வாயிலை நோக்கி நடந்தான். 

தன்னை மீறி, தேவகி விசும்பிய சத்தத்தில் திரும்பிப் பார்த்த நித்யானந்தனின் முகத்தில் புன்னகையின் கீற்று ஒன்று தோன்ற கையசைத்து விட்டுப் போனான். 

தேவகியின் உணர்ச்சிகளுக்கு மதிப்புக் கொடுப்பது போல, அங்கே சற்று நேரம் அமைதி நிலவியது! 

“அப்போ, நான் இப்போ அங்கே போக வேண்டாமில்லையா? பாட்டிம்மா?” என்று நிலா கேட்க, “இல்லைடாக் கண்ணு” என்று அவளைத் தேவகி அணைத்துக் கொள்ளவும் அந்தச் சூழ்நிலை மாறியது. 

“இந்த அதிசயம் எப்படியடா நடந்தது, கையில் கையெழுத்திட்ட பத்திரத்துடனேயே வந்திருந்தானே? அப்படியானால். நித்தி முதலிலேயே மனம் மாறித்தான் வந்தானா? எப்படி?” என்று வியப்புடன் அடுத்த மகனிடம் கேட்டார் தேவகி. 

“எல்லாம் உங்கள் வருங்கால மருமகளின் ஐடியா தான்” என்று புன்னகையோடு வாணி பக்கம் கை காட்டினான் வித்யாசாகரன். 

“ஐயோ சுத்தப் பொய். நான் ஒன்றுமே செய்யவில்லை?” என்று மறுத்தாள் வாணி. 

“சுலேகாவை அதட்டிப் பேசினாயேம்மா” என்றார் தேவகி.

“ஆனால் வாணி அதட்டியது. இப்போதுதானே? நித்தியண்ணன் பையில் முன்னாலேயே பத்திரம் இருந்ததே” என்றாள் சுபா யோசனையோடு. 

எல்லோரும் வித்யாசாகரைப் பார்க்க அவன் சொன்னான். “ஒருவேளை நிலாவை அண்ணன் இங்கே வளர விட்டதே, அவளது நன்மைக்காக இருக்கலாம் என்று ஒரு தரம் சொன்னாயே. நினைவிருக்கிறதா வாணி? அதை ஆதாரமாகப் பற்றித்தான் அண்ணி இது போல நிபந்தனை வைக்கிறார்கள் என்றால் என்ன அர்த்தம்? நிலாவிடம் யாருக்கு அன்பு இருக்க வேண்டும், ஆனால் யாருக்கு அதிக அன்பு இருக்கிறது என்று காலையில் அவனைச் சந்தித்து கேட்டேன்! அதுவே அண்ணன் மனதை உறுத்தியிருக்கும் போல! எதற்கும் இருக்கட்டும் என்று பத்திரத்தில் கையெழுத்திட்டுக் கொண்டு வந்திருக்கிறான்! அதற்குச் சரியாக, எனக்குத் தண்டனை நிலாவை இங்கிருந்து அழைத்துப் போவது என்று சுலேகா சொன்னது, அண்ணனுக்கு என் பேச்சை ரொம்பவும் உறுதிப்படுத்தியது போல ஆகிவிட்டது! நீ சொன்னது சரியாக, அண்ணன் மனதிலும் வாஞ்சை இருக்கத்தான் செய்திருக்கிறது வாணி! ஆனால், மனைவியை மீறி அதைக் காட்ட முடியவில்லை. அவ்வளவே. சற்றே தூண்டி விட்டதும், தந்தைப் பாசம் தலைதூக்கி விட்டது!” என்றான் வித்யாசாகர். 

“உங்கள் தந்தையின் ஊகமும் அதுவே” என்றாள் வாணி. “அண்ணன் மாதிரி ஆமாம் போட பழகிவிடக் கூடாது என்று பார்த்தால், சும்மாச் சும்மாத் தலையாட்ட வைக்கிறாயே மது!” என்று வித்யா குறைப்பட்ட விதத்தில் எல்லோரும் நகைத்தனர். 

முதலில் போட்ட திட்டத்தின்படி, விரைவிலேயே மதுரவாணி வித்யாசாகரன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. 

வருங்கால மனைவியின் கையில், வித்யா! அணிவித்த மோதிரத்தைப் பார்த்துவிட்டு “அந்த டிசைன்! அப்போதே வாங்கினீர்களா, மாப்பிள்ளை?” என்று அதியயப்பட்டாள் தாரிணி. 

“மகளுக்கு மாப்பிள்ளை பார்க்கத் தோதாக இருக்கும் என்று. அவளைச் சென்னைக்கு அனுப்பச் சொன்னாயே, தாத்தாவுக்காக என்று கிளம்பி, மாப்பிள்ளை இருக்கும் இடத்துக்கு அவளாகவே வந்திருக்கிறாள் பார்” என்றார் மணிவாசகம். 

“அப்போதே எனக்காக வந்துவிட்டு, என்னை அந்த முறை முறைத்தாயே! அதற்கெல்லாம் கணக்கு இருக்கிறது! எல்லாவற்றுக்கும், அப்புறமாக வட்டியும் முதலுமாக வாங்கப் போகிறேனாக்கும்!’ என்று கிடைத்த தனிமையில் அவளைக் காதலுடன் மிரட்டினான் வித்யா. 

”ஓ.கோ! அப்படியானால் முதலில் என்னைப் பயங்கரமாக திட்டினீர்களே… அதற்கு வட்டி.. முதல் எல்லாம் நானும் கணக்கிட்டுக் கேட்க மாட்டேனாக்கும்?” என்று பதிலுக்குக் கேட்டாள் வாணி. 

“ஆஹா! கேளேன்! அதற்குத்தானே, ஆசை ஆசையாகக் காத்திருக்கிறேன், என் மதுக்கிண்ணமே!” என்று அவன் கிறுகிறுப்புக் காட்டிச் சொன்ன விதத்தில் மதுரவாணியின் முகம் சென்னிற ரோஜாவாய் சிவந்து போயிற்று.

(முற்றும்)

– வாணியைச் சரணடைந்தேன் (நாவல்), முதற் பதிப்பு: 2013, அருணோதயம் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *