கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 25, 2015
பார்வையிட்டோர்: 20,445 
 

இந்த உலகத்தில் யாருக்குத்தான் கவலையில்லை. கவலைகளின் தன்மைதான் வேறுபடுமே ஒழிய, கவலையே இல்லாத மனித உயிர் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். இதில் தீர்க்கக் கூடிய கவலைகளின் அவஸ்தையை விட தீர்க்கவே முடியாத கவலைகளின் வலி கரையானைப் போல் தினமும் அரித்துக் கொண்டே இருக்கும். சமயத்தில் தன்னைப் படைத்த கடவுளையே சபிக்க வேண்டியிருக்கும்.

வரம்

என்னுடைய அக்காவின் கவலை யாராலும் என்றென்றைக்கும் தீர்க்கவே முடியாத கவலை. என் அக்காளுக்கு என்ன குறை? சொந்த தாய் மாமனுக்கு மனைவியானவள், மாமா அரசில் பெரிய அதிகாரி. வாசலில் எந்நேரமும் காத்துக் கிடக்கும் அரசு வாகனம். கை நிறைய சம்பளம். தாய்

மாமன்தான் என்றாலும் இதுவரை தவறிக் கூட, ஒரு சுடு சொல் கூட சொல்லாத அன்பான கணவர். இரண்டு பையன்கள். மூத்தவன் மனைவியுடன் வெளிநாட்டில், போக வர கிரீன் கார்டு விசா. இளையவன் பிரபல கம்பெனியில் பொறியாளர். திருமணத்திற்கு வரன்கள் வந்து கொண்டிருக்கின்றன.

தங்க விக்கிரமாய் வளர்ந்து நிற்கும் ஒரே மகள் மகாலட்சுமி. சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை மாதிரி செய்யச் சொன்னதை மட்டுமே செய்யும் நடமாடும் பொம்மை. அவளால் சுயமாகச் சிந்தித்து எதுவும் செய்ய இயலாது. அரை குறைப் பேச்சு. முகத்தில் எப்போதும் மத்தாப்பாய் சிதறும் சிரிப்பாணி.

“”யே…யே. மகா, தண்ணி கொண்டு வா”.

தண்ணீரைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு சிலையாய் சாய்ந்து கொள்வாள்.

“” அப்பா, சாப்பிட்டாச்சில்ல, சாப்பிட்ட தட்ட எடுத்திட்டுப் போ”

சொன்னால்தான் செய்வாள்.

“”அப்பா ஆபிசுக்கு ரெடியாயிட்டாரு, கார் வந்திருச்சானு பாரு” ஓடிப்போய் ஜன்னல் வழியே எட்டிப் பார்ப்பாள். “வரவில்லை’ என்ற சொல் தெளிவில்லாமல் சிரிப்புடன் வெளிவரும்.

“”சரி, அப்பாவுக்கு வாட்டர் கேன்ல தண்ணி எடுத்து வை”. வேகமாய் போய் வாட்டர் கேனை கையில் எடுப்பாள். அப்புறம் திகைத்தபடியே சிலையாய் நிற்பாள். அவள் நிற்பதற்கான காரணம் என் அக்காவுக்கு மட்டுமே தெரியும். அப்போது பெற்று வளர்த்த அந்த வயிறு பற்றி எரியும். கண்ணீர் பொத்துக் கொண்டு வரும்.

தண்ணீர் பாட்டிலில் ஐஸ் வாட்டர் நிரப்ப வேண்டுமா? இல்லை சாதாரண தண்ணீர் நிரப்ப வேண்டுமா? என்று கேள்வி கேட்கத் தெரியாமல் மௌனமாக நிற்பாள். சரி, ஒவ்வொரு வேலையாக எதற்கு ஏவ வேண்டும், மொத்தமாகச் சேர்ந்து செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் செய்யச் சொல்லிவிடலாம் என்றால் அதுவும் முடியாது. ஒவ்வொன்றாய்தான் சொல்ல வேண்டும். பெட்சீட்டை மடித்து வை என்று சொல்லி, அதை செய்து முடித்த பின்தான் தலையணையை எடுத்து வை என்று சொல்ல வேண்டும். மொத்தத்தில் ஒரு நடமாடும் அழகிய உயிருள்ள பொம்மை என்று சொல்லிவிடலாம். அதே சமயம் வேலை ஏவுகிறவர்களுக்கு அசாத்தியமான பொறுமையும் பக்குவமும் வேண்டும். கொஞ்சம் அதட்டி விட்டாலோ அல்லது கோபப்பட்டு விட்டாலோ, காரியம் கெட்டது, காற்றில் பறந்து போகும் பஞ்சுபோல் மகாலட்சுமியின் முகத்தில் சிரிப்பது பறந்து போய்விடும்.

என்னுடைய அலுவல் நிமித்தமாக நான் சென்னை போகும் போதெல்லாம் அக்கா வீட்டில் தான் தங்குவேன். நான் அங்கே தங்குகின்ற நாட்கள் மகாலட்சுமிக்கு சந்தோஷமான நாட்களாக இருக்கும். அவளுக்கு நான் தாய்மாமன் உறவாகையால் கேலியும் கிண்டலும் வீடே கலகலப்பாயிருக்கும்.

“”மகாலட்சுமி, ஒங்க மாமன் வந்திட்டான், நீ அவனோட ஊருக்குப் போயி இருந்துக்கோ, தம்பி, ஓம் மகன் எளையவனுக்கு இவள கல்யாணம் பண்ணிக்கோப்பா, அம்பது பவுனு நக வச்சிருக்கேன், அஞ்சு லட்சம் ரொக்கம் வாங்கிக்கோ, கார் வேணும்னாலும் வாங்கித் தாரேன்”

மகாலட்சுமியின் முகத்தில் வெட்கம் பிரகாசிக்கும். மாமா மௌனமாய் உட்கார்ந்திருப்பார்.

“”அப்ப மகா, ஏங்கூட வர்ரியா, நம்ம ஊருக்குப் போயிரலாம். நகைய எல்லாத்தையும் எடுத்து மாமாவோட பெட்டியில வை, நைட்டிய மாத்திட்டு, பட்டுச் சேலைய எடுத்துக் கட்டு”

வேகமாய் எழுந்து சந்தோஷம் பொங்க பீரோவை நோக்கிப் போவாள். பலமாய் சிரித்துக் கொண்டே அக்காள் எழுந்து ஓடிப்போய், கையைப் பிடித்து இழுத்து வந்து அருகில் உட்கார வைப்பாள்.

“”எல்லாம் தெரியுது தம்பி, நகைய எடுத்து வைய்யினு சொன்ன ஓடன, பீரோவ திறக்க ஓடுறதப் பாத்தியா”

மகாலட்சுமிக்கு என்னிடம் புகார் சொல்வதற்கு நிறைய விஷயங்கள் இருக்கும். சொல்ல இயலாததால் அவள் மனசுக்குள் தேங்கிக் கிடக்கும். அக்காளே அந்த விஷயங்களை விவரிப்பாள். மகா அமைதியாக கவனிப்பாள்.

“”மாமா வரட்டும் சொல்லுறேன்னு சொன்னியே, இப்ப சொல்லுடி, எங்களுக்கு ஒன்னும் பயமில்லை”

எதையோ சொல்ல முயற்சித்து தோற்றுப் போவாள். கண்கள் கலங்கும். சிரிப்பு மறைந்து போகும். வார்த்தைகள் வருவதற்குப் பதில் கண்ணீர் பொங்கி வரும்.

“”நாலு மாசம் ஆச்சு தம்பி, அத இன்னும் மறக்காம வச்சிருக்குறதப் பாரேன், பெரிய ரோஷக்காரியா இருக்காப்பா”

“”மகா, அழுகாதம்மா, மாமா இருக்கேன்ல, அத என்னனு கேட்டு, ஒங்க அம்மாவ நாலு சாத்து சாத்திருவோம், நீ அழாதே, மகா நல்ல புள்ளையாச்சே, மகா, கண்ணீரத் தொடச்சிக்கோ”.

நாலு மாசத்திற்கு முன் நடந்த அந்த சம்பவத்தை அக்கா சொல்லச் சொல்ல அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தாள் மகா.

“”வேற ஒன்னுமில்ல தம்பி, எளையவனைப் பாக்குறதுக்காக பொண்ணு வீட்டுக்காரங்க வந்தாக, அப்ப எளையவன் என்ன சொன்னாம்னா, மகா, நீ பெட்ரூமுக்குள்ளேயே இருந்துக்கோ, அவங்க போற வரைக்கும் வெளிய வராத அப்படின்னு சொன்னான். அதுக்கு இவ, அப்படித்தான் வருவேன், ரூமுக்குள்ள இருக்க மாட்டேன்னு அடம்பிடிச்சா, ஒடனே ரூமுக்குள்ள போட்டு பூட்டிட்டான். பொண்ணு வீட்டுக்காரங்க போனப் பொறவு, கதவத் தெறந்து பாத்தா, ரெண்டு கண்ணும் கோவப்பழமா செவந்து போயி, மொகமெல்லாம் வீங்கி, அழுது, அழுது யாரோ மாதிரி ஆயிட்டா தம்பி, ரெண்டு நாளு சாப்பிடவேயில்ல, அவள சாப்பிட வைக்கவே பெரும்பாடாப் போச்சு, ஒங்கிட்ட சொல்வம்னு ஓயாம சொன்னா, இன்னும் எளையவனோட பேசவே இல்ல”

“”அக்கா, என்னதான் இருந்தாலும் இது பாவமில்லையாக்கா”

“”பெரிய பாவம்தான் தம்பி, இல்லனு சொல்லல, நானும் ஒங்க மாமாவும், பையன்கள மீறி எந்த முடிவும் எடுக்க முடியல”

“”பெத்த புள்ளைய, அதுவும் ஆசையா இருக்கிற ஒத்தப் பொம்பளப் புள்ளைய, தனி ரூமுக்குள்ள போட்டு பூட்டி வச்சிட்டு, நடு வீட்ல ஒக்காந்து சம்பந்தம் பேசுனீகளாக்கும், பலமா கத்தி, கதவத் தட்டி, கூப்பாடு போட்டு அழுதா, அப்ப என்ன செய்வீக, பெத்த புள்ளைய கழுத்தத் திருகி கொன்றுவீகளா?”

“”தம்பி சம்பந்தம் பேச வந்தவங்க போற வரைக்கும் ஒரு மூச்சு கூட வெளிய விடல தம்பி, அப்படியே தூங்குனது மாதிரியே கெடந்து, மனசுக்குள்ளேயே அழுதிருக்கா, அவங்க புறப்பட்டுப் போனதுதான், அடுத்த நிமிஷமே அழுகையைப் பார்த்தா வீடு முழுக்க கேட்குது, கதறிக் கதறி அழுவுறா, யாரையும் கிட்டத்துல வரவிடல, பெரிய ரோஷக்காரிப்பா ஒம் மருமக, அவங்க இருக்கும்போது கத்தியிருந்தா, எங்க மானமே போயிருக்கும், நமக்குத்தான் தம்பி அறிவில்ல, அவளுக்கு அறிவு ரொம்ப அதிகம் தம்பி”

வந்த வேலைகள் முடிந்து நான் ஊருக்குப் புறப்படும்போது மகாலட்சுமி ரொம்பவும் சோகமாக இருப்பாள். நான் அவளிடமிருந்து விடைபெறும் முன் ஒரு பெரிய நாடகமே நடித்துக் காட்ட வேண்டியதிருக்கும்.

“”மகா, மாமாவுக்கு டாட்டா சொல்லு, இன்னொரு தரம் ரூமுக்குள்ள போட்டு பூட்டுனா, ஒடனே மாமாவுக்கு போன் பண்ணு, ஒங்க அம்மாவையும், அண்ணனையும், நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து ரூமுக்குள்ள போட்டு பூட்டிருவோம்”.

சந்தோஷம் பொங்க டாட்டா சொல்வாள். அக்காள் முகத்தில் உருளும் கண்ணீரைத் துடைப்பாள். மாமா மௌனமாய் பெருமூச்சுவிட்டபடி நிற்பார்.

மாதம் ஒரு முறையோ அல்லது இரண்டு மாதத்திற்கு ஒரு முறையோ சென்னை செல்லும்போதெல்லாம் அக்காள் வீட்டில் தங்குவதோடு, அக்காளின் போக்கில் சில மாற்றங்களையும் நான் கவனிக்கத் தவறவில்லை. அக்காள் இப்போது பக்திப் பழமாய் மாறிக் கொண்டிருந்தாள். பூஜையறையில் சாமிகளின் எண்ணிக்கையும், பூஜைப் பொருட்களின் எண்ணிக்கையும், சொல்வதென்றால் ஒரு கோயிலையே வீட்டுக்குள் உருவாக்கியிருந்தாள். பல மணி நேரம் பூஜையறையில் செலவிட்டாள். நிறைய விரதங்களை அனுஷ்டித்தாள்.

ஒருநாள் நானும் மாமாவும் சாப்பிட்ட பின் பேசிக் கொண்டிருந்தோம். மாமா சாவகாசமாக சிகரெட் புகையை உள்ளிழுத்து சுருள் சுருளாய் புகையைப் பரவவிட்டுக் கொண்டிருந்தார். என்னை ரொம்ப நாளாக அரித்துக் கொண்டிருந்த அந்தக் கேள்வி கட்டுப்படுத்த முடியாமல் வெளிவந்தது.

“”மாமா, அக்கா இவ்வளவு பக்தி மானா, மாறிட்டாளே, கொஞ்சம் விட்டா சன்னியாசியா மாறுனாலும் மாறிடுவா போலருக்கு, அப்படி என்னதான் வரம் கேட்காளாம்”

“”ஒங்கிட்ட ஒங்க அக்கா என்ன வரம் கேட்குறாங்கிறத சொல்லலையா”

“”சொல்லலையே மாமா”

“”நான் சொல்லியிருப்பானு நெனைச்சேன்”

“”அவ, சொல்ல வேணாம், நீங்க சொல்லுங்க மாமா, அப்படி என்ன வரம் கேக்கா”

ஒரு ஆழ்ந்த பெருமூச்சுடன், சிகரெட் புகையை வெளியேற்றியபடி மௌனித்திருந்தார். இலேசாக இறுமினார்:

“”நானும் ஒங்க அக்காவும் சாகுறதுக்கு முன்னாடி மகாலட்சுமி செத்துறணும், இதுதான் ஒங்க அக்கா கேக்குற வரம்”

என்னால் பதில் பேச இயலவில்லை. மாமா புகையை இழுத்துக் கொண்டிருந்தார். அக்காள் மெதுவாக வந்து எங்கள் பக்கத்தில் உட்கார்ந்தாள். சூழலின் இறுக்கத்தை உணர்ந்து கொண்டாள்.

“”ஏன், ரெண்டு பேரும் இப்படி இறுகிப் போயி உட்கார்ந்திருக்கீக, என்ன தம்பி சொல்லுப்பா”

“”சாமிகிட்ட, நீ என்ன வரம் கேட்கேங்குறத ஒன் தம்பிக்கிட்ட சொன்னேன், அப்படியே அப்செட் ஆகிப் போயிட்டான்”

அக்கா ரொம்பவும் நிதானமாகப் பேசினாள். அழுகையை அடக்கி அடக்கியே பக்குவப்பட்டு விட்டாள் போலும். கண்ணீர் சிந்தாமல் பேசினாள்.

“”இங்க, கேளு, தம்பி, நானும் ஒங்க மாமாவும் இருக்குறவரைக்குத்தான் மகாலட்சுமிய கவனிச்சுக்குற முடியும், வேற யாராலயும் ஒரு நாளைக்கு கூட அவள வச்சிக்குற முடியாது, பையன்க ரெண்டு பேரும், அவ உயிரோட இருக்குறதே கேவலம்னு நெனைக்காங்க, இல்லனா ரூமுக்குள்ள போட்டு பூட்டுவானா, அதனால எங்க ரெண்டு பேரு கண்ணுக்குப் பின்னால, அவ இருந்தா வம்பா சீரழிஞ்சு போவாப்பா.

ஒன்னாலயும் பராமரிக்க முடியாது. நகைநட்டு, பணம், இருந்து என்ன செய்ய, பச்சப் புள்ளயப் போல வச்சுக் காப்பாத்தனும், அந்த மாதிரி மனசு இப்ப உள்ள தலமொற ஆட்ககிட்ட அறவே கெடையாது. கூடப் பொறந்த அண்ணன் தம்பிகளே அவ கூட இருக்கிறது கேவலம்னு, நெனைக்கும் போது, அவங்களோட பொண்டாட்டிமாரு எப்படி அவளுக்கு பச்சத் தண்ணி கொடுப்பா, அதனால நானும் ஒங்க மாமாவும் சாகுறதுக்கு முன்னாடி அவ செத்துட்டா, நாங்க ரெண்டு பேரும் நிம்மதியா கண்ண மூடிருவோம், அவளும் நிம்மதியா போயி சேர்ந்திட்டாங்கிற நிம்மதி எங்களுக்கு கெடைக்கும்”.

நானும் மனசைத் தேற்றிக் கொண்டேன். அக்காளுக்கும் மாமாவுக்கும் ஆறுதல் சொல்லிவிட்டு ஊர் வந்து சேர்ந்தேன். சாமியிடம்

அக்கா கேட்ட விசித்திரமான வரம் பற்றி நினைக்கும் போதெல்லாம் இருதயத்தை யாரோ கசக்கி முறுக்குவது போலிருக்கும்.

“”கடவுளே… அக்காள் கேட்கும் வரத்தை தயவு செய்து கொடுத்து விடாதே” அடி மனசில் எண்ணங்கள் குமிழியிடும்.

சரியாக ஒரே மாசம்தான், மகாலட்சுமி இறந்துவிட்ட செய்தி எனக்கு கிடைத்தபோது நம்பவே முடியவில்லை, சாமிகள் இவ்வளவு சீக்கிரமாகவா பக்தர்களுக்கு வரத்தை கொடுக்கின்றன. நான் சென்னை போய் சேர்ந்தபோது, அக்காள் சாமி தனக்கு வரம் கொடுத்த கதையை அழுகையினுடே சொன்னாள்.

“” தம்பி நானும், மகாவும் கோயிலுக்கு போய்ட்டு வந்துக்கிட்டு இருந்தோம், அந்த எடம் கொஞ்சம் இருட்டா இருந்துச்சு சடக்னு கத்திய உருவுனமானிக்கு எங்க முன்னால திருடன், நகைய கழட்ட முடியாதுனு நான் மல்லுக்கட்றன், மகா பதறிப்போயி தள்ளி நிக்கா, ஒரு கையால என்னோட தோளப் புடிச்சிக்கிட்டு கத்தியால என் வகுத்தல குத்துனான், சடக்னு என்னைய மகா கட்டிப் புடிச்சிக்கிட்டா, கத்தி அவளோட முதுகுல ஆழமா பாய்ஞ்சிருச்சு, திருடன் கத்திய விட்டுட்டு ஓடிட்டான்”.

“”மகாவை படைத்ததன் மூலம் படைப்பின் அர்த்தத்தை நான் உணர்ந்து கொண்டேன்” அக்காளின் அழுகை அடங்க வெகுநேரமாயிற்று. நான் இப்பொழுது அலுவல் நிமித்தம் சென்னை சென்றால் லாட்ஜில் தங்கிவிட்டு ஊர் திரும்புகிறேன்.

– செப்டம்பர் 2014

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *