வனம் தந்த வரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 8, 2022
பார்வையிட்டோர்: 3,524 
 

‘உன் மரமண்டைக்கு எத்தனை தடவை சொன்னாலும் புரியாதா?’… என்று சொன்ன கணவனின் கடுகடுப்பான பேச்சு வந்தனாவை எரிச்சலுட்டியது. செத்து விடலாம் போல் இருந்தது. திருமணமான புதிதிலும் சரி; மித்ரன் பிறந்த பிறகும் சரி ஒரு இனிமையான வார்த்தையை கணவனிடமிருந்து பெறமுடியவில்லை என்ற ஆதங்கம் நெஞ்சில் ஆணிஅடித்து உட்கார்ந்திருந்தது அவளுக்கு. மித்ரனுக்காகவாவது வாழ்ந்தாக வேண்டுமே. தாயில்லாமல் அவனும் அனாதையாக வேண்டுமா? பெண்ணை மட்டம் தட்டுவதுதான் ஆண்களின் குரூர எண்ணமாக இருக்கிறது. எத்தனையோ சாதனைகளைப் பெண்கள் செய்தாலும் ஆண்களின் மதிப்பீடு குறைவாகத் தானே இருக்கிறது. இரவுகளில்கூட மகிழ்ச்சி தவணைமுறையாக தானே வந்து செல்கிறது. அந்த நேரங்களில் எதையாவது சொல்லி அவனிடம் வெறுப்பை பெற்றுவிடுவோமோ என்ற அச்சத்தில் மவுனியாக இருந்துவிடுவாள்.

வந்தனாவும் வசந்தனும் மேட்டுப்பாளையம் வனவியல் கல்லூரியில் முதுகலை படித்தவர்கள். இவன் 2005ஆம் பேட்ச். அவள் 2010ஆம் பேட்ச். வந்தனா வனவியல் முதுகலை முடித்திருந்த நிலையில், ஒரே துறை சார்ந்த பெண் தனக்கு மனைவியாக கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று தேடிப்பிடித்து திருமணம் செய்திருந்தான் வசந்தன்.

ஒரு நல்ல வேலைக்குப் போய்விட்டுத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்றிருந்த வந்தனாவை நல்ல சம்மந்தம், நம்ம சாதியில் படித்த மாப்பிள்ளை கிடைப்பது அரிது என்று சொல்லி சம்மதிக்க வைத்துவிட்டார்கள். உடன் படித்தத் தோழிகள் அனைவரும் நல்ல வேலையில் இருப்பதும் ஒரு உறுத்தலாகவே இருந்தது.

வசந்தன் சத்தியமங்கலம் வனச்சரக அலுவலகத்தில் வனச்சரகராகப் பணியாற்றுகிறான். வனவராகத்தான் தன் பணியைத் தொடங்கினான். பணியாற்றிக் கொண்டே ஐ.எப்.எஸ் தேர்விற்குத் தயாராகிக் கொண்டிருந்தான். வசந்தன், ஐ.எப்.எஸ் என்ற உயர்ந்த நிலையை அடைய கடும் முயற்சி மேற்கொண்டிருந்தான்.

திருமணமான புதிதில் எல்லா தம்பதியரைப் போலவும் மகிழ்ச்சியாகத்தான் வாழ்க்கை இருந்தது. அப்பொழுதே அவள் தனது சின்ன சின்ன ஆசைகளை அவனிடம் தெரிவிப்பாள். அவன் மறுதலிப்பான். வேலை காரணமாக அதை அவன் தவிர்க்கிறான் என்று மனதுக்குள் அவளே சமாதானம் செய்து கொள்வாள்.

வளைகாப்பு சமயத்தில் உறவினர்கள் எல்லோரும் வந்திருந்த நிலையில் இவன் மட்டும் வேலை நிமித்தமாகத் தாமதமாக வந்தது குறித்து கேட்டதற்கு, நீதானே…புள்ளப் பெக்கப் போற… இப்ப நான் இருந்து என்ன நடக்கப்போகுது… என்று கோபத்தைக் காட்டியது இன்னும் நெஞ்சுக்குள் வடுவாகவே இருக்கிறது அவளுக்கு.

ஒரு காலத்தில் சத்தியமங்கலம் காடு, வீரப்பனின் கோட்டையாக இருந்தது. இப்போது வீரப்பன் இல்லாத போதும், அங்கு பணியாற்றுவதே சவாலானதாக இருக்கிறது. சட்ட விரோத செயல்கள், காட்டு விலங்குகள் ஊருக்குள் புகுந்து, மனிதர்களையும் வீட்டு விலங்குகளையும் கொல்லவது; சமூக விரோதிகளால் காடு தீப்பற்றி எரிவது போன்ற சமயங்களில் கடுமையான மன உளைச்சல் ஏற்படும். இருபத்தி நான்கு மணி நேரமும் பணியாற்ற வேண்டிய சூழலால் வசந்தன் தவித்துத்தான் போயிருந்தான்.

அரசாங்கம் தந்த வனவர் மற்றும் வனச்சரகர் குடியிருப்பில் ஏ பிளாக் இவனுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. எல்லா வசதிகளும் கொண்ட குடியிருப்பு. எந்த நேரத்திலும் வெளியில் சென்றுவர ஜீப் ஒதுக்கப்பட்டிருந்தது. கூப்பிட்ட குரலுக்கு வந்து ஏவல் பணி செய்ய வாட்சர்கள் என அனைத்தும் இருந்தது. விலங்குகள் வந்து தாக்காமல் பாதுகாப்பு வளையத்துக்குள்தான் அவன் வீடும் இருந்தது.

மகன் பிறந்து ஐந்தாண்டுகள் ஓடியும், அவனுடன் சிறிது நேரம் ஒதுக்கி கொஞ்சி விளையாடக் கூட அவனால் முடியவில்லையே என்ற ஆதங்கமும் வந்தனாவை ஆட்கொண்டிருந்தது. சத்தியமங்கலத்தில் உள்ள ஆங்கில வழி பள்ளியில் அவனைச் சேர்த்திருந்தாள். இதை அவனிடம் சொன்ன போது, அதை அவன் கண்டு கொள்ளவே இல்லை.

அண்ணன் வீட்டோட இருக்கும் அப்பாவும் அம்மாவும் எப்போதாவது தான் பார்க்க வருகிறார்கள். அவர்களிடம் அவரைப் பற்றி குறைகூறி அவர்களையும் ஏன் கஷ்டப்படுத்த வேண்டும் என்று அவர்களிடமும் எதையும் சொல்லாமல், மனதுக்குள் புழுங்கிப் போவாள். அவர்களும் மகள் ஒரு வேலைக்குச் சென்றிருந்தால் நன்றாக இருக்கும்; படித்த படிப்பு வீணாகாமல் இருக்கும் என்று அவ்வவ்போது அவர்களும் சொல்லத்தான் செய்கிறார்கள்.

திருமணமான புதிதில் வேலைக்குச் செல்கிறேன் என்று சொன்னதற்கு, சரி… பாக்கலாம்… என்றவன் அதற்கான சின்ன முயற்சிகூட செய்யவில்லை. உறவுகளும் தோழிகளும் அருகில் இருந்தாலாவது அவர்களிடம் மனக்குறையை கொட்டலாம். வேலைக்குச் சென்றாலாவது தனிமையைப் போக்கிவிடலாம். குடும்ப பொருளாதாரத்திற்காக இல்லாவிட்டாலும் படித்த படிப்பு இப்படி ஆகிவிட்டதே என்று வேதனையில் இருந்தாள். நானும் ஒரு ஐ.எப்.எஸ் ஆக முடியாதா? அப்படி நானும் ஒரு ஐ.எப்.எஸ் ஆகிவிட்டால் அவரை மதிக்க மாட்டேன் என்ற தாழ்வுமனப்பான்மையால் இப்படி கூறுகிறாரா? …

மித்ரன் பிறந்த பிறகு கேட்டதற்கு, குழந்தையை யார் பார்த்துக் கொள்வது, அதனால் வேலைக்குப் போக வேண்டாம் என்று அந்த பேச்சுக்கே முற்றுப்புள்ளி வைத்துவிட்டான்.

மித்ரன் உடன் இருந்தவரை அவனோடு பொழுது கழிந்தது. இப்போது அவனும் பள்ளிக்குச் சென்றுவிடுகிறான். எத்தனை நாளைக்குத்தான் காட்டு மரங்களையும் பறவைகளையும் அது எது எழுப்பும் ஒலிகளையும் கேட்டுக் கொண்டிருப்பது.

வந்தனாவிடம் கோபித்துக் கொண்டு வந்ததற்குக் காரணம், சத்தியமங்கலம் காட்டுக்குள் சமூக விரோதிகளின் நடமாட்டம் இருப்பதாக வந்த செய்திதான் அவனை அப்படி கோபத்தின் உச்சத்திற்குக் கொண்டு சென்றது. கோடை வெயில் வேறு அனலாய் வீசிக் கொண்டிருந்தது.

எப்படியும் இந்த முறை அவர்களைத் தப்ப விடக்கூடாது என்று இரண்டு காவலர்களை மட்டும் அழைத்துக் கொண்டு ஜீப்பில் புறப்பட்டான். ஜீப்பை நிறுத்தி விட்டு, காட்டுக்குள் நுழைந்து அவர்களைத் தேட ஆரம்பித்தான். காட்டின் நடுப்பகுதியில் பாறைகள் நிறைந்த பகுதிய தென்பட்டது. கடுமையான வெயில் தகதகத்தது.

எங்கிருந்தோ வந்த யானைக் கூட்டங்களின் பிளிறல் சத்தம் கேட்டு ஆளுக்கொரு திசையாக பிரிய நேர்ந்தது. யானையின் பிளிறல் இவன் பின்னால் சற்றே அருகில் கேட்பது போல் உணர்ந்த வசந்தன், தன் கைத்துப்பாக்கியை இறுகப் பிடித்தான். பிளிறல் அதிகரித்துக் கொண்டே இருந்ததை உணர்ந்த வசந்தன் அங்கிருந்து தப்பிக்க நினைத்த நேரத்தில் அவனின் கால் இடறி, ஒரு பெரிய மரத்தின் வேரில் விழுந்துவிட்டான். ஒவ்வொரு நிமிடமும் மரண பயத்தில் இருந்தான்.

யானைக் கூட்டத்தின் பிளிறல் நிற்கவில்லை. இப்பொழுது அவன் காதுகளில் அவை சருகுகளின் மேல் நடந்து வரும் காலடி சத்தம் அருகாமையில் கேட்டது. இரண்டு பெரிய அடிவேர்களுக்குள் தன்னை இழுத்துக் கொண்டான்.

இரண்டு யானைகள் ஒரு குட்டியுடன் இவனைக் கடந்து சென்றன. உயிர் பயம் அவனைத் தொற்றிக் கொண்டது. நடுக்காட்டுக்குள் இருந்து உணவுக்காகவோ தண்ணீருக்காக அவை வந்திருக்க வேண்டும் என்று நினைத்தான். அவன் நினைத்தது மாதிரியே சிறிது தொலைவில் தள்ளி இருந்த பாறையின் அடியில் சிறிதளவே தண்ணீர் இருந்தது. தண்ணீர் தேங்கிய அந்த குட்டையின் அருகில் மூன்றும் நின்றன. அவை நம்மை எப்படியும் தாக்க வந்தால் என்ன செய்வது என்று நினைத்துக் கொண்டே, கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டே இருந்தான்.

குட்டையில் சிறிதளவே தண்ணீர் இருக்கிறது. இது மூன்று யானைக்கும் போதுமானதாக இருக்குமா?… வேறு எங்காவது தண்ணீர் குடிக்க நகர்ந்து விடாதா? என்று வசந்தன் எண்ணிக் கொண்டிருக்கும் போதே, வெப்பத்தின் தாக்கத்தால் குட்டி யானை அந்த குட்டைக்குள் இறங்கி கலக்க ஆரம்பித்துவிட்டது. அடடா… இப்போதைக்கு இவை நகரப் போவதில்லை.

ஆண் யானை அந்த தண்ணீருக்குள் தன் தும்பிக்கையை கொண்டு சென்றது. இந்த ஒரு யானைக்கே தண்ணீர் போதாது… மற்ற யானைகளை இது குடிக்க விடுமா? இல்லை விரட்டி அடிக்குமா? அப்படி சண்டை போட்டுக் கொண்டால் நம் நிலைமை என்னாகும்?. இதயத்துடிப்பு நிமிடத்திற்கு நிமிடம் வேகமாக அடிக்கத் தொடங்கியது. நம்மை தாக்கி கொன்றுவிட்டால்… என்று நினைத்த போதே, பெண் யானை தன் தும்பிக்கையை தண்ணீருக்குள் செலுத்தியது. இந்த குட்டி வேற இன்னும் கலக்கிக் கொண்டே இருந்தது. இந்த ஆண் யானை தண்ணீர் குடிப்பது போல் தெரியவில்லையே… இவனின் வனவியல் அறிவு உற்று நோக்கியது. குட்டி யானை கலக்கிய அந்த குட்டையில் பெண் யானை மட்டும் தண்ணீர் குடித்தது. பெண் யானை குடித்த பிறகு சிறிதளவே இருந்த அந்த தண்ணீரை ஆண் யானை குடித்தது. பெண் யானையைத் தழுவுவது போல தும்பிக்கையால் பிணைத்தது. பின் தும்பிக்கையைத் தூக்கிப் பளிறித் தன் மகழ்ச்சியைக் கொண்டாடியது. பிறகு மூன்றும் அந்த இடத்தை விட்டு நகர்ந்தன. இந்த பாசப் பிணைப்பு வெறும் நிகழ்ச்சியாக இல்லாமல் நெகிழ்ச்சியாக இருந்தது அவனுக்கு. இதை சற்றும் எதிர்பார்க்காத வசந்தனின் நெஞ்சுக்குள் வந்தனாவும் மித்ரனும் ஒளிர்ந்தார்கள். இதை வனம் தந்த வரமாக நினைத்து, வீட்டை நோக்கி விரைவாக செல்வதற்குக் காட்டுக்குள் நல்ல பாதையைத் தேடினான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *