வக்கிரம் என்பது எதிர்மறை சிந்தனையைக்குறிப்பது என பள்ளியில் ஆசிரியர் பாடம் நடத்தும் போது விளக்கிக்கூறக்கேட்டுள்ளேன். ‘அவன் கூடவே சேராதே. அவன் வக்ர புத்தியோட இருக்கறான்’ என அம்மா கூறிய போது தான், அம்மா பேசுவது ஒருவரின் செயல்பாடுகளை நேரில் கண்டதினால் ஏற்பட்ட நடைமுறை அனுபவத்தின் வெளிப்பாடு என்பதைப்புரிந்து கொண்டேன்.
வக்கிரம் என்பது பின்னோக்கி நகர்வது, பிற்போக்கு சிந்தனை, பிற்போக்கு வாதம் இப்படி பல பெயர்களில் குறிப்பிடலாம். அதாவது பின் விளைவுகளைப்பற்றி சிந்திக்காமல் மனதில் தோன்றியதையெல்லாம் செயல்படுத்த விரும்பும் குணம் என்பது புரியும் படியான பதில் என்றே கூறலாம். தன் செயல்களால், தான் பாதிக்கப்படுவது தவிர பிறரையும் பாதிக்கச்செய்யும் நிலையில் மற்றவர்கள் விலகிச்செல்வது தவிர்க்க இயலாமல் போய்விடுகிறது.

சிகன் சித்தி மகன் என்றாலும் அவன் வீட்டிற்கு வருவதும், என்னுடன் பழகுவதும் அம்மாவுக்கு அறவே பிடிப்பதில்லை.
“பாம்பு ஊட்டுக்குள்ள வரலீன்னு ஆறாச்சும் கவலைப்படுவாங்களா? அப்படித்தான் பாவிகளையம் நெனைக்கோணும். அவன் பிஞ்சிலியே பழுத்துட்டான். நேரா மொகத்தப்பாக்காம தலையக்குத்தியே உக்காத்திருக்காம்பாரு. அவங்கண்ண நேராப்பாத்தீன்னாலே மனசுல வெச்சிருக்கிற சூழ்ச்சி தெரியும். பெத்தப்பன் கஷ்டப்பட்டு சேத்து வெக்கிறத சீக்கிரம் அழிச்சுப்போட்டு அவரை நடுத்தெருவுல நிறுத்தப்போறாம்பாரு. ஆத்தாளுக்கு தகுந்த பையனா பொறந்திருக்கறான். பொண்டாட்டி கிட்டவும், பையங்கிட்டவும் சிக்கி கஷ்டப்படறது வெள்ளந்தியா இருக்கிற அவனோட அப்பம்மட்டுந்தான். இப்படிப்பட்ட பையனப்பெத்துட்டோம்னு அவரும் கவலைப்படாம இவனப்பத்தி எப்பப்பாத்தாலும் ஒசத்தியே பேசிப்பேசி அவரு தலையிலியே அவரே மண்ண வாரிப்போட்டுக்கறாரு” என அம்மா பேசிய போது எனக்கு அம்மா மீது கோபம் வந்தது.
“இப்படியெல்லாம் பேசக்கூடாது மா. அவன சொந்தக்காரனா, இன்னொரு மகனா, சக மனுசனா மட்டும் பாரு. அது போதும். இப்படி தப்பு கண்டு பிடிச்சீன்னா ஒருத்தரையுமே பிடிக்காம போயி நீ மட்டும் ஊட்ல தனியாத்தான் உக்காந்துட்டு இருக்கோணும். கூப்புட்டு சாப்பாடு போடு. சாப்பிடட்டும். பிடிக்கலேன்னா வெளில கெளம்பி போற மாதிரி போக்கு காட்டு போயிடுவான்” என நான் கூறியதைக்கேட்டு அம்மா செயல்படுத்த எனக்கும் நிம்மதியானது.
சிகனும் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும். பூட்டாமல் வெறுமனே சாத்தியிருக்கும் வீட்டில் யார் இருக்கிறார்கள் என்பதையறியாமல், கதவைத்தட்டி வீட்டிற்குள்ளே இருப்பவர்கள் வந்து திறந்த பின் உள்ளே வராமல், வந்ததும் தானே திறந்து உள்ளே வருவதும், சமையலறை, படுக்கையறை என தன் வீட்டிற்குள் செல்வது போல் செல்வதும், அம்மாவின் பர்சில் கேட்காமலேயே பணம் எடுப்பதும் அம்மாவின் கோபத்துக்கு காரணமாகி விட்டது. ஒரு நாள் எனது பைக்கை என்னைக்கேட்காமலேயே வீட்டிற்குள் வந்து சாவியை எடுத்து ஓட்டிச்செனறவன் இரண்டு நாட்கள் வராமல், போனையும் சுவிட்ச் ஆப் செய்து விட்டு வெளியே சுற்றி விட்டு, குடித்து விட்டு ஓட்டியதால் விழுந்த பைக்கின் சேதத்தை சரி செய்யாமல் வீட்டில் கொண்டு வந்து சொல்லாமலேயே விட்டு விட்டு சென்று விட்டான். அதுவும் அம்மாவின் கோபத்தை அவன் மேல் அதிகரித்ததிற்கு காரணமாக இருக்கலாம். நானும் குற்றம் பார்த்தால் சுற்றமில்லை என நினைத்து மறுபடியும் யதார்த்தமாகவே பழகினேன். அனுபவம் பெறும்போது மாறிவிடுவான் என வெறுக்காமல் இருந்தேன்.
இது போல குணம் கொண்டவர்கள் பெண்களிலும் இருக்கத்தான் செய்கின்றனர்.
அம்மாவின் தங்கையான சிகனின் தாயையே அம்மாவுக்கு பிடிக்காது. ஒரு சேலை எடுத்தால் கூட அதை ஒரு முறை கட்டி விட்டு பிடிக்கவில்லை என கடைக்காரரிடம் மாற்றித்தரச்சொல்லி சண்டை போடுவது, அம்மாவின் நகையை திருமணத்துக்கு செல்வதாகக்கூறி வாங்கிக்கொண்டு போய் அடமானம் வைத்து கடன் வாங்கி விட்டு கடனைக்கட்டாமல் ஏலத்துக்கு வரும்போது வந்து அழுது நடித்து காரியம் சாதிப்பது, அம்மாவுக்கும் சேர வேண்டிய சொத்துக்களை தாத்தாவிடம் வாங்கி அடமானம் வைத்து மீட்க முடியாமல் விற்று கடன் கட்ட வைத்தது, பல உறவுகளிடன் கடன் வாங்கி திருப்பித்தராமல் இருந்தது என பல பிரச்சினைகளை வலிய இழுத்துப் போட்டுக் கொண்டு எதுவுமே நடக்காதது போல் அலட்டிக்கொள்ளாமல் வலம் வருவது என அம்மாவின் வெறுப்பை தாயும், மகனும் சம்பாதித்துக்கொண்டார்கள்.
சிகனின் அண்ணன் மிகவும் நல்ல குணம் கொண்டவன். அவனை சிகனைப்பிடிக்கும் அளவுக்கு சித்திக்கு பிடிப்பதில்லை.
சிகன் தான் சம்பாதிப்பதைக்கொடுக்காவிட்டாலும் நல்லவன் என்பதும், ஒரு மாதம் சம்பளம் கொடுக்காவிட்டாலும் மூத்த மகனை கரித்துக்கொட்டுவதும் சித்தியின் பழக்கம்.
மூத்த மகனை உறவினர்கள் நல்லவன் எனக்கூறினால்” அவனாறு தேவைக்கு நல்லவனா இருக்கிறான்?’ என்பதும், சிகனை கெட்டவன் என்பவர்களிடம் ” ஒலகத்துல ஆறுதான் தப்பு பண்ணறதில்ல? அவந்தா பண்ணிட்டானா?’ எனக்கேட்பதையும் காதில் கேட்ட எனக்கே சித்தி மீது கோபம் வந்தது.
குழந்தைகள் பிறப்போடு வளர்ப்பிலும் நேர்மறை சிந்தனைகளை புகுத்தி வளர்க்க வேண்டும். பிறப்பை விட வளர்ப்பு மிக முக்கியம். அவர்களது எதிர்மறை சிந்தனையால் ஏற்படும் செயல்களைக்கண்டு பிடித்து சிறு வயதிலேயே களைய வேண்டும். வளைந்து செல்லும் செடியை நேராகக்கட்டினால் மரமான பின் வளையாது. அது போலத்தான் தவறுகளை சிறுவயதிலேயே சுட்டிக்காட்டி திருத்த முற்பட வேண்டும்.
சித்தி சுந்தரி தன் மகன் சிகனை தன் எண்ணம் போல் வளர்த்ததன் விளைவு அவனுக்கும் தவறை தவறாகப்பார்க்கும் கண்ணோட்டம் வராமல் போனது. இதன் காரணமாகவே உறவுகள் பலரும் அவர்களது வீட்டிற்கு வரவே அஞ்சுகின்றனர். இன்னும் சில உறவுகள் தயங்காமல் என்னிடமே” சந்ரு நீ உன்ற சித்தி பையங்கூட பேசறத நிறுத்திக்கோ. பன மரத்துக்கடில உக்கார்ந்து பாலக்குடிச்சாலும் கள்ளுக்குடிச்சான்னு தான் சொல்லுவாங்க. நீ அவங்கூட பழகுனீன்னா உன்னையும் கெட்டவன்னு தான் சொல்லப்போறாங்க. வீணா தப்பு பண்ணாம தப்பானவனா பேர் வாங்கீராதே” என்பது போல் அறிவுரை கூறினாலும், நாமும் விட்டு விட்டால் மனம் கெட்டுப்போய் தற்கொலை ஏதாவது செய்து கொண்டால் வீணாக நம்மால் ஒரு மனிதனை இந்த பூமி இழந்த நிலை ஆகிவிடுமே, சித்திக்கு வாரிசு இல்லாமல் போய் விடுமே என நினைத்து நானும் அவர்களது வீட்டிற்கு போவதும், சின்னச்சின்ன உதவிகள் செய்வதும் வாடிக்கையானது .
‘வேப்பமரத்துல காய்க்கிற வேப்பங்காயோட கசப்பு தேன்ல ஊறப்போட்டாலும் மாறாது. வாழைக்காயை வேப்பந்தளைல அடைச்சு புகை போட்டு பழுக்க வெச்சாலும் அதோட சுவை மாறாது’ ன்னு பெரியவங்க சொன்ன மாதிரி நானும் எவ்வளவோ புத்திமதி சொல்லி, சரி செய்யப்பார்த்தும் சிகன் எனக்கு மாறரதுக்கு பதிலா என்னை அவனோட போக்குக்கு மாத்தரதுக்கு முயற்ச்சி பண்ணின போதுதான் எனக்குள் இருக்கின்ற முழுமையான, எதிர்மறைக்கு மாறான நேர்மறை சிந்தனையின் ஆற்றல் என்னைக்காப்பாற்ற, எச்சரிக்கை செய்ய விழித்துக்கொண்டது.
ஒரு கம்பெனியில் மேனேஜரான நான் இல்லாத போது எனக்கு பதிலாக செயல்பட இருக்கின்ற உதவி மேனேஜர் அவருடைய கையெழுத்தைப்போட்டுக்கொடுப்பது தான் கம்பெனியின் சட்டம். நான் இருக்கும் போதே உதவி மேனேஜர் கையெழுத்தைப் போட்டதோடு, அதுவும் தயங்காமல் என்னுடைய கையெழுத்தையே போட்டுக் கொடுக்கின்ற தைரியம் உள்ளவரான போது, அவருடன் நாம் எப்படி வேலை செய்ய முடியும்? அதை தவறில்லை என மன்னித்து அப்படியே விட்டு விட்டு போக முடியுமா? இது தவறுடைய உச்சம்னும், மிகப்பெரிய ஏமாற்றுன்னும், என்னுடைய வேலைக்கே உளை வெக்கிற முயற்சின்னும் தெரிஞ்சதும் காவல் துறைல புகார் செஞ்சு, உதவி மேனேஜரை கைது செய்ய வைத்து சிறையில் அடைத்து விட்டு வீட்டிற்கு போன போது “பெத்த தாய் நாஞ்சொல்லியும் கேட்காம சொந்தக்காரன்னு பரிதாபப்பட்டு சிகனுக்கு உதவி மேனேஜர் வேலை வாங்கிக்கொடுத்தியே…? இப்ப கொஞ்சமும் கூட நன்றி விசுவாசம் பார்க்காம உன்ற வேலைக்கே வேட்டு வெச்ச போதாவது எருமை மாட்டை பசு மாடா மாத்த முடியாதுன்னு புரிஞ்சிட்டியே….” என்பது போல அம்மா என்னைப் பார்த்த போது தான் ‘பாத்திரம் அறிந்து பிச்சையிடு’ எனும் பழமொழியே எனக்கு புரிய ஆரம்பித்தது.