‘பலான’வர்…!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 4, 2019
பார்வையிட்டோர்: 8,451 
 

மகன் வெளியூர் சென்றுவிட்ட துணிச்சல். தர்மலிங்கம் தைரியமாக வீட்டினுள் நுழைந்தார்.

நாற்காலியில் சவுகரியமாக அமர்ந்தார்.

உள்ளே திரும்பி…

” மருமவளே. .! ” அழைத்தார்.

” இதோ வந்துட்டேன் மாமா. ..” சுந்தரி… மாமனார் குரல் கேட்டு பவ்வியமாக அவர் எதிரில் நின்றாள்.

” என்னம்மா பண்ணிக்கிட்டிருக்கே. .? ” பாசமாய்க் கேட்டார்.

” அறையில் அவரோட துணிமணியெல்லாம் ஒழுங்குபடுத்திக்கிட்டு இருக்கேன் மாமா. ” சொன்னாள்.

தர்மலிங்கம் 50 வயதென்றாலும் 40 வயது தோற்றம். பாவம். . மனைவியை இழந்த ஒண்டிக்கட்டை.

” நல்லது. இப்படி உட்கார். ஒரு சேதி. ” எதிர் நாற்காலியைக் காட்டினார்.

” இருக்கட்டும் மாமா. .” சுந்தரி அமரவில்லை. மரியாதை நிமித்தம் நின்றாள்.

” பரவாயில்லை. உட்காரும்மா. .”

அவர் சொல்லுக்கு கட்டுப்பட்டு அப்படியே தரையில் அமர்ந்தாள்.

” சொல்லுங்க மாமா. .” அவர் முகத்தைக்கூட நிமிர்ந்து பார்க்காமல் அடக்கமாக சொன்னாள்.

” சொல்றேன். நான் சொல்லப் போறது ரொம்ப ரொம்ப ரகசியம். நம்மைத் தவிர வெளியில் வேற யாருக்கும் தெரியக்கூடாது. குறிப்பா. .. உன் புருசன். அதான். . என் மகன் அருண் காதுல படவேக் கூடாது.! இஷ்டம்ன்னா இஷ்டம். இல்லேன்னா இல்லே. இதோட விட்டுடனும்.! இதுனால. .. எனக்கும் உனக்கும் பின்னால தொல்லை, தொந்தரவு இருக்கக் கூடாது. ஆனா ஒன்னு. ..ஒத்துப் போனா உனக்கும் நல்லது. எனக்கும் நல்லது. ” பொடி போட்டு நிறுத்தினார்.

சுந்தரி ஒன்றும் பேசவில்லை. கம்மென்றிருந்தாள். தலை நிமிரவில்லை.

” நான் கேட்கிறேன்னு தப்பாவும் நினைக்கக் கூடாது என்ன. .? ” ஏறிட்டார்.

இதற்கும் கம்.

” என் பையன் அருணுக்கு அக்கு தொக்கில்லே. அரசாங்க உத்தியோகம் என்கிறதுனால பெரிய பெரிய இடத்திலிருந்தெல்லாம் வரன் வந்து குவிஞ்சுது. ஆனா. .. அருண் உன்னைப் பத்தி சொன்னதும் நீதான் இந்த வீட்டுக்கு மருமகளாய் வரனும்ன்னு மனசுக்குள் உடனே தீர்மானிச்சேன். இருந்தாலும் ஒப்புக்கு மறுத்தேன். ஏன் தெரியுமா. .? ” நிறுத்தினார்.

சுந்தரி விழித்தாள்.

” மறுக்க மறுக்கத்தான் விருப்பு வரும். அந்த விருப்பு, வெறியாய் மாறி. .. கொண்டு வரனும் என்கிற எண்ணம் தீவிரமாகும். சரியா. .? ”

” ச. .சரி மாமா. .”

” சுந்தரி ! அருண் உன்னைப் பத்தி என்கிட்ட ஒன்னுவிடாம சொன்னான். உடம்புல கெட்டாலும்… உள்ளத்தால கெடாம ஒருத்தி பலான இடத்துல மாட்டி சீரழியறாள். ஏழையான அவளுக்கு நல்ல வேலை வாங்கி த் தர்றேன்னு ஒருத்தி ஏமாத்தி கூட்டிப் போய், பால்ல தூக்க மாத்திரையை க் கலந்து கொடுத்து, அன்னைய ராத்திரியே அவளைக் கெட வச்சிருக்காள். மறுநாள், மறுத்து அழுதவளை… அடி உதைன்னு ஆரம்பிச்சு சுத்தமாய் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திட்டாள். அந்தப் பெண்ணின் கண்ணீர் கதை என்னை உருக்கிடுச்சு. அவளைக் காப்பாத்தி திருமணம் முடிக்க விரும்பறேன். உங்க சம்மதம் தேவைன்னான். எந்த தகப்பன் இதுக்கு சம்மதிப்பான். ..?! …நான் உடனே மனசுக்குள்ள சம்மதிச்சேன்!. மேலே சொன்ன காரணங்களுக்காக மறுத்தேன். என் சம்மதத்துக்கும் மறுப்புக்கும் இன்னும் சரியான காரணம் இருக்கு. என்ன சொல்லு ..? ” அவளை ஏறிட்டார்.

” தெ .. தெரியல மாமா. ..” சுந்தரி தடுமாறினாள்.

” நீ இந்த வீட்டுக்கு சீக்கிரம் வரனும். எனக்கும் பயன்படனும் என்கிற எண்ணம். ! ”

சுந்தரி அதிரவில்லை. திடுக்கிடவில்லை. அமைதியாக இருந்தாள்.

” என் மனைவி செத்து பத்து வருசமாச்சு சுந்தரி. வெளியில அப்படி இப்படி மேஞ்சும் திருப்தி இல்லே. கேட்ட பேர். இதையெல்லாம் சரிப்படுத்த எங்கே வாய்ப்பு வசதின்னு தலையைப் போட்டு பிச்சுக்கிட்டேன். சரியான நேரத்துல அருண் உன்னைப் பத்தி சொன்னான். புடிச்சுக்கிட்டேன். ! ” நிறுத்தினார்.

”……………………….”

” இது. .. வீட்டுக்குள்ளேயே யாருக்கும் எவருக்கும் தெரியாம நடக்குற சங்கதி. உனக்கு எனக்கு அருணுக்கு யாருக்கும் கேட்ட பேர் கெடையாது. என் திட்டம் எப்படி .சரியா. .? ” கேட்டார்.

சுந்தரி கமென்றிருந்தாள்.

” அருண் திருமணம் முடிச்சு வந்ததலிருந்து உன்கிட்ட என் மனசைத் திறக்க ஆசை. இன்னைக்குத்தான் சரியான வாய்ப்பு கிடைச்சுது. சொல்லிட்டேன். ” நிறுத்திய தர்மலிங்கம் கொஞ்சம் இடைவெளி விட்டு, ” அப்புறம். .!…நான் வயசானவன். நீ என்னைத் தினமும் கவனிக்கனும்ன்னு அவசியமில்லே. அருண் வீட்டில இல்லாத சமயமாய் கண்ணு பார்த்து ,காது பார்த்து வாரத்துக்கு அஞ்சாறு தடவை கவனிச்சா போதும். அதுக்கு மேல கவனிக்கிறது உன் விருப்பம். எனக்கு ஆட்சேபனை இல்லே! ” நிறுத்தினார்.

இதுதான் சுந்தரியை ஒரு உலுக்கு உலுக்கியது. அவரை ஒருகணம் அதிர்ந்து பார்த்து தரை பார்த்தாள்.

” மௌனம் சம்மதம். வாசல் கதவை சாத்திட்டு வர்றேன். ” எழுந்தார்.

” ஒரு நிமிசம் மாமா. .! ”

” என்ன. .? ” நின்றார்.

” ஒரு உறுத்தல். .! ”

” சொல்லு ..? ”

” என் கழுத்துல தாலி இருக்கிற வரைக்கும் தப்பு செய்ய மாட்டேன்னு உங்க மகன் அருண்கிட்ட நான் சத்தியம் பண்ணி இருக்கேன் மாமா. நீங்க தப்பு பண்ண கூப்புடுறீங்க. கழுத்துல இருக்கிற தாலி உறுத்தும். கழட்டி வைக்கிறதைவிட அறுத்து வைக்கிறது நல்லது ! ” நிறுத்தினாள்.

” சுந்தரி. …!” புரியாமல் பார்த்தார்.

” இதை நீங்களாவும் அறுக்கலாம். நானாவும் அறுக்கலாம் மாமா. நீங்க அறுக்கனும்ன்னா அருணைக் கொலை செய்யனும். நானாய் அறுக்கிறதாய் இருந்தால் … நான் சோத்துல விஷம் வைக்கனும். எப்படி மாமா செய்யலாம். ..?! ” பார்த்தாள்.

” சுந்தரிஈஈ. ..” தர்மலிங்கம் அரண்டு போய் அலறினார்.

நினைத்துப் பார்க்கவே அவருக்கு நெஞ்சு நடுங்கியது. நடுங்கினார்.

” பயம் வேணாம் மாமா. கேவலம் இந்த நாத்த உடலுக்காக ஒரு நல்ல உயிர் போறதுல தப்பில்லே !” கூர்ந்து பார்த்தாள்.

அவ்வளவுதான். தர்மலிங்கத்த்தால் வினாடி நேரம் தாக்கு பிடிக்க முடியவில்லை.

” அம்மா தாயே சுந்தரி ! நீ பலான பெண். எனக்கும் படுப்பே. பத்தினியாய் இருக்க மாட்டேன்னு தப்பு கணக்குப் போட்டுட்டேன்ம்மா. சத்தியமா நீ பத்தினிதான் ! இதுல எள்ளளவும் சந்தேகம் இல்லே.!! சரியான நேரத்துல சரியானது சொல்லி இந்த கெட்டவனைத் திருத்திட்டே. என் மகன் அருண் சரியானவளைத்தான் தேர்ந்தெடுத்திருக்கான். தப்புக்கு என்னை மன்னிச்சுடும்மா. ” தழுதழுத்து கரகரவென்று கண்ணீர் விட்டு கையெடுத்து கும்பிட்டார்.

” மன்னிக்கிறேன் மாமா ! ” சுந்தரியும் நிம்மதி திருப்தியாய் தலையசைத்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *