கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 8, 2020
பார்வையிட்டோர்: 111,690 
 

சுபத்ரா காலையில் எழுந்து குளித்து உடைமாற்றித் தலைவாரி சின்னதாகக் கூந்தலைப் பின்னிக் கொண்டாள். கண்ணாடியைப் பார்த்துப் பொட்டு வைத்துக் கொண்டாள். பெட்டியைத் திறந்து ‘சார்டிபிகேட்’ எல்லாவற்றையும் எடுத்து கவரில் வைத்தாள்.

‘நான் போறேன்…!’ என்றாள் மொட்டையாக.

‘எங்கே.. பிறந்த வீட்டிற்கா..?’ என்றான் சுரேஷ் கிண்டலாக.

Story- Rosakari-10-2020முறைத்துப் பார்த்தாள்.

அவள் உதட்டில் எப்போதும் நிறைந்திருக்கும் மெல்லிய புன்னகை மறைந்து போயிருந்தது. கண்கள் சிவந்து கலங்கியிருந்தன. வார்த்தையில் பிடிவாதம் தெரிந்தது.

‘நான் ஏன் பிறந்த வீட்டிற்குப் போகணும்?’

‘பின்னே எங்கே?’

‘வேலை தேடப் போகிறேன்!’

‘வேலையா?’ உன்னாலே முடியமா என்பது போல நமட்டுச் சிரிப்புச் சிரித்தான்.

அவளுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

‘ஏன்.. பெண்கள் என்றால் உங்களுக்கு இளப்பமாகத் தோணுதோ?’

சுரேஷ் மௌனமாக இருந்தான்.

நேற்று இப்படித்தான் இராத்திரி சாப்பிடும் போது ‘இட்லி நல்லா இருக்கா’ என்று கேட்டாள்.

‘பரவாயில்லை’ என்றான்.

‘ஏன்.. நல்லாயிருக்குன்னு சொன்னா குறைஞ்சு போயிடுமா? எவ்வளவு கஷ்டப்பட்டு செய்தேன். ஒரு பாராட்டுக் கிடையாதா?’

‘இதிலே என்ன பாராட்டு வேண்டிக் கிடக்கு? சுபா.. இங்கே பாரு.. நீ ஒரு எலெக்ட்ரிக்கல் இன்ஜினியர் அது மட்டுமல்ல, எலெக்ட்ரானிக்கை சிறப்புப் பாடமாகவும் எடுத்திருக்கிறே! நீ படித்த படிப்புக்கு ஏற்றமாதிரி ஏதாவது செய்து விட்டு அதைப்பற்றிக் கேட்டிருந்தால் பாராட்டலாம். உனக்கோ வேலைக்குப் போக விருப்பம் இல்லை. எத்தனை தடவை எடுத்துச் சொன்னாலும் நீ கேட்கிறதாக இல்லை! நாள் முழுவதும் சமையல் அறையிலேயே நேரத்தை வீணாக்குகிறாய். இதை ஒரு சமையல்காரியாலேகூடச் செய்ய முடியும். ஆனால், ஒரு இங்ஜினியரின் வேலையை அவளாலே செய்ய முடியுமா?’

‘எதற்காக இப்போ பேச்சை வளர்க்கிறீங்க? இட்லி நல்லா இருக்கான்னுதானே கேட்டேன். எதையோ மனசுல வெச்சுக்கிட்டு சொல்ல முடியாமல் ஏன் இப்படித் தவிக்கிறீங்க? அதை என்னன்னு சொல்லிடுங்க ப்ளீஸ்!’

அவன் எப்படிச் சொல்வது, என்ன சொல்வது என்று தெரியாமல் மௌனமாக இருந்தான்.

‘என்ன சொல்ல வர்றீங்க, சொல்லிடுங்க..!’

‘குதிரை பார்க்கிற வேலையைக் கழுதை பார்க்கக் கூடாதுன்னு சொல்ல வர்றேன்’
‘அப்போ என்னைக் கழுதை என்கிறீங்களா?’

வார்த்தைகள் தடுமாற, அவள் முகம் குப்பென்று சிவந்து கண்கள் கலங்கி விட்டன.

அன்று இரவு புரண்டு புரண்டு படுத்தான் சுரேஷ். தூக்கம் வரவில்லை. காதுக்குள் சுபா விசும்பும் சத்தம் கேட்டது.

‘ஏன் இப்படி நடந்து கொண்டேன். வேலைப் பளுவோ அல்லது பொருளாதாரப் பிரச்சனையே இல்லை. அன்போடு ஆசையாகச் சுபா சமைத்துப் போடும் போது சாப்பிடுவதில் எனக்கு விருப்பம் உண்டு. ஆனால், சமையலை ஒரு பெரிய வேலையாக எடுத்துக் கொண்டு கஷ்டப் படுகிறாளே என்று நினைக்கும் போதுதான் கோபம் வருகின்றது. எங்களுக்குக் கல்யாணமாகி ஒரு வருடம் ஓடி மறைந்து விட்டது. இதுவரை அவள் மனம் நோகக் கூடியதாக நான் நடந்ததில்லை. வார்த்தைகள் சுடும் என்று எனக்குத் தெரியும். சுடட்டும் என்று தெரிந்துதான் அப்படிச் சொன்னேன். சுபா ஒரு ரோஷக்காரி நிச்சயம் அவளுக்குச் சுட்டிருக்கும்.’

சாயந்தரம் சுரேஷ் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த போது, மாமாவும் அத்தையும் வந்திருந்தார்கள். திடீரென அவர்கள் இங்கே வரக்காரணம் என்ன? ஒருவேளை சுபாவே போன் பண்ணி அவர்களை வரவழைத்திருப்பாளோ! காரசாரமான விவாதம் கேட்க, வாசலிலேயே தயங்கி நின்றான்.

‘குடும்பமென்றால் இப்படித்தான் இருக்கும். சண்டை சச்சரவு இல்லாத குடும்பமே இல்லை. இதை எல்லாம் பெரிது படுத்திக் கொண்டிருக்க முடியுமா? நீதான் அனுசரித்துப் போகணும்’ அத்தை மகளுக்குப் புத்திமதி சொல்வது கேட்டது.

எதையும் யதார்த்தமாகப் பார்க்கும் மனப்பக்குவம் அத்தையின் வார்த்தைகளில் தெரிந்தது.

‘எனக்கு வெளியிலே எவ்வளவு செல்வாக்கு இருக்குன்னு மாப்பிள்ளைக்குத் தெரியணும். என்னோட பெண் கண்கலங்க, அதை நான் பார்த்துட்டு சும்மா இருப்பேன் என்று நினைக்கிறாரா? அமெரிக்காவில பெரிய படிப்பு படிச்சுட்டு வந்திருக்கிறோம்கிற அகம்பாவமா அவருக்கு? என் பெண்ணும்தான படிச்சிருக்கிறாள் என்பதை அவருக்குப் புரிய வெச்சுக் காட்டுறேன்’ மாமாவின் ஆவேசக் குரல் கேட்டது.

‘என்ன நீங்க பெண்ணைச் சமாதானப் படுத்துவீங்க என்று பார்த்தால் எரியற நெருப்புல எண்ணெய் ஊத்தறீங்க?’ அத்தை இடை மறித்தாள்.

‘அவரோட ஆட்டத்திற்கு எல்லாம் நீ ஆடவேண்டாம் சுபத்ரா அவருடைய உழைப்பிலேதான் நீ சாப்பிடுகிறாய் என்று சொல்லிக் காட்டுகின்றாரா? நான் இருகேம்மா உனக்கு நீ வாம்மா என்னோட.. நான் உனக்கு சாப்பாடு போடுறேன்!’

சுபா என்ன சொல்லப் போகிறாள் என்று உன்னிப்பாய்க் காதுகொடுத்துக் கேட்டேன். பெட்டியைத் தூக்கிட்டுப் போயிடுவாளோ?

‘வேண்டாமப்பா நான் எப்படியோ சமாளிச்சுக்கிறேன். நீங்க போயிட்டு வாங்கப்பா’

‘என்னமோம்மா.. எனக்கு மனது கேக்கலை.. இனி உன் இஷ்டம் பிறந்த வீட்டுக் கதவு எப்பவும் உனக்காக திறந்தே இருக்கும் உனக்கு எப்ப வரணும்னு தோணுதோ அப்ப வரலாம்.’

சுபா ரோஷக்காரிதான் ஒரு வாரமாக அலைந்து தனது படிப்புக்கேற்ற வேலை ஒன்றைத் தேடிக் கொண்ட விட்டாள்.

அவளது நல்ல நேரம்.. அந்தக் கம்பெனியில் புரொடக்ஷன் மெஷின் ஒன்று பழுதடைந்திருந்தது. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அந்த மெஷினை சரி செய்வதற்கு அந்நியச் செலவாணி அதிகம் தேவைப்பட்டது. சுபா தன்னுடைய திறமையால் மற்ற உதவியாளர்களின் துணையோடு அந்த மெஷினை சரிசெய்து வேலையில் சேர்ந்த மறுவாரமே கம்பெனியில் நல்ல பெயரைத் தட்டிக் கொண்டாள்.

அன்று அவளுக்கு முதல் மாதச் சம்பளத்தோடு விஷேச போனஸ{ம் கிடைத்தது. அதைக் கொண்டாடத் தனது அப்பா அம்மாவை அழைத்திருந்தாள்.

இரவு சாப்பிட உட்காரும்போது அப்பாதான் கேட்டார்.. ‘எப்படி அம்மா.. வேலை பிடிச்சிருக்கா?’

‘ரொம்பப் பிடிச்சிருக்கப்பா! இது ஒரு சவாலான வேலை. இதை எல்லாம் விட்டுட்டு வீட்டுக்குள்ளே இவ்வளவு நாளும் அடைஞ்சு கிடந்தேனேன்னு நினைக்க எனக்கே வெட்கமா இருக்கப்பா!’

‘உண்மைதாம்மா உன்னுடைய திறமையை வெளிக்காட்ட உனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தை நன்றாகப் பயன்படுத்துகின்றாய். இதனாலே உனக்கு மட்டுமல்ல.. நீ வேலைசெய்யும் கம்பெனிக்கு வெளிநாட்டுச் செலவாணியை மிச்சம் பிடித்ததன் மூலம் இந்த நாட்டுக்கும் கூடப் பெருமை சேர்த்திருக்கிறாய்! படிச்ச பெண்கள் எல்லாம் இப்படி ஒவ்வொரு துறையிலும் தங்கள் திறமைகளைக் காட்டினால் இந்த நாடு எவ்வளவு வேகமாக முன்னேறும் தெரியுமா?’

அப்பா பாராட்டியதில், சுபத்ராவுக்குப் பெருமையாக இருந்தது. சந்தர்ப்பம் கிடைத்தால் பெண்களால் இப்படி எவ்வளவோ சாதிக்கமுடியம் என்று மனதுக்குள் நினைத்துப் பெருமைப்பட்டாள்.

‘அது சரி.. எங்கேம்மா மாப்பிள்ளையைக் காணோம்..’

‘தெரியாது கொஞ்ச நாளா லேட்டாத்தான் வர்றார்’ வேண்டா வெறுப்பாகச் சொன்னாள் சுபா.

‘ஏன்?’

‘தெரியாது. கேட்டுக்கறதும் இல்லை. தன்னுடைய மனைவிக்கு சாப்பாடு போடுவதைச் சொல்லிக்காட்டும் புருஷன் கை நிறையச் சம்பளம் வாங்கியும் கட்டின மனைவியை வைத்துப் பாதுகாக்கத் தெரியாத கணவன் எப்போ வந்தால் என்ன, எப்போ போனால் என்ன?’ என்றாள் ஆங்காரத்தோடு.

‘அப்படிச் சொல்லாதேம்மா.. உன் கணவர் தங்கமானவர். இந்தப் பழி எல்லாம் என்னைத்தான் சேரணும்.’ என்றார் அப்பா.

‘என்னப்பா சொல்றீங்க?’ என்றாள் சுபா.

‘ஆமாம்மா! ஒரு நாள் மாப்பிள்ளை வீட்டுக்கு வந்திருந்தார். நன்றாகப் படித்த உன்னை வேலைக்கு அனுப்பாமல் சமையல்காரி மாதிரி வீட்டிலே வெச்சிருக்கிறதை எண்ணி வருத்தப்பட்டுச் சொன்னார். அடித்துத் துன்புறுத்துவது மட்டும்தான் பெண்களை அடிமைப்படுத்துவது என்று நினைக்க வேண்டாம்.. பெண்களுடைய அறிவை, ஆற்றலை, திறமையை வெளியே கொண்டு வராமல் அடக்கி வைப்பதும்கூட அவர்களை அடிமைப்படுத்துவது மாதிரித்தான்! மேலை நாடுகள் படு வேகமாக முன்னேறுவதற்கு பெண்களின் பங்களிப்பும் முக்கிய காரணம் என்பதை விளக்கினார்.’

‘உண்மையாவாப்பா?’

‘ஆமா, உன்னுடைய அறிவு, ஆற்றல், திறமை எல்லாம் வீணாகப்போவதற்கு தானும் ஒருவிதத்தில் காரணமாக இருக்கிறேனே என்று சொல்லி வருத்தப் பட்டார். அவர் உன்னை எத்தனையோ தடவை வேலைக்குப் போகச் சொல்லியும் முடியாதுன்னுட்டியாமே! அதனால உன்னை எப்படியாவது வேலைக்கு அனுப்பி உனது திறமைகளை வெளியே கொண்டுவர என்ன செய்யலாம் என்று என்னிடம் ஆலோசனை கேட்டார்’

‘நீங்க என்ன சொன்னீங்கப்பா?’

‘என் பெண்ணு ரோஷக்காரி.. எப்படியாவது அவளுக்கு ரோஷம் வர மாதிரி ஏதாவது சொல்லிப் பாருங்களேன் என்றேன். அதான் மாப்பிள்ளை அன்று அப்படி நடந்து கொண்டார்.’

சுபா எதுவும் சொல்ல முடியாமல் மௌனமானாள்.

கணவனைத் தப்பாக நினைத்து விட்டோமே என்ற குற்ற உணர்வு அவளின் மனதுக்குள் மௌ;ள உறுத்தியது.

சாயந்திரம் சுரேஷ் வீடு திரும்பியதும், உதட்டில் மெல்லிய புன்சிரிப்புடன் அவனை அன்போடு பார்த்தாள்.

அவன் உடைமாற்றி வந்ததும் எதிரே போய் நின்றாள். அவன் நிமிர்ந்து பாரத்தான்.

‘சாப்பிட வங்க..!’ என்று அழைத்துப்போய் உணவைப் பரிமாறி தானும் அருகே உட்கார்ந்து சாப்பிட்டாள்.

நீண்ட நாட்களுக்குப் பின் அவளது இந்த வரவேற்பு, அவளில் தெரிந்த மாற்றம், எல்லாம் அவனை ஆச்சரியப்பட வைத்தது.

அன்று அவள் இட்லி பரிமாறிய போது அவளிடம் எரிந்து விழுந்தது ஞாபகம் வந்தது.

மெல்லிய புன்னகையுடன், ‘இட்லி எப்படி இருக்குன்னு கேட்கமாட்டியா சுபா?’ என்றான்

‘வேண்டாம், கேட்டால் என்ன பதில் வரும் என்று எனக்குத் தெரியும்!’ பொய்யாகக் கோபம் காட்டினாள் சுபத்ரா.

‘இல்லை.. ரொம்பவே நல்லாயிருக்கு, இட்லி பண்ணின கையைக் காட்டு.. ஒரு முத்தம் கொடுக்கறேன்!’ என்றான் கண்சிமிட்டி.

‘வெவ்வெவ்வே.. இன்று சமையல் அம்மாவோடது!’ என்று சுபத்ரா பழிப்புக் காட்டினாள்.

சுரேஷ் முகத்தில் லிட்டர் லிட்டராக அசடு வழிந்தது!

(நன்றி: ஆனந்தவிகடன்)

Print Friendly, PDF & Email

7 thoughts on “ரோசக்காரி

 1. ‘உண்டி சுருக்குதல் பெண்டிற்கு அழகு’ (ஔவை) என்ற பழமொழிக்கு ஏற்ப, குறைவான நேரத்தில் சமையல் வேலைகளை முடித்துக் கொண்டு, ‘அறிவை விரிவு செய்வதிலும் அகண்டமாக்குவதிலும்'(பாவேந்தர் பாரதிதாசன்) பெண்கள் கவனத்தைச் செலுத்த வேண்டும் என்ற உணர்வுள்ள கலாபாத்திரமான சுரேஷ், தன் மனைவி, படித்த படிப்புக்கு ஏற்ற வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில், உடம்பு குணமாக கசப்பு மருந்து கொடுத்ததைப் போலக் நடந்து கொண்ட சுரேஷ் மேல் மரியாதை வருகிறது.
  மேல் சாவனிசம் பற்றிய கதைகளை எழுதும் எழுத்தாளர்களிலிருந்து விடுபட்டு, இப்படிப்பட்ட ஒரு வித்தியாசமான ‘ஆண்மை தவறேல்’ என்ற பாரதியின் புதிய ஆத்திச்சூடியின் பிரதிநிதியாய் உருவாக்கிய ‘சுரேஷ்’ கதா பாத்திரம் இந்த ஆசிரியரின் பெயரை என்றும் சொல்லிக் கொண்டே இருக்கும்.
  எழுத்தாளர் குரு அரவிந்தனின் சிகரத்தில் இந்தக் கதை மேலும் ஒரு நவரெத்தின இறக்கையாய் பளிச்சிடுகிறது.
  வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
  ஜூனியர் தேஜ்

 2. ஒரு பெண்ணின் ரோசமும், எளிமையான குணத்தையும் மிக அழகாக கூறியுள்ளீர்கள்.
  படிக்கும் போது காட்சிப் புலப்படுகிறது.
  அருமை அருமை …..

 3. ஒரு நல்ல கதை படித்த மனநிறைவு. நன்றி. பாராட்டுகள்.

 4. கருத்துப் பதிவிற்கு நன்றி. புரிந்துணர்வும், விட்டுக் கொடுக்கும் மனசும் இருந்தாலே போதும், வாழ்க்கை இனிக்கும்.

 5. அருமையான கதை…எனக்கு தெரிந்தவர்கள் அதிகமாக படித்தும் வீட்டு வேலைகளை மட்டுமே செய்துவிட்டு வீட்டிலேயே உள்ளனர்.வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பல ஆண்கள் வீட்டு வேலைகளை பகிர்வதில்லை.வேலை செய்யும் இடங்களில் ஆண்கள் பெண்களை சக மனுஷியாக நினைப்பதும் இல்லை. அதனாலேயே வேலைக்கு செல்வதில்லை.இக்கதை அவர்களுக்குள் ஒரு மாற்றத்தை உருவாக்கட்டும்..வாழ்த்துகள்.

 6. அனேகமாக ஒரு ஆணின் வளர்ச்சியில் பெண்ணும், பெண்ணின் வளர்ச்சியில் ஆணும் பக்கப்பலமாக இருப்பதைப் புரிந்து கொள்ள முடியும். பலர் அதை வெளிப்படையாகக் காட்டிக்கொள்வதில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *