அம்மா கேட்டாள். “ஏன்டா முரளி. உன் கல்யாணம்தான் திருப்பதியில் சிம்பிளா நடந்தது… ரிசப்ஷன் கிராண்டா உட்லன்ஸ்ல வெச்சிருக்கோம்… ஆனா ஏன் நம்ம வீட்டு வாட்ச்மேன், சர்வெண்ட்க்கெல்லாம் பத்திரிகை வேண்டாம்னுட்ட…?’
“அம்மா… அது பெரிய ஹோட்டல்… இவங்கல்லாம் சரிப்படமாட்டாங்க. எனக்குத் தெரியும். பொறுமையா இருங்க’ பதில் சொன்னான் முரளி.
அடுத்தவாரம்… முரளி… தன் வீட்டிலேயே ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்தான். அதற்கு தானே நேரில் சென்று வீட்டு வேலைக்காரி…வாட்ச்மேன், லாண்டரி பையன், தெருவில் குப்பை வண்டிக்காரர்கள், கூர்க்கா, வழக்கமாக வீட்டிற்கு வரும் எலக்ட்ரீஷியன், பிளம்பர்…என அனைவரையும் அழைத்தான்.
ஃபங்ஷன் அன்று அனைவரும் ஆஜரானார்கள். அவர்களை அமரவைத்து அவனும், புது மனைவியுமே பரிமாறினார்கள்.
அம்மாவுக்கு புரிந்தது.
“இவர்கள்… இப்போது சகஜமாக பேசி, சிரித்து மகிழ்வதுபோல்…அந்த பெரிய ஸ்டார் ஹோட்டலில் நடந்திருக்க முடியாது. போக்குவரத்தும் கஷ்டம். அன்றாடம் வீட்டிற்குள் வந்து செல்லும் இவர்களை இப்படி சந்தோஷப்படுத்துவதுதான் சரி… மேலும் இப்போதுபோன்று சகஜமாக மகன் ஹோட்டலில் பேசியிருக்கவும் முடியாது…!’
மகனின் சாதூர்யம் சந்தோஷத்தைக் கொடுத்தது.
– கீதா சீனிவாசன் (ஏப்ரல் 2011)