ராகி களி!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 4, 2023
பார்வையிட்டோர்: 1,890 
 
 

“அம்மா இன்னைக்கு காத்தாளைக்கு புட்டு சுட்டு, மத்தியானச்சோத்துக்கு அரிசி சோறாக்குமா. அன்னாடும் ராயிக்களி, கம்மங்களி, சோளக்களி, தெனஞ்சோறு, சாமச்சோறு மட்டுந்தானா? அரிசிச்சோறே ஆக்க மாட்டீங்கறே? புட்டும் சுட மாட்டீங்கறே? என்ற கூடப்படிக்கற ரவி வாரத்துக்கு ஒரு தடவ அரிசி சோறு, புட்டு, தோசைன்னு சாப்புடுவேன்னு சொல்லுறான். அவனோட அம்மா நல்ல அம்மா. நீ கெட்ட அம்மா. உங்கூட பேசவே மாட்டேன். ஒன்னி எப்பும்மே உங்கூட டூ தாம்போ….” என கைவிரல்களை மடக்கி தன் தாயிடம் காட்டிவிட்டு ஓடிச்சென்று விரித்துக்கிடந்த பாயில் படுத்துக்கொண்டான் மணி.

“அரிசி வாங்கற அளவுக்கு காசு உன்ற அம்மா குட்ட இல்ல சாமி. நீ படிச்சு வேலைக்குப்போயி சம்பாறிச்சீன்னா அன்னாடுமே புட்டும், அரிசி சோறும் சாப்புட்டுப்போடுலாம்” என கூறிய தாயின் பேச்சை மணி ரசிக்கவில்லை.

புட்டு என்று கிராமத்தினர் சொல்லும் இட்லி மீது ம், அதன் சுவையைக்கூட்ட வைக்கப்படும் முருங்கைக்காய் சாம்பாரின் மீதும் மணிக்கு அளவற்ற விருப்பம். நோம்பி என்று சொல்லப்படும் பண்டிகை நாட்களில் மட்டுமே தன் வீட்டில் புட்டு சுடுவதால் வந்திருப்பது எந்த பண்டிகை என்பதை விட ‘புட்டு நோம்பி’ என்றே அனைத்து பண்டிகைகளையும் கூறுவான்.

இன்று தீபாவளி பண்டிகை என்பதை முதன் முதலாக பள்ளி சென்றதால் ஆசிரியரும், உடன் படிப்போரும் சொன்னதால் தெரிந்து கொண்டான். ஆனால் இன்று அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதால் நேற்றைய கம்மங்களியின் ஊறவைத்த புழுதண்ணியை ஊற்றிக்குடிக்கச்சொன்ன போது அழுது அடம்பிடித்தான் ஏழு வயது சிறுவனான மணி.

ஐந்து வயதில் ஒன்றாம் வகுப்பில் சேரச்சொல்லி உள்ளூர் ஆசிரியர் தோட்டத்துச்சாளைக்கே வந்து கேட்டும், பிடிவாதமாக பள்ளிக்குச்செல்ல மறுத்ததின் விளைவு ஏழு வயதில் தான் பள்ளிக்குச்செல்ல ஒத்துக்கொண்டான். இப்போது தான் வெளி உலகையே பார்க்க ஆரம்பித்துள்ளான்.

விவசாயக்குடும்பங்களில் வாழ்வோரில் பெரும்பாலானோர் காடு, தோட்டங்களில் வாழும் தங்களின் உறவுகளின் இல்லங்களில் நடக்கும் விசேச நிகழ்வுகளுக்கு தனித்திருக்கும் தோட்டத்து வீடுகளுக்கு மட்டுமே செல்வதால் ஊருக்குள் வசிப்போரின் வெளியுலகத்தொடர்போ, நாகரீக வாழ்வைப்பற்றிய அறிவோ சிறிதும் கற்றுக்கொள்ள வாய்ப்பில்லாமல் போய்விடுவதால் ஐம்பது வருடங்கள் வரை பின்னோக்கிய கலாச்சாரத்தைக்கடைப்பிடிப்பவர்களாகவே உள்ளனர்.

கோவணம் கட்டிக்கொண்டு காட்டிலும், வயல் சேற்றிலும் உழைப்பதே வாழ்வு எனும் நிலைப்பாட்டிலேயே காலத்தை ஓட்டிச்செல்லும் அப்பாவிகளாகவே வாழ்ந்து மடிகின்றனர். 

பெரியவர்களின் நிலை இவ்வாறிருக்க சிறு வயது குழந்தைகள் பள்ளிக்குச்செல்லும் வரை தோட்டம், வீடு தவிர வேறு ஊர், உலகம் இருப்பதையே அறியாதவர்களாக, வெளியாட்களைக்கண்டால் பயம் கொள்வது, கூச்சப்படுவது என அறிவின் வளர்ச்சி குறைந்தே இருக்கின்றனர். இவ்வாறு வளர்க்கப்பட்ட மணி பள்ளிக்குச்செல்லவே பயந்து, பிடிவாதமாக இருந்த போது பக்கத்து தோட்டத்தில் வாழும் உறவுக்கார குழந்தை உடன் வருவது தெரிந்தே பள்ளி செல்ல ஒத்துக்கொண்டான்.

கோபம் வந்தால் டூ என்பதையும், மகிழ்ச்சி என்றால் பழம் என கூறுவதையும் சக குழந்தைகளின் செயலைப்பார்த்தே கற்றுக்கொண்டான்.

இன்று தான் கேட்ட உணவு கிடைக்காததால் பிடிவாதமாக நாள் முழுவதும் எதுவுமே சாப்பிடாமல் பட்டினி கிடந்தான்.

இப்படியிருந்த மணி நன்றாகப்படித்ததால் அரசு வேலை கிடைக்க, திருமணமானதும் நகரத்தில் வீடு வாங்கி குடியேறினான். குழந்தைகளோடு சகல வசதிகளும் பெற்று வாழ்ந்த நிலையில் பெற்றோரையும் அழைத்துக்கொண்டு வந்து தன்னுடன் வைத்துக்கொண்டான்.

தட்டில் பூப்போன்ற இட்லியுடன் இரண்டு வகை சட்னி வைத்து டைனிங் டேபிளில் வைத்த மனைவி சாந்தியை கோபமாகப்பார்த்த ஐம்பது வயது கொண்ட மணி, ” டெய்லியும் இட்லியும், சட்னியும் மட்டும் மனுசஞ்சாப்பிடுவானா? ஒரு நாளாவது ராயி களி செஞ்சு குடுக்கமுடியாதா? காலைல குளுகுளுன்னு ராயி கூழு மோரூத்தி குடிச்சா வராத நோவு வந்து இத்தன மாத்தரைகள நானும், நீயும் முழுங்க வேண்டியதே இருக்காது. ஆஸ்பத்திரி செலவுக்கு அரைவாசி சம்பளமும் போகாது. டவுன்ல பொறந்த உனக்கெல்லாம் நம்ம முன்னோர்கள் கிராமத்துல சாப்பிட்ட சத்துள்ள சாப்பாட்டப்பத்தி என்னத்த தெரியப்போகுது? என்ன பண்ணுவியோ, ஏது பண்ணுவியோ எனக்குத்தெரியாது. இன்னைக்கு வீட்ல ராயி களி செய்யோணும். செய்யலீன்னா பட்னியாவே கெடந்திடப்போறேன்” என ஒரு குழந்தையைப்போல பிடிவாதமாக மகன் மணி சொன்னதை கட்டிலில் படுத்திருந்த அவனது தாய் கேட்டு ஆச்சர்யப்பட்டதோடு, சிறுவயதில் புட்டு எனும் இட்லியும், அரிசி சோறும் வேண்டுமென பிடிவாதமாகக்கேட்டு நாள் முழுதும் எதுவும் சாப்பிடாமல் பட்டினி கிடந்ததை நினைத்துப்பார்த்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *