நாற்காலி ஆசை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 6, 2023
பார்வையிட்டோர்: 899 
 

முன்னுரையாக ஒரு குறிப்புரை

இரட்டைப் பிறவிகள் பற்றிய சின்னஞ்சிறு கதைகளை ட்வின்ஸ் கதைகள் 10 என்னும் தலைப்பில் எழுதிய பின்னர், என்னைப் போல் ஒருவன் கதைகள் 10 என்னும் இந்த சின்னஞ்சிறு நூலை சமர்ப்பிக்கிறேன்.

வெவ்வேறு பெற்றோர்களுக்குப் பிறந்தவர்களில் ஒரே தோற்றம் உடைய இருவர் பற்றிய இரு வேடங்கள் சார்ந்த புனைகதைகள் தமிழ் சினிமாவில் படைக்கப்பட்டன. எடுத்துக்காட்டாக, நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் என்னைப் போல் ஒருவன், மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவர்களின் மாட்டுக்கார வேலன், நினைத்ததை முடிப்பவன்,சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த போக்கிரி ராஜா, ஜானி, ராஜாதி ராஜா ஆகிய படங்களைக் கூறலாம். மற்ற முன்னணி நட்சத்திரங்களும் இது போன்ற கதைப் பின்னணி உள்ள படங்களில் நடித்துள்ளனர். இவ்வளவு ஏன்? உலகப்புகழ் பெற்ற, நாம் அனைவரும் படித்த, ஆங்கில எழுத்தாளர் சார்லஸ் டிக்கன்ஸ் அவர்களின் டேல் ஆஃப் டூ சிட்டிஸ் நாவலில் வரும் சிட்னி கார்ட்ட்டன் தியாகம், ஒரே உருவ ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்டது தானே?

அந்த உத்தியின் அடிப்படையில் இந்த சின்னஞ்சிறு புனைகதைகளைப் படைத்துள்ளேன்.

அன்பன்
எஸ்.மதுரகவி

நாற்காலி ஆசை

நண்பகல் பன்னிரண்டு மணி உச்சி வெயில் நேரத்தில், ஆர் ஆர் குழுமத்தின் மேலாண்மை இயக்குநரின் அறைக்குள் கதவைத் தட்டி விட்டு உள்ளே நுழைந்தனர் ஒடிசலான தோற்றம் கொண்ட அழகான இளம்பெண்கள் இருவர்.

அங்கே சுழல் நாற்காலியில் அமர்ந்து இருந்த இளைஞன் லேப்டாப்பில் மூழ்கி இருந்தான். ஒரு நொடி அவர்களைப் பார்த்து விட்டு, எதிரே இருந்த பார்வையாளர்கள் நாற்காலிகளில் அவர்களை உட்காரும்படி சைகை காட்டி விட்டு மீண்டும் லேப்டாப்பில் மூழ்கினான். சில நிமிடங்கள் கழித்து லேப்டாப்பில் இருந்து விடுபட்டு சாரி என்றபடியே அவர்கள் இருவரையும் பார்வையால் அளந்தான். குளுகுளு சாதனத்தின் அளவைக் குறைத்து விட்டு, அந்த இளம்பெண்கள் கொடுத்திருந்த விசிட்டிங் கார்டை பார்த்தான்.

‘ஆர் என் கன்சல்டன்ட்ஸ் ன்னு போட்டு இருக்கீங்க….’

ஓர் இளைஞி பேசினாள் ‘சார் என் பேரு ரஞ்சனா இவங்க நிரஞ்சனா அதான்….’

‘அப்படியா…. பிஏ நீங்க டிடெக்ட்டிவ்ன்னு சொன்னாங்க.. கன்சல்டன்ட்ஸ் ன்னு போட்டு இருக்கீங்க… பீல்டுல இருக்கிற மத்த டிடெக்ட்டிவ்ஸ்க்கு தெரியாம இதுல இறங்கி இருக்கீங்க…. சரியா’ என்றான் அவன்.

‘சரியா கண்டுபிடிச்சுட்டிங்க சார் ‘ என்றாள் ரஞ்சனா.

‘உங்களுக்கு நாங்க என்ன டிடெக்ட்டிவ் வேலை தர்றது…. சுஜாதாவின் கணேஷ் வசந்த், பட்டுக்கோட்டை பிராபகரின் பரத் சுசீலா இது மாதிரி துப்பறியும் நாவல் படிச்சுட்டா துப்பறிவாளன் படம் பார்த்துட்டா துப்பறியும் ஏஜன்சி தொடங்க முடியும் ன்னு நெனச்சு இறங்கிட்டிங்க இல்லையா’ என்றான். அவர்கள் மௌனம் காத்தனர். அவன்

‘சரி சொல்லுங்க மத்த வேலையை எல்லாம் விட்டு விட்டு இதுல இறங்கி இதுவரை உருப்படியா என்ன துப்பறிஞ்சுட்டிங்க சொல்லுங்க’ என்றான்.

இது வரை பேசாமல் இருந்த நிரஞ்சனா பேசினாள்

‘நாங்க துப்பு துலக்கினத பத்தி சொன்னா நீங்க ஆடிப் போயிடுவீங்க’

‘அப்படியா என்னை அதிர்ச்சி அடைய செய்யறீங்களான்னு பார்க்கலாம் சொல்லுங்க’

‘நீங்க இந்த கம்பெனி எம்டி தினேஷ் பாபு இல்ல நீங்க காந்தி நகர் ரமேஷ் குமார் நேத்து ஒங்க ஏரியா கமர்ஷியல் காம்ப்ளக்ஸ் ல பார்க்கிங் ல இருந்த கார்ல ஏறப் போன தினேஷ் சார் மயங்கி விழுந்தாரு அங்க இருந்த நீங்க அவருக்கு முதலுதவி செஞ்சீங்க ஆனா அவர் அச்சு அசலா ஒங்கள மாதிரியா இருந்ததால ஒங்க ப்ரெண்டு இன்சார்ஜ் ஆக இருக்கிற கோடவுன் ல அவரை அடைச்சு வெச்சுட்டு தினேஷ் சார் வீட்டுக்குப் போனா குட்டு வெளிப்பட்டு விடுமோன்னு முதல்ல ஆபீசுக்கு போவோம்ன்னு இங்க வந்துட்டீங்க’ நிறுத்தினாள் நிரஞ்சனா.

‘என்ன உளறீங்க’என்று அந்த இளைஞன் எழுந்து நின்ற போது மடார் என்று கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள் மிடுக்கான இளம்பெண் ஒருத்தி. அவள் பின்னால் காவல்துறை அதிகாரிகள் இருவர் நின்றனர். அந்த இளம்பெண் தினேஷ் பாபுவின் மனைவி வசந்தி. இளைஞன் ரமேஷ் குமார் அறையின் கதவை நோக்கி ஓட்டம் பிடிக்க முயன்ற போது காவல் அதிகாரிகள் அவனைப் பிடித்துக் கொண்டு வெளியே சென்றனர். காவல்துறை அதிகாரிகள் பின்னால் சென்று அவர்களுக்கு நன்றி கூறி மீண்டும் அறைக்குள் வந்தாள் வசந்தி. எழுந்து நின்ற இளம்பெண்களை அமரச் சொன்னாள் வசந்தி.

‘தாங்க்ஸ். நீங்க கொடுத்த தகவலால அவரை மீட்க முடிந்தது. இல்லேன்னா நெனச்சி பார்க்க முடியலை’ என்றாள்.

ஒல்லியான தேகம் கொண்ட இளைஞன் உள்ளே வந்தான்.

எம்டி நாற்காலியில் அமர்ந்து கொண்ட வசந்தியிடம் ‘மேம் சார் எப்படி இருக்காரு’ கேட்டான்.

‘நல்லா இருக்காரு ராம் நாளைக்கு ஆபீஸ் வந்துடுவாரு. இந்த துருதுரு பொண்ணுங்க ரெண்டு பேரும் பிரமாதமா கில்லி மாதிரி வேலை பண்ணி இருக்காங்க நான் சொன்ன அமவுண்ட் இவங்களுக்கு ஜிபே நம்பர் பண்ணிடுங்க ஜிபே நம்பர் இவங்க கிட்ட வாங்கிக்கங்க ‘

சரி மேம் என்று சொல்லி விட்டு அந்த இளைஞன் வெளியேறினான்.

ரஞ்சனா கேட்டாள் –

‘என்ன மேம் உங்களில் பாதிய உங்க பெட்டர்ஹாஃப் இல்ல நாங்க காப்பாத்தி இருக்கோம்… ‘

வசந்தி பேசினாள்

‘அதுக்கு இந்த பிசினஸ் சாம்ராஜ்யத்துல பாதி ராஜ்யம் வேணும்னு கேட்டுடுவிங்க போல் இருக்கே’

நிரஞ்சனா ‘கேட்டா கொடுத்துடுவா போறீங்க’ என்றாள்.

ரஞ்சனா ‘சாரி மேம் இவ பழகின கொஞ்ச நேரத்துல உரிமை எடுத்து பேசிடுவா … நாங்க வரோம்’ என்றாள். இரண்டு இளம்பெண்களும் வசந்தியிடம் விடைபெற்றுச் சென்றனர். வசந்தியின் முகத்தில் புன்னகை.

– என்னைப் போல் ஒருவன் – உருவ ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்ட 10 கதைகள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *