இன்னிக்கு நேத்து பழக்கமா…இருபது வருஷ நட்பு, ரெண்டு பேரும் சேர்ந்து எதிரெதிர்ல வீடு கட்டி அண்ணன், தம்பி போல இருந்தோம்.
நம்ம பொண்ணு கல்யாணத்தை அவன் வீட்டு கல்யாணம் மாதிரி முன்னே நின்னு நடத்துவான்னு ஆசைப்பட்டேன்.
ஆனா கல்யாணத்துக்கு ரெண்டு நாள் முன்னாடி குடும்பத்தோட எங்கேயோ போயிட்டான். எல்லா நம்பரும் ஸ்விட்ச் ஆஃப். கொஞ்ச நாளாவே அவன் மூஞ்சியும் சரியில்லை!
அவன் பொண்ணுங்களுக்கு கல்யாணம் கூடி வராதப்போ நம்ம பொண்ணுக்கு அமைஞ்சுடுச்சேன்னு பொறாமை போல” – கடுமையாகப் புலம்பிக் கொண்டிருந்தார் கிருஷ்ணன்.
கல்யாணமெல்லாம் முடிந்து ஒரு வாரம் கழித்து எதிர் வீட்டில் விளக்கு எரிந்தது. விறு விறுவென்று போனார் கிருஷ்ணன். அங்கு மொட்டையடித்து உட்கார்ந்திருந்தார் கோபால்,
கல்யாண சமயத்துல அப்படியென்னப்பா தலயாத்திரை வேண்டியிருக்கு? என இரைந்தார் கிருஷ்ணன்.
தல யாத்திரை இல்லப்பா, இறுதி யாத்திரை!
அப்பாவுக்கு திடீர்னு ஹார்ட் அட்டாக். கல்யாண வேலையில பிஸியா இருந்த உன்கிட்ட சொல்லலை. ரெண்டு நாள் கூட தாங்காதுன்னு சொல்லிட்டாங்க கல்யாணம் நடக்கும்போது எதிர் வீட்ல இப்படின்னா, யாராவது அபசகுனம்னு சொல்லிடக் கூடாதுன்னுதான் ராத்தியோட ராத்திரியா அப்பாவையும் கூட்டிக்கிட்டு கிராமத்துக் போயிட்டோம்!’’ என்ற நண்பன் கோபாலை ஆரத் தழுவி, கதறத் தொடங்கினார் கிருஷ்ணன்
– தேன்மொழிஅண்ணதுரை (ஏப்ரல் 5, 2014)