மௌனமாய் ஒரு தீர்ப்பு

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: சுபமங்களா
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 24, 2021
பார்வையிட்டோர்: 12,037 
 
 

(1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

உறுமிக்கொண்டும் இருமிக் கொண்டும் ஓடிய அந்த தகர டப்பா வேனை அந்த வெள்ளை அம்பாஸிடர் கார் முன்னால் ஓடிப் போய் நின்று வழிமறித்தது. நிற்க முடியாமல்கூட அந்த வேன் மோதி விடலாமே என்ற பயம்கூட சிறிதும் இல்லாமல் அநாவசியமாய் நிறுத்தப்பட்ட அந்த காரிலிருந்து ஆறடி உயர மனிதர் முதலில் வெளிப்பட்டார். ‘எவன்டா இவன்’ என்று கேட்கப்போன வாலிப டிரைவர். அந்த மனிதரைப் பார்த் ததும் வயோதிகன் போல் முணகி னான். இருக்கையிலிருந்து எழுந்த படியே “வணக்கம் ஸாரே” என்று மாமூல் வணக்கம் போட்டான்.

ஊதா பேண்டில் பெல்ட் விளிம்பை தடவிக் கொடுத்தபடியே அந்த இன்ஸ் பெக்டர் மஃப்டி அவனைப் பார்க்காமல் முன்னிருக்கையைப் பார்த்தார். அந்த அம்பாஸிடர் முன்னிருக்கையிலிருந்து இறங்கிய ராசதுரை இன்லபெக்டரின் கைகளை தனது உள்ளங்கையில் ஏந்தியபடி அவரையே பார்த்தான். பிறகு, அவருக்கு முதுகைக் காட்டக்கூடாது என்பது போல், பின்பக்கமாய் நகர்ந்து நகர்ந்து வேளின் வாசற்படி தட்டிய பிறகே மறுபுறமாய்த் திரும்பி, படியேறினான்.

அவர், அதுதான் அந்த இன்ஸ் பெக்டர் ராசதுரை – வேனுக்குள் தன்னை மறைத்ததும், அம்பாஸிடர் காருக்குள் ஏற. டிரைவர் அதன் சுதவைப் பலமாக மூட. அது துப் பாக்கி பிரயோக சத்தத்துடன் தகரப் போனது.

Mounamai oru Theerpu-picவேனின் மேல் படியில் நின்ற ராசதுரை, உள்ளேயிருந்தவர்களை உருட்டி மிரட்டுவது போல் பார்த்தான். “அடேடே அண்ணாச்சியா? இங்க வந்து உட்காருங்க” என்று சொல்லும் ஆறுமுகம் முகத்தை முதுகை நோக்கித் திருப்புவதைப் பார்த்தான். சைட் சீட்டில் ஒரு சினிமாப் பாட்டை முணுமுணுத்த சோணாசலம், அந்தப் பாட்டை ராசதுரையின் காதுக்குள் விடப் போவதில்லை என்பது போல், கன்னங்களைப் பலூன்களாக்கி கண்களை இடுக்குவதைக் கண்டான். “ஐயாவா” என்று குரல் கொடுக்கும் ராமக்கா “நொறுங்குவான், நாசமாய் போறவன், அரிசில தவிட்டைப் போட்டுட்டான்” என்று அறவை மில்காரனை திட்டுவது போல் பாவலா செய்தாள். இந்த ராமக்கா மட்டுமல்ல, அந்த பனையேறி வீரபாகு, நடுப்பக்கம் இருக்கும் ராமபத்ரன், தூக்கித் தூக்கிப் போடும் பின்னிருக்கையில் உட்கார்ந்துள்ள அத்தனை பேரும் அவனை அதிர்ந்து பார்த்து விட்டு பிறகு அங்கு அவன் இல்லாதது போல் வேறு எங்கேயோ பார்த்தார்கள். இவ்வளவுக்கும் இந்தப் பயல்கள் வேட்டிகளை மடித்துப் போட்டபடி உட்கார்ந்திருந்தாலும் அது அவர்கள் வேட்டிகளை இழுத்துப் போட்டபடி காட்டினாலும், அவசர அவசரமாக எழுத்து ‘அண்ணாச்சி உங்களுக்காவ எப்படி மரியாதை காட்டுறோம் பாருங்க’ என்று சொல்லாமல் சொல்வதுபோல் இடுப்புவரைக்கும் வேட்டி இழுத்து பாதம் வரைக்கும் படர விடுபவர்கள், இப்போதோ வேட்டிகளை இன்னும் மேலே தூக்குவோம் என்பது போல, கைகளை முழங்கால்கள் பக்கம் கொண்டு போனார்கள்.

ராசதுரை இதை எதிர்பார்க்கவில்லை. உடனே, கீழ்ப்படிக்கு வந்து “சார். சார்” என்று கை தட்டினான். வேனின் வெளிப்பகுதியை அடித்தும், காட்டினான். உடனே அந்த அம்பாஸிடர் கார் ரிவர்ஸில் வந்தது. ராசதுரை வேன் படியில் ஒரு காலும். தரையில் மறுகாலுமாய் பரப்பிக் கொண்டு காருக்குள் இருந்து எட்டிப் பார்த்த இன்ஸ்பெக்டரிடம் பேசினான்.

“எவ்வளவு நாளைக்கு வேணுமானாலும் காரை வெச்சிக்கிடுங்க சார். அப்புறம் நாளைக்கு சாயங்காலமா..”

“ஓகே… ஓகே.. ஞாபகம் இருக்குப்பா. அஞ்சு மணிக்கு இந்த காரை அனுப்பறேன்…ஸ்டேஷனுக்கு வந்துடு..”

“யூனியன் ஆபீஸூக்கு வந்துடறேன் சார். நீங்களும் அங்க வந்திடுங்க அப்புறமா அங்கே போகலாம்”.

“ஆல்ரைட்…ஆல்ரைட். இந்தாப்பா, வேன்காரா வண்டியை எடேன்யா… டிராபிக்குக்கு ஏன் இடைஞ்சல் செய்யுறே?”

அம்பாஸிடர் கார் வந்த உடனேயே இஞ்சினை ஆஃப் செய்த டிரைவர் இன்ஸ்பெக்டர் வார்த்தைக்கு மதிப்பளிப்பது போல், கியர்களை அங்கு மிங்குமாகப் பிடுங்கினான். அந்தக் காரை, கையெடுத்துக் கும்பிட்டு ராசதுரை வழியனுப்பினான். பிறகு, உள்ளே இருந்த வேன்வாசிகளை ‘இப்ப என்னடா சொல்லுறிய’ என்பது மாதிரி பார்த்தான். இன்ஸ்பெக்டர் சொன்ன ஸ்டேஷனுக்கு என்ற வார்த்தைக்கு யூனியனுக்கு என்று அவன் திருத்தம் கொடுத்ததே தன்னை அவர் தோழனாகக் கூப்பிடுகிறாரே தவிர, கிரிமினலாக அல்ல என்பதை அவருக்கு சொல்லிக் காட்டவும், இவர்களுக்குச் சொல்லாமல் காட்டவும்தான்.

ராசதுரை பார்த்த பார்வையில், பாதிப் பேர் பட்டுப் போனார்கள். வேன் டிரைவர், வண்டியை லேசாக நகர்த்திய போது. ராசதுரை இன்னும் இருக்கையில் உட்காராமல், வேனின் மேல் கம்பியைப் பிடித்தபடியே தனது ஊர் சகாக்களிடம் பொதுப் படையாகக் கேட்டான்.

“ஊரெல்லாம் எப்படி இருக்கு? மழை கிழை பெய்துதா? வெள்ளாமை எப்படி குளம் பெருகிச்சா…சொல்லுங்களேம்ப்பா…”

ராசதுரை தான் சகஜமாக இருப்பது போல் காட்டிக் கொள்ளப் போ னான். ஒருவேளை அவனால் அப்படி முடிந்ததோ இல்லையோ? அவனது ஊர்க்காரர்கள் அவன் பேச்சைக் கேட்ட மாத்திரத்திலேயே சகஜமற்றவர்களாகி விட்டார்கள். அவன் ஒட்டு மொத்தமாகக் கேட்டதால், எவனாவது பேசட்டும் என்பது போல் மற்றவர்கள் அனுமானித்தார்கள். எல்லோருமே இப்படி எவன்களாகவும் மாறாமல் போனதால், ராசதுரை கோவப்படப் போனான். ஒரு மாதத்திற்குச் சென்னையிலிருந்து விட்டு ஊருக்குத் திரும்பும் அவனுக்கு சங்கதிகளை அங்கேயே அவர்கள் படம் போட்டுச் சொல்ல வேண்டும் என்பது போல் ஒரு ஆவல். ஆனால், அவர்களோ அவனுக்கு முகங்களைக் காட்டாமல், முதுகுகளையே காட்டினார்கள். முன்பெல்லாம் அவனிடம் போட்டி போட்டுப் பேசுபவர்கள் இப்போது போட்டிப் போடப் போவது போல் அவ்வப்போது தலைகளை மேலே தூக்கி அவனைக் கீழ் நோக்காய்ப் பார்த்தார்கள். இதற்குள் வண்டியை நகர்த்திக் கொண்டு போன டிரைவர், அதை நிறுத்திவிட்டு இருக்கையிலிருந்து சைடு வழியாகக் ஒழே குதித்தான். “வண்டி ரிப்பேரு. எல்லோரும் இறங்குங்க” என்றான்.

ராசதுரைக்கு யாராவது ஒருத்தர் தன்னிடம் பேச வேண்டும் போலிருந்தது. டிரைவரை நேராய்ப் பார்த்துக் கேட்டார்.

“நல்லாத்தானேப்பா ஓடிச்சு..எல்லோரையும் ஏத்திட்டு இப்படி வண்டிய எடக்கு மடக்கா நிறுத்திட்டா என்ன அர்த்தம்?”

“நீங்க சொல்றது சரிதான் அண்ணாச்சி..ஆனா, இது மனுஷன் இல்ல. மெஷின்தானே? அரிவாளை வெச்சு வெட்ட முடியுமா? அதுக்குத்தான் அது பயப்படுமா?”

ராசதுரை சுண்டிப் போனான். அவன் எதைக் கோடி காட்டுகிறான் என்பது புரிந்ததும், வேனுக்குள் இறங்குவதா வேண்டாமா என்பது போல் யோசித்துக் கொண்டிருந்த பயணிகளைப் பார்த்தான். எடுத்ததுக் கெல்லாம் வம்பு பேசும் ஒருவர் இப்போதும் பேசினார்.

“வண்டி ரிப்பேர்னுதானே சொல்றே? அப்படின்னா ஓட்டேன்.”

“ஏலே… இலக்கணமா பேசறே?”

நம்ம மாரு கெட்ட கேட்டுக்கு வேனு தான் கொறைச்சலாக்கும்? ஓடுற வண்டியும் நம்ம ஊரு தெசையப் பார்த்தா தானாவே நின்னுடும் தெரியுதா?”

எல்லோரும் புரிந்தது போல் வேனை விட்டு இறங்கினார்கள். அவர்கள் இறங்கிய பிறகும், அங்கேயே நின்ற ராசதுரை, நெற்றிப் பொட்டை ஆள்காட்டி விரலால் அடித்தபடியே இறங்கினான். சாலைச் சந்திப்புக்கு மேற்குப் பக்கமாய் இருந்த ஒரு இடுக்கு சைக்கிள் கடைக்குப் போனான். அங்கே இருந்த ஒரே ஒரு டைனமோ சைக்கிளை எடுக்கப் போனான். எடுத்துக் கொண்டே சைக்கிள்காரனிடம் பேசினான்.

“சாயங்காலம் என் தம்பி வண்டியக் கொண்டு வந்து விடுவான்…. வரட்டுமா?”

‘சைக்கிளை எடுக்காதிய… கான்ட்ராக்டர் சீமைச்சாமிக்காவ வெச்சிருக்கேன்.”

“என்னப்பா. உன் குரலே இன்னிக்கு ஒரு மாதிரி இருக்கு…நாம இப்பதான் பழகுறது மாதிரி பேசுறே…”

“நெருங்கிப் பழகாம இருக்கதே நல்லது. ஏல ஒப்பன ஒதைக்கிற பயலே…இது என்ன ஒப்பன் வீட்டு சைக்கிளா? அவரு கொடுத்த வண்டியை ஸ்டாண்டு போட்டு நிறுத்தாம் எங்கல எடுத்துட்டுப் போற அறிவு கெட்ட மடப்பயலே…”

சைக்கிள் கடைக்காரர் காறித் துப்பியபடியே சைக்கிள் பையனை அடிப்பதற்காக கையை ஓங்கினார்.

அந்தக் கை அந்த வேகத்தில் ராசதுரையின் கண்களின் முன்னால் ஆடியது பற்றியும், அவர் கவலைப்படவில்லை.

ராசதுரை இன்னொரு சைக்கிள் கடைக்குப் போகப் போனான். ஆனால், அங்கேயும் இப்படிப்பட்ட வரவேற்பு வந்துவிடக்கூடாது என்று பயந்தவன் போல் மேற்கு நோக்கி நடந்தவன், தெற்கு நோக்கி நடந்தான். குட்டாம்பட்டி இந்த கோணச் சத் திரத்திலிருந்து இரண்டே இரண்டு கிலோ மீட்டர்தான். அரைமணி நேரத்தில் போய்விடலாம்.

ராசதுரை வேகவேகமாக நடந் தான். அவரின் இப்போதைய நிலவரத்தை இன்ஸ்பெக்டர் மூலம் ஓரளவு தெரிந்து வைத்திருந்தாலும் உடனடி யாக மனைவி மக்களை பெற்றோரை பார்க்கத் துடித்தான். எல்லாவற்றிற்கும் மேலாக, என்னடா நினைச்சிட் உங்க என்று பார்க்காரன் ஒவ்வொருவனுக்கும் தனது பிரசன்னத்தையே ஒரு கேள்வியாக்கத் துடித்தான். அப்போது அவன் தோளை உரசுவது போல் ஒரு உணர்வு ஏற்பட்டது. சந்தேகமில்லாமல் அவன் ஏறிய அதே வேன்தான். இறங்கிய பயணிகள் அத்தனை பேரையும். ஏற்றிக் கொண்டு அவனைக் கடந்து சென்றது. ஒரு மரியாதைக்குக்கூட அங்கே நின்று அவனை ஏற்றவில்லை. இவ்வளவுக்கும் முன்பெல்லாம் மற்றவர்களை மந்தைப்பக்கம் இறக்கிவிட்டு இவனை மட்டும் இவன் வீட்டு வாசற்படியருகே நிறுத்தக்கூடிய டிரைவர் தான். சுரண்டையிலிருந்து கோணச் சத்திரம் வந்து. குட்டாம்பட்டியைத் தொட்டு அம்பாசமுத்திரம் போகும் சர்க்கார் பஸ்கள் பருவமழை அடிக்கடி பொய்த்துப் போவதால், அவர் களை ரெண்டு ரூபாய் ரேட்டுக்கு ஏற்றிக் கொண்டு போகும் இந்த வேனுக்கு இவன்தான் முதலாவது வாடிக் கைக்காரன். டிரைவர் இருக்கையில் எவர் இருந்தாலும் அவரை அகற்றி விட்டு இவனை உட்கார வைப்பான். ஆனால், இப்பவோ, வெனை நடக்க முடியாமல் கையில் தலை வைத்து. சாலைப் பக்கமிருந்த ஒரு சுமைதாங்கிக் கல்லின் மேலேயே உட்கார வைத்துவிட்டான்.

ராசதுரை மீண்டும் எழுந்தான். அவன் கம்பீரம் பாதியாகி விட்டது. கர்வபங்கப் பட்டவனாய், தலையைத் தொங்கப் போட்டபடியே நடந்தான்.

பக்கவாட்டுத் தலைமுடி காதுகளை மறைத்திருந்தது. கரடு முரடான முகம். மூக்கில் மட்டும் ஒரு தீப்பட்ட காயத்தின் வடுவான வெள்ளைக் கோடு. அது பாம்பு போலவும் தவளை போல் இருந்த அவன் மூக்கின் நுனியைக் கவ்விக் கொண்டிருப் பது போலவும் தோன்றியது. கருங் கால் கைகள், அழுத்தமான பாதங்கள், நாற்பது வயதைக் காட்டாத முப்பது வயதுத் தோற்றம்.

ராசதுரை ஊர்ப்பக்கம் வந்துவிட்டான். ஊர்முனையின் இடது பக்கம் மூன்று தேநீர்க் கடைகள். எந்தக் கடைக்குப் போகலாம் என்று யோசித்தபடி நின்றவன் நடுக்கடைக்குப் போனான். பாய்லருக்கு வைத்தியம் பார்ப்பது போல், அதன் சூட்டைப் புறங்கையில் வைத்துப் பார்த்துக் கொண்டிருந்த தேநீர்க் கடைக்காரன் தோளில் கைபோட்டபடியே கடையின் பெஞ்சு போன்ற சிமெண்ட் திண்டுகளில் மசால்வடையும் வாயுமாக, அல்லது கண்ணாடித் தம்ளரும் கையுமாக இருந்தவர்களைப் பார்த்து லேசாய்ச் சிரித்தான். ஒரு சிலர் அவனை ஆச்சரியப்பட்டுப் பார்ப்பது போல், தம்ளர்களை உயரே தூக்கினார்கள். இன்னும் சிலர், அவனைத் தவிர்ப்பதற்காக வெளியே போகப் போனார்கள். முன்பெல்லாம், சாலையோரம் போகிறவனை “நீ ஒண்ணும் டீ வாங்கித் தரவேண்டாம். நாங்களே வாங்கித் தரோம். வாப்பா” என்று செல்லமாகக் கூப்பிடுபவர்களில் பலர் அங்கே இருக்கத்தான் செய்தார்கள். எவருமே அவனிடம் பேசவில்லை ராசதுரைதான் “சுகமாய் இருக்கியளா….” என்று கூட்டத்தைப் பார்த்துக் கேட்டுவிட்டு அவர்கள் அதற்குப் பதில் சொல்லத் தேவை யில்லை என்பது போல் கடைக்காரரைப் பார்த்து “சர்க்கரை அதிகமா காபி போடு மச்சான்” என்றான். கடைக்கார மச்சான் இப்போது மச்சானைப் போல் பதிலளிக்கவில்லை .

“பாலு தீர்ந்து போச்சு…”

“கடுங்காப்பியாவது கொடு…”

“டிக்காஷனும் தீர்ந்து போச்சு.. அடுத்த கடைக்குப் போங்க”.

ராசதுரையின் உடம்பெல்லாம் அந்தப் பாய்லர் மாதிரி எரிந்தது. உடம்புக்குள் ஏறிய சூடு, அதன் உதட்டில் இருந்த ஈரத்தை உலர்த்தியது. அங்கே நிற்கப் பிடிக்காமல், அதே சமயம். அந்த இடத்தை விட்டு அகலவும் முடியாமல் நொண்டியடித்துத் திரும்பித் திரும்பிப் பார்த்து மீண்டும் சாலைப்பக்கம் வந்தான்.

குட்டாம்பட்டியில் காய்கறிகளைக் கூறு போட்டு விற்றவர்கள் அவனைப் பார்த்து ஏதோ புரிந்தது போல் தலையை மேலும் கீழுமாக ஆட்டினார்கள். பலர் அவனை அவன் பார்க்காத போது பார்த்தார்கள். ஆனால், அங்கங்கே தென்பட்ட அவன் பங்காளிகள் மட்டும் ‘நல்லபடியா முடிஞ்சுட்டுதா’ என்று கெட்டபடியாய் கேட்பது போல் அதட்டிக் கேட்டார்கள். அவன் தலையை ஆட்டிய போது. அவனை உஷ்ணமாகப் பார்த்துவிட்டு இனிமேயாவது இந்த வார்த்தையை மேற் கொண்டு முடிக்காமல் போய் விட்டார்கள்.

ராசதுரை, இப்போது எவர் கண்ணிலும் பட விரும்பாமலும், எந்த வார்த்தையும் காதில் விழ விரும் பாமலும், ஆகாயத்தை அண்ணாந்து பார்த்தபடியே நடந்தான். திடீரென்று ஒரு அலறல் சத்தம். அவன் திரும்பிப் பார்த்தான்.

அந்தக் காலத்து இளவட்டக்கல் மேல் புல்லுக்கட்டை தொப்பென்று போட்ட எல்லையம்மா. வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டாள். புழுதி மண்ணை எடுத்து, எண்ணெய் படாத தலையில் இட்டுக் கொண்டாள். இருபத்தைந்து வயதுக்காரி தான். ஒரு மாதம் நான்கு நாட்களுக்கு முன்பு, சர்க்கரை வள்ளிக் கிழங்காக இருந்தவள் இப்போது சக்கைக் கரும்பு போல் குழிபோட்ட கன்னங்களோடு பொலிந்தாள். அவனைப் பார்த்துவிட்டு, மீண்டும் தலையில் அடித்துக் கொண்டு அரற்றினாள். இதனால் ஏற்கெனவே இற்றுப் போயிருந்த அவளது முதுகுப் பக்க ஜாக்கெட் அவன் கணவனைப் போல். இரண்டுபட்டது.

“அடேய் பாவிப் பயலே…இசக்கியம்மா உன்னைக் கேட்பாடா… ஒன்னையும் கேப்பா…ஒங்கிட்ட எச்சிசோறு தின்ன போலீசையும் கேட்பாடா!”

ராசதுரைக்குப் பழைய கோபம் வந்தது. அவளை இழுத்துப் போட்டு மிதிப்பதற்காக, கால்களை எடுத்துப் போடப் போனான்… ஆனால், இப்போது புல்லுக்கட்டு மேல் உட்கார்ந்தபடி புலம்பிக் கொண்டிருந்த அவளைச் சுற்றி ஒரு பெரிய கூட்டம். அவளை அப்படிப் பேசாதே என்று அதட்டாமல், அதற்கு மாறாக, அவளுக்கு ஆறுதல் சொன்ன மனிதக் கட்டம். ஒருத்தி, அவள் தலைமடியை ஒதுக்கி விட்டாள், இன்னொருத்தி அவள் முந்தானையை இழுத்து முதுகை மூடினாள். ஒருத்தர் ஒரு சோடாவை எடுத்து அவளிடம் நீட்டினார். அங்கு நின்ற பத்துப் பதினைந்து பேர் அத்தனை பேரும் அவனைக் கண்களால் சுட்டெரிக்தார்கள்.

ராசதுரை தலையைக் குனிக்கவில்லை. அதுவே குனிந்தது.

ஊரின் தெற்குத் தெருவில் உள்ள தனது வீட்டுக்குள் நான்கு படிகள் ஏறிக் கோட்டை மாதிரியான பாதையில் நடந்து உள்ளே போனான். தேக்குக் கட்டிலில் கிடந்த அப்பா, அவனை நம்ப முடியாமல் பார்த்து விட்டுத் துள்ளி எழுந்தார். அவர் அருகே கால்மாட்டில் உட்கார்ந்திருந்த அம்மாக்காரி அவன் – தலையை இழுத்துத் தன் தோளில் போட்டுக் கொண்டாள்.

“ஏய் ராசம்மா, யார் வந்திருக்கா பாரு…”

ராசம்மா வரவில்லை …. அவனை அங்கேயே வந்து கட்டிப் பிடித்து முட்டி மோதுவாள் என்று அவன் எதிர்பார்த்த ராசம்மா அங்கிருந்த படியே தெரியும் மூன்றாவது அறைக்குள் நடுச்சுவரில் கைகால்களை விரித்துப் போட்டுச் சாய்ந்து கிடந்தாள். அவனை நோக்கி ஓடப்போன பிள்ளைகளைக்கூட இழுத்துப் பிடித்தாள். ராசதுரையே அங்கே போனான்…. அப்போதும் அவள் சட்டை செய்யாதது போல் கண்களை ஆட்டாமல் அசைக்காமல் வைத்திருந்தாள். ஆனால், அவனோ இரண்டு பிள்ளைகளையும் இருகரங்களிலும் பிடித்த படியே, உருண்டையான உடம்பு தட்டையாகப் போன மனைவியை மருவி மருவிப் பார்த்தான். உடனே, முகத்தை மூடி அழுத ராசம்மா, அவ்வப்போது வாய்களுக்கு மட்டும் கை மூடிகளிலிருந்து வழி கொடுத்து அழுகையும் விசும்பலுமாய்ப் பேசி னாள்.

“விட்டுடுங்க அண்ணாச்சின்னு கும்பிட்டவனை, கும்பிடக் கும்பிட வெட்டிட்டியே பாவி…கெஞ்சிய ஒரு உயிரை துள்ளத் துடிக்கக் கொன்னுட்டீரே. அவன் நெனச்சிருந்தா உம்மக் கொல்ல எவ்வளவு நேரமாயிருக்கும்? நீரு கையில் அரிவாளை எடுத்த மாத்திரத்திலேயே வெட்டுப்படாது என்ற தைரியத்துல சிரிச்சுக்கிட்டே கேட்டானே…அப்புறம் அழுதுக்கிட்டே கும்பிட்டானே…கும்பிட்ட கைய மட்டுமா வெட்டுனீர்? கழுத்தை துண்டாக்கினே. அப்படியும் பொறுக்காத செத்த பொணத்தை வயித்தலயும் வெட்டினியே…நம்ம குடும்பம் உருப்படுமா?”

ராசம்மா இப்போது எழுந்தாள்…சுவரில் சாய்ந்தபடியே அவனிடம் வக்கீல் பேசுவது போல் பேசினாள்.

“இவ்வளவுக்கும் அப்படியென்ன பெரிசா கேட்டுட்டான்…எல்லையம்மா வைக்கோலை உருவுனான்னு நீரு அவளை அவன் முன்னாலேயே தேவிடியாச் செருக்கின்னு திட்டினிரு…அப்போ அவன் “எம் பொண்டாட்டி திருடியில்ல அண்ணாச்சி. அவள அப்படி பேசாதிய….உங்க பொண்டாட்டிய நானும் இப்படிக் கேக்க எவ்வளவு நேரமாகும்…” இப்படித்தானே கேட்டான்? இதுகூடவா ஒருத்தன் கேட்கப்படாது? குருத்து விட்ட தென்னம்பாளை போல இருந்த ஒரு பச்சை மதலைய வெட்டிப் போட்டியரே…. கொலைகாரன் பொண்டாட்டி என்ற பட்டத்தை எனக்கு கொடுத்திட்டீரே…”

ராசதுரை நின்றபடியே முனகினான். தரை இழே போவது போவும் ஆகாயம் தலையில் விழுவது போலவும் இருந்தது. அவளை விட்டு விட்டு வெளியே வந்தான். அவள் அவன் கைகால்களைக் கழுவப் போவதாக அனுமானித்துக் கொண்டிருந்தபோது. இவன் வீட்டின் கொல்லைப்பக்கம் வந்து ஆள் அதிகமாக நடமாடாத வழியாய் நடையாய் நடந்தான். புளியந்தோப்பை ஊடுருவி, தென்னந்தோப்பைத் தாண்டி தோட்டத்துக்கு வந்தான். கிணற்றின் மத்தியில் வளைந்திருந்த குத்துக் காலில் மல்லாக்கச் சாய்ந்தபடியே தோட்டவெளியைப் பறவைப் பார்வையாய்ப் பார்த்தான்.

பக்கத்து தோட்டத்தில் கடலைப் பயிர் பொன்னிறத்தில் மின்னியது. வலது பக்க வயலில் எள்ளுச் செடிகள், இடது பக்க வயலில் எழிலைக் கிழங்குச் செடிகள், ஆமணக்குச் செடிகளுடன் உரசிக் கொண்டிருந்தன. ஆனால், அவன் தோட்டமோ பொட்டல் காடாய்க் கிடந்தது. அத் தனை தோட்டங்களுக்கும் மத்திவிலே அமங்கலமாய்த் தெரிந்தது. அந்தச் சமயம். அண்ணன் வந்திருப்பதைக் கேள்விப்பட்ட தம்பி அங்கே ஓடி வந்தான். பழைய சமாச்சாரத்தைப் பேச விரும்பாத ராசதுரை ஒப்புக்காத்தான் கேட்டான்.

“ஏண்டா … நம்ம வயலில் இப்பிடி பொட்டல் காடாக் கிடக்கு…”

“யாரும் கூலிக்கு வேலை செய்ய வரமாட்டேன்னு சொல்லுதாங்க. அதுக்குப் பிறகு நம்ம வீட்டுப் பக்கமே கூட யாரும் வாரதில்லே…வண்ணாத்தி துணி எடுக்க வரலே. நாவிதன் முடி வெட்ட வரலே…பாத்தி போட கூப்பிட்டா எங்க மம்பட்டிய வெச்சே உங்கண்ணன் எங்களையும் வெட்டுவாருன்னு சொல்லுதாங்க. இப்ப எனக்கே பயமா இருக்கு. நம்ம பக்கம் பணமும் போலீசும் இருக்கதால அவங்களுக்கு கொஞ்சம் பயம். அந்தப் பயமும் சீக்கிரமாத் தெளிஞ்சிடும் போலிருக்கே. என் உயிரையே கையில நான் புடிச்சுட்டுத்தான் அலையுறேன். எனக்கு நிச்சயம் செய்த பொண்ணு வீட்டுக்காரங்க கூட அந்தப் பெண்ணுக்கு வேற கல்யாணம் பண்ணிட்டான். கடைசியில உன்னால…”

தம்பிக்காரனை ராசதுரை போகும்படி சைகை செய்தான். அவனும் அங்கே இருந்தால் தானே அண்ணனைக் கொலை செய்ய வேண்டி வருமோ என்று பயந்து இடுப்பில் இரண்டு கைகளையும் ஊன்றிக் கொண்டு போய்விட்டான்.

ராசதுரை, குத்துக்காலில் தலையைப் போட்டு அந்தக் கிணற்றைப் பார்த்தான். பாழுங்கிணறு. முப்பதடி ஆழம். ஒரு பனையை எடுத்து உள்ளே விட்டு விடலாம். ஏதோ ஒரு மூலையில் அரையடி ஆழத்திற்கு தண்ணீர் கிடந்தது. எஞ்சிய பகுதி கருங்கல் பாறைகளைக் காட்டியது. பாளம் பாளமான கூர்மையான கற்கள். முதலைகள் இரும்புக் கவசத்துடன் வாயைப் பிளந்து எதன் வரவிற்கோ ஆயத்தம் செய்வது போன்ற தோரணை, மேல் பகுதியில் நான்கு பக்கமும் மூலைப்படிகளோடு சதுரமாகவும், கட்டுப்பாடான பெண் போலவும் இருந்த அந்தக் கிணறு கீழே போகப் போகப் பாதாளக் குகையாய் கோரமாகவும். கொலைகாரத்தனமாகவும் தோன்றியது. எட்டிப் பார்த்தாலே தலை சுற்றும்.

ராசதுரை குத்துக்காலிலிருந்து உடம்பை விடுவித்தான். அங்கிருந்து நகர்ந்து கமலைக் கல்லின் முனையில் வீறாப்பாக நிற்பது போல் நின்றான். ஊர்த்திசையை ஒரு பக்கமும், தோட்டத்தை இன்னொரு பக்கமும் பார்த்துக் கொண்டான். பிறகு…

அந்தக் கிணற்றுக்குள் ஒரு அலறல் சத்தம் கேட்டது. அந்தக் கிணறே கத்துவது போன்ற சப்தம். அதன் தண்ணீர் ரத்த ஓட்டம் பெற்றது.

– பெப்ரவரி 1991

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *