மேலமரத்தோணி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 8, 2021
பார்வையிட்டோர்: 3,631 
 

கந்தாடைத்தெருவில் உள்ள வைத்தியநாதனின் வீட்டு வாசலில் உள்ள கான்க்ரீட் தெரு விளக்குக்கம்பத்தின் அருகே நின்று கொண்டு தான், கன்னையா, வசந்தியின் கல்யாணப்பத்திரிக்கையைக்கொடுத்தான்.

‘நான் ரொம்ப தாமசமா கொடுக்குறேன்னு நினைச்சுக்காத…!

‘வெள்ளிக்கிழமை கல்யாணம். ராஜபாளையத்துல ரயில்வே டேசனுக்குப்பக்கமா இருக்கற மண்டபத்துல வெச்சு கல்யாணம். ‘.

‘மண்டபம் பேரு என்ன ?’

‘அது என்ன, அது, வைசியர் கல்யாண மண்டபத்துல வெச்சு தான் கல்யாணம். நீ கண்டிப்பா வந்துரணும்,’

‘இந்தக்கல்யாணத்துக்கு அந்த மாப்பிள்ளையாவது வருவாரா ?’

கன்னையா ஓர் அசட்டுச்சிரிப்பு சிரித்தான். அந்தக்கேலியை, வைத்தியநாதன், ஏற்கனவே ஆலைக்காரர் சண்முகத்திடம் சொல்லியிருந்தான். எனவே, அதை இப்போது நினைத்துக்கொண்டு தான், கன்னையா அந்த அசட்டு சிரிப்பு சிரித்தான். வெள்ளிக்கிழமை கல்யாணத்துக்கு புதன்கிழமை ராத்திரி பத்திரிகை குடுக்குறான்.

ஒரு புன்சிரிப்பை உதிர்த்தபடியே, கன்னையா தந்த கல்யாணப்பத்திரிக்கையை வாங்கிக்கொண்டான் வைத்தியநாதன். அவனுடைய கரிசக்குளம் வயக்காட்டில் தன்னிடம் சம்பளத்துக்கு வேலை பார்ப்பவன் தான் கன்னையா என்றாலும், தன்னை விட வயசாகி விட்டதால், ‘நீ, வா, போ’ என்று தான் பேசுவான்.’

சரி, ரொம்ப வருசமா வேலை பாக்குறான். அதனால, அப்படி கூப்பிட்டுட்டே போகட்டும். அவனுக்குனு படிப்பு, கிடிப்பு ஒண்ணும் கிடையாது. படிச்சிருந்தா, அவன், இப்படியெல்லாம் பேசாம, மரியாதையா பேசுவான். கன்னையா வீட்டுல ஒருத்தருக்கும் படிப்பு மண்டையில ஏறல. நாப்பது லிட்டர் பாலுல எத்தனை லிட்டர் தண்ணிய கலந்தா எவ்வளவு லாபம் வரும்னு அவனுக்கு குருட்டுக்கணக்கு மட்டும் தெரியும்.

கன்னையா தங்கச்சி வசந்திக்கு பொண்ணு பாக்குறது வரை தான், வைத்தியநாதனுக்கு தெரியும். கன்னையா, அடிக்கடி வேலைக்கு வராம காணாப்போயிருவான். லீவு லெட்டர் கொடுக்க இது என்ன ஆபீஸ் வேலையா ? வந்தா வந்தது தான்! வராட்டா வரலை தான் ! ஒரு மஞ்சப்பைய எடுத்துக்கிட்டு, ஊரு ஊராப்போயி, பாக்காத ஜோஸ்யக்காரனையெல்லாம் பாத்து, அப்புறமா, கல்யாண ப்ரோக்கர்களை பாத்து, அவங்க கிட்ட சொல்லி வெச்சு, ஏகப்பட்ட மாப்பிள்ளைகளைப்பத்தி விசாரிச்சுட்டு, அப்புறமா ஒரு மாப்பிள்ளையை பிடிச்சான். கல்யாண ப்ரோக்கர் ஒருத்தனுக்கும் கமிஷன் பணம் தரமாட்டான். அவன் கிட்ட இருந்து, பத்து பைசா வராதுன்னு கல்யாண ப்ரோக்கர்களுக்கு தெரியாமலே போயிருச்சு. காலையில எந்துருச்சு காபி குடிக்கறதுக்குகூட, அவன் வைத்தியநாதன் வீட்டுக்கு தான் வருவான்.

வசந்திக்கு மாப்பிள்ளை பாக்குற ஏற்பாடுகளை ரொம்ப மும்முரமா கன்னையா பாத்துக்கிட்டுருக்கற விசயம், வைத்தியநாதனுக்கு தெரியவே தெரியாது. அவரோட வயக்காட்டுல கரும்பு ஆலை ஓட்டிக்கிட்டு இருக்கற சண்முகம் ஐயா தான் அவர் கிட்ட வந்து சொன்னாரு .

“சாமி, உங்களுக்கு விசயம் தெரியும்னு நினைச்சுகிட்டு இருந்தேன். தெரியாதா ? கன்னையா, தன்னோட தங்கச்சி வசந்திக்கு மாப்பிள்ளை பாக்குறான். இவன், வடக்கால ஒவ்வொரு ஊராப்போயி பாக்குறான். ஒரு ஊரை விடல. அங்க, கிருஷ்ணன் கோவில், அழகாபுரி, ஆயர்தர்மம், வத்றாப்புன்னு ஒண்ணு விடல. அதுல பாருங்க, எல்லாரும் பொண்ணு பாக்க மாப்பிள்ளை வீட்டுக்கு சொல்லி விட்டு அவங்கள வரச்சொல்லுவாங்க. இவன், அப்படியில்ல. மாப்பிள்ளை வீட்டுக்காரங்க, இவனோட ரங்கநாதபுரத்துக்கு வந்தா, ஊர்க்காரப்பயலுவ எல்லாம் சேந்து, இவனோட வண்டவாளத்தையெல்லாம் தண்டவாளம் ஏத்திருவாங்கன்னு பயந்துக்கிட்டு, இவன் தங்கச்சியை கூட்டிக்கிட்டு, ஊரு ஊராப்போயி ‘ இதான் என் தங்கச்சி, இவளப்பாத்துக்குங்கன்னு கூட்டிக்கிட்டு அலையுறான்.”

‘இது ரொம்ப கூத்தாவுல்ல இருக்கு!’

‘இத விட கூத்து ஒண்ணு இருக்கு சாமி. கேளுங்க ! வசந்திக்கு மாப்பிள்ளை பாக்குறதுக்கு ஒரு ப்ரோக்கரை ஏற்பாடு பண்ணியிருக்கான்.அவனுக்கு ஒரு தடவ ஒரு ஊருக்குப்போயிட்டு வர ஐநூறு ரூவா கமிசன் தரணும். கல்யாணம் பண்ணுறதுக்கு முன்னாடி, அவனோட கமிசன் பணம் தனியா தரணும். கன்னையா, கஞ்சாம் பொட்டிப்பய. இவன் கிட்ட இருந்து அறுந்த விரலுக்கு சுண்ணாம்பு கூட வாங்க முடியாது. இவன் கிட்ட எப்படி அந்த கல்யாண ப்ரோக்கருக்கு பணம் வந்துருக்கும்? ப்ரோக்கர், கமிசன் பணத்தை கேட்டு கேட்டுப் பார்த்தான். ஒரு பைசா வரல. இவனுக்காக அழகாபுரி பக்கத்துல பாத்துக்கிட்டு இருந்த மாப்பிள்ளை வீட்டுக்குப்போய், இவன் தங்கச்சி வேணாம், வேற ஏதாவது இடத்துல இவளை விட நல்ல பொண்ணு பாத்துத்தர்ரேன்னு சொல்ல, அந்த வரனை முறிச்சு விட்டுட்டான். ஏதோ, அவனால முடிஞ்சது, அவ்வளவு தான். !’

அப்புறமா, மாப்பிள்ளை பாக்கப்போனா, அவங்க வீட்டுல இருக்கறவங்க எல்லாராரையும் பத்தி மொத்தமா விசாரிச்சுருவான். அவங்க வீட்டுல யாருக்காவது ஏதாவது கெட்ட பழக்கம் ஏதாவது இருந்தா போச்சு. உடனே, அந்த சம்பந்தத்தை வேணாம்னு தள்ளிருவான். பொண்ணு கேக்குறவன், அதிகமா நகை நட்டு கேக்கப்படாது. சீர் எவ்வளவுன்னு கேக்கப்படாது. இவனாப்பாத்து கொடுக்கறத வாங்கிக்கணும்.

இவனோட தங்கச்சி வசந்திக்கு ஒரு லட்சம் அம்மாவாசையை ஒட்டு மொத்தமா வடிச்சு வெச்ச மாதிரி முகத்து அழகு ! வசந்தி, நாலாம் கிளாசுக்கு மேல ஒரு கிளாஸ் படிக்கல. அவளுக்கு எழுத்துங்கறது சுட்டுப்போட்டாலும் வராது. அவளுக்கு தெரிஞ்சதெல்லாம், தீப்பெட்டி ஆபீஸுக்குப்போயி, கட்டை அடுக்கி, அதுல வாரா வாரம் சம்பாதிச்சு, அந்தப்பணத்தை வீட்டுக்கு எடுத்துக்கிட்டு வர்றது தான். இப்படிப்பட்ட தகுதியை வெச்சுக்கிட்டு, இவன், போற இடங்கள்ல எல்லாம், ‘மாப்பிள்ளைக்கு என்ன படிப்பு ? என்ன வேலை? எவ்வளவு சம்பாதிக்கிறாரு? பேங்குல எவ்வளவு போட்டு வெச்சுருக்காரு? வெளிநாட்டுக்கு வேலை கிடைச்சா போவாரா? அவருக்கு குடும்பத்துல என்ன சொத்து இருக்கு? என் தங்கச்சிய கார்ல வெச்சு கூட்டிக்கிட்டு போவாரா?’ வாய் கூசாமக்கேப்பான்.

அப்படி இப்படின்னு, ஒவ்வொரு சம்பந்தமும் தட்டிக்கழிச்சுகிட்டே போச்சே தவிர, ஒண்ணுமே சரியா அமையல. ஒரு மாப்பிள்ளை வீட்டுக்காரன் இருவது பவன் கேட்டா, இவன் பத்து போடுறேன், அதுவே போதும்னு எடக்கு மடக்கா பேசுவான். மதுரையில பெரிய கல்யாண மண்டபத்துல வெச்சு கல்யாணம் பண்ணுங்கன்னு சொன்னா, அதெல்லாம் ரொம்ப தூரம். இங்க, உள்ளூர்ல ரத வீதியில இருக்கற ராமராஜ் கல்யாண மண்டபத்துல வெச்சுக்குவோம்னு சொல்லுவான்.

சில சம்பந்தங்கள்ல பேசுற போது, ‘இவ்வளவு நவை போட்டு என் தங்கச்சிய அனுப்பறமே, இவங்க பாட்டுக்கு, அந்த நவைய வித்து தின்னுப்பிட்டு, என் தங்கச்சிய திருப்பி அனுப்பிச்சுட்டாங்கன்னா, என்ன செய்யுறது ?’ என்று தன்னோட அங்காளி பங்காளிகள் கிட்ட நேராவே பேசுவான். இப்படி, ஒண்ணொண்ணுக்கும் ஈட்டிக்கு பூட்டியா பேசி, ஒவ்வொண்ணா மாப்பிள்ளைங்களை தட்டிக்கிட்டே வந்தானே தவிர, சடக்குன்னு ஒண்ணைப்பாத்தோம், முடிச்சோம்னு இல்லாம காலத்தைக்கடத்திப்பிட்டான்.

ஐயா, வரன்களை வேணுமின்னா, தட்டிக்கழிக்கலாம். ஆனா, காலம் பாட்டுக்கு அதனோட சக்கரத்துல சுத்திக்கிட்டே இருக்குல்ல. அத என்ன செய்ய முடியும் ? அதைப்பிடிச்சு நிறுத்த முடியுமா ? பூமி சுத்திக்கிட்டே இருக்கற மாதிரி, சந்திரன் சுத்திக்கிட்டே இருக்கற மாதிரி, காலமும் ஓடிக்கிட்டே இருந்துச்சு. இவனோட தங்கச்சியும், தீப்பெட்டி ஆபீசு வேலைக்குப்போனோமா, வாரச்சம்பளத்தை வாங்குனோமா, கஞ்சிய குடிச்சோமான்னு இருந்துப்பிட்டாளுக. இத்தனைக்கும், பால் மாடு, ஆடு, கிடா யாவாரம், சாணி தட்டி விக்கிறது, அந்தா இந்தான்னு, துட்டை வசமா சேத்து வெச்சுருந்தான் நம்ம கன்னையாப்பய. அப்படி, துட்டு சேத்து, சேத்து, அதைக்கொண்டு போய், ஸ்ரீவில்லிபுத்தூர் டவுனுக்குள்ள இருக்கற கூட்டுறவு பேங்குல கொண்டு போய் போட்டுட்டு, போட்டுட்டு வருவான். அங்க போட்டுக்கிட்டு இருந்த பணத்துக்கு, வட்டிக்கு வட்டி விழுந்து, அடுப்புல பால் பொங்குன கதையா, வட்டிக்காசை வெளியே எடுக்காம, பணமும், அது பாட்டுக்கு பெருத்துப்போச்சு. நம்ம பயலுக்கு தான், கணக்கு வழக்கு ஒரு எழவும் தெரியாதே ! பச்சை பஸ் எல்லாம் மதுரைக்குப்போகுது. சிவப்பு பஸ் எல்லாம், தின்னவேலிக்கு போகுதுன்னு, பஸ் ஸ்டாண்டுல நின்னுக்கிட்டு அடிச்சு விடுவான்.

பணத்தை சம்பாதிச்சானே தவிர, தன்னோட தங்கச்சிக்கு வயசு ஏறிக்கிட்டே போகுதுன்னு நெனைச்சுக்கூடப்பாக்கல கன்னையா. அதுல என்னாகிப்போச்சுன்னா, இவனோட தங்கச்சி ரெண்டு பேருக்கும், வயசு நாப்பதைக்கடந்து போச்சு. வசந்திக்கு நாப்பத்தி ரெண்டு ஆச்சு.

ஒரு தடவ, வீடு வீடா, வந்து சனத்தொகை கணக்கு எடுக்க வந்த ஆளுங்க ( அந்த ஆளும் டீச்சர்மாரு தான்! ) இவனோட வீட்டுல இருக்கற அக்கா, தங்கச்சி எல்லாருக்கும் என்ன வயசுன்னு கேட்டாங்க. இவன் பாத்தான். நம்மளோட தங்கச்சியோட உண்மையான வயச சொல்லப்பிடாது. அதைச்சொல்லிப்பிட்டா, அத வெச்சு எவனாவது ஏடாகூடமா பண்ணிப்பிடுவான்னு நெனச்சுக்கிட்டு, வீட்டு வாசல்ல நின்னுக்கிட்டு இருந்த டீச்சரம்மா கிட்ட, ‘எனக்கு மூணு அக்கா, ரெண்டு தங்கச்சி , எல்லாருக்குமே இருபத்து ரெண்டு வயசுன்னு எழுதிக்குங்க’ன்னு அடிச்சு விட்டான்.

சரி, சனத்தொகை கணக்கு எழுத வந்துருக்கற டீச்சரம்மாவாவது ‘இது எப்படி இருக்க முடியும?’ மூணு அக்கா, ரெண்டு தங்கச்சிக்குமே இருபத்து ரெண்டு வயசா ?’ அப்படின்னு கொஞ்சம் கூட ரோசனை இல்லாம, அவன் சொன்னதை அப்படியே நோட்டுல எழுதிக்கிட்டாங்க. ‘வீட்டோட தலைவர்’னு இருந்த இடத்துல பெத்தம்மான்னு பேரை எழுதிக்கிட்டு, அவளுக்கும் அதே ‘இருபத்து ரெண்டு’ வயசு தான்னு எழுதிட்டு போயிட்டா!

‘துட்டு கொடுத்து, டீச்சர் வேலைக்கு சேந்துருப்பாங்க போல’ன்னு கன்னையா மனசுக்குள்ள நெனச்சுக்கிட்டான்.

ஒரு நாள், சனிக்கிழமை அன்னிக்கு, இவனோட அண்ணன் மருது பாண்டி, எங்கேயோ போய் விசாரிச்சுட்டு, ‘ டேய் தம்பி, அங்க, கரிவலம் பக்கத்துல ஒரு ஊர் இருக்கு. அங்க ஒரு வீடு இருக்கு. நம்ம ஆளுங்க தான். கொஞ்சம் வசதி கம்மி தான். மாப்பிள்ளை, சேலத்துல வண்டி ஓட்டுறானாம். நான் நல்லா விசாரிச்சுட்டேன். அவனுக்கு நம்ம வசந்திய முடிச்சுருவோமா’ன்னு கேட்டான்.

இவனும், மறுநாளே அந்த ஊருக்கு கிளம்பிட்டான். இவனுக்குத்தான் எந்த பஸ் எந்த ஊருக்குப்போகுதுன்னு தெரியாதே ! சங்கரன் கோவில் போற வழியில, கரிவலம் வந்த நல்லூர்ன்னு ஒரு ஊரு. அங்க இறங்கி, இன்னொரு பஸ்ல கிழக்காலே, எட்டு மைல் போகணும். மூணு பஸ் மாறி மாறித்தான் அந்த ஊருக்குபோவணும். இது தான் சரி. இந்த ஊருல நம்ம தங்கச்சிய கொடுத்தோம்னா, நம்மள பத்தி ஒருத்தனும் விசாரிச்சுக்கிட்டு வர மாட்டான், அப்படின்னு கன்னையாவுக்கு ரோசனை வந்துருச்சு.

அந்த ஊரோட பேரு மேலமரத்தோணி. அரசாங்க அதிகாரிகள் ஒருத்தர் கூட எட்டிப்பாக்காத குக்கிராமம் மேலமரத்தோணி. அந்த ஊருக்கு நாட்டாமைன்னு யாரும் கிடையாது. அந்த ஊரு டீக்கடைக்காரர் தான் அந்த ஊருக்கு நாட்டாமை. அந்த ஊருக்கு ஒரே ஒரு அடையாளம், ஒரு கூரை போட்ட டீக்கடை. அந்த ஊர்ல இது இந்த ஊருன்னு, சொல்ற பேர்ப்பலகை இருக்கறது கூட தெரியாது. அந்த ஊர்ல இருக்கற பேர்ப்பலகையில ஒரு கவுரைக்கட்டி, அதை இழுத்து, தன்னோட டீக்கடைக்கு கூடாரமா போட்டு வெச்சுருந்தான் ஒரு டீக்கடைக்காரன். அந்த ஊருக்குள்ள தபால்காரர் கூட வரமாட்டாரு. அந்த டீக்கடையிலேயே தபால்களை குடுத்துட்டு, அந்த அந்த ஆளுங்களுக்கு அதைத்தரச்சொல்லிட்டு போயிருவாரு. கன்னையா, அந்த ஊருக்கு போய் இறங்குன போது, நல்ல உச்சி வெய்யில்.

மாப்பிள்ளை வீட்டுக்கு போனான். அது சாதாரண ஓட்டு வீடு தான். இவனப்பாத்ததும், ‘ ‘சம்பந்தம் பேச வந்துருக்கீங்க ! முதல்ல சாப்பிடுங்க !’ அப்படின்னு அந்த வீட்டுக்காரர் முத்தையா சொன்னாரு. இவனுக்கு ரொம்ப குளுந்து போச்சு. கைய நனைச்சுட்டு, எழுந்துருச்சான்.

ஒரு நல்ல நாளாப்பாத்து வசந்தி, அண்ணன், தன்னோட குடும்பத்தை மட்டும் ரகசியமா கூட்டிக்கிட்டு வந்து, பொண்ணை, மாப்பிள்ளை கிட்ட காட்டிட்டு, ‘நல்லாப்பாத்துக்குங்க. இவ தான் என் தங்கச்சி..! ‘ அப்படின்னு ரொம்ப பெருமையா காட்டிட்டான்.

சம்மந்தம் பேச ஆரம்பிச்சான்.’ நீங்க போடுறத போடுங்க. நாங்க அதையெல்லாம் கணக்கு பண்ண மாட்டோம்’னு சொன்னாரு முத்தையா.

‘சரி தான் ! வசமா மாட்டிக்கிட்டாங்க ! இவங்க கிட்ட நம்ம தங்கச்சிய தள்ளி விட்டுற வேண்டியது தான்’ ன்னு மனசுக்குள்ள நெனச்சுக்கிட்டான்.

இருவது பவன்னு பேச ஆரம்பிச்சு, கடைசியில எட்டு பவன்னு பேசி முடிச்சுட்டான். வழக்கம் போல, அண்டா, குண்டாவெல்லாம், தர்றதா ஒத்துக்கிட்டான். இவனா தரப்போறான்? வீட்டுக்குள்ள தன்னோட அப்பாவுக்கு சீதனமா இவன் பெறக்கறதுக்கு முன்னாடி வந்த பித்தளை, வெங்கலப்பாத்திர மெல்லாம், வீட்டுக்குள்ளேயே இருந்துச்சு. பழசான தங்கச்சிய தலைமுடிச்சாயம், பவுடர், செண்டு பூச்சு பூசி, புதுசாக்காட்டி மாப்பிள்ள கிட்ட தள்ளி விடுற மாதிரி, பித்தளை, வெங்கலப்பாத்திரத்தையெல்லாம் புதுசா பூச்சு பூசி, இது தான் புதுப்பாத்திரம்னு சொல்லி தள்ளி விட்டுற வேண்டியது தான்னு கணக்கு போட்டுக்கிட்டான்.

‘கல்யாணத்த எங்க வெச்சுக்கலாம்?’னு கேட்டாரு மாப்பிள்ளையோட அப்பா முத்தையா. எங்க ஊருல கல்யாண மண்டபம் கிடைக்காது. அதுக்கும் கிராக்கி. அதனால, ராஜபாளையத்துல வெச்சுக்கலாம்னு சொல்லி அதுக்கு சம்மதிக்க வெச்சுட்டான்.

எல்லா ஏற்பாட்டையும் செய்ய ஆரம்பிச்சுட்டான். ராஜபாளையத்துல ஒருத்தருக்கும் தெரியாம இருக்கற கல்யாண மண்டபமாப்பாத்துக்கிட்டான். வீட்டுல இருக்கற பழைய பண்ட பாத்திரத்தையெல்லாம், டவுனுக்குள்ள பஜார்ல இருக்கற சவுந்தரபாண்டியன் நாடார் அண்ணாச்சி கடையில கொடுத்து, பாலிஸ் போட்டு, பாக்க புத்தம் புதுசா இருக்கற மாதிரி மாத்திட்டான். கல்யாணப்பத்திரிக்கைய கோதா விலாசம் பிரஸ்ல அச்சடிச்சான். ஆனா, ஊர்க்காரப்பயலுவ ஒருத்தனுக்கும் அவன் பத்திரிக்கை தர்றல.

ஊர்க்காரங்க எல்லாரும் பொறாமை பிடிச்சவனுக. அவனோட தங்கச்சி அழகு என்ன? அறிவு என்ன? அப்படிப்பட்ட தங்கச்சிய, ரோசாப்பூவு மாலையைப்போட்டு மேடையில உக்கார வெச்சா, ஊர்க்காரப்பய பிள்ளைக கண்ணு பட்டுப்போயிரும்னு நினைச்சான். ஆனா, நெசம் என்னான்னா, இவனோட தங்கச்சி ரெண்டு பேரோட வயசும், ஊர்க்காரப்பயக அத்தினி பேருக்கும் தெரியும். ஒருத்தனாவது அந்தக்கல்யாணத்துக்கு வந்தான்னா, நேராப்போயி, அந்த மாப்பிள்ளை கிட்டயே போயி பத்த வெச்சுட்டு போயிருவான். இந்த பத்திரிக்கை வெக்குறதுல என்ன கொடுமைன்னா, அவனுக்கு ரொம்ப நெருக்கமா இருந்த ஆலைக்காரர் சண்முகத்துக்கும் பத்திரிக்கை கிடையாது. பதினைஞ்சு வருசமா அவருக்கும், இவனுக்கும் அத்தனை நெருக்கம். அவருக்கு பணம் கடனுக்கு கொடுத்துட்டு, மாசா மாசம் வட்டி வாங்கிக்கிட்டு இருக்கான்.

கல்யாணத்துக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி, கருப்பு சாயத்தை வாங்கிட்டு வந்து, அத தங்கச்சி தலையில நிறைய பூசி விட்டுட்டு, இத அழியாமப்பாத்துக்கன்னு சொன்னான் கன்னையா.

ஊருக்குள்ள ஒருத்தனையும் பத்திரிகை வெச்சு கூப்பிடல. எப்படி கூப்பிடுவான்? ஊர்ல இருக்கற ஒவ்வொருத்தனுக்கும், இவனுக்கும் ஏழாம் பொருத்தம். இவனோட சங்கதியெல்லாம் தெரிஞ்சவன் எல்லாம், இவன் சங்காத்தமே வேண்டாம்ல நெனைப்பான்.

கல்யாண சாப்பாடுன்னு ஒண்ணு போட்டாகணுமே ! மாப்பிள்ளை வீட்டுல ரொம்ப சொந்தம் இல்லன்னு தெரிஞ்சுக்கிட்டான். இவனுக்கு ரொம்ப வசதியாப்போச்சு. ரொம்ப செலவாகுமேன்னு கவலை இல்ல. கல்யாணத்துக்கு தேவையான தேங்காய், வாழை இலை, வாழைக்காய், எல்லாமே தான் வேலை பாக்குற வைத்தியநாதன் காட்டுல இருந்து கேக்காமலேயே திருடிக்கிட்டு போயிட்டான்.

இவன் ஊருக்குள்ள, கல்யாண வேலைகளையெல்லாம் செஞ்சு முடிக்க, இளவட்டங்க கிட்ட ரெண்டு பெரிய சாராய பாட்டில் வாங்கித்தந்துட்டாப்போதும். பணம் கொடுக்க வேணாம். ஆனா, சாராயம் வாங்க பணம் செலவழிக்கணுமேன்னு சங்கடப்பட்டுக்கிட்டு, இவனும், அண்ணன் ரெண்டு பேருமா சேந்து, கல்யாண மண்டப வேலையெல்லாத்தையும் மாங்கு மாங்குன்னு, வேர்க்க விறுவிறுக்க செஞ்சு முடிச்சுட்டாங்க.

ரொம்ப சிக்கனமா செலவே வெக்காம எப்படி கல்யாணம் நடத்தணும்னு எல்லாருக்கும் பாடம் எடுக்கற அளவுக்கு தெளிவாயிட்டான். கல்யாணத்துக்கு தன்னோட முதலாளி பண்ணைக்காரர் வைத்தியநாதனுக்கு பத்திரிகை வெச்சான். வீட்டுக்கு வெளிய, ரோட்டுல, விளக்கு கம்பத்துக்கு கீழ வெச்சு பத்திரிக்கையை கொடுத்த போதே, வைத்தியநாதனுக்கு வெளங்கிப்போச்சு. ‘சரி, இது ஏதோ, நம்மள கல்யாணத்துக்கு வந்துறாதன்னு சொல்ற மாதிரி இவன் கல்யாணப்பத்திரிக்கைய தர்றான். சரி, நாம எதுக்கு இவன் வீட்டு கல்யாணத்துக்கு போய்க்கிட்டு ? இவனோ, கல்லுளி மங்கன். ஊர அடிச்சு உலையில போடுறவன். ராத்திரி பூராவும், செம்பகத்தோப்புல புகுந்து தேங்கா, மாங்கா எல்லாத்தையும் திருடிட்டு, காலையில டவுன்ல பென்னிங்டன் மார்க்கெட்டுக்கு அத மூட்டை கட்டிக்கிட்டு வந்து, வித்துட்டுப்போயிருவான். திருட்டு நாயி. இவன் கல்யாணத்துக்குப்போயி, அந்த கோமாளிக்கூத்தைப்பாக்க வேணாம்னு முடிவெடுத்தான் வைத்தியநாதன்….

[இது வரை தான் இந்தக்கதையின் கையெழுத்துப்பிரதி இருந்தது. இதன் அழகிய பின்பாகம் (நான் கதையின் அழகிய பின்பாகத்தைச்சொல்லுகிறேன்) எங்கே போனது என்று தெரியவில்லை… இதற்கு அப்புறம், அடியேன் எழுதி வைத்திருந்த கதையின் கையெழுத்துப்பிரதியின் தாள்கள் தொலைந்து போய் விட்டது. நானும், என் வீட்டில் எல்லா இடத்திலும் தேடிப்பார்த்தேன். ம்ஹூம், எங்குமே அது கிடைக்கவில்லை. என்னுடைய அஞ்சடுக்கு இரும்பு சட்டத்தில் தேடிப்பார்த்தேன். அங்கேயும் அது இல்லை. பழைய கோப்புகளில், எங்காவது, மிச்சம் மீதி இருக்கும் தாள்களோடு அது ஒட்டிக்கொண்டிருக்குமோ என்றும் பதட்டத்துடன் பார்த்தேன். இல்லவே இல்லை. ஒரு வேளை, பகல் நேரங்களில் வாசல் வழியாய்ப்போகும் பழைய பேப்பர், பிளாஸ்டிக் வியாபாரியிடம் என் கதைகளை எடைக்குப்போட்டாயா என்று என் மனைவியிடம் கேட்டேன். அதற்கு அவள், “உங்க புருசன்காரரு கதை எழுதுன பேப்பரைத்தவிர வேற எது வேணாலும் கொண்டாந்து போடுங்க. எடைக்கு எடுத்துக்கறேன்க்கா !” என்று அந்த பழைய பேப்பர்காரன் சொல்லி விட்டதாய் சொன்னாள். இப்படி, என் கதையின் மகாத்மியம் தெரிந்த ஒருவனும் இருக்கிறானோ என எண்ணி அதிர்ச்சியடைந்தேன். இறுதியாக, ஒரே முடிவாக, என் கதையில் வரும் கன்னையாவின் முதலாளி, அந்த சம்சாரி வைத்தியநாதனிடமே போய், என் கதையின் முடிவை தெரிந்து கொள்ளப்போனேன்.

ராத்திரி சாப்பாட்டை முடித்து விட்டு, வெற்றுடம்புடன், ஏப்பம் விட்டபடியே, திண்ணையில் நாற்காலியில் அமர்ந்து கொண்டு, வெற்றிலையை கிள்ளியபடி இருந்தவரிடம், போய் நின்றேன்.]

“யாரு கதை எழுதறவரா ? என்ன விஷயம்? உங்களைப்பாத்து ரொம்ப நாளாச்சே!” என்றார். “இல்ல, இந்த கன்னையா தங்கை வசந்தியோட கல்யாணம் எப்படி நடந்ததுன்னு தெரியாமப்போச்சு. அந்தக்கல்யாணத்துக்கு நீங்க போயிருந்தீங்களா? என்ன நடந்தது?”என்று ஒறண்டு இழுக்கறவனைப்போல அவரை இழுத்தேன்.

“நீர் அந்த விஷயத்தை இங்க வந்து பேசாதீரும் ! கருமம் பிடிச்ச கதையை என் கிட்ட கேக்குறதுக்காக, அங்க தெக்கு ரத வீதியில இருந்து, இந்த ராத்திரியில வந்தாச்சா?” என்றார். “இல்ல, அந்தக்கல்யாணம் எப்படி முடிஞ்சதுன்னு தெரிஞ்சுக்கத்தான் வந்தேன். ரொம்ப ஆவலாதியா போச்சு !”

“இப்ப அதைத்தெரிஞ்சுக்கலன்னா உங்க மண்டையா வெடிச்சுப்போகும்? வேலையைப்பாத்துக்கிட்டுப்போவீரா !” என்று ரொம்பவே என்னைக்கடிந்து கொண்டார் வைத்திய நாதன்.

கதை எழுதுபவனுக்கு கதையின் துவக்கம், முடிவு எல்லாமே முக்கியமில்லையா ?

என்னோட நச்சரிப்பு கொஞ்ச நேரத்துக்கு இருந்தது. அப்புறம், என்ன நெனைச்சாரோ தெரியல, அவரே என்னைய பக்கத்துல வந்து உக்காரச்சொன்னாரு. அப்புறம், ரொம்பவும் மெல்லிசான குரல்ல பேச ஆரம்பிச்சாரு.

“நீரு இத எங்கயும் போயி, டாம் டாம் அடிச்சுக்கிட்டு நிக்க வேணாம். ஒம்ம கிட்ட சொல்றதே, உம்மோட பிள்ளைப்பூச்சி மாதிரி நச்சரிப்பு தாங்க முடியாமத்தான் ! சரி போகுதுன்னு தான் இத சொல்றேன். நீர் இத கேட்டுக்கும். ஆனா, வெளிய சொல்ல வேணாம். என்ன நான் சொல்றது ஒம்ம மண்டையில ஏறுதா ?” என்றார் வைத்தியநாதன்.

இந்த களவாணி கன்னையா வீட்டு கல்யாணம் ராஜபாளையத்துல தான் நடந்துச்சு. நான் போக வேண்டாம்னு அன்னிக்கு பாத்து வீட்டுலயே இருந்தேன். அப்புறமா, ஏதோ தோணிச்சு. சரி, போய்த்தான் பாப்பமே, இவன் எப்படி தான் கல்யாணம் பண்ணுறான்னு பாப்போம்னு போனேன். அந்தக்கல்யாண மண்டபத்தைக்கண்டு பிடிக்கறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிப்போச்சு. ரயில்வே ஸ்டேஷனுக்கு பக்கத்துல தான் கல்யாண மண்டபம்னு இவன் சொல்லியிருந்தான். அந்த மண்டபம் எங்க இருக்குனு ஒரு பயலுவளுக்கும் தெரியல. கடைசியில ஒரு டீக்கடைக்காரர் தான் அந்த கல்யாண மண்டபத்தைக்காட்டுனார் . நானும் அந்த மண்டபத்துக்கு போனேன்.

அந்த மண்டபத்துக்குள்ள நுழைஞ்சு கடைசி வரிசையில போயி உக்காந்தேன். கல்யாண மேடை சின்னதா இருந்தது. மேடையில வசந்தி உக்காந்துருந்தா. பக்கத்துல அந்தக்கல்யாணப்பையன். அவன் பேரு கிருஷ்ணசாமியாம். அந்த மாப்பிள்ளையை பாத்ததுமே எனக்கு ஏதோ பச்சாச்தாபம் வந்துருச்சு. ஏன்னா, பாக்க அவன் அவ்வளவு அப்பிராணியா இருந்தான். வசந்தியோ ராங்கி பிடிச்ச மாதிரி அவன் பக்கத்துல உக்காந்துருந்தா. அவ தலையில தேய்ச்சுருந்த கருப்புச்சாயத்தோட ரகசியம் எனக்கு மட்டும் தான் தெரியும். நான் ஏதோ அந்தக்கூட்டத்துல சேராத புது ஆளா இருக்கறதப்பாத்துட்டு, பக்கத்துல இருந்த ஆளு, ” ஐயா, பெரிய வீட்டு மனுசன் மாதிரி இருக்கீக ! உங்களுக்கு மாப்பிள்ள வீடா, பொண்ணு வீடா”ன்னு கேட்டான்.

எல்லாக்கல்யாணத்துலயும் இது ஒரு தர்ம சங்கடம். ஆளு தெரியலன்னா, இப்படியெல்லாம் கேட்டு தொல்லைப்படுத்துவானுக !

“நான் பொண்ணு வீட்டுக்காரன் தான். அந்தப்பொண்ணோட அண்ணன் என் தோட்டத்துல தான் பருவக்காரனா இருக்கான்,” என்றேன்.

“சரி தான் ! நீங்க போயி சாப்பிட்டு வந்துருங்க ! ” என்றான் அவன்.

“அது இருக்கட்டும். மெதுவா சாப்பிட்டா போச்சு ! பையன் ரொம்ப எளவட்டமா இருக்கான். வயசு என்ன இருக்கும்?” என்று கொக்கியைப்போட்டேன்.

“என் ஊர்க்காரன் தான். என்ன அதிகம் போனா இருபத்து ஒண்ணு அல்லது இருபத்து ரெண்டு தான் இருக்கும். இப்பத்தான் ட்ரைவர் வேலைக்கு போக ஆரம்பிச்சுருக்கான்.”

கல்யாண மேடையைப்பாத்தேன். வசந்திக்கு பின்புறம் நின்று கொண்டிருந்த மாப்பிள்ளையோட அம்மா, வசந்தியை விட குறைஞ்ச வயசா தெரிஞ்சாங்க.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *