மேகங்களும் சங்கராபரணமும்

0
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 9,104 
 
 

“எதாவுனாரா…’ தியாகராஜரின் கல்யாணி ராக கீர்த்தனையை விஸ்தாரமாக வாசித்துக் கொண்டிருந்தபோது, அதிர்ந்து நின்றது கூட்டம். கூட்டமென்றால் பெரிய கூட்டமல்ல; ஒரு இருபது இருபத்தைந்து பேர்தான். ஓர் சின்ன கிராமம். யாரோ ஒரு மகான் சித்தியடைந்த அதிஷ்டானம். எளிமையாய் ஒரு ஆராதனை. அவரின் மேல் பக்தி கொண்ட ஒரு பெரிய சங்கீத வித்வான், பாட ஒப்புக்கொண்டு வந்திருந்தார்.

வித்வானுக்கு சகல பக்க வாத்தியங்களோடு மேடை கொள்ளாமல் நிறைந்திருக்க வேண்டும். புல்லாங்குழல் வித்வான் வரவில்லை. வந்ததிலிரந்தே முகம் கடுகடுவென்றிருந்தது. ஒரு கீர்த்தனையை முடித்துவிட்டுக் கூட்டத்தைப் பார்த்தார். எதிர்வீட்டு வாசற்படியில் உட்கார்ந்து கொண்டிருந்தவனையும் அவனது வெறித்த பார்வையையும் கையிலிருந்த சாதாரண புல்லாங்குழலையும் பார்த்தார்.
கூப்பிட்டார். மேடையருகே வந்து நின்றபோது, “மேலே வா’ என்று கண்களாலேயே ஜாடை காட்டி அழைத்தார். கொஞ்சமும் தயக்கமில்லாமல் பக்கவாட்டில் உட்கார்ந்து கொண்டான். மலங்க மலங்க விழித்தான். மூணு மாத தாடி, அழுக்கு வேஷ்டி, காய்ந்த உடம்பு, பஞ்சடைந்த கண்கள், ஒரு நசுங்கிய புல்லாங்குழல். எல்லோருக்கும் அசுவாரஸ்யம்.

மேகங்களும் சங்கராபரணமும்

ச… ப… ச… ப… ச… தம்புரா கூடவே மெல்ல இழைத்தான். “எதாவுனாரா…’ சரணத்தில் பிடித்துக்கொண்டிருந்த வித்வான் “ஆஹ்ஹா’ என்றார் தன்னை மறந்து. அப்படி ஒரு சுநாதம். எங்கே கற்றான்… வித்தை எங்கிருந்து வந்தது? கண்ணன் குழலையும் தாண்டி. வாசிப்பது அவனா… அவனுக்குள்ளிருக்கம் வேறு ஆசாமியா? வித்வான் தடுமாறினார்.
தன் அனுபவத்தில் இப்படியொரு வாசிப்பு- அனுபவித்ததில்லை. தான் பாடுவதை நிறுத்திவிட்டு, “”வாசி” எ“னறார். மிருதங்க வித்வானும் வயலின் வித்வானுக்கும் ஜாடை காட்டினார். கடம் ராமசாமி “தகிட தகிட தோம்…’ என்று தன் இருப்பையம் சொன்னார். திடீரென மேல் சஞ்சாரம். முகத்து வியர்வையைத் துடைத்துக் கொண்டார். சற்றே அச்சப்பட்டவராய்த் தெரிந்தார். “இது உன் டூட்டி’ என்றார்போல் சற்று பன்பக்கம் நகர்ந்து உட்கார்ந்து கொண்டார்.

ஆகாயத்தை அடிக்கடி பார்த்தான். மேகங்களுக்கிடையே எதையோ தேடினான். கோட்டுருவமாய்ச் சிரித்ததைப்புரிந்துகொண்டு, அதன் ரசிப்புக்குக் கீழ்ப்படிந்து – ஆணைக்குக் கட்டுப்பட்டு சஞ்சாரம் செய்து கொண்டிருந்தான். கல்லுருவாய்க் கிடந்து துன்பம் தாளாமல் எப்போதும் கண்ணீர் வடித்துக்கொண்டிருந்த அகலிகையைக் காத்த வீரனே… “தாரனி சிலயை தாபமு தாளக சூர….’ அம்ருதவாகினியை இழைத்துக்கொண்டிருப்பதார்? நிஜத்தில் இவனா இவனா… இந்தப் பித்தனா? மடத்துக்கு மடம் தூங்கி – கிடைத்த இடத்தில் தின்று – எப்போதாவது பெய்யும் மழையில் குளித்து – எதையாவது அழுக்காய் கந்தலாய் தாறுமாறாய் உடுத்திக்கொண்டு – ஒரு பக்கம் நசுங்கிய புல்லாங்குழலை இடுப்பில் செருகிக்கொண்டு – மனதுக்குத் தோன்றியபோதெல்லாம் இன்னதென்று புரியாத கடூரமான ஒலிகளை எழுப்பிக்கொண்டு அலைந்தவனுக்கு இந்த உசரம் எப்படிச் சாத்தியமாயிற்று. இவன் குரு யார்? எங்கே பயின்றான்? க்ஷணத்தில் பெற்றதா? இந்த மேன்மையான வரம் கூடியதெப்படி? என்பதறியோம்.

ஆகாயத்தை வெறித்துக் கொண்டிருந்தவன் அங்கே தேடியதைக் காணாமல் ஏமாற்றமடைந்தவனைப் போலானான். முகம் கோணியது. திடீரென்று அப்படியொரு கோரமான சப்தம். அதே புல்லாங்குழலிலிருந்து – எல்லோரும் விக்கித்து நின்றனர். அவன் அந்த அபஸ்வரத்தினால் தான் பரவவிட்ட சுநாதத்தை சுத்தமாகத் துடைத்து அழித்துவிட்டு காணாமல் போயிருந்தான். மேடையை விட்டு இறங்கியது எப்போது? அறிந்திலர்.
“”மேலத்தெரு ரங்கசாமி பேரன் இவன். ரைஸ்மில் வைக்கறேன்; ஃபாக்டரி வைக்கறேன்னு இருக்கறதையெல்லாம் தொலைச்சுட்டு குடும்பத்தோட ராவோட ராவாப் போனவன்தான்.

இவன் சின்னகுழந்தை அப்போ. பூர்விக வாசனை அறிந்தானோ! எது இழுத்து வந்ததென்று தெரியல. இந்தப் புள்ளையார் கோயில் தெரு வீடுதான் பூர்விகம்னு அடையாளம் தெரிஞ்சு, ஒருநாள் அந்தப் பாழடைஞ்ச திண்ணையிலே உட்கார்ந்துவிட்டான். பராரிகோலம். எவ்வளவு விசாரிச்சும் பதிலில்லை. புல்லாங்குழல்லே இஷ்டத்துக்க வாசிப்பான். என்ன ராகமோ என்ன சங்கீதமோ – அபஸ்வரம்” என்று பெரிய பட்டா விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தது சரிதான்.

அவனா? அவனுக்குள்ளிலிருந்து வேறா! இந்த சுநாதம் எங்கிருந்து வந்தது? இதன் மூலம் எங்கு ஒளிந்திருந்தது. எப்படி வெளியே கொண்டு வந்தான் ? இதுவோர் ஆச்சர்யம்! எந்த விஞ்ஞானத்துக்குள்ளும் அடங்காத இதுவென்ன?

ராமநவமிக்குப் பெருமாள் கோயிலில் வாசிக்க கூப்பிட்டபோது, ஒரேடியாக இந்த கோடிக்கும் அந்தக் கோடிக்குமாய்த் தலையாட்டினான். முடியாது – கண்களில் ஏராளமான அலட்சியம். எழுந்து பதில் சொல்லக்கூட மனசற்றவனாய் வெறுப்பைக் கொட்டினான். புல்லாங்குழல் அப்பாவியாய்க் கிடந்தது.

“”மெட்ராஸ் பக்கம் வந்தா சபாவிலே வாசிக்கலாம். இப்படி வாசிக்க இப்ப யாருமே இல்லே. பணம் பவிசு., செல்வாக்கு எல்லாம் வந்து குவியும்….”

சிரிப்பது மாதிரி இருந்தது. எனக்கு எந்த வித்தையும் தெரியாது என்பது போன்ற குறிப்பு. புல்லாங்குழலை அலட்சியமாக எடுத்தான். என்ன கஷ்டம். வேண்டுமென்றே பண்ணுகிறானோ? பேதலித்த மனசின் இயற்கையான இயக்கமோ? என்ன விதமான சப்தங்களின் அழைக்கழிப்பு. காகங்களின் தீனமான கரைச்சல் போல் – அல்லது தகரத்தில் யாராவது குறும்புப்பொடியன் ஆணியால் கீறுகிறானா? எல்லோரையும் பார்த்துச் சிரித்தான்.
புரியுதா இது தேவகாந்தாரி – “யானையைக் காப்பாற்ற வேகவேகமாக ஓடிவந்தவனே…. வாரண ராஜரி ப்ரேவனு கேவமே’ பேரிரைச்சல் – கண்களில் கம்பீரம்.

உலகத்து உயர்ந்த சங்கீதம் இதுதான் கேளுங்க முட்டாள்களே…’ ஒவ்வொருவராக நழுவ ஆரம்பித்தபோது திமிராய் ஒரு பார்வை. சற்றே அலுத்துப்போய் புல்லாங்குழலை ஓர் ஒரமாகத் தூக்கிப்போட்டான். ஒருக்களித்துப்படுத்துக்கொண்டான். ஆகாயம் பார்த்தான். ஒரு வார்த்தை பேச்சில்லை. பேசி ஆகப்போவதென்ன என்ற கர்வம்.

நள்ளிரவு – மையிருட்டு இரண்டு குருட்டுக் காகங்கள் விடிந்துவிட்டதாகக் கருதி அவசரமாக சூரியனைக் கூப்பிட்டுப் பார்த்தன. தெருக்கோடியிலிருந்து காற்றில் லேசாய்க் கலந்து மிதந்து வந்ததென்ன?

“மனவினி… பா கு க… மதினி… ‘ என் வேண்டுதலை மனத்தில் கொண்டு காதலோடு என்னைக் காப்பாற்று – ஹரிகாம்போதி மாதிரி இருந்தது. சுத்தசன்யாசி மாதிரியும் தெரிந்தது.
தூக்கத்தை விரட்டிவிட்டு ஒவ்வொருவராக வந்த ஒரு சிறு கூட்டமே கூட அவன் யாதொன்றையும் கண்டுகொள்ளாமல் மேலே மேலே சஞ்சரித்துக் கொண்டிருந்தான்.

வேறு உலகத்தில் இருப்பவனாய்… வேறு யாருக்காகவோ இந்த சாகசம் என்பதுபோல் – உலகத்தின் சுழற்சியையே நிறுத்தி விடவல்ல ஆற்றல் – ஆளுமை – அதிகாரம் இந்த ஜோதிப்ரகாசத்தின் அதிசயம்தான் என்ன? எவ்வளவு நேரம் என்றில்லை. எப்போது முடியும் என்று தெரியவில்லை. ஒரு கட்டத்தில் லேசாகக் கண் திறந்தான். எந்தச் சலனமும் இல்லாமல் பார்த்ததில் வித்தியாசம் தெரிந்தது. அச்சம் தருவதாயிருந்தது. வாசிப்பதைச் சட்டென நிறுத்திவிட்டு ஆகாயத்தைப் பார்த்துப் புன்னகைத்தான். தேடியதைக் கண்டடைந்த மலர்ச்சியில் கண் சிமிட்டினான். புல்லாங்குழலைக் கீழே போட்டான். ஏன் என்பதைப்போல் புருவத்தைச் சுருக்கினான். “”வாசியேன் வாசியேன்” என்ற இரைஞல்களை லட்சியம் செய்தாகத் தெரியவில்லை.
“”வாசி… வாசி…”
லேசான புன்னகையோடு ஒரு கம்பீரப் பார்வை. புல்லாங்குழலை எடுத்தான். புயல் சீறியது மாதிரி ஒரு பேரிரைச்சல். இதுவென்ன க்ஷணத்தில் வந்து சேர்ந்த நரக வேதனை. அம்மா ஊதுகுழலால் ஊதி அடுப்பைப் பற்ற வைப்பாள். அதில்கூட ஒருவித லயம் இருக்கும். இதுவென்ன காது கொடுத்துக்கேட்க முடியாமல் – ரண களம். தெரு நாய்கள் என்னவோ ஏதோவென அஞ்சி ஓடி ஒளிந்துக்கொண்டு பத்திரமாகக் குரைத்து எதிர்ப்பைத் தெரியப்படுத்தின. மூச்சை அடக்கி மிகுந்த பிரயாசையோடு அபஸ்வரங்களை வீசியெறிந்தான். “பிடிச்சுக்கோ. பிடிச்சுகோ.

இதுவென்ன முரண். விலகாத மர்மம். அவன் உத்தரவு பெறுவது ஆகாயத்திலிருந்தா? பூமி ஒரு பொருட்டல்ல என்ற அலட்சியம் தகுமோ. நெருங்குவதற்கு அஞ்சுமாப்போல் இந்த விலகலில் என்ன பொருள். சிலபேர் இரக்கப்பட்டு ஏதாவது கொடுத்தால் வாங்கிச் சாப்பிடுவான். அப்புறம் தீவிரமாய் ஆகாயம் நோக்கல்.
ஒரு நாள் அர்த்தராத்திரி மழை – மின்னல். கம்பி கம்பியாய் பூமியைத் துளைத்துவிடும் ஆவேத்தில் – ஊரே ஒடுங்கி வீட்டுக்குள் முடங்கியிருந்தது. கடமுடாவென்று பேரிடி – அர்ஜூனா… அர்ஜூனா… என்ற ரகசிய பிரார்த்தனை. மரங்கள் பிசாசாய் ஆடின. எங்கும் பயம்.

“அண்ட சாரரங்களிலும் வசிக்கும் கமலக் கண்ணனே! என் காரியம் என்றால் உனக்க இவ்வளவு பாராமுகம்…’

கிரணாவளி – இதென்ன புதுராகம். நிஜத்தில் உண்டோ. யாரையோ நோக்கிச் செல்வதுபோல், ஆகாயத்தை நோக்கிச் சொன்னான். “”கிரணவளியப் புடிக்கிறேன் பார்…”

தெருக்கோடி. கிருஷ்ணபாகவதர் சொன்னார், “”கிரணாவளி அபூர்வ ராகம் தான் தியாகையர் பாடியிருக்கார். தீக்ஷிதரும் பண்ணியிருக்கார். சிக்கலான ராகம்தான். யாரும் தொடப் பயப்படுவா. மூச்சு வாங்கும்.”

கிருஷ்ண பாகவதர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். தியாகராஜர் வாரிசு பரம்பரை. சங்கீத மேதை. பாரிச வாயுவால் கைகள் செயலற்று, நாலு வருஷமா படுக்கை வாசம்.

“”இந்துஸ்தானி” பெஹாக் மாதிரி அதன் சாயல். அந்தர காந்தாரத்தில் பாடணும். கீழ் ஸ்தாபியில் எடுத்தால் பெஹாக்… மத்திமத்திலே பிடித்தால் சுத்த தன்யாசிக்குத் தாவிடும். நூல் மேல் நடக்கற மாதிரிதான்.”

வேணு காணத்தின் இதமான இசை. மழையின் வேகம் சீராய் இருந்தது. தன்னை மறந்து வாசித்துக்கொண்டிருந்தான். சுருதி கச்சிதம். ஆளே மாறிப்போயிருந்தான். கண்களில் கம்பீரம். உடம்பில் நளினம். தெப்பமாய் நனைந்திருந்தான்.

யாதொன்றையும் லட்சியம் செய்யாமல் இதுவே தவம் என்பதுபோல் எல்லாமே மாயம் ! அபஸ்வரத்தைத் தூக்கிக் கடாசிவிட்டவன் போல் வாசித்துக்கொண்டிருந்தான். மழையாவது குளிராவது. ஒரு பத்திருபது பேர் கூடி விட்டனர். ஒரு வித பதைபதைப்பு. கிறுக்கன் அபஸ்வரத்துக்குத் தாவி விடுவானோ!

மேகங்கள் அவசர அவசரமாய் மேற்கே ஓடிக்கொண்டிருந்தன. இந்த சமர்ப்பணம் வேறு யாருக்காகவுமல்ல. ஓடிவந்து தலைவருடி, தோளை உலுக்கி அபாரம்டா என்று முத்தமிடும் ஒருவருக்கு மட்டும்.

வெண் மேகங்களுக்கிடையே கோடாய்த்தெரிந்தது யார்? அவளா.. நிஜத்தில் அவளா? கனவா… நினைவா? நடக்கிறதா… பிரமையா…. ஏய் என்னைப் பாரேன். உனக்குப் பிடித்தமான வெளிர் நீலப் புடைவையோடு குண்டு மல்லிகைச் சரத்தோடும் கோணல் வகிடெடுத்து வெகு லாவண்யத்தோடு வந்து நிற்கும் என்னைப் பார். உன்னோடு இருந்தது… வாழ்ந்தது… உயிர்த்தது… கொஞ்ச நாளாயினும் யுகம் தாண்டிய காலமது. பூரணமானது நித்தியமானது… வரிசையான வார்த்ததைகளின் பயணம்.

தேவமனோகரி எங்கே போனாய்? என் குழலொழி அழைப்பு உனக்குக் கேட்டதோ. கனவில் மட்டுமே வரும் கஞ்சத்தனம் கூடாது. உன் வருகையின் அறிகுறி தெரிந்தாலே குழலோசையில் கொண்டாடுகிறேனே அறியவில்லை? உலகத்தின் அத்தனை மேன்மைகளையும் கைப்பற்றி வந்து நாத ரூபமாய் மாற்றி உனக்குக் கொடுப்பேன். எப்படி வந்தது இந்தக் கல்மனசு.

ஒரு நாள் தலைவலி என்றாய்; படுத்தாய்; என் பக்கத்தில் உட்காரு என்றாய் ; ஒரு சங்கராபரணம் வாசியேன் என்றாய் ; ஒரு துளி காற்றை கிரகித்து சங்கராபரணத்தை எடுத்துக்கொண்ட ஒரு க்ஷணம்தான் எப்போ வருவாய்… மேகத்திரளுக்குள் திடுமென்று மறைய வேண்டிய அவசரமென்ன? எங்கே போனாய்? அங்கேயே சஞ்சரித்துக் கொண்டிருக்கிறாயா?
தேவமனோகரி உனக்குப் பிடத்த சங்கராபரணம் – இதோ எடுத்துக்கோ. இறங்கி வா… என் மீது என்னை ரட்சிக்க என்ன சிரமம். ஏமி நன்று ப்ரோவ… ஏமி நேரமுநன்னு ப்ரோவ…
இருளைக் கிழித்துக்கொண்டு வெகுநேரம் ரசானுபவமாய்ப் பாய்ந்து கொண்டிருந்தது சங்கராபரணம். விடிந்தபோது அவன் காணாமல் போயிருந்தான்.

– நா.விச்வநாதன் (ஜனவரி 2011)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *