மெய்ப்பட வேண்டும்…

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 21, 2014
பார்வையிட்டோர்: 14,212 
 
 

‘இத்தனை பெரிய சதஸில், என் குழந்தை என்ன செய்யப் போகிறானோ?!’ என்ற பதற்றம், எனக்குள் அப்பிக்கொண்டது. இதே அரங்கத்துக்கு பலமுறை நான் வந்திருக்கிறேன். இதனுடைய பிரமாண்டம் அப்போதெல்லாம் என் மனதில் படிந்ததே இல்லை.

தான் உடுத்தியிருக்கும் உடையைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல், என்னை மட்டும் அற்புதமாக அலங்காரம் செய்து, இதே அரங்கத்துக்கு அழைத்து வருவார் அப்பா. அந்த மிகப் பெரிய கூட்டத்தில், நான் தனியாகத் தெரிவேன். அப்பா சொல்வார், ‘டேய் ஒருநாள் இந்த மேடையிலும் நீ தனியா தெரியணும்!’ என்று. அப்போதெல்லாம், அப்பாவை நான் வெறுமையோடு பார்ப்பேன். ‘இவரை பெரிய வியாபார முன்னோடினு ஊரே கொண்டாடுது. ஆனா, இவரு ஏன் இப்படி ‘சங்கீதம்… சங்கீதம்’னு பைத்தியம் பிடித்து அலையுறார்’ எனத் தோன்றும்.

மெய்ப்பட வேண்டும்...

அப்பாவை எல்லோரும் மிகுந்த மரியாதையோடு வரவேற்பார்கள். கச்சேரி தொடங்கி சற்றைக்கெல்லாம், அப்பா முதல் வரிசையில் இருந்து திரும்பிப் பார்ப்பார். அரங்கம் நிறைந்திருப்பதைக் கண்டு என்னிடம், ‘ஒருநாள் நீ பாடும்போதும் இதே மாதிரி அரங்கம் நிறைஞ்சிருக்கணும். உன் பாட்டு, பல பேருடைய உயிரை… மனசாட்சியை அப்படியே உலுக்கணும். வெறும் சங்கீத ரசிகர்களைச் சேர்க்குறது மட்டும் லட்சியம் இல்லைடா… அது மூலமா உன்னதமான ஆத்மாக்களைப் பரிணமிக்க வைக்கிறதுதான் உன் வேலை. காசு, பணம் தேடி அலையும் கஷ்டத்துல நீ இல்லை. உனக்கு ஆண்டவன் கொடுத்திருக்கும் அரிய வாய்ப்பு இது. உன் நேரத்தை உனக்கு எப்படி விருப்பமோ, அப்படி உபயோகிக்கலாம். இந்த உன்னதமான சங்கீதத்தில் அதைப் பயன்படுத்திக்கோ. உன் வயசில் நான், ‘சாதத்தோட தொட்டுக்க ஏதாவது கிடைக்காதா? இன்னிக்கும் வெறும் கரைச்ச மோர் சாதம்தானா’னு ஏங்கி ஏங்கி பணத்தைத் தேட ஆரம்பிச்சேன். வெறி, பைத்தியம்… கார், வீடு, அந்தஸ்து, வியாபாரம் எல்லாம் வேணும்னு வெறி; பொல்லாத காசு மேலயும் வசதி மேலயும் வெறி. அன்னிக்கு நிலைமையில எனக்கு வேற என்ன தோணியிருக்கும்?

இதோ இப்போ நாற்பத்தைந்து வயசுல என்கிட்ட எல்லாமே இருக்கு. எங்க விழா நடந்தாலும் மதிச்சுக் கூப்பிடறாங்க. சில சமயம் குத்துவிளக்கு ஏத்தி வைக்கச் சொல்றாங்க. மரியாதை, மாலை எல்லாம் தானா கிடைக்குது. இதெல்லாம் அந்தக் காசுக்குத்தானே. வியாபாரத்துலே ஜெயிச்சதாலேதானே! என்கிட்ட என்ன கலை இருக்கு? ஒரு கலையால, கடவுளைப் பார்க்க முடியும்; காட்ட முடியும். ஆனா, காசால முடியாது. விட்டுடாதே விட்டுடாதே’ – அப்பா பைத்தியம்போல் பல நாள் என்னிடம் பேசியிருக்கிறார்.

எனக்கு சங்கீதம் பிடிக்கும். ஆனால், அப்படியே எனக்குள் சுவீகாரம் செய்துகொள்ள வேண்டும் என்று தோன்றவில்லை. அப்பாவின் வியாபார நுணுக்கங்களை எல்லாம், ரசிக்க முடிந்தது; தெரிந்துகொள்ளத் தோன்றியது. ஆனால், ஏனோ அவரின் இந்த ஆசையை… வெறியைப் புரிந்துகொள்ள என்னால் இயலவில்லை. அப்புறம் எனக்காக என்னவெல்லாமோ செய்து பார்த்தார். பாட்டு வாத்தியார் வீட்டுக்கு அழைத்துப் போய்விட்டு வெளியிலேயே இரண்டு மணி நேரமும் உட்கார்ந்திருப்பார். வெளியில் வந்தவுடன், ‘என்ன நடந்தது… என்ன சொல்லிக் கொடுத்தார்?’ என்று ஆர்வமாகக் கேட்பார். பதிலை நான் அரையும்குறையுமாகச் சொல்லிவிட்டு, வெறிச்சென்று அவர் வண்டியில் உட்கார்ந்து கொள்வேன். அந்த மாதிரி நேரங் களில், மிகவும் பதட்டத்துடன் இருப்பார் அப்பா. ‘நல்லா பாடிடுவே இல்ல?’ என்று அவர் கேட்கும்போது பரிதாபமாக இருக்கும். இந்தக் கூத்துகள் எல்லாம் கிட்டத்தட்ட எட்டு-ஒன்பது வருட காலங்கள் நடந்தன.

‘உம்ம பையன் பாடுறானா?’ என்று யாராவது அப்பாவைக் கேட்டுவிட்டால் துடிப்பார். ‘கத்துக்கறான். பண்ணுவான் என்ன அவசரம். நிதானமாக வரட்டும்’ என்று நம்பிக்கையோடு சொல்வார். அப்பா, என் மீது நம்பிக்கை இழக்கிறார் என்று நான் கல்லூரி செல்லத் தொடங்கிய வருடத்தில் புரிந்துகொண்டேன். அதற்குப் பின் அப்பா என்னிடம் அதிகமாக சங்கீத விஷயங்களைப் பேசுவதை நிறுத்திக் கொண்டார். நானும் பேருக்கு பாட்டு கிளாஸுக்கு போய் வந்தேனே தவிர, அதில் எதுவும் செய்ய உத்தேசிக்கவே இல்லை.

அப்பா வியாபாரத்தில் நாயாக உழைத்தார். முன் எப்போதும் பார்க்காத அளவுக்குக் கடுமையாக வேலை பார்த்தார். வெறித்தனமாகப் பாடல்கள் கேட்டார். தூங்கும்போது அருகில் ரெக்கார்டரை வைத்துக்கொண்டு ராகத்தின் வழியே வெளிப்படும் சந்தங்களை கவனத்துடன் கேட்டார். ஒவ்வொரு வாரமும் ஒரு ராகம் மாறும். நான் வாத்தியாரிடம் கற்றுக்கொண்ட சங்கீதத்தைவிட அப்பா கேட்கும் பாட்டைக் கேட்டு நிறைய தெரிந்துகொண்டேன்.

மெய்ப்பட வேண்டும்...2

காலப்போக்கில் அப்பா, வியாபாரம், பாட்டுக் கேட்பது எல்லாம் எங்கள் வீட்டில் சராசரியான சம்பவங்களாகிவிட்டன. சின்ன வயதிலேயே அம்மா காலமாகிவிட்டதால் நான், அப்பா என்று மாறி மாறி வளைய வரும் வீட்டில், உடனிருந்த இன்னொரு நபராக சங்கீதம் இருந்தது. அப்பா வெறித்தனமாகச் சம்பாதித்த பணத்தில் நம்பமுடியாத பங்களா, கார் எல்லாம் வாங்கினார். நான் கேட்டபடி எல்லா வியாபாரத்தையும் ஏற்படுத்தித் தந்தார். என் விருப்பப்படியே கல்யாணமும் செய்து வைத்தார்.

சித்ரா, எங்கள் வீட்டுக்குள் வந்தபின், எங்கள் எண்ணிக்கை நான்கு ஆனது. நான், சித்ரா, அப்பா, சங்கீதம்! அப்பாவும் நானும் பேசுவதே நாளா வட்டத்தில் குறைந்துபோனது. எப்போதும் எதையோ பறிகொடுத்தது போலவே இருந்தார். வலிந்துபோய் கேட்டாலும், ‘இல்லையே… ரொம்ப ஹாப்பியா சக்சஸ்ஃபுல்லா இருக்கேன்’ என்பார் அமைதியாக!

‘அது இல்லப்பா… நீங்க ஏதோ ஒண்ணை நினைச்சு உள்ளுக்குள்ளே தவிக்கிற மாதிரியே தோணுது!’

‘ஒண்ணுமில்லப்பா. என்னைப் பத்திக் கவலைப்படாம சித்ராவோடு எங்கேயாவது வெளில போய்ட்டு வா!’ என்று அனுப்பிவிடுவார்.

சில சமயம் அப்பா தனக்குள் ஏதோ பேசிக்கொண்டு இருப்பதாகத் தோன்றும். ‘என்னப்பா… ஏதாவது சொன்னீங்களா?’ என்று ஜாடையாகக் கேட்டால், நீண்ட மௌனத்துக்குப் பின், ‘ஒண்ணும் சொல்லலியே..’ என்று ஒரு வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு தன் ரெக்கார்டரோடு உட்கார்ந்து விடுவார். ஒரு கட்டத்தில் அப்பா, விளம்பரத்தில் வரும் சின்னச்சின்ன சங்கீதத்துக்கும்கூட ராகம் சொல்லிச் சிலாகித்தபோது எனக்குக் கவலையாகவும் உறுத்தலாகவும் இருந்தது. தனக்குக் கிடைக்காதது தன் மகனுக்கேனும் கிடைக்க வேண்டும் என்று நினைத்த அப்பாவை, நான் சரியாகப் புரிந்துகொள்ளவில்லையோ என்று மனம் கனத்துப்போகும்.

அப்பா உள்ளுக்குள் இப்படி உருகுவது ஊரில் எவருக்குமே தெரியவில்லை. அதை என்னால் மட்டுமே ஆழமாக உணர முடிந்தது. மற்றவர்களுக்கு எப்போதும் பிரமிப்பாகவும் பிரமாண்டமாகவும் தெரிந்த அப்பா, எனக்கு மட்டும் உயிர் வதையில் உழலும் ஒரு ஜீவனாகத் தெரிந்தார்.

கைவிட்டு காலம் நழுவிய அந்தத் தருணங்களில்தான், நான் சங்கீதத்தைப் பற்றி எவ்வளவு அலட்சியமாக இருந்துவிட்டேன் என்று மெதுவாகப் புரிய ஆரம்பித்தது. அப்பாவின் கனவு சங்கீதம். அதை நான் ஏன் காண வேண்டும் என்ற ஏதோ ஒரு வீம்பில் இருந்துவிட்டேனோ! தனக்குக் கிடைக்காத அந்தப் பெரிய சொத்து எனக்கு எப்படியாவது வசப்பட வேண்டும் என்ற அப்பாவின் ஆசையைக் கொஞ்சம்கூடப் புரிந்து கொள்ளவில்லையோ என்று மெதுமெதுவாக எனக்கு உரைக்கத் தொடங்கியது. ‘இந்த வயசுல இப்படி வெறியா ராகத்தை எல்லாம் தெரிஞ்சுண்டு, உங்கப்பா என்ன பண்ணப் போறார்?’ – சித்ரா கேட்டபோது, ‘தயவுசெய்து அந்த ஒரு விஷயத்தைப் பத்தி மட்டும் நீ பேசாதே!’ என்று அவளைக் கண்டித்தேன். நான் சித்ராவை அப்படிக் கடிந்ததே இல்லை. அன்று இரவு அப்பா வீட்டுக்கு வரும்போது மிகச் சோர்வாக இருந்தார்.

‘அப்பா ப்ளீஸ்… நான் சொல்றதைக் கேளுங்க. ஒரு மாசம் இந்த வியாபாரத்தை எல்லாம் விட்டுட்டு எங்கேயாவது நிம்மதியா போய்ட்டு வாங்க’ என்று எப்படியோ தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சொன்னேன். அப்பா என்னை ஊடுருவி ஒரு பார்வை பார்த்துவிட்டு ஒன்றும் பேசாமல் போய்விட்டார்.

அடுத்த நாள் காலை சித்ரா கர்ப்பமாகி இருக்கும் தகவல் தெரிய வந்தது. இதை அப்பாவிடம் சொன்னபோது சித்ராவின் தலையில் கைவைத்து, ‘நல்லாயிரு’ என்று சொன்னார். அப்போது ஏனோ அவர் கண்களில் திடீரென நீர் ஊற்றுபோல வழிந்தது. அடுத்த நிமிடம் அழுகை வெடிக்க அப்படியே தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு அவர் அறைக்கு ஓடிவிட்டார். அன்று முழுவதும் அவர் வெளியே வரவேயில்லை. ஆனால், அவர் அறையில் பலமாக பல ராகங்கள் மாறிமாறி ஒலித்துக்கொண்டே இருந்தன! அதற்குப் பிறகு, ஓரிரு நாட்கள் அப்பா தன் இயல்பில் இருப்பதுபோல் வெளியே போய் வந்தார். ஆனால், மெலிந்துகொண்டே போனார். சித்ராவை டாக்டரிடம் அழைத்துப்போக வேண்டிய நாள் வந்தது. அப்பா அன்று வழக்கத்துக்கு மாறாக வீட்டில் இருந்தார். அவரிடம் சொல்லிக்கொண்டு புறப்படும்போது மனதில் ஏதோ ஒரு வலி. அது, ‘நான் அப்பாவை ஏமாற்றிவிட்டேன்’ என்ற வலி என்பதை துல்லியமாக உணர முடிந்தது.

அன்று வீடு திரும்பிய பின் அப்பா என்னிடம், ‘எல்லாம் நல்லபடியா இருக்குல்ல’ என்று கேட்டார். சித்ராவைப் பக்கத்தில் உட்காரச் சொன்னார். ‘ஒண்ணுமில்ல… சும்மாதான்மா’ என்றவர் உடனே, ‘சரி போங்க… சாப்டுட்டுத் தூங்குங்க’ என்றார். அவரது நடவடிக்கைகள் விநோதமாக இருந்தன.

மறுநாள் காலையில் அவர் அறையின் கதவைத் தட்டியபோது, கதவு திறந்தே இருந்தது. அறையில் அப்பாவுக்கு மிகவும் பிடித்த பாகேஸ்வரி ராகம் ஒலித்துக் கொண்டிருந்தது. சித்ரா அப்பாவின் பக்கத்தில் போய் நின்ற விதத்தில் எனக்கு ஏதோ ஒரு பயம் வந்தது. மிகுந்த தயக்கத்தோடு அவர் அருகில் சென்று நின்றேன். ‘இனி அப்பா இல்லை’ என்று எல்லா ஏற்பாடுகளையும் செய்யத் தயாரானபோது, அப்பாவின் நெருங்கிய நண்பர் என்னிடம் ஓர் உயிலைக் காட்டினார். அதைப் படித்த மாத்திரத்தில் அதிர்ந்துபோனேன்.

‘என் வியாபாரத்தை ஏற்கப்பிடித்த என் மகனுக்கு, ஏனோ என் கனவை ஏற்றுக்கொள்ள பிடிக்கவில்லை. என் சொத்தெல்லாம் அவன் ஒருவனுக்குதான். ஆனால், என்னுடைய கடைசிக் காரியங்களை அவன் செய்து முடிக்கக் கூடாது. என் அஸ்தியை மட்டும் சேமித்து வைக்கவும். என்றாவது ஒரு நாள் யாராவது என் குடும்பத்தில் பாடுவார்கள். அவர்களைப் பார்க்கும் வரை நான் அஸ்தியாகவாவது இங்கு இருக்கிறேனே? இது யாரையும் தண்டிக்கும் எண்ணத்தில் இல்லை. என் மனதின் வலி. எங்கோ ஓர் இடத்தில் என் முன்னோர்கள் வைத்திருந்த சங்கீதச் சங்கிலி எப்படி எப்படியோ அறுந்துவிட்டது. அதை ஏன் நான் பற்றினேன் என்று புரியவில்லை. என் சொத்தைக் கொடுத்ததைப் போல என் பாரம்பரியத்தை, கலாசாரத்தை என் பிள்ளைக்குக் கொடுக்க நினைத்தது குற்றமாகத் தெரியவில்லை. அன்று கனவு காண ‘வசதி’ என்ற கண்ணில்லை எனக்கு. ஆனால், அதைக் காணும் வசதி என் மகனுக்கு இருந்தது. அதற்கான திறமையும் இருந்தது. ஆனால், அவனுக்கு மனதில்லை. அவன் கண்களில் என் கனவு இல்லை. ‘காசும் கனவும் எப்போதும் ஏன் ஒன்றாக இருப்பதில்லை?’ என்ற கேள்வியோடு என் வாழ்க்கை முடிகிறது. என் அஸ்தியை சங்கீதத்தில் சாதிக்கும் ஒருவன் கரைக்கட்டும். அதுவரை கரை சேரக் காத்திருப்பேன்!’

அப்பாவின் உடலை யாரோ ஒருவரிடம் கொடுத்து எரியூட்டியபோது நெஞ்சே வெடித்துவிட்டது. அப்பாவின் ஒவ்வொரு நாளும் எவ்வளவு நரக வேதனையாக இருந்திருக்கிறது என்பதை உணர்ந்தபோது, எப்படி அதைத் தாங்கிக் கொண்டிருந்தார் என்று புரியவே இல்லை!

அப்பா இறந்த ஒரு மாத காலத்துக்குள் கணேஷ் பிறந்தான். அவனுக்கு மூன்று வயது இருந்தபோது திடீரென்று ஒருநாள் ஒரு விளம்பரத்தைப் பார்த்து, ‘அப்பா… இது ஆபோகிதானே?’ என்று கேட்டபோது நான் அதிர்ந்தேன். அப்பாவின் தொடர்பினால் தெரிந்து வைத்திருந்த சங்கீத வித்வானிடம் கணேஷை அழைத்துக் கொண்டு போனேன். அவர் கேட்கக் கேட்க கணேஷ் பேசிய விஷயங்கள் வித்வானுக்கே ஆச்சர்யமாக இருந்தது. ‘சரஸ்வதி கடாட்சம் இருக்கு’ என்று அடுத்த நாளே பாட்டுச் சொல்லிக் கொடுக்கத் தொடங்கினார். இப்படிப்பட்ட ஒரு சதஸில் திரைக்குப் பின் அமர்ந்திருக்கிறான். கச்சேரி முடியும் வரை எனக்குப் பதற்றமாகவே இருந்தது. ஆனால், அடுத்த நாள் முதல் எல்லா பத்திரிகையிலும் கணேஷைப் பற்றி வந்திருந்த செய்திகள் என்னை நெகிழ வைத்தன. ‘இந்த நெகிழ்ச்சியைத்தானே என் அப்பா பார்க்க ஆசைப்பட்டார். ‘உன் கனவு, என் கனவு’ என்று பிரித்து பார்த்து நான் எவ்வளவு கொடூரமாக இருந்துவிட்டேன். அப்பாவின் மெல்லிய உணர்வுகளுக்கு எவ்வளவு அலட்சியத்தைச் சமர்ப்பித்துவிட்டேன்’ என்று மனசு அழுதது. ஆனால், அப்பாவுக்கு செய்யவேண்டிய சமஸ்காரத்தை நினைத்துக்கொண்டேன்.

சித்ராவிடம் சொல்லிவிட்டு, மறுநாள் வீட்டுக்கு சில வைதீகர்களை வரவழைத்தேன். நாள் குறித்து கணேஷை அழைத்துக்கொண்டு எங்கள் சொந்த ஊரான கும்பகோணத்துக்குப் போனோம்.

‘கணேஷ் இது உங்க தாத்தாவோட அஸ்தி. இதை நீதான் கரைக்கணும்னு அவர் ஆசைப்பட்டார்’ என்று சொல்லி அவன் வயதுக்குத் தக்க நடந்தவற்றைச் சொல்லி அவனை ஆற்றங்கரைக்கு அழைத்துப் போனேன். அகமர்ஷன சுக்தத்தை நீரில் கரைத்த கணேஷ், கரையேறி அப்படியே மயங்கி விழுந்துவிட்டான். பதறிய என்னைத் தேற்றி, ‘ஒண்ணுமில்ல. சின்னக் குழந்தைதானே… பயந்திருப்பான்’ என்று ஆற்றுப்படுத்தி வீட்டுக்கு அனுப்பினார்கள் அங்கு இருந்தவர்கள்.
கணேஷைத் தூக்கிக்கொண்டு வரும்போது, அப்பா என்னைத் தூக்கிக்கொண்டு கச்சேரிக்குப் போவது ஞாபகம் வந்தது. ‘கணேஷ்… கணேஷ்’ என்று மனசுக்குள் அரற்றியபடியே வந்தேன். கணேஷ் அதற்குப் பின் சில மணி நேரம் எதுவுமே பேசவில்லை.

காரில் உடனடியாக சென்னையை நோக்கிப் புறப்பட்டோம். ஆற்றங்கரையைத் தாண்டும்போது கணேஷ், என்னை ஆழமாக ஒருமுறை பார்த்தான். இதுவரை அவன் என்னை அப்படிப் பார்த்ததே இல்லை. வண்டியை நிறுத்தச் சொன்னான். எதற்கும் காத்திருக்காமல் காலையில் நாங்கள் நமஸ்காரம் செய்த அதே படித்துறைக்குப் போய் நின்றான். தண்ணீரில் கை வைத்துப் பார்த்தான். எனக்குப் பயமாகவும் பதட்டமாகவும் இருந்தது.

‘கணேஷ்… என்னடா ஆச்சு? என்னைத் தெரியறதா?’ என்று அவனை இறுக்கிக் கொண்டேன். கணேஷ் நிதானமாக என்னைப் பார்த்தான். பின் தண்ணீருக்குள் பார்த்தபடியே, ‘எல்லாம் தெரியறதுபா. நீ, அம்மா எல்லாம்’ என்றான்.

‘பாட்டு. பாட்டு ஞாபகம் இருக்கா? அது என் கனவுடா; எங்கப்பாவோட கனவு’ என்று கவலையோடு சொன்னேன்.

மறுபடியும் கணேஷ் அந்தத் தண்ணீரை ஒருமுறை ஆழ்ந்து பார்த்துவிட்டு என்னிடம் திரும்பினான்.

‘ம்… அது என் கனவுப்பா. மறக்கவே மாட்டேன். எனக்கு எல்லாம் ஞாபகம் இருக்குப்பா. நீ, அம்மா, பாட்டு, நான் எல்லாம்… எல்லாம்!’ என்றான்.

– செப்டம்பர் 2013

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *