முரண் தொகை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 2, 2021
பார்வையிட்டோர்: 2,994 
 

மூன்று சாலைகள் சந்தித்ததால் முச்சந்தி என்றனர். மூவந்தி என்றொரு சொல்லும் உண்டு. ஆனால் அதனை அத்தனைத் திருத்தமாகப் பேசுவது மக்கள் இயல்பல்ல. அவர்கள் சொல்வது, ‘மூந்திக் கருக்கல்லே எந்திரிச்சுப் போனான்’ அல்லது ‘மூந்திக் கருக்கல்லே எதுக்கு சமைஞ்ச பிள்ள தெருவாசல்லே வந்து நிக்கே?’ என்று முதற்சொன்ன மூந்திக் கருக்கல் என்பது, இரவும் பகலும் சந்திக்கிற இருள் பிரியா, ஒளி நுழையாக் காலை. பின்னர் சொன்னது, பகலும் இரவும் சந்திக்கிற ஒளி தீரா, இருள்புகா மாலை. இரணியன் வதை அறிந்தவர் எளிதாய்ப் புரிந்து கொள்வார்கள். கேட்டால் வரம் அப்படிக் கேட்கணும்.

சிவகங்கைப் பக்கம் சக்கந்தி என்றும் பூவந்தி என்றும் இரு கிராமங்கள் உண்டு. பூவந்தி என்பது எத்தனை அருமையான சொல்!

நாம் பேச வந்ததே வேறு! எனது வாசகர் அறிவார்கள் இதை, எம் கதை என்பது பன்னிரண்டு கோர்ஸ் டின்னர் போல. கதை கடைசிக் கோர்சில் தான் கண்ணுக்குப் புலப்படும். இது நம் தடம்…

muranthokai-picமூன்று சாலைகள் சந்திக்கும் இடத்தை முச்சந்தி என்மனார் மக்கள். நான்கு சாலைகள் சந்திக்கும் இடமோ நாற்சந்தி. சரி! ஐந்து சாலைகள் சந்திக்கும் இடம் ஐச்சந்தியா? யாரும் வழங்கிக் கேட்டதில்லை. கோவையில் ஐந்து சாலைகள் சந்திக்கும் இடம் ஒன்று உண்டு. அதை ஐச்சந்தி என்று சொல்லாமல் ஐந்து முக்கு, அஞ்சு முக்கு என்பார். கற்றறிந்த தமிழர் ஃபைவ் கார்னர் என்றதை மொழிமாற்றம் செய்து பயன்படுத்துவார். எதுவானாலும் சந்தி என்பது வேறு முக்கு என்பது வேறல்லவா?

ஆனால் கோவையிலேயே, திருச்சி சாலையில், தியாகி என்.ஜி.ஆர். அமர்ந்த கோலத்தில் இருக்கும் இடத்தில் ஐந்து சாலைச் சந்திப்பு உண்டு. அதை ஐந்து முக்கு என்றோ ஐச்சந்தி என்றோ சொல்வதில்லை. அது மக்கள் விருப்பம், சட்டம் இயற்றி மாற்ற இயலாது!

போனவாரம், நட்ட நடு மத்தியானம், அங்கிருந்து நான் வசிக்கும் குடியிருப்புக்குப் போகும் பேருந்துக்காக நின்று கிடந்தேன். நல்ல பசியும் உக்கிரன் வெயிலும். திரும்பு காலில், வழக்கமாகப் பேருந்து பிடிக்கும் நேரம்தான்.

எல்லோரும் காலைக்கடன், குளி, ஜெபம், சிற்றுண்டி, உடை மாறல் முடித்து அலுவலகம் அல்லது தொழிற் சாலை அல்லது கடைகண்ணிகள் அல்லது பள்ளி கல்லூரிகள் போகும் நேரம் காலை ஏழரை முதல் ஒன்பது வரை. எனக்கு வீடே அலுவலகம், நாடே தொழிற்சாலை, உலகே தவச்சாலை…

எல்லோரும் செய்கிற வேலைகளையே நானும் செய்து, தபால் – கூரியர் பார்த்து, பதினோரு மணி சாயாக்குடியும் ஆகி, பதினொன்றரைக்கு வெளியே புறப்படுவேன். வங்கி, கூரியர் கொடுத்தல், தபால் சேர்த்தல், ஜெராக்ஸ் எடுத்தல், வாடிக்கையாளர் சிலரைச் சந்தித்தல், சில்லறை வீட்டுப் பொருட்கள் வாங்குதல், விஜயா பதிப்பகம் போய் புத்தகங்கள் சிற்றிதழ்கள் வாங்குதல் அல்லது திலகா மறுதோன்றி அச்சகம் போய் இலக்கிய உரையாடல், அன்று அங்கு வந்திருக்கும் அறிஞருடன் நடத்துதல்…

பேருந்து நிறுத்தங்கள் சில உண்டு எனக்கு வழக்கமாக வாய் பார்க்க, காந்திபுரம், டவுன்ஹால், சுங்கம் அல்லது புலியகுளம். என் பேருந்து வழித்தடங்களையும் தெரிந்து கொள்வது நல்லது. வருங்காலத்தில் வரலாறு எழுதுவோர் பயன்பாட்டுக்கு. காந்திபுரத்தில் இருந்து 95, 95A, 95B 95D, 114, 16 இதில் கடைசிக்கு முந்தியது நாளுக்கு 4 தரம், கடைசி நாளுக்கு இரண்டு தரம். மற்ற ஈட்டான்க ளில் இருந்து S-2, S-3, S-4, S-13, 23 A, 61, சில சமயங்களில் 22. இவ்வளவு பேருந்துகள் உளவே என நீங்கள் வியந்து மயங்குதல் வேண்டா . பல சமயம் அறுபது முதல் எழுபத்தைந்து நிமிடங்கள் காத்தும் நிற்பேன். அதுதான் நமது நிர்வாக சாமர்த்தியம். குல வித்தை கல்லாமல் பாகம் படும்,

என்போன்ற வாலிப வயோதிக அன்பர்கள் நெரிசல் மிகுந்த பேருந்துகளையும் ஓட்டப் பந்தயத்துக்கு ஒத்திகை பார்க்கும் பேருந்துகளையும் தவிர்ப்பது தானே இயல்பு? மேலும் பல காரணங்கள் உண்டு. மூட்டுவலியின் வேகத்தடை கண் சூட்சக் குறைவு, பேருந்தின் படிக்கட்டு உயரம், பேருந்தின் நிறமும் வரையப்பட்ட ஓவியங்களும், இசை எனும் பெயரிலான பேரிரைச்சல்.—

muranthokai-pic2அன்று என் அலுவல்களை எல்லாம் முடித்து விட்டு, பிற்பகல் இரண்டு மணிக்கு, சுங்கம் பேருந்து நிறுத்தம், அதுதான் நாம் ஏற்கனவே சொன்ன தியாகி என்.ஜி.ஆர். சிலை ஈட்டான். அந்த நேரத்தில் 23A, 61, S-13 என மூன்று பேருந்துகள் உண்டு, அட்டவணைப் படி, இதுவரை, குடியிருக்கும் இந்த மூன்றரை ஆண்டுகளில், என்னை ஏற்றாமல் போனதில்லை. எப்போதும் பேருந்துகளில் சரியான சில்லறை தருபவன் நான் வழக்கமாக வரும் நடத்துனர்களுக்கு என்மீது ஒரு மரியாதை உண்டு. அது, அமுதன் அடிகள் விருது பெற்ற, கண்ணதாசன் விருது பெற்ற, கலைமாமணி விருது பெற்ற, சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளன் என்பதால் அல்ல. சரியான சில்லறை நீட்டுவேன் என்பதால். அப்படியே சரியான சில்லறை இல்லாது போனால், என் ஒருவனுக்காக, ஐந்து ரூபாய் பயணச்சீட்டு என்றால் இரண்டு, மூன்று ரூபாய் பயணச்சீட்டு எனில் மூன்றும் வாங்கிக் கொள்வேன். ஒரு ரூபாய் மிச்சம் தரா விட்டாலும் ஒன்றும் கெட்டுப் போகாது. இது பணக்கொழுப்பினால் அல்ல! எதற்கு வம்பு என்பதனால், நடத்துனரிடம் வசவு வாங்கப் பயம். ஒரு நாள் நகுலன், என்னிடம் சொன்னார், ‘சிட்டி பஸ்லே டிக்கட் வாங்க பயமா இருக்கு’ என்று, வள்ளலார் சொல்லவில்லையா – ‘கைகளை வீசி நடப்பதை நாணிக் கைகளைக் கட்டியே நடந்தேன், காட்டுயர் அணைமேல் இருக்கவும் பயந்தேன், பாட்டு அயல் கேட்கப் பாடவும் பயந்தேன்’ என்று, அதுபோல.

நடத்துனரிடம் திட்டு வாங்கினால் மனநிலை கெட்டுவிடும். ஒரு முறை கெட்டு விட்டால் மீட்பது கடினம். மேலும், பற்பல காரணங்களுக்காக மனநிலை கெட்டுத்தான் எனக்கு சர்க்கரை நோயும், குருதி அழுத்தமும், இதய நோயும், பித்தமும் வந்ததது. பித்தம் என்பது ஈண்டு, ‘பித்தா, பிறைசூடி, பெம்மானே, அருளாளா’ என்று தேவாரப் பாடலில் வரும் பித்தம் எனும் பொருளில் ஆளப்படுகிறது. அதெப்படி இத்தனை வியாதிகளும் வந்தன என்று கேட்டால், தமிழ் நாட்டுச் சூழலில் இவை தான் ஆரோக்கியத்தின் அடையாளம். அதுபோல், நெற்றி குவித்து யோசித்து யோசித்து இரு புருவ மத்தியில் நாமம் போல இரு நேர்கோட்டுச் சுருக்கங்கள் விழுந்து கொண்டிருக்கின்றன தற்போது. காலம் அல்லது காலன் முகத்தில் வரைந்து பார்க்கும் ஓவியம்.

வீடு போய்ச் சேர மூன்று மணி ஆகிவிடும். பசிக்காதா என்பீர்கள்? என் நண்பர், கல்கத்தா கவித்தென்றல் காட்டிய சில கடைகள் உண்டு. கோவையில், ஒவ்வொரு ஈட்டானிலும், பஜ்ஜி அல்லது போண்டா அல்லது பருப்பு வடை, சீனி குறைவாக சாயா. சக்கரை வியாதி, பதினோரு ஆண்டுகள் முன்பு செய்து கொண்ட ஆன்ஜியோ பிளாஸ்டி-ஸ்டென்ட் எல்லாம் உங்களுக்கு நினைவுக்கு வரலாம். எனக்கு எப்போதும் வரவே வராது. வாயையும் கட்டுவதில்லை, வயிற்றையும் கட்டுவதில்லை. வீட்டில் பசியுடன் மனைவி என்ன செய்வாள் என்று தோன்றலாம். பிறகு மாரி பிஸ்கட் என்னத்துக்குத்தான் கண்டு பிடித்து வைத்திருக்கின்றனர்? – மூன்று மணிக்குச் சட்டமாய்ச் சாப்பிட்டு, மத்தியானம் விழுங்க வேண்டிய மாத்திரைகள் போட்டு, கையில் புத்தகத்துடன் படுக்கை அரைமணிநேரம் வாசிப்பு, பின்பு அதுவாக உறக்கம் வரும். மனைவி முன் ஹாலில் சோபாவில் படுப்பாள். சேர்ந்து படுத்தால் ஆரோக்கியத் துக்குக் கேடு, முழிப்பு வந்ததும் மீண்டும் வாசிப்பு. எப்படியும் ஐந்து மணிக்கு காப்பி டிகாக்ஷன் வாசம் வரும் வரை படுத்துக்கொண்டு தான் படிப்பு.

இரண்டே கால் ஆயிற்று. பேருந்தைக் காணோம். பசி எனும் பெரும்பாம்பு இரையெடுக்கப் பேய் போல் கிளம்பிற்று. கட்டிலில் பாதி படித்த நிலையில் சுகிர்தராணியின் ‘காமத்திப் பூ’, குட்டி ரேவதியின் ‘மாமத யானை’, இராசின்னச் சாமியின் ‘ஏழிலைக் கிழங்கின் மாமிசம்.

அசையாமல், ஒரே இடத்தில், பேருந்துக்குக் காத்திருப்பதும் துன்பம், மனிதன் என்ன நிலைக்கு நின்ற தேரா? யானையைக் கவனித்திருக்கிறீர்களா, பிடி ஆனாலும் களிறு ஆனாலும்? அது எப்போதும் கால் மாற்றிச் சமுண்டிக் கொண்டே இருக்கும்! நல்ல தீனியும் வாய்த்து விட்டால் கேட்கவே வேண்டாம். கூடவே உல்லாசமாய் ஒரு தலையாட்டலும், சஞ்சய் சுப்ரமணியம் தமிழ்க் கீர்த்தனையாகப் பாடும் திருக்குறள், ‘ஒழுக்கம் ஓம்பப் படும்’ கேட்பது போல் பரவசமும்.

கால் மாற்றி நகர்ந்து கொண்டே காத்து நிற்பேன். முன் பின்னாக, பக்க வாடுகளிலுமாக, மேடையில் இடம் இருந்தால் ஏறி நிற்பேன். தெரிந்த முகம் தேடி அலையும் கண்கள்.

எப்போதும் கற்பனை ஒன்றும் ஓடும். ஏதும் இரு சக்கர, நாற்சக்கர வாகனம் வாய்க்கப் பெற்றவர் கண்ணில் தென்பட மாட்டாரா என, ‘தமிழின் முக்கியமான மூத்த படைப்பாளி’ கால்கடுக்க பேருந்துக்கு நிற்பது கண்டு, “வாங்க சார்! வீட்டுக்குத் தானே? வாங்க, ட்ராப் செய்றேன்’ என்று சொல்ல மாட்டாரா என. இத்தனைக்கும் கூட்டத்தோடு கூட்டமாய் இல்லாமல் பார்வையில் படும்படியாகத் தனித்து நிற்பேன். பல காரணங்கள் இருக்கலாம். நம் முகம் தெரிந்தவர் எவரும் அந்த நேரத்தில் அந்தப் பக்கம் வராதிருக்கலாம். வந்தாலும் நம்மைப் பாராதிருக்கலாம். அல்லது ‘இந்த சீண்றம் புடிச்சவனை ஏத்தி, இரண்டு கிலோ மீட்டர் சுத்தி, வீட்ல கொண்டு இறக்கி, பெட்ரோல் விக்கிற விலையில், தேவையா?’ என்று நினைக்கலாம்.

எதுவும் எதுக்காகவும் காத்து நிற்காது. ‘துய்ப்போம் என்று நினைத்தால் தப்பிப் போகும் பலவும்’ மரணம் என்பதோ, ‘இடை நில்லாப் பேருந்து’. எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், இலை துளிப்பது தும்பில் இருந்துதான் என்று. அதற்கான உயிரும் உரமும் உத்தரவும் வருவது வேரில் இருந்து எனத் தெரியாத அறிவாளிகள்! வேருக்கு வார்த்தால், அது விதை வரை வந்து சேரும் தானே! திருமந்திரப் பாடல் ஒன்றுண்டு, படமெடுத்து ஆடுகின்ற அரவம் அணிந்திருக்கிற பரமனுக்கு ஒன்று ஈந்தால், நடமாடித் திரிகின்ற நம் அன்பர்க்கு அது ஆகாது. ஆனால் நடமாடித் திரியும் நம்பர்க்கு ஒன்று ஈந்தால், அது படமெடுத்து ஆடுகின்ற பாம்பை அணிந்த பரமனுக்குப் போய்ச் சேர்ந்து விடும். அது படமாடும் கோயில், இது நடமாடும் கோயில், அவ்வளவே!

இப்படித்தான் பேருந்துக்குக் காத்து நிற்கும் போது தத்துவங்கள் ஊடும் பாவுமாய் ஓடும். புதுமைப்பித்தனின் ‘கயிற்றரவு’ கதையில், விடலிப்பனை நிழலில் வெளிக்கிருக்கும்போது தத்துவச்சரடு திரியும் எனில் பேருந்து நிறுத்தத்தில் நமக்குத் திரியாதா?

நல்ல வெயில், காற்று அனக்கம் இல்லை, மழை பொழியும் காலம் தப்பியும் பெய்யாமல் பொய்க்கிறது. மலட்டு வானம், சூல் கொண்ட வானம் எனச் சொல்லலாம். எனில், மலட்டு வானம், என்று சொல்லல் ஆகாதா? சூலி என்றாலும் மலடி என்றாலும் பெண் தொடர்பான சொற்கள். ஆனால் ஆணில் தான் மலடு அதிகம் என்ற நமக்குப் போதமில்லை .

வீட்டுக்குப் போனாலும் பசியாறுவது தாண்டி ஒன்றும் இல்லை, தொலைக்காட்சி பார்க்கவோ, பாட்டுக் கேட்கவோ மின்சாரம் இருக்காது. அல்லது பூர்வி கல்யாணியில் தேடித் திரியாதே நெஞ்சே’ என்று முத்துத் தாண்டவர் பாட்டை நானே பாட வேண்டும். மரம் செடி கொடிகள் எல்லாம் கருகிக்போகும் என் இசைக்கு,

மின்சாரம் இருக்கும் நேரத்தில் தான் உறக்கம் வரும். பசி மாத்திரம் இல்லாவிட்டால், மாலை வரை மரத்து மூட்டிலேயே நின்று வேடிக்கை பார்க்கலாம். பாவம், மனைவி கிடப்பாள் மாரி பிஸ்கட் தின்று கொண்டு

பேருந்து வரும் மேற்குத் திசை நோக்கியே நின்றேன். 5 வந்தது, 7 வந்தது, 1C வந்தது, 8 வந்தது, 19B வந்தது, 30 வந்தது, 37 வந்தது, 69 வந்தது, 43 வந்தது, S-6 வந்தது, S-15 வந்தது, S- 18 வந்தது, S-27 வந்தது…. திருப்பூர், தாராபுரம், கரூர் வண்டிகள் வந்தன, நின்றன, சென்றன…

muranthokai-pic3செம்மொழி மாநாட்டின் போது அமைத்த நடைபாதையில், ஆறுமாதம் தாண்டியும் சிதையாமல் கிடந்த அதிசயமான திட்டையில் ஏறி நின்றேன். ஊதப்பட்ட சிகரெட் புகை முகத்தில் மோதிப் பிரிந்தது. மாணவராக இருக்க இயலாது. இன்றைய மாணவர் புகை பிடிப்பதில்லை. எரிச்சலுடன் ஏறிட்டுப் பார்த்தேன்.

மழையும் வெயிலும் குளிரும் ஒவ்வாமை இல்லை. ஆனால் புகையும் தூசியும் திராவிட இயக்கமும் ஒவ்வாமை என்று மருத்துவர் கண்டுபிடித்துச் சொன்னார்.

புகை ஊதியவருக்கு நாற்பத்தைந்து வயதிருக்கும். சாரம் மடித்துக் கட்டியிருந்தார், பூப்போட்ட காப்பிக்கலர் சாரம். ஆயில் பிசுக்குத் தெரிந்தது. காலில் சுமாரான செருப்புகள், மணிக்கட்டில் சுமாரான கடிகாரம், கையில் சுமாரான பழைய செல்ஃபோன். நான்கு நாளாய்ச் சவரமற்ற சுமாரான வறண்ட முகம், சிகரெட் ஊதுகிற தினுசிலும் முகத்தின் இறுக்கத்திலும் பம்மிக் கிடந்த கோபம் தெறித்தது.

நடக்கிற தூரத்தில் பெண்கள் கல்லூரி ஒன்றிருந்தது. கல்லூரி முடிந்து திரும்பிய மாணவியர் கூட்டம் பேருந்து நிறுத்தத்தில் புறாக்கூட்டமாய். தொடர்ந்து இருநாட்கள் ஆயுத பூஜை விடுமுறை ஆர்ப்பரித்து அடங்கிய சிரிப்பு அலை. எல்லாம் இப்போது சிரித்தால் தான் உண்டு, பின்னால், ‘என்ன துயர் வருமோ, . எங்கெங்கு அடி விழுமோ ?!

மாணவியர் கூட்டத்தை உற்றுப் பார்ப்பதும், மூசுமூசென்று புகை விடுவதுமாய் நின்றிருந்தார். சிகரெட்டைச் சுண்டி நடைபாதை ஓரம் எறிந்தார். மாணவியர் கூட்டத்தில் யாரையோ விளிப்பதுபோல் தலையசைத்தார்.

செல்வச் செழிப்புத் தெரியாத உடைதரித்த மாணவி ஒருத்தி வந்து அவர் முன்னால் நின்றாள். பார்க்க, சின்னச் செப்புப் போல இருந்தாள். கோபம் கொந்தளித்த குரலில் மொழியலுற்றார். “இனி நீ என்னை அப்பான்ணு கூப்பிடக் கூடாது”

எனக்குச் சற்றுத் திகைப்பாக இருந்தது. அந்தச் சிறுபெண்ணின் முகம் எனக்குத் தெரிய வாய்ப்பில்லாத எதிர்த் திசையில்

“கரண்ட் இல்லேண்ணு வீட்டுக்குப் போகச் சொல்லீட்டான். உன்னையும் கூட்டீட்டுப் போயிர லான்ணு, காலேஜ் வாசல்லே காத்துக் கெடந்தேன்.

என்னைப் பாத்துக்கிட்டே பிரண்ட்ஸோட நடந்து போனே! என்னைத் திரும்பியே பார்க்கல்லே…. என் கூட ஒரு வார்த்தை பேசல்லே ..”

தலை குனிந்து நின்றிருந்தாள் அந்தச் சிறு பெண்.

“ஒன்னை யெல்லாம் படிக்க வச்சு என்னத்துக்கு?”

சொல்லலாம் என்று தோன்றியது. ‘ஐயா இந்தப் பஞ்சாயத்தை எல்லாம் வீட்டிலே போயி வச்சுக்கிடப் பிடாதா? நாலு பேர் பார்க்க, இப்படி என்னத்துக்கு?’

என்ன பதில் வரும் என்று சொல்ல இயலாது. என்னிடமே உரத்துச் சங்கடம் சொல்ல ஆரம்பிக்கலாம். அல்லது,

‘உமக்கு என்னவே? சோலி மயிரைப் பார்த்துக் கிட்டுப் போவும்’ எனும் கணக்கில் வையவும் தொடங்கலாம்.

தகப்பனார் தொடர்ந்து குமுறுவது கேட்டது.

“சரி, அதாம் பிரண்ஸோட வந்தே! நான் பொறத்தால வந்தேன்…. இங்க பஸ் ஸ்டாப்புக்கு வந்து எவ்வளவு நேரமாச்சு? எங்கிட்ட ஒரு வார்த்தை பேசினயா?”

அவர்கள் காத்திருந்தது அபூர்வமாக வரும் பேருந்தாக இருக்க வேண்டும். கண்ணம் பாளையம், பீடம்பள்ளி, பாப்பம் பட்டி, நீலம்பூர், இருகூர், சிந்தாமணிப் புதூர், காரணம் பேட்டை, கொளத்தூர், சுல்த்தான் பேட்டை, நஞ்சுண்டாபுரம் என்பனவற்றுள் ஒன்றாக இருத்தல் வேண்டும். குறித்த நேரங்களில் மட்டுமே வருமாக இருக்கும்.

மகள், பதில் எதுவுமே பேசவில்லை . குனிந்த தலை நிமிரவும் இல்லை. கண்கலங்கித் துளிகள் துப்பட்டாவில் விழுமாக இருக்கலாம்.

“எம்புட்டு கஸ்டப்பட்டு படிக்க வைத்தேன்! ஸ்டாப்பிலே வந்து எம்புட்டு நேரமா நிக்கேன்? கிட்டே வந்து அப்பான்ணு கூப்பிட்டியா நிய்யி? இனி என்னை நீ ஒரு நாளும் அப்பான்ணு கூப்பிடாண்டாம்…”

அவர்கள் பேருந்து அடுத்து வந்து விடாதா என்றிருந்தது. சகமாணவியர் சிலர் திரும்பி உற்றுப்பார்க்க ஆரம்பித்திருந்தனர். அல்லது என் பேருந்தாவது சட்டென வந்துவிடாதா என்றிருந்தது. அப்பாவுக்காகவா அல்லது மகளுக்காகவா என்று தெரியவில்லை, ஆனால் துக்கமாக இருந்தது.

அப்பாவையும் புரிந்தது; மகளையும் அறிந்தேன். இரண்டுபேர் மீதும் இரக்கமாக இருந்தது. அப்பா கண்களைத் துடைத்துக் கொள்வதைப் பார்த்தேன்.

இது வாழ்க்கையின் முரண். நகை முரண் அல்ல. பகை முரணும் அல்ல.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *