முதல் பரிசு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 7, 2023
பார்வையிட்டோர்: 1,318 
 

‘டமார்…டும்…டம்…டங்’ வீட்டுக்குள்பாத்திரங்களை பூனை உருட்டிக்கொண்டிருந்தது.

“ம்-கியா-மியா -ங்-ங்” என்று தொட்டிலில் குழந்தை அழுது கத்தியது. “எலே மூக்காயி அந்தப் பச்சப்புள்ளய தூக்கி வச்சுருடி நா வந்தர்றேன்” தனது மூத்த மகளிடம் கோபமான வார்த்தைகளை கொட்டியவாறு வீட்டுத்திண்ணையை சாணமிட்டு மொழுகிக் கொண்டிருந்தாள் செலம்பி.

“ஆயோ கூழு… “உப்பு பூத்த உடம்போடு கிழிந்த பாவாடையை போட்டுக்கொண்டு ஒழுகும் மூக்குச்சளியை ஒரு கையால் துடைத்தவாறு வந்தாள் நாலு வயசு மகள் ராசாத்தி.

“ஏலே சனியனே அந்த மூக்கக்கூடவா சிந்தத் தெரியல” என்று நொந்தவாறு தனது சேலைத் துணியால் அவள் மூக்கை துடைத்து விட்டாள்.

“பெரியவ, பாப்பவ தூக்கிக்கிட்டு கொல்லயப்பக்கம் போயிட்டா. அதுக்கிட்ட கூழ ஊத்தச் சொல்லி குடிபோ”

சாணி சட்டியை எடுத்து முருங்கை மரத்தடியில் வைத்துவிட்டு மண் தொட்டியில் இருந்த தண்ணியில், முகத்தையும் கையையும் கழுவினாள்.

“அந்தப் பய என்ன பண்றான்” தன்னுள் முணங்கியவள்.

“டேலே சின்னையா என்னடா காலயில் இருந்து புத்தகத்தப் பாக்குறே. அப்புறம் மூடிக்கிட்டு பேசுறே. என்னதாண்டா செய்யுறே”

“அது வந்து.. எங்கப் பள்ளிக்கூடத்துல பேச்சுப்போட்டி. அதுக்குப் பேசிப் பாக்குறேன்” தனது பணியைத் தொடர்ந்தான்.

“போட்டியாம் பொல்லாத போட்டி. பொசுத்தவ மூட்டைய அந்தாண்ட மூட்டக்கட்டி வச்சுட்டு நாலுகாசு சம்பாதிக்கப் போவானா…”

“எலே ஒனக்கு மூணு தங்கச்சிலே. அத மனசுல வச்சுட்டு பொழக்கிற வழியத்தேடு”. சொல்லிக்கொண்டே ஒரு சட்டியில் கூழைக் கரைத்துக் குடித்தாள்.

புத்தகப்பையை கையில் எடுத்தான். வேகமாகப் பள்ளிக்கு நடைபோட்டான்.

“பயலே சாயந்தரம் வாத்தியாருக்கிட்ட சொல்லிட்டு சீக்கிரம் வந்துரு” ஆட்டுப்படலுக்குள் இருந்து உரக்கச் சத்தம் போட்டார் எழியன்.

“ம்…ம்…” என தலையாட்டிக் கொண்டு பள்ளியை அடைந்தான். பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றதும் இலக்கிய மன்றவிழா ஆரம்பிக்கப்பட்டது. முதலில் தலைமையாசிரியர் பேசியதும் பாட்டுப்போட்டி தொடங்கியது. பிறகு பேச்சுப்போட்டி ஆரம்பிக்கப்பட் ஆறாம் வகுப்பு மாணவர்கள் பேசி முடித்தனர். ஏழாம் வகுப்பு மாணவர்கள் பேச ஆயத்ததமாக இருந்தார்கள்.

“சின்னையா” ஒலிப்பெருக்கியில் தமிழ் ஆசிரியர் அழைத்ததும் பேச ஆரம்பித்தான். பேச்சு முடியும் வரை அமைதி காத்து முடிவில் மிகச்சிறப்பான கைத்தட்டல் கிடைத்தது. போட்டி நிறைவு பெற்றதும் போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

பேச்சுப்போட்டியில் சின்னையாவுக்கு முதல்பரிசு கிடைத்தது.

மாலை நேரம்,பள்ளியை விட்டு பலத்த இரைச்சலுடன் மாணவர்கள் நடந்துசென்று கொண்டு இருந்தனர்.

ஆடுகளை சாலையில் ஓட்டிச்சென்று கொண்டு இருந்த எழியனை நடந்து சென்ற மலையரசன் ஆசிரியரிடம் “சார்! இவர் தான் சின்னையா அப்பா” என்றான் ஏழாம் வகுப்பு படிக்கும் வடிவேலன்.

“சின்னையா அப்பா நில்லுங்க. உங்க மகன நல்லா வளர்த்துருக்கீங்க. இன்னிக்கு நடந்த பேச்சுப்போட்டியில ‘சிறிய குடும்பம் சீரான வாழ்வு’ என்கிற தலைப்புல பேசி முதல்பரிசு வாங்கிட்டான். ‘சில பெற்றோர்கள் கொஞ்சநேரம் சுகத்துக்காக நிறையப் பிள்ளைகள பெத்துடுறாங்க, பின்னால் வரும் சுமைகளை எண்ணிப் பார்ப்பதே இல்லைன்னு பேசினான் பாரு'” என்று சொன்னதும்.

கண்கலங்கிய எழியனோ “என்னய மன்னிச்சுருங்க சாமி. எம் புள்ள எனக்குப் பாடம் சொல்லித் தந்துருக்கான்”. தனது தோளில் இருந்த துண்டால் முகத்தைத துடைத்துக்கொண்டார்.

சின்னையா குடும்பம், பெரிய குடும்பம் என்பது மலையரசன் ஆசிரியருக்கு அப்போது தான் புரிந்தது.

– முதல் பரிசு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 2015, இனிய நந்தனம் பதிப்பகம், திருச்சி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *