(1942ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“கோமு! உனக்கு அத்திம்பேர் கடுதாசி போட் டிருக்கார்; இதோ பார்” என்று பல் அத்தனையும் காட்டிக் கொண்டு ஒரு கவரை அவள் கையில் திணித்தான் கிட்டு.
கோமதிக்குக் கல்யாணம் நடந்தது போன மாதம், வயது இப்பொழுது தான் பதினொன்று நிரம்பிப் பன்னிரண்டு நடப்பு. இருந்தாலென்ன? குழந்தை தானே? இந்த வயதிற்குள் அப்படி என்ன உலக அனு பவத்தைக் கண்டுவிட்டாள்? பாண்டி, சோழி , கட்டம் முதலியன ஆடுவதில் தான் அவளுக்கு அனுபவம் அதிகம். தூங்கும் பொழுது இந்த ஆட்டங்களின் ஞாபக மாகவே உளறுவாள். இந்த ‘மோக்ளா’ வில் மதுரைக் காலேஜில் இண்டர்மீடியட் வாசித்துக்கொண் டிருக்கும் சந்துருவைப்பற்றி அவள் நினைப்பதே அபூர்வம்.
இங்கே இப்படி. ஆனால் அந்தப் பயல் சந்துரு வுக்கோ சதா கோமதி ஸ்மரணை தான். புஸ்தகத்தை எடுத்து முன்னால் வைத்துக்கொண்டால் அவள் உருவமும் நடையும் பேச்சும் பேசும் படத்தில் தோன்றுவது போல் முன்வந்து நின்று விடும். அதிக அனுபவம் வாய்ந்த ஒரு பெண்ணைத் தான் கல்யாணம் செய்து கொண் டிருப்ப தாகத் தோன்றியது, அவன் பிரமை பிடித்த மனத்திற்கு. அவ்வளவு தான் ; உடனே உட்கார்ந்து ஒரு கடிதம் எழுதித் தபாலில் போட்டு விட்டுத்தான் மறு ஜோலி பார்த்தான் சந்துரு – அதுவும் கல்யாணமாகி ஒரு மாதத்திற்குள் !
கோமதிக்கு இது வரையில் ஒரு கடிதமும் வந்ததே இல்லை. அவளும் கடிதம் எழுதியதில்லை. அதிலும் சந்துருவிடமிருந்து கடிதத்தைச் சிறிதும் எதிர் பார்க்க வில்லை. அந்த எண்ணமே அவளுக்குத் தோன்றவில்லை
தனியே போய் உட்கார்ந்துகொண்டு திருப்பித் திருப்பிப் படித்தாள். பாடமாகிவிட்டது. அதைப் படிக்கும் பொழுது அவளுக்கு என்னவோபோல் இருந்தது. அது இன்னதென்று அவளுக்கே தெரிய வில்லை.
சந்துரு குண்டு குண்டாக எழுதி இருந்தான், எழுத்துப் புரியும்படி. ஆனால் அர்த்தந்தான் அநேக இடங்களில் புரியவில்லை அவளுக்கு. தமிழ் நாவல் களையும் இங்கிலீஷ் நாவல்களையும் எதேஷ்டமாகச் சந்துரு கரைத்துக் குடித்திருக்கிறான் என்பது ஸ்பஷ்ட மாகத் தெரிந்தது. இதையெல்லாம் அதில் காட்டினால் அந்தக் குழந்தை மனத்திற்கு என்ன புரியும்?
“உடனே மறு தபாலில் பதில் எழுது , கட்டாயம் என்று இருந்தது கடிதக் கடைசியில் . அது தான் கோமதிக்குப் பெரிய பிரச்னையாகப் போய் விட்டது. “கட்டாயம் உடனே எழுதணுமாமே ! எப்படி எழு தறது?” என்று அவள் வாய் முணு முணுத்தது.
ஒருத்தருக்குமே அவள் இதுவரை கடிதம் எழுதின தில்லை. அப்படி இருக்கிற போது முதல் முதலில் ‘அவாளு’க்குக் கடிதம் எழுதுகிறது என்றால்!
இப்படி யோசனையிலேயே ஒரு வாரம் கழிந்து போய்விட்டது. சந்துருவும் நித்தியம் தபால்காரனை “கடிதம் உண்டா? உண்டா?” என்று கேட்டுக்கொண்டே இருந்தான். எங்கிருந்து அவன் கடிதம் எதிர்பார்க்கிறான் என்று சொல்லத் தேவையில்லை. தபால்காரனுக்குக்கூட ஒரு நாள் சலிப்புத் தோன்றி, “ஏன் ஸார், வந்தா நான் வச்சுக்கிடவா போறேன்?” என்று ஒரு ‘டிக்கிரி’ கார மாகப் பேசிவிட்டான். இரண்டு கோபழும் சேர்ந்து விடவே மறு நாளே இன்னும் ஒரு கடிதம் கொஞ்சம் சூடாகவே கோமதிக்கு எழுதிப் போட்டு விட்டான் சந்துரு, அம்மையார் பாட்டியின் கோபம் போலே.
கோமதி இரண்டாவது கடிதத்தையும் படித்துப் பார்த்தாள். “போன காகிதத்துக்கே பதில் போடல்லே, கோவிச்சுண்டு கூட எழுதிட்டார். இதுக்கும் பதில் போடல்லேன்னா அப்புறம் அவரும் கோவிச்சிண்டு காகிதம் எழுதாமே இருந்தூட்டா என்ன பண்ணறது?” இப்படி யெல்லாம் யோசித்தாள். ஆனால் எழுதுவதற்கோ ஒரு பக்கம் பயம், ஒரு பக்கம் சங்கோசம்.
இப்படி நாலு நாள் போய்விட்டது. ஐந்தாவது நாள் திடீரென்று ஒரு தீர்மானத்திற்கு வந்து விட்டாள் கோமு, அன்றைக்கே கடிதம் எழுதி விடுவதென்று.
உடனே சட்டென்று எழுந்திருந்தாள். ஹார் மோனியப் பெட்டியைத் திறந்தாள். மேலாகப் பாட்டு நோட்டுக் கிடந்தது. விர்ரென்று ஒரு பக்கத்தைக் கிழித்தாள். சனியன் ! கோணலும் மாண லுமாய்க் கையில் வந்து விட்டது. ஆனால் என்ன, பரவாயில்லை என்று இரண்டாக மடித்து வைத்துக்கொண்டாள். பெட்டி அடியில் துழாவித் துழாவி ஒரு புழுக்கைப் பென்ஸிலை – ஒன்றரை அங்குல நீளமேதான் – எடுத்துப் பார்த்தாள். முனை ஒடிந்து கிடந்தது.
ஒரு விநாடி தயங்கினாள். உடனே சமையலறைப் பக்கம் சென்றாள் . மாட்டியிருந்த அரிவாள்மணையை எடுத்து முழங்காலுக்கு நடுவில் வைத்துக்கொண்டு சீவினாள், வாழைக்காய்க்குப் பட்டை உரிப்பது போல். சமயத்திற்கு அகப்பட்ட ஆயுதம்!
எப்படியோ சீவி முடிந்தது. வாயை உப்பவைத்துக் கொண்டு குத்திப் பார்த்துக் கொண்டாள். சுறுக் கென்றது போல் இருந்தது. அடேயப்பா, இவ்வளவு கூர்மை போதாதா?
ஒருவரும் வராத இடமாகிய தாழ்வாரத்தில் போய்க் குத்தி இட்டு உட்கார்ந்து கொண்டாள். காகிதத்தை முழங்கால் மீது வைத்துக்கொண்டு கடிதம் எழுத ஆரம்பித்தாள் புருஷனுக்கு.
சின்னதாக மொச்சைக்கொட்டை அளவிற்கு ஒரு பிள்ளையார் சுழி போட்டாள். பெரிய 2 ஆக விழுந்தது. அதில் ஊர்ப் பெயரையும் எழுதினாள். அதில் இரண்டு மூன்று அடித்தல்! அடுத்தாற்போல் தேதி போடப் போனாள். வருஷமும் மாதமும் ஞாபகத்திற்கு வர வில்லை. உடனே ஓடி, முதல் நாள் வந்த கடிதம் ஒன்றைப் பார்த்துவிட்டு எழுதினாள்: “க்ஷேமம்” என்று தலைப்பிலும் போட்டு விட்டுச் சரியாக எழுதி இருக்கி றோமோ என்று உற்றுப் பார்த்தாள்.
கடிதத்தில் சில எழுத்துக்கள் பதியவே இல்லை . “கல்லுப் பென்சில்! தூ , தரித்திரம்!” என்று கோபத் தோடு வீசி எறிந்தாள். ஜல தாரையில் போய் விழுந்து அது மிதந்து சென்று விட்டது.
நல்ல வேளையாகக் கிட்டு பள்ளிக்கூடம் போயிருந் தான். இருந்தால் நன்றாகத் தொட விடுவானே? ஓடிப் போய் அவன் பெட்டியிலிருந்து பேனாவையும் மைக் கூட்டையும் எடுத்துக்கொண்டு வந்தாள்.
அதற்கும் பழக்கம் வேண்டாமா? பேனா பிடி படாமல் வழுக்கிக்கொண்டு போனது. அதன் இஷ்டமா? – இருக்கிப் பிடித்துக்கொண்டு மைக்கூட்டில் அடியோடு மூழ்த்தினாள். மைக்கூடு நிறைய மை இருந்ததை அவள் கவனிக்கவில்லை.
உதடு கோண, முகம் சுளிக்க, தலையைச் சாய வைத்துக்கொண்டு திரும்ப எழுதலானாள். பிள்ளையார் சுழிக்குப் பதில் ஒரு காசு அகலத்திற்கு மைப் பொட்டு விழுந்து பரவியது. ‘அட சனியனே!’ என்று முனகிக் கொண்டே சரேலென்று வாயால் ஊதினாள், உலர வைக்க. ஊதிய வேகத்தில் மை வாய்க்கால் விட்டுக் கொண்டு கடிதத்தின் குறுக்கே ஓடியது. உடனே சட் டென்று கையால் துடைத்து விட்டாள். திருத்தப் போய் அது பெருத்த வளையமாக முடிந்தது. காகிதமெல்லாம் – மை.
நீங்களும் நானுமாக இருந்தால் உடனே அதைக் கிழித்துப் போட்டிருப்போம். ஆனால் கோமு அப்படிச் செய்யவில்லை.
பேனாவை நன்றாக உதறிவிட்டுத் திரும்ப எழுதினாள். ‘நிப்’ பாம்பின் நாக்குப்போல் பிளந்து கொடுத்துக் காகிதத்தைக் கீறிக்கொண்டு சென்றது.
பொறுமைக்கும் எல்லை இல்லையா? கோமுவின் முகத்தில் ஒரு சுளிப்பு . புருவங்களில் ஒரு சுருக்கம். கண்களில் ரௌத்திராகாரத் தோற்றம். பேனாவின் மீது வந்த ஆத்திரம்! – சனியன்!
இந்தச் சமயத்தில் யாரோ வருவது போலக் காலடிச் சப்தம் கேட்டது. திடுக்கிட்டுச் சுருட்டி மடக்கி எழுந்து பார்த்தாள். வேறொருவரும் இல்லை. ஓர் அணில் தத்தி ஓடியது. மறுபடியும் அமைதியாக உட்கார்ந்து நிப்பை நிதானப் படுத்திக்கொண்டு ‘க்ஷேமம்’ என்று எழுதினாள்.
அடுத்த வரி என்ன எழுதுவது? பேனா ஓடவில்லை. கைதான் அசைகிறது. அப்பா, அண்ணா முதலானவர் களுக்காக இருந்தால், அப்பாவுக்கு அநேக நமஸ்காரம்’ என்ற மாதிரி எல்லாம் எழுதலாம். எந்த மாதிரி எழுதலாம் அவருக்கு?
யோசித்து யோசித்துப் பார்த்தாள். திடீரென என்னவோ தோன்றியது. அக்கா படித்துக்கொண் டிருந்த நாவலில் அந்த மாதிரிக் கடிதம் பார்த்ததாக ஞாபகம். அதைப் புரட்டிப் பார்த்தாள். அதில் இருந்தது.
பெயரை மட்டும் மாற்றிவிட்டு அதை அப்படியே ”காப்பி’ அடித்து விட்டாள். ஆனால் நான் அதை உங்களுக்குச் சொல்லப் போவதில்லை. அது ஒரு ரகசியம்.
எழுதிவிட்டாள், அப்பா ! ஒரு சிக்கலான பிரச்னை தீர்ந்துவிட்டது. அப்புறம்? “க்ஷேமம். க்ஷேமத்திற்கு எழுதவும். நீங்க எழுதின காகிதம் கிடைச்சுது இங்கே அப்பா, அம்மா, நான் எல்லோரும் சௌக்கியம். நீங்க சௌக்கியமா?….”
இதற்குமேல் எழுத ஓடவில்லை. தான் ரொம்ப எழுதி விட்டதாகவும் தோற்றியது. யோசனையில் ஆழ்ந்தாள். எழுத விஷயமே இல்லை என்று தோற்றியது.
“..ஒங்களுக்குப் பரீக்ஷை எப்போ? லீவு எப்போ விடறா? ஆத்தில் எல்லாரும் சௌக்கியமா? பதில் எழுதவும்!” என்று கடிதத்தை முடித்துக் கை யெழுத்தைப் போட்டாள். கடிதம் நான்கே வரிகள் தாம். கடிதத்தை ஒரு பார்வை பார்த்தாள். கடிதம் முழுவதும் மையினால் அவள் கைரேகை அடையாளங்கள் பட்டிருந்தன. ஒரு துப்பறிபவனுக்குத் தக்க வேலை. கை முழுவதும் ஒரே மை!
முன் ஜாக்கிரதையாகத் தன் விலாசமிட்ட ஒரு கவரையும் வைத்து அனுப்பி இருந்தான் சந்துரு – கெட்டிக்காரப்பயல் ! அந்தச் சிரமத்தையும் கோமதிக்குக் கொடுக்கவில்லை. அப்பா பெட்டியிலிருந்து ‘ஸ்டாம்ப்’ ஒன்றை எடுத்துக்கொண்டு வந்தாள்.
கவரை ஒட்ட வேண்டாமா? பழையது பானையி லிருந்து கொஞ்சம் சோற்றுப் பருக்கையைக் கொணர்ந்து கவரை ஒட்டினாள். ஈரம் உலர வெயிலில் போட்டு உலர்த்தினாள். இந்தச் சமயம் பண்ணைக்காகச் சுப்பன் மாடுகளை ஓட்டிக்கொண்டு வந்து சேர்ந்தான். அவன் ரகசியமாகக் கடிதத்தைத் தபாலில் போட்டு வந்தான். ஒரு மட்டிற்குக் கடிதம் புறப்பட்டு விட்டது. கோமு நிம்மதி மூச்சு விட்டாள்.
கொஞ்சநேரம் சென்றது. சமையலறைக்கு வந்த அம்மா, “ஏண்டி கோமு! யாரடி பழையது பானையைத் திறந்து போட்டிருக்கா?” என்று கேட்டபோது, திடுக் கென்றது கோமுவுக்கு. பானையை மூடாமல் வந்தது ஞாபகத்திற்கு வந்தது. அதற்குள் அம்மா, “அணில் ஏதாவது தள்ளி இருக்குமா?” என்று கேட்டாள்.
“ஆமாம் அம்மா, அடுக்குள்ளே ஏதோ சப்தம் கேட்டது” என்று ஒரு போடு போட்டாள் கோமு.
பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பிய கிட்டு, வீட்டுக் கணக்குப் போடப் பேனாவை எடுத்து எழுதியபோது கிரீச் சென்றது. “ஏண்டி கோமு! நீ என் பேனாவை எடுத்தயோல்லியோ?” என்று கூவினான். “போடா உன் பேனாவை நான் ஏதுக்கடா எடுக்கறேன் அதிசயத்தை!” என்று எதிர்த்தாள் கோமு. என்ன முழுப் பொய்! வறட்டு ஜம்பம்! கள்ள மனசு!
அன்றைக்குப் பார்த்து, கடிதம் எழுத அப்பா ஸ்டாம்பைத் தேடினபோது, அகப்படாமல், “யார் எடுத்தா ஸ்டாம்பை?” என்றார். கோமுவுக்குப் ‘பக் என்றது. அதற்குள் அம்மா, “எப்பொவாவது ஒட்டிப் போட்டிருப்பேன்” என்றாள். அவருக்கே வைத்திருந் தோமா?’ என்று சந்தேகமாகப் போய்விட்டது.
கள்ளனுக்குத் தேள் கொட்டியது போல் இருந்து விட்டாள் கோமு. எதையாவது அகத்தில் ஒப்புக் கொள்ள முடியுமோ?
இவ்வளவு தடபுடல்களுக்கு இடையே, சந்துருவுக்குக் கடிதம் போய்ச் சேர்ந்தது. அந்த நான்கு வரிகளையே திரும்பத் திரும்பப் பாராயணம் பண்ணிக் கொண்டிருந்தான். ‘ஆஹா! என்ன அழகு! என்ன குண்டு குண்டான எழுத்துக்கள்! அர்ச்சனை செய்யலாம் போல் இருக்கிறதே!’ என்று கவிதையும் கற்பனையும் கலந்து வியந்து சப்திக்கத் தொடங்கின அவனது உள்ளத்தில்.
ஆனால், நமக்குத் தெரியுமே: அந்தக் கடிதம் எவ்வளவு லக்ஷணங்களுடனே அவனிடம் போய்ச் சேர்ந்திருக்கும் என்று!
– ஸரஸாவின் பொம்மை (கதைகள்), முதற் பதிப்பு: 1942, கலைமகள் காரியாலயம், சென்னை.