முதலிரவில் மயக்கம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 19, 2023
பார்வையிட்டோர்: 2,761 
 
 

கல்யாணப் பத்திரிகைகளை என்முன் வைத்துவிட்டு, “வித்யா! ஒன்னோட சிநேகிதிகளுக்கு அனுப்பிடு,” என்று சொல்லிவிட்டு அம்மா போய் அரைமணிக்குமேல் ஆகிவிட்டது.

சற்று நேரம் அக்கட்டையே வெறித்துப் பார்த்துவிட்டு, ஒன்றைப் பிரித்தேன். வேண்டாவெறுப்பாக.

`எங்கள் ஒரே மகள் வித்யாவை விசுவநாதனுக்குக் கன்னிகாதானம் செய்துகொடுப்பதாய் பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்டு..!’

அந்த எழுத்துக்கள் பத்திரிகையிலிருந்து மேலே எழும்பி என்னைப் பார்த்து நகைத்தபடி சுற்றிச் சுற்றி வருவதுபோன்ற பிரமை உண்டாயிற்று.

இல்லாத ஒன்றை எப்படி தானம் செய்யப்போகிறார்களாம்?

என்ன செய்கிறோம் என்று புரியாமலேயே கையில் பிடித்திருந்த பத்திரிகையைக் கசக்கினேன்.

அப்போது மீண்டும் அங்கு வந்த அம்மா தன் அதிர்ச்சியை வெளிக்காட்டாது, “சும்மா சும்மா என்ன யோசனை? காத்திலே உலாத்திட்டு வா, போ!” என்றாள் கனிவாக.

அம்மாவின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்தே பழகியவள் நான். கனத்த மனத்துடன் தோட்டத்துக்கு வந்தேன். காலையில் அடித்த காற்றிலும் பெருமழையிலும் ஊதா நிறச் செம்பருத்திக்  கிளை ஒன்று தரையில் சாய்ந்திருந்தது அப்போதிருந்த மனநிலையில் அதைக் கவனிக்கத் தோன்றவில்லை.

`சதக்!’ அக்கிளையின் நுனியிலிருந்த மலர் என் கால் செருப்படியில் மாட்டிக்கொண்டு சிதைந்தது.

கடவுளுக்குப் படைக்கப்படவேண்டிய மலர்! அஜாக்கிரதையால் உருக்குலைந்துவிட்டது – என்னைப்போல.

நான் மலர் என்றால், விசு என் கடவுளா?

அயர்வுடன் அருகிலிருந்த பெஞ்சில் உட்கார்ந்தேன். மகிழமரம் உதிர்த்திருந்த பூக்கள், வாடியபோதும், மணம் வீசிக்கொண்டிருந்தன. எனக்கோ உயிர்மட்டும்தான் இருந்தது. மீண்டும் மணமூட்டத்தான் என் பெற்றோர் முயற்சி எடுத்துக்கொள்கிறார்கள்.

இரண்டு மாதங்களுக்குமுன் விசுவுடன் இதே இடத்தில்தான் அமர்ந்திருந்தேன்.

“இருட்ட ஆரம்பித்துவிட்டதே! உள்ளே போகலாம்,” என்று நான் எழுந்தபோது, என் கையைப் பிடித்திழுத்து, “என்ன அவசரம்? கைக்குழந்தையா அழுகிறது உள்ளே?” என்று தடுத்தார் விசு. அந்தச் செய்கையிலும் பேச்சிலும் நிறைந்திருந்த குறும்பு!

“அடேயப்பா! என்ன வெட்கம்! இப்போதே ஆசைதீர உன்கூடப் பேசிடப்போறேன். குழந்தை பிறந்துட்டா, எனக்கெங்கே நேரம் கிடைக்கும்?”

“சும்மா இருங்களேன்!” செல்லமாகச் சிணுங்கினேன். உள்ளத்தில் ஒரு சிலிர்ப்பு. அவர் எப்போது குழந்தைப்பற்றிய பேச்சை எடுத்து என்னைச் சீண்டினாலும், உடலெல்லாம் புல்லரிக்கும். இன்பக் கனவுலகிற்குப் போய்விடுவேன்.

விசுவின் விரல்கள் என் விரல்களுடன் பின்னின. எங்களிருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருந்தது. மூன்று வருடங்களில் எங்களுடைய நட்பு நன்கு கனிந்திருந்தது.

நான் பதின்மூன்று வயதாக இருந்தபோது அம்மா சொன்னது அகாலமாக  காதில் ஒலித்தது: `ஆம்பளை எல்லாரும் நல்லவனில்ல. மொதல்லே மணிக்கட்டைப் பிடிப்பான். இன்னொரு கை மெதுவா மேலே மேலே தடவும். நீதான் புரிஞ்சுக்கிட்டு விலகணும்’.

பெரிய கரத்தில் சிறைப்பட்டிருந்த என் கையை வேகமாக விடுவித்துக்கொண்டேன்.

நீண்ட நேரம் எதுவுமே பேசவில்லை என் விசு. அவருடைய அன்புள்ளத்தைப் புண்படுத்திவிட்டோமோ என்ற தவிப்புடன் நோக்கினேன்.

“என்ன அப்படிப் பாக்கறே? இன்னும் சில வருஷங்களிலே நம்ப ரெண்டு பேரோட கையையும் பிடிச்சுக்கிட்டு, ஒரு குழந்தை நடக்கப்போறதைக் கற்பனை செஞ்சுபாத்தேன்”.  

“எப்போதும், குழந்தை, குழந்தை!” போலிக்கோபத்துடன் உரிமையாகக் கடிந்துகொண்டேன்.

“பின்னே என்னவாம்? பட்டிக்காட்டுப் பொண்ணுமாதிரி நீதான் பயப்படறியே!” குற்றம் சாட்டுவதுபோலப் பேசினாலும், என் கண்டிப்பான போக்கில் அவருக்கிருந்த நம்பிக்கையும் பெருமையும் எனக்குத் தெரியாமலில்லை.

ஆனால், நான் பத்திரப்படுத்தி வைத்திருந்த புனிதத்தை எவனோ காமுகன்..!

முன்பின் தெரியாதவனுடன் போகக்கூடாது என்பது எனக்குத் தெரியாததில்லை. ஆனால், வேலையிலிருந்து திரும்பும் அன்று மழை, இருள் எல்லாம் எனக்கு எதிராகச் சதி செய்தன. சோதனைபோல், வாடகைக்கார் எதுவும் கிடைக்கவில்லை.

“இப்படி நனைஞ்சுகிட்டு நிக்கறீங்களே! வாங்களேன், நான் கொண்டுவிடறேன்!”

முதலில் மறுத்தேன். கண்ணியமாகத் தோன்றிய அவனுடைய வற்புறுத்தலால் மனம் மாற, ஏதோ ஒரு அசட்டுத் தைரியத்துடன் அவன் பக்கத்தில் ஏறி அமர்ந்தேன். எத்தனை நேரம்தான் தனியாக மழையில் நிற்பது!

மழையைக் கண்டு பயந்து, என் வாழ்வையே பாழடித்துக்கொள்ளப் போகிறேன் என்று அப்போது உணரவில்லை.

நள்ளிரவில் பதைபதைப்புடன் வாசலிலேயே நின்றிருந்தினர் என் பெற்றோர். நான் பேசவேண்டிய அவசியமே இருக்கவில்லை.

சற்று பொறுத்து, அம்மாதான் மெதுவாகக் கேட்டாள்: “ஒனக்கு அவனை அடையாளம் காட்டமுடியுமா? போலீசுக்குப் போய்..”

“வேண்டாம்!” என்றார் அப்பா, தீர்மானமாக.

அப்பாவுக்கு உலகம் தெரிந்திருந்தது. எது நடந்தாலும், பெண்களின்மேல்தான் பழி சுமத்தும் நம் சமூகம். எவனோ ராவணன் சிறைப்பிடிக்க, சீதாவைத் தீக்குளிக்க வைத்தாரே ஸ்ரீராமன்!

சில தினங்கள் பொறுத்து. “அப்பா! கல்யாணம்.. இப்போ..நடக்கணுமா?” தயங்கியபடி வந்தது என் குரல்.

“பின்னே?” என்று இரைந்த அப்பா, உடனே தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டார். “எல்லா ஏற்பாடும் செய்தாச்சும்மா.  இப்போ நிறுத்தினா, கேக்கறவங்களுக்கு என்ன சொல்றது?”

மணப்பந்தலில் உரிமையுடன் என் கணவர் என் கரத்தைப் பற்றியபோது, அவரது கண்கள் விஷமமாக என் முகத்தை நாடின — முன்பு நான் அனுமதிக்க மறுத்ததை நினைவுபடுத்துவதுபோல். அந்தக் குறும்பை ரசிக்கமுடியாது, நான் ஜடம்போல அமர்ந்திருந்தேன். மாலை சூடினேன், புன்னகையைக் களைந்துவிட்டு.

முதலிரவு.

ஆவலெல்லாம் ஒருசேர, நிலைகொள்ளாது அமர்ந்திருந்தார் அவர்.

நானோ!

பலிக்குத் தயாராகும் ஆடு என்னைப்போல்தான் மிரளுமோ?

வெளியே மழை வலுத்து, இடியோசை காதைச் செவிட்டாக்கியது. என் கையைப் பற்றியவர் கணவராகத் தோன்றவில்லை. காரில் அழைத்துப்போன அந்தக் கசடன்தான் எதிரில் தெரிந்தான்.

“என்னை விட்டுடுங்க!” என்று அலறியபடி, மயங்கிவிழுந்தேன், மலைத்துப்போன அவரது கைகளிலேயே.

நான் கண்விழித்தபோது அம்மா மட்டும்தான் அருகில்.  நான் விசித்து விசித்து அழ ஆரம்பித்தேன். இடையிடையே, “கல்யாணம் வேண்டாம்னு சொன்னேனே!” என்று பிதற்றினேன்.

நிறுத்த முடியாத அழுகை, நிலைத்த கண்களுடன், ஓரிரு நாட்கள் படுக்கையில் அசைவற்ற நிலை – இப்படிக் கிடந்த என்னை மனநல மருத்துவரிடம் – அவர் ஒரு பெண் –அழைத்துப்போனார்களாம்.

“வித்யா! உலகம் தெரியாத வயசிலே ஏதாவது பாக்கக்கூடாததைப் பாத்து பயந்துட்டியா?” டாக்டர் மெள்ளக் கேட்டார்.  

“ஐயோ டாக்டர்! அறியாத வயசிலே இல்லே”. அதன்பின், வார்த்தைகள் போட்டி போட்டுக்கொண்டு வந்தன. 

நான் கூறியது டாக்டரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கவில்லை. முதலிலேயே ஊகித்திருப்பார். “ஒங்க அப்பா, அம்மாவுக்கு இது தெரியுமா?”

“தெரிஞ்சும் விசுவை அவங்க இப்படி ஏமாத்தியிருக்கலாமா? தப்பில்லே?”  எந்த ஆண் நெருங்கினாலும் அதிர்கிறதே என் உடல்! மனம் முழுவதிலும் குழந்தைக் கனவுகளைத் தேக்கியிருந்த அன்பான என் விசுவுக்கு ஏமாற்றத்தைத் தரலாமா?

என் உணர்வுகளைவிட விசுவின் ஆசை நிராசையானதைத்தான் அப்போது பெரிதாக நினைத்தேன். எங்களுக்கிடையே ஒரு பாலமாக இருவர் கையையும் பற்றியபடி ஒரு சிறு குழந்தை!

நிதானம் கலைந்துவிட, பெரிதாக அழ ஆரம்பித்தேன். மிகவும் பிரயாசையுடன் என்னைப் படுக்கவைத்தார்கள். ஊசிவழி ஏற்றிய மருந்தாலோ, அல்லது உண்மை வெளியானதில் மனம் லேசானதாலோ, அயர்ந்து உறங்கிவிட்டேன்.

மறுநாள்.

“வித்யா!”

யார் குரல் இது?

கனத்த இமைகளைத் திறந்தேன். தவிப்பும் காதலும் போட்டியிட்ட கண்களுடன் விசு!

எந்த முகத்துடன் அவரைப் பார்ப்பேன்! “எங்கே வந்தீங்க? என்னை நிம்மதியா இருக்கவிடுங்களேன்!” என்று அழுதேன்.

“அசடு! ஆயுசுபூராவும் அழுதாலும், நடந்தது நடந்ததுதான். மாத்த முடியாததைப் பின்னால ஒதுக்கிட்டாத்தான் நிம்மதி. அதுதான் புத்திசாலிக்கு அழகு! நீ சமர்த்தில்லே!”

அவருக்கு உண்மை தெரிந்திருக்கிறது!

“எனக்கு ஒரு வருத்தம்தான், வித்யா. ஒங்க குடும்பத்திலே ஒருத்தனாத்தான் என்னை நினைச்சுக்கிட்டிருந்தேன்”.

“விசு! நானும் ஒங்களை ஏமாத்திட்டேன்!”

“விடு!” என் கண்ணீரை அவர் கை ஒத்தி எடுத்தது. “நீ மனசறிஞ்சு எந்த தப்பும் செய்யலேடா! ஒரு விபத்துக்காக நம்ப சந்தோஷத்தை ஏன் பலி குடுக்கணும்?” என்னையே தன் குழந்தையாகப் பாவித்துப் பேசினார்.

என் அழுகை ஏன் இன்னும் நிற்கமாட்டேன் என்கிறது?

என் விம்மலோ, கண்ணீரில் கரைந்துகொண்டிருந்த துயரமோ என் கணவரைக் கலங்கடிக்கவில்லை. நம்பிக்கையுடன் என்னை அணைத்தார். நான் திமிறவில்லை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *